Wednesday, September 2, 2020

 

தமிழும் கிறிஸ்தவமும்

"மைவண்ணன்

ஒரு காலத்தில் உலகமெலாம் வழங்கி வந்ததாகக் கருதப்படும் நம் தாய் மொழியாகிய தமிழ் மொழி, கால தேச வர்த்தமானத்திற்கேற்ப, பல  மாறுதல்களையடைந்து வந்திருக்கிறது. தமிழ் நாட்டைத் தமிழ் மன்னர்களாகிய சேர சோழ பாண்டியர்கள் ஆட்சி புரிந்து வந்த காலத்தில்தான், நம் செந்தமிழ்மொழி மிக உன்னத நிலையில் இருந்ததாக சரித்திர ஆராய்ச்சி வலியுறுத்துகிறது.

இவ்விதம் சிறப்புற்றிருந்த தமிழ்மொழி கால மாறுதலால் இடைக் காலத்தில் வளர்ச்சி குன்றி ஒளிமங்கி வரலாயிற்று. இந்நிலையில் வியாபார நிமித்தமாக இந்தியாவில் குடியேறிய ஐரோப்பியர்களுடைய கூட்டுறவு நம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டது. ஐரோப்பியரது தொடர்பு தமிழ் மொழிக்கு ஒரு நல்ல காலத்தையும் புதிய சகாப்தத்தையும் உண்டு பண்ணியது என்று கூறின் மிகையாகாது.

முதலில் வியாபாரஞ் செய்யக் கருதிவந்த ஐரோப்பியர் மெதுவாக இந்தியாவில் தங்கள் கிறிஸ்தவத்தைப் பரவச்செய்ய முயன்றனர். அவர்கள் இந்தியர்களைக் கிறிஸ்தவராக்கும் பொருட்டு தங்கள் நாடுகளிலிருந்து கிறிஸ்தவமதக் குருமார்களான பாதிரிமார் பலரை அழைத்து வந்தனர். அப்பாதிரிமார் தங்கள் முயற்சியி லீடுபட்டபோது நம் நாட்டில் வழங்கும் மொழிகள் தடைகளாக இருப்பதை உணர்ந்தனர். எனவே, அவர்கள் இந்தியாவில் வழங்கும் முக்கிய மொழிகளான சமஸ்கிருதம், தமிழ், ஹிந்துஸ்தானி, உருது முதலியவைகளைக் கற்கலாயினர். நம் மூதறிஞர்களின் உதவியைக்கொண்டு, மேற்படி மொழிகளைக் கற்றுத் தேர்ந்த பிறகே அப்பாதிரிமார் தங்கள் மதப்பிரசாரங்களைத் தீவிரமாகச் செய்வதற்கு வசதி யேற்பட்டது. அம் முறையிலேயே நம் தமிழ்நாட்டில் குடியேறிய ஐரோப்பிய பாதிரிமாரும் தமிழ் மொழியைக் கற்றுத் தேர்ந்து தமிழில் மதப்பிரசாரஞ் செய்யவும், மத சம்பந்தமான நூல்கள் இயற்றவுந் தொடங்கினர்.

இப் பாதிரிமார்களில் பிரசித்தி பெற்றவர்கள் வீரமாமுனிவர், போப் ஐயர், கால்ட்வெல் ஐயர், தத்துவ போதக சுவாமிகள், ஹீகன்பால்கு ஐயர், எல்லிஸ் துரை, இரேனியுஸ் ஐயர் முதலியோராவர். இவர்களுடைய நோக்கம் சுயநலம் வாய்ந்ததாயினும் அதாவது தங்கள் மதத்தைப் பரவச் செய்து தமிழ் மக்களைக் கிறிஸ்தவர்களாக்க வேண்டுமென்ற நோக்கங் கொண்டதாயினும் - அவர்கள் செய்த தமிழ் நூல்கள் தமிழ் மொழிக்குப் பெரிய நன்மையை உண்டு பண்ணின என்பதை யாரும் மறுக்கமுடியாது. வீரமா முனிவர் தமிழில் முதன்முதலாகச் செய்த "சதுரகராதி" என்னும் பெயருடைய தமிழ் அகராதியையும், தேம்பாவணியையும் நாம் பாராட்டாதிருக்க முடியுமோ!

தமிழ் மொழிக்கே புதிதான வசன நடையையும், விஞ்ஞான களையும், தொல்காப்பியம் போன்ற பல சிறந்த தமிழ் நூல்கள் எல்லாம் நமக்குத் தற்போது கிடைப்பதற்கு வசதியாகத் தமிழ் அச்சுகளையும் அச்சு இயந்திரத்தையும் உண்டுபண்ணித் தந்த ஐரோப்பிய பாதிரிமார்களும், அவர் களைப் பின்பற்றிய சுதேசக் கிறிஸ்தவர்களுமே நம் தமிழ்மொழிக்கு மறு மலர்ச்சியை உண்டு பண்ணியவர்கள் என்பதில் தடையென்ன!

பண்டைக்காலத்தில் சமண சமயப் பெரியார்களும், புத்தமத அறிஞர்களும், தமிழ் மொழிக்கு, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சிறந்த நூல்களைத் தந்துதவியது போல, பிற்காலத்தில், உலக சரித்திரம், இங்கிலாந்து, இந்து தேச சரித்திரங்கள், பூமி சாஸ்திரம், க்ஷேத்திரக் கணிதம், ரசாயன முதல் நூல் முதலிய சிறந்த நூல்களை எழுதியுதவிய ஐரோப்பிய பாதிரிமார்களைப் பற்றி, தமிழ் மக்களாகிய நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்; அவர்களைப் போற்றக் கடமைப் பட்டிருக்கிறோம்.

கிறிஸ்தவர்களால் தமிழ்மொழி அடைந்த நன்மைகளையும், அக்கிறிஸ்தவப் பெரியார்களின் வரலாறுகளையும் மயிலை சீனி. வேங்கடசாமி "கிறிஸ்தவமும், தமிழும்'' (இதன் விலை 12-கணா. இது, சென்னை மயிலாப்பூர், காரணீஸ்வரர் கோவில் தெரு 59-வது நெயபர் வீட்டிலிருக்கும் ஆசிரியரிடத்தில் கிடைக்கும்) என்னுஞ் சிறந்த நூலில் விளக்கி யிருக்கிறார். இந்நூலைத் தமிழ்மொழி வளர்ச்சியில் ஆர்வமுடைய அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டியது அவசியம்.

ஆனந்த போதினி – 1937 ௵ - பிப்ரவரி ௴

 

 

 

                                                   

No comments:

Post a Comment