Wednesday, September 2, 2020

 

தமிழும் தமிழனும்

(கி.பா. அய்யர், எம்.ஏ., எப்.ஆர்.இ.எஸ். டெல்லி.)

 

சென்ற தமிழ் இசை மகாநாட்டுத் திறப்புவிழாவன்று ஸர். ஆர். கே. ஷண்முகம் செட்டியார் செய்த பிரசங்கத்தை ஒவ்வொரு தமிழனும் உற்சாகத்துடன் கவனிக்கவேண்டியதேயாகும். அதில் பிரத்தியேகமான பகுதி என்னவெனில்: உத்தியோகத்திற்காக ஆங்கிலமும், கல்யாணம், சாவு இச்சந்தர்ப்பங்களிற்கான சடங்குகள் நடத்தி வைப்பதற்கான தகுதியடைய சமஸ்கிருதமும், தேசியப் போரில் கலந்துகொள்ள ஹிந்தியும், சங்கீதம் பயில் தெலுங்கும் கற்கவேண்டிவந்தால், தமிழ் பாஷைதான் எந்த உபயோகத்திற்கு வரும்?' என்று கேட்ட்தே யாகும். நம் தமிழர்களில் பெரும்பாலானோர் நமது பாஷையிலும், நமது நாகரிக முறையிலும் ஒருவித வெறுப்பும் அலட்சியமும் கொண்டு விட்டனர்.

 

சிலருக்குத் தங்களைத் தமிழர்கள் என்று சொல்லிக்கொள்வதற்கே வெட்கமாயிருக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்வரையில் நம்மில் சிலரை "உங்களது சொந்த ஊர் யாது? என்று கேட்டால், “என்னமோ ராமனாதபுரம் சமீபமாம். நான் போனதே கிடையாது. நாங்கள் மெட்ராஸிலும், பங்களூரிலும் தான் இருந்தோம். வில்லேஜ் லைட்டுக்கே போனதில்லை" என்று சொல்வது வழக்கமா யிருந்தது. ஆனால் முதன் முதல் சென்னையில் அபாயச் சங்கு ஊதினவுடன் "வில்லேஜ் ஸைடு"களுக்குக் கூட ஒரு மவுஸ் உண்டாகி விட்டது.

 

இரண்டு தமிழர்கள் சந்தித்தால் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே சம்பாஷணை செய்கின்றனர். ஆனால், வடநாட்டினரோ தங்கள் பாஷையிலின்றி வேறு பாஷையில் பேசுவது வழக்கமில்லை. லண்டன் மாநகரில் வங்காளிகள் ஒருமுறை ஒரு பிரபல வங்காளிபாபுவுக்கு வரவேற்புப் பத்திரகம் வாசித்துக் கொடுத்தார்களாம். அவ்மையம் அங்கே வீற்றிருந்த அனைவரும் வங்காளி வேஷ்டியும் ஜிப்பாவுமே அணிந்திருந்தனராம். ஆனால், நம்மூரிலோ, ஏதாகிலும் ஒரு தமிழர் சம்பவம் நடந்தால் அருங்கோடையாயிருந்த போதிலும் நிஜார், நெக்டை, பூட்ஸின்றி நம்முள் சில பிரமுகர்களைப் பார்ப்பதரிது.

 

வடநாட்டிலுள்ள தமிழன் தான் அங்கே ஏகி 2, 3 வருடங்களேயானபோதிலும் தான் பிறந்து வளர்ந்ததே வட இந்தியா போல் “எனக்கு ஸாம்பார், ரசம் ஒன்றும் ஸூட் ஆகாது. ரொட்டி, தர்க்காரிதான் ஒத்துக்கொள்கிறது" என்று ஒரு பெருமையுடன் சொல்கிறான்.

 

வடநாட்டிலுள்ள தமிழர்களில் சிலருக்கு நம் பாஷை மறந்து விட்டதென்றே சொல்லலாம். குழந்தைகளுக்கு வீட்டில் தமிழ் சொல்லிக் கொடுக்காததால் அவர்களுக்கு தமிழ் எழுதவோ, படிக்கவோ தெரியவில்லை. ஆனால் வடநாட்டார் நாம் 50 வருடம் வடநாட்டில் இருந்தாலும் அவர்கள் நம்மை "மதராஸி" அல்லது "மராட்டி" என்று தான் சொல்கிறார்கள்.

அநேக வருடங்களுக்கு முன் வடநாடேகிய ஒரு தமிழர் ஒரு நாள் “இரண்டு நாளாக என் கழுத்து உட்கார்ந்துவிட்டது" என்றார். எனக்கு இன்னதென்று விளங்காததால் ஒரு சிநேகிதரைக் கேட்டதன்பேரில் அவர் ''தொண்டைக்கட்டு என்று சொல்கிறார். ஹிந்தியிலுள்ள 'மெரா கலாபைட்கயா' என்பதைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்'' என்று விளக்கினார்.

 

நம் குழந்தைகளைக் கூட அவர்கள் தாய் தகப்பன்மார் வீட்டில் தமிழில் பேசச் சொல்வதில்லை. ஆங்கிலத்திலோ, ஹிந்தியிலோ பேசினால் தான் கௌரவமென்றெண்ணி அதன் பிரகாரமே குழந்தைகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

 

நான் சுமார் 12 வருடங்களுக்கு முன் பம்பாயில் ஒரு சர்க்கஸுக்குச் சென்றிருந்தேன். டிக்கட் வாங்குமிடத்தில் நின்று கொண்டு ஆங்கிலத்தில் ஒரு டிக்கட்டுக் கொடுக்கும்படி கேட்டேன். - நான விசேஷமாய் ஆங்கிலம் பேசுவதில்லை. அப்பொழுது எனக்கு ஹிந்தி தெரியாததால் அங்ஙனம் செய்யலானேன். - அதற்கு அவ்விடமிருந்த குமாஸ்தா, "நீர் மதராஸி என்று அறிகிறேன். அவர்கள் தான் தங்கள் மனைவியர்களிடம் கூட ஆங்கிலத்தில் பேசுவார்களாம்" என்றார். இல்லையென்று மறுக்க எனக்கு தைரியம் வரவில்லை. அவர் சொன்னது உண்மைதானே!

 

ஆனால், மதராஸில் குடியேறியுள்ள குஜராத்தியர்கள், மார்வாரிகள், ஹிந்துஸ்தானியர்கள் இன்னும் பிறமாகாணத்திவர்களைப் பார்க்கிறோம். அவர்களில் பெரும்பாலானோர் தங்கள் பழக்க வழக்கங்களையோ, நடை, உடை, நகை, நாகரிகங்களையோ, உணவு சம்பிரதாயங்களையோ நம்மைப்போல் மாற்றிக் கொள்வதில்லை.

 

நம்மவர்களோ பெயர்களைக்கூட் மாற்றி விடுகின்றனர் சங்கரன் என்பதை ஷங்கர் என்றும் பரமேசுவரன் என்பதை பரமேஷ்வர் என்று மாற்றிவிடுகிறார்கள். பெண்களுக்குப் பெயரிடுவதுகூட் மாறிவிட்டது. மகாலட்சுமி, சுந்தரி, கல்யாணி, ஸரஸ்வதி, என்றெல்லாம் போய் ஹன்ஸா, மாதுரி, சீலர், ஸரோஜா, ஸௌதாமினி என்றெல்லாம் வந்துவிட்டது.

 

சங்கீதத்திலோ தமிழ்ப் பாட்டில்லை என்பது மாத்திரமல்ல; தமிழ்ப்பாட்டுகள் சினிமாக்களில் பாடப்பட்டாலும் அவைகள் பெரும்பாலும் ஹிந்துதுஸ்தானி மெட்டிலேயே அமைந்துள்ளன. காசியில் 2 வருடங்களுக்கு முன் ஒரு தமிழ்ப்படம் காட்டப்பட்டது. அதில் வந்த கதாநாயகர் பிரபல தமிழ் பாடகர். ஆனால் பாட்டுக்கள் எல்லாம் ஹிந்துஸ்தானி மெட்டன்றி வேறு மெட்டுக்களில் அமைக்கப்படவே இல்லை. எனதருகில் உட்கார்ந்திருந்த கொட்டகை முதளாளி வங்காளி, “என்ன ஐயா, உங்களுக்கு என்று தனி ராகம், மெட்டுகள் கிடையாதா? ஆரம்பம் முதல் ஸைகால், கே.ஸி.டே இவர்கள் பாடும் மெட்டிலல்லவே உங்கள் பிரபல பாடகர் பாடுகிறார். பூ இது தான் தமிழ் சங்கீதம்?” என்று என்னைக் கேட்டார். கேட்டதில் என்ன பிசகு?

 

இது மாத்திரமல்ல; தமிழ் நாட்டில் எவ்வளவோ தமிழ் பத்திரிகைகள் இருந்து வருகின்றன. சிலவற்றில் வரும் தொடர்கதைகள் பெரும்பாலும் ஹிந்தி, வங்காளி முதலிய பாஷைகளிலுள்ள கதைகளினின்றும் மொழி பெயர்க்கப்பட்டவையே. ஏன் தமிழ் நாட்டில் ரஸமுள்ள கதைகள், வியாசங்கள் எனுதத் திறமையுள்ள எழுத்தாளர்களில்லையா? சாமானியக் கதையா யிருந்தாலும் “சரத் சந்திரரின்” ஏதோ ஒரு கதையைத் தழுவி எழுதப்பட்ட தென்றால் தான் ஒரு பெருமை போலும். அன்னிய பாஷைகளிலுள்ள உயர்தர கதைகள், காவியங்களெல்லாம் மொழி பெயர்க்க வேண்டிய தவசியமேயாகிலும், எல்லாவற்றிலும் அந்நிய பாஷைகளிலிருந்து கடன் வாங்கியே கடத்தவேண்டுமென்பது நமது பாஷையை அவமதிப்பது போல் அல்லவா ஆகின்றது!

 

தமிழ் இசை மகாநாட்டில் கலந்துள்ள பிரமுகர்களெல்லாம் அன்னிய பாஷைகளிலோ சங்கீதத்திலோ பிரசித்தி பெற்றவர்கள். இவர்கள் செய்து வரும் தொண்டின் பயனாக, இனித் தமிழன் தன் பாஷைக்கும் நாகரிகத்திற்கு முண்டான கெளரவத்தைக் கொடுப்பானென்றே நம்புகிறோம்.

 

ஆனந்த போதினி – 1944 ௴ பிப்ரவரி ௴

 

 

No comments:

Post a Comment