Wednesday, September 2, 2020

 தமிழும் தமிழ்க்  கல்வியும்

 

‘தமிழ்' என்பதற்கு, 'இனிமை' என்பது பொருள். இப்பொருள் தோன்றவே புலவர் திலகரான கம்பநாடரும் தமது இராமாயணத்தில், தமிழ்ப் பாட்டிசைக்குந் தாமரையே' என்று கூறி யிருக்கின்றனர். இவ்வினிய தமிழ் முற்காலத்தில், அரிய தவத்தினையுடைய அகத்தியமா முனிவரால் தந்தருளப்பட்டு, பாண்டிய நாட்டரசர் பாதுகாவலினும், வண்மையினும் செழித்தோங்கிய சங்கங்கள் மூன்றினு மிகுந்த மகாமதியாளர்களான புலவர்களால் ஆராயப்பட்ட இயல், இசை, நாடகமென்னும் மூன்று பகுதிகளையுடையதாய் விளங்குவது. இவரேயன்றி ஏனைய தமிழ் நாட்டரசரும், புலவரும் ஒத்த அன்பினராய் விரும்பி ஆராய்ந்துணர்ந்த மேன்மை யுடையது.

 

சின்னாள் பல்பிணிச் சிற்றறிவினோராகிய மக்கட்கு உறுதியான நன்மைகளைத் தரும் மெய்ப்பொருள் நிரம்பப்பெய்து, எண்ணிறந்த சிறப்பினவாக மதிநலம் பெற்ற முன்னோர் அமைத்துவைத்த ஞான முதலான பலவகை நூற்களை யுடையது. " குணகடல் குமரி குடகம் வேங்கடம் " என்னும் நான் கெல்லையினுள்ளே வழங்கப்படும் உரிமை பெற்றது.

 

இத்தகுதியுடைய தமிழ்க்கல்வி இக்காலத்தில் கற்கக் கடமை பூண்ட நமது நாட்டோர் பலராலும் கைவிடப்பட்டிருப்பது யாவரு மறிந்ததே. "எண்ணென்ப வேனை யெழுத்தென்ப விவ்விரண்டுங், கண்ணென்ப வாழுமுயிர்க்கு'' என்று மூதறிவுடையோர் மொழிந்த வண்ணம், கண்கள் உடலின் உறுப்புக்கள் எவற்றினு மேலாய்ச் சிறந்து, ஒளிதந்து உலகின் பொருள்களைத் தோற்றுவித்துச் செய்யுந்தொழில் அனைத்தினுக்கும் உதவியாய் நெறிகாட்டி விளக்குவது போலக் கல்வியும் உலகின் இயற்கை நிலையையும், நம் நிலைமையையும், நமக் கவ்விரண்டினோடு முண்டாகிய சம்பந்தத்தையும் காட்டி, நன்மை தீமைகளை யுணர்வித்து, அறம், பொருள், இன்பம், வீடு ஆகியஇவற்றை யடைவதற்குரிய ஞான நல்வழிகாட்டி, இம்மை மறுமைக்கு இன்றியமையா உடன்றுணையாய், அழியாப் பெரும் பொருளாய், விலை மதிக்கப்படாத அணிகலனாய் இருப்பதன்றோ?

 

இக்கல்வியில்லாது செல்வப் பொருளிருந்தால் நாம் நன்மையும் சிறப்பும் அடையமாட்டோமோ வெனின், அடையோம். எவ்வாறெனில், ஒருவர் உடலின் உறுப்புக்கள் யாவும் அமையப்பெற்று, கண்ணிரண்டு மட்டும் இல்லாவிடில் அவ்வுறுப்புக்களால் செய்யும் இயற்கையான வினையும், அடையும் நலமும் சிறப்புறாதது போலக் கல்வியின்றிச் செல்வத்தாலுண்டாம் காரியங்கள் சிறப்படைய மாட்டா. ஆகையால் கண்போன்றதான கல்வியே மற்றவைகளைவிட முதன்மையாகப் பெற யாவரும் முயல வேண்டிய மேன்மையுடையதாக விளங்குகின்றது. கல்விப் பொருளை நன்காராய்ந்து பெற்றவர்களுக்குச் செல்வப்பொருள் கிடைக்கா விடினுங் குறைவின்று. அவர்களுக்கு எக்காலும் நன்மையேயாம். கல்லாதவர்களுக்கு அளவற்ற செல்வப் பொருளிருந்தாலும் நலம் போலத் தோன்றிக் கெடுதியையே விளைவிக்கும். இதை,


''நல்லார்கட் பட்ட வறுமையி னின்னாதே
கல்லார்கட் பட்ட திரு"


என்னும் நீதி வாக்கியத்தா லுணரலாம்.  

 

இவ்வாறு தொன்மையும், இனிமையும், மேன்மையும் பொருந்தி நமக்கு நன்மையும், அறிவும், சிறப்பும், உறுதியுந்தரும் - - நாம் பேசும் - சுயபாஷையாகிய தமிழின் கல்வியறிவை யடைய முயலாதிருப்பது நமது குற்றமும் அறியாமையுமேயாம். ஆகையால், சுயபாஷையான தமிழை நாம் கற்றும், கல்லாதவரைக் கற்கச் செய்தும் வரவேண்டும். செல்வப் பொருள் உள்ளோர் கற்போருக் குதவியாய்க் கல்விப் பெருக்கத்துக்குத் தம்மாலியன்ற சாதனமளித்து, ஒரு மனதுடன் உதவி செய்துவரின், நாம் நம் முன்னோரைப் போல் சுகஜீவனத்தையும், நீண்ட ஆயுளையும், கல்விப் பேற்றையும், நல்லோர் சேர்க்கையையும், நிலைபெற்ற ஞானத்தையும், அளவற்ற செல்வத்தையும், குறைவற்ற புகழையும், இகத்திற் பெற்றுப் பரத்தில் நித்தியானந்தனாய் விளங்குங் கடவுள் சந்நிதியடைந்து, அவன் கருணைக் குரிமையுள்ளவராய் நிலைபெற்ற வாழ்வையு மடையப் பெறுவோம்.


 "கற்கை நன்றே கற்கை நன்றே
 பிச்சை புகினுங் கற்கை நன்றே.''


 சரஸ்வதி சபைத்தலைவர்,

டர்பன், தென் ஆப்ரிக்கா.

 

ஆனந்த போதினி – 1928 ௵ - மே ௴

 

 

 

 

 

No comments:

Post a Comment