Wednesday, September 2, 2020

 தமிழ் அகராதியின் வரலாறு

 

 

இவ்வுலகில் வழங்கும் செம்மை சான்ற தொன் மொழிகளுள் ஒன்றாய தமிழ் மொழியைச் சென்ற இருநூறாண்டுகளாகப் பிற நாட்டு நல்லறிஞர் போற்றி வளர்க்கத் தலைப்பட்டார்கள். இத்தகைய அறிஞருள், இத்தாலியா நாட்டினின்றும் தமிழகம் போந்து, தமிழ் மக்களோடு கலந் துறைந்து, விழுமிய புகழ் பெற்ற வீரமா முனிவரே தலை சிறந்தவராவார். மேலை நாட்டுச் செம்மொழிகளிலமைந்த செழுங்கலைகளைச் செவ்வையாய் ஓதியுணர்ந்து செவிச் செல்வம் பெற்ற இம்முனிவர் அருந்தமிழ் மொழியின் அகலங்காண விரும்பிப் பல்லாண்டு முயன்று பயின்றார். தாளுண்ட நீரைத்தலையாலே தரும் தெங்கின் தகைமை வாய்ந்த இம்முனிவர் தமிழ் மொழிக்கு ஆற்றிய பணி அருமை சான்றதாகும்.

 

தைரியநாதர் என்றும், வீரமா முனிவர் என்றும் தமிழகத்திற் புகழ் பெற்ற இவ்வறிஞரே, தமிழகராதியின் தந்தையாவார் என்று கூறுதல் மிகையாகாது. தமிழ் மொழியில் அமைந்த சொல்லின் பொருளை அறிந்து கொள்வதற்கு முற்காலத்தில் நிகண்டுகளே சிறந்த கருவியாயமைந்தன. பிங்கலம், திவாகரம், சூடாமணி, ஆசிரியம், கயாகரம் முதலிய பல நிகண்டுகள், தமிழ் மொழியில் விளங்கக் காணலாம். இந்நிகண்டுகள் யாவும் ஏற்பாவால் அமைந்திருக்தமையால், அவை கற்றோர்க்கே யன்றி மற்றோர்க்குப் பயன்படாதனவாயின என்பது சொல்லாமலே அமையும். கவிபாடும் புலவர்க்கும் பொருள் தேரும் அறிஞர்க்குமே, இவை பெருந் துணையாயிருந்தன. கற்றோரே யன்றி மற்றோரும் தமிழின் நீர்மை யறிந்து தழைத்தோங்க வேண்டுமென்று கருதிய வீரமா முனிவர் 'சதுரகராதி' என்னும் பெயரால் ஓர் சிறந்த அகராதி செய்து உதவினார். இவ்வகராதி நூற்பாவால் அமைந்த நிகண்டுகள் போலாது, தமிழ்ச் சொற்களை அகரமுதலாக எடுத்தடக்கிப் பொருள் விளக்கிய பான்மையால், தமிழ்ப் பெருங் கடற்கு அஃது ஓர் மரக்கலமாகத் திகழ்ந்ததென்று அந்நூற்பாயிரம் எடுத்துரைக்கின்றது. இவ்வகராதி அளவிற் சிறியதாயினும், அருமை மிக வாய்ந்ததென்பதில் ஐயமில்லை. பிற்காலத்தில் தமிழில் எழுந்த பேர் அகராதிகட்கெல்லாம், 'சதுரகராதி' யே கலங்கரை விளக்கம் போல் நின்று நெறிகாட்டும் தகைமை யொன்றே அதன் பெருமைக்குப் போதிய சான்றாகும். பெயர், பொருள், தொகை தொடை யென்னும் கான்கு பகுப்புடைய தாய் நலமுறத் திகழும் இவ்வகராதி பதினெட்டாம் நூற்றாண்டில் எழுந்ததாகும். சதுரகராதியை அடிப்படையாகக் கொண்டு தனித் தமிழ் அகராதிகளும், தமிழ் ஆங்கில அகராதிகளும் எழுந்தன. இவ்வாறு தமிழ் - மொழியில் எழுந்த அகராதிகள் பலவாயினும், கற்றுவல்ல புலவர்க்கும், கலைபயிலும் மாணவர்க்கும் உற்ற துணையாய் நின்றுதவும் தமிழகராதி மதுரைத்தமிழ்ச் சங்கத்தார் வெளியிட்டுள்ள சொல்லகராதியேயாகும். சொற்பொருள் விளக்குதலோடு, அச்சொல் மேலோர் வாக்கில் மிளிரும் பான்மையை எடுத்துக் காட்டும் முறை அருந்தமிழ் அறிய விரும்புவோர்க்குப் பெரும்பயன் விளைப்பதாகும்.

 

இனிச் சதுரகராதியைத் துணைக்கொண்டு இந்நாட்டில் எழுந்த தமிழ் ஆங்கில அகராதிகளின் வரலாற்றைச் சுருக்கமாக ஆராய்வோம். இற்றைக்கு நூறாண்டுகளுக்கு முன்னரே, இத்துறையில் உலையா ஊக்கம் கொண்டு உழைத்த மேலை நாட்டறிஞராய ராட்லர் என்பார்க்கு ஆங்கில உலகும் தமிழுலகும் மிகுந்த கடப்பாடுடையனவாகும். விவிலிய நூல் பரப்பும் விழுமிய நோக்கத்துடன் இந்நாட்டில் நிறுவப்பெற்ற ‘வேதமட' த்தைச், சார்ந்த ராட்லர் என்னும் நல்லறிஞர், பல்லாண்டுகளாகத் தமிழறிந்தோரைத் துணைக் கொண்டு உழைத்து ஓர் தமிழ் ஆங்கில அகராதி தொடுத்தார். ஆயினும் அவ்வகராதியை அச்சிட்டு வெளிப்படுத்தும் முன்னமே, அவர் இம்மண்ணுலக வாழ்வை நீத்தார். பல்லாயிரக் கணக்கான தமிழ்ச் சொற்களைப் பிழையற ஆராய்ந்து, அவற்றின் பொருளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் விளக்கிப் போந்த இவ்வறிஞரது ஆர்வம் அளவிடற் பாலதன்றாம். இவ்வகராதி நான்கு பகுதிகளாக வேதமடத்தினரால் 1836 - ம் ஆண்டு முதல் வெளியிடப் பெற்றது.

 

இவ்வகராதியைத் தழுவி, விரிவாக எழுந்த வின்சுலோ அகராதியே, இன்று காறும் சிறந்த தமிழ் ஆங்கில அகராதியாக நின்று நிலவுகின்றது. அமெரிக்கர் மடத்தின் ஆதரவில் எழுதப் பெற்ற இப்பேர் அகராதியைப் பதிக்கும் பொறுப்பும் பெருமையும் வின்சுலோ என்னும் மேலை நாட்டறிஞர்க்கு வாய்த்தது. எடுத்த கருமத்தைத் தொடுத்து முடிக்கும் மனத்திண்மை வாய்ந்த இவ்வறிஞர், பல்லாண்டு பணி செய்து, கைப்பொருளின்றிக் கவன்று, ஒன்பதாண்டகவையில் அகராதியை அச்சியற்றி முடித்த வரலாறு அதன் பாயிரத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. 1853 - ம் ஆண்டில் அச்சேறிய அகராதியின் செலவு அளவு கடந்து சென்றமையால், அமெரிக்க மடத்தார் அதன் பொறுப்பை யேற்று நடத்த இயலாது தளர்வுற்றார். முந்நூற்றறுபது பக்கம் அச்சேறி முடிந்த அளவில் அகராதி வேலை முறிந்து விடுமோ என்னும் அச்சம் பிறந்தது. சென்னை அரசாங்கத்தார் உதவியை ஆசிரியர் வின்சுலோ நாடிய பொழுது, அவர்கள் முன்னரே வாக்களித்திருந்த முறைமையில், அகராதிமுற்றுப் பெற்ற பின்னர் நூறு பிரதிகள் விலை கொடுத்து வாங்க இசைந்தனரே யன்றி முன் பணம் கொடுத்துதவ முற்பட்டாரல்லர். எஞ்சி நின்ற பகுதிகளை அச்சிட்டு முடித்தற்குப் பின்னும் பல்லாயிரம் ரூபா இன்றியமையாதிருந்தமையால், பங்கொன்றுக்கு இருநூறு ரூபாவாக எழுபது பங்குகள் சேர்த்து, அத்தொகையைக் கொண்டு அகராதியை முற்றுவிக்க ஆசிரியர் வின்சுலோ முயன்றார். ஆயினும் இவர் கருதியவாறு பங்குகள் விலைப்படாமையால், கடன் கொண்டும் செய்வன செய்தலே நன்றென்று கவிஞர் கூறியாங்கு ஐயாயிரம் ரூபா கடன் பட்டு ஆசிரியர் அகராதியை அச்சிட்டு வெளிப்படுத்திதர். இவ்வாறு ஊதியமின்றி அரிய உழைப்பினை நல்கிய மேலை நாட்டறிஞரது ஊக்கமும் தியாகமும், நம்மனத்தைக் கவர்ந்து நன்றியை யெழுப்புவதாகும்.

இனி, இப்பேரகராதியைப் பின்பற்றிச் சென்னைச் சர்வகலா சங்கத்தின் ஆதரவில் ஓர் புதிய தமிழ் ஆங்கில அகராதி வெளியிடப்பட்டு வருகின்றது. இப்புதிய அகராதியின் வரலாற்றையும் சுருக்கிக் கூறுதல் பொருத்தமுடையதாகும். இற்றைக்கு ஏறக்குறைய எழுபதாண்டுகளுக்கு முன்னர் எழுந்த வின்சுலோ அகராதியின் அருமை யறிந்த சென்னை அரசியலாளரும், ஏனைய அறிஞரும், அதனைப் புதுக்கி அச்சிட்டாற் பெரும் பயன் விளையும் என்று கருதினார்கள். அவ்வகராதியின் முதற் பதிப்பு முழுமையும் சில ஆண்டுகளிற் செலவாகி விட்டமையால், அதன் பிரதிகள் கிடைத்தல் அரிதாயிற்று. அகராதியின் பதிப்புரிமை அமெரிக்க மடத்தார் உடைமையாக அமைந்திருந்தது. இரண்டாம் பதிப்பை ஏற்று முடித்தற்குப் போதிய பொருள் அம்மடத்தாரிடம் இல்லை. அன்றியும் 67,000 சொற்களுக்கு மேல் அடங்கிய அகராதியைப் புதுக்கி அமைத்தற்குரிய புலமைசான்ற பதிப்பாளரும் கிடைப்பதரிதாயிருந்தது. இவ்வாறு போதிய ஆர்வமிருந்தும், பொருளாக்கமின்றி, ஏக்கற்று நின்ற நிலையினைச் சீமையில் வாழ்ந்த போப்பையர் அறிந்தார். பல்லாண்டு தமிழ் நாட்டில் உழைத்துப் பழுத்த முதுமையுற்றுச் சீமைக்குச் சென்று, இழுமென் மொழி களாலியன்ற விழுமிய திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து ஆறுதலுற்றிருந்த அருந்தமிழ்த் தொண்டராய போப்பையர் இக்குறையை யறிந்து மனங்குழைந்தார். இமிழ்திரைக் கடல் கடந்து மீண்டும் தமிழ் நாட்டிலுறைந்து பணி செய்தற்குரிய உடல் நலமற்றிருந்த இவ்வையார், தமிழ் அறிந்த தக்கார் ஒருவரைத் தம்பால் அனுப்பக்கூடுமாயின், வின்சுலோ அகராதியைத் தாமே புதுக்கியும் விளக்கியும் எழுதித் தருவதாகச் சென்னை அரசாங்கத்தாருக்கு அறிவித்தார். அவர் எழுதிய நிருபத்தைச் சென்னை அரசாங்கத்தாரும், சர்வகலா சங்கத்தாரும் ஆராய்ந்து முடிவு செய்வதன் முன்ரே 1907- ம் ஆண்டில் போப்பையர் ஆவி துறந்தார். ஆயினும் தமிழ் மொழியின் பால் வைத்த தலை பாய அன்பினால், ஐயர் ஆதரித்துத் தொகுத்திருந்த அருந்தமிழ்ப் பெரும் பொதிகள் அனைத்தையும், அவர் புதல்வர், சென்னையிலமைந்துள்ள கீழ்நாட்டுக் கையெழுத்து நூல் நிலையத்திற்கு (Madras Oriental Manuscripts Library) அன்பு கூர்ந்து அனுப்பி வைத்தார். அப்பொதிகளில் அமைந்த குறிப்புக்களை ஆராய்ந்த தமிழ்ப் புலவர்கள், புதியதோர் அகராதி வெளியிடுதல் அவசியமே யென்று சென்னை அரசாங்கத்தாருக்கு அறிவித்தார்கள். அப்பொழுது தென்னாட்டில் வதிந்த சாண்ட்லர் என்னும் ஆங்கிலப் பாதிரியார் ஒரு செவ்விய முறை வகுத்து, சென்னை அரசியலாளர்க்கு அனுப்பினார். அரசாங்கத்தார் அம்முறையை ஆதரித்துப் புதிய அகராதி அச்சிடும் வகைக்கு நூறாயிரம் ரூபா உதவ இசைந்தார்கள். ஐந்தாண்டளவில் முற்றுப் பெறுமென்று அரசாங்கத்தார் கருதிய போகராதி 1913 - ம் ஆண்டு தொடங்கி இன்றளவும் இடையீடின்றி நடந்து வருகின்றது. ஒன்பதாண்டுகள் இதன்பதிப்பாளராய் அமர்ந்து பணி செய்த சாண்ட்லர் என்பார், எழுபதாம் வயதில் இளைப்பாறக் கருதி வேலையினின்று விலகிக் கொண்டார். இப்பேரகராதியின் உரிமையை அரசாங்கத்தார் சென்னைச் சர்வகலாசாலைக்கு அளித்துள்ளார்கள். பதினெண்மர் அடங்கிய ஒரு கழகத்தினரால் இப்பொழுது அகராதி வேலை கண்காணிக்கப் பெற்று வருகின்றது. பல்லாயிரம் ரூபா செலவு செய்து பல்கலைக் கழகத்தின் ஆதரவில் வெளியிடப்படும் இவ்வகராதி பழுதற் இயற்றப் பெறுமாயின் பெரும் பயன் விளைவிக்கும் என்பதில் ஐயமில்லை.

 

ஆனந்த போதினி – 1931 ௵ - டிசம்பர் ௴

 

No comments:

Post a Comment