Wednesday, September 2, 2020

 

தமிழ் இலக்கண நூல்கள்

 

இலக்கண மென்பது தமிழில் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என ஐவகைப்படும். இதில் எழுத்து மொழிக்குக் காரணமாயுள்ளது. அது எண், பெயர் முதலிய பத்துவகை பிரிவினையுடையது. இவைகளைப் பற்றி விவரிக்கும் நூல்களுக்கு இலக்கண நூல்கள் என்று பெயர். எல்லா பாஷைகளிலுமுள்ள இலக்கண நூல்களைக் காட்டிலும், செந்தமிழ் மொழியாகிய நம் தாய்ப் பாஷையில் உள்ளவைகள் அதிக சிறப்புடையனவாயும், சுவையுடையனவாயும் விளங்குகின்றன. அகஸ்தியராதி பெரியோர்களால் இயற்றப்பட்ட இந்நூல்கள் தமிழில் பல உள. இவ்விலக்கணங்கள் சில பகுதியை யேனும் முழுப்பகுதியையேனும் சுறுக்கியும், விரித்தும் உரைக்கும். அந்நூல்களில் முக்கியமானவை சில கீழ்வருமாறு:

 

(1) அகத்தியம் இதை இயற்றினவர் சிவபெருமானிடத்தில், இத்தென் மொழியைக் கேட்ட முனிக்கரசராகிய அகஸ்தியர். தமிழிற்கு இந்நூலே ஆதி இலக்கணம். இது எழுத்து, சொல், யாப்பு, அணி, பொருள் முதலிய அடங்கிய நூல். இதுபேரகத்தியம், சிற்றகத்தியம் என இருவகைப்படும் என்று ஆன் றோர் கூறுகின்றனர். தற்போது இது வழக்காறற்றது. ஆயினும் பேரகத்தியத்திரட்டு என அச்சிடப்பட்டு வழங்கி வருகின்ற நூலிலுள்ள சூத்திரங்கள் இதிலுள்ளவை களே.

 

(2) தொல்காப்பியம்: - தொல்காப்பிய ரிதை இயற்றினவர். இவர் அகஸ்தியர் மாணவரில் ஒருவர். இவ்வாசிரியருக்கு "திரண தூமாக்கினி'' எனப் பெயருண்டு. இந்நூலில் பஞ்ச இலக்கணங்களும் நிரம்பி இருக்கின்றன. இது 1612 - சூத்திரங்கள் கொண்டது. இத் தொல்காப்பியம் அருமையிலும், பழமையிலும், சூத்திரப் பொருட் செறிவிலும், நயத்திலும் சிறந்து விளங்குகிறது. இதற்கு உரை கூறினவர், சேனாவரையர், கல்லாடர், இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் முதலியவர்களாம். இடைச் சங்கத்தாராலும் கடைச்சங்கத்தாராலும் இது நன்று புகழப்பட்ட நூல். உரைகளுள், சொல்லதிகாரத்திற்கு மாத்திரம், சேனாவரையர் உரையே சிறப்பாய் வழங்குகின்றது. கல்லாடர் செய்த உரையானது இன்னும் அச்சிற்கு வரவில்லை. ஏட்டில் தவழ்ந்து கிடக்கின்றது. பொருளதிகாரத்தின், இறுதிப் பகுப்பிற்கு மாத்திரம் பேராசிரியருடைய உரை அச்சிடப்பட்டிருக்கிறது.

 

தவிரவும் திருவாவடுதுறை ஆதீனம் வேலப்ப தேசிகரின் சிஷ்யராய், காஞ்சி புராணம், கம்பரந்தாதி, சோமேச வெண்பா முதலிய நூற்களைச் செய்து சமாதி யடைந்த சிவஞான முனிவ ரென்பவர் இந்நூலின் பாயிரத்திற்கும், முதற் சூத்திரத்திற்கும், அருமையாகவும் விரிவாகவும், தெளிவாகவும் ஒரு உரை செய்துள்ளார்.

 

(3) இறையனாரகப் பொருள்: - கடைச்சங்கப் புலவருள் ஒருவரான இறையனார் என்பவர் இதன் ஆசிரியர். மதுரையில் எழுந்தருளி இருக்கும் சொக்கலிங்க மூர்த்தியே இவரென்பர். இந்நூலுக்கு உரை, மூங்கைப்பிள்ளையார் என்று சொல்லப்படும் உப்பூரிகுடிகிழார் மகனார் உருத்திரசன்மனார் முன்னிலையில் அரங்கேற்றப் பட்டது; அறுபது சூத்திரங்கள் கொண்டது; கடைச்சங்கத்து தலைமை பூண்டு விளங்கின சோமசுந்தரக் கடவுளின் செய்யுளுக்குக் குற்றம் கூறின நக்கீரனார் இதற்கு உரை செய்துள்ளார். அது ஒப்புயர் வற்ற பொலிவும், நுட்பமும், தெளிவும் உடையது. இது இறையனாரகப் பொருளுரை எனவழங்கும்.

 

(4) நன்னூல்: - இது சனகாபுரம் பவணந்தி என்னும் சைநமுனிவ ராற் செய்யப்பட்டது. எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி முதலிய ஐந்திலக்கணங்களும் நிறைந்த நூலென்பர் இதை. ஆனால் பொருளிலக்கணம், யாப்பிலக்கணம், அணியிலக்கணம் மூன்றும் தற்காலம் கிடையா தொழிந்தன. இது நம்மனோர் செய்த தவப்பயனே. எழுத்ததிகாரம், சொல்லதிகாரம் என்கிற இரண்டு அதிகாரங்களும் செவ்வனே சுருங்கக்கூறி விளக் கப்பட்டிருக்கின்றன. தொல்காப்பிய முதலிய நூற்கள், கற்று வல்லுநரா யுள்ளோர்க்கேயன்றி ஏனையோர்க்கு எளிதில் அறியப்படுவன வல்ல. இந்நன்னூலோ அவ்வாறன்று. மாணவரும் எளிதில் அறிந்து கொள்ளக் கூடிய தன்மையில் இருக்கிறது. இது நிற்க, பவணந்தி முனிவர் பிற்கூறிய மூன்று இலக்கணங்களையும் இயற்றிலர் என்பது அநேகருடைய துணிவு. இதன் உண்மையை வல்லார்வாய்க் கேட்டுத் தெளிக. சைன அரசனான மயிலை மானும், ஆசிரிய நிகண்டு இயற்றிய பாவாடை வாத்தியார் என்கிற ஆண்டிப் புலவரும், இலக்கணக்கொத்துக் காரராகிய சங்கர நமச்சிவாயரும், சிவஞான சுவாமிகள் முதலியவரும் இந்நூற்கு உரை இயற்றியுள்ளார். தற்காலத்தில் இந் நூலாகிய நன்னூல் நன்கு மதிக்கப்பட்டு வருகின்றது. இதன் பெருமையைச் சற்றேறக்குறைய 200 வருஷங்களுக்கு முன்னிருந்த சாமிநாத தேசிகர் என்னும் சிறந்த தமிழ்ப்புலவர் தாமியற்றிய இலக்கணத்தில்,


 "முன்னோ ரொழியப் பின்னோர் பலரினுள்
 நன்னூலார் தமக்கு எந்நூலாரும்
 இணையோ வென்னும் துணிவே மன்னுக''


எனக்கூறி இருப்பது இங்கு கவனிக்கற் பாலது.

 

(6) வீர சோழியம்: - பொன்பற்றியூர் புத்தமித்திரனார் இயற்றியது. இது பஞ்ச இலக்கணங்களையும் சுறுக்கிக்கூறும் ஒரு நூல். அக்காலத்தில் அரசாண்ட வீரசோழன் என்னும் மன்னன் பெயரால் இது செய்யப்பட்டதாதலால் இப்பெயர் பெற்றது.

 

இதன் பெருமையைக் கீழே காட்டியுள்ள ஒரு மேற்கோளால் தெரிந்து கொள்க.

 

திகழ் தசக்கரம் = திகடசக்கரம் என்று புணர்ந்தமைக்குப் புலவர்கள் மறுக்க, அப்பொழுது கச்சியப்ப சிவாசாரியருக்கு முன்பாக குமாரக்கடவுள் அப்புலவர்களுக்குச் சமாதானம் கூறுமாறு இவ்விலக்கண நூலைக் கொண்டு வந்து''. நான் கொடு மூன்றொன்பதா முயிரின்பின் நவ்வருமேல்'' என்ற சூத்திரத்தைக் காட்டினரென்பர். இது பெருந்தேவனார் செய்த உரையோடு கூடியது.

 

(7) நேமிநாதம்: - இது களத்தூர் - குணவீரபண்டிதர் இயற்றியது. நேமிநாத தீர்த்தங்கார் பெயரால் அவர் இயற்றினபடியால், இதற்கு " நேமி நாதம்'' எனப்பெயர் வந்தது. நன்னூல் போல, எழுத்தும், சொல்லும் அமைந்த இலக்கண நூல் இது. ஆனால் வெண்பாவினால் சமைந்தது. இந்த வெண்பாக்கள் சுருங்கச் சொல்லல் முதலிய பத்து அழகோடுங்கூடி விளங்குகின்றன. இந்நூலை'' சின்னூல்'' என்றும் கூறுவர். இதைச் " சின்னூலுரைத்த குணவீரபண்டிதன் சேர்பதியும்" என்னும் தொண்டை மண்டல சதகச் செய்யுளாலறிந்து கொள்க.

 

(8) புறப்பொருள் வெண்பாமாலை: - ஆசிரியர் ஐயனாரிதனார். அகஸ்தியர் மாணவராகிய தொல்காப்பிய முனிவர், அதங் கோட்டாசான், துரர் லிங்கன், செம்பூட்சேய் முதலிய பன்னிருவராலும் கூறப்பட்ட புறப்பொருணூலுக்கு, இதுவழி நூலாகும். பொருள் இலக்கணத்தில் ஓர் பகுதியைக் கூறுவது இது. மாகலூர் கிழார் செய்த உரையொன்று இதற்குளது.

 

(9) தண்டி அலங்காரம்: - இயற்றினவர் தண்டி ஆசிரியர். இவரை அம்பிகாபதியின் புத்திரரென்றும் சிலர் சொல்லுவர். அணி என்னும் தென் மொழியானது, வடமொழியில் அலங்காரம் என்று கூறப்படும். இது தண்டி அலங்காரம் என்னும் வடமொழியிலுள்ள நூலைப் பின்பற்றியது. இது அணி இலக்கணத்தை விரிவாகத் தெரிவிக்கும் ஒரு நூல். இந்திரவிமான மாலையி னாசிரியராகிய சுப்ரமண்யதேசிகர் இதற்கு உரையெழுதியுள்ளார். இதற்குத் தற்கால உரைகள் அநேகம் உண்டு.

 

(10) இவையேயன்றி யாப்பருங்கலம், யாப்பருங்கலக் காரிகை, மாறன லங்காரம், பிரயோக விவேகம் முதலிய நூற்களும் உலகவழக்காறற்றதான வீரமாமுனிவர் (Father Beschi) இயற்றிய தொன்னூலும், முத்துவீர உபாத்தியாயர் இயற்றிய ஐந்திலக்கணங்களையும் கூறும் முத்து வீரியமும், திருப்புகழ் சுவாமி என்கிற முருகதாசசுவாமிகள் இயற்றிய புலமை இலக்கணத் தோடு கூடிய அறுவகை இலக்கணமும் உள்ளன.

 

இவ்வகை நூல்கள் நிறைந்த நம் தமிழ்ப்பாஷையின் பெருமையை அறிந்து அவைகளைக் கண்டு, நம் ஆனந்தபோதினியின் சகோதர, சகோதரிகள் அப்பயனை யடையுமாறு கடவுளைப் பிரார்த்திக் கின்றனன்.

 

சுபம்.


 M. S. சுந்தரேஸய்யர், திண்டிவனம்.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - செப்டம்பர் ௴

 

 

 

 

No comments:

Post a Comment