Wednesday, September 2, 2020

தமிழ் இலக்கிய அபிவிருத்தி

 

 

சுதந்திர தேவியின் துதி.


தேவி தின் ஒளி பெறாத

தேயமோர் தேய மாமோ?
ஆவியங் குண்டோ? செம்மை

அறிவுண்டோ? ஆக்கமுண்டோ?

காவிய நூல்கள் ஞானக்

கலைகள் வேதங்க ளுண்டோ?
பாவிய ரன்றோ நின்றன்

பாலனம் படைத்தி லாதார்?                             (பாரதி)

 

ஒரு தேசத்தின் ராஜீய சுதந்திரத்திற்கும், அத்தேசத்தின் பாஷாபி விருத்திக்கும், இலக்கிய சிருஷ்டிக்கும் இணை பிரிக்க இயலாத நெருங்கிய சம்பந்தம் உண்டென்பது அகில லோகத்திலுள்ள அறிஞர் அனைவரும் ஒப்புக் கொண்ட உண்மையாகும். ஒரு தேசத்தின் இலக்கியம் அத்தேசத்தில் வாழும் ஜனசமூகத்தின் அகவாழ்வை அழகிய முறைகளில் அறிவிப்பதாகும். ஆகையால் தேசிய அகவாழ்வின் நிறைவுக்குத் தக்கவாறே அதன் இலக்கியச் செல்வமும் அமையும். அகவாழ்வு நிறைந்ததாயிருக்க வேண்டுமாயின் அந்த ஜனசமூகம் ராஜீய சுதந்திரம் பெற்றதாயிருக்க வேண்டும். சுதந்திரமில்லாத தேசத்தில் எந்த விதத்திலும் ஜாதீய அபிவிருத்தி காண முடியாது. அடிமைக் குழியில் ஆழ்ந்து அல்லலுறும் நாட்டில் ஜனங்களின் யாக்கையும் ஆன்மாவும் கட்டுண்டு கிடக்கும். அவர்கள் கருத்தெல்லாம் அல்லும் பகலும் ஆகாரமின்றி ஆவி துறவாதிருக்க அத்தியாவசியமான உபாயம் தேடுவதிலேயே அமைந்திருக்கும். உணவு ''உணவு' என்று ஓயாது உழன்று கவலையுறும் ஜாதியாருக்கு உயர்ந்த இலக்கியத்தைச் சிருஷ்டிப்பதற்கும் அனுபவிப்பதற்கும் நேரம் ஏது?


 அடிமை நாட்டில் தோன்றும் நூல்கள்

 

ஆங்கில ஆசிரியர்களில் தலை சிறந்தவருள் ஒருவரான டிக்குன் என்பவர் இலக்கியத்தை இருவகையாகப் பிரிப்பர். அவையாவன அறிவு நூல்கள், ஆற்றல் நூல்கள் என்பன. கணிதம், வைத்தியம், சோதிடம் முதலிய விஷயங்கள் சம்பந்தமான நூல்கள் அறிவு நூல்களாகும். காவியம், நாடகம், நாவல் முதலியன ஆற்றல் நூல்களாகும். அறிவு நூல்கள், ஆற்றல் நூல்கள் ஆகிய இரண்டு வகையோடு சாமர்த்திய நூல்கள் என்று மூன்றாவது வகையொன்றையும் சேர்க்கலாம். இச்சாமர்த்திய நூல்கள் அறிவு நூல்கள் ஆகா; ஆனால் ஆற்றல் நூல்கள் என்று அறியாதார் மயங்கும் வண்ணம் இயற்றப்பட்டிருக்கும். காரிகை கற்றுக் கவிச்சுவையறியாது செய்யப்படும் செய்யுள் நூல்களே சாமர்த்திய நூல்கள் வகையில் சேரும். தமிழ்ப் பாகவதத்தில் காணப்படும் ராமசரிதைச் செய்யுள்களுக்கும் கம்பர் பெருமான் செய்துள்ள ராமாயணக் கவிகளுக்கும் உள்ள உண்மை வித்தியாசத்தை அறிந்தோர் சாமர்த்திய நூல்களுக்கும் ஆற்றல் நூல்களுக்கும் உள்ள வேறுபாட்டைத் தெரிந்தோராவர். இம்மூவகை இலக்கியங்களிலும் உண்மையாகவே "இலக்கியம்" என்னும் சிறப்புப் பெயருக்குத் தகுதியுடையன ஆற்றல் நூல்களேயாகும். அவைகள் தாம் உண்மையில் அவை தோன்றியுள்ள நாட்டின், ஜனசமூகத்தின் வாழ்வின் பல அம்சங்களையும் அழகு முறைகளில் அமைத்து அறிவிப்பதாகும். அத்தகைய ஆற்றல் நூல்கள் அடிமையின்றிச் சுதந்திரக் காற்று வீசும் தேசத்திலேயே மலிந்து தோன்றும். ஆகையால் எங்கே ஜனங்கள் பிறநாட்டார் ஆட்சியின் கீழ் வாழ்கின்றனரோ அங்கே ஆற்றல் நூல்கள் உண்டாக்கப்படுவதில்லை. அங்கே தோன்றுவதெல்லாம் அறிவு நூல்களும் சாமர்த்திய நூல்களுமே.


ஆற்றல் நூல்கள் எப்பொழுது தோன்றும்?

 

எங்கே சுதந்திரமில்லையோ அங்கே உண்மை விளக்கமில்லை. எங்கே உண்மை விளக்கமில்லையோ அங்கே ஆநந்தம் அமைவதில்லை. ஏனெனில் "சத்யமே ஆநந்தம்.'' இலக்கியம் என்பது ஆன்மாவின் ஆநந்த உணர்ச்சியின் மலர்ச்சியன்றோ? ஆனந்த உணர்ச்சி யில்லாத அடிமை நாட்டில் - துன்பக் கேணியில் விழுந்து துடிக்கும் தேசத்தில் இலக்கியம் எழுவது எங்ஙனம்? ராஜீய சுதந்திர மிழந்த நாட்டில் இலக்கியம் எப்பொழுதேனும் தோன்றுவதாயிருந்தால் அவ் விலக்கியம் உண்மையின் விளக்கமாகாது, உண்மையின் தேட்டமாகவே இருக்கும்; சுதந்திர மலர்ச்சியாகாது, சுதந்திரத்திலுள்ள பேரவாவைத் தெரிவிப்பதாகவே இருக்கும். அங்ஙனம் அடிமை வாழ்வில் உள்ள அடங்கா வெறுப்பையும், சுதந்தர வாழ்வில் உள்ள சொல்லொணா விருப்பையும் தெரிவிக்கக் கூடிய இலக்கிய மறுமலர்ச்சியும் தேச பக்த சிகாமணிகளில் சிலரேனும் தேச மகாஜனங்களின் உள்ளத்தில் உறங்கிக் கிடக்கும் சுதந்திர உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் பொழுதே தோன்றுவதாகும். தேசீய உணர்ச்சி தோன்றினால் இலக்கிய சிருஷ்டியும் உடன் தோன்றிப் பெருகிவிடும். தேசீய இலக்கியங்கள் தோன்றவே அவைகளுக்குக் காரணமான தேசிய சுதந்திர உணர்ச்சியும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து பெருகும். அதனால் தான் சென்ற நூற்றாண்டில் ஐரோப்பா முழுவதும் தீர்க்கதரிசி யெனக் கீர்த்தி பெற்றவரும், இத்தாலி நாட்டின் சுயராஜ்ய ஸ்தாபனத்திற்கு அஸ்திவாரம் நிறுவியவரும், இந்தியர் அனைவரும் இடைவிடாது கற்றறிய வேண்டிய இணையற்ற பல நூல்கள் இயற்றியுள்ள வருமான மாஜினி என்னும் மகான்,

 

ஒரு தேசத்தின் ராஜீய வாழ்விற்கும் அதன் இலக்கிய வளர்ச்சிக்கும் மிக நெருங்கிய சம்பந்தம் உளது. அதனால் ஒன்றை விட்டு ஒன்று முன்னேற்றம் அடைதல் என்பது ஒரு பொழுதும் முடியாத காரியமாகும்

 

என்று கூறியிருக்கின்றனர். ஆகவே அடிமை நாட்டில் ஆற்றல் நூல்கள் தோன்றுவது அரிது. தோன்றினால் அவை ஜனங்களின் அபிலாஷைகளைக் காட்டுவதாகவும், அவர்களை அடிமை மோகத்தினின்று விடுவித்து சுதந்திரப்பாதையில் செலுத்துவதாகவும் இருக்கும். தேசபக்தி யூட்டி ராஜீய விஷயங்களில் ஜனங்களுக்குச் சேவை செய்யத் தூண்டாத நூல்கள் உண்மை இலக்கியங்கள் ஆகா என்பது மாஜினியின் அபிப்பிராயம்.


தமிழ் இலக்கிய வளர்ச்சி

 

சென்ற இரண்டு நூற்றாண்டுகளாக இந்தியா தேசம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் அடிமை வாழ்வு வாழ்ந்து வருகின்றது. அக்காலத்தில் தமிழ்நாட்டில் தோன்றியள்ள நூல்களை ஆராய்ந்தால் மேற்கூறிய உண்மைகள் நன்குபுலனாகும். தமிழ் நூல்கள் ஏராளமாக இடையீடின்றி இயற்றப்பட்டு வருவது உண்மையே. ஆனால் சமீப காலத்தில் தோன்றியுள்ள தேசிய உணர்ச்சியின் காரணமாகத்தான் உண்மை இலக்கிய வகுப்பைச் சேர்ந்த நூல்கள்இரண்டொன்று தோன்றி வந்திருக்கின்றன என்பதும் உண்மையாகும். சென்றஇரண்டு நூற்றாண்டுகளில் இயற்றப்பட்டுள்ள அந்தாதிகள், கலம்பகங்கள், பிள்ளைத் தமிழ்கள், ஸ்தல புராணங்கள் முதலியவைகள் எல்லாம் சாமர்த்தியஇலக்கிய வகுப்பைச் சேர்ந்தவைகளே யாகும். ஆசிரியர் சுந்தரம் பிள்ளை ஆக்கியுள்ள மனோன்மணியம் என்னும் நாடகம் கூட உண்மை இலக்கிய வகுப்பைச் சேர்ந்ததாகாது. அதில் காணப்படும் கவிகட்கும் சாமர்த்தியம் மிக உயர்ந்ததே என்பது உண்மை. ஆனால் அக்கவிகளில் அமைந்துள்ள "ஆற்றல் மிக அற்பமே யாகும். பிரிட்டிஷ் அரசாட்சியின்" நன்மைகளை எடுத்தோதி பிரிட்டிஷ் அரசாங்கத்தைப் புகழும் தமிழ் நூல்களைப் பேசாது விடுத்தலே நலம். பிரிட்டிஷ் அரசாட்சிக் காலத்தில் தோன்றும் உயர்ந்த கல்வி ஞானம் காட்டும் உரை நூல்களுக்கும், உரை நூல்களின் பதிப்புக்களுக்கும் கணக்கில்லை. ஆனால் உண்மைக் கவிச்சுவை ஆராய்ச்சி மட்டும் காணக்கிடைப்பதில்லை. தமிழில் கவிச்சுவை ஆராய்ச்சி செய்வதாய்க் கூறுவோர் எண்ணெய் ஆட்டும் செக்கு மாடுகள் போல் பழைய தமிழ் நூல்களைச் சுற்றி வருவதிலேயே காலங்கழிக்கின்றனர். இலக்கியச் சுவையின் இலக்கணத்தை அறிந்து கொள்வதற்கு ஏதுவாயுள்ள பல நாட்டுப் பெருங் காவியங்களையும் இதர இலக்கியங்களையும் ஆராய வேண்டும் என்ற எண்ணம் எள்ளளவும் அவர்களுக்கு இல்லை. இத்தகைய மனோபாவமும் நாட்டின் சுதந்திரமின்மையின் பயனேயாகும்.


இலக்கிய மறுமலர்ச்சி

 

சென்ற ஐம்பது வருஷங்களாக நாட்டில் தேசிய உணர்ச்சி சிறிது சிறிதாகவேனும் அரும்ப ஆரம்பித்திருக்கின்றது. அதன் பயனாக அங்கங்கேயுள்ள சுதேச பாஷைகளில் இலக்கிய வளர்ச்சியும் ஏற்படுவதாய் இருந்து வருகின்றது. அங்ஙனம் தோன்றி வரும் நவீன இலக்கியங்கள் ஜனங்கள் அடிமை வாழ்வைச் சித்திரித்துக் காட்டுகின்றன. படிப்போர் மனத்தில் சுதந்திர தாகத்தை எழுப்புகின்றன. அத்தகைய உண்மை இலக்கியங்கள் ஆக்கியருளியுள்ளவர்களில் தலைசிறந்தவர் உருதுபாஷையில் இக்பால், வங்காளி பாஷையில் தாகூர், மலையாள பாஷையில் வல்லத்தோல், தமிழ் பாஷையில் பாரதியார் ஆவர். அவர்களுக்கு ஜனங்கள் என்றும் கடமைப்பட்டவராவர். சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்களில் இரண்டொன்றைப் படித்துப் பாருங்கள். உண்மைக் கவிச்சுவை கம்பரின் ராமாயணம், புகழேந்தியின் நளவெண்பா, இளங்கோவின் சிலப்பதிகாரம் முதலிய நூல்களில் விளங்குவது போல் விளங்குவதையும், படிப்போர் உள்ளத்தில் ஒருவகை ஆனந்தமும் உற்சாகமும் தோன்றுவதையும் காண்பீர்கள்.


தமிழர் கடன்

 

இக்காலத்தில் தமிழ் மொழியில் இலக்கியங்கள் என்று கூறக்கூடிய உண்மை நூல்கள் வெகு வெகு சிலவே. உண்மை இலக்கியங்கள் நாட்டில் சுதந்தரம் ஏற்பட்டால் தான் உண்டாகும். சுதந்தரம் ஏற்படுமுன் உண்டாக்க விரும்புவர் சுதந்திரதாகம் நிறைந்தவராய், சுவாமி விவேகானந்தர் கூறியபடி அல்லும் பகலும் நாட்டின் நிலைமையிலேயே நெஞ்சு செலுத்தியவராய், ஏழைகள் பால் இரக்கம் ததும்பியவராய் இருத்தல் வேண்டும். அங்ஙனம் உள்ளத்தில் அடிமை வெறுப்பும் சுதந்திர விருப்பும் உண்டாக வேண்டுமானால், அவைகளின் பலனாக உண்மை இலக்கியங்கள் உற்பத்தியாக வேண்டுமானால் ராஜீய வாழ்வில் கலந்துகொள்ள வேண்டும். சுதந்தர இயக்கத்தில் சேர்ந்து உழைத்தல் வேண்டும். தாய்நாட்டின் விடுதலையே தமிழின் விடுதலை யாதலால் தமிழர் அனைவரும் தாய்நாட்டின் விடுதலைக்கு உழைப்பதில் சலியாதிருப்பாராக.


வந்தே மாதரம்.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - அக்டோபர் ௴

 

 

No comments:

Post a Comment