Wednesday, September 2, 2020

 

தமிழ் நூல் ஒன்று

(குரு.)

வாழ்க்கையை நலவழிபெற நடத்தி வருவோர் வெற்றி பெறுவர். வாழும் முறையை உணர்ந்து அதற்கேற்ப நடக்குமாறு நம்மை ஊக்குவன நீதி நூல்கள். கட்டுப்பாடு கொண்டு நடக்கின்ற மக்கள் தாம் உயர்வடைதல் இயலும். மக்கள் தொகுதியினர் தமக்குள் கட்டுப்பாடு உண்டாக்கிக் கொள்வதற்காகவே நீதி நூல்களைத் தோற்றுவித்தனர். உலகில் நீதியினை எடுத்தியம்பும் நூல்கள் எண்ணிறந்தன, அவற்றுள், தலையாயது மாண்புபெறு திருக்குறளே என்பது அறிஞர் ஒப்பமுடிந்த கொள்கையாகும். அந்த நூல் அளவில் சிறியது; மாண்பிற் பெரியது. அதன் பெருமைகள் உள்ளுதற் கரியன; விள்ளுதற்கும் அரியன. அப்பெருநூலால் பயனடைந்தோர் பலர்; அதன் பெருமை கண்டு தமிழ் மொழிப்பால் விருப்புற்றார் பலர்.

தமிழ் மொழிக்கு வைப்பு நிதி போன்றன பத்துப் பாட்டு, எட்டுத் தொகை, பதினெண் கீழ்க்கணக்கு என்பன. இலக்கணத் துறையில் வேறு நூல்கள் உள. தமிழ் மொழிக்குப் பெருமை நல்கும் இப் பல நூல்களுள் 'திரு' என்னும் அடை பெற்ற நூல்கள் இரண்டே. அவை திருக்குறளும், திருமுருகாற்றுப் படையுமாம். பல நூல்க ளிடை இரண்டு சிறந்து விளங்க அவ் விரண்டனுள் ஒன்றாய் விளங்கும் திருக்குறள் எத்துணை மாண் புடைத்து!

நீதி நூல்களுள் சிறந்து நிற்பது திருக்குறளே. நீதிக்கு, உயர்ந்தவனென்றும் தாழ்ந்தவனென்றும் நோக்கும் இரு நோக்கு இல்லை. குற்றம் புரிந்தவன் யாவனேயாயினும் அம் மகனை ஒறுத்தல் வேண்டும். இவ் வொரு சிறந்த நிலையே நீதி நூற்களின் உயிர் நிலை. இஃதின்றேல் நீதி பல எடுத்துரைக்கினும் இவ் வொரு குறைபாட்டான் மற்றைய நூல்கள் தள்ளப்படுவனவே. இக் கண்கொண்டு நோக்குவார்க்குத் திருக்குறளின் தனிச்சிறப்பு தோன்றத் தடையில்லை. 'மனு' முதலிய நீதி நூல்களில்' குலம் உயர உயர ஒறுத்தல் இன்மையும், குடி தாழத் தாழ ஒறுத்தல் மிகுவதும் காணப் படுகின்றனவே! அவைகள் நடுவு நிலைமையாளர்க்கு நீதி நூல்களாகத் தென்படமாட்டா. இப்பேருண்மையை உணர்ந்த ஆசிரியர் சுந்தரம்பிள்ளையவர்கள்,

"வள்ளுவர் செய் திருக்குறளை மறுவறான் குணர்ந்தோர்கள்

உள்ளுவரோ மனுவாதி ஒருகுலத்துக் கொருநீதி"

 

எனக் கூறிப் போந்தமை ஈண்டு உணர்தற் குரித்து.

தமிழர்கள் பொது நோக்குக் கொள்கையிற் றலை சிறந்தவர்கள். தான் எக் கொள்கை யுடையராயினும் பிற கொள்கை யுடையவர்களை எக் காலத்தும் தூற்ற மாட்டார்கள். தங்கட்கு எவ்வாறு ஒரு வழி சிறந்ததெனத் தோன்றிற்றோ அவ்வாறே பிறர்க்கும் மற்றோராறு சிறந்ததாகக் காணப்படலாம். ஆகவே, ஒருவரை மற்றொருவர் தூற்றுவதற்கு இடமில்லை. இக் கருத்துடைமையினால் தான் ஆசிரியர் பூங்குன்றனார் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனக் கூறினார். ஆசிரியர் திருவள்ளுவர் உலகுக்செல்லாம் செல்ல வேண்டிய நீதி நூலொன் றனைச் செய்யப் புகுந்தனர். பல திறப்பட்ட சமயங்களும் கொண்ட வெவ்வேறு பகுப்பினரும் பின்பற்ற வேண்டியது ஒரே வகைப்பட்ட நீதியாகும். எல்லாச் சமயத்தினரும் முடிவாகக் கொண்டிருத்தல் ஓர் உண்மையே. இச் கொள்கைக ளெல்லாம்.
பொருந்த அமைந்தாலன்றி உலகினர் யாவரும் ஒரு நூலைப் பொது நூலென ஏற்றுக் கொள்வார்கள். ஆகவே தான், பொய்யா நாவின் புலவரேறான நம் வள்ளுவர் பொது நோக்குடையராய்,

'அகர முதல வெழுத்தெல்லா மாதி

பகவன் முதற்றே யுலகு'

 

எனப் பொதுப்படக் கடவுள் வாழ்த்துக் கூறினார். இப் பொது நோக்கிருப்பின் இன்றைய உலகில் போரேது, பிணக்கேது? இன்றைக்கு எண்ணும் இப் பொது நோக்குணர்வை எத்தனையோ ஆயிரம் ஆண்டுகட்கு முன்னரே உணர்ந்து பறைசாற்றிய திருக்குறளின் மாண்பு எத்தகைத்து!

திருக்குறளுக்குப் பிற்பட்ட இலக்கியங்களுள் எதனை எடுத்தாலும் அதனுள் திருக்குறட் கருத்துக்கள் ஆங்காங்கே அமைக்கப் பெற்றிருக்கின்றமையைக் காணுகின்றோம். கம்பர், வில்லிபுத்தூரார் முதலாய எல்லா ஆசிரியர்களும் திருக்குறளின் பொருளே யன்றி அதன் மொழிகளையும் பொன்னே போற் போற்றுகின்றனாபின் அந் நூலின் பெருமை அளவிடற் பாலதாமோ! இன்றைய கல்லூரி மாணவர்களைப் பிற இலக்கியங்களில் வினாக்கள் வினவுங்கால் குறட் கருத்தமைந்த பாடல்களைப் பற்றிப் பல
வினாக்கள் கேட்கப்படுவதும் இக் குறளின் அருமை பெருமைகளைப் புலப்படுத்துவதாகும்.

தமிழ் மொழியிலக்கணத்தில் 'காரண விடுகுறிப் பெயர்' என ஒரு பெயர்ச் சொல்லுண்டு. காரணங் கருதிய வழி பல பொருட்குப் பொதுவாகின்ற சொல் ஒன்று பொதுவாக எப்போதும் ஏதோ ஒரே ஒரு பொருளை உணர்த்த வருமாயின் அச் சொல்லைக் காரண விடுகுறி யெனக் கூறுவர். அவ் விதிக்கேற்ப 'குறள்' என்று கூறியவுடனேயே 'வள்ளுவர் செய்திருக் குறளையே நாம் நினைக்கின்றோம். 'குறள்' எனும் சொல் குறள் வெண்பா எனும் பொருளுடைத்தாயினும் நாம் எண்ணுவது திருக்குறளைப் பற்றித் தான். இவ்வாற்றானும் திருக்குறள் மாண்பு வெளிப்படும்.

திருக்குறளைப் பயிலுவோர் எத்தேயத்தே தோன்றி எவ்வாற்றான் வாழினும் அவர்கள் தங்களைத் தமிழ்மொழிக் குரியவர்களாகக் கூறிக் கொள்ள விரும்புவர். அத்தகைய ஈர்ப்பு ஆற்றல் அந் நூலகத்தே உண்டு. அந்த ஆற்றலால் இழுக்கப் பட்டமையானன்றோ ஆங்கிலப் பாதிரியாரான போப்பையர் தம் நடுகல்லில் 'தமிழ் மாணவன்' எனக் குறிப்பிடச் சொன்னார்! அம் மட்டோடன்றி அப் பெரியார் எப்போதும் தம் மேலங்கியில் திருக்குறட் புத்தகத்தை வைத்துக் கொண்டிருந்தா ரென்றால் திருக்குறளின் பெருமை தானே தோன்று மன்றோ?

பேரரசி விக்டோரியா அம்மையார் ஆங்கில அரசின் தலைமையாளராயிருந்தோர். அவ்வம்மையாரின் நூல் நிலையத்தே அவர்களுடைய சமயம் புத்தகத்தை யடுத்து நம் திருக்குறளை அமைத்திருந்தனராம். இதனால் நம் குறள் மாண்புணர்ந்த பெரியோர் பலரென்பது தெளியப்படும்.

ஆசிரியர் வள்ளுவரின் பெருமை யுணர்ந்த உணர்ச்சிக் கவியாய பாரதியார்,

 

'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு' எனக் கூறிப் போத்தனர்.


திருவள்ளுவரை உலகுக் கீந்தமையால் தமிழ் நாட்டுக்குப் பெருமை வந்தது என்பது உட்கிடக்கை. எனின் என்னே அவர் தம் நூலின் பெருமை!

உலகில் தலை சிறந்து விளக்கும் மொழிகள் பலவற்றினும் நம் இனிய குறள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளது. ஆங்கிலம் பிரெஞ்சு, இலத்தீன், ஜெர்மன் முதலியன அப் பெருமை பெற்ற மொழிகளுள் ஒரு சில.

திருக்குறள் என்னும் கடலின் ஒரு பகுதியையேனும் நன்குணராதார் ‘'திருக்குறளில் வீடு கூறப் பெறவில்லை; அறம், பொருள், இன்பம் எனும் மூன்றே கூறப் பெற்றன' என்பர்.
‘வீடு’ என்பது யாது? இவ்வுலக வாழ்க்கையைச் செம்மையுற நடத்தினார்க்குக் கிடைக்கும் பேறன்றோ அது? ஆகவே, உலக வாழ்வினிடையே தான் வீடு பெறுவதும் பெறாததும்
பிணைந்து கிடக்கின்றன. இம்மையில் வீடு காணான் அம்மையில் எவ்வாறு காண்பான்? 'அறம் புரிய வேண்டும்' எனில் வீட்டை நோக்கமாகச் கொண்டன்றோ ஆசிரியர் கூறுவர்! வீட்டைப் பற்றிக் குறளில் கூறப்பட்டிருப்பதை அறிஞர்கள் சின்னாட்களுக்கு முன்னர்ப் பத்திரிகைகளின் வாயிலாக நன்கு விளக்கி விட்டனர். ஆகவே, குறளின் பெருமை மீண்டும்
மிகுந்து மக்களால் உணரப்பட்டு வருகின்றது.

பெரியார் யார்? இக் கேள்விக்கு விடையாக ஆங்கிலத்தில் நியூமென் (New Man) என்பார் நீண்டதொரு கட்டுரை வரைந்துள்ளார். அக்கட்டுரையை உலகினர் யாவரும்
போற்றுகின்றனர். நம் ஆசிரியர் நீண்ட சொற்களில் எப்போதும் நம்பிக்கை வைக்காதவர். 'கடுகைத் துளைத்து (அதனுள்) எழுகடலைப் புகுத்திக் குறுகத் தரித்த குறளை' எழுதிய நம் வள்ளுவர் ஒரு பாட்டின் ஒரு பகுதியிலேயே இவ் வினாவிற்கு விடை யளிக்கின்றார்.
பெருமையுடையவர்கள் பெரியவர்க ளென்பது எல்லோருக்கும் தெரியும். அப் பெருமை என்ன என்பதைக் கூறிவிடின் 'பெரியார் யார்' என்பது தானே பெறப்படும். அதற்கேற்பப் 'பொய்யில் புலவர் பெருமையின் இலக்கணம் கூறுகின்றார். அவர் கூறுவது ‘பெருமை பெருமித மின்மை' என்பது. எவ்வளவு குறுகிய அளவில் கூறுகின்றார் என்பது நோக்கத்தக்கது. மூன்று சொற்களில் பெரியார் யாரெனக் கூறி விட்டார். ‘பெருமிதமில்லாமை பெருமை; பெருமையுடையோர் பெரியோர்' என விரித்துக் கொள்ள வேண்டியது தான் சம் வேலை. சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பேராற்றல் ஈண்டு நன்கு வெளிப்படுகின்றதல்லவா? பெரியார் யாரெனக் கூறியதோ டமையாது அக் குறளிலேயே சிறுமையுடையோர் எத்தகைய ரென்பதையும் கூறி விடுகிறார். 'சிறுமை, பெருமிதம் ஊர்ந்து விடல்' என்பது பொய்யாமொழி. இவ்வளவு குறுகிய அளவில் சிறந்த கருத்துக்களைத் தெளிவுறக் கூறும் ஆற்றல் எம் மொழியினும் எப் பேராசிரியர்களும் காணாத புதுமை.

‘சாக்ரெடீஸ்' என்னும் போறிஞர் மிக்க நூல்களைப் படித்து பல துறையிலும் அறிவு பெற்ற பெரியார். அவர் எல்லாம் படித்துக் கூட, 'எல்லாம் படித்தும் நான் கண்டது இன்னும் ஒன்றும் தெரியாமையே' என்று கூறினாரெனப் பலரும் அதனைக் கூறிக் கூறி மகிழ்கின்றனர். வள்ளுவனார்க்கு அஃது ஒரு வகையான புதுமையையும் தரவில்லை. இக்கருத்தை நம் ஆசிரியர் ஒரு குறளில் உவமையாக எடுத்தாளுகின்றார். அறிதோற்றியாமை கண்டற்றால்' என 'அறியுந்தொறும் அறியுந்தொறும் அறியாமையின் எல்லை விரியும்' எனும் கருத்தை ஓர் உவமையாகக் கூறுகின்றார். வள்ளுவர் கொள்ளும் கருத்தை உணரின் நம் நாட்டினர்க்குப் பிறர் கருத்துப் புதுமையாகத் தோற்றாதன்றோ!

திருக்குறளின் பெருமை விரிக்க விரிக்க விரியும் தன்மையுடைத்து. ஆசிரியர் திருவள்ளுவர்,

'கவில்தொறும் நூல்கயம் போலும் பயில்தொறும்

பண்புடை யாளர் தொடர்பு'

 

எனக் கூறியுள்ளார். நல்லோரிடம் கொள்ளும் நட்பின் மாண்பு பழகப் பழகத் தெரியுமாம். எதைப் போல எனில் ஒரு நூலை எவ்வளவுச் கெவ்வளவு பயில்கின்றோமோ அவ்வளவுக் கவ்வளவு அந் நூலின் நயம் தோன்றுவது போல. இக் குறளில் ஒன்றனை மற்றொன்றுக்கு உவமையாகக் காட்டினார். நாம் அவ் வீரண்டனையும் திருக்குறளுக்கும், திருவள்ளுவர்க்கும் முறையே உவமைகளாகக் கொண்டு நோக்குவமாயின் திருக்குறளின் நயமும் வள்ளுவர் உளப்பாங்கும் தெளியப் பெறுவோம். அச் சிறு பெரிய நூலைப் படித்துப் படித்து நினைந்து நினைந்து வருவோமாயின் அதன் மாண்பும் வெளிப்பட்டுக்கொண்டே யிருக்கும். அவர் கூறிய இலக்கண விதியாய 'நவில் தொறும் நூல் நயம்' என்பதற்கு அவருடைய ஏலொன்றே தலை சிறந்த இலக்கியம். அதை அறியுந்தொறும்
அறியுந்தொறும் அறியாமையின் எல்லை காணப்பெறும். 'அறிதோற்றியாமை கண்டற்று' என்பது பொய்யா மொழியன்றோ? திருக்குறளுக்கு உவமையாக வேறொரு நூலும் கிடையாது. அதற்கு இணை அதுவே!

ஆனந்த போதினி – 1942 ௵ - மே ௴

 

 

No comments:

Post a Comment