Wednesday, September 2, 2020

 தமிழ் மக்களின் பொழில் விளையாட்டு

 

தமிழ்ப் பெருங் காப்பியத்திலே பொழில் விளையாட்டு வருணித்துரைக்கப்படும். தமிழில் ஒவ்வொரு நிலத்திற்கு முரிய பூச்சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, தமிழ் நாட்டில் பூஞ்சோலைகள் மிகுதியும் இருந்தன வென்பதும், அங்கே ஆடவர் மகளிர் சென்று விளையாடும் வழக்கம் இருந்ததென்றும் அறியக் கிடக்கின்றது. ஆங்கிலேயருக்கு அடிமைகளாய் அவதிப்படுகின்ற நாம் இப்போது அப் பழைய வழக்கத்தில் ஆசை கொண்டு அதன் பண்பு பேச இடம் பெறாதவர்களாய் இருக்கின்றோம். எனினும், தமிழும் தமிழ் நிலவழக்கும் அறிய வேண்டியது தமிழ் மக்கள் கடமை. பண்டை வழக்கம் எண்ணும் போது ஆனந்தக் களிப்பு உண்டாகின்றது. எனவே நந்தமிழ் நிலவழக்கத்தினுள் ஒன்றான பொழில் விளையாட்டு நாம் பாராட்டவேண்டியது ஒன்றேயாமென்க.

 

மங்கலப் பொருளான மலர் தேவர்களுக் குரியது. நாற்றத்திலுந் தோற்றத்திலும் நல்லதாய் கண்களுக்குக் காட்சியாய் காற்றினால் அதன் நறுமணங் கவர்ந்து கொண்டு வரப்பட்டு, மனிதருள்ளம் மலரவும் அவர்களுடல் தழைக்கவுங் குளிர்ச்சியைத் தருவதினால் மனிதருக்கும் அது வேண்டியது. பூந்தழை பெண்களுக்கும் வழக்கம் நமது தமிழ் நிலவழக்கில் மிக விசேடமானது. இத்தகைய மலர்களையுடைய மரங்கள் நிறைந்த சோலையில் மனிதர் விளையாட்டைத் தமிழ் நூல்கள் வர்ணித்துரைக்கும் வனப்பு கேட்போ ரெவர்க்கும் இன்பம் பயப்பது.

 

இப் பொழில் விளையாட்டு வழக்கு பண்டை நாளில் நந்தமிழ் நிலமிருந்த செம்மையையுஞ் சிறப்பையும், பெண்கள் சுதந்தரத்தையும், அவர்கள் கற்பையும், ஆடவர்க ளாண்மையையும், அவர்களறிவையும், வாய்மையையும், பிறநலன்களையும் உரைக்கின்றது.

 

தமிழ் மகளொருத்தியை அவளன்னை தோழியர்களுடன் கூட்டி இப்பகல் கொல்லைகாத்து எல்பட வருதி ரென்று போகவிட்டனள். தாயுத்தரவு பெற்றுப் போன தலைவியுந் தோழிகளும் புனங்காத்தற் றொழிலை மேற்கொண்டிருந்தனர். வெளி நிலத்தி லமைந்த பரணிலிருந்து புனங்காத்த பெண்களது மெல்லிய உடம்பில் வெய்யிலின் வெம்மை அவர்களை வெதும்பச் செய்தது. அதனால் அருவி நீராடும் விருப்பு அவர்களுக்கு உண்டாயிற்று. பளிங்கைக் கரைத்துச் சொரிந்து வைத்தாற்போன்ற பரந்த சுனை நீரிலே அப்பெண்கள் பாயம்பாடிக் குடைந்து நீர் விளையாடினர். நீர் விளையாடிய அந்நங்கையர் தங்கள் பொன் போலும் மின்னுகின்ற முதுகிலே தாழ்ந்து கிடந்த நீலமணியழுத்தினது போன்ற கரிய கூந்தலின் நீரைப் பிழிந்து ஈரமுலர்த்திப் பூப்பறித்தலை விரும்பினர். மலர் பறித்தலை விரும்பிய மங்கையர் சிவந்த செங்காந்தள் மலர்களையும், ஆம்பல் அனிச்ச மலர்களையும், செங்கழுநீர் மலர்களையும், செந்தாமரை மலர்களையும், இவை போன்ற தொண்ணூற்றேழு விதமான மலர்களைப் பறித்துப் பின்னும் பூக்களிலே விருப்பம் மிகுந்தவர்களாய்ப் பலசாதிப் பூக்களைத் திரிந்து பறித்து, அகன்ற பாறையிலே குவித்தனர் என்று கபிலர் குறிஞ்சிப் பாட்டிற் கூறுந் திறன் தமிழரல்லாத பிறரையுந் தமிழையுந் தமிழ் வழக்கையும் விரும்பச் செய்யுந் தன்மையினதாகும்.

 

''சந்தனமுஞ் சண்பகமுந் தேமாவுந் தீம்பலவும் ஆசினியும் அசோகுங் கோங்கும் வேங்கையுங் குரவமும் விரிந்து, நாகமுந் திலகமும் நறவும் நந்தியும் மாதவியும் மல்லிகையும் மௌவலொடு மணங்கமழ்ந்து, பாதிரியும் பரவைஞாழலும் பைங்கொன்றையும் பிணி யவிழ்ந்த பொரிப்புன்கும் புன்னாக மும் உருக்கொடு முகை சிறந்து, வண்டறைந்து, தேனார்ந்து, வரிக்குயில்கள் இசைபாடத் தண்டென்றல் இடைவிராய்த் தனியவரை முனிவு செய்யும் பொழிலது நடுவண் ஓர் மாணிக்கச் செய்குன்றின்மேல் விசும்பு துடைத்துப் பசும்பொன் பூத்து உண்டு துவைப்பத் தண்டேன் துளிப்பதோர் வெறியுறு நறுமலர் வேங்கைகண்டாள்; கண்டு பெரியதோர் காதல் களிகூர்ந்து தன் செம்மலர்ச் சீறடிமேற் சிலம்பு கிடந்து சிலம்பு புடைப்ப, அம் மலரணிக் கொம்பர் நடை
 கற்பதென நடந்து சென்று, நறைவிரிவேங்கை நாண்மலர் கொய்தாள் " என்று நக்கீரனார் தமிழ் மகளொருத்தியின் பொழில் விளையாட்டும் அவள் பூக்கொய்து நிற்றலுங் கூறுமழகு தமிழ் மொழியில் இன்பச்சுவை பயப்பதாம். நக்கீரனார் கூறு மிவ்வழகு நந்தமிழ் மகளுக் கன்றி, வேறுமொழியிற் காணப்படக்கூடுமோ வென்று எமக்கு வீம்பு பேச வல்லமையைத் தருகின்றது. இங்ஙனந் தமிழ் வழக்கத்தைக் கண்டு அதைத் திறம்படக் கூறுமாற்றல் நக்கீரனாரைத் தமிழ்த் தலைமைப் புலவராகச் செய்தது. எனது இச் சிறிய கட்டுரையில் எதுவம் நலன் தோன்றுவதாயின் அது நம் தமிழன்னைக்கும் அவள் நலன் நாடிய நக்கீரர், கபிலருக்குமே யுரியது. குற்றங்களுளவேல் அவை அடியேனது அறியாமைக்கே யுரியன.

 

“தமிழ்ப் பொழில் விளையாட்டு'என்று பொதுப் பெயராற் கூறி இங்கே பெண்கள் பூக்கொய்து விளையாடிய வனப்பையே கூறினமையால் இப்பொழில் விளையாட்டுக்கு ஆண்மக்கள் விலக்கப்பட்டனரோ வெனில், அற்றன்று. இக்கட்டுரை மிகச் சுருக்கமாகவே கூறப்பட்ட தாதலின், தமிழ் நூல்களிற் கண்ட பொழில் விளையாட்டு முழுவதும் இதில் கூறப்பட்டது என்று கொள்ளற்க. அங்ஙனங் கூற முடியாமையும், கூறுமாற்றல் எனக்கு இல்லாமையும் அறிஞர் அறியவேண்டியது அவர் தங்கடன் என்கின்றேன். ஆடவரை விலக்காது அவரும் பூம்பொழில் போகுங் காட்சியை,

 

''கோதை தொடுத்த நரம்பு முலையாக, அவற்றிற்றோற்றிய கீதம் பாலாகச் சுரந்து ஊட்டிக் காமக்குளவியை வளர்ப்ப, அதுகேட்டுக் கணவன் புனலினின்று நீங்கிப் புணர்ச்சி வேட்கையாற் பொழிற்குப் போகின்றான் விருப்பம்இனிது காண்மின்'' என்று ஆசிரியர் நச்சினார்க் கினியர் எழுதிய உரையையுடைய,


 "தூமங் கமழுங் கோதை தொடுத்த துயரிமுலையாத்
 தேமென் கீதம் பாலாச் சுரந்து திறத்தினூட்டிக்
 காமக் குழவி வளர்ப்பக் கணவன் புனலுணீங்கிப்
 பூமென் பொழிலுக் கிவர்வான் புகற்சிகாண் மினினிதே "


என்ற சீவகசிந்தாமணிச் செய்யுளைக் காட்டி இக்கட்டுரையை முடிக்கின்றேன்.

 

ஆனந்த போதினி – 1931 ௵ - நவம்பர் ௴

 

No comments:

Post a Comment