Wednesday, September 2, 2020

 தமிழ் மாணவர் கடமை

 

1. அமிழ்தினு துமினிய தமிழன்னையின் அருந்தவப் புதல்வர்களாகிய நண்பர்களே! அனைவரும் ஒன்றியிருந்து சிந்தியுங்கள். தற்காலத் தமிழுலகில் மாணவ நிலைமையிலுள்ள நாம் நம்மைப் பேணவும், நம்முடைய நாட்டைப்பேணவும், நமது மொழியைப்பேணவும் கடமைப்பட்டவர்களாக விருக்கிறோம். ஏனெனின் இவ்வமயம் நமதுநாடும் மொழியும் பொலிவிழந்து காணப்படுகின்றன. பண்டைக்காலத்தே நம் நாடு எவ்வாறிருந்ததென்பதை யாராய்ந்த பின்னர் நாம் செய்யவேண்டிய கடமைகளைக் கூறுவன்.

 

2. பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னரே நம்முடைய தமிழ்நாடு தலைசிறந்து விளங்கியதென்பது பேரறிஞர்களின் கொள்கை. உலகிலுள்ள எந்த நாடும் எந்த மொழியும் நமது தாய் நாட்டிற்கும் தமிழ்மொழிக்கும் இணையுடையன அல்ல வென்று கூறும் வண்ணம் பண்டைக்காலத்தே வீறு பெற்று விளங்கிய தெனத் தோற்றுகின்றது. முற்காலத்தே ''ஓரைவரீரைம்பதின்ம-- ருடன் றெழுந்த - போரிற் பெருஞ்சோறு போற்றாதுதான் கொடுத்து " நமது தமிழ்ப்பெரு வேந்தர்கள் தனியரசாட்சி நேரிய முறையில் நடாத்தி வந்ததையும், சேரன் செங்குட்டுவனென்பான் இமயத்தின் பிடரியில் விற்குறி பொறித்துத் தன்னையிகழ்ந்த கனக விசயர்களாகிய ஆரிய மன்னர்களின் முடித்தலை நெரிய நமது கற்புக்கரசியாம் பத்தினிக்கடவுளின் படிமத்தைச் சுமத்திவந்ததையும், நாவாயேறி முந்நீர் கடந்து பகைவரையழித்துப் பண்புடன் வாழ்ந்த திறனையும், மயிற்றோகை முதலியனவற்றைப் பிறநாட்டினர்க்கு முதவி வாணிபம் புரிந்த வன்மையினையும், அரசனதவைக் களத்தேறி அவன் தவற்றை அஞ்சாது இடித்துரைத்துத் தன் ஆற்றல் விளங்க மதுரை மாநகரை அங்கியங்கடவுட்கு அறமுறை கோடாது அரியூட்டிச்சென்ற கண்ணகிக் கடவுளின் வீரத்தையும், அன்னோளின் அறவுரை கேட்ட ஞான்றே படிமிசை வீழ்ந்து ஆவியைப் போக்கிக் கொடுங்கோல் நிமிர்த்திய பாண்டியனது செங்கோற்றிறனையும், தலையன்புகாட்டித் தன்னுயிர் நீத்த கோப்பெருந் தேவியின் அறக்கற்
பினையும், அறவணவடிகளினடியிணை மறவாத்துறவினைக் கொண்ட மணிமேகலையின் மாண்பினையும், அதியமான் பாலருங்கனி பெற்றும் மலையமான்பாற்றூதிற்கேகியும் அரசியல் முதலிய துறைகளில் தமிழ்நாட்டு வீரமகளிருக்கிருந்த பேராற்றலை


"இவ்வே பீலியணிந்து மாலை சூட்டி

 

என்ற பாடலால் வெள்ளிடை மலையிற்றெள்ளிதிற்காட்டிய ஒளவைப்பிராட்டியினருந் திறனையும், கற்றோரேயன்றி மற்றோரும் கனிந்துருகுமாறு கவின் பெற்றிலங்கும் கன்னித் தண்டமிழால் இயற்கையழகும் இன்ப ஒழுக்கமும் நீதிமுறையும் மலிந்து மிளிர பாக்கள் யாத்தும் தங்கள் "ஆடெரி படர்ந்த கோடுயாடுப்பிலாம்பி பூத்த" ஞான்றும், வறுமுலை சுவைத்துக் குழவி தாய்முகம் நோக்க மனைவி தம்முக நோக்கிய ஞான்றும் பெரு நில மன்னரே யெனினும் தம்மை மதியாதவரிடம் பரிசில் பெற விழையாது அன்னோரைத் துரும்பென மதித்து நாட்பல கழியினும் அறமுறை கோடாத அரசர் வள்ளல் முதலியோர் பாற்சென்று அமிழ்தன்ன தமிழ்ச்சுவையினை அன்னோர் செவிமடுத்துண்ண ஊட்டி அவர்களின் புற்றளிக்க அன்புற்றுக் கொண்ட நல்லிசைப்புலவர்களின் நல்லற வாழ்க்கையினையும், "யாதும் ஊரே யாவருங்கேளிர், தமிழரனைவருந் தமிழ்த்தாய் மைந்தர் எம்மதமாயினும் எக்குலமாயினும் – எங்கள் தமிழர் எங்கள் தமிழர்'' எனக்கொண்டு, இணைபிரியாது நாட்டிற்கும் மொழிக்கும் நலம்புரிந்து வந்த சைவ அருக புத்த சமயங்களைக்கொண்ட செங்குட்டுவன் இளங்கோ சாத்தனார் முதலியோரின் ஒற்றுமையினையும், அக்காலத்தே மன்னர்களும் வள்ளல்களும், தங்கள் பாலுள்ள பொருட்செல்வங்களை வரையாது கொடுத்து புலவர்களிடத்துள்ள கல்விச் செல்வத்தை நாட்டில் வளம் பெறச்செய்த வன்மையினையும், எந்நாட்டினருங் கொண்டிராத வண்ணம்
தாங்கள் செய்கின்ற செயல்கனிலெல்லாம் கடவுள் வழிபாட்டைத் திறம்படக்கொண்டு சீர்பெற்றோங்கிய தமிழ் மக்களின் கடவுளுணர்ச்சியையும், ஓவியம் -நிமித்தம் - மருத்துவம் முதலிய கைத்தொழில்களில் பண்டைத் தமிழ் நாட்டார்க்கிணையின்றென இன்றும் பிறநாட்டார் வியப்புறுகின்ற செய்தியினையும் கேட்டுணர்ந்து வருகின்ற தமிழ் மாணவர்களாகிய நாம் நம்முடைய தாய்நாட்டினையும் தமிழ் மொழியினையும் எங்ஙனம் காணுகின்றோம் பாருங்கள்.

 

3. இமய முதற் கன்னியீறாக உள்ள இந்நிலப்பரப்பினையே யன்றிக் கடலைக் கடந்துந் தங்கள் ஆற்றலைக் காண்பித்து வந்த நாடு தனக்கென ஓர் பற்றுக்கோடின்றித் தவிக்கின்றது. தற்காலத்திற் றலைசிறந்து விளங்கும் மொழி களெல்லாம் எழுத்து வடிவங்கொள்ளுதற்கு முன்னரே தமிழ் மொழி பல துறைகளினும் வீறு பெற்றிருந்ததென அறிஞர்களால் புகழப்பட்ட மொழி அரசியல் முதலிய எவ்வகையினும் ஆதரவற்ற துமன்றித் தமிழ் மக்களாலும் புறக்கணிக்கத்தக்க நிலைமைக்கு வந்துவிட்டது. நாட்டிற்கும் மொழிக்கும் நலம்புரிவதே நமது கடமையென்று கொண்ட பல புலவர்கள் வாழ்ந்து வந்த நம் தமிழ் நாட்டில் பிறர்க்கெனவும் வாழுகின்ற இரண்டொரு புலவர்களைக் கூடக் காண முடியவில்லை. ஐந்திலக்கணங்களையுந் தனக்குச் சிறந்த அணிக்லனாகக்கொண்டு மிளிர்ந்த நந்தமிழன்னையின் வனப்பை மக்கள் உள்ளத்தைக் கெடுத்து தீ நெறிக்கட் செலுத்துகின்ற பொருளற்ற சில போலிக்கதைகளாகிய மாசுகள் படிந்து மறைத்து வருகின்றன. போரின்கண் தன்மைந்தன் புறங்காட்டி வீழ்ந்தானென்ற சொல் செவிப்படுமுன்னர் கடுஞ்சினம் பூண்டு கைவாள் கொண்டு அன்னோற்குப் பாலூட்டிய கொங்கையை யறுக்கத்துணிந்தவள், விரைந்து போர்க்களம் புகுந்து தன் மைந்தன் மார்பில் அம்பு தைத்து மாண்டிருக்கக்கண்டு மனமகிழ்வு பூண்டு 'என்கணவன் களத்திற்பட்டான் கிளையனைத்தும் முன்னின்று ஒழிந்தன. கையானது பின்னின்று கணையுந்த அம்புபோற் பாய்ந் தான் என் ஏறு'' என்று தன் உள்ளத்தின் வீரவுணர்ச்சியை ஓவியம்போற் காட்டிய வீர மகளிரும், மங்கையர்க்கரசி முதலிய கற்புடைப் பெண்டிர்களும் வாழ்ந்துவந்த நந்தமிழ் நாட்டில் இற்றை நாளில் ஜப்பானிய நாட்டிலுள்ள பெண்கள் நம் நாட்டுப் பொருள்களைக் கொள்ளை கொள்ளப் பல நிறங்களோடு வனைந்தனுப்புகின்ற சிறிய பட்டாசு வெடியினைக் கேட்பினும் நடு நடுங்குகின்றவர்களையும், முன்னேற்றத்தில் விழைவுகொண்ட தற்காலத்திய நமது சகோதரிகளிற் சிலர் மக்கட் பிறவியில் கொள்ளத்தகாத சில ஆடவர்கள் செய்யுந் தீயொழுக்கத்தைக் கொண்டு அன்னோர்களையும் தங்கள் நல்லொழுக்கத்தால் இடித்துரைத்து நன்னெறிப்படுத்தும் ஆற்றலிருந்தும் தன் கைக்கண் இன் கனியிருந்தும் அவற்றின் சுவையைத்தானும் நுகர்ந்து பிறரையும் நுகரச்செய்வதை விடுத்து, இன்னாத காய் தேடித்தானும் மகிழ்ந்து பிறரையும் மகிழ்விக்க விழையும் பித்தரைப் போலவும், தன்னைத் தூய்மைப்படுத்த எண்ணி சேற்றிற் புரண்டு மீண்டு வரும் பேதையைப் போலவும், முன்னேற்றத்தில் ஆர்வங்கொண்டு அவர்கள் பாலுள்ள தீ நெறியிற் சமவுரிமை கேட்பவர்களையும் காணும்படி நேர்ந்ததே! இவர்கள்' என்று நமது அருந்தமிழிலுள்ள பொருந்தாக் கதைகளைப் புறம்பென்று தீய்க்கிட்டு முன்னேற்றத்திற் காவனவற்றைப் பயின்று பண்டை வீரத்தாய்மாராக விளங்குவார்கள்.

 

4. ஒன்றே குலமும் ஒருவனே தெய்வம் என்ற செந்நெறியினைக்கொண்ட நமது தமிழருக்குள் இக்காலத்துள்ள பிளவுகளைக் கணக்கிட வியலுமா? சமயப்போரிடுவோரினும் நாத்திகர் நனிநல்லர் என எடுத்துக்காட்டிய ஓர் தமிழறிஞரின் கருத்து ஈண்டு நினைவிற்கு வருகின்றது. உறக்கத்தினுங்கூட கடவுள் வழிபாட்டைக் கையாண்டுவந்த நம் நாட்டில் அதனையடியோடொழிக்க வேண்டுமென்று ஓர் புயற்காற்றுத் தோன்றித் தன் வீறு குறைத்துவருகின்றது. பலவகையான கைத்தொழில்கள் மலிந்து செல்வம் பெருகிய செந்தமிழ்நாடு இன்று தன் மானத்தைக் காக்கும் ஆடைக்குக்கூட அந்நிய நாட்டை நோக்குகின்றதே. மாணவ நண்பர்களே! நம் நாட்டின் பண்டைச் சிறப்பினையும் இக்காலத்திய இழி தகைமையையும் இவ்வாறு கண்டுங் கேட்டும் அனுபவித்தும் வருகின்ற நம்முடைய உள்ளம் கொதிக்காதிருக்க முடியுமா? தற்காலத்தில் முன்னேற்றமடைந்துள்ள நாடுகளெல்லாம் மாணவர்களாலேயே முன்னேறியதென்பதை யுணர்ந்த நாம் நம்முடைய நாட்டையும் முன்னேறச்செய்யும் பொறுப்பு வாய்ந்தவர்களென்பதை மறந்துவிட முடியுமா? நண்பர்காள் நம்நாட்டினிடத்துப் பற்றுதல் கொண்டுள்ள நம்மை இனி எவருந் தடுக்கவல்லாரல்லரென்பதை உள்ளத்திற் கொண்டு நமது உடன்பிறந்தார் களை அறைகூவியழையுங்கள். என்று நமது தோழர்கள் ஒன்றுபடுவார்களோ அன்றே நம் நாடு ஏனைய நாடுகளினும் தலை சிறந்து விளங்குமென்பதை யுள்ளத்திற்கொள்ளுங்கள். நமது தமிழன்னையின் மாசுகளை நீக்கிப் பொலியச்செய்வோமென்றாண்மை கூறுங்கள். தளரா நோக்கத்துடன் தொண்டு புரிவதே நம் கடமையென்று ஒவ்வொரு தமிழ் மாணவரும் முன்வந்து விடுவோமாயின் பயன் தானே விளையுமென்பதிற் சிறிதும் ஐயமுளதோ?

 

மாணவர் கடமை

 

5. நமது தமிழ் நாடு முன்னேற்றமடைவதற்கு ஒவ்வொரு தமிழ் மாணவரும் தாய்மொழியினைச் செவ்வனே கற்றல் வேண்டும். கற்றர்க்குரிய காலம் இளமையென்பதை உள்ளத்திற்கொள்ளல் வேண்டும். அவ்வாறு கற்கின்ற காலத்தே உடலைமட்டும் பேணித் தங்கள் உரிமைகளையிழந்து அடிமையாகின்ற பாழும் உத்தியோகம் ஒன்றையே வேண்டிப் பயில்வதை யடியோடொழிக்க வேண்டும். கற்கின்ற காலத்தே பண்டைத் தமிழ் மக்களின் வீரத்தினையும் தற்காலத் தமிழ் நாட்டின் நடைமுறையினையும் பிறநாட்டாரின் சரித நிகழ்ச்சியினையும் ஒருவாறு உள்ளத்திற் கொண்டே பயிலுதல் வேண்டும். அடிமை வாழ்க்கையைத் தவிர்த்தால் தமிழ் கற்றார்க்கு வழியில்லையென்று பிறர் நம்மை எள்ளி நகையாடாவண்ணம் கைத்தொழிற் கல்விகளையும் கற்றல் வேண்டும், படிக்கின்ற காலத்தே இரவும் பகலும் ஓயாது படித்து மனதைக் கலக்கி விடுத்தல் கூடாது. படிக்கின்ற காலத்தே காலைமாலைகளில் இயன்ற அளவு உடற்பயிற்சி செய்தல் வேண்டும். ஒழிந்த நேரங்களில் பிறமொழிகளிலியன்ற அளவு கருத்தைச் செலுத்துதல் வேண்டும். விடுமுறை நாட்களில் ஊர் தொறுஞ் சென்று தத்தமக்கு இயன்ற அளவு மக்களிடையே தமிழுணர்ச்சியை உண்டு பண்ணி ஆங்காங்குள்ள செல்வர்கள் பால் இளைஞர்கட்குத் தமிழ் மொழியைக் கற்பித்தற்குப் பொருளுதவி செய்யுமாறு வேண்டுதல் வேண்டும். பொருளற்ற நாவல் முதலிய வெறுங்கதைகளில் மனத்தைச் செலுத்தாது புறம்பெனத்தள்ளுவதுடன் அத்தகைய செயல்களில் வீண் காலங்கழிக்கும் பெரியோர்களை மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையில் மனத்தைச் செலுத்துமாறு வேண்டுதல் வேண்டும். நமது தமிழ் நாட்டில் பொருள் பொதிந்துமிளிர்கின்ற பத்திரிகைகளைப் போற்றுவதுடன் அப்பத்திரிகைகளில் மாணவர் முன்னேற்றத்திற்கென ஒவ்வொரு கட்டுரை வரைதல் வேண்டும். தமிழ் மொழியுந் தமிழரும் முன்னேற்றமடைய வேண்டுமென்றே கூட்டப்பட்ட நமது தமிழர் மகாநாட்டை ஆண்டுக்கொருமுறை கூட்டி நமது தமிழறிஞர்களைத் திரட்டித் தமிழருக்காவன செய்வதுடன் அம்மகாநாட்டைத் தமிழ்நாடனைத்திற்கும் தாயகமாகக்கொண்டு அவற்றின் கிளைகளாக நம் நாட்டிலுள்ள கழகங்களனைத்தையுமமைத்து அதினின்றுந் தமிழ் மொழியைச் சீரிய முறையில்
வளர்க்குமாறு ஒவ்வொரு கழக உரிமையாளர்களையும் வேண்டிக்கொள்ளுதல் வேண்டும். நமது மகாநாட்டைத் தமிழர்களுக்கும் தமிழ் மொழிக்குந் தாயகமாக்க முயற்சி செய்யுமாறு ஒவ்வொரு தமிழ்ப்புலவர்களையும் வேண்டிக்கொள்ளுதல் வேண்டும். தமிழ் நாட்டின்கண் தமிழ் மக்களின் பொருளினாலும் உழைப்பினாலும் கட்டப்பட்ட சாத்திரங்களைச் சோம்பேறிகளுக்கு உரிமையாக்காது நமது ஏழை மக்களின் கல்வி முன்னேற்றத்திற்குப் பயன் படுத்துமாறு அதன் நிர்வாகிகளை வற்புறுத்துவதுடன் தமிழருக்குத் தாயகமாகவுள்ள ஆலயங்களினும் மடங்களினும் மலிந்து கிடக்கும் செல்வங்களிற் சிறிதளவேனும் நமது கல்வி கைத்தொழில் முதலியவற்றிற்குப் பயன் படுத்துமாறு அவைகட்குரியவர்களைப் பணிந்து கேட்டுக்கொள்ளுதல் வேண்டும். பிறப்பினால் நம்மைவிடத் தாழ்ந்தவர்களோ உயர்ந்தவர்களோ ஒருவரிருக்கின்றாரென்னும் போலி எண்ணம் நமது மாணவர்களைப் பற்றாது அடியோடொழித்து அன்பு ஒற்றுமை முதலிய அருங்குணங்களைக் கொண்டு நம் நாட்டை முன்னேறச் செய்தல் வேண்டும். நமது உடன்பிறந்தாராகிய பெண்மணிகளுக்குப் பண்டைக்காலத்திய தமிழ் மங்கையரின் கல்வி, கற்பு, வீரம் முதலியவற்றைத் தன்அகத்தே கொண்டுள்ள அரிய நூல்களைப் படிக்கச்செய்து அவர்களையும் வீரத்தாய்மார்களாக்குவிக்க முயற்சித்தல் வேண்டும். தமிழ் மொழியினை நன்கு உணர்ந்து ஏனைய மொழிகளினும் வன்மை பெற்றுள்ள நமது மூதறிஞர்களைக்கொண்டு பிறமொழிகளில் நம்மொழி யிலில்லாத அருங்கருத்துக்கள் காணப்படின் அவற்றைத் தமிழில் மொழிபெயர்க்க முயற்சித்தல் வேண்டும். ஆலயங்களிற் காணப்படும் சில வெறுப்புச்செயல்களை வேரறக் களைந்துவிட்டு கிழமைக்கோர் முறையேனும் தமிழரனைவரும் ஆலயங்களிற்கூடி அரைக்கால் எழிகையேனும் இறைவனை வழிபட்ட பின்னர், நமது முன்னேற்றத்திற்குரிய வழிகளைப் பற்றி விரிவுரையாற்றி அனைவரையும் ஒற்றுமைப்படுத்தல் வேண்டும்.

 

நண்பர்காள்! இத்தகைய செயல்களெல்லாம் நம்முடைய எதிர்கால வாழ்க்கைக்கு ஆக்கர் தருவதொன்றன்றோ. சுயஆட்சி உரிமையில் வேட்கை பெருகிவரும் நம்முடைய நாட்டிற்கு கல்வி கைத்தொழில் முதலியன அடிப்படையன்றோ. இவ்வகையில் முனைந்து நின்று பணியாற்றுங்கடன் மாணவர்களுடைய தன்றோ. இத்தகைய சிறிய துறைகளில் மாணவர்களாகிய நாம் பணியாற்றுவதற்கு நமது தமிழாசிரியர்களின் பேருதவிகள் மிகவும் இன்றியமையாத தொன்றாம். ஆனால் நமது தமிழ் ஆசிரியர்களிற் சிலர்,

 

'எங்கட்குப் பொருள் வருவாய் மிகக்குறைவாயிருக்கின்றதே நாங்கள் எல்வாறு நுங்கட்குத் துணைபுரிய வல்லேம்' என்று இனிதாக மொழிந்து விடுகின்றார்கள். உண்மைதான். தங்கட்கு இவ்வமயம் வருகின்ற வருவாயினும் இன்னும் ஐந்து ரூபாய்களை மேலதிகாரிகள் பிடித்து விட்டுத் 'தமிழாசிரியர்களுக்கு இதற்குமேல் தொகை கொடுக்க முடியாது மிகுதியாக வேண்டுகின்ற தமிழாசிரியர்கள் எங்களுக்கு வேண்டாமென்று கூறிவிடுவார்களாயின் எத்தனை ஆசிரியர்கள் தங்கள் பதவிகளைத் துறக்க முன்வருவார்கள்? தமிழாசிரியர்கள் பொருள் வருவாயின் குறைவை முன்னிட்டுத் தமிழன்னைக்குத்தொண்டாற்ற விழையும் மாணவர்கட்குத் துணைபுாயப் பின்னிடுவராயின் மாணவர்கள் என் செய்தல் கூடும்? தமிழாசிரியர்களின் வழித்தோன்றல்களாகிய நாம் அவர்களைவிட எந்த வகையில் சிறந்து மிளிர்கின்றோம். இல்லையே. என்செய்வது. வறுமையே யடைந் துள்ள ஒருவன் முன்னுக்கு வருவதும் இயல்பன்றோ? நாம் இங்ஙனம் சொல்லிக்கொண்டே வாளாவிருப்பின் உயர்நிலையெய்தி விடுவோமா? பிறர் நகைப்பிற்காளாகி உடல்வலியுமன்றோ குன்றிவிடும்? ஆதலின் நண்பர்களே! நமது புலவர்களையும் நமக்கு ஆவன செய்யுமாறு பணிந்து வேண்டி, பொருள் வளமுடைய தமிழ்ப்பெருஞ்செல்வர்கள் பாற் சென்று நம் நாட்டிற்கும் மொழிக்கும் உதவி செய்யுமாறு வேண்டுவோம். மாணவர்களாகிய நாம் இத்துறையிலிறங்குவோமாயின் எல்லோரும் நமது முன்னேற்றத்திற்கு உதவி புரிவார்களென்பதிற் சிறிதும் ஐயம் வேண்டாம். அதினும் உதவ முற்படாராயின் பட்டினிகிடந்து உயிர் துறந்தேனும் தமிழன்னைக்கு ஆக்கந்தேடுவோம். இன்றே எழுந்திருங்கள். தமிழன்னை வீறுபெற்றனளென்று தெருக்கடோறுந் தமிழ் முழக்கஞ் செய்யுங்கள். தமிழ்ப்புலவர்களையும், தமிழ்நாட்டு மடாதிபதிகளையும், ஆலய நிர்வாகிகளையும், தமிழ்ப்பெருஞ்செல்வர்களையும் தன்னைப்பேணுதற்குத் தமிழன்னை அறை கூவியழைக்கின்றாளென்று கூவுங்கள். அறியாமையாகிய தீண்டாமையை யகற்றுங்கள். அன்பு சகோதரத்துவத்தைப் பரப்புங்கள். தமிழ் நாட்டை உறக்கத்தினின்றும் விழிக்கக் செய்யுங்கடன் மாணவர்களுடையதென்பதைக் கொள்ளுங்கள். மாணவர னைவரும் வீரத்தமிழ்த்தாயின் சேய்களாக வெளியில் வந்து உலாவுங்கள். வாழி தமிழ்மொழி - வாழி தமிழன்னை - வாழி தமிழகம் என்று வாழ்த்துங்கள்.

"செந்தமிழ் நாடென்னும் போதினிலே யின்பத்
தேன்வந்து பாயுது காதினிலே''

என்ற இனிய பாடலைக் கனிந்த குரலால் பாடுங்கள்.

"கன்னித் தண்டமிழர் கவின் பெற்றிலங்க
எண்ணி யனைவரும் இறைஞ்சிடுவோமே''

தமிழ்த்தாய் வாழ்க.

ஆனந்த போதினி – 1932 ௵ - நவம்பர் ௴

 

No comments:

Post a Comment