Wednesday, September 2, 2020

 தமிழ் மொழியின் பெருமை

 

"வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ் மொழியே

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே.''

 

உலகில் உள்ள தேசங்கள் பல; அவைகளில் வாழ்ந்து வரும் ஜன சமூகங்களும் அவை பயிலும் பாஷைகளும் பலவாகும். ஒவ்வொரு ஜாதியாரும் தங்கள் தங்கள் தாய்மொழியினிடம் பேரன்பு கொண்டு போற்றிப் புகழ்ந்து கண்ணும் கருத்துமாய் வளர்த்து அபிவிருத்தி செய்து வருகின்தனர். அங்ஙனம் அன்னை மொழியின்பால் அளவிறந்த அன்பு பூண்டொழுகும் ஜாதியாரில் தமிழரும் ஒருவராவர். அவர்கள் தங்கள் தாய்மொழியாகிய தமிழ் மொழியின் பெருமைகளை எடுத்துப் புகழ்ந்தோதுவதில் ஒரு நாளும் சலிப்படைவதிலர். தமிழின் மாண்பைப் பேசுவதில் அவர்கள் அடையும் ஆனந்தத்திற்கு அளவு கிடையாது. தமிழ் நாட்டில் எத்தனையோ தமிழ்ப் பத்திரிகைள் நடந்து வருகின்றன. அவைகளில் தமிழ்ப் பாஷையன் மேன்மையைப் பற்றிய வியாசங்கள் வாரந்தோறும் ஒன்று வீதமாவது வெளிவரத் தவறுவதில்லை. தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சங்கங்களும் பலவாகும். அவைகள் ஒழுங்காக அடிக்கடி கூட்டம் கூடுவதாக மட்டும் இருக்குமானால் அவ்விதம் கூட்டப்படும் கூட்டங்களில் ஐந்தாறு சமயங்களிலாவது தமிழ் மொழியின் பெருமை பேசப்படாதிராது. அச்சங்கங்கள் அடிக்கடி கூடினாலும் கூடாவிட்டாலும் ஆண்டுதோறும் ஆண்டு நிறைவு விழா நடத்துவது மட்டும் நிச்சயம். அவ்வாண்டு விழாக்கள் நடக்கும் காலத்தில் நடைபெறும் பல பிரசுரங்களில் ஒன்றாவது தமிழ்ப்பாஷையின் சிறப்பைப் பற்றியதாகவேயிருக்கும். இவ்விதம் நடைபெறும் சபைகள் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கென்று தனியே ஏற்பட்டவைகளாய் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை.

 

சில வினாக்கள்

 

இங்ஙனம் வரையப்படும் வியாசங்கள், நிகழ்த்தப்படும் சொற்பொழிவுகள் எல்லாம் எடுத்தியம்பும் முடிவு யாதெனில் சகல பாஷைகளிலும் தமிழ் மொழியே தலைசிறந்தது என்பதே. இம்முடிவைப் பற்றிச் சிந்திக்கப் புகுந்தால் கீழ்க்கண்டவாறு பல வினாக்கள் மனதில் உதித்தல் சகஜம். தமிழர்கள் கூறுவது போல் தமிழ்மொழி உண்மையில் சிறப்புடையதுதானா? அவர்கள் கூறும் அபிப்பிராயம் சரியா? அது எல்லோராலும் ஒப்புக் கொள்ளக் கூடியதா? அவ்வபிப்பிராயத்திற்கு ஆதாரம் என்ன? அவர்கள் தங்கள் தாய்மொழியே தலை சிறந்தது என்று கூறுவதற்குரிய காரணங்கள் யாவை? வேறு பாஷைகளிடம் காணப்படாது தமிழ்ப்பாஷையினிடம் மட்டுமே காணப்படுவதாகக் கூறும் விசேஷச் சிறப்புக்கள் எவை? அவை தமிழ்மொழியின் பெருமையை ஸ்தாபிக்கப் போதுமான காரணங்கள் ஆகுமா? ஒரு பாஷையின் மேன்மையைக் காட்டக் கூடிய - தமிழர் எடுத்துக் கூறாத வேறு விசேஷ குணங்கள் உண்டா? அவை தமிழ்ப் பாஷையினிடம் காணப்படுகின்றனவா? காணப்பட்டால் அவைகளை மேன் மேலும் அதிகமாக அபிவிருத்தி செய்வதெப்படி? காணப்படாவிட்டால் அவைகளை ஏற்படும்படி செய்யக் கூடிய வழி யாது? தமிழர் தங்கள் தாய்மொழியின் சிறப்பை அயல் நாட்டாருக்குக் கூறாமல் தங்களுக்குள்ளாகவே அடிக்கடி கூறிக்கொள்வதன் நோக்கம் என்ன? அவ்விதம் செய்வதால் அவர்கள் நாட்டில் ஏற்படுத்த விரும்பும் நன்மை யாது? அவர்கள் விரும்புவது போல் நன்மை ஏற்பட்டிருக்கின்றதா? ஏற்படாவிட்டால் அதற்கு என்ன காரணம்? ஏற்படும்படி எவ்விதம் செய்யலாம்? இவ்விஷயங்கள் சம்பந்தமாய்ச் சிந்திக்க வேண்டியதும் அறிய வேண்டியதும் தமிழன் ஒவ்வொருவனுடைய கடமையுமாகும்.

 

கூறும் காரணங்கள்

 

தமிழ்ப் புலவர்கள் தங்கள் தாய்மொழியின் பெருமைக்குக் கூறும் காரணங்கள் பல. அவற்றை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். புராண சம்பந்தமான காரணங்கள் ஒருவகை. மற்றோர் வகை சரித்திர சம்மதமான காரணங்களாகும். ஆதிநாள் முதல் ஐம்பது அறுபது வருஷங்களுக்கு முன்வரை கூறப்பட்டு வந்தவை புராண சம்பந்தமான காரணங்களே. சென்ற 50, 60 வருஷங்களாகத்தான் இக்காரணங்களோடு சரித்திர சம்மதமான காரணங்களும் கூறப்பட்டு வருகின்றன. இவ்விரண்டு விதமான காரணங்களையும் தனித்தனியே ஆராய்வோம். ஆராய்ந்து அவை அவை தமிழ்மொழியின் மாண்பை ஸ்தாபிக்கப் போதுமான வன்மை பொருந்தியவைதானா என்ற விஷயத்தை முடிவு செய்வோம்.


புராணக் காரணங்கள்

 

ஆதிநாள் முதல் தமிழர்கள் அநேகமாகச் சைவமதத்தைச் சார்ந்தவர்கள் ஆகியபடியால் தங்கள் தாய்மொழியாகிய தமிழ் மொழி சிவபெருமானாலேயே சிருஷ்டிக்கப்பட்டது என்று கூறி வருகின்றனர்.


 வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்
      தொடர்புடைய தென்மொழியை யுலகமெலாந் தொழுதேத்தும்
 குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகரெனில்
      கடல்வரைப்பின் இதன் பெருமை யாவரே கணித்தறிவார்.


 மறைமுதற் கிளந்தவாயான் மதிமுகிழ் முடித்த வேணி
      இறைவர் தம் பெயரைநாட்டி யிலக்கணஞ் செய்யப்பெற்றே
 யறைகடல் வரைப்பிற்பாடை யனைத்தும் வென்றாரியத்தோடு
      உறழ்தரு தமிழ்த்தெய்வத்தை யுண்ணினைந் தேத்தல் செய்வாம்

விடையுகத்தவன் பாணினிக்கு இலக்கணம் மேனாள்
      வடமொழிக் குரைத்தாங்கியன் மலய மாமுனிக்குத்
திடமுறுத்தியம் மொழிக் கெதிராக்கிய தென்சொல்.


சிவபெருமான் தமிழ்மொழியைச் சிருஷ்டித்ததோடு அமையாமல் அதைப்பிறர்க்குக் கற்பிக்கும் ஆசிரியராகவும், அதன் இலக்கண இலக்கியங்களின் குணதோஷங்களை ஆராய்ந்தறியும் சங்கப்புலவர்களில் ஒருவராகவும் விளங்கினர் என்பதும் தமிழர் தங்கள் பாஷை சம்பந்தமாய்க் கூறும் பெருமைகளில் ஒன்று.


 இருமொழிக்குங் கண்ணுதலார் முதற்குரவ ரியல் வாய்ப்ப
      இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்தர் இசைபரப்பும்
 இருமொழியு மான்றவரே தழீஇயினா ரென்றாலிவ்
      விருமொழியு நிகரென்னு மிதற்கைய முளதேயோ.


 கண்ணுதற் பெருங்கடவுளுங் கழகமோ டமர்ந்து
      பண்ணுறத் தெரிந்தாய்ந்தவிப் பசுந்தமிழேனை
 மண்ணிடைச் சிலவிலக்கண வரம்பிலா மொழிபோல்
      எண்ணிடைப் படக்கிடந்ததா வெண்ணவும் படுமோ.


சிவபெருமான் தமிழ்ப் பெருங் கவிஞராகவும் விளங்கினர் என்றும் கூறுவர். அதற்குச் சான்றாகச் சேக்கிழார் பெரிய புராணம் செய்யத் தொடங்குகையில்,

உலகெலா முணர்ந்தோதற் கரியவன்

நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
      மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்


என்னும் முதற் செய்யுளைச் சிவபெருமானே திருவாய் மலர்ந்தருளியதாக எடுத்துரைப்பர். மற்றோர் சான்று வறுமை நோயுற்று வருந்திய தருமி என்னும் சிவனடியார்க்குப் பொற்கிழி தேடித்தரும் பொருட்டுச் சிவபெருமான் செய்து தந்ததாகக் கூறப்படும்,


 கொங்குதேர் வாழ்க்கை யஞ் சிறைத்தும்பி
      காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
 பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
      செறியெயிற் றரிவை கூந்தலி னறியவு
 முனவோ நீயறியும் பூவே


என்னும் செய்யுளாகும். பாணபத்திரனுக்குப் பணம் கொடுத்தனுப்பும் படி பரமசிவன் சேரமானுக்குச் செய்தியனுப்பிய திருவோலைச் செய்யுளாகிய,


 மதிமலி புரிசை மாடக் கூடற்
      பதிமிசை நிலவும் பானிற வரிச்சிற
 கன்னம் பயில்பொழி லாலவாயின்
      மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
 பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்
      குரிமையி னுரிமையி னுதவி யொளிதிகழ்
 குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
      செருமா வுகைக்குஞ் சேரலன் காண்க
 பண்பா லியாழ்பயில் பாண பத்திரன்
      றன்போ லென்பா லன்பன் றன்பாற்
 காண்பது கருதிப் போந்தனன்
      மாண்பொருள் கொடுத்து வரவிடுப்பதுவே.


என்பதையும் கவனிக்க. இலக்கண நூல்களில் சிறந்த இறையனார் அகப்பொருள் சிவபெருமானால் இயற்றப்பட்டதென்பதும் வீரசோழியத்தைச் செய்தவர் வேல் முருகனே என்பதும் தமிழர் கொள்கை.

 

சிவபெருமானுக்குத் தமிழ் மொழியிலும் தமிழ்க் கவியிலும் மிக்க அன்பு உண்டு என்றும் அதுகாரணமாக அருந்தமிழ்ப் பாவலர் பலர்க்குப் பலசமயங்களில் பேருதவி செய்திருக்கின்றனர் என்றும் கூறப்படும் திரு விளையாடற் புராணத்தில்,


 கடுக்கவின் பெறுகண்டனுந் தென்றிசை நோக்கி
      யாக்க வந்து வந்தாடுவா னாடலி னிளைப்பு
 விடுக்க வாரமென்காறிரு முகத்திடை வீசி
      மடுக்கவுந் தமிழ் திருச்செவி மாந்தவுமன்றோ


என்று பரஞ்சோதி முனிவர் பாடியுள்ளதை நோக்குக. தற்காலத்தில் தமிழ்ப்புலமையில் தலைசிறந்து விளங்கிய மனோன்மணீய ஆசிரியர் சுந்தரம்பிள்ளையும்,

 

கடையூழி வரும் தனிமை கழிக்கவன்றோ அம்பலத்துள்
      உடையார் உன் வாசகத்தில் ஒரு பிரதி கருதினதே


 என்று செந்தமிழ்க் கவி செய்துள்ளார்.

 

"பாடும் புலவர்க்கு அருளும் பொருளாவான்'' சிவபெருமான் என்று சுந்தரர் பாடியதின் உண்மையை, இடைக்காடர்,

 
 தமிழறியும் பெருமானே தன்னைச் சேர்ந்தார்
 நன்னிதியே திருவால வாயுடை நாயகனே


என்று பாடியவுடன் அவருக்கும் பாண்டியனுக்கும் ஏற்பட்டிருந்த பிணக்கைத் தீர்த்து வைத்ததாகக் கூறும் திருவிளையாடற் புராணக் கதையைக் கொண்டு அறிந்து சொள்ளலா மென்பர்.
 

சிவபெருமானுக்கு இருந்தது போலவே மகாவிஷ்ணுவுக்கும் தமிழினிடம் பேரன்பு இருந்து விளங்கியதாகக் கதை கூறப்படும். கணிகண்ணனுக்காகத் திருமழிசை ஆழ்வாரின் வேண்டுகோளுக்கு இணங்கிக் காமரு பூங்கச்சி மணிவண்ணன் தன் பைந்நாகப்பாயைச் சுருட்டிக்கொண்ட வரலாற்றைக் கவனிக்க. இந்தச் சம்பவத்தையே குமரகுருப்பாரும்,


 பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின் சென்ற
 பச்சைப் பசுங் கொண்டலே


என்று குறிப்பிடுகின்றார்.

 

சிவபெருமானுக்குத் தமிழ் மொழியின்பாலுள்ள அன்பால் அதைப்பாடும் பெரியோரின் வேண்டுகோளுக் கிணங்கி இயற்கைக்கு மாறான பல அற்புதக் காரியங்கள் செய்தருளிய கதைகளையும் தமிழின் பெருமைக்கு ஒருமுக்கிய சான்றாகக் கூறிக்கொள்வர்.


 பொருப்பிலே பிறந்து தென்னன் புகழிலே கிடந்து சங்கத்
      திருப்பிலே இருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்தபேதை
 நெருப்பிலே நின்று கற்றோர் நினைவிலே நடந்தோரேன்
      மருப்பிலே பயின்ற பாவை மருங்கிலே வளருகின்றாள்.    (வரந்தருவார்]

 

தொண்டர் நாதனைத் தூதிடை விடுத்து முதலை
      யுண்டபாலனை யழைத்தது மெலும் புபெண்ணுருவாக்
கண்டதும் மறைக்கதவினைத் திறந்ததுங் கன்னித்

தண்டமிழ்ச் சொலோ மறுபுலச் சொற்களோ சாற்றீர்  (பரஞ்சோதி முனிவர்)


 யாரறிவார் தமிழருமை என்கின்றேனென்

அறியாமையன்றோ? மதுரை மூதூர்
 நீரறியும் நெருப்பறியும் அறிவுண்டாக்கி

நீயறிவித்தா லறியும் நிலமுந்தானே        (மதுரைப் பதிற்றுப் பத்தந்தாதி)

 

அங்ஙனம் ஆக்கப்பட்டதாக அறையப்படும் அற்புதங்கள் பலவாகும்.
அவற்றில் உதாரணமாகச் சிலவற்றை மட்டுமே உரைக்கின்றேன்.

 

ஞானசம்பந்தர் சமணர்களை வென்று சைவசமயத்தைப் பரப்பும் பொருட்டு மதுரைமாநகர்க்கு வந்து தங்கியவுடன் சமணர்கள் பாண்டியன் அனுமதி பெற்றுச் சம்பந்தர் தங்கிய மடத்திற்கு இரவில் தீவைத்தனர். அஃதறிந்த ஆளுடைய பிள்ளையார் அரசன் ஏவலால் அக்கினிவைக்கப் பட்டதால்,


 செய்யனே திருவாலவாய் மேவிய
      ஐயனே யஞ்சலென்றருள் செய்யெனைப்
 பொய்யரா மமணர் கொளுவுஞ்சுடர்
      பையவே சென்று பாண்டியற் காகவே

என்று "வெப்பந் தென்னவன் மேலுற” ப் பாடினார். உடனே வெப்பம் பாண்டியனிடம் விளைந்து வருத்திற்று என்பது புராணம். பின்னர் திருநீற்றுப் பதிகம் பாடி பாண்டியன் உடலில் விபூதிபூசி அவனுடலுற்ற தீப்பிணியாயின தீர்த்தருளினராம்.


 சம்பந்தர் சமணர்களோடு அனல் வாதம் செய்தபொழுது தீயிலிட்ட ஏட்டில்

போகமார்த்த பூண்முலையாடன்னோடும் பொன்னகலம்
பாகமார்த்த பைங்கண் வெள்ளேற்றண்ணல் பரமேட்டி
ஆகமார்த்த தோலுடையான் கோவண வாடையின் மேல்
நாகமார்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே


என்னும் தமிழ்ப் பாசுரம் எழுதப்பட்டிருந்தது. அவ்வேடு அக்கினியால் தகிக்கப்படாமல் தண்ணென்று பச்சையாய் விளங்கிற்று. இது தமிழ்க் கவிகளை எரியினிலிடினும் பழுதிலை மெய்ம்மையே என்பதைக் காட்டுமாம்.

 

அதன்பின் அவர் ஓர் ஏட்டில் கீழ்க்கண்ட பாசுரத்தை எழுதி வைகை நதியில் இட்டார்.


 வாழ்க வந்தணர் வானவரானினம்
 வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக்
 ஆழ்க தீயதெல்லா மானாமமே
 சூழ்க வையகமுந் துயர் தீர்கவே

 


இட்ட ஏடு மிக விரைவாய் நதியில் நீரோட்டத்திற்கு நேர் விரோதமாய் எதிர்த்துச் சென்றதாம். வேந்தனும் ஓங்குக என்றதனால் பாண்டியன் கூனும் நிமிர்ந்ததாம். நதியில் இட்ட ஏட்டை மந்திரி குதிரை எறிச் சென்றும் எட்டிப் பிடிக்க முடியவில்லை. அதனால் சம்பந்தர் "வள்ளியு மத்தமும்" என்னும் பாடலைப் பாடியே ஏட்டை நிற்கச் செய்ய வேண்டியதாயிற்றாம்.
 

சம்பந்தரைப் போலவே நாவுக்கரசரும் தமிழ்க் கவிகளைக் கொண்டு பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளதாகப் புராணம் கூறுகின்றது. அவரைக் கல்லோடு கட்டிக் கடலில் இட்டபொழுது,

 
 கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
 நற்றுணையாவது நமச்சிவாயவே


என்று பாடினார். உடனே கல்தெப்பமாக மிதந்து அவரைக் கரைக்குக் கொண்டு வந்து சேர்த்துவிட்டதாம்.
 

அவரைச் சமணவேந்தன் நீற்றறையில் வைத்த பொழுது'' மாசில் வீணையும் " என்னும் பதிகம்பாடி நீற்றறையைப் பொய்கை போல் குளிர் வித்துக் கொண்டாராம். விஷத்தால் மாண்ட அப்பூதியடிகள் மகனை அப்பர்சுவாமிகள் "ஒன்று கொலாம் " என்னும் பதிகம் பாடி விஷந்தீர்த்து உயிர் கொடுத்ததும் ஓர் அற்புதம்.

 

இது போலவே சுந்தரரும் பாடல்கள் பாடி பல அற்புதங்கள் செய்துள்ளார். அவர் பாடல்களுக்காக நதிவழி விட்டது; முதலை தான் பல வருஷங்கட்கு முன் உண்ட பாலனை மறுபடியும் உயிரோடு தந்தது; இழந்தகண்களைப் பெறவும் செய்தார்.

 

கம்பர் பெருமான் தமது ராமாயண காவியத்தைத் திருவரங்கத்தில் அரங்கேற்றியபொழுது,


 நசைதிறந் திலங்கப் பொங்கிநன்று நன்றென்ன நக்கு
 விசைபிறந் திருமுவீழ்ந்த தென்னவோர் தூணின் வென்றி
 இசை திறந் தமர்ந்தகையா லெற்றினா னெற்றலோடும்
 திசை திறந் தண்டங்கீறிச் சிரித்தது செங்கட்சியம்,


என்ற பாடலைப்பாடி வியாக்யானம் செய்தவுடன் அங்கிருந்த மோட்டழகிய சிங்கருடைய சிலை தன் கரங்களை நீட்டி முடியைத் துளக்கி வாயைத் திறந்து மண்டபம் அதிர ஜனங்கள் நடுங்கச் சிரித்து ஆர்ப்பரித்ததாம். கம்பர் சிதம்பரத்தில் பாம்பு கடித்து இறந்த தில்லை மூவாயிரவர் பிள்ளையைத் தம் ராமாயணத்திலுள்ள நாகபாசப் படலத்தை வாசித்து உயிர்பிழைத்து எழச்செய்த தாகவும் கதையுண்டு.

 

தமிழ்ப்புலவர்கள் தமிழில் பாடல்கள் பாடி பூதங்களையும் பேய்களையும் அடக்கி வென்றிருப்பதாகவும் கதை கூறுவர். ஒளவையார் ஒரு சமயம் தன்னை அடிக்க வந்த பெண் பிசாசொன்றை "வெண்பா விருகாலிற் கல்லானை' என்னும் கவிபாடி ஒட்டியதும், கம்பர் ஒரு சமயம் தனக்கு இடையூறாய் நின்ற ஒரு பிசாசை "நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே " என்று பாடி அடக்கியதும் எல்லோரும் அறிந்த கதைகளே.

 

அதுமட்டுமன்று; தமிழ்க் கவிகள் அசேதனப் பொருள்களையும் கூட தம் கவிகளால் ஏவல் கொள்வராம். உதாரணங்கள் ஒளவையார் காய்ந்துலர்ந்த பனந்துண்டங்களை "திங்கட்குடையுடைச் சேரனும்'' என்னும் பாடல் பாடி தழைக்கச் செய்து உடனே நுங்குக் குலை தரும் படி செய்ததும், அவர் பாண்டியன் சபையில் " ஆர்த்தசபை நூற்றொருவர்" என்னும் பாடல் பாடி சங்கிலிகளை அறும்படி செய்ததும் ஆகும்.

 

தமிழ்ச் செய்யுள் சங்கப்பலகையை மிதக்கச் செய்தல், குறளுக்கு இடந்தரச் செய்தல், ஆழ்வார் பாசுரத்திற்குச் சுருங்கச் செய்தல், வில்லி புத்தூராழ்வார் பாரதம் பாடி இழந்த கண்ணைத் திரும்பவும் பெறுதல், நக்கீரர் திருமுருகாற்றுப்படை செய்து பூதத்தினின்று விடுதலை அடைதல், ஒளவையார் கூழைப் பலாத் தழைக்கச் செய்தல், கம்பர் செய்துள்ள கவிகளில் துமி என்ற மொழி உபயோகத்தை ஒட்டக்கூத்தர் ஆட்சேபிக்க அது உலக வழக்கமாமெனச் சரஸ்வதி தேவியே இடைச்சியாய் வந்து நிரூபித்தல் முதலிய அற்புதங்களை விரித்துரையாது விடுக்கின்றேன்.

 

மேற்கூறிய புராண சம்பந்தமான காரணங்கள் எல்லாம் சற்று உற்று நோக்கி ஆராய்ந்தால் மூன்று இனங்களாகப் பிரியும். அவையாவன:

 

(1) தமிழ்ப்பாஷை கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டது. ஏனைய மொழிகளைப்போல் மனிதனால் ஆக்கப்பட்டதன்று.

 

(2) தமிழ்மொழியினிடத்து இதர மொழிகளினிடத்துக் காணப்படாத விசேஷ அன்பு கடவுளுக்கு உண்டு.

 

(3) தமிழ் மொழியினின்பாலுள்ள அன்பின் மிகுதியால் தமிழ்ப் பாவலர்க்காகப் பல அற்புதங்களைக் கடவுள் செய்துள்ளார்.

 

இம்மூன்று விஷயங்களும் உண்மையானவைகளா? இவைகளை நம்பமுடியுமா? இவற்றைக் கொண்டு ஒரு பாஷையின் பெருமையை ஸ்தாபிக்கமுடியுமா? என்ற விஷயத்தை அடுத்த வியாசத்தில் ஆராய்வேன்.

 

"சூழ்கலி நீங்கத் தாய்மொழி

யோங்கத் துலங்குக வையகமே.''

 

உலகிலுள்ள ஒவ்வொரு ஜாதியாரும் தங்கள் தாய்மொழியினிடம் அன்பு பூண்டு அதைப் போற்றி வளர்த்தல் சகஜம். ஆனால் தமிழர்க்குத் தங்கள் தாய்மொழியாகிய தமிழ் மொழியிடம் அளவு கடந்த அன்பு உண்டு. உலகிலுள்ள பாஷைகளிலெல்லாம் தங்கள் தமிழ்ப்பாஷையே உயர்ந்தது என்பது அவர்கள் அபிப்பிராயம். அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் பல. அவை புராண சம்பந்தமான காரணங்கள், சரித்திர சம்பந்தமான காரணங்கள் என இருவகைப்படும். முற்காலத்திலிருந்த தமிழ்ப் புலவர்கள் கூறி வந்தவை முன்னதான புராணக் காரணங்கள் மட்டுமே. இக்காலத்திலுள்ள தமிழ்ப் பண்டிதர்களும், தமிழும் ஆங்கிலமும் ஒருங்கு கற்றுள்ள அறிஞர்களும் தமிழின் பெருமைக்குப் புராணக் காரணங்களோடு சரித்திரக் காரணங்களும் கூறிவருகின்றனர். முன்னோர் புகழ்ந்து வந்த புராண சம்பந்தமான புகழுரைகளெல்லாம் கீழ்க்கண்ட மூன்றில் அடங்கும்.

 

புராணக் காரணங்கள்

 

(1) தமிழ்ப்பாஷை கடவுளாலேயே சிருஷ்டிக்கப்பட்டது. சம்ஸ்கிருதம் தவிர ஏனைய பாஷைகள் சம்பந்தமாய் இங்ஙனம் இயம்ப இயலாது. அவைகள் எல்லாம் மனிதனாலேயே உண்டாக்கப்பட்டன.

 

சிவபெருமானே தமிழ் மொழியைச் சிருஷ்டித்து அதை உடனே அகத்திய முனிவர்க்கு உபதேசித்துத் தென்னாடு அனுப்பினார். அகத்தியர் தென்னாடு போந்து, தமிழர்க்குப் பாஷையைக் கற்பித்ததோடு இலக்கணமும் இயற்றியருளினார். இப்பொழுது இறந்து படாமல் எஞ்சி நிற்கும் தமிழ்நூல்களில் மிகப் பழமையானதென எல்லோரும் ஒப்புக்கொண்டுள்ள தொல்காப்பியம் செய்த ஆசிரியர் தொல்காப்பியர் அகத்திய முனிவரின் பிரதம ஆசிரியராவர்.

 

(2) தமிழ் மொழியினிடத்துக் கடவுளுக்கு அன்பு அதிகம். இத்தகைய அன்பு இதர பாஷைகளிடத்து உண்டென்று கூற முடியாது.

 

சிவபெருமான் அகத்தியரைத் தென்னாட்டுக்கு அனுப்பிய சில காலத்திற்குப் பின்னர் அவ்வினிய பாஷையைச் செவிமடுக்க விரும்பித் தாமும் தமிழகம் வந்து தமிழ்ச்சங்கத்தில் தலைமை வகித்து சங்கப் புலவரோடு தமிழாராய்ந்தார். தமிழில் பல கவிகளும் இலக்கண நூலும் செய்தருளியிருக்கின்றனர்.

 

(3) தமிழ் மொழியின்பாலுள்ள அன்பின் மிகுதியால் அம் மொழியை உபயோகித்துக் கவிகள் செய்து வேண்டிக் கொள்ளும் தமிழ்ப்புலவர்களின் பிரார்த்தனைக் கிணங்கிக் கடவுள் இயற்கைக்கு விரோதமான பல அற்புதச் செயல்களை நிகழ்த்தியிருக்கின்றனர். இங்ஙனம் செய்தது ஏனைய மொழிகளில் காணப்படுமோ?

 

சிவபெருமான்: சம்பந்தர்க்காகத் தமிழ் எழுதிய ஏடு நெருப்பில் வேகாதிருக்கச் செய்தார்; அப்பர் சம்பந்தர்க்காக வேதாரணியக் கதவுகளைத் திறந்து அடைத்தருளினார்; சுந்தரர்க்காகத் தூது சென்றார்.

 

கம்பர்: கவி சொல்லி விஷம் தீண்டியவனை உயிர்ப்பித்தல்; வில்லிபுத்தூராழ்வார் பாரதம் பாடிக் கண்பெறல்; ஒட்டக்கூத்தர் ஈட்டியெழுபது பாடி முண்டம் உயிர்த்தெழச் செய்தல்; நக்கீரர் திருமுருகாற்றுப் படை செய்து பூதத்தினின்று வீடு பெறல்; ஒளவையார்: பலாத்தழைக்கப் பாடல் முதலிய வரலாறுகளையும் கவனிக்க.

 

இம் மூன்று காரணங்களும் உண்மையானவைதாமா? இவை உண்மையென்று வைத்துக் கொண்டாலும் இவற்றைக் கொண்டு ஒரு பாவையின் ஏற்றத்தை நிர்ணயிக்க இயலுமா? என்ற விஷயங்களை ஆராய்ந்தறிதல் அவசியம். மேற்கூறிய மூன்று புகழ் உரைகளையும் ஒவ்வொன்றாய்க் கவனிப்போம்.


கடவுள் சிருஷ்டி


என்பது முதற் காரணம். இதை இக்காலத்திலுள்ள அறிஞர்கள் யாரும் ஒப்புக் கொள்ள மாட்டார். " உலகத்தையும் அதிலுள்ள ஜீவராசிகளையும் ஏதேனும் ஒருநாள் திடீரென்று ''கடவுள் தோற்றுவித்தார்'' என்று கூறுவது எவ்வளவு பிசகாகுமோ அவ்வளவு, கடவுள் திடீரென்று ஒரு பாஷையை உற்பத்தி செய்து தந்தார் " என்று கூறுவதும் பிசகாகும்.'' உலகம் தற்பொழுதுள்ள இயல்பை அடையப் பல்லாயிரக்கணக்கான வருஷங்கள் கழிந்தன என்றும், உலகத்திலுள்ள ஜீவஜெந்துக்கள் ஒன்றினின்று ஒன்று தோன்றி வளர்ந்து வந்து கடைசியில் மனிதன் பிறத்தற்கும் பல்லாயிரக்கணக்கான வருஷங்கள் ஆயின என்றும் அறிஞர்கள் சித்தாந்தம் செய்கின்றனர். அதுபோல் மனிதன் தோன்றினவுடனேயே பாஷையும் தோன்றி விடுவதில்லை. மனிதர்கள் பெருகி ஒருவரோடொருவர் உறவாட ஆரம்பித்து அதன் பயனாய் நாளடைவில் அவர்கள் அறிவு வளர்ச்சிக்குத் தக்கவாறு அவர்கள் தங்கள் கருத்தை ஒருவர்க் கொருவர் தெரிவித்துக் கொள்ள உபயோகிக்கும் கருவியே பாஷையாகும். ஆகவே எந்த பாஷையும் கடவுளால் சிருஷ்டிக்கப்படுவது மில்லை; தானாகவே திடீரென்று புத்தம் புதிதாய்ச் சகல அம்சங்களுடனும் தோன்றி விடுவதுமில்லை. ஆகையால் தமிழ்ப் பாஷையைக் கடவுளே சிருஷ்டி செய்தார் என்று சொல்வது பொருந்தாத காரியம்.

 

உண்மை இவ்வித மிருக்க, தமிழ் மொழியைக் கடவுளே சிருஷ்டித்துத் தந்தார் என்று வைத்துக்கொண்டால் அதிலிருந்து நாம் அறியக்கிடப்பது என்ன? உலகத்தில் மனிதனைக் கடவுள் சிருஷ்டித்தார் என்றால் உலகிலுள்ள பல ஜாதியாரையும் கடவுளே சிருஷ்டித்தார் என்றே பொருள்படும். அங்ஙனம் அவனியிலுள்ள மனித ஜாதியார் அனைவரையும் படைத்திருந்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் உரிய பாஷையையும் கடவுள் உண்டாக்கிக் கொடுத்தார் என்பது பெறப்படுமன்றோ? சகல ஜாதியாரையும் படைத்தது போல சகல பாஷைகளையும் படைத்துத் தந்தாரென்றால் தமிழ்ப்பாஷை மட்டுமே கடவுளால் ஆக்கப்பட்டது என்று பெருமை பேசிக்கொள்வது எங்ஙனம் ஒப்புக் கொள்ளக் கூடியதாகும்? கடவுள் சிருஷ்டி என்னும் புகழ் தமிழுக்குண்டானால் மற்ற பாஷைகளுக்கும் உண்டு என்றே கூற வேண்டும். அப்பொழுது தமிழ் மற்ற பாஷைகளை விட இந்தக் காரணத்தால் உயர்ந்தது என்பது பொய்யாகிவிற்கிறது.

 

"இல்லை; தமிழ்ப் பாஷையை மட்டுமே கடவுள் சிருஷ்டித்தார்; இதர பாஷைகளை அவர் உண்டாக்கவில்லை; அவற்றைப் பயிலும் ஜனசமூகங்களே சிருஷ்டித்துக் கொண்டன'' என்று சிலர் கூறக்கூடும். இவ்வாறு கூறுவது உண்மை யென்று ஒப்புக் கொண்டால் இரண்டு விஷயங்களை ஒப்புக்கொள்ள வேண்டி ஏற்படும்.

 

(1) இதர பாஷைகளை மனிதர்கள் உண்டாக்கும் பொழுது தமிழ்ப்பாஷையை மட்டும் கடவுள் உண்டாக்குவானேன்? அங்ஙனம் செய்தற்குக் காரணம் கடவுளுக்குத் தமிழர்களிடம் தான் அன்பு உண்டு என்று கூறுவதா? அல்லது இதர ஜாதியார்களிடம் உள்ள அன்பை விட தமிழர்களிடம் உள்ள அன்பு அதிகம் என்று சொல்வதா? அல்லது கடவுளுக்கு இதர பாஷைகளைச் சிருஷ்டிக்க வல்லமையில்லை; தமிழ் ஒன்றைச் சிருஷ்டிக்கத்தான் வல்லமையுண்டு என்று புகல்வதா?

 

இதர ஜன சமூகங்களைச் சிருஷ்டித்து அவர்களுக்கு வேண்டிய மொழிகளைச் செய்து தராது விடுத்து தமிழர்க்கு மட்டும் தமிழ் மொழியைச் சமைத்துதவியதாகக் கூறுவது கடவுளுக்குப் பட்சபாதகுணம் கற்பிப்பதாகும். கடவுள் ஒரே பாஷையைச் சிருஷ்டிக்கப் பிறஜாதியார் பல பாஷைகளைச் சிருஷ்டித்துக் கொண்டனர் என்றால் கடவுளைவிட மனிதர்களே வல்லமைமிகுந்தவர் என்று கூறுவதாகும்.

 

(2) இன்னொரு விஷயம். தமிழ் மொழியை மட்டும் கடவுள் செய்தருளினார் என்றால் தமிழர்க்குத் தங்கள் மொழியைச் சிருஷ்டித்துக் கொள்ளப் போதிய ஆற்றல் இல்லை; அவ்விஷயத்தில் அவர்கள் உலகிலுள்ள இதரஜனங்களை விட மிகத் தாழ்ந்தவர் என்று ஏற்படும். அத்தகைய தாழ்ந்த நிலைமையைத் தமிழர் ஏற்றுக் கொள்ளத் தயாராயிருக்கின்றனரா? ஆகையால் முன்னோர்கள் மொழிந்து வந்த முதற்காரணம் முற்றிலும் பிசகு என்ற முடிவுக்கு வரவேண்டி யிருக்கிறது.


கடவுள் அன்பு மிகச் செய்தது


என்பது அவர்கள் அறைந்து வந்த இரண்டாவது காரணம். அதன் உண்மையையும் சிறிது ஆராய்வோம். கடவுள் உலகில் சகல ஜாதியாரையும் படைத்தவரான படியால் கடவுள் தந்தை, மனிதவர்க்கம் குழந்தைகள் என்று எல்லோரும் கூறுகின்றனர். அஃதுண்மையானால் கடவுளுக்குச் சகல ஜாதியாரிடமும் ஒரேவிதமான அன்புதான் உண்டு என்பதை மறுக்க முடியாது. அதுபோல் சகல பாஷைகளையும் கடவுளே சிருஷ்டி செய்து தந்தார் என்று வைத்துக் கொண்டாலும் அவர்க்கு அவைகளிடத்திலுள்ள அன்பில் ஏற்றத்தாழ்வு கர்பிக்க முடியாது. ஆகையால் இதர பாஷைகளிடத்திலுள்ளதை விட தமிழ் பானஷயிடத்து அவருக்கு அன்பு அதிகம் என்று கூறுவதையாரும் ஏற்றுக் கொள்ள இயலாது. எல்லாப் பாஷைகளிடத்தும் இறைவனுக்கு ஏற்றத் தாழ்வில்லாத சமமான பட்சம் உண்டு என்று கூறாவிடில் கடவளுக்குப் பட்சபாதம் என்னும் பாப குணத்தைக் கற்பிக்க வேண்டி வரும்.

 

அத்தகைய குணம் மனிதத் தந்தைக்கு உண்டு என்று ஒப்புக்கொள்ளலாம்; ஆனால் அது ஆண்டவனுக்கும் அமைந்துள்ளது என்று சொல்லுதல் முடியாது.

 

தவிர, தமிழ் பாஷையினிடத்து மட்டும் சர்வேஸ்வரனுக்குப் பிரியம் உண்டு என்று கூறினால் அவ்வன்புக்குக் காரணம் என்ன? இதர பாஷைகளை அவர் சிருஷ்டிக்காமல் தமிழை மட்டும் சிருஷ்டித்தது காரணமாகுமோ? தாம் சிருஷ்டித்ததற்காகத் தமிழினிடம் அன்பு கொண்டார் என்றால் அது கடவுளுக்குச் சுய நலங் கற்பிப்பதாகும். காக்கைக்கும் தன்குஞ்சு பொன் குஞ்சு என்னும் பழமொழியைப் பரமேஸ்வரன் விஷயத்திலும் பகரலாமோ? தகுதியுள்ள திடம் தயையும் தகுதியில்லாத திடம் இரக்கமும் அல்லவோ ஆண்டவன் அரும்பெருங் குணங்களாகும். தகுதி நோக்காது சுயநலமே நோக்கி ஒன்றினிடம் அன்பு செலுத்துதல் கடவுள் செயல் அன்று. கடவுளுக்குத் தமிழினிடம் மட்டும் அன்பு ஏற்பட்டிருப்பதற்குத் தமிழ்பாஷை இதர பாஷைகளை விட உயர்ந்தது என்பதே காரணம் என்று கூறக்கூடும். சில பாஷைகள் நல்ல வளர்ச்சியுற்றும் சில பாஷைகள் வளர்ச்சிகுன்றியும் உள்ளது உண்மையே. ஆனால் அது கடவுள் சில பாஷைகளிடத்து அன்பு மிகுந்தும், சில பாஷைகளிடத்து அன்பு குறைந்தும் உளர் என்று கூற இடந்தருமோ? மேலும்,


 குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
 மழலைச் சொற் கேளாதவர்,


ஆதலின் எம்மொழி இளம்பிராயமாய்ப் பூர்ண வளர்ச்சி பெறவில்லையோ அதனிடத்துத்தான் ஆண்டவனுக்கு அன்பு அதிகமாயிருக்கும், அதன் முன்னேற்றத்திலேயே அதிக கவனம் செலுத்துவான்.

 

கடவுளுக்குத் தமிழ்ப் பாசுரங்களைக் கேட்பதில் ஆநந்தம் அதிகம் என்று கூறினால் அதை வைத்து அவனுக்கு அயல் பாஷைக் கவிகளைக் கேட்பதில் ஆநந்தம் கிடையாது என்று கூறலாகுமோ? முன்னாளில் உலகமெங்குமுள்ள பெரியோர்கள் கடவுளுக்குப் பல பாஷைகளிலும் பாமாலை சூட்டவில்லையோ? தியாகராஜர் பாடிய தேனினுமினிய கீர்த்தனைகள் எல்லாம் தெலுங்கு பாஷையில் அல்லவோ செய்யப்பட்டன. துளசி தாஸரின் ஹிந்திப் பதங்கள், சீக்கிய குருக்களின் குருமுகி ஸ்தோத்திரப் பாக்கள், சைதன்யரின் வங்கமொழிக் கவிகள் முதலியவைகளைக் கடவுள் புறக்கணிக்கவில்லையே! பாரசீக நூல்கள், அராபியச் செய்யுட்கள், ஹீப்ரூ கீர்த்தனங்கள் முதலியவைகளையும் முழுமுதற் கடவுள் செவி மடுத்து ஆநந்தித்ததாகவே சரித்திரம் கூறுகின்றது. இக்காலத்திலும் இவ்வுலகிலுள்ள பல பாஷைகள் பயிலும் பாவலர்கள் தங்கள் தங்கள் பாஷையில் பாமாலைகள் பாடுவதைப் பரம் பொருள் திருவுளங் கொண்டு ஏற்றுக் கொள்வதாகவே கூற வேண்டியிருக்கிறது. தற்காலத்தில் தமிழ் பாஷையில் செய்யப்படும் இன் கவிகளை விட இதர பாஷைகளிலேயே நாளுக்கு நாள் அளவிட முடியாதபடி அதிகமாய் ஆக்கப்பட்டு ஆண்டவனுக்கும் ஆண்டவன் மக்களுக்கும் ஒருங்கே ஆநந்தம் அளித்து வருவது யாவரும் அறிந்த விஷயம். அதனால் ஆண்டவனுக்கு இந்நாளில் தமிழ் மொழியில் அன்பு குறைந்து அயல் மொழிகளில் அன்பு மிகுந்துவிட்டது என்று கூறமுடியுமோ? ஆகையால் கடவுளுக்குத் தமிழ் மொழியினிடம் மட்டுமே அன்புண்டு; மற்ற மொழிகளிடம் அவ்வன்பு கிடையாது என்று கூறுவது பெருந்தவறு.


கடவுள் அற்புதங்கள் செய்தார்


என்பது தமிழ் மக்கள் தங்கள் தாய்மொழியின் பெருமைக்குக் கூறும் புராண காரணங்களில் மூன்றாவதாகும். முதல் இரண்டு காரணங்களையும் ஒப்புக் கொள்ள முடியாதது போலவே இதையும் ஒப்புக் கொள்ள முடியாது என்பது என் அபிப்பிராயம். அஃதெங்ஙனம் என்பதை அடுத்த வியாசத்தில்விளக்குவேன்.

 

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி

வாழிய வாழியவே

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே.                        (பாரதி.)

 

உலகத்திலுள்ள பல நாட்டாருள்ளும் தமிழ் நாட்டாருக்குத் தங்கள் தாய் மொழியாகிய தமிழ் மொழியினிடம் அன்பு அதிகம் என்றும், அவ்வன்பின் மிகுதியால் தங்கள் தாய் மொழியே சகல மொழிகளிலும் தலை சிறந்தது என்று பெருமை பேசி வருகின்றனர் என்றும், தமிழ் மொழியின் சிறப்பிற்கு அவர்கள் கூறும் காரணங்கள் புராண சம்பந்தமான காரணங்கள், சரித்திர சம்பந்தமான காரணங்கள் என இருவகைப்படும் என்றும், அவற்றில் புராண சம்பந்தமான காரணங்கள் எல்லாம் தமிழ்மொழி கடவுளாலேயே சிருஷ்டிக்கப்பட்டது, அதன்பால் கடவுளுக்கு அளவு கடந்த அன்புண்டு, அதனால் அவர் அது பயிலும் புலவர்க்காகப் பல அற்புதங்கள் செய்துள்னார் என்னும் மூன்றிலும் அடங்கும் என்றும், ஆகையால் அம்மூன்று காரணங்களையும் தனித்தனியே ஆராய வேண்டியது அவசியம் என்றும் இதற்கு முன் எழுதிய வியாசத்தில் கூறி யிருந்தேன்.

 

அதோடு அம்மூன்று காரணங்களில் முதல் இரண்டையும் தனித்தனியே ஆராயவும் செய்தேன். அவ்வாராய்ச்சியின் பயனாய் நாம் அறிந்து கொண்ட தென்ன? அவ்விரண்டு காரணங்களையும் நாம் சரியானவை என்று ஒப்புக் கொள்ள முடியாது என்பதே. அவைகள் சம்பந்தமாய் எழும் ஆட்சேபங்களின் சாராம்சமாவது:


கடவுள் சிருஷ்டி

 

(1) எந்த பாஷையும் கடவுளால் சிருஷ்டிக்கப் படுவதன்று. மனிதவர்க்கத்தார் அடிக்கடி நெருங்கிப் பழகுவதன் பயனாய் நாளடைவில் சிறுகச் சிறுக உருப் பெற்றுத் தானாகவே உண்டாவதாகும்.

 

(2) கடவுளே பாஷைகளைச் சிருஷ்டித்தனர் என்று வைத்துக் கொண்டாலும், அவர் ஏன் தமிழ் பாஷையை மட்டும் சிருஷ்டிக்க வேண்டும் ஏனைய பாஷைகளைச் சிருஷ்டியாது விட்டுவிட வேண்டும் என்னும் கேள்விபிறக்கும்.

 

(3) கடவுள் தமிழ் மொழியை மட்டும் சிருஷ்டித்திருந்தால் அவருக்கு எனைய மொழிகளைச் சிருஷ்டிக்க வல்லமை இல்லை என்றாவது, அல்லது எனைய ஜாதியார் பாஷைகளை உண்டாக்கிக் கொண்டது போல் தமிழ்நாட்டாருக்குத் தங்கள் பாஷையை உண்டாக்கிக் கொள்ள வல்லமையில்லை என்றாவது ஏற்படும்.


கடவுள் அன்பு அதிகம்

 

(1) கடவுள் எல்லா ஜாதியாரையும் படைத்திருந்தால் அவருக்குஎல்லா ஜாதியாரிடமும் ஒரே விதமான அன்பு இருக்க வேண்டுமே. அங்ஙனமிருந்தால் தமிழ்நாட்டாருக்கு மட்டுமே பாஷையைச் சிருஷ்டித்து உதவினார்என்று கூறமுடியுமோ?

 

(2) தமிழ் நாட்டாரிடமும் தமிழ்பாஷையி னிடமும் அவருக்குவிசேஷ அன்பு இருக்கக் காரணம் என்ன? காரணம் போதுமான அளவு இல்லாவிடில் கடவுள் பட்சபாத குணமுள்ளவர் என்று ஏற்படுமன்றோ?

 

(3) தாம் சிருஷ்டித்ததால் தமிழ் மொழியினிடம் அன்பு அதிகம் என்று கூறினால் கடவுள் சுயநலப் பற்றுள்ளவர் என்று ஆட்சேபிக்க வேண்டியதாகும்.


அற்புதங்கள் செய்தமை

 

இனி மூன்றாவது காரணத்தை ஆராய்வோம். பொதுவாகக் கூறுமிடத்து இக்காலத்து அறிவாளிகளுக்கு அற்புதங்களிலும் சித்துக்களிலும் அணுவளவும் நம்பிக்கை கிடையாது. எந்த விஷயமானாலும் அதனதன் குண தோஷங்களை வைத்துத்தான் அதனதன் ஏற்றத்தாழ்வை மதிக்கவேண்டுமேயன்றி அதனதன் சம்பந்தமாய்ப் புராண வாயிலானும் கர்ணபரம்பரை வாயிலானும் கூறப்படும் அற்புதங்களைக் கொண்டு மதிக்கக்கூடாது என்பது அவர்களுடைய முடிவான அபிப்பிராயம். அதுவே சரியானதுமாகும். உண்மையில் பெருமை பேசத் தகுந்த குணங்கள் அமையப்பறாத ஒன்றைப் பெரியா ரொருவர் புகழ்ந்து விட்டார் என்பதற்காக அதைப் போற்றுதல் கூடாது. புகழ்ந்தவர் பெரியவரா யிருக்கலாம்; ஆனாலும் அவருடைய புகழுரை பிசகான தாகவுமிருக்கலாம். ஆகையால் தமிழ் மொழியின் பெருமைக்கு முன்னோ கூறும் அற்புதங்களாகிய மட்டுமே ஆதாரமா யிருக்குமானாலும் தமிழ்மொழி பெருமையுடையதாகக் கொள்ள முடியாது. அற்புதங்களைத் தவிர பாஷைக்கு உண்மையில் பெருமை தரக்கூடிய வேறு பல குணங்கள் அமைந்திருக்க வேண்டும். அங்ஙனம் அமைந்திருந்தால் மட்டுமே தமிழ்பாஷை நம்மால் மட்டுமின்றி பிறநாட்டாராலும் போற்றத் தகுதியுடைய தாகும்.

 

தவிர, தமிழ் பாஷைக்காகக் கடவுள் முன்னாளில் பல அற்புதச் செயல்கள் செய்திருந்தால் அத்தகைய செயல்களை அவர் என் இக்காலத்திலும் இயற்றக் காணோம்? தமிழ்மொழி இளமை இழந்து முதுமை அடைந்து விடவில்லையே. தமிழ் மொழியில் முன்காலத் திருந்த சுவைகள் குன்றி விடவில்லையே, " சீரிளமைத் திறம் " இன்னும் சிறிதேனும் குறையாது இருப்பதாக வல்லவோ தமிழ்ப் புலவர்கள் தினந்தோறும் நாடெங்கும் பறைசாற்றி வருகின்றனர்.

 

தொண்டர் நாதன் தூது சென்றது, முதலையுண்ட பாலனை அழைத்தது, எலும்பு பெண்ணுருவாச் செய்தது, மறைக்கதவினைத் திறந்து அடைத்தது வைகையிலே ஏடு எதிரேறிச் செல்லும்படி செய்தது, நெருப்பிலே ஏடு நீறாகாதிருக்க நியமித்தது முதலிய அற்புதங்கள் தமிழ்மொழியின்பாலுள்ள அன்பினால் மட்டுமே அருளிச் செய்யப்பட்டனவா, அல்லது அவற்றிற்கு வேறு காரணங்கள் உண்டா? முன்னோர் கூறியதும் இன்றையோர் கூறிவருவதுமான அற்புதங்களை எல்லாம் ஆராய்ந்து பார்த்தால் அவைகள் செய்யப்பட்டதாகக் கூறப்படுவதற்குத் தமிழின்பாலுள்ள அன்பு காரணமன்று என்பது தெளிவாகும். அப்படியானால் அவ்வற்புதங்களை ஆண்டவன் ஆற்றியதற்கு வேறு காரணங்கள் எவை எனில் அக்காரணங்கள் அநேகமாக மூன்று இனத்தைச் சேர்ந்தவைகளாகும்,


பக்திக்காதல்

 

சில அற்புதங்கள் சில புலவர்களின் தெய்வ பக்தியின் காரணமாகச் செய்யப்பட்டன வாகும். வேதாரணியத்தில் கதவு திறந்ததும் அடைத்ததும் அப்பர் சம்பந்தர் பாசுரங்கள் தமிழில் அமைந்திருந்த தனாலன்று; அவ்விருவரின் பக்தி விசேஷத்தினாலேயே. அவர்கள் கடவுளுக்குச் செய்து கொண்ட வேண்டுகோள் செய்யளுருவம் அமையப் பெறா விட்டாலுங்கூட ஆண்டவன் அவர்களுடைய பக்தியில் ஈடுபட்டு அவ்வற்புதத்தைச் செய்திருப்பான் என்பதில் ஐயமில்லை. அவர்கள் தங்கள் வேண்டுகோளைத் தமிழில்கூறாமல் வேறு பாஷையில் கூறியிருந்தாலும் ஆண்டவன் அருளைப் பெற்றேயிருப்பர் என்பது நிச்சயம். இது போலவே தான் தூது சென்றது, பாலனை அழைத்தது, பெண்ணுருவாச் செய்தது, பூதவிடுதலை கொடுத்தது முதலிய அற்புதங்களின் காரணமுமாகும்.


உண்மைக் காரணம்

 

சில பாசுரங்கள் சம்பந்தமாய்ச் செய்யப்பட்ட அற்புதங்களுக்குக் காரணம் அவை தமிழில் செய்யப்பட்டிருந்தமை அன்று, அவை அழியா உண்மைப் பொருளை அடக்கிக்கொண் டிருந்தமையே யாகும். சம்பந்தர் தீயில் இட்ட ஏடு வேகாது பசுமையா யிருந்ததற்கும் ஆற்றில் இட்ட ஏடு ஆற்றோட்டத்திற்கு எதிரே ஏறிச் சென்றதற்கும் காரணம் என்ன? அவ்வேடுகளில் எழுதியிருந்த பாசுரங்களின் பாஷை தமிழ் என்பதா அல்லது அவைகள் அடக்கியுள்ள பொருள் உண்மை என்பதா? சம்பந்தர் வரைந்த கவியின் பொருள் சம்ஸ்கிருத பாஷையில் விளக்கப்பட்டிருந்தால் ஏடு எரிந்து போயும் ஏறாது போயும் இருக்கும் என்று யாரேனும் கூற முடியுமோ?

 

சிலர் இதைக்கூட உண்மைக் காரணமாக ஒப்புக்கொள்ள மாட்டார். அற்புதம் நடந்தது அவ்வேட்டில் எழுதப்பட்ட பாசுரத்தின் உண்மைப் பொருளின் காரணமாக என்றால் அப்பாசுரத்தை இப்பொழுது ஒரு ஏட்டில் எழுதி நீரிலும் நெருப்பிலும் இட்டால் முன்போல் நடக்குமோ? அதனால் அற்புதங்கள் நிகழ்ந்தமை அவ்வடியார்களின் பக்தி விசேஷத்தினாலேயேயாகும் என்று கூறுவர்.


கவிநயம்

 

சில அற்புதங்களுக்குக் காரணமாகும். சில சமயம் கவிநயத்தோடு கவியின் பக்தி மிகுதியும் சேர்ந்திருக்கும். மிகுதியும் சேர்ந்திருக்கும். ஆனால் அற்புதங்கள் எதுவும் அவைகளுக்குக் காரணமாயிருந்த கவிகள் தமிழ் மொழியில் செய்யப்பட்டிருந்த காரணத்தால் உண்டாக்கப்பட்டவை அன்று. கம்பர் கவியைக் கேட்டு நரசிம்மச் சிலை சிரக்கம்பம் செய்தமையும் வில்லிபுத்தூராழ்வாரின் பாரதப்பாக்கள் பருகி அவருக்குக் கண்கள் நல்கியமையும் ஒட்டக் கூத்தரின் ஈட்டி எழுபது கேட்டு அவரைப் பூதத்தினின்று விடுத்தமை யும் ஒளவையார் கவிக்காகக் கூழைப் பலாத் தழைத்தமையும் உதாரணங்க ளாகும்.

 

ஆகையால் மேற்கூறிய அற்புதச் செயல்களை ஆண்டவன் தமிழ் பாஷை யினிடமுள்ள அன்பின் மிகுதியால் செய்தருளினான் என் சொல்வது தவறு. பாடியவர்களின் பக்தி, பாடிய பாட்டுக்களின் கவிச்சுவை ஆகியவைகளில் ஏதேனும் ஒன்றிற்காகவோ அல்லது இரண்டு மூன்றிற்காகவே தான்செய்தான் என்பது வெளிப்படை.


பிறபாஷை அற்புதங்கள்

 

தமிழ் நூல்களில் அற்புதச் செயல்கள் காணப்படுகின்றன. அதனால் வேறு பாஷை நூல்களில் அவை கிடையா என்று கூறமுடியுமோ? நன்றாய்க் கவனித்தால் அற்புச் செயல்கள் என்பவை இவ்வுலகில் காணப்படும் எல்லா பாஷைகளிலும் ஏராளமாகக் கூறப்பட்டிருக்கின்றன என்பது தெளிவாகும். எல்லா தேசங்களிலும் அற்புதங்கள் காணப்படுமானால் அற்புதங்களைக் கொண்டு தமிழ் மொழிக்கு ஏற்றம் கூறுவது எங்கனம்?

 

இதர பாஷைகளில் காணப்படும் அற்புதங்களையும் சற்று ஆராய்ந்து பார்த்தால் அவைகள் தமிழ் மொழியில் போலவே மொழியின் பெருமையைக் காட்டாமல் அவற்றிற்குக் காரணமாயிருந்த கவிகளின் பக்தி முதலியவைகளையே காட்டுவதாகும் என்னும் உண்மையை எளிதில் அறிந்து கொள்ளலாம். இயேசு கிறிஸ்துநாதர் புயல் காற்றை அதட்டினார், அவை அடங்கிவிட்டன. அங்ஙனம் அடங்கியதற்கு அவர் அதட்டிச் சொல்லிய பாஷை ஹீப்ரூ என்பது காரணமன்று; அவருடைய அளவில்லாத பக்தி வன்மையேயாகும்.

 

இன்னொரு விஷயம். தமிழ் பாஷையில் செய்யப்பட்டதாகக் கூறப்படும் அற்புதங்கள் எல்லாவற்றிற்கும் காரணமான சொற்கள் எல்லாம் செய்யுட்களாகவே இணைக்கப்பட் டிருந்தன. ஆனால் ஏனைய கூறப்படும் அற்புதங்களான சொற்றொடர்கள் செய்யுள் நடையாக அமைக்கப் பெறவில்லை; உரை நடையாகவே அமைந்திருந்தன. செய்புள் நடை வேண்டப்படாது உரை நடைக்கே அற்புதச் செயல்கள் பிறபாஷைகளில் நிகழ்ந்திருக்குமேல் தமிழ் பாஷையிலும் பிறபாஷைகளே பெருமையுடையன என்று கூறவேண்டிய தாகும்.

 

ஆகையால் இக்கசைய காரணங்களால் அற்புதச் செயல்களைக் கொண்டு தமிழ் பாஷையின் பெருமையை நிலைநாட்ட முற்படுவது பேதமை என்பது தெளிவாகும். ஆகவே முன்னோர் மொழிந்த புராண சம்பந்தமான காரணங்கள் மூன்றும் முற்றிலும் ஆட்சேபத்திற்கு இடமானவை. தமிழின் சிறப்பிற்கு அவை ணுவளவும் ஆதாரமாகா. அத்தகைய ஆன்றோர் காரணங்களை அகற்றி விட்டால் இக்காலத்தவர் இயம்பும் சரித்திரக் காரணங்கள் ஏற்றுக் கொள்ளத் தக்கவைதாமோ என்று கேட்கக் கூடும். கேள்விக்கு அடுத்த வியாசத்தில் விடை பகர்வேன்.

 

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி

வாழிய வாழியவே

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசை கொண்டு வாழியவே.                 (பாரதி)

 

தமிழர்க்குத் தங்கள் தாய்மொழியாகிய தமிழ் மொழியினிடம் அன்பு அதிகம். அவ்வன்பின் மிகுதியால் அவர்கள் தங்கள் தமிழ் மொழியே உலகத்திலுள்ள மொழிகளில் எல்லாம் உயர்ந்தது என்று ஆதி முதல் இன்று வரை பல்லாயிரக்கணக்கான வருஷங்களாகப் பகர்ந்து வருகின்றனர். தமிழ் மொழியின் சிறப்பிற்கு அவர்கள் கூறும் காரணங்கள் புராண சம்பந்தமானவை, சரித்திர சம்மதமானவை என இருவகைப் படும். புராண சம்பந்தமான புகழுரைகளுக்குப் பொருத்தமான பல ஆட்சேபங்கள் புகலக் கூடியதாயிருப்பதால் அப்புகழுரைகளை விடுத்துத் தமிழ் மொழியின் மேன்மையை ஸ்தாபிக்க வேறு காரணங்களைத் தேட வேண்டியது அவசியம். இவ்வுண்மையை ஒருவாறு உணர்ந்தமையினாலேயே இக்காலத்துத் தமிழர் -முக்கியமாகத் தமிழும் ஆங்கிலமும் ஒருங்கு கற்றுள்ள புலவர்கள் புராணக் காரணங்களை முற்றிலும் அறவே புறக்கணித்துத் தள்ளிவிடா விடினும் அவைகளோடு சரித்திர சம்மதமான பல காரணங்களையும் கூறுவதாயினர்.


சரித்திரக் காரணங்கள்

 

புராணக் காரணங்களின் உண்மையையும் மறுக்கிறோம்; அதனால் ஒரு பாஷையின் மேன்மையை உறுதி செய்ய முடியாதென்றும் கூறுகிறோம். எந்த வஸ்துவின் அல்லது விஷயத்தின் ஏற்றமும் அதன் குணதோஷங்களைப் பற்றியதேயன்றி, அது யாரால் உண்டாக்கப்பட்டது அதனிடம் யாருக்கெல்லாம் அன்புண்டு, அதற்காக யார் யார் என்ன என்ன விதமான அரியகாரியங்கள் ஆற்றியுளர் என்னும் விஷயங்களைப் பற்றியதன்று. சாதாரணமாக ஜனங்கள் எவ்விஷய ஆராய்ச்சியிலும் பின் கண்ட காரணங்களையே பெரிதாகவும் உண்மை அளவு கோலாகவும் கருதி உபயோகிக்கின்றனர். ஆனால் அம்முறை முற்றிலும் பிசகானது. குணதோஷ ஆராய்ச்சி யொன்றே விஷயத்தின் உண்மை யொளியைக் காட்டுவதாகும். சில சமயங்களில் முக்கியமாக உற்பத்தி, நட்பு, தியாகம் முதலிய விஷயங்கள் குணதோஷ ஆராய்ச்சிக்குப் பெரிதும் பயன் தரக் கூடியனவாக இருக்கலாம். ஆனால் அவைகளின் உபயோகம் அம்மட்டே என்பதை மறத்தல் ஆகாது.

 

இனி சரித்திரக் காரணங்களைக் கொண்டால், உண்மையான சரித்திர உணர்ச்சியோடு மட்டும் ஆராய்ந்து விட்டால், அவைகள் எப்பொழுதும் உண்மையாகவே இருக்கும். புராணக் காரணங்களைப் போல் சரித்திரக் காரணங்களை உண்மை விஷயத்தில் ஒருபொழுதும் சந்தேகிக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. ஆகையால் நாம் இப்பொழுது கவனிக்க வேண்டியது தமிழ் மொழியின் மாண்பை நிலை நிறுத்தத் தமிழ்ப் பண்டிதர்கள் சாற்றும் சரித்திரக்காரணங்கள் எவை, அவை உண்மையில் தமிழின் பெருமையை ஸ்தாபிக்கத்தக்க வல்லமை பொருந்தியவை தானா என்பவைகளே யாகும்.

 

சரித்திரக் காரணங்கள் ஆறு

 

தமிழ்ப் புலவர்கள் கூறும் சரித்திர சம்மதமான காரணங்கள் எல்லாம் சற்று கவனித்து நோக்கின் கீழ்கண்ட ஆறுவகைகளில் அடங்கும்.

 

(1) உலகத்தில் இக்காலத்தில் பயிலப்படும் பாஷைகளின் தொகை சுமார் 900 மாகும். இந்தியாவில் மட்டும் வழங்குவன இருநூற்று இருபத்திரண்டாகும். இவைகள் எல்லாம் தோன்றுவதற்கு வெகு காலத்துக்கு முன்னரே தமிழ் மொழி தோன்றியது. உலகத்தில் பழைய மொழிகள் ஸம்ஸ்கிருதம், தமிழ், லத்தீன், கிரீக், ஹீப்ரூ என்று ஐந்து எனக் கூறுவர். இவ்வைந்திலும் முதற்கண் தோன்றியது தமிழ். பிற பாஷைகள் எல்லாம் தமிழ் மொழிதோன்றிய பின்னரே தோன்றுவதாயின.

 

(2) தமிழ் பாஷை பிறபாஷைகளுக்கு முன் தோன்றியதோடு அது அக்காலத்தில் அவனி முழுவதும் பரவி பயிலப்பட்டு வந்தது. ஒரு பாஷை எல்லாவற்றிற்கும் முன்னர் தோன்றியிருக்கலாம், அதனால் மட்டும் பெருமை ஏற்பட்டு விடாது. அது ஒரு மூலையில் மட்டுமே வழங்கப்படாமல் உலக முழுவதும் பேசப்பட்டு வந்தால் மிக்க சிறப்புடையதாகும். அங்ஙனம் இருவகைச் சிறப்பும் ஒருங்கே அமையப் பெற்றது தமிழ்மொழி என்ப.

 

(3) தமிழ்மொழி மலடியன்று. அதன் வயிற்றிலிருந்து காலக்கிரமத்தில் பல பெரிய பாஷைகள் பிறந்து வளர்ந்து நிலவிக் கொண்டிருக்கின் அங்ஙனம் அதன் வயிற்றில் பிறந்த பாஷைகளில் முக்கியமானவை தெலுங்கு, கன்னடம், துளுவம், மலையாளம் நான்குமாகும். தமிழ்மொழியில் தோன்றிய பாகதங்களுக்கோ கணக்கில்லை. முன்னாளில் தமிழ்மொழி பயின்று வந்த பல பாகங்களிலும் அத்தகைய பாகதங்கள் பல தோன்றியிருக்தன. அப்பாகங்களில் சில மறைந்தும் சில வேறுபாடடைந்தும் சில பழைய என்னும் உருவம் அதிகமாகக் குன்றாதும் உள்ளன. இக்காலத்திலும் அத்தகைய பாகங்கள் இந்திய நாட்டின் வடமேற்கு மூலையிலுள்ள சிந்துநதி தீரத்திலும் வடகிழக்குப் பிரதேசத்திலுள்ள “சோட்டா நாக்பூர்'' (சூடிய நாகபுரி) இடத்திலும் காணப்படுகின்றன. இங்ஙனம் மக்கட் செல்வம் பெற்றுள்ள பாஷைகள் உலகில் காணக்கிடைப்பது அரிது.

 

(4) மக்கட்செல்வம் பெற்றுவிட்டால் மட்டும் போதாது. சிலபாஷைகள் மக்கட்செல்வம் பெற்றிருக்கலாம், ஆனால் அவைகளில் சில மக்களைப் பெறுங் காரணத்தினாலேயே கதலி முத்துச்சிப்பி முதலியன மக்கட்பேற்றால் மடிந்து மண்ணாவது போல் மடிந்து மறைந்து போகலாம். சில மறைந்து விடா. உலக வழக்கு ஒழிந்து எட்டு வழக்கில் மட்டுமே நிற்கலாம். அன்றிச் சில பாஷைகள் இறந்து படாமல் மக்கட் பேற்றால் முன்னைய பலம் அழகு முதலியன குன்றிப் போகலாம். இது மனிதர் இயற்கை, இவ்வியற்கை முறையைப் பாஷைகளிடமும் காணமுடியும்.

 

ஆனால் எந்த பாஷையானது மக்கட் பானஷகள் பலவற்றைத் தோற்று வித்தாலும் முன்போலவே அழகு ஆற்றல் முதலியன குறையாது இலக இன்று காறும் இருந்து வருமோ அது ஏற்றமுடைய தென்று கூறலாமல்லவா; அத்தகைய அருங்குணம் அமைந்தது தமிழ்மொழி யல்லவா என்று தமிழன்பர்கள் வினவுவர்.

 

(5) உலகில் உள்ள பாஷைகளை எல்லாம் அவைகளின் சப்த, உருவ, பொருள் ஒற்றுமை வேறுபாட்டுக்களால் பல தொகுதிகளாக மொழி நூல் வல்லுநர் வகுப்பர். அத்தொகுதிகளில் தமிழ்த் தொகுதி யொன்று. தமிழ் பாஷை ஏனைய பாஷைத் தொகுதிகளில் சேர்ந்ததன்று. வேறு பாஷைத் தொகுதிகளைச் சேர்ந்து அடிமையாயிராது தமிழ்மொழி தனிச் செங்கோல்செலுத்தும் கக்ரவர்த்தினியாகும். சந்தானும் தாரகைகளும் போல் தமிழும் தமிழிற் பிறந்த தெலுங்கு கன்னடம் மலையாளம் துளுவம் முதலிய தென்மொழிகளும் உலகில் ஒளி விட்டு நிற்கின்றன. தனிப்பெருங் குழுவின் தலைமை படைத்துள்ள பாக்கியம் தமிழிற் குள்ளது போல் ஏனைய மொழிகளுக்குள்ளது அரிது. இதுவும் தமிழ் மொழியின் ஏற்றத்திற்கேற்ற காரணங்களில் ஒன்றாகும் அல்லவோ என்ப.

 

(6) சாதாரணமாக பாஷை என்ற பதத்தைப் பார்த்தவுடன் அல்லது கேட்டவுடன் இரண்டு விஷயங்கள் மனதில் தோன்றுகின்றன. ஒன்று ஒலி, மற்றொன்று உருவம். உலகில் வழங்கப்படும் பாஷைகளில் பலவற்றிற்கு ஒலியும் உருவமும் ஒருங்கே அமையப் பெற்றிருக்கின்றன. சில பாஷைகள் இன்னும் ஒலி வடிவத்திலேயே உயிர் வாழ்ந்து வருகின்றன. அவைகளுக்கு உருவ வடிவம் ஏற்படவில்லை. ஒலியும் உருவமும் ஒருங்கே யமையப் பெற்ற பாஷையே சிறப்புடையது என்பதை யாவரும் ஒப்புக்கொள்வர். உருவமின்றி ஒலி மாத்திரமே யிருப்பின் அப்பாஷை அபிவிருத்தி யடைய மார்க்கமில்லை என்பது வெள்ளிடைமலை. அங்ஙனம் அபிவிருத்திக்கு அத்யாவசியமான உருவமும் பாஷை ஒலிவடிவமாய்த் தோன்றிய காலத்திலேயே உடன் தோன்றி விடுவதில்லை. ஒலி தோன்றி பல்லாயிரக் கணக்கான வருஷங்கள் கழிந்த பின்னரே உருவம் தோன்றுவதாகும். சில பாஷைகள் தாங்களாகவே ஒலியுடன் உருவத்தையும் பின்னர் சேர்த்துக் கொள்ளக் கூடிசில பாஷைகள் தாங்களாக உருவத்தை அமைத்துக் கொள்ள இய உருவத்தை உண்டாக்கிக் கொண்ட இதர மொழிகளின் உருவத்தையே தழுவித் தங்களுக்கும் உருவத்தை ஏற்படுத்திக் கொள்ளும்.  

 

உலகில் ஆதியில் தோன்றிய மொழி தமிழ். அதுபோல உலகத்தில் முதன் முதலாக உருவம் உண்டாக்கிக் கொண்ட மொழியும் தமிழே. அதற்குப் பின்னர் தான் பிற்பாஷைகளுக்கு உருவம் ஏற்பட்டது. அவ்வுருவமும் அநேகமாகத் தமிழ் மொழியின் உருவத்தை ஒட்டியே செய்யப்பட்டது என்பதற்குப் பல சான்றுகள் உள. ஆகையால் தமிழ் பாஷை உலகிற்கு எழுத்தறிவித்த தாகும். எழுத்தறி வித்தவன் இறைவனாகும்'' என்பது முதுமொழி. ஆகையால் தமிழ்மொழி தாணியிலுள்ள மொழிகளில் எல்லாம் தலை சிறந்தது என்று சாற்றுவதற்குள்ள தடையாது என்றும் தமிழ்மக்கள் கேட்பர்.

 

ஆதாரங்கள்

 

இந்த ஆறு சரித்திர சம்மதமான தெனத் தமிழர் கூறும் காரணங்களுக்குள்ள சான்றுகள் யாவை என்று முதற்கண் ஆராய்தல் வேண்டும். தக்க சான்றுகள் இருந்தால் மட்டும் இந்தக் காரணங்களைச் சரித்திர தேவதை ஒப்புக் கொள்ளக் கூடிய உண்மைகள் என்று உறுதி செய்ய முடியும். அதன் பின்னரே அவை மொழி மாண்பிற் குரிய காரணங்கள் தானா என்று கவனித்தல் வேண்டும். ஆகையால் அடுத்த வியாசத்தில் இந்த ஆறு விதமான சரித்திரக் காரணங்களையும் தனித்தனியே எடுத்து ஆராய உத்தேசித்திருக்கிறேன்.


 காய்த லுவத்த லின்றி யொருபொருட்கண்
      ஆய்த லறிவுடையார் கண்ணதே- காய்வதன் கண்
 உற்றகுணந் தோன்றாதாகு முவப்பதன் கண்
      குற்றமும் தோன்றாக் கெடும்.                     (அறநெறிச் சாரம்)

 

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி

என்றென்றும் வாழியவே.                         (பாரதி)

 

தமிழ் மக்களுக்குத் தங்கள் தாய்மொழியாகிய தமிழ் மொழியின் பால் அளவு கடந்த அன்புண்டு. அவ்வன் பின் பெருக்கத்தால் அவர் தங்கள் மொழியின் பெருமையை எடுத்துப் புகழ்வதில் ஒருபொழுதும் சலிப்படைவ திலர். அங்ஙனம் அவர்கள் புகழ்வதற்கு ஆதாரமாகக் கூறும்காரணங்கள் புராண சம்பந்தமானவை, சரித்திர சம்பந்தமானவை என இருவகைப்படும். புராண சம்பந்தமாய்க் கூறப்படும் விஷயங்களை இக்காலத்தவர் யாரும் உண்மை என்று ஒப்புக் கொள்ள முடியாது உண்மை என்று ஒப்புக் கொண்டாலும் அவற்றைக் கொண்டு ஒரு மொழியின் சிறப்பை ஸ்தாபித்தல் இயலாது. இவ்விரு அபிப்பிராயங்களுக்குரிய காரணங்களைக் குறித்து இதற்கு முன் எழுதிய வியாசங்களில் விரிவாய் எழுதியிருந்தேன்.

 

சரித்திர சம்பந்தமாய்க் கூறப்படும் விஷயங்கள் உண்மையாக இருக்கமுடியும். ஆனால் அவற்றைக் கொண்டும் பாஷையின் ஏற்றத்தை நிர்ணயிக்க முடியுமா என்ற விஷயத்தை ஆராய்ச்சி செய்தல் அவசியம். தமிழ்மக்கள் தங்கள் மொழியின் சிறப்பின் ஆதாரங்களாகக் கூறும் சரித்திர சம்பந்தமான விஷயங்கள் ஆறாகும். அவையாவன:


(1) தமிழ் மொழி தோன்றிய காலத்தொன்மை.

(2). அது பயிலப்பட்ட நிலப் பரப்பு.

(3) இன்றுவரை இருக்கும் இளமை நிலைமை.

(4). அதனின்று பலமொழிகள் தோன்றியமை.

5) வேறு பாஷைக் குழுவைச் சேராத தனிக்குழுத் தலைமை.

(6) இந்திய மொழிகளில் முதன் முதலாக எழுத்தும் சுவடியும் பெற்றிருந்தமை.

 

இங்ஙனம் தமிழ்மொழியின் மாண்பிற்குக் கூறப்படும் இதிகாச காரணங்கள் ஆறும் உண்மையானவை தாமா, அவற்றிற்குரிய ஆதாரங்கள் யாவை என்பவற்றை முதற்கண் ஆராய்வோம்.


தொன்மை

 

உலகத்திலுள்ள இதர பாஷைகள் எல்லாம் தோன்றுவதற்கு முன்னதாக முதன் முதலில் தோன்றிய பாஷை தமிழ் மொழியே என்பது தமிழர்கூற்று. இதற்குக் காட்டப்படும் சான்றுகள் மூவகைப்படும். அவை யாவன: -


(1) தமிழ் நூல்களில் கூறப்படுவன.

(2) சம்ஸ்கிருத நூல்களில் கூறப்படுவன.

(3) பிறநாட்டார் நூல்கள் கூறுவன.


இச்சான்றுகள் எவை, அவை கூறுவன யாது என்பதை முறையே கவனிப்போம்.


தமிழ் நூல்கள்

 

தமிழரின் கடவுளாகிய சிவபெருமானே தமிழ் மொழியைச் சிருஷ்டித்தார் என்பதும், அதைச் சிருஷ்டித்து அகஸ்தியர்க்குக் கற்பித்துத் தென்னாடு அனுப்பினார் என்பதும், அகஸ்தியர் தென்னாடு வந்து தமிழ்ச் சங்கம்நிறுவி அதில் தலைமை வகித்து இலக்கணம் இயற்றியருளித் தமிழ் ஆராய்ந்தார் என்பதும் பழைய தமிழ் நூல்களின் நம்பிக்கை.

 

வடமொழியைப் பாணினிக்கு

வகுத்தருளி யதற்கினை யாத்

தொடர்புடைய தென்மொழியை

யுலக மெல்லார் தொழுதேத்தக்

குடமுனிக்கு வலியுறுத்தார்

கொல்லேற்றுப் பாகர்...........


 என்பது காஞ்சி புராணச் செய்யுள். திருவிளையாடற் புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர்,


விடையுகைத்தவன் பாணினிக்

கிலக்கண மேனாள்

வடமொழிக் குரைத்தாங்கியன்

மலயமா முனிக்குத்

திடமுறுத்தி யம்மொழிக் கெதி

ராக்கிய தென்சொல்


என்று கூறியிருக்கின்றார். அங்ஙனமானால் அகஸ்தியர் காலம் யாது?

 

இறையனார் அகப்பொருளுரை என்னும் நூல் தமிழ்ச்சங்கங்கள் மூன்று இருந்தன என்றும், அவற்றில் முதற் சங்கம் 4440 வருஷங்கள் கடல் கொள்ளப்பட்ட மதுரையில் இருந்தது என்றும், இடைச்சங்கம் 3700 வருஷங்கள் கபாடபுரத்தில் இருந்தது என்றும், கடைச்சங்கம் 1850 வருஷங்கள் வடமதுரையில் இருந்தது என்றும் கூறுகின்றது. கடைச்சங்கத்தின் முடிவு காலம் கி. பி. முதல் நூற்றாண்டு என்று சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். ஆகவே சங்கங்கள் மூன்றின் காலம் மொத்தமாக 9, 990 வருஷம்கள்; அவைகளின் இறுதிக்காலம் சுமார் 1, 800 வருஷங்களுக்கு முன்; ஆகையால் முதற்சங்கத்தின் ஆரம்பம் இற்றைக்குச் சுமார் 12 ஆயிரம் வருஷங்களுக்கு முன் என்று புலனாகின்றது. அதனால் அகஸ்தியர் தென்னாடு வந்தகாலம் 12 ஆயிரம் வருஷங்களுக்கு முன் என்று கூற வேண்டும். இஃதுண்மையாயின் இத்தகைய தொன்மைமாட்சி வேறு எந்த மொழிக்கும் இல்லை என்பது நிச்சயம்.

 

சில ஆதாரங்கள்

 

இதற்குரிய ஆதாரம் என்ன? இப்பொழுது தமிழ்மொழி வழங்கும் நாட்டின் தெற்கெல்லை கன்னியாகுமரி முனை. இதுவே தெற்கெல்லையாகச் சென்ற சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளாக இருந்து வந்திருக்கின்றது.

 

நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும்

தமிழ் வரம்பறுத்த தண்புனனாட்டு                       என்பது சிலப்பதிகாரம்.


      குணகடல் குமரிகுடகம் வேங்கடம்

எனுநான் கெல்லையி னிருந் தமிழ்க்கடலுள்

என்பது நன்னூல் சிறப்புப்பாயிர அடிகள். ஆனால் முற்காலத்தில் தமிழகத்தின் தெற்கெல்லை குமரி முனையன்று, குமரி ஆறாகும் என்று தமிழ் நூல்கள் சாற்றுகின்றன. தொல்காப்பியப் பாயிரம்,


 வட வேங்கடந் தென்குமரி
 ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்


என்று கூறுகின்றது. அதில் காணப்படும் குமரிக்கு இளம்பூரணர் " குமரியாறு " என்று பொருள் செய்கின்றனர். அதுபோல் புறநானூறு,


 வடா அது பனிபடு நெடுவரை வடக்குந்
 தெனாஅ துருகெழு குமரியின் தெற்கும்


என்னும் இடத்து நச்சினார்க்கினியர் குமரிக்கு'' குமரியாறு " என்று பொருள் கூறுவதையும் கவனிக்க. இளங்கோவடிகள் தாம் சிலப்பதிகாரம் செய்த காலத்து தமிழ்நாட்டின் தெற்கெல்லை குமரிமுனை என்றும் ஆனால் அதற்குமுன் அந்நாடு தெற்கே குமரியாறு வரை பரவியிருந்தது என்றும் அங்ஙனம் பரவியிருந்த நாடு கடலால் கொள்ளப்பட்டதென்றும் கூறுகின்றனர்.


 வடிவே லெறிந்த வான்பகை பொறாது
 பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
 குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள                        (சிலப்பதிகாரம்)


 இறையனார் அகப்பொருளுரையும்,


 "தலைச்சங்கத்தார் சங்கமிருந்து தமிழாராய்ந்தது கடல் கொள்
 ளப்பட்ட மதுரை என்ப........ இடைச் சங்கத்தார் சங்க மிருந்து
 தமிழாராய்ந்தது கபாடபுரத்தென்ப. அக்காலத்துப் போலும்

பாண்டி நாட்டைக் கடல் கொண்டது. "


என்று கூறுகின்றது. இவற்றிலிருந்து குமரி முனைக்குத் தெற்கே இருந்த நிலம் கடலால் கொள்ளப்பட்ட காலம் சுமார் 7, 500 வருஷங்களுக்கு முன் என்று காணப்படும்.

 

மேனாட்டு ஆசிரியர்களான ஹெக்கல், ஹவிலி, தோப்பினார்டு முதலியவர்கள் குமரி முனைக்குத் தெற்கே வெகு தூரம் வரை முன்னாளில் கடலுக்குப் பதிலாக நிலமே இருந்தது என்றும், அதற்கு 'லேமூரியா " கண்டம் என்பது பெயர் என்றும், அக்கண்டம் பின்னால் கடலால் கொள்ளப்பட்டது என்றும் பல ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுகின்றனர். அங்ஙனம் அந்நிலம் பலமுறை கடலால் கொள்ளப்பட்டதில் கடைசிக் கடற்கோள் சுமார் 9 ஆயிரம் வருஷங்களுக்கு முன்னராகும் என்று ஆசிரியர் எலியட் என்பவர் உரைக்கின்றார்.

 

ஆகவே, இவ்வாசிரியர்கள் கூறுவதையும் தமிழ் நூல்கள் கூறுவதையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ் நூல் உரைப்பது உண்மை யென்றும் அதனால் தமிழ்மொழி சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்ச்சங்கம் ஸ்தாபித்து வளர்க்கப்பட்டது என்றும் தெரிவதாகத் தமிழ்ப் பண்டிதர் கூறுவர். தமிழ்ச்சங்கம் ஏற்பட்ட காலம் 10 ஆயிரம் வருஷங்களுக்கு முன்என்றால் தமிழ்மொழி உண்டாகிய காலம் அதற்கு எத்தனை ஆயிரம் வருஷங்களுக்கு முன்னதாக இருக்க வேண்டும் என்பதை வாசகர்கள் ஊகித்தறிந்து கொள்ளலாம்.


மற்றொரு சான்று

 

இப்பொழுது காணக்கிடைக்கும் தமிழ் நூல்களில் மிகப் பழமையானது தொல்காப்பியர் செய்துள்ள தொல்காப்பியம் என்னும் இலக்கணமேயாகும். தொல்காப்பியரின் காலம் என்ன?

 

(1) வேதவியாசர் வேதங்களை ரிக்வேதம், யஜுர்வேதம், சாமவேதம் அதர்வண வேதம் என நான்காக வகுத்தருளுவதற்கு முன்னரே வசித்தவர் தொல்காப்பியர் என்று நச்சினார்க்கினியர் கூறுகின்றார். உலகத்திலுள்ள நூல்களில் எல்லாம் மிகப் பழமையானது ரிக்வேதம் என்பது மேனாட்டுப் பண்டிதர்களின் அபிப்பிராயம்.

 

(2) வடமொழியில் கூறப்படும் முக்கியமான இலக்கணங்கள் ஐந்திரம், பாணினீயம் என இரண்டு. அவற்றுள் பின்னதே முன்னதை விடச் சிறந்தது என்பது சம்ஸகிருத பண்டிதர் கொள்கை. ஆனால் பனம்பாரனார் தொல்காப்பியப் பாயிரத்தில் "ஆந்திரம் நிறைந்த தொல்காப்பியன் " என்றே கூறுவதால் தொல்காப்பியர் பாணினீயத்திற்கு முன் இருந்தவர் என்று விளங்கும். பாணினியின் காலம் கி. மு. 350 - க்கு முற்பட்டது என்று சிலரும், கி மு. 700 என்று சிலரும் கூறுகின்றனர். ஆகையால் தொல்காப்பியர் காலம் சுமார் 2, 500 வருஷங்களுக்கு முன்னராகும் என்று கூறலாம்.

 

(3) தொல்காப்பியர் அகஸ்தியரின் மாணாக்கர். அகஸ்தியரோ சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னிருந்தவர். அதனால் தொல்காப்பியர் காலமும் சுமார் 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தென்று கூறுவர். அவர் செய்துள்ள தொல்காப்பியம் மிகச் சிறந்த இலக்கணமாதலாலும், இலக்கியம் கண்டதற்கே இலக்கணம் இயம்பல மரபாதலாலும் அவர் காலத்திற்குப் பல்லாயிர வருஷங்களுக்கு முன்னதாகவே தமிழ் தோன்றி வளர்ந்து வந்திருக்க வேண்டுமல்லவா?

 

இனி சம்ஸ்கிருத நூல்களில் தமிழின் தொன்மையை ஸ்தாபிக்கக் காணப்படும் ஆதாரங்களைப்பற்றி அடுத்த வியாசத்தில் ஆராய்வோம்.

 

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே

எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி

என்றென்றும் வாழியவே                                (பாரதி)

 

தமிழ் மக்களுக்குத் தங்கள் தாய் பாஷையாகிய தமிழ் மொழியனிடத்து அளவு கடந்த அன்புண்டு. அவ்வன்பின் காரணமாக அவர்கள் தங்கள் மொழியே தரணியில் தலை சிறந்தது என்று சந்தேகமின்றி தைரியமாய்ச் சாற்றுவர். ஆனால் அவர்கள் அங்ஙனம் அறைவதற்கு உரிமை உண்டா? இக் கேள்வி கேட்டால் அவர்கள் தங்களுக்கு உரிமை உண்டென்றும் அவ்வுரிமை உண்மைக்குப் பல் ஆதாரங்கள் உளவென்றும் கூறுவர். அவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஆதாரங்கள் எல்லாம் இருவகைப்படும். ஒருவகை புராணசம்பந்த மானவை. ரண்டாவது வகை சரித்திர சம்பந்தமானவை. இவ்விருவகை ஆதாரங்களும் உண்மையானவை தாமா; உண்மையானாலும் ஒரு மொழியின் உயர்வை நிலை நாட்டத் தகுந்த ஆற்றல் உடையவை தாமா என்று நாம் ஆராய்ந்தறிதல் அவசியம்.

 

இதற்கு முன் எழுதிய கட்டுரைகளில் புராண சம்பந்தமான ஆகாரங்களை ஆராய்ந்தோம். அவ் வாராய்ச்சியில் நாம் கண்டு கொண்ட தென்ன? புராணக் கூற்றுக்களை உண்மை என்று புகல முடியாது. அறிஞர் யாவரும் அவற்றை அகற்றி விடவே செய்வர். உண்மை என்று கொண்டாலும் அவைமொழியின் மாண்பைக் காட்டுமா என்று கேட்கக் கூடும். இக் கேள்விக்கு ஆம் என்று யாரும் கூற இயலாது.

 

சரித்திர சம்பந்தமான ஆதாரங்களில் வெகு முக்கிய மானவை ஆறு.அவை உண்மையாயிருக்கலாம். முதலில் அவை உண்மை தானாஆராய்வோம். பின்னர் அவற்றைக் கொண்டு அன்னை மொழியின் அருமையை ஆராய்வோம்.

 

சரித்திர ஆதாரங்களின் முதலாவதாக வுள்ளது தமிழ் தோன்றியகாலத் தொன்மை, அதற்குரிய சில குறிப்புகளை சென்ற மாதம் தந்தோம். தமிழின் பழமையைக் குறித்துத் தமிழ் நூல்கள் கூறும் விஷயங்களை மொழிந்து விட்டேன். இப்பொழுது சம்ஸ்கிருத நூல்கள் கூறுபவற்றைக் கவனிப்போம்.

 

ரிக்வேதம்

 

நான் முன்னால் கூறியபடி ரிக்வேதம் உலகிலுள்ள நூல்களில் எல்லாம் மிகப் பழமையான தாகும். அதில் கூறப்பட்டிருக்கும் ஆதிகால மனிதர்கள் தமிழ் மக்களாகிய திராவிடர்களையே குறிக்கும் என்றும், அந்த ஜனங்கள் அக் காலத்திலேயே பெரிய நகரங்கள், அரண்மனைகள், கோட்டை கொத்தளங் கள், குளங்கள், ஏரிகள், வீடுகள், ஆபரணங்கள் அரசியல் முறைகள் பல நாகரிகச் சின்னங்கள் படைத்திருந்தனர் என்றும் ஓல்ட்ஹாம், ஹாவல் முதலிய ஐரோப்பிய ஆசிரியர்களைத் தழுவி ஆசிரியர் சேஷய்யங்கார் தாம் எழுதியுள்ள "திராவிட இந்தியா' என்னும் ஆங்கில நூலில் கூறுகின்றார். மேற்கூறிய நாகரிகச் சின்னங்கள் தமிழர்கள் ரிக்வேத காலத்திலேயே உடையவர்களாய் இருந்திருப்பரேல், நாகரிகச் சின்னங்களில் முதற்பட்டது என்று வேண்டிய பாஷையையும் உடையவர்களாய் இருந்தனர் என்று கூறுவது பிசகாகாது.

 

 

 

 

இராமாயணம்

 

இராமாயணத்தை வடமொழியில் முதல் முதல் இயற்றியவர் வான்மீக முனிவராவர். அவர் கதாநாயகனாகிய இராமர் இருந்த காலத்திலேயே வாழ்ந்தவர் என்றும் கூறப்படுகின்றது. ஆகையால் அவர் தம் நூலில் கூறும் விஷயங்கள் அவர் காலத்து அவர் அறிந்தவைகளே யாகும். அவர் காலமோ கி.மு. 3000 வருஷங்களுக்கு முன் அதாவது இற்றைக்கு 5000 வருஷங்கட்கு முன் என்று காப்டன் டிராயர் கூறுகின்றார்.

 

அங்ஙனம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்த வான்மீகி முனிவர் தமது இராமசரிதையில் சுக்கிரீவன் வானரசேனைகளைச் சீதையைத் தேடவிடும் பொழுது அச்சேனைகள் தெற்கே போய் தேடவேண்டிய தேசங்களையும் நகரங்களையும் குறிப்பிட்ட பொழுது சேரசோழபாண்டிய நாடுகளையும் தாம்பிரவர்ணி நதியையும் அங்கதி கடலில் கலக்கு மிடத்தில் பாண்டியன் ராஜதானிப் பட்டணமாயிருந்த மணிமுத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட கபாடபுரம் என்னும் நகரத்தையும் வர்ணித்துக் கூறியதாகப் பாடியிருக்கின்றார். ஆகையால் தமிழ்நாடும் அதன்கண் வழங்கிய தமிழ்மொழியும் 5000 - வருஷங்களுக்கு முன்னரேயே மிகச் சிறப்போடு இருந்து வந்தன என்பது போதரும்.

 

இறையனார் அகப்பொருள் இடைச்சங்கம் கபாடபுரத்திருந்தது என்றும் அது நிலவியிருந்த காலம் 3700 - வருஷங்கள் என்றும் கூறுவதைக் கண்டோம். அதாவது கபாடபுரத்துச் சங்கம் இருந்தது இற்றைக்குச் சுமார் 7500 - வருஷங்களுக்கு முன் முதல் சுமார் 3700 – வருஷங்களுக்கு முன்வரை யாகும். ஆகையால் வான்மீகி 5000 - வருஷங்களுக்கு முன்னிருந்தவர் கபாடபுரத்தை வர்ணத்திருப்பது நம்பத்தக்கதாக இருக்கின்றது என்று கூறப்படும்.

 

இங்ஙனம் இராமாயண காலமாகிய 5000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே தமிழ்நாடு மிக நாகரிக முற்றதாய் இருந்திருக்குமானால் அதன்கண் பயின்று வந்த பாஷை பல்லாயிர வருஷங்களுக்கு முன்னரேயே முளைத்திருக்க வேண்டு மன்றோ?


மகாபாரதம்

 

பாரதப்போர் நடந்த காலம் கி.மு. 3000 - க்கு முன் என்று மாக்ஸ்டங்கர் முதலிய பண்டிதரும், கி. மு. 1194 - ல் என்று சில பண்டிதரும் கூறுகின்றனர். குறைந்த காலத்தையே ஏற்றுக் கொண்டாலும் இற்றைக்குச் சுமார் 3200 - வருஷங்களுக்கு முன்னர் பாரத யுத்தம் நடந்தது என்று கூறலாம்.

 

அந்த யுத்தத்தையும் அதற்குக் காரணமாயிருந்த பல சம்பவங்களையும் கூறும் மகாபாரதம் என்னும் நூலில் தமிழ் மொழியைப் பற்றிய பிரஸ்தாபம் காணப்படுகின்றதா என்று பார்ப்போம். பாண்டிய தேசத்து மன்னகிய மலையத்துவசனுடைய மகளாகிய சித்திராங்கதையை அர்ச்சுனன் மணந்திருந்ததாக அந்நூல் கூறுகிறது. இராஜ சூய யாகத்திற்கு முன் பாண்டவர்களால் செய்யப்பட்ட திக்விஜயத்தின் பொழுது சகாதேவன் பாண்டிய நாடு வந்து பாண்டியனிடம் பல கப்பப் பொருள்கள் வாங்கியதாகக் காணப்படுகின்றது. சோழ பாண்டிய மன்னர்கள் இராஜ சூயயாகத்திற்கு சக்தனத் தைலம் முதலிய பல சரக்குகள் கொண்டு போய்க் கொடுத்ததாகவும் அறிகின்றோம். பாஞ்சாலியின் சுயம்வரத்திற்குப் போயிருந்த மன்னர்களில் பாண்டிய அரசனும் ஒருவனாவன்.

 

பஞ்ச பாண்டவர் காலத்தில் தமிழ் வேந்தனாகிய பாண்டியன் மிகச்சிறப்புற்றிருந்தான் என்பதும் அவன் அரசாண்டு வந்த தேசம் மிகச் செழிப்புற்றும் நாகரிக மடைந்தும் இருந்தது என்பதும் மொழி மகா பாரதத்தில் மட்டுமே காணப்படுகின்ற தென்பதில்லை. தமிழ் நூல்களிலும் அவ்விஷயம் கூறப்பட்டிருப்பதைக் காண்க. முரஞ்சியூர் முடி நாகராயர் என்னும் சங்கப் புலவர்,


 நின்கடற் பிறந்த ஞாயிறுபெயர்த்து நின்
 வெண்டலைப் புணர் ரிக் குட கடற் குளிக்கும்
 யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந்!
 வான வரம்பினை நீயோ பெரும
 வலங்குளைப் புரவி யைவரொடு சினை இ
 நிலந்தலைக் கொண்ட பொலம் பூந் தும்பை
 யீரைம்பதின்மரும் பொருதுகளத் தொழியப்
 பெருஞ் சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்!

 

(பாண்டவர் ஐவருடன் துரியோதனர் முதலிய நூற்றுவரும் போர் புரிந்து படைக்களத்தில் மாண்டுபோம் வரையும் மிக்க உணவை இரு சேளைக்கும் வரையாது வழங்கினோய்) என்று பாண்டியன் உதியன் சேரலாதனைப் புகழ்ந்து பாடியிருக்கின்றார். ஆகவே இதிலிருந்தும் தமிழ்மொழி தோன்றிய காலம் மிகப் பழமையானது என்பது பெறப்படும்.


ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி

என்றென்றும் வாழியவே.

 

தமிழர்க்குத் தங்கள் தாய்மொழியாகிய தமிழ்மொழியின் பாலுள்ள கழிபேரன்பின் காரணமாகத் தம்மொழியே தரணியிலுள்ள சகல மொழிகளிலுந் தலை சிறந்தது என்று சாற்றி வருகின்றனர் என்றும், தமிழ் பாஷையின் பெருமைக்கு அவர்கள் கூறும் காரணங்கள் - புராணக்காரணங்கள், சரித்திரக் காரணங்கள் என இருவகைப்படும் என்றும், அவற்றுள் புராண சம்பந்தமான காரணங்கள் இவை என்றும், அக்காரண ளை உண்மையானவைஎன்று ஒப்புக்கொள்ள முடியாது என்றும், ஒப்புக்கொள்ள இயலாமைக்குரிய காரணங்கள் இவை என்றும், உண்மையானவை என்று ஏற்றுக்கொண்டாலும் அவற்றைச் கொண்டு தமிழ்மொழியின் மாண்பை நிரூபித்தல்முடியாத காரியம் என்றும், அதன் பின்னர் சரித்திரக் காரணங்கள் இவைஎன்றும், அவற்றுள் முதற்கண் கூறப்படும் தமிழ்மொழி தோன்றிய காலத்தொன்மைக் குரிய சான்றுகள் தமிழ் நூல்களில் காணப்படுவன, வடமொழிநூல்களில் காணப்படுவன, இதர நாட்டாக ரருடைய கிரந்தங்களில் காணப்படுவன என மூவகைப்படும் என்றும், அம் மூவகையில் முதல் இருவகைச் சான்றுகள் வை என்றும் இதற்கு முன் இது சம்பந்தமாய் எழுதிவந்த வியாசங்களில் விளக்கியிருந்தேன். இனித் தமிழ் பாஷையின் பழமைக்கு ஆதாரமாகஇதர தேசத்தினர் இயற்றியுள்ள நூல்களில் காணப்படும் குறிப்புக்களைக் கவனிப்போம்,


பிறநாட்டு நூல்கள்

 

தமிழ் மொழியின் தொன்மைக்கு ஆதாரமாய் முன் கூறிய குறிப்புக்கள் அனைத்தும் தமிழ் நூல்களில் இருந்தும் சம்ஸ்கிருத நூல்களில் இருந்தும் எடுத்துக் கூறப்பட்டன. ஆனால் சிலர் அக் குறிப்புக்கள் கூறும் நூல்கள் அநே நகமாகப் புராண இதிகாசங்களாக இருக்கின்றன; புராண இதிகாசங்கள் கூறுபவற்றை யாரால் நம்ப இயலும்? கவிகளின் கற்பனைகளையும் புனைந்துரைகளையும் கால நிர்ணயத்திற் கேற்ற சான்றுகளாகக் கொள்வது தகுமோ? தவிர அந் நூல்களின் காலம் அறுதியிட்டு உறுதி கூற முடியாத தொன்று; அதன புராண இதிகாசக் கூற்றுக்களைக் கொண்டு தமிழின் காலத்தைக் கணித்தல் மணல் மேட்டில் மாளிகை வகுப்பதாகும் என்று ஆட்சேபிக்கக் கூடும். ஆகையால் யாராலும் மறுக்க முடியாத வேறு சான்றுகள், காலம் நிச்சயித்து அறியக் கூடிய இதர நூல்களிலிருந்து வேறு குறிப்புக்கள் தேவை என்று கூறக்கூடும்.

 

அங்ஙனம் அவர் விரும்பும் சான்றுகளும் குறிப்புக்களும் இல்லாமல் இல்லை, இருக்கவே செய்கின்றன. இயேசுகிறிஸ்து நாதர் பிறந்து சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் அவருடைய காலத்திற்கு வெகுநாட்களுக்கு முன்னரே நமது தமிழ் நிலம் நனி நாகரிகம் பெற்றுத் திகழ்ந்த நாடு என்பதும் அதனால் நமது தமிழ்மொழி அதற்கு வெகு காலத்திற்கு முன்னரேயே தோன்றியிருக்க வேண்டும் என்பதும் உண்மை என்று உரைக்கக்கூடிய சில சான்றுகள் தருகின்றேன்.


சான்றுகள்.

 

(1) இத்தாலி தேசம் என்பது ஐரோப்பாவில் உள்ளது. அத் தேசத்தின் ராஜதானி நகரம் இப்பொழுது போலவே முன்னாளிலும் ரோமாபுரியாகும். அந்நகரத்தில் கிறிஸ்து பிறப்பதற்குச் சுமார் இருபத்தைந்து வருஷங்களுக்கு முன் அரசு செய்து வந்தவன் அகஸ்டஸ் ஹீஸர் என்பவன். அக்காலத்தில் செந்தமிழ் நாட்டின் ராஜதானிப் பட்டணமாகிய மதுரையில் செங்கோலோச்சி வந்த செழியன் அவ்வகஸ்டஸ் அரசனுக்கு "ஸ்தானாபதி'களை அனுப்பிச் சிசேக சம்பந்தமான உடன் படிக்கை செய்து கொண்டதாகச் சரித்திராசிரியர்கள் பலர் கூறுகின்றனர்.

 

ரோமராஜ்யத்திற்கும் தமிழ் நாட்டுக்கும் அக்காலத்தில் நெருங்கிய சம்பத்தமும் வியாபாரப் போக்கு ரேத்தும் உண்டென்பதைத் தமிழ் நாட்டில் இப்பொழுதும் பல விடங்களில் காணப்படும் ரோமநாணயங்கள் சான்றுபகர்ந்து நிற்கின்றன.

 

(2) இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 205 வருஷங்களுக்கு முன் சோழதேசத்தில் அரசாண்டுவந்த ஏலாலர்' என்னும் சிற்றரசர் ஒருவர் பெரியசேனை யொன்றுடன் கப்பலேறிக் கடல் கடந்து இலங்கை சென்று அத்திவை ஆண்டுவந்த அரசரோடு அமர்புரிந்து வாகை சூடியதாக மிஸ்டர் ஜே. ஈ. டெனன்ட் என்பவர் “இலங்கை' என்னும் நூலில் கூறுகின்றார்.

 

(3) கிறிஸ்து பிறப்பதற்குச் சுமார் 350 வருஷங்களுக்கு முன் வடநாட்டில் மகத தேசத்தில் அரசு செய்து இப்பொழுது உலக மெங்கும் உத்தமமன்னன் என்னும் அழியாப்புகழ் அடைந்துள்ள அசோக மகாராஜர் அக்காலத்தில் அவர் பாலிபாஷையில் தயாரித்துப் பல விடங்களில் நாட்டி வைத்த பல சிலா சாஸனங்களில்


"சோழர்கள் பாண்டியர்கள் கேரள புத்ரர்,

தாம்பரபரணி நதிவரை”


என்னும் பதங்கள் காணப்படுகின்றன. அதனால் அக்காலத்திலேயே தமிழ் நாட்டார் நாகரிகம் அடைந்திருந்தபோது வெளி நாட்டார்களுக்கும் நன்றாய்த் தெரிந்தவராய் இருந்தனர் என்பது தெள்ளிதில் புலனாம். தமிழ் பாஷையின் தோற்றம் அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னராகும் என்று விவரித்து உரைக்க வேண்மோ?

 

(4) அசோக மகா ராஜருடைய தந்தையார் காலத்தில் அவருக்கு மதி மந்திரியாய் இருந்து, இக் காலத்து சரித்திர ஆசிரியர்கள், பொருள் நூல் நிபுணர்கள் யாவரும் புகழ்ந்து போற்றும் அர்த்தசாஸ்திரம்' என்னும் அரும் பெரும் நூலை இயற்றியுள்ள சாணக்கியர் என்பவர் அந்த நூலில் பாண்டிய நாட்டைப் பற்றியும் அந்த நாட்டின் நனி மாகரிக சின்னங்களைப் பற்றியும் பலவிடங்களில் முகர்ந்துள்ளார். அவைகளில் சில வருமாறு:

 

(அ) தாம்பர பரணி நதியில் உண்டாகும் "தாம்பர பர்ணிகா" என்னும் முத்து மிகச் சிறந்ததாகும். (தாம்பர பரணி நதி தென்பாண்டி நாடாகிய திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள முக்கிய ஆறு).

 

(ஆ) பாண்டிய காவதத்தில் காணப்படும் " பாண்டிய காவதகா'' என்னும் முத்தம் சிநந்ததே.

 

(இ) பாண்டிய தேசத்தில் நெய்யப்படும் கறுப்புவர்ணமும் முத்துப்துப் போல் மேன்மையும் பொருந்திய “பௌண்டாகா" என்னும் கம்பளி,

 

(ஈ) பாண்டிய தேசத்துத் தென் மதுரை நகரில் செய்யப்படும் நேர்த்தியான பருத்தி ஆடைகள்.

 

(உ) மகத நாட்டார் வடநாட்டோடு வாணிபம் செய்வதை விட தென்டோடு வாணிபம் செய்வதே சாலச் சிறந்தது. ஏனெனில் தென்னாட்டிலும் தென்னாட்டில் வஸ்திரங்களுக்குப் பேர் போன மதுரையிலும் இருந்மே விலையுயர்ந்த வாணிப வஸ்துக்கள் பல கிடைக்கின்றன.

 

இங்ஙனம் இவர் கூறுவதால் கிறிஸ்து பிறப்பதற்கு நானூறு வருஷம்களுக்கு முன்னதாகவே பாண்டிய நாடும் அதைப்போல சோழ சேரநாடு முதலிய தமிழ்நாடுகளும் பழமையான நாகரிகம் பெற்றிருந்தன என்பது விளக்கும்.

 

(5) அசோகருடைய தந்தை சந்திரகுப்த மன்னன். அவனே கிரீஸ் தேசத்திலிருந்து வந்த சேனைகளை இந்தியாவை விட்டு வெளியே துரத்தியவன். அப்பொழுது கிரேக்க மன்னன் தன் மகளை அவனுக்கு மணஞ் செய்து வைத்தாள். தன் மகளை அவனுடைய அச அவைக்கு அனுப்பிய பொழுது துணையாக கிரேக்க வித்வான் ''மகாஸ்தனிஸ்'' என்பவனையும் அனுப்பி வைத்தான். அவன் பல வருஷங்கள் சந்திரகுப்தன் சபையில் இருந்தான், அதனால் நாட்டின் நலன்களை நன்கு அறியப் பல சந்தர்ப்பங்கள் பெற்றிருந்தான். அவன் பின் தன் நாடு போனதும் ஒரு நூல் தான் இந்தியாவில் கண்ட விஷயங்களைக் குறித்து எழுதினான். அந்நூல் இப்பொழுது சுமார் இரண்டொரு ஏற்றாண்டுகளுக்கு முன்னர் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாயிற்று. அந்நூலில் பாண்டிய நாட்டைப் பற்றிப் பலபடப் புகழ்ச்துள்ளார் அக் கிரேக்க ஆசிரியர். ஆகையால் அவர் குறிப்புக்கள் சாணக்கியர் கூற்றுக்களை வலியுறுத்துவதைக் கவனிக்க.

 

(6) அக் காலத்தில் பாண்டிய சோழ நாட்டார் வட நாட்டாரோடு மட்டுமே வியாபாரம் செய்து வந்தனர் என்பதில்லை. ஐரோப்பாவிலுள்ள கிரீஸ், ஹிரியா முதலிய இதர தூர தேசங்களுக்கும் ஸ்தானாபதிகள் அனுப்பி வந்தனர் என்றும் தெரிகின்றது. அதோடு கிரேக்க நாட்டார் பலர் பாண்டிய சோழ நாடுகளில் வந்து வசித்து வந்தனர் என்பதும் உண்மையாகும்.

 

ஆனந்த போதினி – 1929, 1930 ௵ -

நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச்சு, ஏப்ரல், மே, ௴

 

 

  

 

No comments:

Post a Comment