Wednesday, September 2, 2020

 தமிழ் மொழியின் மாண்பு

 

"வடமொழியைப் பாணினிக்கு வகுத்தருளி அதற்கிணையாத்

தொடர்புடைய தென்மொழியை உலகமெலாந் தொழுதேத்தும்

குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகரெனில்

கடல் வரைப்பி னிதன் பெருமை யாவரே கணித்தறிவார்.''

 

குட முனியின் நாவில் ஜனித்து, ஆரியத்தின் மடியில் வளர்ந்து, தெலுங்கு, கன்னடம், மலையாளம் முதலிய மொழிகளின் நேயம் பெற்று, சங்கப் புலவர்களின் நாவில் சஞ்சரித்து, வித்துவான்களின் வாக்கில் விளையாடி, திராவிட தேசம் முழுதும் ஏகச் சக்கராதிபத்தியஞ் செலுத்திவந்த நந்தமிழ் அரசியைத் தற்போது இகழலாமா?


 “யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
      இனிதாவ தெங்கும் காணோம்
 பாமரராய் விலங்குகளாய் உலகனைத்தும்
      இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு
 நாமமது தமிழரெனக் கொண்டிங்கு
      வாழ்ந் திடுதல் நன்றே சொல்லீர்!
 தேமதுரத் தமிழோசை உலக மெலாம்
      பரவும் வகை செய்தல் வேண்டும்.
 யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
      வள்ளுவர்போல் இளங்கோவைப்போல்
 பூமிதனில் யாங்கணுமே பிறந்த திலை உண்மை
      வெறும் புகழ்ச்சி யில்லை;
 ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
      வாழ்கின்றோம் ஒரு சொற் கேளீர்!
 சேமமுற வேண்டுமெனில் தெரு வெல்லாம்
      தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்.''

 

என்று பாரதியாரால் போற்றப்பெற்ற நந்தமிழ் மொழியானது இதர மொழிகளைக் காட்டினும் தொன்மையும் ஏற்றமும் வாய்ந்ததென்பதை ஒவ்வொரு தமிழரும் உணரல் வேண்டும்.

 

நம்மைத் தாலாட்டித் தூங்கவைத்ததும், நம் மழலைச் சொற்களால் நம்பெற்றோரை மகிழ்வித்ததும், நாம் குழந்தைப் பருவத்தில் பேச ஆரம்பித்த போது முதலில் உச்சரித்ததும், நம் அன்னை தந்தையர் நமக்கு அமுதொடுபுகட்டியதும், மாதா, பிதா, குரு முதலானோர் நமக்கு முதலில் உபதேசித்ததும், தொன்றுதொட்டு நம் முன்னோர்களெல்லாம் பேசியும் எழுதியும் வந்ததும், நம் அன்னை தந்தையர், சுற்றத்தார், இஷ்ட மித்திரர் முதலானோர் பேசுகிறதும், நம் வீட்டுப் பாஷையும் நாட்டுப் பாஷையும் அமிழ்தினு மினியகந் தமிழ் மொழியே யன்றோ?


 "கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து
 பண்ணுறத் தெரிந்த தாய்ந் தவிப் பசுந் தமிழ் ஏனை
 மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
 எண்ணிடைப் படக் கிடந்ததா எண்ணவும் படுமோ."


இவ்வளவு அருமையும் பெருமையும் வாய்ந்த நந் தாய்மொழியை அலக்ஷியஞ் செய்துவிட்டு சமஸ்கிருதம், ஆங்கிலம், லத்தீன் முதலிய அன்னிய பாஷைகளை நாம் விரும்புதல் அழகோ? சுற்றத்தாரை விடுத்து அந்நியரை நேயங் கொண்ட ஒருவன் ஆபத்துக் காலத்தில் எங்ஙனம் வருந்த நேருமோ, அங்ஙனமே சுயமொழியை விடுத்த ஒருவனும் துயருறல் நேரும். சமஸ்கிருதமும் லத்தீனும் மிகவும் சிறப்புப் பொருந்திய பாஷைகள்தாம். அவகாசமுள்ளவர் தாய் பாஷையொடு அவைகளையுங் கற்றல் நலமே. ஆயின் தாய் மொழியை நன்கு கல்லாது பிற மொழிகளைக் கற்க விரும்புதல் மாதா வயிறெரிய மகேசுவர பூஜை செய்வதை யொக்கு மன்றோ?

 

மஹரிஷி ரவீந்திரநாதர், பங்கிம் சந்திர சாட்டர்ஜி, லோகமான்ய திலகர், ஸர் ஜெகதீச சந்திர வஸு (Bose), மஹாத்மா காந்தியடிகள் போன்ற மேதையர்களெல்லாம் தாங்கள் எழுதி வெளியிட்ட நூல்களைத் தத்தம் தாய் மொழிகளிலேயே எழுதுவதற்குக் காரணம் என்ன? ஆங்கிலந் தெரியாமையா? அன்று; அன்று. தத்தம் தாய் மொழிப் பற்றே.

 

ஆங்கிலம் முதலிய ராஜ பாஷைகளைக் கற்க வேண்டாமென யான் கூறவில்லை. ஏனெனின், ராஜ பாஷையாகிய ஆங்கிலம் தெரியா திருப்பின் அவ்வாங்கில ராஜாங்கத்தில் வாழ்தல் நமக்குக் கஷ்டமாய்த்தானிருக்கும். அன்றியும் உலகத்திற்கு மிகவும் உபயோகமுள்ள அநேக விஷயங்களைப்பற்றியும் ராஜபாஷைகளில் பல நூல்கள் உளவாதலின் அவைகளைக் கற்கவேண்டியதும் அவசியமே. ஆயின் சுய மொழியை விடுத்து அவைகளைக் கற்றல் உசிதமன்று. நம் மிந்திய மக்களிற் பலர் தம் தாய் மொழியில் கையொப்ப மிட்வும் அறியாதவராயிருக்கின்றனர். இன்னும் ஆங்கிலங் கற்றோரிற் சிலர் தமிழ்மொழி தெரியா திருத்தல் தங்களுக்குக் கௌரவமென எண்ணுகின்றனர். நிற்க, ஆங்கிலமும் தமிழும் கலந்து கொண்டு, " என்ன சார் ! உங்கள் பிரதர்மகனுக்கு வருகிற சண்டேயன்று மேரியேஜாமே?” என அவலக்ஷணமாய்ப் பேசுவோரும் நம்மில் அநேகருளர்.

 

சுய பாஷா ஞானம் எவ்வளவு குறைவா யிருக்கின்றதோ அவ்வளவுக்கு ராஜ பாஷைகளில் தங்களைச் சமர்த்தர்களென்று சகலரும் நினைப்பார்களென எண்ணிச் சிலர் சுய மொழியை முற்றும் அலக்ஷியஞ் செய்கின்றனர். அத்தகையவர்களுக்குத் தமிழ்ப் புஸ்தகங்களைக் கையால் தீண்டுதல் பாம்பின் புற்றுக்குள் கையை விடுதல் போன்றும், தமிழில் பேசுதல் வேப்பிலைக் கஷாயம் குடித்தல் போன்றும், தமிழ் மொழியைக் கேட்டல் கர்ண கடூரமாயு மிருக் கும். அந்தோ! தேசாபிமானமும் பாஷாபிமானமுமற்ற இவர்கள், ஆங்கிலேயர் முதலிய ஐரோப்பியர்கள் தங்கள் தாய் பாஷைகளை எவ்வளவோ கௌரவமாய்ப் போற்றி வணங்குகிறார்க ளென்பதை அறியார்கள் போலும். தமிழ் வேதமாம் திருக்குறளையும், நாலடியார், நீதி நூல் போன்ற இதர பிரபந்தங்களையும் இவர்கள் ஒரு முறையேனும் புரட்டிப் பார்த்திருப்பின், கவிச்சக்கரவர்த்தி கம்பரின் கற்பனைகளைக் கனவிலேனும் கேட்டிருப்பின், தமிழ் மூதாட்டியாராகிய ஒளவையின் அருமை நூல்களையும், முச் சர்கங்களின் வரலாற்றையும் கொஞ்சமேனும் அறிந்திருப்பின் இங்ஙனம் தமிழ்மொழியை அலக்ஷியஞ் செய்வரோ? செய்யார். செய்யார்.

நிற்க, தமிழின் தற்கால க்ஷண நிலையை நோக்கின் பாஷைப் பற்றுள்ள தமிழரெவரும் வருந்தாம லிருக்க முடியாது. தேசாபிவிருத்திக்குக் காரணம் பாஷாபிவிருத்தியே என்பதைத் தேசத் தலைவர்கள் அடிக்கடி பேசியும் எழுதியும் வரினும் அனுஷ்டானத்தில் காட்டுவோர் அற்பத் தொகையினரே. தமிழ் மக்களே! வள்ளுவர், இளங்கோ வடிகள், கம்பர், புகழேந்தி, ஒட்டக்கூத்தர், காளமேகம், ஒளவை போன்ற பழந் தமிழ்ப் பேரறிஞர்களைப்பற்றிக் கொஞ்சம் சிந்தியுங்கள். உங்கள் மனதில் ஆவேச மெழவில்லையா? எழுமின்; விழிமின்; கருதிய கருமம் கைகூடும் வரை உழைமின்; உழைமின் என்ற விவேகானந்தரின் வீரமொழிகள் உங்கள் செவியில் விழவில்லையா? தமிழபிமான மின்மையெனும் தூக்கத்தினின்றும் எழுந்திருங்கள். தமிழின் அபிவிருத்திக்காக உடல், பொருள், ஆவி மூன்றையும் ஒருங்கே தத்தஞ் செய்து உண்மையாய் உழைக்க முன்வாருங்கள்.

 

தமிழின் பண்டை மாண்புகளைப் பற்றி இன்னும் எவ்வளவோ பகாலாம். பயனென்ன? சுமார் 900 வருடங்களுக்கு முன் தோன்றிய மலையாள பாஷையானது சென்ற 15 வருட காலத்திற்குள் பாஷாபிமானிகளின் குன்றா ஊக்கத்தால் எவ்வளவோ தூரம் விருத்தியாகி யிருக்கின்றது. ந்திரர்கள் தெலுங்கின் அபிவிருத்திக்காக எவ்வளவோ பாடுபட்டார்கள் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பண்டித வீரேசலிங்கம் பந்துலு தெலுங்கின் முன்னேற்றத்திற்காக எத்தனையோ நூல்களை யெழுதி வெளியிட்டுளார். இன்னும் வங்க பாஷையின் விருத்தியோ அதிகம்.

 

நந் தமிழ் மொழியானது பண்டைப் பொலிவைப் பெற்றுப் பிரகாசிக்கவேண்டுமாயின் தமிழ் நாட்டில் பல தமிழ்த் தொண்டர்கள் தோன்றல் வேண்டும். தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு குக்கிராமத்திலும் தமிழ்ச் சங்கங்களும், வாசக சாலைகளும் ஏற்படுத்தல் வேண்டும். தவிர, நாட்டிற்கு நலஞ் செய்யும் புத்தகங்களையும், வர்த்தமானப் பத்திரிகைகளையும் வாங்கி ஆதரிப்பதுடன், தனவந்தர்கள் நாடெங்கும் பல தமிழ்க் கலாசாலைகளையும் பாடசாலைகளையும் இலவசமாகத் திறக்க முன்வரல் வேண்டும். இன்னும் பல பாடப் புத்தகங்கள் எழுதப் பெறுவதுடன் தமிழில் பல சொற்பொழிவுகள் நிகழ்த்தப்படுதல் வேண்டும். ஆரம்பாசிரியர்களும் மற்ற ஆசிரியர்களும் அதிக ஊக்கத்தோடு உழைக்கும் வண்ணம் அவர்களுக்குத் தகுந்த சம்பளம் தர முயலவேண்டும். நிற்க, அன்னிய மொழிகளிலிருந்து அநேக நூல்கள் தமிழில் மொழி பெயர்க்கப் பெறல் வேண்டும். நம் பெருமை வாய்ந்த நூல்களையும் பிறமொழிகளில் மொழிபெயர்க்க ஏற்பாடு செய்வதுடன், தமிழில் புதிதாய் அருமையான நூல்கள் எழுதுவோருக்குத் தக்க ஆதரவளித்தல் வேண்டும். பூத பௌதிக சாஸ்திரங்களைப் பற்றித் தமிழில் முதனூல்கள் எழுதப் பெறுவதுடன், மிடியால் வருந்தும் தமிழ்ப் பண்டிதர்களுக்கு ஒவ்வொரு தமிழரும் தம்மால் கூடிய உதவியைச் செய்தல் வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ்ச் சர்வ கலாசாலை யொன்று ஸ்தாபிக்கவேண்டு மென்பதாகத் தமிழ்நாடு முழுதும் தீவிரமான கிளர்ச்சி செய்வதுடன், தமிழர் இயக்கம் ஸ்தாபித்து சகல துறைகளிலும் தீவிரமாக வினையாற்றுதற்கு எல்லாத் தமிழ் மக்களும் உடனே முன்வரல் வேண்டும்.

 

தமிழர்களே! உற்சாகமெனும் தைலமின்றி மங்கிக் கிடக்கும் நம்பாஷாபிமான மெனும் சுடரை, ஊக்கமெனுந் தூண்டுகோலால் தூண்டிவிட்டுத் தமிழ் மொழியை வளர்க்க முன் வருவோமாக.


 “வாழ்க தமிழ் மொழி வாழ்க தமிழ் மொழி
 வாழ்க தமிழ் மொழியே
 எங்கள் தமிழ் மொழி எங்கள் தமிழ் மொழி
 என்றென்றும் வாழியவே
 வான மளந்த தனைத்து மளந்திடு
 வண் மொழி வாழியவே.”                              - பாரதியார்.

 

ஆசிரியர் சுருளியாண்டி கௌட

 

ஆனந்த போதினி – 1928 ௵ - டிசம்பர் ௴

 

No comments:

Post a Comment