Wednesday, September 2, 2020

 

தமிழ்க் குற்றங் களைதல்

 

ஒவ்வொரு தேசமும் சிறப்படைவதற்கு அந்த அந்த நாடுகளில்வழங்கி வரும் மொழியே முக்கிய கருவியாம். ஆதலின், ஒவ்வொரு நாட்டினரும் தம்தம் மொழிகளை நல்லவிதத்தில் வளர்க்கக்கடன்மைப்பட் டிருக்கிறார்கள். அங்ஙனம் சொந்த மொழியைப்போற்றும் நாடுகளே இக்காலத்தில் மேம்பாடுற்று விளங்குகின்றன. ஐரோப்பா, அமெரிக்கா முதலிய நாடுகளில் சுயமொழிவளர்ச்சிக்குரிய காரியங்கள் மிகுதியும் செய்யப்பட்டு வருகின்றன. அவர்களால் அச்சிடப்படும் புத்தகங்களிலோ, துண்டுப் பிரசுரங்களிலோ பிழைகள் நேராதபடி மிக்க கவனத்துடன் வேலைகள் நடத்தப்படுகின்றன. வெளியீடுகள் ஒவ்வொன்றும் கல்வி யறிவுடையவர்களால் நன்கு பார்வையிடப்படுகின்றன. கையெழுத்தால் வெளிவருவனவும் கல்விமான்களாலேயே பிழையற எழுதப்படுகின்றன. முஸ்லிம்களுக்குள் அரபு மொழியானது மிகுந்த இலக்கணக் கட்டுப்பாட்டுடன் அமைந்திருக்கின்றது. அதனைப் படிப்பவர்களும் பிழையின்றிச் சுத்தமாகப் படிக்கிறார்கள்; எழுதுகிறவர்களும் ஓர் எழுத்தேனும் மாறுபட்டு விடாமல் மிக்க கவனத்துடன் எழுதுகிறார்கள். அச்சிடுகிறவர்களும், ஒரு முற்றுப்புள்ளி கூட விடாமல் நல்லவிதத்தில் அச்சிட்டு வெளியிடுகிறார்கள். இங்கனம் இவர்கள் செய்து வருவதனால், இவர்களுடைய மொழிகள்சிறப்படைவதோடு இவர்களுடைய நாடுகளும் கீர்த்தியடைகின்றன; இவர்களும் புகழ்ச்சிக்குரியவராகின்றார்கள்.

 

புறநாட்டு மொழிகளின் வளர்ச்சியும், சிறப்பும் இங்ஙனமிருந்தும், எல்லா மொழிகளினும் இனிமையும், தலைமையும், இலக்கணவரம்பும் பெற்று விளங்கி வந்த நம் செந்தமிழின்நிலை, கற்றார்மனம் பெரிதும் புண்படக்கூடியதாக இருந்து வருகின்றது. அச்சுச்சாதனங்கள் இல்லாமலிருந்த பண்டைக்காலத்திலாவது தமிழ்மொழியானது மிகுந்த பிழைகளுக்குள்ளாகாம லிருந்து வந்தது. அப்போது மொழியைக் கையால் சுவடியில் எழுதும் வழக்கமேயிருந்த படியால் சிலரே நூல்களை எழுதி வைக்கக்கூடியவர்களாயிருந்தார்கள். அவர்களுட் பெரும்பான்மையோர் பிழையின்றியே எழுதி வைத்து வந்தார்கள். சிறுபான்மையோர் பிழையுடன் எழுதக்கூடியவர்களா யிருந்தாலும் அக்கையெழுத்துப் பிரதிகள் அதிகமாகப் பரவ ஏதுவில்லாமலிருந்தது. அதனால் பிழைபட்ட தமிழ் எங்கும் பரவாமலிருந்தது. கற்றோரால் எழுதப்பட்ட நற்றமிழே பெரும்பான்மையோரால் படிக்கப்பட்டு வந்தது. செய்யுளாலும் நடையாலும் அமைந்த நூல்கள் பெரும்பான்மையும் பிழையற்றனவாகவே யிருந்து வந்தன. படிப்பில் குறைந்தவர்களும் ஏதேனு மெழுதினால் அதை, கல்வியிற் பெரியாராகிய புலவரிடத்தில் காட்டிப் பிழைகளைந்து வெளியிட்டு வந்தார்கள். பிழை களைதற் பொருட்டே அக்காலத்தில், பலராலும் இயற்றப்பட்ட நூல்களை அவரவர்களும் பல புலவர் கூடும் சபைகளில் அரங்கேற்றி அவர்களிடம் தகவுரைச் செய்யுட்கள் வாங்கி வெளியிடும் வழக்கம் ஏற்பட்டிருந்தது. இராஜசமுகத்திலும் காட்டி வெளியிடும் வழக்கமும் உண்டாயிருந்தது.
 

இக்காலத்திலோ அத்தகைய வழக்கங்களெல்லாம் பெரும் பான்மையும் ஒழிந்து போயின. மொழியைப் பற்றிய எந்த வெளியீடுகளையும் விரைவில் வெளியிட்டு எங்கும் பரப்பி விடக்கூடிய அச்சுச்சாதனங்கள் மிகுதியும் உண்டாயிருக்கின்றன. அவற்றால் கல்வியுள்ளார், இல்லார் ஆகிய எல்லோருமே எதையும் எளிதில் வெளியிட்டு வருகின்றார்கள். இக்காலத்தில் முறைப்படி கல்வி கற்றார்சிலரே; அவர்களால் மொழிவளர்ச்சிக்குச் செய்யப்பட்டு வரும் வேலைகளும் சிலவே. இத்தகைய கல்விமான்களால் பள்ளிக்கூடத்து மாணவர்களின் பாடமுறைக்காகவும், மற்றையர் படித்தற் பொருட்டும் வெளியிடப்பட்டுவரும் நூல் வெளியீடுகளும், பத்திரிகைகளும், துண்டு வெளியீடுகளும் பிழையற்றனவா யிருக்கின்றன. எனினும், எண்ணிக்கையில் மிகைப்பட்ட மனிதர்களையுடைய நம்தமிழ்நாட்டில், இத்தகைய கல்விமான்களின் கூட்டமும், இவர்களின் பிழையற்ற வெளியீடுகளும் மிகக் குறைந்திருப்பதால், இவர்களும், இவர்களுடைய மொழியுழைப்பு வேலைத்திறங்களும் இருக்கின்ற தன்மை மிகுதியும் விளங்கவேயில்லை. சமுத்திரத்தில் பெருங்காயம் கரைத்தது போன்றுளது. இலக்கணவரம்போடு கூடிய கல்வி கல்லாமல், பிழைப்பட்ட கல்விகற்றவர்களின் கூட்டமே எங்கும் மலிந்திருக்கின்றது. அவர்களுள் ஒரு பகுதியார் கல்வித்துறையிற்பு காமல், வியாபாரம் முதலிய வெவ்வேறு துறைகளுட் புகுந்து கடிதமெழுதுதல், கணக்கு வரைதல் முதலியவற்றைப் பிழைப்பட்ட தமிழில் செய்து வருகின்றார்கள். அவை அந்தப் பகுதியினர்க்குள்ளாகவே வழங்கி வருவதால் அப்பிழைகளைக் காண்பாரும் வெறுப்பாருமில்லை. அவை கல்வியறிவாளர் சிலருடைய கண்களிற்பட்ட போது மாத்திரம் அவர்கள் தமிழின் எழில் கெட்டு நிற்பதைப் பற்றி வருந்துகிறார்கள். மற்றொரு பகுதியினரோ, தாங்கள் கல்வி நிரம்புதலில்லாதவர்களா யிருந்தும், பிழையின்றித் தமிழை எழுதும் ஆற்றலற்றவர்களாயிருந்தும், தங்களுடைய நிலைமையைச் சிறிதும் உணராமல், தங்களைத் தாங்களே நல்ல கல்வித் தேர்ச்சியுடையவர்களாக நினைத்துக் கொண்டு, செய்யுட்களிலும், நடையிலும் நூற்களை இயற்றி அச்சிட்டு வெளியிடுகின்றனர்; நூற்களுக்கு உரையெழுதியும் வெளிப்படுத்துகின்றனர்; பத்திரிகைகளும் நடத்துகின்றனர்; துண்டுப் பத்திரங்களையும் வெளியிடுகின்றனர். அவற்றில் மலிந்து கிடக்கும் பிழைகளோ எண்ணத் தொலையாதன: - செய்யுட்களோ யாப்பிலக்கணப் பொருத்தம் சிறிது மின்றி எதுகைமோனை யின்றியும், பொருட் பொருத்தமின்றியும், வாக்கியத் தொடர்கள் ஒன்றுக் கொன்று சம்பந்தமின்றியும், ஒவ்வொரு வார்த்தைக்கும் அமைய வேண்டிய எழுத்துக்கள் அமையாமலும் பைத்தியம் பிடித்தவன் உளறினவைகளைப் போன்றிருக்கின்றன; நடைகளோ எழுவாயின்றியும், அஃறிணை முடிபு வரவேண்டிய விடத்து உயர்திணை முடிபுவந்தும், உயர்திணை முடிபு வரவேண்டியவிடத்து அஃறிணை முடிபுவந்தும், செய்வினை முடிபு செயப்பாட்டு வினையில் முடிந்தும், பொருள் விளங்காமலும் மதுவுண்டு வெறியேறியவன் பிதற்றியவைகளைப் போன்றிருக்கின்றன. சிலர், 'இது செய்யப்பட்டது' என்று செயப்படுபொருள் எழுவாயாக நின்று செயப்பாட்டு வினையில் முடிய வேண்டியதை, 'இதைச் செய்யப்பட்டது' என்று செயப்படு பொருளில் இரண்டனுருபுவிரித்து, அதனை இரண்டாம் வேற்றுமை விரியாக்கிச் செயப்பாட்டு வினையோடு கூட்டி முடிக்கின்றனர். இஃதாவது சற்று நுட்டமான இலக்கணசம்பந்தம்; எளிதான இடங்களிலும் அவர்கள் மிகுந்த பிழைகளைப் புகுத்தியெழுதுகின்றனர். அன்னத்தை அண்ணமென்றும், கரும்பைக் கறும்பென்றும், ஆறு என்னும் எண்ணை ஆரு என்றும், அழுதான் என்பதை அளுதான் அல்லது அலுதான் என்றும், இலையென்பதை இளையென்றும், மறந்தான் என்பதை மரந்தான் என்றும், துரத்தினான் என்பதைத் துறத்தினான் என்றும், வாழையென்பதை வாளையென்றும், எண்ணெய் என்பதை என்னை என்றும் இன்னும் எண்ணத் தொலையாத பிழைகளாகவும் எழுதுகின்றனர். இப்படி எழுதிவிட்டுச் சிலர், 'இப்படிப் பிழையாக எழுதலாமா?' என்று கேட்டால் எழுத்து நடையில் சங்கதிதான் தெரியவேண்டும்; தமிழ் எப்படியிருந்தாலும் அதைப்பற்றிப் பாதகமில்லை'யென்று சமாதானங்கூறுகின்றனர். அது அதற்கு உரிய எழுத்துக்களுடனும் இலக்கணப் பொருத்தத்துடனும் அமைந்த வார்த்தைகளே தாங்கள் விளக்க வேண்டிய பொருள்களை ஐயமற விளக்கிக்காட்டுமென்பதையும், அவற்றில் ஓர் எழுத்துப் பிழைப்பட்டாலும் பொருள் வேறு பட்டுப்போமென்பதையும் இவர்கள் உணர்வதில்லை. 'தாம்' என்றபதத்தில் தகரத்துக்குப் பதிலாக நகரம் வந்து விடுமேயானால் அது, 'நாம்' என்று ஆகிப் பொருளைக் கெடுத்து எவ்வளவோ மயக்கத்தை உண்டாக்கி விடுகிறது. இஃதிவர்களின் புத்தியிற் சிறிதும் படவில்லை. இந்த அபிப்பிராயம் இவர்களுடைய உள்ளத்திற் படிந்திருப்பதால் இவர்கள் வழுமயமாகத் தங்களால் எழுதப்படுகின்றவைகளைச் சிறந்த தமிழ்ப்புலவர்களிடம் காட்டித் திருத்திக் கொள்வதுமில்லை; அவர்களைக் கல்விமான்களென மதிப்பதுமில்லை. இப்படி இவர்கள் செய்து வருவதினாலும், மணிக்குப் பல்லாயிரக்கணக்கான காப்பிகளை அடித்து விடக்கூடிய எந்திரங்கள் மலிந்து கிடப்பதாலும், இவர்களால் பிழைப்பட்ட தமிழே நாடோறும் அச்சிடப்பட்டு எங்கும் பரப்பப்பட்டு வருகின்றது; வழுமிகுந்த தமிழே வலிமிகுந்து மலிந்து வருகின்றது.

 

அந்தோ! இவ்வாறு தமிழின் எழில் கெட்டு வந்தும் இதிற்சிந்தை செலுத்துவா ரெவருமில்லை. எழுத்துப்பிழை, இலக்கணப்பிழை முதலியன இல்லாமலாவது தமிழை வழங்கச் செய்வதில் முயல்வதை விடுத்துச் சில கல்விமான்கள் வேறு ஏதேதோ செய்து சண்டை சச்சரவுகளை யுண்டாக்கிக்கொண்டு தமிழ் மொழிக்கு மிகுதியும் பாடுபடுவதாகத் தற்பெருமை பேசி வருகின்றனர். சிலர், மேற்கூறிய பகுப்பினரால் தமிழுக்கு நேர்ந்து வரும் இழுக்குகளை எவ்விதத்திலும் நீக்குதல் முடியாதென்கின்றனர்.

 

இவையெல்லாம் பயன் தரும் கொள்கைகளும், அபிப்பிராயங்களுமல்ல. அறிஞர் முயன்றால், தமிழைப் பெரும்பாலாரும் பிழையின்றி யெழுதி வெளியிடுமாறு எளிதிற் செய்து விடலாம். இப்பொழுது அச்சுக்காப்பிகளாலேயே வழுப்பட்ட தமிழ் வழங்கி வருவதால், அச்சுக்கூடத் தலைவர்கள் சில ஒழுங்குகளைக் கடைப்பிடித்து நடப்பார்களானால் தமிழ்க்குற்றத்தை எளிதாகக் களைந்து விடலாம். எத்தனையோ தமிழ்ப்புலவர்கள் முறைப்படி கல்வி கற்றும் பிழைப்புக்கு வழியின்றிப் பெருமூச்சுவிட்டுக் கொண்டு திரிகின்றனர். இவர்களுள் ஒவ்வொருவரை ஒவ்வொரு அச்சுக்கூடத்தலைவரும் சம்பளத்துக்கு நியமித்துத் தங்கள் ஆபீசில் வெளியாகும் ஒவ்வொரு வெளியீட்டையும் பார்த்துக் குற்றங்களையும்படி செய்தல் வேண்டும்; இக்காலத்தில் சில அச்சுக்கூடத் தலைவர்கள், பிழைதிருத்தும் புலவர்க்குக் கூலி கொடுக்க வயிறெரிந்து அச்சுக் கோப்போர் பிழையாக அடுக்குகிறபடி வெளியீடுகளை அச்சிட்டு வரும் கெட்ட வழக்கத்தை அடியோ டொழித்துவிட வேண்டும். வித்தியா இலாக்காத் தலைவர்களும் இவற்றைச் செய்யும்படி அச்சுக்கூடத் தலைவர்களை வற்புறுத்த வேண்டும். இவற்றைச் செய்தால், தமிழானது, குற்றங்களையப் பட்டு நல்ல இலக்கணப் பொருத்தத்தோடு ஏன் வெளிவரமாட்டாது? இத்தகைய ஏற்பாடுகளால் தமிழ் நிச்சயமாகச் சீர்திருத்தமடைந்துவிடும். கல்விமான்களாய்ப் பெரிய பதவியிலிருக்கும் புத்திமான்களால் தமிழ் என்னும் இந்த உயர்ந்தகலை கவனிக்கப்படாமலிருப்பதே அதற்குப் பெருங்குறை.

 

ஆதலின், இனியேனும் பெரியோர்கள் மேற்கூறிய முறைகளைக்கொண்டோ, தங்களுக்குத் தோன்றும் வேறு வழிகளைக்கொண்டோ தமிழ்க் குற்றங்களைய முன் வருவார்களென நம்புகிறோம்; நம் விருப்பினை அடியார்க் கெளியனாகிய இறைவன் நிறை வேற்றிவைப்பானாக.


ஓம் தத்
த்.

 

ஆனந்த போதினி – 1928 ௵ - மார்ச்சு ௴

 

 

 

 

No comments:

Post a Comment