Wednesday, September 2, 2020

 

தமிழ்நாடு கண் திறக்கிறது

(பண்டித-பூ. ஸ்ரீதிவாசன்.)

உயர்ந்தது தாழ்வதும் தாழ்ந்த துயர்வதும், என்றும் ஒரு படித்தா யிராது சுழன்று சுழன்றோடும் வாழ்க்கைச் சகடத்தின் இயல்பு. இஃது எதற்கும் விதிவிலக்களிப்பதில்லை.
நந்தாய்நாடு மாத்திரம் இவ்வி திக்கு விலக்காகுமோ?

ஓர் காலத்தே அறிவு, ஆற்றல், கல்வி, செல்வம் இவையிற்றில் காண்போர் அழுக்காறு கொள்ளுமாறு மிக்க உயர்நிலை யுற்றிருந்த இப்பாரதநாடு, இதுபோது அடைந்துள்ள நிலைமை? பெரும் வீழ்ச்சி யுற்றது. பிறர் - சில்லாண்டுகட்கு முன்
வரை இழிநிலை யெய்தியிருந்து, அண்மையில் தமது அரும்பெருமுயற்சியால்-இடைவிடா உழைப்பால்- ஒப்புயர்வற்று ஒளிரும் வேறு நாட்டினர் - எள்ளி நகையாடுமாறு தாழ்ச்சி பெற்றது. அதன் செல்வம் சிதைந்தது; வளங்கள் அனைத்தும் வறண்டன; கல்வியின் ஆக்கம் அழிவுற்றது; அறிவியற் கூறுகள் அருகின; கலைகள் நிலை குலைந்தன; ஒற்றுமை நலிந்தது; வேற்றுமை மலிந்தது; பசியும் பட்டினியும் தாண்டவமாடத் தொடங்கின;

"நாடென்ப நாடா வளத்தன; நாடல்ல

நாட வளந்தரும் நாடு.''

"உறுபசியும், ஓவாப் பிணியும், செறுபகையும்

சேரா தியல்வது நாடு.''

என்னும் நாட்டி னியல்புக ளனைத்தும் ஏட்டுச்சுரைக்கா யாயின; அடிமை யுணர்ச்சி மக்கள் உள்ளத்தில் அகற்றற் கியலாவண்ணம் ஆழ வேரூன்றியது.

இவ்வீழ்ச்சிக்குக் காரணம் யாது? பலர் பலவாறு கூறுப. ‘வகுப்பு வேற்றுமைகளும் சமயப்பூசல்களுமே' என்பர் ஒரு சாரார். ‘பொருளற்ற மூடப்பழக்க வழக்கங்களிலும் சமயச் சடங்குகளிலும் கருத்தூன்றியதே காரணமாம்' என்பர் மற்றொரு சாரார். 'உடல் பொய், உலகம் பொய்' என்னும் வெறுப்பு வேதாந்தம் – போலி வேதாந்தம் பரவியதே காரணம்' எனக் கழறுவர் மற்றொரு பகுப்பினர். 'தன்னலப் பெருக்கும் புல்லுருவிகளின் போக்குமே' எனச் சாற்றுவர் பிறிதொரு பிரிவினர். இக்கூற்றுக்கள் அனைத்தினும் உண்மை யுண்டு என்பதும் மறுக்க முடியாததாகும். பொதுக் காரணம் எதுவாயினு மாக. அது பற்றிய ஆராய்ச்சி ஈண்டு வேண்டற் பால தன்று. எனினும், சிறப்பாகத் தென்னாட்டை-தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் தமிழர் தமிழையும் தமிழறிஞரையும் போற்றாது ஒழிந்ததே தலையாய காரண மென்பதே எனது கருத்து. பண்டை நூற் பயிற்சி குன்றியமையின், தமிழ் நாட்டின் பண்டைச் சிறப்பையும், தமிழ்ப்பெரு மக்களின்-பாலாரின்-கல்வி, கலைப் பெருக்கு, அறிவு மேம்பாடு, வள்ளன்மை, கற்பின் மாண்பு முதலியவற்றையும் அறியும் அறிவு குன்றியது. 'தன் பெருமை தானறியாத் தத்துவனை'ப் போன்றனர் தமிழ் மக்கள். அரசியல் மாறுபாடுகளும் இடையில் புகுந்தன. மொழியியல் தொழிலியல்களோடு அரசியல் சமயவியல் முதலிய பல்வேறு துறைகளினும் தமிழர் பிற்போக்குடைய பராபினர், மேனுட்டினரின் நடையுடை பாவனைகளாகிய புதிய நாகரீகப்படு குழியில் கண்ணொளி மழுங்கிப் பட்டனர். பிற மொழிப் பித்தந் தலைக்கேறியது. பெயரளவில் தமிழரென நின்று பிறவாற்றால் பரதேசிக ளாயினர். பாரதத்தாயின்-தமிழன்னையின்-வீழ்ச்சிக்கு வேறென்ன காரணங்கள் வேண்டும்? எனினும், இந்தியத் தாய் திக்கற்றவளாக ஆப் விட வில்லை. தன்னைக் கைதூக்கி விட்வல்ல நன் மக்களை-வீரமக்களை-பெறாமலில்லை. தம் தாயின்-அருமைத்தாயின்-இழிதகவை-துயரத்தைக் கண்டு, கவன்று, கண்ணீருகுத்து. 'அன்னையின் துன்பத்தைத் துடைப்பதே-அவட்குப் பணிசெய்து கிடப்பதே-தங்கட'னெனக் கொண்ட அறிவறிந்த பண்புடை மக்கள்-அவள் நோற்ற நோன்பின் பேறாகப் பிறந்த பெருமக்கள் - புறஞ்சுவர் கோலஞ் செய்யா மக்கள் அதற்கெனப் பல்லாற்றானும் தொண்டாற்றுவா ராயினர்.

தமிழ் நாட்டிற்கும் தமிழன்னைக்குந் தொண்டாற்றத் தொடங்கிய அவர்களுள் சிலர், காலநிலைக் கேற்ப யாப்பிலும் உரையிலும் நூல் பல இயற்றியும் நன் மாணவர்க்குக் கற்பித்தும் வரலாயினர். சமய தத்துவத் துறைகளில் உழைக்க எண்ணியோரிற் சிலர், சமயச் சார்பான பாக்களாலும், தத்துவ ஆராய்ச்சிகளாலும், மெய்யன்பையும், மெய்யுணர்வையும் ஊட்டுவாராயினர். இவ்வாறே, பல்லோர் பல்வேறு துறைகளில் தொண்டாற்ற முயன்றனார். இன்னோரன்ன முயற்சிகள் பலவும், அவ்வக்காலத்தே நற்பயன் நல்கின வேனும், பிற்காலத்தே பயனற்றுப் போகத்தக்க நிலைமையை யெய்தத் தொடங்கலாயின.

அடிப்படையான பொருளாதார நிலை சீர்கேட்டைந்துள்ள போது ஏனையவை எங்ஙனம் நிலை பெறும்? அறிவு, அன்பு மெய்யுணர்வுகளின் வளர்ச்சிக்கெனக் கொள்ளப்பட்ட கல்வி முதலியன அந்நோக்கங்களை விட்டு, பொருளாதார நிலைக்கு எங்கி வாடத் தொடங்கின. பிற மொழி மாது ஆக்கம் பெற்றுக் கோலோச்சி வருமிடத்துத் தமிழ்த்தாய்க்கு இடமேது? பத்தி நெறியும் முத்தி நெறியும் வயிற்று நெறிக்கு அலைவோர்க்கு எங்கனம் பயன் தருவனவாகும்? இவ் வுண்மை யுணர்ந்த வேறு சிலர் தொழிற்றுறையின் சீர்ப்பாடே பொருளாதாரச் சீர்ப்பாட்டிற்குத் தக்க மருந்தாமென்று கொண்டு, அத்துறையில் ஊக்கஞ் செலுத்திவரலாயினர். மற்றுஞ் சிலர் அரசியற்றுறையின் முன்னேற்றம் தொழிலியற் முறைக் கின்றியமையாத தென்று கருதி, அத்துறையிற் கண்ணுங் கருத்துஞ் செலுத்திப் பணிபுரிவாராயினர்.

பாரதத்தாயையும் தமிழ்த்தாயையும் பண்டுபோல் அரியணையில் அமர்த்திக் காண வேணவாக் கொண்டு அப்பணிக்கெனவே தம்மை யொப்புக் கொடுத்த தமிழ்ப் பெருமக்கள் தனிப்பட்ட வெவ்வேறு துறைகளில் பேருக்கத்துடன் முயன்று ஆற்றிய உழைப்பால், தமிழ்பாடு அவ்வத்துறைகளில் முன்னேற்றம் எய்தியுள்ள தென்பது மறுக்க முடியாத உண்மை. எனினும், 'எல்லாத் துறைகளின் முன்னேற்றமும் வேண்டற் பாலனவே' யென்
னும் ஒற்றுமையுணர்ச்சி பெரும்பாலோர் உள்ளத்தில் அரும்பிற்றில்லை. அதற்கு மாறாக வேற்றுமையுணர்ச்சியே வேற்றுருவங் கொண்டு எழலாயிற்று, 'சமயத்தாற் பயனில்லை; அதனைத் தகர்த்தெரிதல் வேண்டு' மென்னும் கிளர்ச்சி ஓர்பால் தலை தூக்கியது.
தமிழன்னை பால் கொண்ட அன்புப் பெருக்கு ஆரியமொழி (வடமொழிப் பகையை யுணடாக்கத் தொடங்கியது. 'தென்னாடு-வடநாடு', 'தமிழர் -ஆரியர்' என்னும் வேற்றுமைகள் வீறிட்டெழலாயின.

இவ்வேறு பாடுகளை யகற்றி ஒற்றுமை யுண்டாக்க முயன்றவர்கள் பிற துறையினரால் புறக்கணிக்கப் பட்டனர். சமயப் பற்றுடையோர் பிற துறையினர் கூற்றுக்களை வெறுத்தனர்; செவி சாய்த்திலர். வேறொரு துறையினர் மற்றொரு துறையினரின் அறிவுரைகளை மறுப்பாராயினர். இன்னோரன்ன கருத்து வேற்றுமைகளால் தமிழ் நாட்டின் நிலைமை தாறுமாறாயிற்று.

எல்லாக் கொள்கைகளையும் ஒற்றுமைப் படுத்தி முன்னேற்றப் பாதையில் செலுத்த வல்ல நன்மக்களைப் பெற விழைந்தாள் பாரதத் தாய். நோன்புகள் பல நோற்றாள். ஆங்காங்குப் பல்வேறிடங்களுக்கெனப் பல மக்களை 'ஈன்றளித்தாள். தமிழ் நாட்டிற்கும் எல்லாத் துறைகளினுந் தொண்டாற்றும் திறன், எழுத்தால் மாத்திரமன்று, பேச்சால் மாத்திரமன்று, செயலால் மாத்திரமன்று, எழுத்து பேச்சு செயல் இம்மூன்றாலும், கற்றார் கல்லார் அனைவர் உள்ளத்தையும் கவரும் ஆற்றல், அமைதியே குடிகொண்ட தூய சிந்தை, சினங் காணாத் திருமுகம், யாவர் மாட்டும் உளங் கனிந்தாடும் இன்னுரை, பகைவரையும் நேசிக்கும் பான்மை, மாறுபட்ட கருத்துடையோர் பாலும் நட்புரிமை காட்டி, அவர் தங் கருத்துக்களைப் பொறுமையோடு செவி மடுத்துத் தன் மென்மொழி வாதத்தால் அன்னாரைத் தன் கருத்திற் கிசைவிக்கும் சால்பு, இன்ன பிற பண்புகளை இயல்பாகவே கொண்டுள்ள ஓர் ஆண் மகனை ஈன்றளித்தாள். அம்மகவே தமதரும் பெரும் பணியால், அன்னையின் முன்னைய நிலையை மாற்றிக் களிப்புக் கடலில் ஆழ்த்தி வருபவரும், அறுபதாண்டுகள் கண்டு மணி விழாத் தலைவராக விளங்குபவருமாகிய உயர் திருவாளர் திரு. வி. கலியாணசுந்தரனர்.

பிற பற்றுக்கள் தன் பணிக்கிடையூறாமெனக் கருதியோ, இல்லறத்தும் துறவுண்டென்னும் உயர் வாழ்க்கை நெறியை உலகிற் குணர்த்தவோ அச் செல்வனை, இல்லறத் துறவியாக்கி, ஆற்றும் பணிகள் அனைத்திற்கும் உடனிருந்து உதவ ஓர் உத்தம சகோதரரை யளித்துத் தொண்டின் தலை நிறீஇயினாள் அவ்வன்னை.

தாய்த்தொண்டில் தலைநின்ற தனிப்பெருந் தலைவர் கல்வியியல், அரசியல், சமயவியல், சமூகவியல், தொழிலியல் முதலிய துறைகளிற் புகுந்தாற்றிய வீர தீரச் செயல்களைத் தமிழுலகம் நன்கறியும். காங்கரஸ் மகாசபையில் தலைமைப்பதவி வகித்து
மருந்தினும் இனிய தம் சொற்பொழிவால்-கேட்டார்ப் பிணிக்குந்தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாகிய சொல்லாற்றலால் - துள்ளிப் பாய்ந்து, அடுக்கடுக்காய்ப் பசுமரத்தாணிபோல் கேட்போருளத்திற் பதிந்து, அவர் தம் சிந்தனை யனைத்தையும் சிதைக்கும் சீரிய வீர முழக்கால்-தமிழ்நாட்டை விழித்தெழச்செய்த தனிச்சிறப்பு நம் தலைவர்க்கே யுரிய தாம்.

இருப தாண்டுகளாக இப்பெருந்தகையோடு நெருங்கிப் பழகும் பேறுபெற்றவன் என்ற முறையிற் சில வரையத் துணிகின்றேன்.

எனக்கு நண்பர் உயர் திரு திரு.வி.க. அவர்களுடன் நேர்ந்த பழக்கம் பெரும்பாலும் சமயத்துறையில் வாய்த்ததாகும். திரு. முதலியாரவர்கள் வேதாந்த மகாநாடுகளில் எனது வேண்டுகோளுக் கிணங்கித் தொண்டாற்றுவார்கள். இது கண்ட பழைய சைவ சமய நண்பரிற் சிலர் “இவர் மாயாவாதியாய் விட்டார்" (சிலர் அறியாமையால் வேதாந்த மதம் மாயாவாத மதமென்பர்) எனக் கொண்டு, சைவசமயச் சார்பான கூட்டங்களுக்கு அழைக்கப் பின் வாங்குவராம். என்னே! எல்லாச் சமயமும் ஒன்றே யென்னும் உண்மையை யுணர்த்தி அவற்றை ஒன்றுபடுத்தப் பாடுபடும் இவ்வறிஞரோ அவ்வெறுப்புக்களைக் கண்டு பின்
வாங்குபவர்? ஒரு சமயத்தையேனும் இழித்துக்கூறும் இயல்பினை எக்காலத்தும் இவர்பால் யான் கண்டிலேன். அதற்கு மாறாக எல்லாச் சமயங்களின் உயர்வுகளை எடுத்துக்காட்டிப் புகழ்வதே இவரது இயல்பு. எனினும், தம் மத தத்துவங்களைப் புறக்
கணிப்பவ ரல்லர். எவரேனும் தாக்கிப் பேசுவதைக் கேட்கச் சகியார். கடவுளுண்மை மறுப்பு, நாட்டில் தலை தூக்கிய காலத்து, அஞ்சாநெஞ்சுடன் அதனைத் தாக்கிப் பொருது எதிர்வாதத்தின் வாயடைத்துப் போகுமாறு செய்து அடக்கிய அரியேறென் நண்பர் அவர்களைக் கூறுதல் மிகையாகாது.

எல்லாச் சமயக் கலப்புடைய சமரச சன்மார்க்க சமயமொன்று காண இவர் உள்ளத்துத் துள்ளிப் பாய்ந்து கொண்டிருக்கும் அவர் அளவிடற் கரியது.
நம் முன்னோர்களின் கொள்கைக் ளெல்லாம் மூடக் கொள்கைகளென்னும் புதிய நாகரிகப் பித்தர்களுக்கு, மேனாட்டறிஞரின் ஆராய்ச்சி முடிவுகளோடு முன்னோர் கொள்கைகளையும் இணைத்துக் காட்டி, “மூடக் கொள்கை என்பதே மூடக் கொள்கை" என்பதை வற்புறுத்தி, நம் நாட்டின் பண்டைச் சிறப்பை நிலைநிறுத்தி வரும் பெருமை இப் பெரியார்க்கன்றி வேறெவர்க்கு உரித்தாம்? தென்மொழி-வடமொழிப் போர் மிகுந்துள்ள இக்காலத்தும், "இந்தியக் காவியத்துக்குக்கால் கொண்டவர் எவர் வால்மீகி.
அவரே பழைய இந்தியக் காவியத் தந்தை. அவர் வாயினின்றும் பிறந்த இராமாயணம் காவிய உலகுக்கோர் இலக்கியம்” (இந்தியாவும் விடுதலையும்) என உண்மையை ஒளியா துரைக்கும் அஞ்சா நெஞ்சம் இவர்க்கு இயல்பின் வாய்த்த தாகும். பழக்கக் கொடுமைக் காட்பட்டார் பலர் வெறுக்கினும்; பெண்ணுரிமைக்காகப் பெண்ணின் பெருமை பேசிப் பெண்ணுலகத்தை உயர்த்த உழைக்கும் பெற்றியார் இவரையன்றி மற்றியார்? தமிழ் இலக்கிய இலக்கணக் கடலின் கரைகண்ட இப் பேரறிஞர், அனுபவ ஆராய்ச்சிகளால் அனைவரும் வியக்குமாறு அவற்றிற்குப் பொருள் கூறுந் திறன் எல்லார் மாட்டும் இயைவ தன்று.

கருத்து வேற்றுமைப்பட்டு இவரோடு உடன்பாடுடைய ராகாதார் பலரும், எந்த நேரத்திலும் சுற்றிலு மிருந்து, இவரது அறிவுரைகளால் ஐயம் நீங்கப்பெற்றவர்களாய் நகை முகத்துடன் செல்வதும், எங்குச் செல்லினும், இவர் வரவை அறிந்து, தாயின் வருகை கேட்ட சேய்கள்போல் பல்வேறு துறையினராகிய முதியோரும் வந்து குழுமி, இருக்கும் போதும் நடக்கும்போதும் பல வினாக்கள் விடுப்பதும், அக் குழுவின் நாப்பண் மென்னடை
நடந்துகொண்டே அவரவர்க் கேற்றவாறு இன்மொழிகளால் விடை யிறுத்தல் வாயிலாக ஒற்றுபையுணர்ச்சி சமரசத்தன்மையாகிய விதைகளை இவர் விதைப்பதும், கண்கொளாக் காட்சியாய் விளங்கி, பண்டைச் சமய குரவர்களின் இயல்பினை எனக்குச் சித்திரித்துக் காட்டிக்கொண் டிருக்கும்.

இவ்வாறு நண்பர் திரு.வி. கலியாணசுந்தரனார் தமிழ்நாட்டிற்குச் செய்த-செய்கின்ற பணிகள் எண்ணற்றன; இணையற்றன. விரிவுரைக் கிடமேது?

இப் பெரியாரின் மணிவிழா தமிழ்நாட்டின் அணி விழாவாகும்; திருவிழா வாகும். இவ் விழாவிற் கலந்துகொண்டு நம் பெரியாருக்கு வாழ்த்துக் கூறுவோம். நன்றி கூறுவோம். பெருமை பாடிப் புகழுவோம். அவர் தம் நன்மொழிகளைப் பொன்மொழிகளாகக் கொள்வோம். அவரடிச் சுவட்டைப் பின் பற்றுவோம். இன்னும் நீண்டநாளிருந்து தொண்டாற்ற வன்மையளித் தருளுமாறு இறைவன டிகளை இறைஞ்சுவோம். உடனிருந்துதவும் உத்தம சகோதரர் உயர்திரு. திரு. வி. உலகநாத முதலியாரவர்களும் அவர்களைச் சார்ந்த உறவினரும் நற்பேறுக ளனைத்தும் பெற்று இனி துவாழ ஆண்டவன் அருள் புரிக.

மணிவிழாத் தலைவர் உயர்திரு. திரு.வி. கலியாணசுந்தரஞர் வாழ்க. தமிழ்வாழ்க. தமிழ்நாடு வாழ்க. இந்தியத்தாய் வாழ்க. இந்தியத் தாய்க்குத் தொண்டு பூண்டுழைக்கும் அன்பர்கள் அனைவரும் வாழ்க! வாழ்க!! வாழ்க!!!

இத்தகைய பெரியோர்களின் பெருமையைத் தமிழ்நாடு உணாந்து போற்ற முன்வந்திருப்பது போற்றற்குரிய செயலாகும். பெரியோர்களின் விழாக்களே திருவிழாக்களாம். மற்றவை யெல்லாம் திருவிழா வென்னும் பெயர்க்குரித்தாவன வன்று; தெருவிழாக்களே யாம். சில நாட்களாகக் கம்பர் திருநாள், வள்ளுவர் திருநாள் முதலிய விழாக்களைத் தமிழ்நாடு கொண்டாடி வருதலை நோக்கின், இனி புலவர் திருநாட்கள் பல யாண்டும் கொண்டாடப்பெற்று தமிழ்த்தாயும் தமிழறிஞர்களும் பண்டே போல் வீறுபெற்று விளங்குவார்களென்னும் பெருமகிழ்ச்சி யர்வகள்ளத்தும் மலரும். "தமிழ்நாடு கண் திறக்கின்றது.”

ஆனந்த போதினி – 1943 ௵ - ஆகஸ்டு ௴

 

 

No comments:

Post a Comment