Wednesday, September 2, 2020

 

தமிழ் பெண்களின் வீரம்

 

 தமிழ்ச் சுவை தழைத்தோங்கிய பாவலர் பலர் இயற்கை வளங்களை இன்பச் சுவை சொட்டச் சொட்டப் பாடிய பல நூல்கள் தமிழ் மொழியில் இருப்பதைக் காணுந்தோறும் நம்மனத்தில் உண்டாகும் இன்பத்துக்கு அளவேயில்லை. அவற்றிலிருந்து நாம் நமது பண்டைக்கால பழக்கவழக்கங்களையும், பெருமைகளையும், மக்கள் நாகரிகத்தையும், உள்ளது உள்ளவாறே அறிந்து கொள்ளுகிறோம். நமது பழந் தமிழ் நூல்களில் காணப்படும் சில சிறந்த பெண்மணிகளைப் பற்றி இங்குக் கூறுவோம்.

 

நாடு முன்னேற்ற மடைய வேண்டுமானால் வீடு முன்னேற்ற மடைய வேண்டும். வீடு முன்னேற்ற மடையாவிட்டால் நாடு முன்னேற்றம் அடையாது என்று நிச்சயமாய்க் கூறிவிடலாம். வீடு முன்னேற்ற மடைய வேண்டுமானால் முக்கியமாய் வீட்டில் உள்ள பெண்மக்கள் முன்னேற்ற மடைந்தவர்களாக இருக்கவேண்டும். பெண்மக்கள் முன்னேற்றமடைவதென்றால் என்ன? விதவிதமான நகை, புடவை, ரவிக்கை முதலியவைகளோடு விளங்குவதா? அன்று அன்று. முன்னேற்ற மென்னும் பதத்திற்கே அறிவில் முன்னேற்றம் என்பதே பொருள். ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி அறிவில் முன்னேற்ற மடைந்தவர்களே உண்மையான முன்னேற்ற மடைந்தவர்களாவார்கள். இதுவே முன்னேற்றம் என்பதின் சரியான பொருளாகும். அறிவில் முன்னேற்ற மடைந்தவர்கள் மற்றவைகளில் முன்னேற்றமடைவார்கள் என்பது சொல்லாமலே விளங்கும்.

 

இத்தகைய முன்னேற்றத்தையுடைய மனைவியைக் கொண்ட வீடுவிளக்க மடையும் என்று சொல்லவும் வேண்டுமோ? அப்படிப்பட்ட பல வீடுகளைக் கொண்ட நாடு உயர்ந்து விளங்குமென்பதை யாரே மறுப்பர்! நமது நாடு சீர் பெற வேண்டு மென்று நினைக்கின்றவர்கள் பெண்களை அறிவில் முன்னேற்ற மடையச் செய்ய வேண்டும்.
 

கணவன் எவ்வளவு வல்லவனாயினும் அறிவாளியாயினும் மனைவி அறிவுடையவளாய் இராவிட்டால் குடும்பம் தலையெடுக்கா தென்பது உண்மை. கணவன் சிறிது பகுத்தறி வற்றவனாயினும், மனைவி அறிவுடையவளாயின் குடும்பம் குறைவுறாது என்பது உண்மை. கணவனை விட மனைவிக்குக் குடும்ப முன்னேற்றத்தில் அதிகப் பொறுப்பு இருக்கிறது. பெண்களுக்குக் கல்வி கற்றுக் கொடுப்பது மட்டும் போதாது. அவர்கள் கற்கும் கல்வி அவர்களுடைய பிற்கால வாழ்க்கைக்குப் பயனளிக்கக் கூடியதுதானா வென்று கவனிக்க வேண்டும். ஆர்மோனியம், பிடில், பாட்டு முதலியவைகளை வாழ்க்கையின் பத்தாவது பன்னிரண்டாவது லட்சியங்களாக நினைத்து அறிவின் முன்னேற்றத்தையே வாழ்க்கையின் முதல் லட்சியமாகக் கொண்டு, அம்முன்னேற்றத்தில் தம் பெண்மணிகளை ஒவ்வொரு தாய் தந்தையர்களும் செல்ல விடுவார்களானால் உண்மையில் நமது நாடு முன்னேற்ற மடையும் என்பது திண்ணம்.

 

அறிவில் முன்னேற்ற மடைந்த பெண் ஒழுக்கமும் அமைகியும் சாந்தமும் ஒருங்கே பெற்றிருக்கக் காணலாம். பெண்களை அறிவில் முன்னேற்ற மடையச் செய்யாமல் அவர்களுக்கு எவருங் காணாத மோட்ச நாகங்களைக் கூறி சந்தோஷத்தையோ, பயத்தையோ காட்டித் திருத்தி விடுதல் என்பது நிலையான நன்மையைத் தராதகாரியம். அத்தகைய அஸ்திவாரமில்லாத போதனைகள் பயனற்றவையென்று அறிவாளிகள் முற்றும் அறிந்து விட்டனர்.

 

பண்டைக் காலத்தில் உண்மையான அறிவைப் பெற்றிருந்த நமது நாட்டுத் தாய்மார்கள் மோட்சம், நரகம் என்னும் எண்ணமில்லாமலே கற்பிற் சிதந்த வீரமணிகளாய் விளங்கினர் என்பது எவரும் அறிந்த விஷயமே.

 

முன்னொரு காலத்தில் தமிழ்நாட்டில் வீரனொருவன் இருந்தான். அவன் அரசனுடைய படையில் ஒரு சேனா வீரனா யிருந்தான். அவனுடைய அரசனுக்கும் வேறொரு அரசனுக்கும் பகை ஏற்பட்டுப் போர் மூண்டது. அந்தப் போரில் அந்த வீரன் உயிர் துறந்தான். அந்த வீரனுக்கு ஒரு மனைவியும் ஒரு மகனும் உண்டு. ஆகவே அவனுடைய மனைவிக்கு அவனுடைய மகனைத் தவிர வேறு ஆண்துணையே கிடையாது. வேறு பிள்ளைகள் பிறக்கவும் வழி யில்லாமலிருந்தும் அவள் ''நமது அரசன் இன்னும் யுத்தம் செய்து கொண்டிருக்கிற படியினால் நாம் நம்மாலான உதவியை அவனுக்குச் செய்யவேண்டும்" என்று எண்ணி, தன் சிறு குமாரனுக்குப் போர்க் கோலஞ் செய்து பின்னர் அவனை நோக்கி, "உன் அரசன் வெற்றிபெற நீ அவனுக்காகச் சென்று விரோதிகளை அழித்து வருவாயாக" என்று கூறி அவனை அனுப்பினாள். என்னே இவளுடைய தேசாபிமானம்! இத்தகைய உணர்ச்சி மீண்டும் நமது தாய்மார்களுக்கு வரவேண்டுமானால் நாம் அவர்களை அதற்கேற்ற வழியில் வளர்க்க வேண்டும் அல்லவா?

 

மற்றொரு ஸ்திரீயின் மகன் போர்க்களத்தில் தன்னரசனுக்காகப் பகைவர்களோடு சண்டை செய்து மார்பில் படுகாயம் உண்டு சுத்த வீரனாக உயிர் துறந்தான். அதை அறியாத ஒரு பேதை அவன் தாயிடம் சென்று ''உன் மகன் சண்டைக்கஞ்சி புறமுது காட்டி ஓடி முதுகில் படுகாய மேற்பட்டு உயிர் துறந்தான்'' என்று கூறினாள். அதைக் கேட்டவுடன் இறந்தவனுடைய தாய், 'என்னுடைய மகன் ஆண்மையற்று வீரம் குன்றி என் அரசனுக்கும் என் நாட்டுக்கும் நன்மை செய்யாமலா சண்டைக்கஞ்சி முதுகில் அடிபட்டு இறந்தான்?' என்று கூறி, நான் இப்போதே போர்க்களஞ் சென்று அவனுடைய பிணத்தைப் பார்க்கின்றேன். அவன் முதுகில் காயம்பட்டு இறந்திருப்பானாயின் அவன் பேடியெனத் தீர்மானித்து அவனுக்குப் பால்கொடுத்த என் ஸ்தனங்களை அறுத்தெறிந்து விடுகிறேன்' என்று சொல்லிப் போர்க்களம் சென்று அங்குக் கிடந்த பிணங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்தாள். அங்கே ஒரிடத்தில் தன் மகன் மார்பிலும் முகத்திலும் கணக்கற்ற காயம்பட்டு இறந்து கிடப்பதைக் கண்டாள்; அவன் முதுகில் ஒரு காயமும் இல்லாமல் இருப்பதை உணர்ந்தாள். அப்போது இறந்த தன் மகனை மீண்டும் உயிரோடு கண்டாற்போல் களித்தாள். ''என் மகன் ஒரு வீரனைப் போலவே சண்டை செய்து இறந்திருக்கிறான்'' என்று சொல்லிக் களித்திருந்தாள். இவளைப் பற்றி நாம் எவ்விதமாகத்தான் புகழ்ந்தெழுதக் கூடாது. இத்தகைய பெண்மக்களுக்குப் போதிய அறிவின் முன்னேற்றம் இல்லை என்று எவரேனும் கூற முடியுமா?

 

இத்தகைய வீரப் பெண்மணிகளும், கற்பிற் சிறந்த காரிகைகளும் நமது நாட்டில் முன் காலத்தில் பலர் இருந்தனர். அப்படிப்பட்டவர்கள் முன் காலத்திலிருந்தமைக்குக் காரணம் யாது? அக்காலத்தில் இருந்தவர்கள் தங்கள் பெண்களை அறிவில் முன்னேற்ற மடையச் செய்து வந்தார்கள்; அதனால் அக்காலம் சிறந்திருந்தது. இக்காலத்திய தாய் தந்தையர் தங்கள் அருமைப் பெண்களைப் பெரும்பாலும் சரியான முறையில் வளர்க்கிறார்கள் என்று சொல்ல முடியாது; ஏனெனில் இக்காலத்திய பெரும்பான்மையான தாய், தந்தையர்களுக்குச் சரியான மார்க்கம் இன்னதென்றே தெரியாது என்றே கூறலாம். நாம் இவ்வாறு கூறுவது சிலருக்கு வருத்தமா யிருப்பினும் உண்மையை எழுதாதுவிட நம்மால் முடியவில்லை.

 

உண்மையில் நமது நாடு முன்னேற்றமடைய வேண்டுமானால் நமது பெண்மணிகளை உண்மையான அறிவுத் துறையில் முன்னேற்றமடையச் செய்யுங்கள். வெறுங் கோலாட்டத்தாலும், பின்னல்களாலும் ஆர்மோனியம், பிடில் முதலியவைகளாலும் ஒன்றும் சீர்மை அடைய முடியாது. ஆதலால் உண்மையான அறிவில் பழகினால் முன்னேற்ற மடைய வழியுண்டாகும் என்பதோடு இச்சிறு வியாசத்தை முடித்துக் கொள்ளுகிறேன்.


 "மார்க்கபந்து"

 

ஆனந்த போதினி – 1929 ௵ - நவம்பர் ௴

 

No comments:

Post a Comment