Wednesday, September 2, 2020

 தமிழ்ப்பாஷைச் சிறப்பு

இப்பரதகண்டத்து, நிலைபெறூஉம் பற்பல பாஷைகளுள் ஆரியம் தமிழ் எனு மிரண்டுமே பூர்வீக பாஷைகளாம். இவை யிரண்டும் கடவுளிடத்தே உதித்தன வென்று இதிகாச புராணங்கள் கூறுகின்றன. இவை எக்காலத்தில் உற்பத்தியாயின வென்று உறுதியாய்க் கூறுதல் எவர்க்குமியலாது. இவை உற்பத்தியான காலம் எதுவென்று ஆராயப் புகுந்தோரும், ஒருவாறு காலவரையறை யிட்டோரும் உத்தேசமாய்க் கூறிப்போந்தனரே யன்றி உண்மை கண்டவரல்லர். இவற்றின் உற்பத்தியை ஆராயப் புகுந்த பிற்கால ஆசிரியர்களும் அதைக் கடவுளுக்கே சமர்ப்பிக்கின்றனர். யாதேனுமோர் பாஷையைக் கடவுளே உண்டாக்கினாரென்பது ஒருபோதும் ஒப்புக் கொள்ளப்படத் தக்கதல்ல. இவ்வுலகின் கண்ணே பற்பல பாஷைகள் நிலவுகின்றன. அவற்றுள் இவையிரண்டையும் மாக்திரம் கடவுள் சிருஷ்டித் திருப்பாராயின் மற்றைய பாஷைகளைச் சிருஷ்டித்தவர் யாவர்? மற்றைய பாஷைகளையும் கடவுளே சிருஷ்டித்தாரெனின் இவ்விரண்டையும் மாத்திரம் அருளினரென விசேடித்துக் கூறுவதின் பயன் யாது? அன்றி, மற்றப் பாஷைகளை வேறு கடவுள் கிருஷ்டித்தாரெனின், கடவுள் ஒருவரா அன்றிப் பலரா? இவ்வாறு தந்தருளினார் எனும் கூற்றை ஆராயப்புகின் அஃது நகைப்புக் கிடமாகும். ஆதலின் அவை இயற்கையாய் மனித சமூதாயத்தின் கூட்டுறவால் ஏற்பட்டவை யென்பதே பொருத்த முடையதாகும்.

 

தமிழ்ப் பாஷையைத் தந்தருளியவர் அகத்தியர் என்னுமோர் முனிவரென்றும் அவரே தமிழின் விருத்திக்குக் காரணமென்றும் சிலர் கூறுவதுண்டு. சமஸ்கிருதத்துக்குப் பாணினி போலத் தமிழுக்கு ஆதியில் இலக்கணஞ் செய்தவர் அகத்தியரேயன்றி அதை உண்டு பண்ணினவர் அகத்தியரல்லர். யாரேனு மொருவர் ஒரு பாஷையையேனும் பல பாஷைகளையேனும் இயற்றினாரெனல் பாஷாதத்துவ நூன் முடிவுகட்கு முற்றும் முரணேயாம். மேலும் அவர் தமிழ்ப் பாஷா கர்த்தாவாயின் முதலில் அப்பாஷையை எளிதிற் கற்பதற் குபயோகமான சிறிய பாட புத்தகங்களை எழுதி யிருத்தல் வேண்டும். அங்ஙனம் அவர் செய்திருப்பதாகத் தோன்றவில்லை. அவர் எழுதிய முதல் நூல் அகத்தியம் என்று மாத்திரம் கூறப்படுகிறது.

 

இலக்கணம் என்பது ஒரு பாஷையைப் பிழையற எழுதுதற்கும் பேசுதற்கும் கருவியாகிய நூலாம். ஆகையால் அகத்தியம் தமிழ் பாஷையின் பொருட்டு எழுதப்பட்ட நூலாகிறது. இலக்கியத்திற்கு இலக்கணமே தவிர இலக்கணத்திற்கு இலக்கியம் ஏற்பட்டதல்ல. " இலக்கியக் கண்டதற் கிலக்கண மியம்பல்” என்று பவணந்தியும் கூறிப் போந்தனர். ஆதலின் அகத்தியருக்கு முன்னும் தமிழ்ப் பாஷை நிலவிற்றென்பது தெற்றெனப் புலப்படுகின்றது. அப்படியாயின் அவர் தமிழ்ப் பாஷையை அருளிச் செய்தாரென்று எங்ஙனம் போதரும். இவ்வண்ணம் நாம் தமிழ்ப் பாஷையின் உற்பத்தியை யெடுத்தாராயும் போது அது இயற்கையாய் உற்பத்தியாயிற்றென்னும் முடிவையே நாமடைவோம்.

 

தமிழும் ஆரியமும் சமத்துவமுடையனவாகும். அஃது, வடமொழி தென் மொழி என்னுமிரண்டையும் முற்றக் கற்றுணர்ந்த சிவஞான யோகீஸ்வரர்,


“இருமொழிக்கும் கண்ணுதலார் முதற்குரவ ரியல் வாய்ப்ப
இருமொழியும் வழிப்படுத்தார் முனிவேந்த ரிசைபாப்பும்
இருமொழியும் தழீஇயினார் ஆன்றவரே யென்றாலிவ்
விருமொழியும் நிகரென்னு மிதற்கைய முளதேயோ''


என்று கூறியதனால் தெளியக் கிடக்கின்றது. இவை தம்முள் ஆரியம் வேதாகம அதிகாரத்தானும் உச்சாரண வன்மையானும் மந்திரோப தேசப்பயிற்சியானும் ஆண் இலட்சணம் அமையப் பெற்றது. தமிழோ தனக்கிணையிலாப் பாஷை அல்லது இனிய மொழி எனப் பொருள் படுதலின் ஆரியத்தினும் சிறப்புடையதெனப் பொருள் படுதலானும், கன்னடம், தெலுங்கு, மலையாளம் துளுவு முதலிய மகப்பேறுடைமையானும், தன்னினிய வோசையாலும் மிருதுத் தன்மையானும் தேவார திருவாசக வசீகரணத்தானும் பெண் இலட்சணம் அமையப் பெற்றது. ஆரியம் வடதிசைக்கண் நிலவி வடமொழியெனப் பெயர் பெற்று நைமிசாரணிய ரிஷீஸ்வார் கோட்டத்தாலும் பின்னர் வேதிய வித்தகர்களாலும் பரிபாலிக்கப்பட்டுச் சிறப்புற்றும் ஈற்றில் உலகவழக்கின்றி இறந்தொழிந்தது. தமிழணங்கோ தென்றிசையின் கண்ணேநிலவித் தென் மொழியெனப் பெயர் பெற்று, மங்கைப் பருவமெய்தி, என்றும் இளமைப் பருவமடைந்து, தேவாமிர்தமோ வென்று ஐயுறுமாறு இனிமை பயந்து, ஆரியம் போல் உலக வழக்கழிந்து சிதையாது இன்றும் பூரணச் சந்திரன் போல் விளங்குகின்றது. மனோன்மணியம் என்னும் நாடக நூலுக்குசிரியரான திருவனந்தபுரம் வித்துவான் சுந்தரம்பிள்ளை யவர்களும் தமது நூலின் கண் தமிழ்த் தெய்வ வணக்கம் கூறுமிடத்து,


 ''நீராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகுஞ்
 சீராரும் வதனமெனத் திகழ்பரத கண்டமிதிற்
 றக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
 தெக்கணமு மதிற்சிறந்த திரவிடநற் றிருநாடும்
 அத்திலக வாசனைபோ லனைத்துலகு மின்பமுற
 எத்திசையும் புகழ்மணக்க விருந்த பெருந் தமிழணங்கே,
 பல்லுயிரும் பல வுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
 எல்லையறு பரம்பொருண்முன் னிருந்தபடி யிருப்பது போல்
 கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையா ளமுந்துளுவும்
 உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்று பல வாயிடினும்
 ஆரியம்போ லுலகவழக் கழிந்தொழிந்து சிதையா வுன்
 சீரிளமைத் திறம் வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே.''
 

என்று தமிழ்பாஷையின் சிறப்பை எடுத்துக் காட்டியுள்ளார்.

தமிழ் என்னும் பதத்துக்கு இனிமை என்பது பொருள்; ஆகவே, அஃது ஆகுபெயராய் அவ் வினிமையை யுடைய சொல்லினை உணர்த்தி நின்றதென்பர் ஒரு சாரார். அங்ஙனமின்றி இமிழ், உமிழ், குமிழ் என ழகரப் பேறு பெற்ற பதங்கள் போலத் தமிழ் என்னும் பதம் தமி என்னும் வினையடியாற் பிறந்த வினை முதற் பொருண்மை யுணர்த்திய விகுதி குன்றி, தனக் கிணையிலாப் பாஷை என்னும் பொருள் கொண்டு நின்ற தென்பர் பிறிதோர் சாரார். அற்றன்று திராவிடம் என்னும் மொழியே தமிழென மருவிற் றென்பர் சிலர். வேறு சிலர் தென்மொழி என்பது தெம்மொழி, தமிழ் என மருவிற் றென்பர். இன்னும் சிலர், முற்காலத்தில் இந்தியாவில் மள்ளர் என்னுமொரு ஜாதியார் இருந்தனரென்றும் அவர்கள் வழங்கின பாஷை மள்ளம் என்றும், அஃது காலகதியில் திரமிளம், தமிழ், திராவிடம் என்றாயிற்றென்றும் இப்படியே பலரும் பலவாறாகக் கூறுவர். அஃதெவ்வாறாயினும் தமிழ் என்னும் பதம் தென்னாட்டு மொழிக்குத் தென் சொல்லாலாயதோா பதமெனக் கொள்ளலே சால்புடைத்து.

 

தமிழ்ப் பாஷை தனிப் பாஷை யன்றென்றும், அஃது சம்ஸ்கிருதத்திலிருந்து உற்பத்தியாயவோர் கிளைப்பாஷை யென்றும் சிலர் கூறுவர். அன்னோர் கூற்று ஒப்புக்கொள்ளக் கூடியதல்ல வென்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. சங்க மருவிய நூல்களாகிய குறள், திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, பழமொழி முதலிய நூல்களிற் காணப்படும் சம்ஸ்கிருத பதங்கள் எத்துணைச் சிறுபான்மைய? தமிழ்ப் பாஷைக்குச் சம்ஸ்கிருதம்தாயாயின் பண்டைக்காலத் தனவாகிய மேற்கூறிய நூல்களில் சம்ஸ்கிருதம் அதிகமாய் விரவியிருத்தல் வேண்டுமே.

 

அங்ஙனம் அதிகமாய் விரவியிருப்பதைக் காண்கிலேம். சில சமஸ்கிருத பதங்கள் தமிழ்ப்பாஷையிற் கலந்து வழங்கி வருவது உண்மையே. ஆதலால் தமிழ் சமஸ்கிருதத்தினின்றும் உற்பத்தியாயிற்றென்று எவ்வாறு கூறலாகும்? தற்காலத்தில் வழங்கும் தமிழ்ப் பாஷையில் ஆங்கிலம் இந்துஸ்தானி தெலுங்கு முதலிய பல்வேறு பாஷைகளிலுள்ள பல பதங்கள் கலந்து வழங்கி வருகின்றன வென்பதை யாருமறிவர். அதனால் தமிழ்ப்பாஷை அப்பாஷைகளிலிருந்து உற்பத்தியாயிற்றென்று கூறி விடலாமா? இது மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடி போடுவதை ஒக்கும்.

 

இன்னும் உற்று நோக்குமிடத்து வடமொழியிலில்லாத புணர்ச்சி இலக் கணங்களும், வினைத்தொகை, குறிப்புவினை முதலிய சொல்லிலக்கணங்களும், பால் விகுதிகளும் ஐந்திணையியல்புகளும், அவற்றின் துறைகளும், வெண்பா கலித்துறை முதலிய செய்யுளிலக்கணங்களும் தமிழ்ப்பாஷைக் குளவாதலாலும், இவை யனைத்தும் பிற்காலத்துத் தோன்றாது முதனூலாகிய பேரகத்தியத்தின் கண்ணே கூறப்பட்டிருத்தலானும் தமிழிலக்கணமும் சமஸ்கிருதவிலக்கணமும் வெவ்வேறென்பது தெள்ளிதிற் புலப்படுகின்றது. தமிழ்மொழியை நன்குணர்ந்த பேரறிஞர்களும் தமிழ் தற்பாஷை என்றே கருதுகின்றனர்.


 வடமொழி தென்மொழி மகோததி பருகிப்
 படிமிசைத் தமிழ்மகா பாடியம் வகுத்துக்
 குசை நுனி யதனினுங் கூரிய மதிபெறீஇத்
 திசையெலாந் தன்பெரு மிசைநெறீஇ உயர்ந்த

சிவஞான யோகீஸ்வரர் நாம் முன்கூறியுள்ள 'பாடலால் இவ்விரு பாஷைகளும் வெவ்வேறென்றும் சமமென்றும் கூறியுள்ளார். பிற்காலத்திலெழுந்த பற்பல தமிழாசிரியர்களும் வித்துவான்களும் தமிழ் இயல்பாகவே சமஸ்கிருதக் கலப்பில்லாதவோர் தனிப்பாஷை யென்று கூறியிருக்கின்றனர். திருவனந்தைச் சுந்தரம்பிள்ளை போன்ற சிலர் தமிழ் தற்பாஷை என்பதோடு மாத்திரம் நின்று விடாது, சமஸ்கிருதம் வருமுன் தமிழ்ப்பாஷையே இந்தியாவில் வழங்கின பூர்வபாஷை யெனக் கூறுவர்.


 "சதுமறையா ரியம் வருமுன் சகமுழுதும் நினதாயின்
 முதுமொழி நீ யாதியென மொழிகுவதும் வியப்பாமே"

 

என்று மேற்கூறிய சுந்தரம்பிள்ளை கூறியதும் காண்க. ஆதலின் தமிழ் சமஸ்கிருதத்தினின்றும் உற்பத்தியானதன் றென்பதற்கு எட்டுணையேனும் சந்தேகமில்லை.

 

தமிழ்ப்பாஷை தனிப்பாஷை யென்னு மபிப்பிராயங் கொண்டு தம் வாணாளெல்லாம் தமிழின் அபிவிருத்திக்காகவே அதிகமாயுழைத்த ஸ்ரீமான் ராவ்பகதூர் சி. வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் அப்பாஷையின் கால வர்த்தமானத்தை எட்டுப் பிரிவாகப் பிரித்திருக்கின்றனர். முதலாவது அபோதகாலம். இஃது தமிழ்ப்பாஷை வரிவடி வில்லாமல் ஒலி வடிவில் மாத்திரம் நின்றகாலம். இரண்டாவது அட்சரகாலம். இஃது அப்பாஷைக்கு அட் சர மேற்பட்ட காலமென்பர். மூன்றாவது இலக்கணகாலம். இஃது அப்பாஷைக்கு இலக்கணங்கள் இயற்றப்பட்டகாலம். முன்பு ஒலிவடிவாயும் பின்னர் வரி வடிவாயும் எழுந்த தமிழ்மாதுக்கு அகத்தியர் தொல்காப்பியர் முதலினோர் அகத்தியம் தொல்காப்பியம் முதலிய விலக்கண நூல்களை இக்காலத்திலியற்றி அவளை அணிபெறச் செய்து மகிழ்ந்தனர். நான்காவது சமுதாய காலம்; இஃது முதல் இடை கடை என்னும் முச்சங்கத்தார் காலத்தையும் குறிக்கும். இக்காலத்தில் இயற்கை அழகோடு செயற்கை அழகும் பெற்ற தமிழ் மதுரைச் சங்கமாம் நாயகனை மணந்து ஆடையாபரணாலங்காரம் பெற்றுப் பெருஞ்சீரும் சிறப்பு முற்றனள். இச்சங்கத்தார் மேற்கூறிய விலக்கண மணிகளோடு பின்னு மசேகமான தத்துவ சாஸ்திர நூல்களையுமியற்றி அவளை அணிபெறச் செய்து மேன்மேலும் சிறப்பித்தனர். இதுவே தமிழ்ப்பாஷை உச்சநிலை யடைந்த காலம். ஐந்தாவது அநாதாரகாலம்; இஃதுதமிழ் மாது ஆதரவற்றுத் தன் சிறப்புக் குன்றிய காலம். தட்சண மதுரையின் கண்ணே யிருந்த சங்கஸ்தானம் கபாடபுரத்துக்கு மாற்றப்பட்ட போது தமிழ்மாது தனக்குரிய எண்ணிறந்தனவாகிய அணிகலன்களோடும் சென்று அங்குக் குலாவுவாளாயினள். ஆயினும் கபாடபுரம் ஆழிவாய்ப் பட்டழியவே அக்காலத்து அரிய பெரிய தமிழ் நூல்கள் யாவும் ஒருங்கே இறந்தனவாக அப்பெரும் விபத்தினின்றும் தப்பிய பண்டைத் தமிழ் நூல்கள் மிகச் சிலவேயாம்.

 

கபாடபுரம் சமுத்திரத்தால் அழிவெய்தியதற்கு முன்னர்ச் சங்க மருவியநூல்களா யிருந்தவை எண்ணாயிரத்து நூற்று நாற்பத் தொன்பதென்று சங்கப் புலவருள் ஒருவரான நக்கீரர் கூறியிருக்கின்றனர். இணையிலாப் பாஷையென்றிறுமாப் படைந்த தமிழுக்கு இஃது ஓர் பேரிடியே போலும்! பின்னர் கடைச் சங்கத்தார் காலத்தில் தமிழ் மாது சிறிது சிறப்பெய்தினளேனும், அச்சங்க மொழியவே அவள் ஆதரவொன்றின்றிச் சேரசோழ பாண்டியர் அவைக்களத்து மன்னிச் சற்றுத் தலை கவிழ்ந்தனள்.

 

ஆறாவது சமணருடையகாலம். இக்காலத்தில் தமிழ்மாதின் பரிதாபநிலையை யுணர்ந்த பெளத்த சமண வித்துவான்கள், தமிழிலே சிறந்த இலக்கியமெனக் கற்றோர் யாவரானும் கருதப்படும் சீவகசிந்தாமணி சிலப்பதிகாரம் மணிமேகலை வளையாபதி குண்டலகேசி ஆதியாம் பெருங்காப்பியங்களையும், சூளாமணி, நீலகேசி, உதயணன்கதை நாககுமார காவியம், யசோதாகாவியம் முதலிய சிறுகாப்பியங்களையும், நிகண்டு நன்னூல் காரிகை ஆதியாஞ் சிறு கிரந்தங்களையுமியற்றி அவளை மகிழ்வித்தனர். இவர்கள் காலத்துக் கடுத்த இதிகாச காலத்தும் கம்பர் ஒட்டக்கூத்தர் முதலிய கவிவாணரும் சைவசமய பரமகுரவரும் சந்தானாசாரியர்களும் தோன்றிப் புராண காவியங்கள் சமயாசாரதத்துவ நூல்கள் பற்பல ஸ்தல புராணங்கள் முதலியவற்றையும் சமஸ்கிருதத்தினின்றும் மொழி பெயர்த்தனவாய அனேக பிற நூல்களையும் இயற்றுவாராயினர்.

 

ஆகவே பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் தமிழ்மாது பெரும்பான்மையும் தன் பண்டைச் சிறப்பெய்தித் தொல்காப்பியமே இரத்தின கிரீட்மாகவும், நீலகேசியே இருண்டு பரந்த கேசமாகவும். சூளாமணியே சிகையின் கண் தரிக்கப்பெறும் இரத்தினப் பிறையாகவும், தேவாரமே தெய்விக மாலையாகவும், குண்டலகேசியே சிறந்த காதணியாகவும், வளையாபதியே கைவளையாகவும், மணிமேகலையே கனமணி யழுத்திய தங்கமேகலாபரணமாகவும், சிலப்பதிகாரமே காற்சிலம்பாகவும், திருக்குறள் ஈரடியே இணையாகவும், திருவாசகமே திருவாக்காகவும், திருவிளையாடலே திருவிளையாட்டாகவும் கொண்டு தன் திருவாயினின்றும் தமிழ்க் கீர்த்தன மாறியாங் கானாமிர்தஞ் சொரியத் தமிழ் சாடென்னு மரங்கத்து நின்று நர்த்தனஞ் செய்து பார்ப்போர் மனதைப் பரவசப்படுத்தினள்.

 

ஆனந்த போதினி – 1931 ௵ -

செப்டம்பர், நவம்பர் ௴

 

No comments:

Post a Comment