Wednesday, September 2, 2020

 

தருமம்

 

தருமம் என்ற பதத்திற்கு அறம், இயல்பு, நீதி, பிரமாணம் வேதம் என்று பலபொருள்களிருப்பினும் இங்கு அறம் என்றே நாம் பொருள் கொள்ள வேண்டும். தா என்றால் கொடு, ஈ என்று பொருள். யாவற்றையும் கொடுக்கும், அதாவது படைத்தளிக்கும் பிரமனுக்குத் 'தா' என்று பெயர் கூறப்பட்டிருக்கிறது. ஆதலின் கைம்மாறுகருதாது கொடுக்கப்படுவதே தருமம் எனப்படும்.

 

தருமத்திற்கு மூலகாரணம் கருணை அல்லது இரக்கமேயாகும். தருமம் முப்பத்திரண்டு விதமென்று கூறப்பட்டிருக்கிறது. பொதுவாய்க் கூறும்பட்சத்தில் ஒருவர் ஒருபொருளை வேண்டி அது கிடைக்காது வருந்தும்போது, அப்பொருளை யவர்களுக்குக் கொடுத்து அவர்கள் துன்பத்தை நீக்குதலே தருமம் எனலாம். இத்தருமம் இரண்டு விதமாகச் செய்யப்படுகிறது.

 

முதலாவது - சந்தர்ப்பம் நேர்ந்தபோது செய்யும் தருமம். எவ்வாறெனில் ஒருவன் நம்மைக்கண்டு "அய்யா காலையிலிருந்து சாப்பாடின்றி வருந்துகிறேன்'' என்கிறான். அவனுக்குடனே ஆகாரமளித்து அவனது பசிப்பிணியை நிவர்த்திப்பது.

 

இதைச் செய்வதிலும் இரண்டு விதங்களுண்டு. எவ்வாறெனில் ஒன்று ஒருவர் நம்மைக் கெஞ்சிக் கேட்ட பிறகே உதவுவது. மற்றொன்று ஒருவன் பசியோடிருக்கிறான், அல்லது ஆடையின்றி அவதிப்படுகிறான் என்று கேள்விப்பட்டதே அல்லது கண்டதாலேயே நாமே அவன் வேண்டுவதை யுதவி அவன் துன்பத்தை யொழித்தலாகும்.

 

இரண்டாவது - பலர்க்கு உபகாரமான ஒரு தருமத்தை நாமே உத்தேசித்துச்செய்தல். விசேஷமாக இத்தகைய தருமம் நிலையானதாக விருப்பது. இதுகாலம் இடம் அறிந்து செய்யத்தக்க தாகும். மேலும் பெரும்பாலும் செல்வவந்தர்களே இத்தகைய தருமத்தைச் செய்வார்கள். பாதையில் பிரயாணிகள் தங்கச் சாத்திரங் கட்டிவைத்தல், குளம் தோண்டிவைத்தல், கோயிலில்லாத ஊரில் கோயில் கட்டிவைத்தல், தக்க விடத்தில் சுமைதாங்கி யமைத்தல் இவை போன்றவை நிலையான தருமங்களாகும்.

 

அப்போதைக்கப்போது பலருக்குதவும் வண்ணம் செய்யும் தருமங்களுமுண்டு. அவை வேனிற்காலத்திலும், திருவிழாக்கள் முதலியன நடக்கும் போதும் தண்ணீர்ப் பந்தல் வைத்தல், சிற்றுண்டியளித்தல், ஏழைகளுக்கு அன்னமாதியளித்தல் முதலிய வைகளாம்.

 

தருமத்தின் அளவு அதற்காகச் செலவிடும் பொருளின் அளவைப் பொருந்திய தன்றாம்; காலத்தையும், தருமம் பெற்றவர் அடையும் சந்தோஷத்தையும் பொருந்தியதாகும். ஒரு இவக்ஷாதிகாரி தருமத்திற்காக அளிக்கும் ஆயிரம் ரூபாயைவிட, தினம் இரண்டணா சம்பாதிக்கும் ஏழையளிக்கும் ஒரு அணா எவ்வளவோ பெரிய தருமமாகக் கடவுளால் மதிக்கப்படும். இதுவுமன்றித் தருமம் எவ்வளவு அன்போடளிக்கப் படுகிறதோ அவ்வளவும் உயர்வானதாக மதிக்கப்படும். அவ்வாறே காலத்தை யனுசரித்துச் செய்யும் உதவியும்.

 

சேக்கிழாருடைய தந்தையானவர் சோழராஜனிடம் வித்துவானாகவும் மந்திரியாகவு மிருந்த போது பாண்டிய அரசன் தன்னிடமுள்ள வித்துவான்களே சிறந்தவர்களென்று நிரூபிக்க வேண்டி தங்கள் சபைக்கண்ணுள்ள வித்வான்களைக் கேட்டு உலகத்திலும் பெரிய பொருள் எதுவென அறிவிக்க வேண்டும்'' என்று சோழராஜர்க்கு ஒருநிருபம் விடுத்தனன். சோழராஜன் தன் சபைபிலுள்ள வித்வான்களிடம் அக்கேள்வியைக் கேட்டான். யாவரும் "அப்பா, யாவற்றையும் தன்னில் அடக்கித் தாங்கிக்கொண்டிருக்கும் உலகினும் பெரியதுயாதுள தெனத் திகைத்து வாளா விருந்தனர். அரசன் தமது வித்வான்களின் தலைவரான சேக்கிழாரின் தந்தையை நோக்கி "நமது வித்வக் கழகத்தின் தலைமை பூண்டிருக்கும் தாமே யிதற்கு விடையளித்தல் வேண்டும். இன்றேல் யாவர்க்கும் அவமானம் நேரும். நாளை வந்து விடையளிமின்'' என்றனன்.

 

அன்று மாலை தம் வளவிற்கு வந்த சேக்கிழாரின் தந்தை ஊணுறக்கங்கொள்ளற் கிபையாராகி மனம் புண்பட்டு உளம் பதைத்துத் துயர்க்கடலி லாழ்ந்து ''ஓ! சங்கப்புலவர் தந் தலைமை பூண்ட தெய்வப்புலவராம் பரமபதியே! நந்தமிழ்த் தாய்க்குந் தாயாகிய முக்கணெம்மானே! முனிவரேறே! மூவா முதல்வ! செஞ்சடைர் செல்வ! மஞ்சமர் மலைமகள் நெஞ்சமர் நாயக! அஞ்சலென்றெனை யாண்டருள் புரிய நின் னிணையடியன்றி யோர் துணைவலி யறியேன்" என்று சிவபிரானைத் துதித்துக்கொண்டிருந்தார். அச்சமயம் சேக்கிழார் சென்று தமது தந்தையைத் தேற்றிக் காரண மென்னை? சிறியேற் கருளவேண்டு மென்று வற்புறுத்திக் கேட்டபின் அவர் ''குழந்தாய் அது உன்னாலாகுங்காரிய மன்று என வியம்பி, விஷயம் இவ்வாறு என்று கூறினார். அதைக்கேட்ட சேக்கிழார் ''அப்பா! இதற்கா தாங்கள் இவ்வாறு வருந்துவது! தாங்கள் எழுந்து சந்தோஷமாக அசன மருந்துங்கள்; சிறியேன் அதற்கு விடையெழுதித் தருகிறேன்" என்றனர். தந்தை அவர் கூறிய தைரியத்திற்கு மகிழ்ந்து ஊண் அருந்தாதிருப்பதில் பயனென்னை யென்று போசன மருந்தினார். மறு நாள் சேக்கிழார் தமது தந்தை அரசன் சபைக்கேகும் சமயம் ஒரு ஓலையில்

 

"காலத்தாற் செய்த நன்றி சிறிதெனினும்

ஞாலத்தின் மாணப் பெரிது''

 

என்ற குறள் வெண்பாவை வரைந்து தம் தந்தையார் கரத்தளித்தனர்.

 

இதனால் தக்க சமயத்தில் செய்யும் உதவி மிகப்பெரியதாக மதிக்கப்படுவது காண்க.

 

சாதாரணமாக உலகவழக்கின் படி ஒருவன் தனது வருவாயில் ஓர் பாகத்தைத் தருமத்தில் உபயோகிக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அளவு பாராமல் தேகி என்று யார் எதைக்கேட்ட போதிலும் பூரண மனத்திருப்தியோடளிப்போர்களும் நம்புண்ணிய பூமியல் இருந்துவார். இவர்களே வள்ளல்கள் எனப்படுவோர்.

பாண்டவர் காலத்தில் ஒருவன் கிருஷ்ண பகவானிடம் சென்று "ஒ பகவானே! துரியோதன மகாராஜன் ஏகசக்ராதிபதியா யரசாள்பவன்; குபேரனையொத்த செல்வவான். அவ்வாறிருக்க அவனால் ஒரு சிற்றரசனாக்கப்பட்ட அங்கர்கோனாகிய கர்ணனைக் கொடையிற் சிறந்தவனென்று கூறத்தகுமோ?' என்று கேட்டான். கண்ணன் கீழ்க்கூறப்படும் திருட்டாந்த மூலமாகக் கர்ணனே கொடையிற் சிறந்தவன் என நிரூப்பித்தனர். அவ்விஷயமாவது:

 

ஒருநாள் ஒரு ஏழைப்பிராம்மணன் அரவக்கொடியோனிடம் வந்து "வேந்தே! என் புத்திரனுக்கு உபநயனம் நடக்க ஏற்பாடு செய்திருக்கிறேன், அதற்காகப் பத்து வண்டி உலர்ந்த எரிகரும்பு உதவ வேண்டும்" என்று இரந்தனன். அரசன் அவ்வாறே யளிப்பதாக வாக்களித்தபோது மறையோன், "புரவலரேறே! உபநயனம் நடக்கும் முன் தினம் வந்து அதைப் பெற்றுக்கொள்கிறேன்" என்று சென்றான்.

 

அவ்வேதியன் அவ்வாறே இருபது நாட்கள் கழித்து ஒருநாள் வந்து வாக்களித்தபடி யளிக்கவேண்டு மென்று வணங்காமுடியோனைக் கேட்டான். அச்சமயம் ஒருவாரமாக விடாமழையாயிருந்ததால் சுயோதனன் "இச்சமயம் உலர்ந்தவிற்கு கிடைப்பதரிது. மழைநின்ற பின் வம்மின்' எனக் கழன்றனன். அந்தணன் "ஐயோ! நாளைக்கு உபநயனமாயிற்றே, அரசனை நம்பியிருந்தேனே, சமிதையின்றிச் சமையல் நடவாதே " என்று புலம்பிக்கொண்டே வீதியிற் செல்லும் போது முன்பு கண்ணனைக் கொடையைப்பற்றி கேள்வி கேட்ட மனிதன் விப்பிரனைக்கண்டு சங்கதியறிந்து, கோபாலன் கூறிய படி 'அய்யா வேதியரே! கர்ணமகாராஜன் கொடையிற் சிறந்தவனென்கிறார்களே, தாங்கள் அவரிடம் செல்லின் தமது குறை நீங்கும்" என்றியம்பினன். பிராம்மணன் அவ்வாறே சென்று அங்கர்கோனையணுகித் தன் ஆபத்தைக்கூறினன். தருமர் தமையன் உடனே ஏவலாட்களை யழைத்து 'நமது அரண்மனையின் பின்பாகத்துக் கூரையைப் பிரித்து அதிலுள்ள உத்தரங்கள் கழிகள் முதலிய யாவற்றையும் எடுத்துப் பத்து வண்டிகளில் நிரப்பத்தக்கவைகளை இவ்வந்தணர் அகத்திற்கொண்டு போய்த் தட்சணம் சேருங்கள்'' என்று கட்டளை யிட்டான்.

 

சிபிச்சக்கிரவர்த்தி புறாவிற்காகச் சிவகாருண்ணியத்தால் தம் தேகத்திலுள்ள மாமிசத்தை யறுத்தளித்தார். குமணச்சக்ரவர்த்தி புலவர்க்குப் பணத்திற்குப் பதில் தமது சிரசை வெட்டிக் கொண்டு போய், தம் தம்பியிடமளித்து அதற்காக அவன் பரிசாகத் தருவதாகக் கூறியிருக்கும் தொகையைப் பெற்றுக் கொள்ளும்படி கூறினார். இத்தகைய அபூர்வக் கொடையாளிகள் நமது புண்ணிய பூமியில் ஜனித்திருந்தார்கள். உலகில் வேறெங்கும் இத்தகையோர் ஒருவதீரனு மிருந்ததாகத் தெரியவில்லை.,

 

இவ்வாற்றால் ஆபத்தில் ஒருவர்க்கு வேண்டியதை யுதவுவதே தருமமாகும். இத்தகைய தருமம் உத்தமம், மத்திமம், அதமம் என மூவகைப்படும்.

 

1 - வது, ஜாதி மதபேதம் பாராது, கருணை யொன்றினாலேயே தூண்டப்பட்டு, நமது பொருளையளிக்கிறோம் என்று கருதாமல், ஒரு ஜீவனுடைய துன்பநிவர்த்தியை மட்டும் கருதி உதவிபுரிந்து, அதைப் பிறர் அறிய வேண்டு மென்று கருதாது இருப்பதே உத்தம தருமமாகும்.

 

2 - வது. தன்மதத்தினர் தன் இனத்தினர் மட்டுக்கும் செய்ய வேண்டு மென்றெண்ணிச் செய்வதும், இப்போது தருமம் செய்தால் இது நமக்கும் நம்மக்களுக்கும் நன்மையளிக்கும் என்று பிரதிபலன் கோரிச்செய்வதும், என் வயிற்றுவலி நீங்கின் நூறு பண்டாரங்களுக்கு அமுதளிப்பேன் என்று கூறி நோய் நீங்கியபின் அப்படியே செய்தலும் ஆகிய இவையாவும் மத்திம தானம் எனப்படும்.

 

3 - வது. உலகப் புகழ்ச்சிக்கும், பெருமைக்கும், பலர்காணும் போது மட்டும் செய்தல் அதமதானமாம்.

 

தருமம் செய்ய நாம் செல்வவந்தனல்லவே என்று கருதலாகாது. உலகில் ஒவ்வொருவர்க்கும் தம்மைவிடச் செல்வவந்தரும், தம்மைவிட ஏழைகளுமுண்டு. தத்தம் சாத்திக்கேற்றவரையில் ஒவ்வொருவரும் தருமம் புரிய வழியுண்டு. அவ்வாறே புரிய வேண்டும். நமது மதத்தில் கூறியிருப்பது போல் மகம்மதியமதத்திலும் தருமம் ஆண்டவன் அருளையளிக்கத்தக்க அவ்வளவு சிறந்ததென்று கூறப்பட்டிருக்கிறது. அந்தோ இக்காலத்தில் நம் நாட்டில் பெருமைக்கும் பட்டப்பெயர்களுக்கும் இச்சைவைத்து தருமம் செய்வோரே அதிகமாக விருக்கக் காணலாம். இத்தகையோர் கயவரேயாவர். இவர்கள் செய்யும் போலித்தருமத்தால் பாபத்தையே பலனாக அடைவர்கள். முடிவில் தருமசிந்தனை யில்லாத ஜன்மம் மானிடஜன்ம மாகாது. தான் விரும்பியதைச் செய்து முடிப்பதே மானிடசுபாவமாதலின் மூதாட்டியாகிய ஒளவைப் பிராட்டியார். ''அறஞ் செய விரும்பு" என்றார். ஆதலின் ஒவ்வொருவரும் சீவகாருண்யம் பொருந்தி தங்கள் தங்களால் இயன்றவரை தருமத்தை ஈசுரார்ப்பணமாகச் செய்தல் வேண்டும்.

 

ஓம் தத்ஸத்.

 

ஆனந்த போதினி – 1920 ௵ - செப்டம்பர் ௴

 



 

No comments:

Post a Comment