Wednesday, September 2, 2020

 

தருமம்

 

இப்பூவலயத்தின்கண் மக்கள் மாண்புறத் தம் வாழ்க்கையை நிகழ்த்தற்குத் தருமம் சிறந்ததோர் சாதனமாகின்றது. தருமாதருமங்க ளிரண்டிலும் முற்பட்டது எய்துதற்கரிய புண்ணிய இலாபங்களையும், பிற்பட்டது அழிவிலாத் துன்பத்தையுங் கொடுப்பனவாகும். இயமவாதனைகட் கிலக்குறச் செய்வது அதருமமும் சுகபோகங்கட் கிட்டுச் செல்வது தருமமுமாகையினால் மன்பதைகள் தருமநெறியிற் பீடுபெற முயல வேண்டுவது இன்றியமையாததாகும். தருமம் நிலைபெறாவிட்டால் வருணாச்சிரம தருமங்கள் தலைகாட்டா தொழிவதன்றி உலகம் பலவிதநெறியுடைத்தாய் உய்தற்கு உபாயமின்றி அவமே அழிவதுமாம். இவ்வுண்மையைக் கொண்டே பல முனிசிரேட்டர்களும் மதாச்சாரியர்களும் தருமத்தை நிலைபெறச்செய்யத் தம்மாலான பன்முயற்சியைக் கைக்கொள்வாராயினார்.

 

தருமத்தை விடாது இயற்றிக்கொண்டே வரவேண்டுவது மானிடர்க்குற்ற கடமையெனச் சிறப்பாய்க் கடறப்படும். தருமத்தைக் கைவிட்டவன் பாபியாகவும் ஈசனது அனுக்கிரகத்துக் கியையாதவனாகவும் கருதப்படுவான். ஒவ்வொருவனும் தான் தான் செய்யவேண்டுங் கருமத்தைப் போற்றிக் கொள்ள வேண்டுமென்பது பன்னூல்களானும் அறிவின் மிக்க ஆசிரியர் களாலும் நன்கு தாடக்கப்பட்டிருக்கின்றது. அம்மகிமைவாய்ந்த தருமம் என்று கூறத்தகுந்தது யாசகர்கட்குக் கொடுக்கும் தருமம் மட்டுமே யென்றுணர்தல் தவறாம், தருமம் எனில் கடமை எனப் பொருள் கொண்டு இஞ்ஞாலத்துச் செய்யக் கிடந்த காரியங்களைச் செய்து முடித்தலே தருமம் இயற்றுதல் என்று கூறலாம். அங்ஙனங் கூறவே தருமங்கள் என்று சிறப்பாய்க் கூறப்படும் இரண்டு தலையிட்ட அவ்வாறைந்தும் அடங்குதல் காண்க. எவ்வெவ்வாற்றில் எவனெவன் எவ்வெக்கருமங்களைச் செய்தல் வேண்டுமோ அவ்வவ்வாற்றில் அவனவன் அவ்வக்கருமங்களைச் செய்து முடித்தலே மறுவின்றிய தருமமாகும். இக்கூறப்பட்ட தருமம் எவ்வாசிர மத்தினர்க்கும் இன்றியமையாததாகும். ஆயினும், இல்லற நடாத்துமவரே எனைய மூவர்க்கும் சிறந்த ஆதரவளிப்பவர்களாகலின், அவர்கட்கே தருமத்தை நிலைபெறச்செய்தல் பெரிதும் அவசியமாகின்றது.

 

உலகத்தினர் செய்யவேண்டும் தருமங்களைப்பற்றி விரிவாயெடுத்துரைக்கும் நூல்கள் பலவுள. அவற்றின் வழிநின்று வாழ்க்கையைப் பயனுறச் செய்பவனே தருமத்தை நிலைபெறச் செய்பவனாவான் என்பது கூர்ந்துரைக்கத்தக்கது. அத்தகையோனுக்கே தருமத்தினாலுள தாம் பயன் வந்துறுமேயன்றிப் போலித்தருமங்களை நிகழ்த்துபவர்க்கன்று. தம்பேர் அழியாமைக்கென மாசற்ற மனத்தினராய்த் தருமமென்று கூறிக்கொண்டு வேண்டி வினைகளைப் புரியும் வீணர் உண்மையான தருமத்தை யறிந்தவ ரன்று, தருமத்தின் பயன் அவர்க்குண்டாவது வில்லை. எனவே, காணொணாத் துன்பங்கள் இவர்களைத் தொடர்வனவாம் என்பது வெளி. வேதாகம சாஸ்திரபுராணேதிகாசங்களைத் தூடணம் செய்பவராய்த் தருமத்தில் நம்பகம் இல்லாது அலைமனம் அழுக்குடையாராய் அவமே போவார் ஒரு போதும் சம்சாரசாகரத்தினின்றும் கரைசேர்வதில்லை என்பது திண்ணம். முத்தியாங்கரை சோவதற்குப் பிரயாசை யெடுப்பவர் மறுவிலா மனத்தினராய் உலகத்திற்கொப்பத் தருமத்தையே செய்து வருவார்கள். அவ்வாறு தருமத்தை அனுட்டித்து மனமாசறுத்தோர் நாளாவர்த்தியில் சர்வசங்க பரித்தியாகிகளாய்க் கருப்பை புகாப் பாக்கியத்தை யடைவதில் சிறிதேனும் ஐயமில்லை.

 

இத்தருமத்தைக் கைக்கொள்ள விரும்புவோர் மிக்க நீதியுடையராய் உலகத்தோடொட்ட ஒழுகக் கற்றுக் கொள்ளல் வேண்டும். நீதியை யன்பித் தருமம் முக்காலத்துமில்லை யாகலின் நீதியுடையார்க்கே தருமத்தில் உரிமை உண்டு என்பது செவ்வனே இலகும். உலகத்திற் சற்றும் பற்று வையாராய்த் தாம் செய்ய வேண்டியவற்றை நாம் செய்கின்றோம்' என்னும் அபிமானமின்றி இவைகளையே ஏவுதற்றொழில் புரிபவராகக்கொண்டு அன்னோனுக்கே அந்தக்கரண சுத்தியடைந்து அர்ப்பணமாய்ச் செய்ய வேண்டும். எக்கருமத்தினும் தருமம் தாபித்துழைக்க விரும்பிய ஒருவன் கடவுளருள் விளங்கப் பெற்றவனாகின்றான் என்பது பெறப்படுகின்றது. எத்தொழில் புரியினும் தருமமே தலைகாட்டுமாறு மனத்தைச் செலுத்து பவனை உலக இச்சைகள் அரந்தைப்படுத்தலின்று. இறைவன் தருமமே சொரூபமாக வுடையானாகலின் தருமமுடையோர்க்கு அவன் எளிதில் இசைகிறான். தருமமிக்க புண்ணியர் கூறும் மொழிகளே இறைவன் வார்த்தைகளாம் என்பதற்குச் சிறிதும் ஐயப்பாடிலது. எத்துணை வறியராயினும் தரும நிலைக்கப்பெறின் அன்னோரே செல்வமுடைய மக்கள் ஆவர். பொன்மணங் கமழும் குடிப்பிறந்தோராயினும் தருமநிலையாவிடத்து அவர்கள் வறியரினும் வறியரேயாவர். செல்வ மிருந்தென்ன பயனைச்செய்யும்? அறம் மிகுந்தன்றோ மோக்ஷமாஞ் செல்வத்தைக் கொடுக்கும்? இஃதுணரா தார் தருமத்தை இகழ்தல் இயல்பே இயல்பே. அவர்கள், தங்கள் மனம் நல்வழிதேடி அதனூடே செல்லற்குப் பக்குவமடையுங்காறும் தருமத்தை இகழ்ந்து களியாடுவர்; அதருமத்தையே கைக்கொள்வாராவர் என்பது அறிவுடையோர் அறியற்பாலது. தருமமின்றேல் உலகமுமின்று.

 

இத்தகைய தருமம் திகழ வேண்டுமாயின் செல்வ மிகுதியாக உடையார் மனம் நல்வழிக்குத் திரும்புதல் அகத்தியமாகின்றது. ஏழ்மைத்தன்மையை யடைந்தோர் கூற்றை உலகம் பின்பற்றாது என்னு முண்மை யாவரும் அறிந்ததன்றே! ஏழைகளாயுள்ளோர் தருமத்தை உள்ளவாறு இயற்றிடினும் ஏனையோர் அதனைப் பின்பற்றுதல் பெரும்பான்மையும் இல்லையாகலின் அவர்கட்கு மட்டுமே அத்தருமம் உளதாகின்றது. செல்வம் படைத்தோர் தருமத்தைச் செய்து காட்டுவாராயின் உலகம் அதை யாதரித்தொழுகும். அன்றியும், அவர்களது செல்வம் எத்தருமத்தையும் இசையப் புரியுமாறுடனின்றுதவும். ஏழைமாக்கட்கு இவ்வுதவியில்லாமற் போய்விடுகின்றது என்பதை யாரே உணரார்? ஆகவே, உலகம் தருமத்தை வேண்டு கின்றதென்பதை அகத்துன்னி அதை யனுட்டிக்கும் கடப்பாடு யார்க்கு முளதெனல் மிகையன்று. தருமத்தினையுடையோர் இறைவனை யணுகுகிறார்கள். தருமத்தையின்றி இதைவனுமுளனோ?

ராம சுப்பிரமணிய நாவலர்,

பத்மநாபபுரம்.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - ஜுன் ௴

 

No comments:

Post a Comment