Wednesday, September 2, 2020

 

தர்மத்தில் அதர்மம்

 

அறந்தழைத் தோங்கும் புண்ணிய நாடாகிய நம் பாரத பூமியில் தொன்றுதொட்டே நம் பெரியார்கள் என்றென்றும் நிலைபெற்று நடந்து வருமாறு பல தருமங்களை ஏற்படுத்தி யிருக்கின் றனர். அவை எக்காலும் அழியாதிருக்க மூலதனங்களும், ஸ்தாவர சங்கம் சொத்துக்களும் வைத்துச் சென்றிருக்கின்றனர். இக்காலத்திலும் பல புண்ணியாத்துமாக்கள் பற்பல தர்ம ஸ்தாபனங்களையும், புண்ணியச் செயல்களையும் நடத்தி வருகின்றனர். ஆட்சிமுறையை மேற்கொண்டாராலும் அநேகம் அறச்செயல்கள் நடத்தி வரப்படுகின்றன.
 

இத்தகைய பெரியார்களால் முற்காலத்திலும் தற்காலத்திலும், மனிதர் வணங்கிக் கடைத்தேறுதற்கு எண்ணிறந்த தேவாலயங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன; திக்கற்ற ஏழைகளுக்கு அன்னங் கிடைக்குமாறு பற்பல தர்மசத்திரங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன; தண்ணீர்ப்பந்தல்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன; சுமைதாங்கிகள் கட்டப்பட்டிருக்கின்றன; இருமருங்கும் மரங்களடர்ந்த சாலைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன; வைத்தியசாலைகள் வறுமையுற்ற மானிடரின் வன்பிணி தீருமாறு ஏற்படுத்தப்பட்டுள்ளன; கல்விச்சாலைகள் எண்ணில் கட்டப்பட்டுள்ளன; நீதிமன்றங்களும் நிறுவப் பெற்றிருக்கின்றன; ஜனங்களுக்கு வரும் துன்பத்தைப் போக்குதற்கு அதிகாரவர்க்க வேலைக்காரர்களும் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.


 "அறத்தினூஉங் காக்கமு மில்லை யதனை
 மறத்தலி னூங்கில்லை கேடு "


என்னுந் தமிழ்ப் பொதுமறைக் கருத்தினை நன்குணர்ந்த நம் பெரியார், அறமே மனிதரால் செய்யப்படும் செயல்களுட் சிறந்ததெனத் துணிந்து இவ்விதம் எண்ணிறந்த அறச்செயல்களைச் செய்து சென்றிருக்கின்றனர்; செய்து வருகின்றனர்; மேலும் செய்வார்கள். இங்ஙனம் புண்ணியம் கிடைக்க வேண்டுமென்னும் நோக்கத்துடன் ஆன்றோர் அமைத்துச் சென்ற, அமைத்து வருகின்ற தருமகாரியங்கள் இப்போது நடந்துவரும் விதத்தைக் கவனித்தால் அஃதறிஞர்க்கு அதிருப்தியை யுண்டாக்கக் கூடியதாயிருக்கின்றது. புண்ணிய விருத்தியின் பொருட்டுச் செய்து வரப்படும் தர்மகாரியங்களில், சில குறுகிய அறிவுடையார் புகுந்து அத்தர்மச்செயல்களை அதர்மச் செயல்களாக்கி வருகின்றனர். அவை எண்ணில; அவற்றால் மனிதர்க் குண்டாம் துன்பங்களோ பல:

 

சில கோவில்களில் சுவாமியைத் தரிசிப்பதற்கு, அங்குள்ள அக்கிரமஸ்தர்களால் பக்திமான்களிடம் கூலிவாங்கப்படுகின்றன; சில தேவாலயங்களில் தனவந்தர்களும், அதிகாரவர்க்கத்தினரும் எவ்வித இடைஞ்சலுமின்றி மூலஸ்தானம் புகுந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள்; ஏழை மனிதர் அங்குள்ள பில்லைச் சேவகரால் தள்ளப்படுகின்றனர்; உயர்ந்த கோவில் பிரசாதங்களெல்லாம் பணக்காரர்களுக்கும், அதிகார வேலைக்காரர்க்கும், அர்ச்சகர்க்குச் சிநேக மானவர்க்கும் இலவசமாக எளிதில் கிடைக்கின்றன. பணமில்லாத பக்திமான்களுக்கு, (அவர்கள் காசு கொடுப்பதாயிருப்பினும்) அவற்றின் வாசனையும் கிடைப்பது அருமையாயிருக்கின்றது. சில ஸ்தலங்களில் அர்ச்சகர்கள், பக்திமான்களிடம் அர்ச்சனைக்கென்றும், அபிஷேகத்துக்கென்றும் பெருந்தொகைப் பணத்தை வாங்கிக்கொண்டு அவற்றைச் சரிவர நிறை வேற்றுவதில்லை; சுவாமி காரியத்துக்கென்று பக்திமான்களால் கொடுக்கப்பட்ட பணம் பூஜகரின் சொந்த உபயோகத்திற்காகிவிடுகின்றது. சில தெய்வபக்தியாளர் தேவாலய உற்சவத்திற்குக் கொடுக்கும் பணத்தைக் கோவில் காரியஸ்தர்கள் முழுதும் செலவிடாமல் அதில் சிறிது பாகஞ் செலவிட்டுப் பெரும்பாகத்தைத் தங்கள் சொந்தக்காரியத்திற்கு உபயோகப் படுத்திக் கொள்கிறார்கள். தூரதேசங்களிலிருந்து முக்கிய ஸ்தலங்களுக்கு சுவாமி தரிசனத்தின் பொருட்டு அளவற்ற பணம் செலவு செய்து கொண்டுவரும் உண்மைப் பக்திமான்களை, அந்தப் பெரிய தேவஸ்தலங்களிலுள்ள குருக்கள்மார்களும், அர்ச்சகர்களும், பூஜகர்களும் நெடுந்தூரம் ரெயில் பிரயாணஞ் செய்து போய் எதிர்கொண்டழைத்து வந்து, அவர்கள் தீர்த்தங்களில் ஸ்நானஞ் செய்வதற்கென்று தீர்த்தமொன்றிற்கு ஐந்து, பத்து ரூபாய்கள் விகிதங்களாகவும், அர்ச்சனை அபிஷேகங்களுக்கென்று நூறு இருநூறு ரூபாய்கள் விகிதங்களாகவும், அளவற்ற பணங்களை அவர்களிடம் கவர்ந்து கொள்கிறார்கள். இராமேஸ்வரம் முதலிய ஸ்தலங்களில், யாத்திரைக்காரர்களை எதிர்கொண்டழைத்து அவர்களிடம் பணம் பறிப்பதற்கென்றே ஆங்காங்குள்ள பணக்காரர்களும், அர்ச்சகர்களும் பற்பல குமாஸ்தாக்களை நியமித்திருக்கின்றார்கள். இவர்கள் உண்மையாக யாத்திரைக்காரர்களுக்குத் துணைபுரிபவர்களைப் போன்று நடித்து அவர்களிடம் அளவற்ற பணத்தைக் கொள்ளையடிக்கிறார்கள். நியாயமாக அவர்கள் சுவாமி தரிசனம் செய்யுமாறு செய்து, தங்கள் பிரயாசைக்கு எவ்வளவு நியாயமாகப் பெற்றுக் கொள்ளலாமோ அவ்வளவு இவர்கள் பெற்றுக்கொள்வதில்லை. தெய்வத்தின் பெயரைச் சொல்லி, வருவோரிடம் திரவியம் கவர்வதையே நோக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

 

அன்னதான சத்திரங்களில், பசிப்பிணியால் வருந்திப் பரிதாபத்துடன் வரும் ஏழைகளுக்கு அன்ன மிடுவதில்லை; அங்குள்ள காரியஸ்தர்கள் அவர்களுக்கு அரையணாவோ, காலணாவோ, ஒரு பிடி அரிசியோ கொடுத்து அவர்களைத் துரத்தி விடுகிறார்கள்; விலாப் புடைக்கத்தின்று பருத்திருக்கும் சில பணக்காரருக்கும், அதிகார வர்க்கத்தினர்க்கும், சத்திர உத்தியோகஸ்தருக்கும் வடை பாயசத்தோடு சட்ட திட்டமான சாப்பாடு அட்டியின்றிப் போடுகின்றார்கள். பசிக்கவலையில்லாத பணக்காரர் சிலரும், அதிகாரஸ்தர் பலரும் ஊர்ப்பிரயாணம் புறப்படுங்காலத்தில் நடுவழியில் உள்ள சத்திரங்களில் நல்ல சாப்பாடு சாப்பிடலாம் என்னும் உறுதியுடனேயே புறப்பட்டு வருகின்றார்கள்; ஏழைகளுக்கு அமைக்கப்பட்ட சத்திரங்கள் இவ்வாறு பசியறியாப் பணக்காரருக்குப் பயன்படுகின்றன. சில சத்திரங்களில் உள்ளோர் வகுப்புப் பேதம் பாராட்டிச் சில வகுப்பாருக்கு மட்டும் சாப்பாடு போட்டு, மற்றையர் பசியால் கூப்பாடு போட்டும் போகச் செய்கின்றனர். (எல்லாச் சாத்திரங்களிலுமா இத்தகைய அநீதச்செயல்கள் நடக்கின்றன? என்று சிலர் குறுக்குக் கேள்விகள் கேட்கலாம்; சில சத்திரங்களில் தர்ம கர்த்தாக்கள் ஏழைகளுக்குச் சாப்பாடு போட்டு வந்தாலும் பெரும்பான்மையான சத்திரங்களில் நியாயமற்ற அன்னதானமே நடந்து வருகிறதென்பது பாரபக்ஷமற்ற அறிஞர்களுக்கு விளங்காமலிராது).

 

தண்ணீர்ப்பந்தல்களில் கொஞ்சம் இடம்பமாக வரும் ஆசாமிகளுக்கு நல்ல மோரும், நெல்லிக்காய் ஊறுகாயும், வெயிற்காலங்களில், தருமம் நடத்துவோரால் வழங்கப்படுகின்றன; ஏழை மனிதர்க்கு வெறுந் தண்ணீரும் ஊற்றுவதற்குச் சிரமப்படுகிறார்கள். சிலர் தண்ணீர்ப்பந்தல் தர்மத்தின் பேரைச் சொல்லிப் பலரிடம் பணம் வாங்கிச் சேர்த்து மெத்தை வீடு கட்டிக்கொண்டு தண்ணீர்ப் பந்தலென்ற சிந்தனையே இல்லாமலிருந்து விடுகின்றனர்.

 

பற்பல மடாலயங்களிலுள்ள தர்ம போஷகர்கள், சாதுக்களுக்கும், தெய்வத்திற்கும், கல்வி விருத்திக்கும், வேறு சில தர்மங்களுக்கும் முன்னோர்களால் வைக்கப்பட்ட பூஸ்திதிகளையும், மூல நிதிகளையும் அகிருத்தியமான வழிகளில் தங்கள் நோக்கம் போல் செலவிட்டு அறச் செயல்களை அறவே மறந்திருக்கின்றனர்; அவ்விடங்களில் சற்பாத்திரங்களாயுள்ளோர் எவ்வுதவியும் பெறாமல் ஏங்குகின்றனர்; உலகத்தை ஏமாற்றும் போலி மாக்களும், பொய்ப் பட்டதாரிகளும், துர்ச்செயலுடையாரும் வேண்டு வனபெற்றின்புற்று மிகு மகிழ்ச்சி யடைகின்றனர்.

 

தர்மக்கல்விச்சாலைகளில் சாப்பாட்டுக்கும், சம்பளத்திற்கும் பணமின்றிக் கஷ்டப்படும் ஏழைப் பிள்ளைகளுக்குப் பெரும்பான்மையும் சாப்பாடு போட்டுக் கல்வி போதிக்கும் சகாயம் கிடைப்பதில்லை. சிபாரிசு உள்ள பிள்ளைகட்கே (கஷ்டமில்லா திருந்துங்கூட) அவ்வுதவி கிடைக்கின்றது.

 

தர்ம வைத்தியசாலைகளிலோ, உத்தியோகத்திலுயர்ந்தவர்க்கும், செல்வவந்தர்க்கும், படாடோபக்காரருக்கும், கைக்கூலி கொடுப்போருக்கும் மிக்க உபசரிப்புடன் வைத்தியம் செய்யப்படுகின்றது. அங்குள்ள வேலைக்காரர்கள் ஏழைகளைச் சிறிதும் கவனிப்பதில்லை; மத்தியானம் வரை காக்க வைக்கின்றனர்; கஷ்டமான நோயுள்ளவர்கள் தங்கள் துன்பத்தைத் தெரிவித்துக் கொள்ளும் பொருட்டு உட்புகுந்தால் சேவகர்களால் பிடர்பிடித்துத் தள்ளப்படுகின்றனர். அச்சேவகர் அந்த ஏழை மனிதரைப் பேசத்தகாத விதமாகப் பேசித் திட்டுகின்றனர்; நெஞ்சு திடுக்கிடும்படி பேசுகின்றனர்; வியாதியஸ்தரிடம் தங்கள் முழு அதிகாரத்தையும் காட்டி விடுகின்றனர்.

 

நீதித் தீர்ப்புக்கென்றேற்பட்ட நியாயஸ்தலங்களில் மனிதர், தங்கள் குறைகளைச் சொல்லி முறையிட்டுக்கொள்வதென்றால் அது சுலபமாக முடிவதில்லை; அதன் சட்ட திட்டங்களும் அவர்களால் தெரிந்து கொள்ளுதல் இயல்வதில்லை. ஒரு துஷ்டனால் அடிக்கப் பட்டவன் தன்னுடைய துன்பத்தை நீதிமன்றத்தில் தெரிவிப்பதற்கு மிகுந்த பணம் செலவிட வேண்டும்; நியாயவாதிகளை ஏற்படுத்த வேண்டும்; இவ்வளவு பிரயாசையுடன் அத்துன்பத்தை நியாயஸ்தலத்தில் எட்டவைத்தாலும் அதற்குப் பரிகாரம் பெறுவதற்குப் பல மாதங்களோ வருடங்களோ கழிந்து விடுகின்றன. முடிவிலும் லாட்டரி போல் அனுகூலம் கிடைத்தாலும் கிடைக்கும்; பிரதி கூலம் கிடைத்தாலும் கிடைக்கும். சில சமயங்களில் கிடக்கும் முடிவுகளால் அவஸ்தை யடைந்தவர்க்கு மேலும் அல்லலுண்டாகி விடுகின்றது.

 

ஜனங்களுக்கு நன்மை புரிவதற்கென்றேற்பட்ட வேலைக்காரர்கள், அவ்வாறு சகாயம் செய்வதில்லை. சிலர், தாங்கள் துன்பமுற்று அதை அவர்களிடம் தெரிவித்தால், அவர்கள் அதற்குத் தக்க பரிகாரம் செய்ய நாடுவதில்லை. தங்களுக்கு ஏதேனும் வருவாய் கிடைக் கக்கூடிய வழியையே பார்க்கிறார்கள்.

 

இப்படியே தர்மநீதிகள் நடக்கும் ஒவ்வொருவகையிலும் அதர்மநீதிகளே நடந்து வருகின்றன; இது காலபேதத்தாலும், மனித பேதத்தாலும் நடப்பதே. நல்லோபால் ஏற்படும் நற்காரியங்களெல்லாம் தீயோர் பார்வையால் தீச்செயல்களாக மாறிவிடுவது இயற்கையே. எனினும், நாட்டின் நன்மையை நாடும் பெரியோர்கள் இவ்வாறு தர்மத்தினூடே தலையெடுக்கும் அதர்மத்தை வேரறக் களைந்து உண்மையான தர்மத்தை நிலை நிறுத்த முற்பட வேண்டும். இங்குக்கூறிய அநீதிச்செயல்களில் சில நீக்க முடியாதனவாயிருப்பினும் பல எளிதில் அகற்றக்கூடியனவே. அவைகளையேனும் அகற்ற அறிஞர் முயலாமலிருப்பது அழகாகாது. மறநெறிகுன்றி அறநெறி தழைத்தோங்க ஆதியந்த மற்ற அற்புதமூர்த்தி அருள் செய்வானாக.


ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1927 ௵ - ஜனவரி ௴

 



 

 

No comments:

Post a Comment