Saturday, September 5, 2020

 

பெண்களின் மண வயது

 

ஆண் பெண் இரு பாலர்க்கும் உதவியாக விருந்து பல தேசீய விஷயங்களையும், பொது நன்மைகளையும், நம் தேச முன்னேற்றத்திற் கானவைகளையும், ஆன்மார்த்தத்தையும் விளக்கிவரும் நம் ஆனந்தபோதினியை 14 ஆண்டுகளாகப் படித்து நம்மால் இயன்ற வியாசங்களை எழுதி வந்த நாம், இப்பொழுது அதிக் கிளர்ச்சியுடன் பத்ரிகைகளிலும் பேபர்களிலும் தினம் வெளிவருகிற விஷயமாகிய பெண்மக்களின் "விவாக வயது சம்மத வயது" என்பவற்றைக் குறித்து எமது அறிவிற்கெட்டிய வரையில் சில எழுதப் புகுந்தோம்.

 

(1) பால்ய விவாகமானது, ஸ்திரீகள் கல்வி கற்பதற்கும் திடகாத்ரமான சரீரத்தை அடைவதற்கும், திடமானவும் ஆரோக்ய முள்ளவுமானமக்களைப் பெறுவதற்கும் தடையாய் இருக்கிறதென்பது உலகோர் அறிந்த உண்மையே.

 

மேலும் நம்தேச பெண்கள், தகுந்த வயதை யடைவதற்கு முன் பெரியபாரமாகிய குடித்தன பாரத்தை கைக்கொள்வதினால் தான், வாலிப வயதிலேயே விருத்தைகளைப் போல் தோன்றவும், சிலர் (Hysteria, Tuberculosis) முதலான வியாதிகளுக்கு ஆளாகவும் நேரிடுகின்றது. ஆனால் விவாக வயது எது வென்றும், விவாகம் எப்படி நடத்தப்பட வேண்டு மென்றும், எத்தகையகல்வி நம்தேய ஸ்திரீகளுக்கு இன்றியமையாதது என்றும் இவ்விடத்தில் கூறுவது மிகவும் முக்கியம். விவாக வயதை 14 - லிருந்து 16 ஆக மாற்ற வேண்டுமென்றும், சம்மத வயதைப் பெண்களுக்கு 18 ஆகச் செய்ய வேண்டு மென்றும் சாஸ்திர நிபுணர்களும் வைத்திய நிபுணர்களும் கூறுகிறார்கள். ஜனங்களில் சிலர் இக்கூற்றை ஆமோதிக்கிறார்கள். சிலர் மறுக்கிறார்கள். சிலர் (Age Consent Committee) யில் தினம் விசாரணை செய்கிறார்கள். இது கவர்ன்மெண்டின் சட்டமாக வரவேண்டுமென்று சிலர் கோருகிறார்கள். நாம் இவ்விஷயத்தை தினப் பத்திரிகையில் வாசித்து வருவதால் அதை இங்கு விவரிப்பது அனாவசியம்.

 

நம் தேசத்தின் சீதோஷ்ண ஸ்திதியுடன் நம் ஹிந்துக்களின் விவாக ஸம்பந்தமாகிய ஆழ்ந்த தத்துவத்தைக் கூர்ந்து யோசிக்கின் பெண்களின் விவாக வயதைப் 14 ஆகவும் சம்மத வயதைப் 16 ஆகவும் மாற்றுவதே சரியென்று தோன்றுகிறது. ஏன் எனில் பெண்கள் தக்க வயது அடைந்தவுடன் அவர்களுக்குத் தகுந்த மணமகனைத் தேடி அவன் கையில் ஒப்புவித்தலே தங்களுக்கு முக்யமானவும் பாரமானவும் பொறுப்பென்று, ஹிந்து பெற்றோர்கள் கருதியிருக்கிறார்கள். அபலைகளான ஸ்திரீகள் விவாகமின்றித் தனித்திருப்பின், தங்கள் கற்பைக் காத்துக் கொள்வது மிகவும் சிரமமென்றும், வஞ்சகமுள்ள சில ஆடவர்களால் ஏமாற்றப்படுவார்களென்றும் கருதியே அறிவிற் சிறந்த நம் மூதாதைகள், பெண்கள் தக்க பருவமடையு முன்னரே அல்லது அடைந்தவுடனேயோ தகுந்த கணவர்களைத் தேடி மணமுடிக்கும் வழக்கத்தை யுடையவர்களாய் இருந்தார்கள். மகாகல்விமான், பெரியராஜன், ஞானி, " ஞானஜனகன்'' எனப் பேர் பெற்ற ஜனகனும் லோகமாதாவான ஜானகியை தகுந்த வயதடைந்தவுடனே அவளுக்குத் தகுந்த மணாளனைத் தேடி அவன் கையில் ஒப்புவிக்க வேண்டுமென்று கவலை கொண்டதையும்; தையை, சிவதனுஸை ஒடித்த வீர கேஸரியான ஸ்ரீராமசந்திர மூர்த்திக்கு பாணிக்கிரகணம் செய்து கொடுக்கும் போது மிகுந்த ஸந்தோஷத்துடன் ஆனந்த பரிதனாய்

 

"இயம் ஹீதா மமதா ஸஹ தர்ம சரீதவ

ப்ரதீச சைனாம் பத்ரம் தே பாணிம் கிருண்ணீஷ்வ பாணினாம்"

 

என்று சொல்லி பாணிக்கிரகணம் செய்து கொடுத்ததையும் ராமாயணம் படித்தவர் அறிவர்.

 

சிலர், பெற்றோர்கள் இப்படி பாணிக்கிரகணம் செய்து கொடுப்பது சரியானதல்ல வென்றும், இதனால் மணமக்களின் வாழ்க்கையில் இன்பம் அதிகமில்லாமல் துன்பம் மிகுந்திருக்கிற தென்றும் வரதக்ஷிணை என்னும் கொடிய நோய் பரவுவதற்கு இதுதான் காரணமென்றும், பெண்கள் தகுந்த வயது வந்த பிறகு தாங்களே தங்கள் வாழ்க்கைத் துணைவனைத் தேடிக்கொள்வது தான் மிகவும் சிறந்ததென்றும் மேல் நாட்டார் அப்படிச் செய்வதால் தான் பல சீர்திருத்தங்களையும் முன்னேற்றங்களையும் உடையவர்களாய் இருக்கிறார்க ளென்றும் சொல்லவும் வியாசங்கள் எழுதவும் காண்கிறோம்.

 

அந்தோ இது எத்துணை அறியாமையாக இருக்கிறது!! நம்மவர் வழக்க விவாகத்தில் சிலருக்கு துன்பமேற்படின் பெரும்பாலார்க்கும் இது எப்படிபொருத்தமாகும்?

 

பெண்களின் பெற்றோரும் பிள்ளைகளின் பெற்றோரும் உற்றாரும் உறவினரும் யோசித்து முடிக்கும் கல்யாணங்களிலேயே தவறுதல் நேரிடின் அபலையான ஸ்திரீ தன் புத்தி ஒன்றைக் கொண்டு தானே முடித்துக் கொள்ளும் விவாகமானது எப்படி அதிக சிறப்புடையதாக இருக்கும்?

 

மேல் நாட்டார் நாகரீகத்திற் சிறந்தவர்களா யிருப்பதும் விவாக விஷயத்தில் அவர்கள் வழக்கம் மிகவும் வெறுக்கத் தக்கதாகவே இருக்கிறது.

 

அவர்கள் தகுந்த வயது வந்த பின்பே மணமகனைத் தேடி மணம் முடித்துக் கொண்டாலும் வெகு சீக்கிரத்திலேயே அன்பும் ஒற்றுமையும் இல்காதவர்களாய் (Divorce) விவாகரத்து செய்து கொண்டு விடுகிறார்கள். வேறொருவனைப் பார்த்து மணம் செய்து கொள்ளுகிறார்கள். ஒரு கிழவனை அவன் பணத்திற்காகவும் ஒரு யுவனை அவன் அன்பிற்காகவும் காதலிக்கிறார்கள்!! பபார்த்து மணம் எது செய்து கொண்டு இறுமையும் இல்க

 

நம் ஹிந்து ஸ்திரீகளோ வென்றால் ஒருவனுக்கே தன் உடல் பொருள் ஆவி மூன்றையும் அர்ப்பணம் செய்து திரிகரண சுத்தமாய் அவனையே தெய்வமாகக் கருதி உள்ளன்புடன் உபசரித்து, கணவன் எவ்வளவு அன்பில்லாதவனாய் இருந்தாலும், தன்னைக் கொடுமையாய் நடத்தினாலும், அல்லது வேறொருத்தியை மணம் புரிந்து கொண்டாலும், பொறுமையுடனும், ஸந்தோஷத்துடனும் இருப்பவர்களாய் விளங்குகிறார்கள்.

 

இதுநிற்க, ஸ்திரீகளின் கல்வி எத்தகையதாய் இருக்க வேண்டும் அவர்கள் ஆடவரின் கல்வியைப் போல் கலாசாலை (College) யில் வாசித்துப் பட்டங்கள் பெற்று உத்யோகம் செய்ய வேண்டுமா? அல்லது ஸுகாதார முறைப்படி வீடுகளை வைத்துக் கொள்ளவும் நன்றாய் குடித்தனம் செய்யவும், குழந்தைகளை ஆரோக்ய முள்ளவர்களாகவும் புத்திசாலிகளாகவும் வளர்க்கவும் உலக விஷயங்களையும் ராஜாங்க விஷயங்களையும் அறிந்து கொள்ளவும் போதுமான ஆங்கில பாஷாஞானம் உடைத்தானவர்களாய் இருந்தால் போதுமா?

 

வியாதி அணுகாமல் ஸுகாதார முறைப்படி வீடுகளை வைத்துக்
 கொண்டு, வருவாய்க்குத் தகுந்த செலவுகளைச் செய்து கொண்டு ஸரியான உடைகள், காலக் கிரமப்படி ஆகாரங்கள் முதலியவைகளால் குழந்தைகளைப் போஷித்து, வெளியில் சென்று வேலை செய்து களைத்து வரும் தங்கள் புருஷர்களை தக்கபடி உபசரிப்பதற்கும் உலகத்தில் நடை பெறும் பொது விஷயங்கள் அற்புதங்கள் ராஜாங்க விஷயங்கள் சட்டங்கள் இவைகளை அறிவதற்கும் போதுமான ஆங்கில பாஷா ஞானம் பெண்களுக்கு இருந்தால் போதுமெனவே எமது அறிவிற் தோன்றுகிறது –

 

ஸ்திரீகள் பட்டம் பெற்று உத்தியோகம் செய்யப்புகில் வீட்டிலுள்ள குழந்தைகளையும் தம் புருஷர்களையும் தகுந்தபடி கவனிக்கத் தக்க மனுஷ்யர்கள் இல்லாமல் போம்; பிராமணர்கள் பிராமணா அல்லாதார் என்னும் இருதிறத்தாரில் B. A., M. A., M. L. C., முதலான பட்டங்கள் பெற்றும் வேலை கிடைக்காமல் திண்டாடும் ஆண்மக்களோடு பெண் மக்களும் போட்டி போடப்புகின் வேலைத் திண்டாட்டம் மிகுதியாகிவிடும்! அல்லது ஆண்மக்கள் வீட்டிலிருந்து குடித்தனம் செய்து குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளும்படி நேரிடினும் நேரும்!!!

 

ஆதலால் பெண்கள் தகுந்த வயதில் மணம் முடித்துக் கொண்டு அறிவுடன் குடித்தன முறையில் விளங்குவதே மேன்மை. எல்லாம் வல்ல இறைவன் நம் தேசத்துக்கும் நம் தேய ஸ்திரீகளுக்கும் நன்மை புரிவானாக.

S. ஜயலக்ஷமியம்மாள்.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - மே ௴

 

 

 

 

No comments:

Post a Comment