Saturday, September 5, 2020

 

பெண்களுக்கு அவசியமான சில புத்திமதிகள்

 

ஜப்பான் தேசத்தில் பெண்களுக்குக் கலியாணம் நடக்கும் காலங்களில் தாயார் பெண்ணுக்குக் கீழ்க்கண்ட தசோபதேசங்களைக் கூறுவது பூர்வ காலமுதல் வழக்கமாம்: -

 

1- வது. - விவாகம் முடிந்த விநாடி முதல் நீ யென் புத்திரியல்ல. உன் மாமியாரே யுன் தாய்; உன் மாமனாரே யுன் தந்தை. இதுவரையில் எனக்கும் உன் தந்தைக்கும் கீழ்ப்படிந்து நடந்து வந்தது போல், இனி நீ யுன் மாமனார் மாமியாருக்குக் கீழ்ப்படிந்து நடந்து கொள். உன் மாமியாரைத் தாய்போல் கருதி அவளிடம் பட்சம் காட்டி நடந்து கொள்ள மறவாதே.

 

2- வது. -பெண்ணின் மேலான ஆபரணம் புருஷன் சொல் மீறாமையேயாகும், உன் புருஷன் உன் தலைவன்; அவனிடம் மரியாதையோடும் பக்தியோடும் நடந்து கொள்ள வேண்டும்.

 

3- வது. -எப்போதும் பெருமை பாராட்டிக் கொள்ளாதே; அப்படிச் செய்தால் உன் கணவன் உன்னை வெறுப்பான்.

 

4- வது. - கணவனுக்கு முன் கடுஞ்சொல் கூறாதே. 'பெண்டீர்க்கழகெதிர் பேசாதிருத்தல்' பொறுமையைக் கைவிடாதே. பொறுத்தார் பூமியாள்வர்' தக்க சமயம் வாய்க்கும் போது சொல்ல வேண்டியதைப் பட்சத்தோடு சொல்.

 

5- வது - பேச்சுக்காரி என்று பேரெடாதே. அதிகம் பேசுகிறவள் அரைக்காசுக் குதவமாட்டாள். பேச்சு அதிகமானால், பொய் புறணி யதிகமாகும். பேசாதிருந்தால் பிழை யொன்றுமில்லை.

 

6- வது. - குறி கேட்கும் வழக்கத்தையடியோடு விட்டு விடு. சகுணசாத்திரம் பார்க்கும் பெண் தானே தனக்குச் சத்துரு.

 

7- வது. - வீட்டுக் காரியங்களை விவேகத்தோடு நடத்து. வரவுக்குத் தகுந்த செலவு செய்

 

8- வது. - நீ செல்வவந்தன் புத்திரியாக விருந்தால் அகங்காரம் கொள்ளாதே. உன் ஆஸ்தியைப் பற்றி பிறர் கேட்கப் பேசாதே. தற்புகழ்ச்சி செய்து கொள்ளாதே. உன் கணவனுடை சுற்றத்தாரை யிகழாதே.

 

9- வது. - வலியவந்திடினும் வாலிபர் சினேகம் வேண்டாம்.

 

10- வது. - பலவர்ண உடையுடுத்தாதே. எப்போதும் சுத்தமான ஆடையணிந்து கொள்.

 

குறிப்பு: - இப்பத்து புத்திமதிகளும் நமது மாதர் பெண்கள் அனைவரும் அவசியம் கைக்கொள்ளத் தக்கவைகள். பெற்றோர்கள் தம் பெண்களுக்கு இதைப்போதிக்கவேண்டும்.

 

ஆனந்த போதினி – 1921 ௵ - மார்ச்சு ௴

 

No comments:

Post a Comment