Saturday, September 5, 2020

 

பெண்களுக்குரிய நலன்கள்

 

இல்லறம் என்பது ஆடவனோ பெண்ணோ தனித்து நின்று செய்யக்கூடிய காரியம் அல்ல. ஒத்த காதலனும் காதலியும் முரண்பாடின்றி ஒன்றுபட்ட நோக்கத்தோடு விதிப்படி ஒழுகுவதே நல்லறமாகிய இல்லற மாகும். இல்லற வாழ்க்கையில் பெண்மக்கட்குப் பொறுப்பு அதிகம். அநேகமாக பொருளீட்டல் ஒன்றே ஆடவர் கடமையாக இருக்கிறது. வீட்டை விளக்கமுறச் செய்ய வேண்டிய கடமை பெண்களுக் குரியது. பொருள் காரணமாக வெளி விவகாரங்களில் ஈடுபட்டு அல்லற்படும் ஆடவர்களுக்கு வாழ்க்கையில் சாந்தியையும் இன்பத்தையும் உண்டு பண்ணக் கூடியவர்கள் பெண்களே. குழந்தைகளை மாண்புடை மக்களாகச் செய்ய வேண்டிய பொறுப்பு கணவரைக் காட்டிலும் மனைவிமாருக்கே அதிகம் என்று சொல்ல வேண்டும். ஏனெனில் தாய்க்கும் குழந்தைக்குந்தான் நெருங்கிய சம்பந்தம் இருக்கிறது. குழந்தை மீது தாய்க்குத்தான் இயற்கையான அன்பு அரும்புகிறது. தந்தைக்கும் குழந்தைக்கும் உள்ள அன்பு தாயின் மூலம் ஏற்பட்ட செயற்கை அன்பு என்றே சொல்ல வேண்டும். ஆதலால் பிள்ளைகளுக்குக் குழந்தைப் பருவத்தில் வளர்ச்சி பெறும் குணங்கள் பெரும்பாலும் தாய்மாரின் தன்மையையும் போக்கையும் தழுவியிருப்பது சகஜம். " தொட்டிற் பழக்கம் சுடுகாடு மட்டும் " என்றபழமொழிக் கிணங்க ஒரு குழந்தைக்குப் பாலியத்தில் பிடிபடும் குணங்களே அதன் பிற்கால வாழ்விலும் உறைத்து நிற்கின்ற படியால் குழந்தைகளை வெகு ஜாக்கிரதையாகக் கவனித்து நல்வழிப் படுத்தி வளர்க்க வேண்டிய பொறுப்பு தாயைச் சார்ந்திருக்கிறது.

 

இங்ஙனம் கொழுநனைப் பேணுதல் குழந்தைகளை வளர்த்தல் ஆகிய பெரும் பொறுப்புள்ள இவ்விரண்டு காரியங்களோடு விருந்தோம்பல் சுற்றந் தழுவல் முதலிய இல்லறத்துக்குச் சிறந்த காரியங்களைச் செய்யும் கடமையும் மனைவியையே சார்ந்து நிற்பதால் ஒரு மனைவியானவள் எத்தகைய அறிவு ஆற்றல்களோடு சிறந்து விளங்க வேண்டும் என்பதை நேயர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். வீட்டுக் குரிய எல்லாப் பொறுப்பும் பெண்டிரைச் சார்ந்திருந்தமையாலேயே அவர்கட்கு மனைவி, மனையாட்டி, இல்லாள், இல்லக்கிழத்தி, மனைக்கிழத்தி என்ற வீட்டுச் சம்பந்தமுள்ள பெயர்கள் வழங்கப்படுகின்றன. இவ்விதம் வீட்டடியாக வழங்கப்படும் பெயர்கள் ஆடவர்கட்கு இல்லை என்பது எல்லாருக்குந் தெரிந்த விஷயம்.

 

மேற்கூறியபடி குடும்பப் பொறுப்பில் - இல்லறத்தில் சிறப்புரிமை பூண்ட பெண் மக்கட்கு நமது நாட்டில் கல்வி அறிவு கிடையாது, சுதந்தரங் கிடையாது. ஆடவர்கள் இட்டது சட்டம். புருஷன் பார்த்துச் சாப்பிடு என்றால் சாப்பிட வேண்டும், வேண்டாம் என்றால் சும்மா இருக்க வேண்டும். ஆடவர்களுக்குப் பெண்கள் அடிமைப் பட்டுக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும் என்ற உணர்ச்சி நமது நாடெங்கும் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. உலகத்திலுள்ள மற்றைய நாடுகளிலும் இத்தகைய ஆணுக்குப் பெண் அடிமை என்ற உணர்ச்சி வளர்ந்து, ஆணவம் மிக்க ஆடவர்களால் பெண்கள் பல கொடுந் துன்பங்களை அனுபவித்து வந்திருந்தாலும் தற்காலம் அவ்வந்நாடுகளில் பெண்கள் சுதந்தர இயக்கங்கள் தோன்றி தீவிரமான கிளர்ச்சி செய்து போராடி வருவதன் மூலம் அநேக நன்மைகள் உண்டாகி வருகின்றன நம்முடைய நாட்டில் பெண்களின் நிலைமை மிகவும் கேவலமானது; பெண்களுக்குக் கல்வியே தேவை இல்லை, அவர்கள் படிக்கக் கூடாது என்று சாஸ்திரங்களின் மூலம் கட்டுத் திட்டம் செய்திருக்கிற நாடு நமது நாட்டைத் தவிர வேறு ஒன்று இல்லை. பெண்கள் எல்லாரும் ராக்ஷஸ வருக்கத்தைச் சேர்ந்தவர்கள், பேய்கள், கூற்றிலுங் கொடியவர்கள், பாவிகள் என்றே எல்லாரும் இதுகாறும் கருதி வந்திருக்கின்றனர். இந்த மாதிரியான மனோபாவம் நாட்டில் நிறைந்திருக்கிறது என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் கொடுக்கலாம். 'பெண்கள் சாகஸக்காரிகள்; ஆண்கள் கெடுவது பெண்களாலே' என்பது வெகு ஜனவாக்கு. நமது தமிழ் நூல்களிலும் அறன் வலியுறுத்திய பெரியோர்கள் ஆடவர் பெண்டிர் ஆகிய இருதிறத்தாருக்கும் நடு நிலைமையோடு நீதி வழங்கவில்லை என்று யாம் கூறவேண்டி யிருப்பதற்கு வருந்துகின்றோம். "பேதைமை என்பது மாதர்க் கணிகலம்” என்றும், "தையல் சொற் கேளேல் " என்றும் “பெண்டிர்க் கழகு எதிர்பேசாதிருத்தல்" என்றும், 'எதிரிற் பேசும் மனையாளிற் பேய் நன்று' என்றும், ''பெண்களைப் படைத்து நமனை என் செயப் படைத்தாய்" என்றும், “பெண் கொண்ட பேர்பட்ட பாட்டையும் கேட்டையும், பேசுவோமே நெஞ்சமே" என்றும் அநேக அறிஞர் பாடி வைத்திருக்கின்றனர். தமிழ்ப் புலவரும், அறன் வகுத்த பெரியார் பலரும் பெண்களை இழிவு படுத்திச் சென்றனர் என்பதில் ஐயம் இல்லை.


''தூமகேது புவிக்கெனத் தோன்றிய வாமமேகலை மங்கைய
 ரால் வரும் காமமில்லை யெனிற் கடுங்கேடெனும் நாமமில்லை
 நகரமும் இல்லையே"


என்று மகா கவிச்சக்கரவர்த்தி கம்பரும், பெண்களாலேயே எல்லாத் தீமைகளும் விளைகின்றன; அவர்கள் இல்லா விட்டால் உலகில் தீமைகளின் பேர் கூட அகராதியில் இருக்காது, நரகம் என்பதும் இருக்காது என்று பாடி வைத்திருக்கின்றார். பெண்களைப் பற்றிச் சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்க தேவருடைய அபிப்பிராயத்தை முன்னர் ஒரு தடவை எடுத்துக்காட்டி யிருக்கின்றோம். திருவள்ளுவரும் ஆண்களுக்கே சலுகை காட்டி யிருக்கின்றார். ஆனால் இக்கூற்றுக்களை ஒரு நாளும் ஒப்புக் கொள்ள முடியாது என்று உறுதியாக வற்புறுத்துகின்றோம்.

 

சகலகலா வல்லவர்களாகிய நம் முன்னோர்கள் பெண்களின் விஷயத்தில் இத்தகைய எண்ணங் கொள்ளுவான் என்? அவர்களை விட நாம் அறிவிற் சிறந்து விட்டோமா? என்ற கேள்விகள் பிறக்கலாம். நம் முன்னோர்களுடைய அறிவுடைமைக்கோ அநுபவத்திற்கோ, புலமைக்கோ இப்போது நாம் இழுக்குக் கற்பிக்க முற்படவில்லை. அவர்கள் பெண்களை வேண்டுமென்றே தெரிந்து இழிவு படுத்தினார்கள் என்றும் யாம் கூறத் துணிய மாட்டோம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வழக்கத்தில் சகஜமாகப் போய் விட்ட பெண்களின் கேவல நிலைமையே நம் முன்னோர்களை அங்ஙனம் கூறச் செய்து விட்டது.'' குருடனை ராஜா விழி விழிக்கச் சொன்னால் எப்படி விழிப்பான்? " என்று ஒரு பழமொழி உண்டு. அதுபோலப் பன்னெடுங் காலத்திலிருந்து கல்வி அறிவும் உலகியல் அறிவும் அடைவதற்குப் பெண்களுக்குச் சந்தர்ப்பம் அளிக்காமல் அவர்களை அறியாமையிலேயே வாழ்ந்து வரச் செய்து விட்டபடியால் கல்வி அறிவிற் சிறந்து உலகியல் விவகாரங்களைத் தெரிந்திருக்கிற ஆடவர்களிடம் காணப்படும் சில சிறந்த குணங்கள் பெண்களிடமும் இருக்க வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? நம்முடைய புலவர்கள் பெண்களிடம் இருப்பதாகச் சொல்லும் பேதைமை, வஞ்சனை, சூது, சபலச் சித்தம், துரோகம் முதலிய குணங்கள் அவர்கட்குக் கடவுள் கட்டளையால் இயற்கையாகவே ஏற்பட்டிருக்கின்றன என்றாவது அவற்றை எவ்வாற்றாலும் மாற்ற முடியாது என்றாவது யாரேனும் கூறமுடியுமா என்று கேட்கின்றோம். பெண்கள் மீது ஏற்றிக் கூறப்படும் தீயகுணங்கள் ஆண்களிடமும் இல்லை என்றாவது யாராவது கூறமுடியுமா என்றும் கேட்கின்றோம். கல்வி அறிவு ஒழுக்கங்களிற் சிறந்து விளங்குவதாகச் சொல்லப்படும் ஆடவர்களிடங் கூட அநேக தீயகுணங்களும் கூடாவொழுக்கமும் நிறைந்திருப்பதை வெகு சாதாரணமாகக் காணலாம். அங்ஙன மிருக்கக் கல்வி அறிவின்றி வெளி உலக விலகாரங்களும் தெரியாமல் "அகழியில் விழுந்த முதலைக்கு அதுவே வைகுண்டம்'' என்றபடி வீடுகளில் அடைபட்டுக் கிடக்கும் பெண்களிடம் பேதைமை முதலிய குணங்கள் அமைந்து கிடப்பதில் எத்தகைய ஆச்சரியமும் இல்லை அன்றோ? நமது நாட்டில் முற்காலத்தில் எத்தனையோபெண்மணிகள் கல்வி அறிவு ஒழுக்கங்களிற் சிறந்து உலகிற்கு நல்வழி காட்டி யிருக்கின்றனர் என்பதைப் பண்டை நூல்கள் வாயிலாக அறிகின்றோம். இக்காலத்திலும் நமது நாட்டில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான பெண்மணிகள் படித்துப் பட்டதாரிகளாக வெளி வருவதையும் நாம் கண்கூடாகக் காண்கின்றோம். சிலபெண்மணிகளிடம் விளங்கும் அறிவுக் கூர்மையும் மற்றைத் திறமையும் ஆடவர்களின் அறிவையும் திறமையையும் விட மீறியிருப்பதையும் நாம் கண்டு வருகின்றோம்.

 

இப்போது நாம் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை என்னவென்பதை எல்லாரும் கவனிக்க வேண்டும். பெண்களுக்கு என்று தனியாக ஒருவகைப் பேதைமையையும் தீயகுணங்களையும், கடவுள் உண்டாக்கி அவர்கள் தலையெழுத்தாகப் போட்டு அனுப்பி விடவில்லை. ஆடவர்களிடம் எந்த எந்தக் குணங்கள் அமைந்து கிடக்கின்றனவோ அவையே பெண்களிடமும் அமைந்து கிடக்கின்றன. ஆடவர்கள் எங்ஙனம் கல்வி கேள்விகளால் தங்கள் அறிவைவளர்ச்சி செய்து நன்மை தீமைகளைப் பகுத்துணர்ந்து நல்லொழுக்கங்களைக் கைக்கொள்ளுகிறார்களோ அங்ஙனமே ஆடவர்கள் பெண்களுக்கும் சந்தர்ப்பம் அளித்தால் கல்வி கேள்விகளால் அவர்கள் தங்கள் அறிவை வளர்த்து நன்மை தீமைகளைப் பகுத்துணர்ந்து நல்லொழுக்கங்களைக் கைக்கொண்டு நடப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் பெண்கள் தங்கள் அறிவை வளர்ச்சி செய்து கொள்வதற்கு முட்டுக் கட்டையாக நின்று ஆதிமுதல் தடை செய்தவர்கள் ஆண்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தப் பாவ விமோசனத்துக்காக ஆடவர்கள் பெண்கள் முன்னேற்ற விஷயத்தில் எவ்வளவோ தியாகம் செய்யக் கடமைப் பட்டிருக்கின்றனர்.

 

நமது நாட்டுப் புலவர்களும் ஏனையோரும் பெண்களை இழித்துப் பாடியிருக்கின்றனர் என்று முன்பு குறிப்பிட்டோம். அவர்கள் அக்காலத்தில் பெண்களிடம் அமைந்து கிடந்த குணங்களைத் தெரிந்தே பாடினார்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை. ஆனால் அக்குணங்களை மாற்றுவதற் குரிய மருந்து கல்விப் பயிற்சி என்ற உண்மையை ஏனோ அவர்கள் அவ்வளவாகக் கவனிக்க வில்லை. பெண்கள் கற்பும் நல்லொழுக்கமும் வாய்ந்தவர்களாக விளங்க வேண்டும் என்ற ஆசையால் பல நிர்ப்பந்த விதிகளை வகுத்த நம் பெரியோர்கள் அந்நறுங் குணங்கள் வளர்ந்தோங்குதற்கு ஆதார மாயுள்ள கல்வியைப் பெண்கள் கற்றுத் தீரவேண்டும் என்று வற்புறுத்தாமல் விட்டு விட்டது வியப்பாயிருக்கிறது. பெண்கள் எல்லாரும் மரங்கள் கற்கள் ஆகிய ஜடப் பொருள்கள் இல்லை. அவர்கட்கும் ஆன்மா உண்டு; உணர்ச்சி உண்டு. ஆதலால் இன்ப துன்ப அநுபவமும் உண்டு. எனலே இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தான் அவர்கள் மௌட்டியத்திலேயே மூழ்கிக் கிடப்பர்?

 

மேனாடுகளிலும் கீழ்த்திசை நாடுகள் சிலவற்றிலும் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகக் கிளர்ச்சி செய்து வெற்றி பெற்று வருகின்றனர். அந்த நாடுகளில் பெண்களின் கிளர்ச்சிப் போர் வெகுமும்மரமாகப் போய்க் கொண்டிருக்கிறது. நமது நாட்டிலும் பெண்களுக்குள் ஒருவித விழிப்பு ஏற்பட்டு ஆங்காங்கு மகாநாடுகளும் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றன. நமது நாட்டுப் பெண்களின் கூட்டங்கள் பெரும்பாலும் ஆங்கிலங் கற்ற பெண்மணிகளின் முயற்சியாலேயே நடைபெறுகின்றன. பெண்கள் முன்னேற்றத்துக் குரிய பல முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன. இவற்றைத் தவிர ஆடவர்களும் பெண்களும் நிறைந்த சமூகச் சீர்திருத்த மகாநாடுகளிலும் தேசிய மகாநாடுகளிலும், வகுப்பு மகாநாடுகளிலும் பெண்கள் முன்னேற்றத்துக் குரிய தீர்மானங்கள் மிகுந்த சிரத்தையோடு கவனிக்கப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. இவை யெல்லாம் மகிழ்ச்சிக் குரிய விஷயங்களாயினும் சுதந்தர வேட்கை கொண்டு பெண்கள் முன்னேற்றத்துக்காகப் பாடுபடும் பெண்களும் மற்றவர்களும் சில முக்கிய விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

 

இல்லறத்தில் - வாழ்க்கையில் புருஷனும் மனைவியும் சமமான அந்தஸ்து உடையவர்கள் என்பதில் யாரும் ஆட்சேபணை கூற முடியாது. ஆண்களுக்குக் கூறப்படும் சில சிறப்பியல்புகள் பெண்களிடம் இல்லை என்றால் பெண்களிடம் அமைந்து கிடக்கும் சில சிறப்பியல்புகள் ஆண்களிடம் இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். புருஷன் பொருள் தேடி அலைவதில் அநேக கஷ்ட நஷ்டங்களை அனுபவிக்கிறான் என்பது உண்மை. ஆனால் மனைவி பிள்ளைப் பேற்றிலும், பிள்ளைகளை வளர்ப்பதிலும், புருஷனுக்குச் சாந்தியையும் இன்பத்தையும் தருவதிலும் இன்னும் அநேக தொல்லை நிரம்பிய குடும்ப நிர்வாகத்திலும் துன்பங்களை அநுபவிப்பதில்லை என்று சொல்லிவிட முடியுமா? நமது நாட்டுப் பெண்மணிகள் அடிமைகளா யிருப்பதற்கும், புருஷர்கள், மாமியார், நாத்திமார் முதலியோரின் கொடுந் துன்பங்கட்கும் பிடுங்கல்களுக்கும் உட்படடிருப்பதற்கும் உள்ள காரணங்களுக்குள் முக்கியமானது அவர் கட்குச் சொத்துரிமை இல்லாமையே யாகும். பெண்களுக்குச் சொத்துச் சுதந்தரம் இருக்குமானால் இப்போது அவர்களை வாட்டி வரும் துன்பங்களில் பெரும் பகுதி இருந்த விடம் தெரியாமல் ஒழிந்துவிடும். ஒரு பெண்ணுக்குக் கலியாணமானவுடன் அவளுக்குப் புருஷனைத் தவிர வேறு எந்த விதமான ஆதரவும் பற்றுக்கோடும் இல்லை. மாமியும், மருமகளும் பூனையும் எலியுமா யிருப்பது உலகப் பிரசித்தம், பரம சத்துருக்கள் ஆகி விடுகின்றனர்.'' மாமியார் மெச்சின மருமகள் இல்லை'' என்று ஒரு பழமொழியுங் கூட ஏற்பட்டு விட்டது. அதிலும் புருஷனோடு உடன் பிறந்த சகோதரிகள் யாராவது வீட்டில் இருந்து விட்டாலோ ஒன்றுங் கூறவேண்டுவது இல்லை. அந்தக் குடும்பம் நரகமாகவே இருக்கும். புருஷன் எவ்வளவு கெட்டிக்காரனா யிருந்தாலும் அவன் பாடு திண்டாட்டமாகவே முடியும். இந்த மாதிரி எத்தனையோ குடும்பங்களை நாம் நேரில் பார்த்து வருகின்றோம். இவற்றிற் கெல்லாம் முக்கிய காரணம் பெண்களுக்குச் சொத்துரிமை இல்லாமையே யாகும்.

 

ஆண்களைப் போலவே பெண்களுக்கும் கல்வி முக்கியம் என்பதை முன்னரே குறிப்பிட்டிருக்கிறோம். பெண்களின் கல்வி முன்னேற்றத்திற்கு அவர்களுக்குச் சொத்துச் சுதந்தரம் இருப்பது பேருதவி செய்வதாகும். கல்வி அறிவும் பொருளாதாரச் செழுமையும் பெண்களுக்கு ஏற்பட்டு விடுமாகில் பின்னர் பெண்கள் முன்னேற்றத்தைப் பற்றி யாரும் கவலை கொள்ள வேண்டிய அவசியமே இல்லை. அவர்களுக்குரிய தேவைகளையும் சீர்திருத்தங்களையும் பிறர் உதவியின்றி அவர்களே செய்து கொள்ளுவார்கள்.

 

 ஆதலால் பெண்கள் முன்னேற்றத்தில் தீவிர சிரத்தை காட்டும் சீர்திருத்தக்காரர் எல்லோரும் முதலில் இவ்விரண்டும் அவர்கட்குக் கிடைக்கும் படியான வழியில் முனைந்து பாடுபட வேண்டும்,

 

பரம்பரை வழக்கம் ஏறி ஊறிப் போய் அதோடு அறியாமையும் நிரம்பி யிருக்கிற ஜனங்களிடையே "விவாகரத்து'' போன்ற தீர்மானங்களைப் பிரசாரம் புரிவது பெரிய ஆபத்தாகும். கிரமமாக ஏற்பட வேண்டிய சீர்திருத்தங்களும் அதனால் பயன் இல்லாமல் போய்விடும்.

 

இப்போது சாதாரணமாகச் சிறு பெண்கள் தங்கள் பேரையாவது எழுதத் தெரிந்து கொள்ளுகிற அளவுக்கு விருப்பங் காட்டி வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு இது காணாது. எல்லாரும் படிப்பதும் இல்லை. பெண்களுக்கு ஆரம்பப் படிப்பு கட்டாயமாயிருக்கச் சட்டம் செய்ய வேண்டும். சீர்திருத்த வாதிகளும் சட்டசபை அங்கத்தினர்களும் ஏன் இந்த விஷயத்தில் சிரத்தை செலுத்தக்கூடாது என்று கேட்கின்றோம், ஒவ்வொரு நகர பரிபாலன சபையும் பெண்களுக்குக் கட்டாயக் கல்வி கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யவேண்டும். ஏழைக் குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தைகளுக்கு அந்த அந்த நகர பரிபாலன சபையின் தகுதிக் கேற்பபோஷணை உதவியும் செய்ய வேண்டும்.

 

பெண்களுக்குக் கொடுக்கப்படும் கல்வியில் அவர்களுடைய ஜீவனத்திற்கு அவர்கள் சம்பாதித்துக் கொள்ளும் படியான அமிசங்கள் கலந்திருக்க வேண்டும். பெண்களின் சுதந்தரத்துக்கு இதுஉதவியா யிருப்பதோடு எளிய குடும்பத்தில் உள்ளவர்கட்கு இதுமிகவும் உபயோகமாயிருக்கும்.

 

உபயோக மற்ற வழிகளில் பெண்கள் சுதந்தரம் பெண்கள் சுதந்தரம் என்று கூறுவதை விட நாம் மேலே எடுத்துக் காட்டிய நலங்களைப் பெறத் தீவிர முயற்சி செய்யுமாறு எல்லாரையும் வேண்டிக் கொள்கின்றோம். திருவருள் நம்முடைய கோரிக்கைகளைப் பூர்த்தி செய்வதாக.


ஓம் தத் சத்.

 

ஆனந்த போதினி – 1930 ௵ - பிப்ரவரி ௴

 

 

 

No comments:

Post a Comment