Saturday, September 5, 2020

 

பெண்கள் துயரம்

 

அஹிம்சா தருமத்துக்குப் பேர்போன நமது நாட்டில் - - கண்ணுக்குத் தெரியாத உயிருக்கும் துன்பம் செய்யக்கூடாது, உபகாரமே செய்ய வேண்டும் என்ற உயரிய அருளறம் நிறைந்த நாட்டில் - நம்மை அறியாமல் எத்தனையோ உயிர்கள் நம்மால் மடிந்திருக்கும் என்று அதற்காக நித்திய கருமாநுஷ்டானங்களில் பிராயச்சித்தம் செய்து வரும் நாட்டில் - பெண்மக்கள் துன்ப விடுதலை விஷயத்தில் மாத்திரம் முட்டுக் கட்டை மனப்பான்மை காட்டுவது ஆச்சரியமாயிருக்கிறது. மேனாடுகளில் பெண்கள் சுதந்தாக் கிளர்ச்சி வெகு தீவிரம். "இதுவரை ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்திக் கொடுமை இழைத்து வந்ததற்கு ஒரு அபராதமாக ஆண்கள் எல்லாம் பெண்கள் நிலைமையிலும், பெண்கள் எல்லாம் ஆண்கள் நிலைமையிலும் மாறி இருக்க வேண்டும்; இல்லையேல் சமாதானமான இன்ப வாழ்க்கை நடத்த முடியாது'' என்று அறை கூவுவது போன்ற தோரணையில் மேனாடுகளில் பெண் சுதந்தரப் போராட்டம் நடந்து வருகிறது. நமது நாட்டில், இந்த இருபதாவது நூற்றாண்டில், இவ்வளவு நாகரிகம் பரவியிருந்துங் கூட பெண் மக்கள் கஷ்டகாலம் நீங்கும்பாடு வெகு திண்டாட்டத்தில் இருக்கிறது. இப்போது மேனாடுகளில் பெண்கள் விரும்பும் சுதந்தரம் நாம் விரும்பவில்லை. ஆண்கள் செய்யும் வேலையெல்லாம் பெண்களும் செய்ய ஆசைப்படுவது பெரிய பைத்தியகாரத்தனம். இயற்கையில் பெண் தன்மை வேறு, ஆண் தன்மை வேறு. ஆண்மையும் பெண்மையும் நேர் முரண்பட்ட குணங்கள். பெண்கள் பெண்மையைப் பேணுவதும், ஆண்கள் ஆண்மையைப் பேணுவதுந்தான் சிலாக்கியம். ஆண்கள் செய்வதெல்லாம் பெண்கள் செய்ய வேண்டும்; பெண்கள் செய்வதெல்லாம் ஆண்கள் செய்ய வேண்டும் என்பது அறியாமை. இது முடியக் கூடிய காரியமும் அல்ல. உலகில் எத்தனையோ காரியங்கள் இயற்கை விரோதமாக நடைபெறுவது போல ஒரு சமயம் ஆண் பெண் உரிமைகளையும் குழப்பி பலாத்கார மாக நடைபெறச் செய்தாலும் விரைவில் அதிருப்தி தோன்றி இன்ப வாழ்க்கை வீழ்ச்சி அடையும் என்பதில் ஐயமில்லை.

 

இப்போது மற்ற நாடுகளில் நடைபெற்றுவரும் பெண் சுதந்தரப் போராட்டம் யாம் மேற்காட்டிய உண்மையை அலட்சியம் செய்து விட்டதென்றே நினைக்க வேண்டியிருக்கிறது. மேனாட்டுப் பெண்கள் ஆசைப்படுகிறது போல் ஆகாய விமானங்களிற் பறந்து உலகஞ் சுற்றி வியாபாரம் செய்வது, யுத்தக் கப்பல்கள் செலுத்துவது, பீரங்கி தாங்கிப் போர்புரிவது, ராஜீய நிர்வாகங்களில் பெரிய பெரிய பதவியேற்று அதிகாரஞ் செலுத்துவது, ஒருநாளைக்கு ஒருவனைக் கலியாணஞ் செய்வது, நினைத்தவனோடெல்லாம் கட்டித் தழுவிக் கூத்தாடுவது முதலிய பொருத்தமற்ற உரிமைகள் நம்முடைய பெண்களுக்கு வேண்டாம்.
 

பல நூற்றாண்டுகளாக உரிமையிழந்து அடிமையில் ஆழ்ந்து அல்லல் அநுபவித்த பெண்ணுலகம் திடீரென்று இப்போது விழிப்படைந்து சுதந்தரக் கிளர்ச்சி செய்து, அதிகப்படியான உரிமைகள் கேட்பதால் அந்நாடுகளில் உள்ளவர்கட்கு ஆக்ஷேபணையோ ஆச்சரியமோ தோன்றுவதில்லை. இதுவரை பெண்ணுலகை ஆட்டிவைத்த ஆணுலகம் வாயை மூடிக்கொண்டு பணிந்து வருகிறது என்று கூடச் சொல்லலாம். ஆனால் இம்முறை நமக்கு வேண்டவே வேண்டாம்.

 

நாம் விரும்புவதெல்லாம் பெண்களை அடிமைகளாகவும் விலங்குகளாகவும் நடத்தும் மனப்பான்மை ஒழிந்து அவர்களை கிருஹலட்சுமிகளாக விளங்கச் செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை நாட்டில் ஓங்கி வளரவேண்டும் என்பதே. நேயர்களே ! நமது நாட்டுப் பெண்மக்கள் நிலைமை எவ்வாறு இருந்து வருகிறது என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள். அவர்களுடைய துயரங்கட்கு எல்லை உண்டா என்று கேட்கின்றோம்? மகளிர் ஆடவர்க்கு அடிமைகள் என்ற எண்ணமே தொன்று தொட்டு ஆழமாக வேரூன்றி யிருக்கிறது. பெண்கள் தங்கள் உணவைப் போதிய அளவு கொள்ளக்கூடாது, அதுதான் அழகு என்றும், இவர்கட்கு முட்டாள் தனமே ஒரு நல்ல ஆபரணம் என்றும் சொல்லப்படுபவை போன்ற விபரீதமான அபிப்பிராயங்களை வைத்திருக்கும் நாடு, நமது தேசத்தைத் தவிர வேறொன்றில்லை. நமது நாட்டில் பெண்கள் ஆடவர் கண்களில் மக்கள் வருக்கத்தைச் சார்ந்தவராகவே தோன்றுவதில்லை. நல்லிசைப் புலமை மெல்லியலார் பலரும், அருந்தமிழ் அன்னை அவ்வைப் பிராட்டியும், வீரத்தாய்மாரும், புகழ்படைத்த பிற மங்கையரும் வாழ்ந்து அலங்கரித்த தமிழகத்தில் பெண்கள் வருக்கத்துக்கே பெரிய அவமானகரமான பழியையும் இழிவையும் ஒரு பெருங்காப்பியப் புலவர் சுமத்தியிருக்கிறார். அதாவது

 
 பெண்ணெனப் படுப் கேண்மோ பீடில் பிறப்பு நோக்கா
 உண்ணிறை யுடையவல்லா ஓராயிர மனத்த வாகும்
 எண்ணிப் பத்து அங்கை இட்டால் இந்திரன் மகளும் ஆங்கே
 வெண்ணெய்க் குன்று எரியுற்றாற்போல் மெலிந்து பின் நிற்ப ரன்றே.


என்ற பாட்டைக் கவனியுங்கள். இதில் பெண்களுக்கும் பெருமைக்கும் வெகு தூரம் என்றும், பிறப்பைப் பற்றி அவர்கட்கு அக்கரை இல்லை, எந்த வகுப்பிற் பிறந்தவனையும் காமக்கிழவனாக ஏற்றுக் கொள்ளுவர் என்றும், அவர்கட்கு மனநிறை - உறுதி கிடையாதென்றும், ஆயிரம் மனம் படைத்தவர்கள் என்றும், கற்பைப் பற்றிக் கவலை கொள்ளாமல் தேவேந்திரன் மகளாயிருந்தாலும் பத்துப் பணத்தை எண்ணிக் கையிலே எறிந்து விட்டால் வெண்ணெய் மலையில் நெருப்புப் பற்றி உருகுவது போல் மனம் உருகிக் காசு கொடுத்தவன் பின்னே ஓடிவந்து நிற்பார்கள் என்றும் திருத்தக்க தேவர் என்ற புலவர் கூறியிருப்பது எவ்வளவு வெறுக்கத்தக்கது என்பதை நேயர்கள் ஊன்றி நோக்குவாராக. இதன் மூலம் தேவருடைய புலமைக்கோ, பாரகாவியம் பாடிய தீரத்துக்கோ யாம் இழிவு கற்பிப்பதாக நேயர்கள் நினைத்து விடக் கூடாது. நமது நாட்டில் பண்டிதர் முதல் பாமரர் வரை பெண் மக்களிடம் எவ்வளவு அவநம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதற்கும், இந்த அவநம்பிக்கை காரணமாக அவர்களை எவ்வளவு கொடுமைகட்கும், துன்பங்கட்கும் உட்படுத்துகிறார்கள் என்பதற்கும் ஒரு உதாரணமாகவே எடுத்துக் காட்டினோம். இதற்காகத் தமிழ்ப் பேரன்பர்கள் எம்மீது சீற்றங் கொள்ளா திருப்பாராக.

 

பெண் மக்கள் ஜடப் பொருள்கள் இல்லை. அவர்கட்கும் ஆன்மா, உணர்ச்சி, அறிவு உண்டு. அவர்களிடம் பெண்மைக்குச் சிறந்த நாணம், மென்மை, அடக்கம், அச்சம், பயிர்ப்பு முதலிய குணங்கள் இயற்கையில் அமைந்து விளங்குகின்றன. அவர்களுடைய இயற்கைத் தன்மைக் கேற்ற கல்வி அறிவு கொடுத்து அக்குணங்களை வளர்த்து அவர்களை மாட்சியுறச் செய்ய வேண்டும். அப்போது மக்கள் வாழ்க்கையில் ஒரு தனிப்பட்ட இன்பவொளி வீசும் என்பதில் சந்தேகமில்லை. அறிவு விஷயத்தில் ஆண்களுக்குப் பெண்கள் இளைத்தவரல்லர். ஆண்களுக்கு எவ்வளவு அறிவு உண்டோ அவ்வளவு அறிவு பெண்களுக்கும் உண்டு. இதற்கு ஏராளமான திருஷ்டாந்தங்கள் காட்டலாம். மேனாடுகளிலும் நமது நாட்டிலும் ஆண்டுதோறும் வெளிவரும் பெண் பட்டதாரிகள், பெண் டாக்டர்கள் முதலியவர்களின் புள்ளி விபரங்களே பெண்களின் அறிவுடைமைக்குப் போதிய அத்தாட்சியாகும். ஆதலால் அவர்கள் பேதைமையிற் சிறந்தவர்கள் என்றோ, பாவ ஜன்மங்கள் என்றோ கூறிவிடுவது அறியாமையே யாகும். மகளிரின் பெண்மை நலங்கனிந்த சுகுமார லளிதகுணங்களை ஆடவர் அலட்சியஞ் செய்துவிட்டுத் தங்களுக்கு இயற்கையாக அமைந்திருக்கிற ஆண்மை மிடுக்கால் அவர்களை அடக்கி அடிமைகளாக்கிப் பெரும் பழிக்கு நிலைக்களனாகச் செய்து விட்டனர். பெண்களுக்குக் கல்வியே கூடாது என்று சாஸ்திரங்களால் தடை செய்து விட்டனர். பொருள் உரிமை இருந்தாலும் சிறிது சுகமாகக் காலங்கழிக்கலாம். அதுவுங்கிடையாது. ஆண்களுக்கே சொத்துரிமை உண்டு என்ற விதி செய்து எல்லாவழிகளிலும் நிர்ப்பந்தம் உண்டாக்கி விட்டனர். பெண்களுக்கும் தனியாகச் சொத்துரிமை இருந்தா லொழிய'' சிறு வயதில் தாய் தந்தையர், வயது வந்த பின்னர் நாயகன், நாயகனுக்குப் பிறகு மக்கள் அல்லது தாயாதிகள் ஆகிய இவர்கள் வசத்திலே தான் பெண் இருக்க வேண்டும், சுதந்தரமாக இருக்கும் உரிமை பெண்ணுக்கு இல்லை'' என்ற விதி எவ்வளவு கஷ்ட நஷ்டங்களுக்கு உட்படுத்தும் என்பது கூர்ந்து நோக்குவார்க்கு நன்கு விளங்கும். பெண்களுக்குக் கல்வியும் இல்லை பொருளும் இல்லை என்ற நிலைமையில் அவர்கள் மிருகங்களாகப் பாவிக்கப் படுவதிலும் துன்பங்கட்கும் கொடுமைகட்கும் உட்படுவதிலும் என்ன ஆச்சரிய மிருக்கிறது?

 

ஆண்மையிற் சிறந்தவர்களாகவும், கல்வி கற்று அறிவு வளர்ச்சி செய்து கொண்டவர்களாகவும் விளங்கும் ஆடவர் எல்லாச் சாஸ்திரங்களையும் தங்கள் சுயநலத்தை அடிப்படையாக வைத்தே ஆக்கி வைத்துக் கொண்டிருக்கின்றனர். கற்பு என்பது மக்கள் எல்லாரும் உயிராகப் போற்றிக் கைக்கொள்ள வேண்டிய ஒரு அரும் பெருங்குணம். இந்தக் கற்பு ஆண் பெண் இருபாலாரையும் மேன்மக்களாகச் செய்யும் மாட்சி வாய்ந்தது. கற்பு பெண்களுக்கே தான் சிறப்புரிமை வாய்ந்தது என்ற ஒரு விபரீத எண்ணம் எப்படியோ நமது நாட்டில் நிலைத்து விட்டது. ஆண்களும் கற்புநிலை தவறக்கூடாது என்ற தருமம் நமது நீதி நூல்களில் நிறைந்திருந்தாலும் இந்த தருமம் பெரும்பாலும் ஆடவரால் அலட்சியம் செய்யப்பட்டுவருகிறது. இந்த நெறி கடந்த செயலுக்கு அநுகூலமாகச் சாஸ்திரங்களும் வளைந்து கொடுக்கின்றன. பெண் மக்கள் எல்லாம் வாயில்லா மூடப் பூச்சிகளாக இருக்கின்றமையால் இவ்விஷயத்தில் கேள்வி முறை இல்லாமல் போய்விட்டது.

 

இப்போது நமது நாட்டிலும் பெண்சுதந்தரக் கிளர்ச்சி நடை பெற்று வருகிறது. ஆயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பெண்களை விபரீதப் போக்கில் நடத்தி வந்த நம்மனோர்க்கு இந்தப் புதியகிளர்ச்சி மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனால் காலச்சக்கரம் வேறுவிதமாக ஓடுகிறது. தற்காலத்தில் பெண்களின் உரிமை வேட்கையை வெறும் மிரட்டல்களால் அடக்கிவிட முடியாது. இப்போது அவர்கட்கு ஏதேனும் ஒரு வழியில் நல்ல விமோசனம் ஏற்பட்டுத் தீரவேண்டும். இக்காலத்துப் பெண்கள் மேனாட்டு நடையுடை பாவனைகளையே தங்களுக்குரிய ஆதர்சமாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள். மேனாடுகளிலேயே பெண்களின் போக்கு பொருத்த மில்லாமல் இருக்கும் போது அந்த நிலைமை நமது பெண்களிடமும் வந்துவிடுமோ என்று அஞ்சுகின்றோம். அந்நாட்டு முறைகளைப் பின் பற்றாமல் இருக்குமாறு செய்ய வேண்டிய கடமை கற்றறிந்த நமது பெரியோர்களைப் பொறுத்திருக்கிறது.

 

இனிமேல் பணத்துக்கு ஆசைப்பட்டு 73 - வயதுக் கிழவனுக்கு 13 - வயதுப் பெண்ணைக் கலியாணஞ் செய்து கொடுப்பது, தாரம் இருக்கவே அறியாத குழந்தைகளை மறுதாரமாகக் கொடுப்பது, 11 - வயதில் கலியாணம், 12 - வயதில் ருதுவாதல், 13 - வயதில் கர்ப்ப வேதனைக்கு உட்படுத்துவது முதலிய கொடுஞ் செயல்களை மேன் மேலும் செய்து கொண்டே போகாமல் நம்முடைய வாழ்க்கை நலத்தில் முழுப் பொறுப்பு ஏற்றுக் கொள்ளக் கூடிய பெண்களின் பரிதாப நிலைமையை ஒழிக்கத் தீவிரமாக முயற்சி எடுக்க வேண்டும். நம்முடைய மனங்களை விரிவாக்கி அவர்கள் பால் பூரண அன்பு செலுத்த வேண்டும். இவர்களுடைய முன்னேற்றத்துக்குத் தடைசெய்கிற சாஸ்திரங்களையும் விரிவாக்க வேண்டும். பெரியோர்கள்மனம் வைத்தால் வெகு உற்சாகமான முறையில் சீர்திருத்த வேலைகளைச் செய்துகொண்டு போகலாம்.

 

இக்காலத்தில் சாஸ்திர விருத்தம் என்று கருதப்படும் எத்தனையோ காரியங்கள் அநுஷ்டானத்தில் வந்து சாதாரணமாகி விட்டன. அவற்றைப் பற்றி இப்போது யாரும் மூச்சுவிடுவது கூட இல்லை. இந்தமாதிரி பரம்பரை வழக்கத்துக்கு முரண்பட்ட நடவடிக்கைகள் சகஜமாகி விட்டதின் காரணம் என்ன என்று பெரியோர்கள் ஊன்றிச் சிந்திக்கவேண்டும். காலமாறுதலின் பயனாக ஏற்பட்ட இன்றியமையாத தேவைகள் தொன்று தொட்ட வழக்கங்களை அலட்சியஞ் செய்து ஆட்சி புரிந்து வருகின்றன. இவற்றை எதிர்த்து நின்று போர் புரியாமல் ஒழுங்குப்படுத்த வேண்டியது தான் பெரியோர்கள் இப்போது செய்ய வேண்டிய வேலையாகும். பெண் மக்களின் குறைகளை காதிற் போட்டுக் கொள்ளாமல் எடுத்தற்கெல்லாம் முட்டுக்கட்டை போட்டு வந்தால் மேனாட்டுப் பெண்களிடம் தோன்றியுள்ள அதிக்கிரமச் சுதந்தரப் பேராசையும் முரட்டுக் குணமும் நம்முடைய பெண் மக்களிடமும் தோன்றி அமைதியற்ற வாழ்க்கையும் கேவல நிலைமையும் ஏற்பட்டுநாட்டைக் கெடுத்துவிடும் என்று எடுத்துக்காட்ட விரும்புகிறோம். பழைமையில் பற்றுள்ளங் கொண்ட பெரியோர்களும், சமூக சீர்திருத்த அறிஞர்களும் ஒன்றுகூடி நமது நாட்டுப் பெண்மக்கள் முன்னேற்றத்துக் குரிய வழிகளை வகுக்க வேண்டும். பெண் மக்கள் திறம்பட குடும்ப நிர்வாகஞ் செய்து வெளிவிவகாரங்களில் ஈடுபடக்கூடிய ஆடவர்கட்கு உற்ற துணைவர்களாகவும், இளங்குழந்தைகட்கு வீட்டு ஆசிரியர்களாகவும் விளங்குவதற் கேற்ற கல்வித் திட்டத்தை வகுத்து நாட்டில் பிரசாரம் செய்து அமுலுக்குக் கொண்டு வரும் முயற்சியில் மேற்கூறிய பெரியோர்கள் முனைந்து நிற்க வேண்டும். பெண்கள் முன்னேற்றத் துறையில் நல்ல ஊழியம் புரிந்துவரும் கற்றறிந்த பெண்மணிகளின் ஆலோசனைகளையும் தீர்மானங்களையும் எல்லாரும் அங்கீகரிக்க வேண்டும்.

 

இப்போது நமது நாட்டில் பெண் மக்கட்குப் போதிக்கப்படும் கல்விமுறை போதிய பலன் கொடுப்பதாயில்லை. உண்மையில் இது பெண்களுக்குரிய கல்வி முறையும் ஆகாது என்று கூடச் சொல்லலாம். குடும்ப நிர்வாகத்தோடு ஓய்வு நேரங்களில் ஏதேனும் கைத்தொழில் மூலம் பொருள் வருவாய் ஏற்படும் படியான நிலைமையிலும் பெண் கல்வி அமைய வேண்டும். அறிஞரும் அரசாங்கத்தாரும் பெண்மக்கள் நலத்தில் தீவிர கவனம் செலுத்தி வேண்டுவன செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.


ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - அக்டோபர் ௴

 

 

 

 

No comments:

Post a Comment