Sunday, September 6, 2020

 

மாதர் மேன்மை

 

குறிப்பு:- இதற்க்கு முன் உள்ள பகுதிகள் தொகுப்பிற்கு கிடைக்க வில்லை

 

(தொடர்ச்சி)

 

17. எந்தக் காலம் வரை பெண்கள் முகமலர்ச்சி யில்லா திருக்கின்றனரோ அந்தக் காலம் வரை உலகம் சூனியப் பிரதேசமாகவே இருக்கும், மனிதரோ முயற்சி யற்றவர்களா யிருப்பார்கள். (காம்பெல்.)


18. உலகத்தை யலங்கரிப்பவர்கள் ஸ்திரீ ரத்தினங்களே! அவர்கள் நடந்து கொள்ளுங் கிரமத்தை யொத்தே அவர்களில் புருஷர்களுடைய இல்வாழ்க்கையும் இன்ப துன்பங்களும் அமைகின்றன. (ஸ்ரீரங்கம் S. O. R.)


19. நித்திரை விட்டெழுஞ் சமயம் பிறதெய்வத்தை வணங்காளாகித் தனது தெய்வமாகிய கணவனைத் தொழுது எழும் பெண்ணொருத்தி ''பெய்'' என்று சொல்ல மழை பெய்யும். (திருவள்ளுவ நாயனார்.)

 

20. நற்குண மடைந்த மனையவளை இல்லாதவனுடைய இல்லறம், எவ்வளவு பெருமையுடையதா யிருப்பினும் பிரயோஜனமில்லை; அவ்வில்லம் அரிதாகியதோர் காட்டுக்கே ஒப்பாம். (நாலடியார்.)

 

21. ஒருவன் இல்வாழ்க்கையை நடத்த வேண்டுவதற்கு நற்குண நற் செய்கையுடைய மனையாளே யன்றி மற்றவையில்லை; ஒருவன் அடைய வேண்டிய பாக்கியங்களுக்குள் கற்புடைய மனைவியைப் பார்க்கினும் உயர் வாகிய பொருள்கள் இவ்வுலகத்தில் ஒன்றுமில்லை. (திருவள்ளுவ நாயனார்.)

 

இன்னும் பலவுள ஆயினும் இத்துடன் நிறுத்தி, நாம் எடுத்துக் கொண்ட இவ்விஷயம் முடிவுபெற மேலே எழுதச் செல்லுகிறோம்.

 

நேயர்களே! இத்தகைய அபூர்வ சக்திகளை யடைந்த நம் பெண்மக்களுக்கன்றோ தற்காலத்தில் கிறிஸ்துவேதம் போதிக்கப்பட்டு வருகிறது. பெண்களின் அரிய குணங்கள், ஊன்றிப்பார்த்த சில அறிவாளிகட்கும் நம் முன்னோர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது. இக்காலத்தவர்களில் சிலர் பெண்களை அவமதிக்கிறார்கள். அந்தோ! சில பெண்கள் அவமதிக்கும்படியுஞ் செய்து கொள்ளுகிறார்கள்! காரணம், மார்க்க போதனை யின்மையும், கல்வி யில்லாக் குறையுமே யென்று தெரிகிறது. இக்கல்வியில்லாக் குறைவொன்றை நிவர்த்திப்பதற்காகச் செய்ய வேண்டிய வழிகளைச் செய்யாது அன்னிய மதஸ்தர்களிடம் நம்மக்களைக் கல்வி பயில ஒப்புவிக்கும் செய்கையானது, புத்திர பாக்கியமடையச்சென்று புருடனைப் பறிகொடுத்தக் கதையைப்போல வந்து முடிகிறது. நம்மவர்க்குள் சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிற இக் கொடிய செய்கை என்றைக்குத் தான் ஒழியும்? நேயர்களே! என்றைக்கு ஒழியும்?

 

“நான் இந்தியாவிற் பிறந்து வளர்ந்தவன்; என்னுடைய தேசம் இந்தியதேசம்; என்னுடைய மதம் இந்து மதம்; என்னுடைய பாஷை இந்திய பாஷை; என்னுடைய இரத்தம் இந்திய இரத்தம்; ஆகையினால் நான் இந்தியன்" என்று சொல்லக்கூடிய மஹத்துவம் பொருந்திய பாக்கியத்தை யடைந்த ஒவ்வொரு இந்து சகோதரரும் நம்மார்க்கத்தைக் காப்பாற்றும் விஷயத்தில் கங்கணங்கட்டி, நம்மக்களைப் பாதிரிமார்களின் பாடசாலைகளுக்கு அனுப்பாமலும் பைபில் உமன் மூலமாக நம் மக்களுக்குப் பாடங் கற்பியாமலும் இருக்கும் நாள் எந்த நாளோ அன்றைக்கே இக்கொடிய செய்கை அறவே யொழியும். நம் அருமை மக்களைப் புறமதஸ்தர்கள் அபகரித்துச் செல்வதால் நம்மிந்து மார்க்கம் என்ன கதியாகுமென்று சிந்தித்துப் பாருங்கள் பெண்கள் இல்லாத வீட்டின் நிலைமையைக் குறித்ததாய் இருக்கும் பெண்கள் சிதறியழிந்த மார்க்கம்.

 

கனம் மாயூரம் முனிசிப் வேதநாயகம் பிள்ளை அவர்கள் தாம் எழுதிய பிரதாப முதலியார் சரித்திரத்தில் “எமனுக்கு தர்மராஜன் என்று பெயர் கொடுத்தது போல் இருக்கிறது...........'' என்று வரைந்திருக்கிறார்கள்; ஆனால் சமீபகாலத்தில் ஒரு ஸ்திரீயின் உடல் உயிர் இரண்டையும் பெற்றார் அல்லது புருஷனிடமிருந்து பிரிக்குஞ் சிலரின் செய்கைகளை கவனித் திருப்பின் அப்பேரறிவாளர் அவ்விதம் வரைந்திருக்கமாட்டாரென்பதே எமது துணிபு. கூடிய சீக்கிரம் நாம் இது விஷயத்திற்காகச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்யவேண்டும்; இல்லாவிடில் பின்னால் பெருந் துயர் அடைய நேரிடுமென்பது சத்தியம்.

 
      நேயர்களே! ''இந்தியாவின் பதம் ஸ்திரீகளின் காவலி லிருக்கிறது. நாம் ஆடவர்களுக்கு எவ்வளவுதான் பொருட் செலவு செய்து கல்வி கற்பித்து, பைபிலைப் போதிக்கினும் அவர்கள் பாடசாலையை விட்டு உலக விஷயங்களில் நுழைந்தால், தாம் வாசித்த பைபில் எந்த மூலையிலிருக்கிற தென்றுகூட கவனிக்கிறதில்லை. எவ்வளவு பொருட் செலவு செய்தாலும், இந்திய வாலிபர்களைக் கிறிஸ்தவர்களாக்க முடியாது. ஆதலால், நாம் ஆடவர்களை நமது மதத்தில் சேர்ப்பதற்காக விருதாவாகப் பொருளைச் செலவிடுவதை நீக்கிப் பெண்களுக்காகச் செலவு செய்து, நமது மார்க்கத்தைப் போதிக்கில், அவர்கள் தங்கள் காவலைக் கைவிட நேரிடும்; அது சமயம் நம் முயற்சியுங் கைகூடலாம்.........'' என்று அமெரிக்காவில் ஒரு கிறிஸ்தவப் பாதிரியார் தமது மதசங்கத்தின் முன்பு பிரசங்கித் திருக்கிறார்.

 

உள்ளபடியே இவ்விஷயம் நமதுள்ளத்தில், கூரிய வாள் போல ஊடுருவிப் பாயவில்லையா? கருணாநிதியாகிய பரம் பொருளுக்கு, இவ்விஷயம் சம்மதமாகுமர? இவர்கள் மார்க்கத்தைப் போதிப்பார்களாம், ஸ்திரீகள் காவலைக் கைவிடுவார்களாம், இவர்கள் முயற்சியுங் கைகூடலாகுமாம். என்னே இவர்களின் எண்ணம் சகோதர சகோதரிகளே! இப்பொழுதாவது இவர்கள் கல்வி கற்று கொடுக்கும் நோக்கம் இன்னதென்று
 நம்மவர்களுக்குத் தெரிகிறதா?

 

இவர்கள் மார்க்கத்தைப் போதிப்பதினாலேயே ஸ்திரீகள் காவலைக் கைவிடுவார்க ளென்பதும், கைவிட்ட இந்து மார்க்கம் இந்தியாவை விட்டு ஸ்டீமர் பிரயாணஞ்செய்யு மென்பதும் நினைத்துக் கொண்டே நித்திரை செய்தால், ஒருகால் கனவில் காணலாமேயன்றி உண்மையில் நடக்கும் என் றெதிர்பார்க்கக்கூடிய விஷயமல்ல. கவரிமான் தன்னுடைய உரோமத்தையும், வேங்கை தன்னுடைய தோலையும், சுத்த வீரன் தன்னுடைய கையாயுதத்தையும், உத்தமஸ்திரீகள் தங்களின் * காவலையும் உயிர் விட்ட பின்பு தான் கைவிடுவார்கள்! ஆ! என்ன நம் இந்தியப் பெண்களின் துரதிஷ்டம். [* காவல் – நன்னெறி]

 

இதுவரையில் நம் பெண் மக்களிற் பெரும்பான்மையோரை, ஈவு இரக்கமற்ற பேய்கள் மட்டும் பிடித்தாட்டி, அலக்கழித்து, துன்புறுத்தி வந்தது; இனி பகுத்தறிவுடைய மனுஷஜன்மங்களில் சிலர்கூட நம் இந்தியப்பெண்களை இம்சிப்பதாயின், இப்பெருங்குறையை மனமெரிய ஆண்டவனிடத்தில் ஒப்பிப்பதன்றி மற்றென் செய்யக்கடவோம்.

 

நேயர்களே! இந்துதேசத்தில் கிறிஸ்துமார்க்கம் விசேஷப்பிரபல்யம், கி. பி. 13 - ம் நூற்றாண்டு முதல் வியாபித்துவருகிறது. சுமார் 600 வருடங்களாக நடந்த சுவிசேஷப் பிரபல்ய முயற்சியின் பயனாகவும், ஏராளமான பொருட்செலவின் பலனாகவும் இந்தியாவில் நூற்றுக்கு ஒருவர் கிறிஸ்து மார்க்கத்தினர்களாயிருக்கிறார்கள். இவர்களிலும், இந்துக்கள், ஜாதிவித்தியாசத்தால் புறக்கணிக்கப்பட்ட பஞ்சம சகோதரர்களே பெரும்பான்மையோராக விருக்கின்றனர். இதில் அனேகர் பஞ்ச காலங்களில் ஆகாரத்தினிமித்தம் வேறு மதத்தில் சேர்ந்து கொண்டவர்களே யன்றி மதத்தையுணர்ந்து சென்றவர்களல்ல. ஆனால், இந்துமார்க்கமோ கொடுக்கக் கொடுக்கக் குறைவதில்லை. அதாவது 1901 ம் வருட ஜனசங்கையின்படி. இருந்த ஜனத்தொகையைவிட 1911 ம் வருட ஜனசங்கையில் 100க்கு 5 வீதம் பெருகியிருக்கிறது. இதனால் நாம் அறிந்துகொண்ட தென்ன வெனில், நம்மார்கத்தினர்களால் பெற்றுவளர்க்கப்பட்ட மக்களிற்சிலர் அன்னிய மார்க்கத்தினர்களால் அபகரிக்கப் படினும், நம் மார்க்கத்தினர் ஒருபோதும் குறைந்தவர்களல்ல வென்பதே!

 

இனி நாம் செய்யவேண்டிய விஷயங்கள் மூன்று.

 

1. "என்னுடைய மக்களுக்கும், என் சுற்றத்தார்களின் மக்களுக்கும் அன்னியமார்க்கம் போதிப்பவர்களைக் கொண்டு கல்வி போதிப்பதில்லை என்று நாம் ஒவ்வொருவரும் சத்தியம் செய்து, இந்து மார்க்க வைராக்கியத்தை நம் ஹிருதயத்தில் ஆபரணமாக அணிந்து. அதைப் போற்றி வரவேண்டியது நமது முக்கியகடமை.

 

2. ஒவ்வொரு சந்தாதாரர்களும், அவரவர்கள் சக்திக்குத் தகுந்தவாறு ஆனந்தபோதினி, ஆபீஸின் மூலம் - இந்து சகோதரர்களே! எச்சரிக்கை'' என்ற துண்டுப் பத்திரிகைகள் வரவழைத்துத் தாம் வசிக்குமிடங்களில் பிரசுரப்படுத்த வேண்டும். தேசாபிமானமும் மதாபிமானமும் நிறைந்த நம் ஆனந்தனின் மாதாபிதாக்கள், இத்துண்டுப் பத்திரிகைகளில், பணம் அனுப்பி ஆர்டர் செய்வோரின் பெயரை அச்சடித்து, அச்சு அடுக்கும் கூலி இல்லாமல், காகித கிரயமும், அச்சு அடிகூலியுமட்டுமே, பொது நன்மையைக் கருதிப் பெற்றுக்கொண்டு, ஷ பத்திரிகைகளை, நம் வேண்டு கோளின் பேரில் அனுப்பி வைப்பார்கள்.

 

3. ஒவ்வொரு ஊர்களிலும் இந்து மதாபிமான எலிமென்டரி பாடசாலைகள் தற்காலத்தில் ஸ்தாபிக்கவேண்டும். பாடசாலைகள் ஸ்தாபித்திருக்கும் இந்துமதாபிமான நேயர்கள் பிள்ளைகளுக்கு மார்க்க போதனைப் புஸ்தகங்களைக் கட்டாய பாடமாக வைக்கவேண்டும்.

 

பாடசாலைகளை ஸ்தாபித்து நடத்துபவர் நம்மவரில் மிகச்சிலரே யாவர். இந்தியர்கள் முன்னேற்ற மடைய வேண்டுவதாயின், பாடசாலைகளை ஸ்தாபிக்க பலகனவான்கள் முன்னேறி வரவேண்டும்.'' குஜராத் மாகாணத்தில் ஒரு சர்வகலாசாலை இந்திய மாதர்களுக்காக ஏற்படுத்துவதற்கு ஸர் விட்டல்தாஸ் என்ற கனவான் 15 இலட்சம் ரூபாய் நன்கொடையளித்திருக்கிறார்" என்று கேள்விப்பட நம் மனம் எவ்வளவு சந்துஷ்டியடைகிறது?

 

இதுவன்றோ தருமத்துக்குச் சிறந்தவழி! ''ஒரு பாடசாலையைத் திறக்கிறவன், ஒரு சிறைச்சாலையை மூடுகிறான்'' என்பது எவ்வளவு அருமையான முதுமொழி!

 

நேயர்களே! இம்மூன்றினுள் துண்டுப் பிரசுரங்கள் வெளியிட வேண்டிய விஷயம் மிகவும் அவசரமா யிருப்பதால், ஒவ்வொரு சந்தாதாரரும் தங்கள் கடமையை அதிசீக்கிரம் செய்து இந்திய மக்களைக் காப்பாற்றும் பாக்கியத்தை யடையுங்கள். பலமுறை ஸ்தலயாத்திரை போய் வருவதும், சுவாமிக்கு உத்சவம் செய்வதுங்கூட இத்தகைய கைங்கரியத்துக்கு ஈடாகாது என்று ஒரு பெரியார் கூறுகின்றனர்.

 

சகோதர சகோதரிகளே! கடந்த மாதத்துடன் நம் ஆனந்தபோதினிக்கு, ஆண்டு ஐந்து இனிது முடிந்து, ஆறாவதாண்டு நடைபெற்றிருப்பதால், நாம் வருடாவருடஞ் செய்து வரும் வழக்கம்போலவே இவ்வருடமும், 5-ம் தடவையாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு சந்தாதாரரைச் சேர்த்து, மாதம் ஒன்றுக்கு இரண்டணாவுக்குங் குறைந்து செலுத்தி, அளவற்ற பாக்கியங்களை நாம் பெறுவதைப்போலவே, நம் சகோதரர்களையும் பெறச்செய்து மகிழ்வெய்துவோமாக! ஒரு தேசம் முன்னேற்ற மடைவதற்கு, அத்தேசத்து ஸ்திரீரத்தினங்களின் மேன்மையும், பத்திரிகைகளின் அபிவிர்த்தியுமே காரணமாதலால், நாம் இது விஷயத்தில் எடுத்துக்கொள்ளும் முயற்சிகள் யினிது நிறைவேற, எல்லாம் வல்ல இறைவனின் திருப்பாத மலர்களை என்றென்றும் பிரார்த்திப்போமாக! சுபம்!

 

K. A. P. விஸ்வநாதன்.

நெ. 53, தஞ்சாவூர்ரோட், திருச்சிராப்பள்ளி.

 

ஆனந்த போதினி – 1920 ௵ - ஜுலை ௴

 

No comments:

Post a Comment