Sunday, September 6, 2020

மாதர் நீதி மஞ்சரி

தொகுப்பு

பூ. ஶ்ரீநிவாசன்,

தமிழ்ப்பண்டிதர், சித்தூர்.

 

 

மாத இதழ்

1924 பிப்ரவரி யில் இருந்து 1925 டிசம்பர் வரை

உள்ள இதழ்களில் இருந்து தொகுக்கப்பட்டது

 

 

 

 

 


தொகுப்பில் உள்ள அத்தியாயங்கள்

 

முன்னுரை..... 3

திரௌபதியும், சத்திய பாமையும்.. 4

கௌசிக வேதியரும் கற்புடைப் பத்தினியும்.. 7

பெண்கல்வி. 9

மகடூக் குணம்.. 15

மாதர் கடமை. 20

கற்பிலக்கணம். 28

கற்பரசிகள். 34

அருந்ததி.. 34

அனுசூயை....... 35

கண்ணகி. 35

கோப்பெருந்தேவி.... 36

காந்தாரி. 36

காரைக்காலம்மையார் 36

சந்திரமதி.. 37

சாவித்திரி. 38

சீதை...... 39

தமயந்தி.. 42

நாளாயணி..... 42

திருவெண்காட்டு நங்கை...... 45

வல்லாளன் மனைவி.... 45

வாசுகியம்மையார் 46

 


 

மாதர் நீதி மஞ்சரி

முன்னுரை

பிரமசரியம், கிருகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்யாசம் என மக்களா வார் ஆசிரயித்திருக்கவேண்டிய நிலைகள் நான்கு. அவற்றுள், கிருகஸ்தாச்சிரமிகளே ஏனைய மூவரும் தங்கள் தங்கள் நிலைமையில் தவறாதிருக்க உதவுகின்றோராகலின், கிருகஸ்தாச்சிரமமே சாலச் சிறப்புடைய தென்பது ஆன்றோர் கொள்கை. இதனை இல்லறமென்றும் இயம்பலாம். இல்லறமாவது, அன்புள்ள ஆடவனும் ஸ்திரீயும் விவாக மூலம் கணவனும் மனைவியுமாக இருந்து அறநெறிவழாது ஒழுகலேயாம்.

 

இரண்டு கண்களும் கூடியே ஒரு பொருளைப் பார்த்தல் போல, அவ்விருவரும் பரஸ்பரம் அன்பும் ஒற்றுமையுமுடையவர்களாய் இல்லிற்குரிய காரியங்களை நடத்தவேண்டும். அதற்குரிய விதிகள் பல. அங்ஙனம் தங்கள் கடமையை யறிந்து அந்நிலையில் நில்லாது தவறி, மாறுபட்ட மனமுடையவர்களாயின் அவ்வில்லறம் மிக்க துன்பத்தையே விளைக்கும். நிலை தவறின எப்பொருளும் இழிவடையுமன்றோ?

 

புருடர் வெளி வியவகாரஸ்தராயும், மாதர் வீட்டுக் காரியஸ்தராகவுமிருப்பதால், அம்மாதரே இல்லற நெறிக்குப் பெரும் பொறுப்பாளரா யிருக்கின்றனர். இல், இல்லாள், மனை, மனைவி, மனையாட்டி, கிருஹிணி முதலிய பெயர்கள் அவர்களுக்கே சிறப்பாக அமைந்திருத்தலை ஆராயின், மாதர்கள் குடும்ப நிர்வாகத்தில் எவ்வளவு பொறுப்புள்ளவர்களா யிருக்கின்றனரென்பது இனிது விளங்கும். ஆகையால் மாதர் பொறுமை, அடக்கம், அன்பு முதலிய பொதுக் குணங்களையும், நாணம் மடம் அச்சம் பயிர்ப்பு என்னும் நால்வகைச் சிறப்புக் குணங்களையும் பெற்றிருத்த லவசியம். அதற்கு அவர்கள் தங்கள் கடமைகளைச் செவ்வனே யுணரவேண்டும். ஆன்ற கல்வியும் அனுபவமுமின்றேல் அக்கடமைகளை யறிய வியலாது. எத்தொழிலாளருக்கும் தத்தம் தொழிலுக்கேற்ற கல்வியும் அனுபவமு மின்றியமையாதன. உதாரணமாக, ஓர் வைத்தியரை எடுத்துக் கொள்வோம். அவர் தம் தொழிலுக்கேற்ற சாஸ்திரங்களை நன்றாய்க் கற்கவேண்டியதோடு, பல்வேறிடங்களிலுள்ள வைத்திய சாஸ்திர நிபுணர்கள் செய்துள்ள அரிய பெரிய காரியங்களை யெல்லாம் கிரந்தங்கள் வாயிலாக ஆராய்ந்து, இன்னின்னார் இன்னின்ன முறைகளைக் கையாண்டதால் இன்னின்ன பலன் பெற்றனர், இன்னின்ன முறைகளிற் தவறியதால் பயன் பெறாதொழிந்தனரென்று அறியவேண்டிய அனுபவத்தையும் அடைத லத்தியாவசியம்.

 

 நமது பெண்கள் கல்வியில் எவ்வித நிலைமையிலிருக்கின்றன ரென்பதைக் கூற வேண்டிய தில்லை. கொடுக்கப்படும் சிறிது கல்வியும் இல்லாதிருந்தால் நலமா யிருக்கும்' என்னலாம்படி யிருக்கிறது. இவ்வாறு பல வகைக் காரணங்களால் நமது மாதர் தங்கள் கடமைகளை யுணர்ந்து அந் நெறியில் நிற்கக்கூடாதவர்களாய் விட்டனர். கற்பு என்பதைக் காதிலும் கேட்டறிவதற்கில்லை. இது எத்துணை விசனிக்கத்தக்க விஷயம்.

ஆகையால், எனது சகோரிகளின் நிமித்தம் இம் 'மாதர் நீதிமஞ்சரியின் வாயிலாக, அவர்களுடைய கடமைகளையும் பொறுப்புக்களையும் செவ்வையாக விளக்கிக்காட்ட வேண்டுமென ஓர் விருப்ப மெமக்குள் ளுதித்ததாகலின் அதற்கிசைந்து இதை எழுதத் துணிந்தனம்.

 

அறிவினுக் கறிவாகி எமக்கு இவ் வெண்ணத்தைத் தந்து எழுதுந் திறமையும் சிறிதளித்த எல்லாம் வல்ல இறைவன் இதை இனி முடித் தருளுமாறும் இறைஞ்சுவோமாக.

 

'பலனை எதிர்பாராது செய்வது நம் கடமை. பலன் தருவது பராபரன் கடமை’

 

திரௌபதியும், சத்திய பாமையும்.

 

ஆண்டவனருளைப் பெற்ற பாண்டவர் தீண்டாத கற்புடைய திரௌபதியுடன் துரியோதனன் ஏற்பாட்டின்படி வனவாசஞ் செய்து கொண்டிருந்தார்கள். பதினொன்றாம் வருஷம் காமிய வனத்தில் தங்கி யிருந்தனர். அப்போது ஸ்ரீகிருஷ்ணர் பகவான் அவர்களைப் பார்க்க விரும்பி துவாரகையினின்றும் பிரயாணப்பட்டார். அதையறிந்த சத்தியபாமை தானும் கூடவருவதாகக் கூறினாள். நல்லதென்று சுவாமியானவர் சத்தியபாமையை யழைத்துக்கொண்டு காமியவனம் போய் பாண்டவர்களைக் கண்டார். பகவானைக் கண்ட பாண்டவர்கள் எதிர் கொண்டுவந்து தெண்டனிட்டு அநேக உபசாரங்கள் செய்து அழைத்துப் போனார்கள். சத்தியபாமை திரௌபதியிடஞ் சென்றாள். திரௌபதியும் சத்தியபாமையை அன்புடன் தழுவி உட்காரவைத்து க்ஷேமலாபங்களை விசாரித்துக் கொண்டிருந்தாள். அப்போது சத்தியபாமை திரௌபதியைப் பார்த்து, "அம்மா! நான் உன்னை ஒன்று கேட்க விரும்பகிறேன். அதாவது,

 

"அண்ணி! இந்த உலகத்தில் ஒரு ஸ்திரீயானவள் தன் புருஷனைத் திருப்தி செய்வது மிகக் கஷ்டமாயிருக்கிறது. அவள் எவ்வளவுதான் ரியத்தோடு நடந்து கொண்டாலும், அக்கணவன் அவளைக் கோபிக்கிறான்; திட்டுகிறான்; அடிக்கிறான்; சில சமங்களில் வீட்டை விட்டுத் துறத்தவும் பார்க்கிறான். 'ஐயோ என் விவாகம் செய்துகொண்டேன்!' என்று தன்னைத்தானே நொந்து கொள்ளுகிறான். பிறமாதர்களிடத்தில் ஆசை கொள்ளுகிறான். எல்லா வீடுகளிலும் இந்தக் கஷ்டமாகவே யிருக்கிறது. பூவும் மணமும் போல இருக்க வேண்டிய கணவனும் மனைவியும் நாயும் பூனையும் போல் இருக்கிறார்கள். வேறொன்றும் வேண்டாம். உன் அண்ணாவையே பார். அவரைத் திருப்தி செய்ய எவ்வளவோ பாடு படுகிறேன். முடியவில்லையே! இப்படி யிருக்க நீயோ ஐந்து கணவரை வைத்துக் கொண்டு எப்படி சமாளிக்கிறாயோ? மிக்க ஆச்சரியமா யிருக்கிறது. அவர்கள் உன் வார்த்தை மீறாமல் உன் சொற்படி நடந்தும், உன் மேல் மிக்க அன்புடையவர்களாகவு மிருக்கின்றார்களே. அப்படி யிருப் பதற்கு நீ அவர்களை எவ்வாறு வசப்படுத்துகிறாய்? ஏதாவது மருந்தின் வல்லமையா? மந்திர சக்தியா? வேறு தந்திர சாமர்த்தியமா? சொல்ல வேண்டும்'' என்று வினவினாள்.

 

திரௌபதி: - "அம்மா! சத்தியபாமா! நீ கேட்ட கேள்வி எனக்கு மிக்க அதிசயத்தை உண்டு பண்ணுகின்றது. நான் இதுவரையில் உனது விஷயத்தில் மிக்க கௌரவமான எண்ணங்கொண்டிருந்தேன். வேதங்களாலும் ரிஷிகளாலும் காணமுடியாத திருவடியை யுடைய தேவ தேவனாகிய கண்ணபிரானையே கணவனாகப் பெற்றிருக்கும் உன் பாக்கியமே மிக்க சிலாக்கியமும் யோக்கியமுமென் றெண்ணி யிருந்தேன். நீ இவ்விதம் சொல்வது தகாது. மருந்தும் மந்திரமும் விரும்பினாய். அது தாசி வேசிகளுடைய தொழிலாம். தங்கள் நாயகருக்கு மருந்தும் மந்திரமும் தேடும் பெண்கள் மீளாநரகத்திற்கே ஆளாவார்கள். அதனாலவர்க ளடையும் பயன் சிறிதுமில்லை. நோயும் தரித்திரமும் அவர்களைப் பீடிக்கும். இவ்விதம் பலவகை உபாயங்களால் நாயகரை வசப்படுத்த நினைக்கும் நாரியர் மிக்க கேவலமான நாய்களினுந் தாழ்ந்தவராவர்.

 

அம்மா! என் கணவர் என்னிடம் அன்பாயிருப்பதற்குக் காரணம் கூறுகிறேன் கேட்பாயாக. நான் என் கணவர் ஐவரையும் சாமான்ய புருஷர்களாக நினைக்காமல் ஐந்து தெய்வங்களாக நினைத்திருக்கின்றேன். 'குற்றமற்ற மனைவிக்குத் தன் கணவன் சொல்லை மீறி நடவாதிருத்தலே சிறந்த தவமும் தேவபூஜையும்' என்று வேதவிதியிருப்பதனாலே, நான் அதையே முக்கியமாகக் கொண்டிருக்கிறேன். ஆகையால் எனக்கு வேறு தெய்வமும் தவமும் நோன்பும் தீர்த்தமும் க்ஷேத்திரமும் இல்லை. இதுவே கற்பின் லக்ஷணமும். நான் இவ்வாறு, 'எல்லாம் அவர்களே. அவர்களை விட வேறில்லை' யென நினைத்துத் திரிகரண சுத்தியாய் அவர்களுக்கு வேண்டியவைகளைக் குறைவறச் செய்து வருகின்றமையால், அவர்களும் என்னிடம் மாறாத விசுவாசம் வைத்தும் அந்நியஸ்திரீகளை விரும்பாமலு மிருக்கின்றார்கள். ஒருவேளை அவர்கள் பிறமாதரை இச்சித்தாலும் நானும் அவர்களுக்குச் சகாயமாயிருந்து, அந்த ஸ்திரீகளுக்கு மிக்க உபசாரத்துடன் ஆடை ஆபரணங்களைக் கொடுத்தனுப்பி மரியாதை செய்வேன். இப்படிச் செய்வதால் கணவர், மனைவியர் மீது மிக்க அன்பு வைப்பதுடன் தங்கள் குற்றத்தையு முணர்ந்து அத்தகைய தொழிலில் பிரவே சிக்கமாட்டார்க ளென்பது நிச்சயம். அப்படி திருந்தாவிட்டாலும் மனைவி யார்மீதுள்ள பிரியம் நீங்காமலிருக்குமல்லவா? அதுதானே மனைவியர்க்குத் தேவை! (அதைவிட வேறென்ன வேண்டும் என்பது கருத்து.) அப்படிக்கின்றி நாம் கோபித்துக் கொண்டு அவர்களுடன் பேசாமலும் உணவளித்தல் முதலிய உபசாரங்களைச் செய்யாமலு மிருப்போமானால் அவர்கள் நம் மேல் வெறுப்புக்கொண்டு தாசிகள் வீடே கதியாய் அவ்விடத்திலேயே தங்கி விடுவார்கள். அப்பொழுது நாம் செய்வதென்ன? அதனால் வரும் லாபமென்ன? ஒன்றுமில்லை. ஆகையால் நாம் அவ்வாறு செய்யலாகாது.

 

இன்னமுங்கேள் சத்தியபாமா! காலமறிந்து வேளையறிந்து சமயமறிந்து தக்க விதமாகப் போஜனம் உடை படுக்கை முதலியவற்றை யமைப்பேன். எத்தனை வேலைக்காரர்களும் எத்தனை சமயற்காரர்களும் இருந்தாலும், நானே நேரிலிருந்து பார்த்து என் கையாரப் படைத்து அவர்கள்ளைச் சாப்பிடும்படி செய்தால் மாத்திரம் என் மனம் திருப்தியடையும். நமக்கிருக்கும் அக்கரை வேலைக்காரர்களுக் கிருக்குமோ? இருக்காது.

 

தவிர, 'கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி' என்பது போல், அவர்களுடைய கோபம் சந்தோஷம் பொறுமை தயாளம் இவைகளின் குறிப்பறிந்து, எந்தெந்த சமயத்தில் எவ்வெவ்விதம் நடந்து கொள்ள வேண்டுமோ அப்படி யெல்லாம் நடந்து கொள்ளுவேன். அவர்கள் கொலுவிற்கோ, கேட்டைக்கோ, யுத்தத்திற்கோ, நகரி சோதனைக்கோ புறப்படும் போது அததற்கு வேண்டிய ஆடை அணிகளாலலங்கரித்து, ஆயுதங்கள் வாகனங்கள் முதலியவற்றைச் சித்தப்படுத்தி வைப்பேன். மாமன் மாமிகளைக் குலதெய்வங்களைப் போலப் பாவித்து வேண்டிய பணிவிடை கள் புரிவேன்.

 

நான் என் புருஷர்களிடத்திலிருக்கும் பொழுது நல்ல ஆடை ஆபரணங்களா லலங்கரித்துக் கொண்டு, வாசனைத் திரவியங்கள் பூசிக்கொண்டு, நறுமலர் தரித்து மலர்ந்த முகத்துட னிருப்பேன். அவர்கள் வீட்டிலில்லாத காலங்களிலும் நான் வெளியே போக நேரிடும் பொழுதிலும் சாமான்யமாக அலங்காரமின்றி நாலுபேரைப்போ லிருப்பேன். சத்தியபாமா! இது உனக்கு ஆச்சரியமாயிருக்கும். ஏனெனில் சாதாரணமாக அநேகம் பெண்கள் நாயகருடன் வீட்டிலிருக்கும்போது தலைவிரி கோலமாய் அழுக்கடைந்த பழைய வுடை உடுத்து விகாரமாகக் காணப்படுவார்கள். வெளியில் புறப்படும் போதோ இரவல் வாங்கியாவது சிங்காரித்துக் கொண்டு வெளிப்படுவார்கள். அலங்காரம் யாருக்காக? அன்னியருக் காகவா? அன்னிய புருடர்கள் நம்மைப் பார்க்கும் போது என்ன பேசிக் கொள்வார்கள்? பரிகசிப்பார்கள்; அவமானமாகப் பேசுவார்கள். சிலர் நம் கற்பைக் கெடுக்கவும் முயல்வார்களன்றோ? அப்படி யில்லாமல் சாதாரணமாகப் புறப்பட்டால் யாருமே ஏறெடுத்துப் பார்க்கமாட்டார்க ளல்லவா? அது' உடம்புக்குப் பால் குடிக்காமல் ஊருக்குக் குடிப்பது' போலல்லவோ ஆகும்.

 

சில சமயங்களில் என் கணவர்களிடம் சிநேகரைப் போல நடந்து கொள்வேன். மந்திரிகளைப்போல் நியாயங்களை எடுத்துச் சொல்லுவேன். சில சில சமயங்களில் வேலைக்காரர்களைப் போல் கடினமான வேலைகளைச் செய்வேன். வீட்டு வியவகாரங்களை அவர்கள் கவனியாதபடி எல்லாம் நானே, அவர்கள் செய்தால் எப்படி செய்வார்களோ அவ்வாறே செய்து முடிப்பேன். அதிகமாகச் சொல்லுவானேன். எந்தவிதம் நடந்தால் அவர்களுக்குச் சந்தோஷமும் சாந்தமும் சுகமும் இன்பமும் உண்டாகுமோ அவ்விதமெல்லாம் செய்வேன். இது தானம்மா என் வசிய முறை.''

 

சத்தியபாமை: - "அண்ணி! நான் இதுவரையில் இவ்விஷயம் தெரியாமல் தாறுமாறாய் நடந்து கொண்டதுமன்றி உன்னையும் சாதாரணமாக வெண்ணிக் கேட்டேன். என்னை மன்னிக்கவேண்டும்.''

 

திரௌபதி: - ''சத்தியபாமா! இனிமேல் நான் சொன்ன பிரகாரம் நீயும் நடந்து கொண்டால் அதனாலுண்டாகும் பலனை நீயே அறிந்து சந் தோஷித்து மறுமுறை என்னைப் பார்க்கும்பொழுது என்னிடமே சொல்லிக் கொண்டாடப் போகிறாய்.''

 

சத்தியபாமை: - "அண்ணி! தவறாமல் செய்வேன். அதோ உன் அண்ணா பாண்டவரிடம் உத்திரவு பெற்றுக்கொண்டு புறப்படுகிறார். நானும் போக வேண்டும். விடைகொடு. போய் வரட்டுமா?


திரௌபதி: - "அம்மா! சுகமாய்ப் போய்வா.''

 

 

கௌசிக வேதியரும் கற்புடைப் பத்தினியும்.

 

விசிட்டபுரமென்னும் நகரத்தில் கௌசிகனென்னும் பெயருடைய வேதியரொருவரிருந்தார். அவர் தம் இளம்பருவத்திலேயே சரீரம் செல்வம் முதலியவற்றின் நிலையாமையை யுணர்ந்தார், "நிலையாமையாகிய சரீரத்தைக்கொண்டு, நிலைமையுடையதாகிய மோக்ஷ சாம்ராஜ்யத்தை யடைய முயல வேண்டும். அதற்கு வேதாத்தியயனமே சிறந்த சாதனம். வேதமறியாமல் வேதியனெனப் பெயர் வைத்துக் கொள்வது, இரண்டு கண்களு மில்லாதவளைப் * பங்கஜாக்ஷி என்றழைப்பது போலாகும் என்று பலவாறு சிந்தித்துத் தகுந்த ஆசாரியனைத் தேடித்திரிந்து, முடிவில் வசிஷ்டமகாமுனிவரை யடைந்து, சாஷ்டாங்கமாக அவரடிகளில் விழுந்து நமஸ்கரித்து, ''சுவாமி! அடியேன் சன்மார்க்கத்தைக் கடைப்பிடித்து சம்சாரக்கிலேசங்களை யொழித்து உய்யும்படிக் கிருபை புரிய வேண்டும்" என வேண்டி அவரருள் பெற்று, வேதங்களைக் கற்றுக்கொண்டிருந்தார்.

 

* பங்கஜம் - தாமரை; அக்ஷம் - கண்; பங்கஜாக்ஷி - தாமரை மலர் போன்ற அழகிய கண்களை யுடையவள். 

 

இங்ஙனமாக, ஓர் நாள், அப்பார்ப்பனர் ஏதோ வொரு காரியமாக வெளிச் சென்றார். நடுப்பகலாகலின் சூரிய வெப்பந் தாங்கமுடியாமல் ஓர் மரநிழலில் தங்கினார். அப்படி உட்கார்ந்து கொண்டிருக்கும் பொழுது, குளிர்ந்த ஸ்பரிசத்தை யுடைய யாதோ ஒரு பொருள் தலைமீது விழுந்த தாகத் தோன்றவே அவர் திடுக்கிட்டு, கையால் துடைத்துப் பார்த்தார். அது ஓர் பறவையின் எச்ச (மல) மாகக் காணப்பட்டது. அண்ணாந்து நோக்கினார். தன் தலைக்கு நேராக அம்மரத்தின் கிளை யொன்றில் ஒரு கொக்கு உட்கார்ந்திருப்பதைக் கண்டு,'அதுவே எச்சமிட்ட தென்றும் அவ் வெச்சமே தம் தலையை அசுத்தப்படுத்தி விட்டதென்றும் அறிந்தார். அவ்வளவுதான், வந்து விட்டது அளவில்லாத கோபம் ஐயருக்கு. கண்களிரண்டும் சிவந்தன. சிவபிரான் மேல் மன்மதன் மலர்ப்பகழிகளை யொக போது அப்பரமசிவன் சினந்து நெற்றிக்கண்ணால் உறுக்கிப் பார்த்தாற் போல பார்த்தார் அக்கொக்கினை. உடனே சிவனுடைய பார்வையால் மதன் எரிந்து சாம்பலானது போலவே கொக்கும் சாம்பலாய்விட்டது.

 

அந்தணருக்குண்டான ஆச்சரியத்திற்களவே யில்லை.'' ஆஆ என்ன என் மகிமை! இதுவரை என் பெருமையை யான் அறிந்துகொள்ளாம லிருந்தேனே! என் போன்ற தவச் சிரேஷ்டர் இவ்வுலகில் வேறு யாரிருப்பார்'' என்றெண்ணினார். அகங்காரம் மேலிட்டது. அனைவரும் தன்னை விடத் தாழ்ந்தவர்களே யெனக் கருதினார். உலகத்தை யழிக்கவும் படைக்கவும் காக்கவும் தன்னாலாகுமென்று இறுமாப்புக்கொண்டார். அந்தோ பாவம்! அழிவுக்கு முன்னான அகந்தை யென்பதை அறியவில்லை போலும் அவ்வந்தணர்.

 

மீண்டும் நடந்து சென்றார். பொழுது பட்டது. கொக்கை யெரித்த கௌசிகரைப் பசி யெரிக்க ஆரம்பித்தது. அவர் அகங்காரம் பசியிடம் செல்லுமோ? அருகிலிருந்த அக்கிரகாரத்துள் நுழைந்து ஓர் வீட்டின் தலைக்கடையில் நின்று அன்ன மிரந்தார். அதை அவ்வீட்டிலுள்ள உத்தமி கேட்டாளாயினும் தன் நாயகன் சாப்பிட்டுக் கொண்டிருந்தமையால், அவருக்குப் பணிவுடனும் பக்தியுடனும் சமீபத்திலிருந்து வேண்டிய உபசாரங்களைச் செய்து கொண்டிருந்தாளாதலின் வந்த அதிதிக்கு உடனே அன்னமிடக்கூடவில்லை. ஓர் தாயானவள் தன் குழந்தைக்கு அன்னமூட்டும்பொழுது சமீபத்திலிருந்து பலவகை வேடிக்கைகளைக் காட்டி உண்பிப்பதுபோல மனைவியும் கணவன் போஜனம் செய்யுங்காலத்தில் அருகி லிருந்து, சாப்பிடவொட்டாது தடுக்கும் எவ்வகை யெண்ணங்களும் மனத்தில் தோன்றாதபடி, இனிய வார்த்தைகளால் சந்தோஷமுண்டாக்கிக் கொண்டிருக்க வேண்டியது கடமை யல்லவா?

 

பர்த்தாவைப் பக்தியுடன் உபசரித்து உண்ணச்செய்து கொண்டிருந்த அவ்வுத்தமி, அவர் உண்டு முடிந்ததும் கைகால்களைச் சுத்தம் செய்வித்து, தாம்பூலமளித்துவிட்டு, அதிதிக்கு அன்னமிட ஆவலோடு சென்று ஓர் பாத்திரத்தில் அன்னமெடுத்துக்கொண்டு வெளியில் வந்தாள் "வெருவாயை மெல்லும் அம்மைக்கு நாழி அவல்” அகப்பட்டது போல என்னும் பழமொழிப்படி, தன் கோபப்பார்வையானது எதிரில் பட்ட பொருள்களை யெல்லாம் எரிக்குந் தன்மையுடையது என்னும் அகங்காரம் தலைக்கேறி, உலக முழுதும் தனக்கு அடங்கி மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும், தற்பெருமை கொண்டிருக்கும் அவர் ஓர் பெண்பால் தன்னை யலட்சியம் செய்யக்கண்டால் சும்மா இருப்பாரா? காலாக்கினி ருத்திரன் போலச் சினந்து பெண்ணே! நான் எவ்வளவு நேரமாக இங்கு நின்றுகொண் டிருக்கிறேன்! உண்டென்றும் இல்லையென்றும் உடனே சொல்லி விடாமல் என்னைக் காக்க வைத்தாயல்லவா? வந்த அதிதிக்கு உபசாரம் செய்வதை விடப் புருடனுக்குத் தொண்டு செய்வது சிரேஷ்டமென்று நினைத்தாய் போலும்! என்னை யாரென்றெண்ணினை? தராதரந் தெரியாமல் சாமானியனாகக் கருதியோ உபேக்ஷை செய்தாய்?'' என்று கூறிக் கண்களை உருட்டி ஒரு பார்வை பார்த்தார். அப்படிப் பார்த்தால் கொக்கைப்போலச் சாம்பலாய் விடுவாள் என்ற எண்ணம் போலும்.

 

அவரது உள்ளக்கருத்தை உள்ளபடி உணர்ந்த அவ்வுத்தமி அவரது பேதைமையைக் குறித்து நகைத்து அவரை நோக்கி ''ஓ பிராம்மணா! என்னைக் கொக்கென்று நினைத்தாயா? நீ ஒன்றுமறியாதவன். தருமநெறி இன்னதென்பதை நீ அறியாய். தெரியாதவன் ஒருவன், தன்னை எல்லாந் தெரிந்தவனாக மதித்து விடுவானானால் பிறர் சொல்வதையும் கேட்கமாட்டான். நீயும் அத்தகைய நிலையிலிருக்கிறா யாகையால் சொன்னாலும் கேட்கப்போகிறதில்லை 'அரை கல்வி முழுமொட்டை' யென்பார்கள். நிறைகுடம் நீர் தளும்பாது. நீ குறைகுடமாகலின் கூத்தாடுகின்றனை. நீ இன்னும் பக்குவப்பட வேண்டியிருக்கிறது. அதற்குள் அவசரப்பட்டுவிட்டாய். அந்த அகங்காரம் உன்னைக் கெடுப்பதற்காக உன் தலைமேல் ஏறி உட்கார்ந்து கொண் டிருக்கிறது. நீ பக்குவப்படவேண்டுமானால் பொறுமையுடன் சாஸ்திர விசாரணை செய்து சாது சங்கப் பழக்கமுற வேண்டும். நான் இவ்வாறு சொல்வதன் காரணமென்னவென்றால், நான் என் கடமையினின்றும் சிறிதும் தவறவேயில்லை. அதற்காக நீ சந்தோஷிக்க வேண்டியதை விட்டுக் கோபங்கொண்டனை. இது நீ அனுபவமற்றவனென்பதைக் காட்டுகின்றது. என் போன்ற மாதர்களின் கடமையைச் சுருக்க மாகக் கூறுகிறேன் கேட்பாயாக.

 

"குலமகட்குத் தெய்வம் கொழுகனே' என்றபடி கற்புடை மடந்தையர்க்குக் காந்தனே கடவுள். ஆகலின் பதிபக்தியே பகவத்பக்தி. கணவன் தொண்டே கடவுள் தொண்டு. கணவன் கட்டளையைக் கடவாமையே சிறந்த தவம்; அதுவே கற்பு. " கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை அதுவே தானமும் தருமமும். காரிகைகளுக்குக் கணவனைத் தவிர வேறு கடவுளில்லை; தவமில்லை; தருமமில்லை; தானமில்லை. நாயகனது குறிப்பறிந்து நடப்பவளே நல்ல மனைவி. "கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி" என்பது முதுமொழி. பர்த்தா எக்காரணத்தாலேனும் கோபித்தாலும் தாங்களும் கோபிக்காமல் பொறுமையைக் கைக்கொள்ளல் வேண்டும். அவர் துன்பம் தம்துன்பமாகவும், அவர் இன்பம் தம்மின்ப மாகவும், அவர் பகைவரைத் தம் பகைவராகவும், அவர் நட்பினரைத் தம்நட்பினராகவும் கருதி யொழுகல் அவசியம். அவர் புசித்தபின் தாம் புசிக்கவேண்டும்; அவர் உறங்கியபின்பு தாம் உறங்கவேண்டும்; அவர் விழித்தெழுமுன் தாம் எழுந்து தந்தசுத்தி செய்து முகங்கழுவி மங்களகரமான முகத்துடன் நாயகர் துயில்விட்டெழுகையில் அவரெதிர் சென்று பாதங்களில் விழுந்து பணிதல் வேண்டும். அன்னிய புருடரைக் காண்டலும், அவர்களைப் புகழ்ந்து பேசுதலும், பிறர் புகழக்கேட்டலும் கூடாவாம். பொதுவாகக் கூறினால், மனைவியர் மணாளரை அன்ன பானாதிகளால் போஷிக்கும் விஷயத்தில் அன்னையைப் போலவும், பணி விடை புரியும் விஷயத்தில் அடிமையைப் போலவும், அவர்களாலா வது குடும்ப நிர்வாகத்தாலாவது எவ்வளவு கஷ்டங்கள் நேரினும் பொறுமையுடன் சகிப்பதில் பூமிதேவியைப் போலவும் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பிறதெய்வங்களைத் தொழாமல் கொண்டாரையே குலதெய்வமாகக் கொண்டொழுகும் கோதையர் சிறப்பை யார் குனிக்க வல்லார்? அன்னார் மழை பெய்யெனப் பெய்யுமே. உலகத்தை யழிக்கக் கருதினும் அக்கணமே அழியுமே. ஆகையால் அந்தண! என் நாயகன் பணிவிடையில் நானிருக்கும்போது சாககாத் பரமசிவனே வந்தாலும் எனக்கு நிமித்தமில்லை. இங்ஙனமாக, நீ தெரியாத்தனத்தால் கோபிப் பது அழகல்ல'வெனக் கூறி முடித்தாள்.

 

அதைக்கேட்ட கௌசிக வேதியர் பயந்து ஸ்தம்பித்து நின்று 'என்ன வியப்பு எனக்கு மாத்திரம் தெரிந்த கொக்கின் சங்கதியை, இவ்வம்மை யார் எங்ஙனமறிந்தார்? கற்பின் மகிமையே மகிமை! இவளல்லவா பாக்கியசாலி! விரதசீலி! எனப் பலவாறு புகழ்ந்து மும்முறை வலம் வந்து முடி அடியில் பட விழுந்து பணிந்து எழுந்து கைகூப்பி, ''தாயே! என்னைப் புனிதனாக்க வேண்டும்' என வேண்டினார். அப்புனிதவதியார், அவரைப்பார்த்து " ஐயா! மிதுலாபுரியில் தருமவியாத னென்றொரு வேடனிருக்கிறான். அவனிடம் சென்று தருமோபதேசம் பெற்றுக்கொள்ளும் " எனக் கூற, வேதியர் மறுபடியும் அவ்வம்மையை நமஸ்கரித்து, '' யான் செய்த தவமே வடிவெடுத்து வந்தாற்போலும் அம்மணி! என் குற்றத்தை மன்னிக்க வேண்டும் தாயே " என்று புகழ்ந்து விடை பெற்று, மிதுலா நகரஞ் சென்று, தருமவியாதனிடம் உபதேசம் பெற்று சன்மார்க்கத்தை யடைந்தார்.

 

பெண்கல்வி.

 (அருமைத்தாயும் அன்புடைப் புத்திரிகளும்.)

 

செங்கற்பட்டிற்கடுத்த ஓர் கிராமத்தில், மிக்க செல்வந்தரும் கிரா மாதிகாரியுமாகிய ஒருவருடைய மனைவியான மனோன்மணியம்மாள், ஓர் நாள் மாலைப்பொழுதில் தன் வீட்டின் பின்புறத்திலிருந்த சோலையில் உல் லாசமாக உலாவிக்கொண்டிருந்தாள். அப்பொழுது வீட்டிற்குள்ளிருந்து இரண்டு பெண்கள் 'அம்மா! அம்மா!'' என்றழைத்த வண்ணமாய் அங்கு வந்தனர். அவ்விருவரும் அவ்வம்மையாருடைய புத்திரிகள். மூத்தவள் பெயர் மரகதம். அவளுக்குச் சுமார் பதினெட்டுப் பிராயமிருக்கும், இளையவள் 15 வயதுடைய மங்களம் என்பவள்.

 

தன் புத்திரிகளைக் கண்டதும் மனோன்மணியம்மாள் சந்தோஷத் துடன் அவர்களைத் தழுவி முத்தமிட்டு,'என் கண்மணிகளே! நீங்கள் என்னைத் தேடி வந்தது ஏதாவது விசேஷத்தை முன்னிட்டோ?' என வினவினாள்.

 

மரகதம். - இல்லையம்மா. ஒன்றும் விசேஷமில்லை. நீங்கள் கொடுத்த புஸ்தகங்களைப் படித்து முடித்துவிட்டோம். முடிந்ததும் வேறு புஸ்தகம் கேட்கலாமென்று உங்களைப் பார்த்தோம். அங்கே இல்லாமையால் இங்குத்தான் இருப்பீர்களென் றெண்ணிவந்தோம்.

 

மனோன்மணி. - என் அருமைக் குழந்தைகளே! உங்களைப் புத்திரிகளாக அடைந்ததற்காக நான் மிக்க பெருமையடைகிறேன். நீங்கள் கல்வி விஷயத்தில் விசேஷ சிரத்தையுடையவர்களா யிருக்கிறீர்கள். அதுதான் மக்களாய்ப் பிறந்தோர்க்கு அழகாகும், ஏனைய அழகுகள் அழகல்ல.

 
 'குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
 மஞ்ச ளழகும் அழகல்ல - நெஞ்சத்து
 நல்லம்யா மென்னும் நடுவு நிலைமையால்
 கல்வி யழகே அழகு.''


என்று கூறியிருக்கின்றனர் பெரியோர்!

 

மங்களம். - என்னருமைத்தாயே! எனக்கொரு சந்தேகம் தோன்றுகின்றது. தங்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளாமல் வேறு யாரிடம் கூறுவேன்? குற்றமாயிருந்தால் மன்னிக்க வேண்டும். அதாவது, பெண்கள் ஏன் படிக்க வேண்டும். அதனால் அவர்கள் அடையும் பயனென்ன?
 

மனோன்மணி. - கண்ணே! நீ அப்படியா கருதுகின்றனை? இதே கருத்துடையவர்கள் நம் நாட்டில் அநேகர் உளர். அவர்கள் அறியாதவர் களென்றே கூறுவேன். எனினும், உன் ஐயத்தை யகற்றுதல் எனது கடமையாகலின், பெண்களுக்குக் கல்வி அத்தியாவசியமே'என்ப தைச் சுருக்கமாய்ச் சில நியாயங்களைக் காட்டி விளக்குகின்றேன் கவனமாய்க் கேள். மரகதம்! நீயும் கவனி.

 

குழைந்தைகாள்!

 

பெண்களுக்குக் கல்வி ஏன் என்று கேட்கும்படியான நிலைமை நேர்ந்ததற்காக, தேசாபிவிருத்தியை விரும்பும் ஒவ்வொருவரும் வருந்தாமலிருக்க முடியாது. இக்கேள்வி எக்காலத்தது? பூர்வகாலத்தது என்போமாயின், இதுவரை ஏன் முடிவு பெறாதிருக்கின்றது? என்னும் ஆசங்கை யுண்டர்கும். கால சக்கரம் சுழன்று வரும் வேகத்தில் பிற்காலத்துண்டான மாறுதல் என்பதே சரியான விடையாகும். பூர்வகாலத்து இவ்வினாவிற்கு இடமில்லாமல் ஆண்களும் பெண்களும் கல்வி கற்றனரென்பது சரித்திரங்களால் விளங்குகின்றது.

 

காலபேதத்தாலுண்டான, 'பெண்களுக்குக் கல்வி ஏன்?' என்னும் கேள்வியானது, பெண்களுக்குக் கண்களேன்? என்பதையே ஒத்திருக்கின்றது.


 ''எண்ணுமெழுத்துங் கண்ணெனத் தகும்.''
 "கண்ணுடைய ரென்போர் கற்றோர் முகத்திரண்டு

 புண்ணுடையர் கல்லா தவர்.''
 ''கல்வியில்லாதவர் மூடர்.''


என்னுமிவை போன்ற ஆன்றோர் வாக்கியங்களால், கல்வியுடையோரே கண்ணும் அறிவும் உடையோராவரென்பது விளங்குகின்றது. கல்வியாலுண்டாம் பயனை நோக்குமிடத்தும்,'அது ஒரு பாலார்க்கு மாத்திரம் உரியதாம்,' எனக் கூறுதற்கிடமின்றி, ஆண் பெண் என்னும் இருபாலார்க்கும் உரியதே என்பது வெளியாகும். திருஷ்டாந்தமாக,

 
 ''அறம்பொருளின்பமும் வீடும் பயக்கும்
 புறங்கடை நல்லிசையும் நாட்டும் - உறுங்கவலொன்று
 உற்றுழியும் கைகொடுக்கும் கல்வியி னூஉங்கில்லை
 சிற்றுயிர்க் குற்ற துணை.''


 ''இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
 தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
 எம்மை யுலகத்தும் யாம்காணேம் கல்வி போல்
 மம்ம ரறுக்கும் மருந்து.''

 

இப்பாடல்களின் பொருளாவது "(கல்வியானது) தருமத்தையும், செல்வத்தையும், இன்பத்தையும், மோக்ஷத்தையும் தரும்; தலைவாயிலில் நல்ல கீர்த்தியையும் நிலைநிறுத்தும்; வரத்தகுவதாகிய ஒரு கவலை நேரிட்ட காலத்தும் உதவி செய்யும்; (ஆதலால்) அற்ப வாழ்நாளையுடைய உயிர்களுக்கு நீங்காத துணை, கல்வியினும் மேம்பட்டது வேறொன்றுமில்லை.'' ''(கல்வியானது) இப்பிறப்பில் பயன் கொடுக்கும்; பிறர்க்குக் கொடுத்தாலும் குறைவுபடாது; கற்றவர்களைப் பிரகாசிக்கச் செய்யும். தாமுள்ளவ ராயிருக்கும் போது கெடுவதில்லை; ஆகையால் எவ்வுலகத்திலும் கல்வியைப் போல அஞ்ஞானத்தை நீக்கும் மருந்தை நாம் கண்டறியோம்,'' என்பதாம்.

 

இச்செய்யுள்களின் பொருளை ஆராயுமிடத்து கல்வி புருஷர்களுக்கே யுரியதன்று; பெண்களுக்கு முரியதேயென்று அறியலாகும்.

 

தவிர, இல்லறம் பெண்களாலேயே நடைபெறுவது.'இல்லாளகத் திருக்க இல்லாததொன்றில்லை, " "இல்லாள் இல்லாதவீடு இடுகாடு, " வீடு வாசல்களைச் சுத்தமாக வைத்திருத்தலும், வருவாய்க்குத் தக்கபடி செலவு செய்து கணக்குகளைச் சரியாக வைத்தலும், கணவன், மாமன், மாமி, உற்றார். அன்னியர் முதலாயினோரிடத்து அவரவர்களுக்கேற்றவாறு நடந்து கொள்ளுதலும், பிள்ளைகளை நல்லவிதமாக வளர்த்தலுமாகிய பலவகைப்பட்ட லீட்டுக்காரியங்களை விமரிசையாக நடத்துவதில் புருடரைவிடப் பெரும் பொறுப்புவாய்ந்த பெண்கள் கல்வி யில்லாதவர்களாயின், தங்கள் கடமையை உணர்ந்து சீராகக் குடித்தனம் செய்ய எவ்வாறு முடியும்?

 

ஒரு வகுப்பார், 'பெண்கள் கல்விகற்றால் புருஷர்களை மதிக்க மாட்டார்கள். கற்புக்கழிவு உண்டாக்கும் தீத்தொழில்களில் பிரவேசிப்பார்கள்) எனக் கூறுவர். 'மணற்கேணியைத் தோண்டுந்தோறும், தோண்டுந்தோறும் நீர் அதிகமாகச் சுரப்பது போல, கல்வியைக் கற்குந்தோறும் கற் குந்தோறும் அறிவு வளரும்' என்று பெரியோர்கள் பேசியிருக்க, கல்வி அகங்காரம் முதலிய தீக்குணங்களை உண்டாக்குமென்பது, அமுதம் மரணத்தை யுண்டாக்கும் என்னும் அபிப்பிராயத்தை யொத்திருக்கின்றது. அப்படியானால், புருஷர்களுக்கு மாத்திரம் அக்குணங்கள் தோன்றாவோ? கல்வியானது அகங்காரத்தைக் கொடுத்துக் கற்பைக் கெடுக்குமென்றால், கல்லாதவர்கள் கர்வமடைவதில்லையா? கற்பிழப்பதில்லையா? அது கல்வியின் குற்றமன்று. அதைக் கையாள்பவரின் குற்றம். தவறுதலாகச் சிலர் அவ்வாறு நடந்து கொள்ளுவதினாலேயே கல்வியை நிராகரித்து விடுதலாகாது. சோறு உண்பதால் சிலர் இறந்துவிடக் காண்கின்றோம். அதனால் சாதத்தை நிராகரித்து விடுவோமா? இவ்வளவேன்? முற்காலத்திலிருந்த சீதை, தமயந்தி, சாவித்ரி, சந்திரமதி முதலிய கற்பரசிகளுடைய சரித்திரங்களைக் கவனித்துப் பார்ப்போமானால், அவர்கள் நன்றாகக் கற்றுணர்ந்தவர்களே யென அறியலாகும். அவர்கள் தீக்குணமுடையவர்களா யிருந் தாரில்லையே. அவர்களும் கல்லாதவர்களே யென்று வைத்துக் கொண்டாலும், கல்விக்கு அதிதேவதையாகிய கலைமகளும் அப்படித்தானா? இல்லை யில்லை.

 

கல்வியாலடைய வேண்டிய பயன் இன்னதென்று அறியாது கற்போரே முன் கூறியபடி துர்க்குணமுடையாராவர். நாம் எவ்வாறு ஒழுக வேண்டுமென்பதைப் பெரியோர் நூல்களில் எழுதிவைக்கின்றனராகையால், அவற்றைப் படித்து அவ்வாறு நடந்து கொள்ள வேண்டியதே கல்விப்பயன். அறிவோர்க்கழகு கற்றுணர்ந்தடங்கல்'' இத்தகை அறிவை விருத்தி செய்யும் கல்வியே ஆண் பெண் இருபாலார்க்கும் தேவை. உலக சரித்திரத்தில் பெரும் புகழ்பெற்று விளங்கும் ஸ்திரீபுமான்களிற் பெரும்பாலோர் சிறந்த கல்வியாளரே யென்பது ஒருவராலும் மறுக்கமுடியாத உண்மை. என்னருமை மக்களே! நான் மிகவும் சுருக்கமாகக் கூறிய விஷயங்கள் உங்கள் சந்தேகத்தைப் போக்கப் போதுமானவை யென் றெண்ணுகின்றேன். ஆகையால் இதுகாறும் நான் சொன்ன விஷயங்களால் ஆண்களைப்போலவே பெண்களும் கல்விகற்றே தீரவேண்டு மென்பது வெள்ளிடைமலை போல் விளங்குகின்றதல்லவா?

 

இஃதிங்ஙனமாக, பெண்கள் கல்விகற்பது உசிதமல்லவென்று கூறுவோர், தம் கக்ஷிக்குச் சாதகமாகக் காட்டும் காரணங்களிலும் ஓரளவு உண்மையுண்டெனினும், அக்காரணங்கள் ஊற்றுக்கு நிற்கக் கூடியவையல்ல. அன்றியும், கல்வியானது ஒருவருடைய இயற்கைக் குணத்தையே விருத்தி செய்யக்கூடியது. திருஷ்டாந்தமாக நாம் பார்க்கிறபடி நியாயாதிபதிகள் நியாய வாதிகள் முதலிய இராஜாங்க உத்தியோகங்களிலுள்ளவர்களில் எத்தனையோபேர் சிறந்த கல்விகற்றவர்களா யிருந்தும், பொதுஜன சௌகரியத்தின் பொருட்டே நாம் இத்தொழிலில் நியமிக்கப்பட்டிருக்கிறோம்' என்னும் உணர்ச்சியின்றித், தங்கள் நிலைமையை யறவே மறந்து பரிதானம் வாங்குதல், அநியாயத் தீர்ப்புகூறல், பொய்யை மெய்யாகவும், மெய்யைப் பொய்யாகவும் தரித்தல், ஏழைகளை வாயில் வந்தவாறு வைதல் முதலிய தீக்காரியங்களை யியற்றுகின்றனரல்லவா? இதற்குக் காரணமென்ன? 'அதிகாரத்திற்கும் பணஞ் சம்பாதிப்பதற்குமே நாம் கல்வி கற்றோ' மென்பது அன்னார் கருத்து. இது கற்றோர் குற்றமேயன்றிக் கல்வியின் குற்றமன்று. நல்ல குணவானிடம் செல்வமிருந்தால், அச்செல்வத்தை அவன் தரும முதலிய நன்மார்க்கத்திற் செலவிடுவான். துஷ்டனிடமிருந்தால் கொலை, சூது, குடி முதலாகிய துன்மார்க்கத்திற் குபயோகப் படுத்துவான். இது செல்வத்தின் குற்றமன்று. இராவண கும்பகர்னர் செய்த தவம் தீமைக்கே துவாகவும், விபீஷணன் செய்த தவம் நன்மைக் கேதுவாகவுமானதேன்? தவம் ஒன்றேயன்றோ? இதுபற்றியே பெரியோர்,

 

சங்கையறப் படித்தாலும் கேட்டாலும்

பிறர்க்குறுதி தனைச் சொன்னாலும்

அங்கணுலகிற் சிறியோர் தாமடங்கி

நடந்து கதியடைய மாட்டார்.

 

எனக் கூறியுள்ளார்.

 

ஆகையால், என்னருமைக் கண்மணிகளே! அநித்தியமாகிய உலக போகமொன்றையே விரும்பி கற்கப்படுங் கல்வி எவ்வகைத் தீச்செயலுக்கும் சாதகமாயிருக்கும். கல்வி கற்போர் அதனால் அடைய வேண்டிய பயனின்னதென வுணர்ந்து கற்றால் மாத்திரம், அவர்கள் ஆண்பாலராயினும் சரி, பெண்பாலராயினும் சரி, அப்பயனை அவசியம் அடைவர். எனினும், துஷ்ட சுபாவிகளும் கல்வி கற்றிருப்பின் எப்படியும் ஒருகாலத்தில் தங் கள் குற்றங்களை யுணர்ந்து நல்வழிப்படுவர். ஆதலின் எச்சுபாவ முடையோர்க்கும் கல்வி அவசியமானதே.

 

நிற்க, பெண்கள் எத்தகைய கல்விக் கேற்றவர்களென்றும் விஷயத்தில் பலர் பலவாறான அபிப்பிராயமுடையவர்களா யிருக்கின்றனர். சாதாரணமாக எழுதவும் வாசிக்கவும் தெரிந்திருந்தால் போதுமென்பார் ஒருசாரார். தற்போது கற்றவர் வகுப்பிற் சேர்ந்த பெண்களிற் பெரும்பாலோர் அத்தகைய குழந்தைக் கல்வியுடையோரே யாவார். இது கல்வி யின் பாற்படுமோ? தேராமற் கற்றது கல்வியேயன்று. இத்தகைய கல்வியினிடத்தில் என்ன பலனை எதிர்பார்க்கமுடியும்? இக்கல்வியே அகங்காராதி துர்க்குணங்களுக்குப் பெரும்பாலும் கருவியாகும்.

 

மற்றொரு சாரார் ஆண்களைப்போலவே பெண்களும் ஆங்கிலங்கற்று, பட்டங்களை யடைந்து, உத்தியோகங்களிலமர்ந்து திரவியஞ் சம்பாதிக்க வேண்டுமென்பர். இக்கல்வியும் புருடனை மதியாதிருப்பதற்குக் காரணமாகும். பார்யா புருஷர்களுக்குள் பரஸ்பரம் இருக்கவேண்டிய அன்பிற்கு இது பெருந்தடை யுண்டாக்கும். இக்கொள்கை அன்னிய நாட்டின ருடையதாகலின், எவ்வளவு தான் அவர்களைப் போல நடிக்க முயலினும், சில சமயங்களில் வெறுப்பையுண்டாக்கி வேதனைப்படுத்தும். அவ்வன்னிய நாட்டாரும் பெண்களைப் புருடர்களைப்போல எல்லாத் தொழிலுக்கும் அனுமதிக்காமல் சில குறிப்பிட்ட தொழில்களில் மாத்திரம் பிரவேசிக்க விடுவதால் அது இயற்கைக்கு மாறானதென்பது வெளியாகின்றது. மேலும் அக்கல்வி, ஒழுக்கத்தை நோக்கமாக் கொண்டது மன்றாம்,
 

இவ்விரு முறைகளையும் விட்டு, பெண்களுக் கெத்தகைய கல்வி வேண்டுமென்பதைக் கூறுகிறேன். க்ருஹிணி, மனைவி, இல்லாள் முதலிய பெயர்கள் பெண்களுக் கிடப்பட்டுள்ளதை யாராய்ந்து நோக்குமிட த்து அவர்கள் வீட்டுக்காரியங்களுக்கே ஏற்றவர்களென்பது ஏற்படுகின்றது. ஆகவே, அவர்களது தொழில்களை யுணர்ந்து அவற்றிற்கேற்ற கல்வியே அவர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டும். கணவனைத் தெய்வமாகப் பாவித்து அவன் இதத்தையே கோரி, அவன் பிரியம் போல் நடந்து, கற்புநிலை தவறாது மனவொற்றுமையுடன் வாழ்தல், வரவுக்குத் தக்கபடி சிக்கனமான செலவு செய்தல், குடும்ப நிர்வாகத்தில் எவ்வளவு கஷ்ட நிஷ்டூரங்கள் நேரினும் பொறுமையுடன் சகித்தல், மாமன் மாமியரைத் தந்தைதாயரைப்போற் கருதி யுபசரித்தல், பக்குவமாக உண்டி சமைத்தல், வீட்டைச் சுத்தமாக வைத்தல், பிள்ளைகளைச் சன்மார்க்கத்திற் பயிற்றல் முதலிய அவர்கள் தொழிலுக்கேற்றபடி இராமாயணம் மகாபாரதம் போன்ற கற்பரசிகளின் சரித்திரங்கள், கணித நூல், குறள் நாலடியார் போன்ற நீதி நூல்கள், பாகசாஸ்திரம், சுகாதார நூல், வைத்திய முறைகள், தையல் முதலியவற்றைக் கற்பிக்கவேண்டும். இலக்கணம், பூகோளம், தேச சரித்திரம் இவற்றைக் கற்பதும் குற்றமாகாது.

 

நாவல்களென வழங்கும் நவீனங்களும் வாசக யோக்கிய முடைய வையென அறிஞர் பலர் அபிப்பிராயப்படினும் அவற்றில் பல குறைகல்வி யுடையோராலும், பலவகைப்பட்ட கொள்கையுடையோராலும் எழுதப் பட்டு வருதலின், கண்டகண்ட கதைகளையெல்லாம் வாசிக்காமல் தக்க பெரியோர்களால் எழுதப்பட்டவைகளையே தேர்ந்து வாசித்தல் வேண்டும். பொதுவகையாற் கூறுமிடத்து நாணம், மடம், அச்சம், பயிர்ப்பென்னும் மாதர் குணத்திற்கு யாதொரு ஹானியுமுண்டாக்காது அவற்றைப் பெருக்கத்தகுந்த நூல்களே பெண்களுக்கேற்றவை யென்னலாம்.

 

மாதர்களே! இதுகாறும் நான் விளக்கிக் கூறியவற்றிலிருந்து பெண்களுக்கு கல்வி யவசியமென்றும், குறைக்கல்வியும் தகுதியற்ற உயர்கல்வி யும் உபயோகமற்றவை யென்றும், பெண்களுக்கேற்ற கல்வி முறை இன் னதென்றும் நீங்கள் அறிந்து கொண்டீர்களல்லவா?

 

மரகதம்: - அருமைத்தாயே! தங்கள் பிரசங்கத்தால் எத்தனையோ முக்கி யமான விஷயங்களை யறிந்தோம். நீங்கள் கூறியவை யாவும் எங்களுள்ளத்தில் பசுமரத்தாணிபோற் பதிந்தன. மாதர் குணம் நான் கெனக் கூறினீர்களே அவற்றை விளங்க உரைக்கக் கோருகிறேன்.

 

மனோன்மணி: - குழந்தாய்! தக்கதே வினவினை. பெண்களாகப் பிறந்தோர் ஒவ்வொருவரும் அவற்றை அறிந்திருக்க வேண்டியது மிகவும் அவசியம். இப்போது பொழுதுபோய்விட்டது. உங்கள் அப்பா வரும் வேளையாயிற்று. வீட்டுக் காரியங்களும் அநேகமிருக்கின்றன. நாளையதினம் அவற்றை உங்களுக்குச் சொல்லுவேன். வீட்டிற்குப் போகலாம் வாருங்கள். (போகிறார்கள்.)

முந்தின நாள் மொழிந்தவாறே, மனோன்மணியம்மாளும் பெண்களிருவரும் தோட்டத்திற்கு வந்தார்கள். அப்பொழுது மரகதம் தன் தாயை நோக்கி 'அம்மா! தாங்கள் மாதர் குணங்களைப்பற்றிக் கூறுவதாகச் சொன்னீர்களல்லவா நேற்று, அவற்றை யிப்பொழுது எங்களுக்கு உரைக்க வேண்டும்' எனக் கேட்டனள். அதற்கு, மனோன்மணியம்மாள் ''பிரியமக்களே! வாருங்கள்; இம் மேடையின் மேல் அமர்ந்து பேசுவோம்" என்றனள். அவ்வாறே யமர்ந்தபின் மரகதம்மாள் பின் வருமாறு கூறத் தொடங்கினாள்: -
 

மகடூக் குணம்.

 

''கண்மணிகளே! இவ் வுலகத்தில் குணமில்லாததாக ஒரு பொருளையேனும் காண்பதரிது. எல்லாப் பொருள்களும் தத்தமக்கேற்றபடி - மிகுதியாகவோ குறைவாகவோ - நன்மையாகவோ தீமையாகவோ - குணமுடையனவாகவே யிருக்கின்றன. இது உலக வியற்கை; ஈஸ்வர சிருஷ்டியின் மகிமை. மானிடன் மட்டுமே, கொள்ளத்தக்கனவும் தகாதனவுமாகிய பல குணங்களினிடையில் தன்னிஷ்டப்படி எடுக்கவும் விடுக்கவும், அதனால் நல்லவனாகவும் தீயவனாகவும், அதனால் நன்மை யடையவும் துன்மை
யடையவும் ஈஸ்வர சிருஷ்டியில் பொதுவாக விடப்பட்டிருக்கிறான். ஒருவன் தன்னை உயர்த்திக் கொள்ளலாம்; தாழ்த்திக்கொள்ளலாம். பிறவியைப் போக்கிக்கொள்ளலாம்; நரகை ஆக்கிக்கொள்ளலாம்.'பெருமையும் சிறுமையும் தான்றர வரும்'; தனக்கு மருத்துவன் தானே'; தானே தனக்குப் பகைவனும் நட்டானும்.'

 

மனிதர்களுக்குள் செயற்கைப் பிரிவுகள் பலவும் இயற்கைப் பிரிவுகள் இரண்டும் உள்ளன. செயற்கை மனிதப்படைப்பு; இயற்கை தேவசிருட்டி. பிராம்மணம் க்ஷத்திரிய முதலானவை செயற்கையிற் சேர்ந்தவை. ஆண் பெண்ணென்பன இயற்கை. (இப்பிரிவுகள் இலக்கணத்தில் பால்களெனப்படும்.) இவ் விருபாலார்க்கு மிருக்க வேண்டிய குணங்கள் பொதுக்குணங்கள், சிறப்புக் குணங்கள் என இருதிறப்படும். ஜீவகாருண்யம், சத்தியம், தருமம் முதலியன பொது அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி என்னு மிந்நான்கும் ஆடவர்க்கும், நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு எனு மிவை மகளிர்க்கு முரிய சிறப்புக் குணங்களாம். ஆடவர் குணம் 'ஆடு உக்குணமென்றும், மகளிர் குணம் 'மகடூ உக் குணமென்றும் கற்றறிந்த புலவர் கழறுவர். (ஆடூ உ = ஆண், மகடூ உ = பெண்.) அவற்றுள் பெண்தன்மைக் குரியதான மகடூஉக் குணங்களைப் பற்றிச் சிறிது விளக்குகின்றேன்.
 

முதலாவது - நாணம். இது வெட்கம், கூச்சம் எனப் பொருள்படும். புருடர்களுக்கும் இஃது வேண்டுவதெனினும், அதற்கும் இதற்கும் மிக்க வேறுபாடுண்டு.

 

கருமத்தால் நாணுதல் நாணுத் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற.

 

''நன்மக்கள் நாணாவது இழிந்த கருமம் காரணமாக நாணுதல்; அஃதன்றி மனமொழி மெய்களின் ஒடுக்கத்தால் வருவனவோ வெனின், அவை அவரளவல்ல, அழகிய குலமகளிர் நாண்கள்.'' என்னும் திருக்குறள் உரையால் நாணத்தின் வேறு பாடு விளங்குவது காண்க. ஆகலின், இங்கு நான் என்பது மனமொழி மெய்களின் ஒடுக்கத்தாலுண்டாவது. அது, பெரும்பாலும் மாதரிடத்து, அந்நிய புருஷர் விஷயமாக நிகழ்வதென்னலாம். தம்மைப் பர புருடர் கண்டவிடத்தும், தாமவரைக்காண நேர்ந்தபொழுதும், அவரெதிர் நில்லாது தலை குனிந்த வண்ணமாய் விலகிச் செல்வது நாண். தனியே வெளிக்கிளம்பாமையும், மிக்க அவசியமாகச் செல்ல நேருங்கால் துணையோடன்றிப் போகாமையும், தெருவாயிலில் நின்று கொண்டு அண்டை அயல் வீட்டு மாதரோடு சம்பாஷித்துக் கொண்டிராமையும், அன்னியர் வீடுகளுக்கு அடிக்கடி ஏகாதிருத்தலும், அவ்வாறு வீடு நுழையும் பெண்களுடன் கூடாமையும் நாண். அன்னிய ஆண் பாலரின் அழகு கல்வி செல்வம் புகழ் முதலாகிய சிறப்புக்களைக் குறித்துச் சிறிதும் சிந்தியாமலும் பேசாமலுமிருத்தலும், பிறர் பேச்ச செவி கொடாதிருத்தலும் நாண். இந்நாண் என்னும் குணமே எல்லா நற்குணங்களையுமாக்கும். விலை மாதர்களே நாணமற்றவராவர்.


      *      *      *      *     முட்டவே
      கூசிநிலை நில்லாக் குலக் கொடியும்

கூசிய வேசியும் கெட்டு விடும். * * *                     (ஔவையார்)

''முழுதும் நாணி அந்த நிலையில் நில்லாத குலமாதும், நாணிய வேசையும் கெட்டுப் போவார்கள்'' என்பது ஆன்றோர் மொழி.

 

இரண்டாவது - மடம். இது எல்லாமறிந்திருப்பினும் அறியாதார் போன்றிருத்தல்.'எனக்கு இது தெரியும், அது தெரியும், எல்லாம் தெரியும். உனக்கென்ன தெரியும், அவளுக்கொன்றும் தெரியாது' எனப் படாங்கு பேசி பறையறையாமல் பெட்டிப் பாம்பு போல அடக்கமாய் இருக்குமிடந் தெரியாமல் இருத்தலே மடமையென்னப்படுவது.
 

மூன்றவது - அச்சம். இது அஞ்சத்தக்கவைகளுக் கஞ்சுதல். முற்காலத்தில் நம் நாட்டுப் பெண்ணரசிகளிற் பலர், மிக்க பராக்கிரமமுடைய வர்களாயிருந்தன ரென்பது சரித்திரங்கள் வாயிலாக அறியக் கிடப்பதோருண்மை யாகலின், வீரதைரியங்களும் அன்னாருக் கத்தியாவசியக மானவையே யென்பது பெறப்படுகின்றது. எனினும், அவை தங்களைத் தாங்களே கற்பினுக்குக் கேடுண்டாகாதவாது காத்துக்கொள்ள வேண்டிய காலங்களில் கையாளப்படல் வேண்டும். மற்றப்படி எப்போதும் யாண்டும் அச்சத்தை அகற்றலாகாது. நினைத்த வளவில் நீராக்கும் தஎமை பெற்றிருந்தும் சீதாபிராட்டியார் இலங்கையில் சிறைப்பட்டுத் துன்புற்றிருந்தது நாணம் மடமை அசசங்களினாலன்றோ! பலர் கூடியிருக்கும் கூட்டத்திற் சென்றால் யாது நேரிடுமோவெனப் பயந்து நிற்பது அச்சம் இல்லம் விட்டேகின் இடுக்கண் என்ன விளையுமோ என்று அச்சமடைதல் வேண்டும். அச்சம் பெண்களின் பிரகிருதியாகலின், அதற்கு மாறாக 'ஏன் புருஷர்களைப்போல் நாமும் இருத்தலாகாது? அஞ்சுதலேன்?' என்று அவ்வாறே நடக்க முயல்வோர் நற்பெண்டிரெனப் பெரியோரால் பேசப்படார். அது மாதரின் ஒழுக்கத்திற்கும் இயற்கைக் குணத்திற்கும் மாறுபட்டது. மாதர் ஆண் தன்மையை யடையின் உலக வாழ்க்கை மாறுபட்டு, இல்லற ஒழுக்கம் சீர்கெட்டு அழியும்.

 

இனி, நான்காவதாகிய பயிர்ப்பென்பது, அன்னிய ஆடவரின் ஆடையே யெனினும் தம்மேந்படின் உடல் அருவருத்தலாகும். தம்முடலைத் தொடற்குரியார் மணாளரே யன்றிப் பிறர் - பெற்ற தந்தையே யெனினும் உடன் பிறந்தாரே யெனினும், உரியராகார். ஆகவே தெருக்களிலும் ஆலயங்களிலும் திரு விழாக்களிலும் மங்கையர்கள் தங்களை யொத்த மகளிரோடு ஒரு புறமாக ஒதுங்கிச் செல்லல் வேண்டும். சங்கையின்றி யாடவர்மீது அங்கம் படும்படி நடத்தலாகாது. (விசேஷ காலங்களில் வேண்டுமென்றே பெண்டுகள் மேல் விழுந்து இடித்துக்கொண்டு போகும் இடக்கர் பலர் எழுந்தருளுவதால், ஆலயங்கள் திருவிழாக்களுக்குப் போகாதிருத்தலே நலமெனத் தோன்றுகிறது. இன்றேல் ஆலயங்களுக்குச் சனக்கூட்டமில்லாத காலத்தில் செல்வதும், திருவிழாக்களை யெட்டவிருந்து நோக்குதலும் தகுதியாகும்.)

 

பெண்மணிகளே! இந் நான்கு குணங்களையும் நங்கையர் நன்கு பெற்றிருத்தல் வேண்டும். புகழேந்திப் புலவர், நளவெண்பாவில் 'தமயந்தியின் பெண் தன்மையாகிய அரசை, இந்நான்கு குணங்களையே யானை குதிரை தேர் காலாள் என்னும் அரசர்க்குரிய நால்வகைச் சேனைகளாகக் கொண்டு அரசாண்டாள்' என்று 'நாற்குணமும் நாற்படையா... ஆளுமே பெண்மை யரசு' என்னும் செய்யுளில் வெகு அழகாகப் பாடியுள்ளார். இதனால் பெண் தன்மையை யழியாமற் காப்பாற்ற இந்நான்கையும் படையாகக் கொள்ள வேண்டும் என்று உணரவேண்டும். அங்ஙனம் கொள்வோர் இம்மை மறுமைகளில் புகழும் இன்பமுமடைவர். இன்றேல் பழியும் பாவமும் பற்றி வருத்தும்.''

 

நான் கற்று வல்லவளல்லவாகலின் இயன்ற வரைக்கும் இயம்பினேன். அவற்றை நீங்கள் மனத்திற்கொண்டு மாண்புடன் ஒழுகுவீராக.

 

மரகதம்: - அம்மா! எம்மை யொத்த பாக்கிய சாலிகள் எவருமிரார். தங்கள் நற்போதனையால் நல்லுணர்வு பெற்றோம். மரணபரியந்தம் இந்நீதிகளைக் கடைப்பிடித்து வாழ்வோம்.
 

மங்கை: - அம்மா! பகற்பொழுது கழிய இன்னும் காலமிருக்கிறது. அதற்குள், என் மனத்துத் தோன்றும் மற்றோ ரையத்தை மாற்றும்படி மன்றாடுகிறேன்.


       மனோன்மணி: - என் கட்டிக் கரும்பே! அது என்ன? சந்தோஷமாகக் கேள்.
 

மரகதம்: - கன்னிகைகள் தங்கள் தாய் தந்தையரால் தெரிந்தெடுக்கப்பட்ட வரை அவர்கள் பிரியப்படி மணப்பது நல்லதா? அல்லது தற்காலத்தில் சிலர் சொல்கிறபடி, தாங்களே தக்கவர்களைக் கண்டறிந்து மணப்பது நல்லதா?

 

மனோன்மணி: - நல்ல கேள்வி மரகதம்! அது அறியத்தக்கதே, கூறுகிறேன்.


மாதர் மணம்.

 

அதைக் குறித்துப் பேசுமுன் விவாகமென்றாலென்ன? எதற்காக விவாகம் செய்து கொள்வது? என்பவைகளைப்பற்றி அறிதல் வேண்டும். எதற்காக வென்று உங்களைக் கேட்கிறேன். நீங்கள் யாது கூறுவீர்கள்?

(பெண்களிருவரும் நாணத்தால் தலை குனிகின்றனர்.) நல்லது. நானே கூறுகிறேன்.

 

மனோன்மணியம்மாள்: - இக்கேள்வி பால்ய விவாகத்திற்குச் சம்பந்தப்பட்டதன்று. மாந்தரது வாழ்க்கையில் விவாகம் ஓர் முக்கியமான மாறுதலை யுண்டு பண்ணுவதாகும். மிக்க இன்பகரமான காலம் அதுவே. அவ்வின்பம் நீடித்திருக்க வேண்டுமென்னும் நோக்கத்துடனே செய்யப் படுகின்றதெனினும், அது இன்பமே பயக்குமோ? அதற்கு மாறாகத் துன்பமே பயக்குமோ? எவரறிவார்? எப்படியாயினும் மணம், மிக்க மேன்மையும் தூய்மையுமுள்ளது. கேவலம் வியாபாரமல்ல. விவாகத்தால் பிணைக்கப்பட்ட இருவர், மரணத்தாலன்றிப் பிரிதற்குரியராகார். பெண்ணினின் பம் புருஷனிடத்தும், புருஷனின்பம் பெண்ணினிடத்தும், ஒப்புவிக்கப் பட்டிருத்தலால், அவ்விருவரும் மனவொற்றுமைப்பட்டிருந்தாலன்றித் தத்தம் இன்பங்களைப் பெற்று வாழுதலியலாது. மனைவியானவள் வெறும் பணிவிடைக்குரியவள், புத்திரோற்பத்தி இயந்திரம் என்று கணவனும் கணவன் தன்னின்பத்திற்காகக் கொண்டவன், நமக்கு வேண்டியவற்றைத் தரற்குரியவன் என்று மனையாளும் நினையாமல், இருவரும் ஒருவருக்கொருவர் உற்ற வாழ்க்கைத் துணைவரென்றும் நல்லறமாகிய இல்லறமென்னும் சகடத்தை இழுத்துச்செல்ல நுகத்தைப் பிடரின் மேற் கொண்டுள்ளவர்களென்றும், அதனாலுண்டாகும் இன்பதுன்பங்களிற் சமவுரிமை யுடைய வர்களென்றும், எவ்வகையிலும் மற்றவர் சுகத்தை நாடுதலே நம் கடமை யென்றும் கருதி யொழுகினாலன்றி, அவர்கள் தம் கடமையை யுணர்ந்த வரும் அதனாலுண்டாம் பயனை யடைபவருமாகார். கேவலம் காமநுகர்ச்சி விவாகத்தின் நோக்கமல்ல. அது மிருக சுபாவம்.

 

தாய் தந்தையர் தக்க வரனைத்தேடித் தம் பெண்களுக்கு விவாகம் செய்விப்பதே நம் நாட்டுத் தொன்றுதொட்ட வழக்கமெனினும், பெண்களே தாம் பிரியப்பட்டவனை மணப்பதும் வழக்கத்தில் இருந்தது. ஆனால், அது, ஆடவருடன் பழகி, அவ்வவர்களின் குணாகுணங்களையறிந்து, பின்பு, தன் மனத்திற்குப் பிடித்தமானவனைத் தேர்ந்தெடுத்து மணந்து கொள்வதென மேல் நாட்டாரால் கையாளப்பட்டு வரும் தற்கால முறை போன்றதன்று. அங்ஙனமாயின், நாணம் அச்சம் முதலியவை நாடுதற்கிடமெங்கே? அவ்வழக்கமும், க்ஷத்திரியர்க்குள்ளேயிருந்ததாகத் தெரிகிறதேயன்றி, ஏனை யோரிடமிருந்ததாகக் காணப்படவில்லை, அதற்கே காந்தருவமணம், சுயம்வரம் எனப்பெயர். காந்தருவமானது, கந்தருவரென்னும் ஓர் வகை தேவப்பகுப்பினருக்குரியது. ஓரரசன் எல்லாத்தேச ராஜகுமாரர்களையும் நாள் குறித்து, ஓலை போக்கிக் கூட்டிய மண்டபத்தில் தன் மகளை வர வழைக்க, அவ்வரசர்களது நாடு நாமம் வீரம் முதலியவற்றைத் தோழிகள் கூறக்கேட்டு, அக்கன்னிகை தனக்குப் பிரியமானவனை மாலை சூட்டி, மணாளனாகக் கொள்வது சுயம்வரம் என்னப்படும். வீர சுல்கமமைத்து அதில் வெற்றி யுற்றோனை வரித்தலுமுண்டு. (இவ் வழக்கமும் முற்காலத்தில் நம் நாட்டு அரசரால் கையாளப்பட்டு வந்தது.)

 

வரனைக் கொள்ளும் விஷயத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அபிப்பிராயமுண்டு. பெண்ணின் தகப்பன் சிறந்த கல்வி கற்றவனையும், தாயார் பணக்காரனையும், சுற்றத்தார் குலப்பழுதில்லாதவனையும், பெண் அழகுள்ளவனையும் அடைய ஆசிப்பது சாதாரணம். இந்நான்கும் உடையோனே யாவராலும் விரும்பப்படுவான்.

 

பெண் தன் பிரியப்படி வரிப்பதாயின், அழகுள்ளவனையே கோருவாள். கல்வி கற்றவளாய் கற்றவனையே காதலிப்பவளாயினும், அவளுடைய வயதும் அவ்வயதிற்றோன்றும் உணர்ச்சியும் அழகையே விரும்பக் கூடியவை. ஏனெனில் அந்த வயதில் காமநுகர்ச்சி யொன்றே அவர்களது முக்கிய நோக்கமாக மேற்பட்டிருக்கும். இக்குறுகிய புத்தியுடன் கூடுவோர் நேசம் நீடித்திராது. காலக்கிரமத்தில் குறைந்து போகும். போகவே பிற்கால ஜீவியம் சுகமற்றதாகும். ஏன் விவாகம் செய்து கொண்டோம்! விவாக மில்லாதிருந்தால் சுகமாயிருக்குமே என்று வருந்த நேரும். அநேக அயோக்கிய வாலிபர் தங்கள் அயோக்கியத்தன்மை தோன்றாதபடி நடித்து, கண் பகட்டான ஆடை அணிகளால் அலங்காரம் செய்து கொண்டு பேதைப் பெண்களை மயக்குந் தொழிலை மேற்கொண்டிருப்பார்கள். அவர்தம் மாய வலையிற் சிக்குண்டமாதர்கள் கதி அதோகதியாக முடியும் ஒருவரையொருவர் காதலித்துக் கொண்டால் தான், அவர்கள் அன்புற்று இன்புற்று வாழ்வார்களென்று சிலர் கருதலாகும். நல்லாரெனக் கருதி, நனி விரும்பிச் சேர்ந்தவர்கள் அங்ஙனஞ் சேர்ந்தபின் தாம் எண்ணியது சரியோ அன்றோ? அதாவது தம்மால் காதலித்துக் கொள்ளப்பட்டவர் தாம் கருதியபடி நற்குணமுடையவரோ அல்லரோ எனக் குற்றம் பார்ப்பதிலேயே கவனமுடையவராவது சாதாரணம். அவ்வாறு பரிசோதனையிற் பிரவேசித்தவர் குற்றங் கண்டுவிட்டால் யாது செய்வார்? அவர் அன்பு யாதாம்! இன்றேல், இம்முறையே சிறந்ததெனக் கையாளும் மேல் நாட்டில் வருடந்தோறும் நூற்றுக்கணக்கான விவாக விடுதலை வழக்குகள் நேரிடுவதேன்? அவர்கள் தத்தமக்குப் பிரியமானவர்களைத் தேடி மணந்தவர்களே யன்றோ? இத்தியாதி காரணங்களால் உற்று நோக்குமிடத்து இம்முறை ஒழுங்கானதாகா தென்பது விவேகிகளுக்கு நன்கு விளங்கும்.

 

பெண்ணின் சுகவாழ்க்கைக்காகக் கவலை கொண்டவர்களில் பெற்றோரினும் சிறந்தவர்களிலர். ஆண் பிள்ளைகளைப் பற்றிய கவலையினும் பெண்களைப்பற்றிய கவலையே நம் நாட்டுப் பெற்றோருக்கதிகம் என்பதை யாவரும் ஒப்புக் கொள்வர். "மானமாய்ப் பிழைக்க வேண்டுமென்றவர்களுக்குப் பெண்கள் பிறந்தால் அதைவிடத் துக்கமுண்டோ? பிறந்த குலத்தையும், புகுந்த குலத்தையும், அவமானமில்லாமல் அவள் காப்பாற்ற வேண்டுமென்று எப்பொழுதும் பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்'' என்று வான்மீகி முனிவர் கூறியுள்ளார். விவாகப்பருவமடைந்த பெண்ணையுடைய தாய் தந்தையர்க்கு இரவும் பகலும் இடைவிடாக் கவலை ''தக்கவரன்! தக்கவரன்! "என்பதே. ஆகலின் தம் மகளின் அழகுக்கும், கல்விக்கும், குணத்திற்கும் ஏற்றபடி எவ்விடத்தில் அழகும், கல்வியும், குணமு முள்ள பிள்ளை கிடைப்பானோவெனத் தேடுவதே அவர்களுடைய ஓயாத வேலை. ஒருவரன் கிடைத்தால் அவனைப்பற்றித் தாங்கள் தெரிந்து கொண்டது மட்டும் போதாதென்று தங்கள் க்ஷேமத்தைக் கோரும் மற்றப் பெரியோர்களையும் தீர விசாரித்து, அவர்கள் சம்மதத்தையும் பெறுவதுமன்றி, பல முறையும் ஜாதகம் முதலியவற்றையும் நன்கு பரிசோதித்துத் திருப்தியடைந்த பிறகே தம்பெண்ணை அப்பிள்ளைக்குக் கொடுத்து, விவாகம் செய்விப்பது வழக்கம். இதைவிட அதிகமாய் ஒரு கன்னிகை கணவனைத் தேர்ந்தெடுக்க வியலுமோ? இது மட்டுமல்ல, தாய்மார் பெண்ணின் சம்மதத்தையும் வெகு சாமார்த்தியமாய் தெரிந்து கொள்ளக் கூடியவர்கள். விவாகம் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே அவன் அப்பெண்ணுக்குப் பிரியப் படாவிட்டால் அவள் முகம் அதை வெளிப்படுத்தி விடும். அதைக் கண்டேனும், அவள் வாய்ப் பிறப்பைக் கொண்டேனும், அல்லது அவள் தோழிகள் மூலமாகவேனும் அவள் கருத்தைத் தாயார் தெரிந்து கொள்வாள்.

 

ஒரு வஸ்துவை நல்லதாகத் தெரிந்தெடுக்க வேண்டுமாயின், அப்பொருளின் குணாகுணங்களைக் கண்டறியும் வன்மையுடையோரே அந்த வேலைக்குத் தக்கவராவார் என்பது உலகப் பிரசித்தம். ஆகவே கிணற்றுத்தவளை போல, உலக வியல்பறியாத ஒரு பெண் எங்ஙனம் தனக்குத் தானே தக்கவரனைத் தேடியடைவாள். இயலாதன்றோ! தக்க யோக்கியதையில்லாதவனிடத்தும் அறியாமையால் ஒரு பெண் தன் கருத்தைச் செலுத்தலாம். அதைக்கொண்டே விவாகம் செய்தல் எங்கேனும் உசித மாகுமோ?

 

ஆகையால், தாய் தந்தையர் பெண்ணின் மனதையுமறிந்து தக்கவரனுக்கு அவளை மணம் செய்விப்பதே உத்தமமான மார்க்கம் என்க. ஆனால் சில விடங்களில் பெண்களைப் பெற்றோர் தங்கள் தரித்திர காரணமாகப் பணக்காரனைப் பார்த்து இரண்டாந்தாரமாகவோ மூன்றாந்தாரமாகவோ - 50 வயது, 60 வயது சென்றவனாயினும் விவாகம் செய்து கொடுத்து விடுகிறார்கள். இவ்வாறு பெண்களைப் பெற்றுப் பிழைப்பிற்கு வழிதேடும் பேதையரைப் பெற்றோராகக் கொண்ட பெண்கள் மாத்திரம் வேண்டு மானால் அவர்கள் சம்மதிக்கா விட்டாலும் கௌரவக் குறை வுண்டாகாதபடி தக்க கணவனைத் தேடி மணந்து கொள்வது குற்றமாகாது என்று கருத வேண்டியிருக்கிறது. இவ்விஷயத்திற் பெற்றோர் மிக்க எச்சரிக் கையாயிருத்தல் வேண்டும். பெண்களின் விவாகம் பெற்றோர் பொருட்டல்ல, பெண்களின் எதிர்கால சுகவாழ்வைக் குறித்தது. பெண்களிலும் பலர் அதிகாரம் ஆபரணம் முதலியவற்றிற் காசைப்பட்டு வயோதிகரை வதுவை செய்து கொள்பவர்களாயிருக்கின்றனர். அவர்களைப்பற்றி நாம் கூறுவது யாது?

 

மக்களே! நான் கூறிய விஷயத்தைக் குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன?
 

மரகதம்: - தாயே! தாங்கள் கூறியவையே மிகப் பொருத்தமாக இருக்கின்றன. தம் க்ஷேமத்தைக் கோரும் தாய் தந்தையரால் தேர்ந்தெடுக்கப்படும் வரனையே மணப்பதாகிய நம் நாட்டு முறையே மிகச் சிறந்ததெனப் பறையறைந்து கூறலாம்.

 

மனோன்மணி: - நேரமாய்விட்டது. வீட்டுக்காரியங்கள் வெகுவாக இருக்கின்றன. வாருங்கள் போவோம்.

 

மாதர் கடமை.

 

துரைத்தனம் செய்வதைவிட குடித்தனம் செய்வது மகா கஷ்டம். ஆண்களுக்குரிய கடமையினும் பெண்களின் கடமையே இல்லற வொழுக்கத்தில் அதிகமாகும். எக்காரியத்தைச் செய்வோராயினும் தத்தம் கடமையை யுணர்ந்திருந்தாலன்றி, தாம் மேற்கொண்ட காரியத்தை இனிது முடிக்க ஏற்றவராகார். ஆகலின், மாதரது கடமைகளும் இன்னின்னவை யென ஒருவாறு காட்டுவது பொருத்தமுடையதாகும்.

 

மாதர் என்று பொதுப்படக் கூறினும், பருவத்திற்கேற்றவாறு அவர்கள் பல பெயராலழைக்கப்படுவர். அவை பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் என்பனவாம். இவற்றுள் ஐந்து முதல் ஏழளவும் பேதை, எட்டு முதல் பதினொன்றளவும் பெதும்பை, பன்னிரண்டு முதல் பதின்மூன்றளவும் மங்கை, பதினான்கு முதல் பத்தொன்பதளவும் மடந்தை, இருபது முதல் இருபத்தைந்தளவும் அரிவை, இருபத்தாறு முதல் முப்பத்தொன்பதளவும் தெரிவை, முப்பத்திரண்டு முதல் நாற்பதளவும் பேரிளம் பெண் என்று பெரியோர் கூறுவர். எனினும், ஈண்டு விவாகமாகாத கன்னிப்பருவத்தார், விவாகமானவர், மருமகளைப் பெற்ற மாமிகளாகும் பருவம் என முப்பிரிவுகளாகப் பிரித்துக் கொண்டு ஒவ்வொரு பருவத்திலும் அவரவர் கடமை யின்னதெனக் கூறுவோம்.

 

கன்னிகைப் பருவமே மாதர்களின் வாழ்நாளாகிய வீட்டிற்கு அஸ்தி பாரம். அஸ்திபாரம் நன்றாயிராவிட்டால் வீடு நில்லாதது போல, பெண்கள் இப்பருவத்திலேயே நற்குண நற்செய்கைகளைக் கைக்கொள்ளப் பழகித் திருத்தமடையாவிட்டால், அவர்கள் ஆயுட்காலமுழுதும் துக்ககரமாகவே முடியும்.

 

இப்பருவத்தில் பெண்களின் உள்ளம் சிறு குழந்தைகளின் உள்ளம் போல நிர்மலமா யிருத்தல் வேண்டும். பொறாமை, வஞ்சனை முதலிய தீய குணங்களுக்கு அவர்கள் மனத்திற் சிறிதும் இடமிருத்தலாகாது. திரவிய சம்பாத்தியத்தினிமித்தம் உத்தியோக சாலைகளுக்குச் சென்று தொழில் புரியவிரும்புவோர் அதற்கேற்ற கல்வியைச் செவ்வனே கற்றபின்னரே, அத்தொழிலிற் பிரவேசிக்க முடியும். அதுபோலவே, பெண்களும் விவாகம் செய்துகொண்ட பிறகு, தங்கள் நாயகர் வீட்டிற் சென்று, இல்லற நெறிக் குரிய காரியங்களை நன்கு நடத்துதற்கு வேண்டிய அறிவைத் தெரிந்து கொள்ளத்தகுந்தது இப்பருவமே. ஆகலின், பெண்கள் இப்பருவத்திலே தானே வீட்டைச் சுத்தஞ் செய்தல், பாத்திரங்களைக் கழுவுதல், சிறுகச் சிறுக சமயல் வேலைகளைத் தாய்மாருடனிருந்து கற்றல், தையல் முதலிய வீட்டுக் காரியங்களைச் செய்தல் ஆகிய இவற்றைத் தெரிந்து கொள்ளல் வேண்டும். செய்வதைச் சீராகச் செய்யப் பழகுதல் முக்கியம். 'அவசரக் கோல மென்று அள்ளித் தெளிக்கலாகாது'. ஒழிந்த நேரங்களில் கற்புடைய பெண்களின் சரித்திரங்களைப் படித்து, அவர்களின் விசேஷங்களைத் தெரிந்து கொண்டு, 'நாமும் அப்படி நடக்க வேண்டு மென்று தினந்தோறும் அவற்றை அனுஷ்டானத்திற் கொண்டுவர வேண்டும். அல்லியரசாணிமாலை, புலந்திரன் களவு முதலியவற்றை வாசிப்பது நிஷ்பிரயோஜனமாகும். நாணம் முதலிய குணங்களை யுடையவர்களாய், அடக்கமுடன், இருக்குமிடம் தெரியாமல் மெல்லப் பேசுவதும் மெல்ல நடப்பதும் பெண்களுக்கழகாகும். எவ்வளவு வேலை செய்தாலும், உடை, கை, கால், முகம் முதலிய அவயவங்கள் சுத்தமாயிருக்கப் பார்த்துக் கொள்ள வேண்டும். நானும் மிக்க வேலை செய்கிறேனென்று வெண்கலக் கடையில் யானை புகுந்தாற் போல, பூமியதிர நடந்து, சட்டியைத் தூக்கிப் பானையின் பேரிலும் பானையைத் தூக்கி சட்டியின் பேரிலும் போட்டுத் தூளாக்கி,'அல்லா பண்டிகை க்கு ஜலாலி புலாலி வேஷம் போடுவதுபோல,' முகத்திலும் ஆடையிலும் அடுப்புக் கரியைப் பூசிக்கொண்டு, விகாரஞ் செய்து கொள்ளாமல் நிதானமாயும் சுத்தமாயும் வீட்டு வேலைகளைச் செய்தல் சிறப்பாகும்.



ஆனால் அச்சிறுமிகளது ஒழுக்கத்திற்குப் பெற்றோரே பெரும் பொறுப் பாளிகளாவர். அவர்களே தக்க உத்தரவாதிகள். பெண்கள் விஷயத்தில் தந்தைமாரினும் தாய்மாரே கண்காணிகளாவார். சொல்லித் திருத்துவது மாத்திரம் போதாது. முன்மாதிரிகளாயிருக்கிற பெற்றோர் ஒழுகிக் காட்டவேண்டும். இன்றேல், புதிய ஆடையில் எந்தச் சாயமும் கெட்டியாகப் பிடிப்பதுபோல், எப்படி வளைத்தாலும் வளைக்கக்கூடிய இளமைப் பருவத்தில், பெண்கள் கெட்ட விஷயத்தை மனத்திற் கொண்டுவிட்டால், பின்பு அதைப் போக்குவது இயலாதகாரியம்.'தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டு மன்றோ? இதுபற்றியே, 'தாயைப் போல பெண், நூலைப்போல சீலை'', 'தாயைப்பார்த்து பெண்ணைக்கொள்' என்னும் பழமொழிகள் வழங்குவன வாயின. பல தாய்மார், தம் பெண்களைச் செல்வமாய் வளர்ப்பதாகப் பாவித்து, எந்த வேலையும் செய்யவிடாமல், ஒன்றுக்கும் உதவாதவளாகும் படி செய்துவிடுகின்றனர். ஆண்பிள்ளைகள் படிப்புவிஷயத்தில் எவ்வளவு கவனிக்கப்படுகின்றார்களோ, அப்படியே பெண்களும் கல்வி வீட்டு வேலை இவ்விரண்டு விஷயத்திலும் கவனிக்கப்படவேண்டு மென்பதை நினையாமல், தம் பெண்களை இவ்வாறு வளர்ப்பது, 'என் பிள்ளைக்கு என்ன குறைவு? இருக்கிற சொத்தை வைத்துக்கொண்டு குந்தித் தின்றாலும் மூன்று தலை முறைக்காகுமே. அவனுக்குப் படிப்பேன்? படித்து ஒருவனிடம் சென்று கைகட்டிக்கொண்டு உத்தியோகம் செய்ய வேண்டுமா?'' என்று ஆண் பிள்ளையைப் பள்ளிக்கனுப்பாமல் மூடனாக வளர்த்தலை யொக்கும். பெண்கள் வேலை செய்ய வேண்டியது, அதைக் கற்றுக்கொள்வதற்காக மாத்திரமல்ல. ஆண்பிள்ளைகளைப்போல, ஓடியாடித்திரிய இயலாதவர்களாகிய பெண்களுக்குச் சிறந்த தேகப்பயிற்சியுமாகும். தங்கள் பெண்களை 'வேலை செய்யக்கூடிய இடங்களில் கொடாமல் வேலைக்காரர்களை வைத்துக் கொண்டிருக்கும் வீடாகப் பார்த்து மணஞ் செய்து கொடுப்போம்' என்னும் சில பணக்காரத் தாய்மார்கள், இவ்வாறு எண்ணி, சிறுவயதில் அப்பெண்களை வேலை செய்யவிடாமல் வளர்த்து, அத்தகைய வீடுகளிலே கொடுக்கிறார்கள். அவர்களும் அதன்படியே போனவிடத்தில் யாதொரு வேலையும் செய்யாமல் உண்பதும் உறங்குவதுமாக காலங்கழிக்கிறார்கள். இதுதான் சுகமெனக் கருதுகிறார்கள். அந்தோ! அவர்கள், மருந்தும் கையுமாயும், பாயும் படுக்கையாயும் இருப்பதற்கு இதுவே காரணமென்பதை யறிவதில்லை. வேலை செய்தால் தான் கைகால் முதலிய உறுப்புகளெல்லாம் உரம் பெற்று தேகாரோக்கிய முண்டாகும். உழைப்பு என்பதைப் பற்றி காலஞ்சென்ற ஸ்ரீமான் - திருமணம் செல்வகேசவராய முதலியாரவர்கள் சுகாதார தருப்பணம் என்னும் வியாசத்தில் எழுதியிருப்பதிலிருந்து ஒரு பாகத்தை இங்கு எடுத்துக் காட்டுவோம்.

 

உழைப்பு: - 'எடுத்தாளாத பொருள் உதவாது. துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும். உழைப்பில்லாத உடல் உரங்கொள்ளாது. உழவு, கைத்தொழில் முதலியவற்றைச் செய்வோர் உடலுரம் பெற்று நோயின்றி, பலாட்டியராக நீடிய ஆயுள் பெற்றிருக்க, யாதொன்றுஞ் செய்யாமல் சோறுண்டு சோம்பியிருப்பவர், தேகபலமின்றி மெலிந்திருப்பதும், அடிக்கடி வைத்தியரைத் தேடித் திரிவதே உத்தியோகமாக இருப்பதும் பிரத்தியக்ஷம். * * * சரீரப்பிரயாசை கொள்ளாவிடின் அவர்கள் அஜீர்ணம், காய்ச்சல், கைகால் பிடிப்பு, ஸ்தூலம், பாரிசவாய்வு, துர்ப்பலம் முதலியவற்றால் பீடிக்கப்பெறுவர். இவர்களுக்கு ஒளஷதங்கள் தற்கால பரிகாரமேயன்றி வேறாகா. இவர்களுக்கு உழைப்பே பரமௌஷதம். இந்தப் பரமௌஷதங் கொள்ளா விடின், இந்த ரோகங்கள் கஷ்ட சாத்தியமும் அசாத்தியமுமான ரோகங்களாகிவிடும். தங்கள் இருப்பிற்கும் வயதுக்கும் தேக இயற்கைக்கும் ஏற்றபடி உழைப்புக் கொள்ளுதல் வேண்டும். இங்ஙனம் செய்வது ஏனையரினும் நகரவாசிகளாவார்க்குப் பின்னும் அவசியம்.

 

ஆகையால் குடும்ப காரியங்களைப் பெண்கள் செய்வது அவர்களுக்கு நன்மையே தரும் என்பதையும், தங்கள் செல்வ வளர்ப்பு அவர்களுக்குத் தீமையே உண்டாக்கும் என்பதையும் தாய்மார்கள் கவனிக்கவேண்டும். விடியற்காலையிலெழுந்து, சாணந்தெளித்தல் முதலிய வேலைகளைச் செய்வ தால் உண்டாகும் நன்மைகளைத் தக்க வைத்தியர்களிடம் கேட்டால் சொல்வார்கள். யாரைப்பார்த்து இவர்கள் இதுவே நாகரீகம், வேலை செய்வது அநாகரீகம்'என்று அறிந்தார்களோ, அந்த மேல்நாட்டாரைக் கேட்டால் இது தப்பிதமென்பதை அவர்களே சொல்லிவிட்டுப் போவார்கள். 'ஜப்பானில் தோட்ட வேலை முதல் சகல வேலைகளையும் வீட்டு எஜமாட்டிகளே செய்வார்கள்' என்பது, அவர்கள் சரித்திரத்தைப் படித்துப் பார்த்தால் விளங்கும். தவிர, இன்னொரு விஷயமும் அத்தாய்மார்கள் கவனிக்கவேண்டும். அதாவது, வேலையாட்கள் எவ்வளவு நம்பிக்கைக்குரியவராயினும், திறமையுள்ளவராயினும் மேல் பார்க்க ஒருவர் இருந்தேயாக வேண்டு மன்றோ? வேலை வாங்கும் எஜமானர் வேலை தெரியாதவராய், 'தங்கள் கை யையே எதிர்பார்க்கிறவர்கள்' என்று தெரிந்தால் அவர்கள் வேலையைச் செய்யமாட்டார்கள்; மேலும், அவர்கள் தங்கள் வருமானத்திலேயே நாட்டமுடையவர்கள். வேலை முடிந்தது' என்னுமளவில் தான் பொறுப்பாளிகள். ஆகலின், நமது இன்ப துன்பங்களையும் லாப நஷ்டங்களையும் கவனித்து அவற்றிற்கேற்ப நடந்து கொள்ள வேண்டு மென்ற கர்மசிரத்தை அவர்களுக்கொன்றுமில்லை. அதனால் அக்குடும்பம் நாளடைவில் சீர்கெட்டுப்போகும்.

 

விவாகமாகாமல் தாய் வீட்டிலிருக்கும் பெண்களின் கடமைகள் இன்னும் பலவுளவெனினும், அவர்களுடைய நன்னடக்கைக்கு அவர்களது தாய்மார்களே காரணராயிருத்தலின் அவற்றைவிட்டு விவாகஞ் செய்து கொண்ட மாதர்களின் கடமைகளைச் சிறிது கூறுவோம்.

 

மாதர்கள் தங்களுக்குப் பெரும்பாலும் புக்ககமே நிலையாவதன்றித் தாய்வீடல்ல என்பதை மறக்கலாகாது. இதை மறவாமலிருந்தால் தாம் புகுந்த வீட்டில் அதாவது கணவர் வீட்டிலுள்ளவர்களோடு ஒற்றுமையாய் வாழ்வது சாத்தியமாகும். ஒரு பெண் விவாகஞ்செய்து கொண்டவுடன் மாமன் மாமி நாத்தி ஓரகத்தி முதலானவர்களைத் தன் தாய்தந்தை சகோதரரைப்போலக் கருதி அவர்களுடன் ஒற்றுமையாய் வாழ வேண்டுமென்று நினைக்க வேண்டுமேயன்றி, கணவனும் தானும் தனித்திருந்து குடித்தனம் செய்ய வேண்டுமென்று எண்ணலாகாது. 'சேர்ந்து வாழ்வதே சிறந்த வலிமை. ஐக்யமும், ஒற்றுமையும், சமாதானமும் உள்ள குடும்பமே சிறந்த குடும்பமாகும். தனிக்குடித்தனம் சிறப்புடையதாகாது. அதனால் உண்டாகும் துன்பங்கள் பல. சேர்ந்து வாழ்வதால் துன்பங்களுண்டாவதா யிருந்தாலும் அதனால் நேரிடும் நன்மைகளை நோக்குமிடத்து அத்துன்பங் கள் அற்பமாம். மாமி முதலானவர்கள் கொடியவர்களாயிருந்தாலும் தான் நடந்து கொள்ளும் விதத்தால் அவர்களைத் திருத்தித் தன் மீது பிரியமுள்ளவர்களாகும்படி செய்வது பெரிய காரியமல்ல. அதைவிட்டு அவர்கள் தனக்குப் பகைவர்கள் என்னும் எண்ணங்கொண்டு தாறுமாறாக நடந்தால் கலகம் ஏற்பட்டு அக்குடும்பம் சீர்கேடடைந்து விடும். பெண் கள் சண்டை முடிவில் ஆண்கள் சண்டையாகி, பெற்றோர்க்கும் - பிள்ளை கும், அண்ணனுக்கும் - தம்பிக்கும் மனவருத்தம் நேர்ந்து ஒரு காலத்தில் குடுமிபிடித்துச் சண்டையிடும்படியான நிலைமை வந்துவிடும். கணவன் மானியாயிருந்தால் 'இதென்னடா பெரிய சங்கடமாயிருக்கிறது. கலியாணம் செய்துகொண்டதும் போதும்; கஷ்டமனுபவிப்பதும் போதும்' என்று மனம் புழுங்குவான்.

 

வீட்டிற்குள் நுழைவது அவனுக்குப் புலியின் குகைக்குள் நுழைவது போலிருக்கும். இவ்வாறு கணவனுடைய மனம் புண்படும்படியாகச் செய் வது மனைவிக்கு அழகாகுமா? அதைவிட ஓர் மனைவி தன் கணவனுக்குச் செய்யும் துன்பம் வேறில்லை. ஆகையால் விவாகம் செய்து கொண்ட பெண், தன் மாமன் மாமிமார்களுக்கடங்கி அவர்களுக்கு வேண்டிய பணி விடைகளைச் செய்தொழுகல் வேண்டும். அவளே புத்திசாலி; சமர்த்தி; பதிவிரதை.
 

சில வருஷங்களுக்கு முன் ஒரு கிராமத்தில் ஒரு குடியானவனிருந்தான். அவனுக்கு ஏழு ஆண் பிள்ளைகளிருந்தார்கள். அவ்வேழு பேருக்கும் விவாகமாயிற்று. அவர்கள் வயிற்றில் முப்பத்திரண்டு குழந்தைகள் பிறந்தன. அவ்வெழுவரும் தங்கள் தங்கள் கடமைகளைச் செவ்வையாகச் செய்து வந்தனர். அவர் தம் மனைவியரும் அப்படியே மாமன் மாமிகளுக்கடங்கி அவர்கள் சொற்படி நடந்து, சண்டை சச்சரவின்றிச் சமாதானமாய்.  தங்கள் வேலைகளைச் செய்து வந்தார்கள். யாவரும் ஒற்றுமையாய் உழைத்ததால் நாளுக்கு நாள் செல்வமும் அதிகரித்துக் கொண்டே வந்தது. அப்பிள்ளைகளும் பெரியவர்களானார்கள். அவர்களுக்கும் விவாகம் நடந்தது. அவர்களுக்கும் பல குழந்தைகள் பிறந்தன.

 

சகோதரிகளே! இக்குடும்பத்தில் மொத்தம் எத்தனை பேரிருப்பார்களென்று நினைக்கிறீர்கள். குறைந்தபக்ஷம் நூறுக்குக் குறைவில்லை. சாப்பாட்டிற்கு உட்கார்ந்தால் மூன்று பந்தி நான்கு பந்தியாகும். இக்குடும்பம் நித்யகல்யாணக் குடும்பமல்லவா? இப்படியுமிருக்குமோ? வென்று சந்தேகம் வேண்டாம். இது உண்மையான விஷயமேயன்றிக் கட்டுக்கதையல்ல. நம் நாட்டுப் பண்டைக்கால குடும்பங்களெல்லாம் இப்படித்தானிருந்தன.
 

அக்குடும்பத் தலைவர்கள் தாங்கள் மிகவும் வயோதிகர்களாய் விட்ட மையாலும், தங்களுக்குப் பிறகு ஒற்றுமைக்குப் பங்கம் வந்து விடுமோ என்னும் சந்தேகத்தாலும், பொறாமைக்காரர்கள் கண் திருஷ்டிபட்டால் தீமை சம்பவிக்குமே யென்ற பயத்தாலும், உள்ள ஆஸ்தியைப் பங்கிட்டுக் கொடுத்து எல்லோரையும் தனித்தனி வீடுகளில் குடியமர்த்திவிட்டார்கள். அவ்வொரு குடும்பமே ஒரு கிராமமாய்விட்டது.

 

இப்பொழுது அக்குடும்பம் அவ்வளவு ஒற்றுமையாய் வாழ்ந்ததற்கு
 யார் காரணராயிருந்தவர்? பெண்களேயன்றோ? பெண்களுக்குள் ஒற்றுமையில்லாமலிருந்தால் அக்குடும்பம் எப்பொழுதோ சின்னாபின்னப் பட்டுப் போயிருக்கும். ஆதலால்,

 

விவாகஞ் செய்து கொண்ட மாது தன் அருமையான கணவனைப் பெற்று வளர்த்த மாமன் மாமிகளைத் தன் பெற்றோரைப்போல நேசித்து அடங்கி நடத்தல் வேண்டும். இதுவே அவளுடைய முதற்கடமை.

 

இரண்டாவது. - கணவனுடன் பிறந்தோர், ஓரகத்திகள் முதலானவர்களிடம் பட்சமாய் நடந்துகொள்ள வேண்டும். கணவனைத் தன்னைச் சேர்ந்தவனென்றும், அவன் வீட்டைத் தன்வீடென்றும், அவன் பொருளைத் தன் பொருளென்றும் சொந்தம் பாராட்டுவது போல, அவனைச் சேர்ந்தோரையும் தன்னைச் சேர்ந்தோராகப் பாவித்து, அவர்களுடைய நன்மை தீமைகளைத் தன்னுடைய நன்மை தீமைகளாக வெண்ணி, அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்யவேண்டும். ஒருவேளை கணவனே அவர்களை வெறுத்தாலும் தான் அவர்களுக்காகப் பரிந்து பேசி அவர்களை ஆதரிக்க வேண்டும்.

 

மூன்றவது. - கணவன் கட்டளையை மீறி நடத்தல் கூடாது. இதுவே கற்பென்று சொல்லப்படுவது. 'கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை' என்றார் ஒளவைப்பிராட்டியார். கணவன் எதைச் செய்யச்சொன்னாலும் உடனே அவன் மனங்கோணாதபடி அக்காரியத்தைச் செய்தல் வேண்டும். அவனுக்குப் பிரியமில்லாத காரியத்தைச் செய்யலாகாது.
 

நான்காவது. - கணவனுடைய சம்பாதனையால் கிடைத்த பொருள் மிகச்சொற்பமாயினும், அதைக்கொண்டு திருப்தியடைந்து அவ்வருவாய்க்குத் தக்கபடி செட்டாகச் செலவு செய்து தன் வீட்டு ஊழல்களைப் பிறரறியாதபடி கௌரவமாய்க் குடித்தனம் செய்ய வேண்டும். கணவனுடைய கையில் பணமில்லாததை யறிந்தும்'அதுவேண்டும், இதுவேண்டும்' என்று வாதாடி அவனை அலைக்கழிக்கலாகாது.

 

ஐந்தாவது. - வீட்டையும் வீட்டுச் சாமான்களையும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் வைத்து, கூடுமானவரையில் குடும்பத்திலுள்ளவர்கள் ஆரோக்கியமும் ஆனந்தமும் உள்ளவர்களாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளல் வேண்டும்.

 

ஆறுவது. - வீட்டில் யாதொரு வேலையுமில்லாமலிருக்குங் காலத்தில் குட்டி போட்ட நாய்போல், வீடு வீடாக நுழைந்து அவள் அப்படி, இவள் இப்படி' என்று உப்புக்கும் ஊறுகாய்க்கும் உபயோகமில்லாத வார்த்தைகளைப் பேசி, ஊரிழவை யெல்லாம் தூக்கித் தலைமேல் போட்டுக்கொண்டு திரியலாகாது. வீண் வம்பு சண்டை வருவது இதனால் தான். எப்போதும் நாம் பேசும் பேச்சுகள் நமக்காவது பிறருக்காவது, இகத்திற்காவது பரத்திற்காவது ஏதேனும் பயனைத் தரக்கூடியவைகளாக இருத்தல் வேண்டுமேயல்லாமல், ஒரு பிரயோஜனமுமில்லாத சொற்களைப் பேசலாகாது.' அவ்வாறு பேசுவோர் மனிதராகார்' என்று கூறுகிறார் திருவள்ளுவர். ஆகையால் வேலையில்லாதிருக்கும் சமயங்களில் நல்ல புஸ்த கங்களைப் படித்தல் அல்லது தையல் முதலிய காரியங்களைச் செய்தல் மிகவும் நல்லது.

 

ஏழாவது. - கோபம், அகங்காரம் வெடித்த சொல் முதலிய தீக்குணங்களில்லாமல் சகிப்புத்தன்மை, தன்னடக்கம், மிருது வசனம் முதலிய நற்குணங்களைக் கொண்டிருத்தல் வேண்டும்.
 

எட்டாவது. - அன்னிய ஆடவரைத் தந்தையராகவும் சகோதரராகவும் பாவிக்க வேண்டும். பிறருடைய அழகு செல்வம் மேன்மை முதலியவற்றைக் குறித்து அடிக்கடி பேசுதலும், பிறர் பேசக்கேட்டலும் அநுசிதமாகும். தெருவாயிலில் நின்று கொண்டு போவாரையும் வருவா ரையும் பார்த்தவண்ணம் இருத்தலாகாது. தனிவழி போதலும் கூடாது.

 

ஒன்பதாவது. - பிள்ளைகளை நல்லொழுக்கத்திற் பழக்குவதில் வெகு சாக்கிரதையா யிருக்கவேண்டும். அவர்கள் கெட்டவார்த்தைகளைப் பேசாமலும் கெட்ட காரியங்களைச் செய்யாமலுமிருக்கப் பார்த்துக் கொள்ள வேண்டும். 'அப்பாவை உதை, அண்ணனைத் திட்டு' என்னு மிவைபோன்ற சொற்களைக் கற்பிக்கலாகாது. அவை அப்பொழுது செவிக்கினிமை யானவையாகத் தோன்றும். அவ்வார்த்தைகளே அப்பிள்ளைகள் பெரியோராகுங் காலத்துப் பேசினால் வெறுப்பை யுண்டாக்கு மல்லவா? அவர்களே அப்படிப் பேசினாலும் அது தப்புவார்த்தை, அப்படிச் சொல்லாதே' என்று இனிமையாகப் பேசி அதைத் தடுத்தல் அவசியம். பிள்ளைகளை எதிரில் வைத்துக் கொண்டு தீயவார்த்தைகளாடுதல் முதலிய எவ்வகைத் தீக்காரியத்தையும் செய்யலாகாது. பெரியோர் செய்கிறபடி செய்ய முயல்வது சிறுவரின் சுபாவம். ஆகையால், பிள்ளைகளின் நன்மையை விரும்பியாவது பெற்றோர் நல்லொழுக்கத்தில் நடந்து காட்ட வேண்டும்.

 

பத்தாவது. - பெரியாரைப் பணிதல், தெய்வபக்தி, தான தருமம் முதலிய இல்லற வொழுக்கங்களைத் தவறாமல் கடைப்பிடித்தொழுகல் வேண்டும்.

 

இவ்வாறு விவாகமான பின் மாதர் அனுஷ்டிக்க வேண்டிய கடமைகள் இன்னம் அநேகமிருக்கின்றன. அவற்றைத் தனித்தனியாக எடுத்துக் கூறுதல் அசாத்தியமான காரியம். ஆகையால், சில முக்கியமான விஷயங்களை மட்டும் இங்குச் சுருக்கிக்கூற நேர்ந்தது. இனி, மாதர், மேற்கூறியவாறு இல்லற நடத்தி மக்களைப் பெற்று அப்பிள்ளைகளுக்கு மணம் முடித்து மருமக்களைப் பெற்ற காலத்து அவர்தம் கடமைகள் யாவை? என்பதை யாராயவேண்டிய தவசியமாகலின் அவற்றையும் சிறிது விளக்குவாம்.

 

மாமியானவள் மருமகளை மகளைப்போலப் பாவிக்க வேண்டும். உண் மையில் யோசிக்குமிடத்து மருமகளே அவளுக்கு உற்ற துணையாயிருந்து அந்தியகாலத்தில் உதவி செய்பவள். மகளோ வேறு வீட்டிற்குப் போய் விடுவாள். 'ஆற்றிற்கு அக்கரையிலுள்ள பெண் ஆபத்திற்குதவாள்' என்பது ஆன்றோர் அனுபவமொழி. மாமி அவளை மகளைப் போலக் கருதி யொழுகினால் அவளும் மாமியைத் தாயெனக்கருதி அன்பு கொள்வாள். இந்நிலைமையில் மாமிகளுக்கு மிக்க பெருந்தன்மையான குணம் வேண்டிய தவசியம். மருமகள் தன் மகனுக்குப் பிரியமானவள் என்பதை மாமி மறக்கலாகாது. அவள் ஏதாவது தப்பிதம் செய்தாலும் இனிய வார்த்தைகளால் அவளைத் திருத்த வேண்டுமேயன்றி அதிகாரம் வந்துவிட்டதே யென்று தாறுமாறாகத் திட்டுவதும் இம்சிப்பதும், கண்டவர்களிடத்தி லெல்லாம் சொல்லித் தூற்றுவதும் அடாத செய்கைகளாம். அதனால் உள்ள மரியாதை போய்விடும். "ஓர் ஊரில் ஒருத்தி தன் மருமகளைக் கொள்ளிக்கட்டை கொண்டு அடித்தாள். மருமகள் மரியாதைக்கு இரண்ட்டிகளைப் பொறுத்துக்கொண்டாள். மூன்றாவதடியும் விழுந்தது. வந்து விட்டது கோபம் அவளுக்கும். கையில் தயாராய் வைத்துக்கொண்டிருந்த விளக்கு மாற்றினால் வைத்தாள் மாமியாரை. ''இவ்வாறு காரியம் மிஞ்சிப் போன பிறகு என்ன செய்வது?' பெருமையும் சிறுமையும் தான் தர வருமே'. மகனுக்கும் தாயாரிடத்தில் வெறுப்புண்டாய் விடும். தாயார் தன் மனைவியிடம் பிரியமாயிருப்பதாகத் தெரிந்தால் மகன் தாயாரைக் கௌரவப்படுத்தி எக்காரியத்தையும் தாயாரின் உத்தரவின்படி செய்வான். பல சொல்வானேன்? மாமியானவள் மருமகளைத் தன் மகளைவிட ஒரு பங்கு அதிகமாக நேசிக்க வேண்டும். இந்த எண்ணம் ஒன்று மாத்திரமிருந்தால் போதும். எல்லா மேன்மைகளும் உண்டாகும்  

 

குறிப்பு: - இதனைப் பெண்மக்களனைவரும் கவனிக்க வேண்டுவது அவசியம். இதிற்கூறியபடி நடப்பவர்களே தாங்கள் பிறந்த வீட்டுக்கும் புகுந்த வீட்டுக்கும் பெரும் புகழை நிலைக்கச் செய்வதுடன், மாமிமார் நாத்திமார் முதலிய யாவராலும் 'குலதெய்வம்' என்று கொண்டாடப் பெறுவார்கள். பின்னும் 'ஆயிரங்காலத்துப் பயிர்' என்று தங்களுக் கேற்பட்டுள்ள உயர்தரப் பெயரையும் சிறப்பித்துக் கொள்ளுவார்கள். இல்லறத்திற்குத் தகுந்த நல்ல குணங்களும் நன்னடக்கைகளும் பெண் மக்களிடம் இல்லாவிடின், அந்த வாழ்வானது ஐசுவரியத்தால் எவ்வளவு மேம்பாடடைந்திருந்தாலும், பயனற்றதாம்.

 

சகல கலாபண்டி தோத்தமராகிய ஆஞ்சநேயர், ஸ்ரீராமபிரானிடம், ஒரு சமயம், சீதாபிராட்டியைக் குறித்துப் பேசிய போது,


 * "உன் பெருந்தேவி யென்னும் உரிமைக்கும் உன்னைப்பெற்ற, மன்பெருமருகி யென்னும் வாய்மைக்கும் மிதிலை மன்னன், தன் பெருந் தனையை யென்னும் தகைமைக்கும் தலைமை சான்றாள்'' என்றும்,

 

* "உன்குலம் உன்னதாக்கி உயர்புகழ்க்கு ஒருத்தியாய
 தன்குலம் தன்னதாக்கித் தன்னையித் தனிமை செய்தான்
 வன்குலம் கூற்றுக் கீந்து வானவர் குலத்தை வாழ்வித்து
 என்குலம் எனக்குத் தந்தாள்'' என்றும் புகழ்ந்துள்ளார்.

 

ஆகையால், பெண்மக்கள் சுகம் அனுபவிக்கும் காலத்திலும், துக்கம் அனுபவிக்க நேர்ந்த காலத்திலும் சம நிலையிலிருந்து குடும்பத்தார்க்கும் பிறர்க்கும் தம் விஷயத்தில் சந்தோஷமும் நன் மதிப்பும் உண்டாகும்படி கண்ணுங்கருத்துமா யிருந்து நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு நடந்து கொள்பவரே சீதாபிராட்டியைப் போல் புகழப்படுவார்கள்.

 

பத்திரிகாசிரியர்.

 

 

* உரிமை - பாத்தியதை; மன் - தசரதன்; வாய்மை - உண்மை; தனை யை - மகள்; தகைமை - பெருமை; தலைமை சான்றாள் - முதன்மையாக நின் றாள்; உன்குலம் - புகுந்த வீடு; தன்குலம் - பிறந்தவீடு; தனிமை - பிரிவு; செய்தான் - செய்த இராவணனுடைய; வன்குலம் - கொடிய குலம்; கூற்று - எமன்; என்குலம் - தாசத்துவம் (தொண்டக்குலம்).)

 

கற்பிலக்கணம்.

இதுவரையில் மாதர் கடமையைச் சுருக்கமாகக் கூறினோம். அக் கடமைகளுக்குள் கற்பும் ஒன்றாகையால், முன்னே கற்பின் அவசியத்தைப் பற்றி மாத்திரம் சுருக்கமாகக் கூறினோம். ஆயினும் அது மிகவும் முக்கிய மான விஷயமாகையால் தனியே விவரித்து இங்குக் கூறுதலவசியமாகும். இங்குக் கூறப்படும் கற்பிலக்கணம்'காசிகண்டம் 'என்னும் நூலில், கற் பிலக்கணங் கூறிய அத்தியாயத்தைத் தழுவி எழுதப்படுகின்றது. ஆகலின் சகோதரிகள் தங்களுக்கு உயிர் போன்றதாகிய இக்கற்பினிலக்கணத்தை நன்குணர்ந்து அதன்படி ஒழுகுவாராயின் இம்மையிற் புகழும் மறுமையில் முத்தியும் சித்திக்கும்.

 

நாயகன் உணவு கொண்ட பிறகு தான் உண்ணலும், அவன் நித்திரை செய்தபின்பு தான் நித்திரை செய்தலும், அவன் நித்திரை நீங்கி எழுந்திருப்பதற்கு முன்னமே தான் நித்திரையினின் றெழுந்திருப்பதும் கற்புடைய பெண்ணின் இலக்கணமாம். தூங்குங் காலத்திலும் மட்டித்தூக்கம் தூங்கலாகாது; கணவன் எச்சமயத்தில் எழுப்பினாலும் உடனே விழித்துக் கொள்ளும்படி மிருதுவாகத் தூங்க வேண்டும். திருவள்ளுவர் மனைவியாகிய வாசுகி இப்படித்தான் நடந்துகொண்டிருந்தார். அவ்வம்மையார் இறந்தபிறகு அவர் கணவர் விசனித்துப் பின் வருமாறு பாடுகிறார்.

 

அடிசிற் கினியாளே அன்புடையாளே

படி சொற்றவறாத பாவாய் - அடிவருடிப்
      பின் தூங்கி முன்னெழுந்த பேதையே போதியோ
      என் தூங்கு மென்க ணிரா

 

இவரல்லவா உத்தமி! கற்புக்கரசி. மேலும், கற்புடைய மாதர் தங்கள் கணவர் வீட்டிலிருக்குங்காலத்தில், அவர் கண்டு களிக்கும்படி தம்மை ஆடை அணிகளால் அலங்கரித்துக் கொள்வர். கணவர் வெளியிற் சென்றிருந்தால் அவ்வாறு அலங்கரித்துக் கொள்ளார். (இதைக்குறித்து முன்னே "திரௌபதியும் சத்தியபாமையும்' என்ற பாகத்தில் விளக்கமாக எழுதப் பட்ட து.)

 

ஏதேனு மொரு காரணத்தால் கணவர் கோபித்துக்கொண்டால், தாமும் அவரெதிரில் நின்று மனவெறுப்படன் பேசலாகாது. தங்கள் வீட்டைவிட்டு வெளியில் செல்லலாகாது. அவ்வாறு வெளியில் செல்லும் பெண்களின் முகத்தைப் பார்க்கவும் கற்புடைய மாதர் மனங்கூசுவார்கள். கற்புடைய பெண்கள் தங்கள் கணவர் வந்து ஏதாவதொரு காரியத்தைக் குறித்து 'அதைச் செய்தீர்களா?' என்று கேட்டால், செய்துவிட்டோம்' என்று சொல்லுவார்கள், திருவிழா முதலிய வேடிக்கைகளைப் பார்த்தல், அரிய விரதங்களை யனுஷ்டித்தல், புண்ணிய தீர்த்தங்களில் முழுகுதல், தேவர்களை வணங்கித் துதித்தல் முதலியவற்றைக் கணவனுத்தரவின்றிச் செய்யமாட்டார்கள். தமது ஆபரணம் முதலானவைகளைக் கணவர் வேறு மாதர்களுக்குக் கொடுத்தால் கோபிக்கமாட்டார்கள். முதுமைப் பருவமுள்ளவர்களில்லாத வேற்றிடங்களுக்குச் செல்லார். அயலார் வீட்டினுள் நுழையார். நாயகனுடைய ஆயுட்காலம் குறைவு படுமாகையால் அவன் பெயரை மனைவி சொல்லலாகாது. நாயகன் உட்கார்ந்த பின்பு மனைவி உட்காரவேண்டுமே யல்லாமல் அவன் நின்று கொண்டிருக்கும் போது தான் உட்காருதல் கூடாது. கணவனது மிச்சிலைப் புசிப்பதில் அருவருப்படையலாகாது. கற்புத்தன்மையுடைய பெண்கள் தமது நாயகரது கிருபையால் துறவிகளுக்கும், சற்றத்தாருக்கும், ஏவலாளருக்கும், குலதெய்வத்திற்கும், பசுக்களுக்கும், விருந்தினருக்கும், தமது வமிசத்தில் இறந்துள்ள பிதுர் களுக்கும் பாகித்து உண்ணுவார். இது இல்லறத்தாரது கடமை. தங்கள் வயிற்றை மாத்திரம் நிரப்பிக்கொள்ளுதல் இல்லறத்தார் கடமையல்ல. இல்லறத்தார் கடமையை நாயனார்,


 துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
 இல்வாழ்வா னென்பான் துணை.


 தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு
 ஐம்புலத்தா றோம்பல் தலை.


 இல்வாழ்வா னென்பான் இயல்புடைய மூவர்க்கும்
 நல்லாற்றி னின்ற துணை.


என்னும் குறள்களால் விளக்கியிருத்தலைக் காண்க.

 

''கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி' என்றபடி, கணவனுக்கு ஆகவேண்டிய காரியங்களை அவன் சொல்லாததற்கு முன்னமே குறிப்பறிந்து செய்வதே மனைவிக்கு அழகாகும். தனது நாயகனது குற்றங்களைப் பலருமறியும்படித் தூற்றுபவள் நல்ல மனைவியாக மாட்டாள். அவளே அவனுக்கு எமன். 'தூற்றும் பெண்டிர் கூற்றெனத் தகும்.'' உத்தம ஸ்திரீகள் அவ்வாறு தூற்றும் பெண்களின் முகத்தையும் பார்க்க மாட்டார்கள். ''தீயாரைக் காண்பதுவும் தீதே " யல்லவா? கணவனது வரும்படியைக் கொண்டு இல்வாழ்ககைக்கு வேண்டியவற்றைப் பாதுகாத்துச சேர்த்து வைப்பார்கள். மஞ்சளை முகத்தில் பூசி கொள்வதால் கணவனுக்கு ஆயுள் விருத்தியுண்டா குமாகையால், உத்தம ஸ்திரீகள் அழகிய மஞ்சளைப் பூசுவார்கள்.'' கற்பெனப்படுவது சொல் திறம்பாமை, " ஆகையால் பதிவிரதைகளுக்கு நாயகனது உத்தரவை மீறி நடவாமல் அவர் உத்தரவின்படி நடப்பது தான் நலயே தருமமும், தவமும், கடவுள் பூசையுமாகும். கணவன் சிறிதும் அழகில்லாதவனாயினும், மிக்க வியாதியாளனாயினும், விருத்தாப்பியனாயிருந்தாலும் குற்றஞ் சொல்லாமல் அவனோடு பொருந்தி வாழ்வார்கள் நற்குணமுள்ள நாரியர்

 

கொண்ட கணவன் குரூபியே யானாலும்

பண்டு தான் செய்த பலனெனவே – கண்டு கொண்டு

குற்றமென எண்ணி மனம் கோணாதவன் பணியைப்

பற்றி மிகச செய்வார் பரிந்து

 

என்பது பெரியோர் வாக்கியம். நளாயனியே இதற்கு சாக்ஷி.

 

நாயகன் நித்திரை செய்தால் தாமும் நித்திரை செய்தலும், அவர் வருத்தமடைந்தால் தாமும் அவர் போல் வருத்தமடைதலும், அவர் சந்தோஷமடைந்தால் தாமும் சந்தோஷத்தோடிருத்தலுமே கற்புடைய காரிகையர்க்குப் பெரிய தவமாம். பெண்களுக்குக் கணவனே கடவுள். ''குலமகட் குத் தெய்வம் கொழுநனே'' என்று குமரகுருசுவாமிகள் கூறியுள்ளார். அவ்வாறு நினைத்தொழுகும் கற்புடையவள் நினைத்தால் முடியாத காரிய மொன்றுமில்லை. பெயயென்றால் மழை பெய்யும். மற்றும் எவ்வகைக் காரியமும் முடியும். இதனால் தான். 'தெய்வந்தொழாள் கொழுநற் றொழுதெழுவாள், பெய்யெனப் பெய்யும் மழை" என்று பொய்யாமொழியார் புகன்றனர். மாசருதுவை யடைந்திருக்குங் காலத்தில் விலகியிருக்கும் மூன்று நாட்களிலும் தங்கள் முகத்தைக் கணவருக்குக் காட்டாமலும், தாங்கள் பேசும் வார்த்தை அவர் காதில் படாமலுமிருந்து, நான்காம் நாள் நீராடிய பிறகு அவர்களது முகத்தைப் பார்த்துப் பேசுவது பெண்களது ஒழுக்கமாம். புண்ணிய தீர்த்தங்களில் ஸ்நானம் செய்யும்பொழுது நாயகர் வேற்றூருக்குச் சென்றிருந்தால் அவரை அன்போடு மனத்திலெண்ணி நீராடிச் சூரியதரிசனம் செய்யவேண்டும்.

 

மாமன் மாமிகளெதிரில் சிரித்துப் பேசலாகாது. சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது கணவன் கூப்பிட்டால் உண்பதை விட்டு ஆவலுடன் அவரண்டையிற் செல்லவேண்டும்.

 

''திருவள்ளுவ நாயனார் மனைவியாராகிய வாசுகி ஒருநாள் கிணற்றில் நீர் சேந்திக் கொண்டிருக்கையில் நாயனார் அழைத்தார். அவர் அப்படியே நீர்க்குடத்தை விட்டுவிட்டு வந்துவிட்டார். மறுபடியும் போய்ப் பார்க்கும் பொழுது அந்தக் குடமானது விட்டு வந்த விதமாகவே பாதிக் கிணற்றில் தொங்கிக்கொண்டிருந்தது, " என்பதாகச் சரித்திரமுண்டு.

 

பெண்கள் தங்கள் தந்தை, தாய், குரு, பிள்ளைகள் இவர்களைவிட நாயகனிடத்தில் மிகுந்த ஆசையுடையவராய் மகிழ்ந்திருத்தலவசியம். உரலின் மேலும், அம்மியின் மேலும், உலக்கையின் மேலும், வாயிற்படியின் மேலும், முறத்தின் மேலும் உட்காரலாகாது. அப்படிச் செய்தால் செல்வம் நீங்கி வறுமை ஓங்குமென்று பெரியோர் சொல்வர். தமக்குரிய கணவரை மனம் விரும்பி வணங்காமல் விரதங்களையும், தேவபூசைகளையும் செய்யும் பெண்கள் எமதூதர்களால் தண்டிக்கப்பட்டு எரிகின்ற அக்கினிமயமாகிய நரகத்திற்கிடந்து வருந்துவார்கள். கணவர் செய்த குற்றங்களை அயலார் அறியும்படிச் சொல்லும் பெண்களும், அவரோடு கோபித்து எதிர்வார்த்தை சொல்லும் பெண்களும் மறுபிறப்பில் நரியாகவும் நாயாகவும் பிறப்பார்கள். நாயகன் கோபித்தால் அவரை நெருங்கி அவருக்கு முன்னே கோபித்துத் திட்டுகின்ற பெண்கள் மறுபிறப்பில் புலியாகப் பிறப்பார். சக்களத்தியை மனம் வருந்தும்படி கோபித்துத் திட்டுவோர் கோட்டானாகப் பிறந்து வருந்துவார்கள். அன்னிய புருஷருடைய மிகுந்த அழகைக்கண்டு அவர்மீது ஆசைகொள்ளும் பெண்கள், துன்பம் செய்து உழலுகின்ற பேய் வடிவத்தை யடைவார்கள். தமது கணவர் பசியோடிருக்க அவருக்கு முன்னே உண்ணும் மாதர் பன்றியாவார்.

 

தமது அருமையான கணவர் இறந்துவிட்டால், அதன்பிறகு தாம் உயிர் வாழ வேண்டுமென்று கருதாமல், தாமும் அவர் அடைந்த நிலைமையை யடைய வேண்டுமென்று விரும்பி யொழுகும் மாதர்கள் நல்ல அசுமேத யாகம் செய்தோர் அடையும் பயனை யடைவார்கள்; பாவத்தின் மிகுதியால் யமதூதர்களிடம் சிக்கியிருக்கும் தமது காதலரை அவ்விய தூதரிடத்தினின்றும் விடுவித்துக்கொண்டு அவரோடு தேவலோகத்தையடைவார்; கொடிய யமன் தன் கண்களால் அவரைப் பார்ப்பானாயின் அக்கணமே அவர்தம் நாயகரைக் கைவிட்டோடுவான்.

 

வட திசையில் விளங்கிக்கொண்டிருக்கும் அருந்ததியைப் போன்ற சிறந்த கற்பரசிகளுடைய காந்தியானது, தமது கண்களுக்குப் புலப்பட்டால் மிகுந்த வெப்பத்தையுடைய அக்கினியும், சூரியனும், வெண்மையாகிய சந்திரனும் ஒளி குன்றிப் பிரகாசமில்லாமல் தோன்றும். தனது நாயகன் மாண்டபிறகு உயிர் வாழாமல் அவனுடன் உயிர் துறந்த கற்பினை யுடையவள், அநேகாயிர வருடகாலம் பொன்னுலகமாகிய சொர்க்கலோகத்தில் தன் கணவனோடு சுகமனுபவித்துக் கொண்டிருப்பாள். கற்பிற் சிறந்த காரிகையைப் பெண்ணாகப் பெற்ற தாயார் தந்தை யென்னும் இருவருடைய மரபிலுள்ளவர்களும் சுவர்க்கத்தையடைவார்கள். கற்பு நிலையினின்றும் தவறிய அற்பப் பெண்கள் தங்கள் தாய் மரபு, தந்தைமரபு, கணவன் மரபு என்னு மிம் மூன்று மரபினரையும் நரகத்தில் விழுந்து வருந்தும்படி செய்வார்கள். பதிவிரதைகளின் பாதங்கள் பூமியில் எவ்விடத்தில் படிந்த போதிலும் அவ்விடம் பக்தர்கள் அடையும்படி இச்சிக்கின்ற புண்ணிய ஸ்தலங்கள் எல்லாவற்றிலும் மேலான புண்ணியஸ்தலம் என்று பெரியோர்கள் சொல்வார்கள்.
 

கங்கை, யமுனை, காவிரி முதலிய புண்ணிய நதிகள் யாவும், தம்மிடத்தில் மூழ்குவோருடைய சகல பாவங்களையும் பரிகரித்துப் பரிசுத்தமாக்கும் வல்லமை பெற்றவைகளாயிருந்தாலும், தங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ளும் பொருட்டு எப்பொழுது பதிவிரதைகள் தம்மிடத்தில் வந்து மூழ்குவார்களோ என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்து, அதன்படியே அவர்கள் வந்து பரிசிப்பதனால் தங்கள் பாபங்களைப் போக்கிக் கொள்ளும். ஒரு வீடானது நவரத்தினங்களிழைத்த எவ்வளவு சிறப்புடையதாயிருந்தாலும், கற்பினையாபரணமாகவுடைய மாதர்கள் அங்கில்லையானால் அவ்வீடானது பேய்கள் வசிக்கும் காட்டிற்குச் சமானமாகும். சுடுகின்ற வெப்பமாகிய கிரணங்களையுடைய சூரியனும், குளிர்ச்சி பொருந்திய சந்திரனும், அக்கினியும் கற்புடைய மாதர்மேல் பரிசிக்கையில் மனம் அஞ்சுவார்கள். நாயகரை யிழந்து வைதவ்யமடைந்த மடந்தையர் கற்பு நெறிதவறுவாராயின், ஐயோ! அவர்கள் தங்கள் குலத்தினர் யாவரையும் வெவ்விய நரகில் விழச்செய்வார்கள். தம் கணவர் சற்றும் அழகில்லாதவராயிருந்தாலும், பெரிய வியாதியினால் பீடிக்கப்பட்டவராயிருந்தாலும், நித்திய தரித்திரரா யிருந்தாலும், வயதில் முதிர்ந்த விருத்தாப்பியராயிருந்தாலும் அவைகளுக்காகக் கொழுநரிடத்தில் யாதொரு குறைவையுமெண்ணாமலிருப்பது கற்புடைய பெண்களின் கடமையாம். மனைவியானவள், கணவனிடத்தில் தாயைப் போல் தயையுள்ளவளாயும், தாதியைப்போல் பணிவிடை செய்பவளாயும், இலக்குமியைப் போல் அழகுள்ளவளாயும், பூமியைப் போல் பொறுமையுள்ளவளாயும், சயன காலத்தில் வேசியைப்போல் இன்பஞ் செய்பவளாயும், யுக்தி செல்வதில் புத்தி கூர்மையுள்ள மந்திரியைப்போல்பவளாயும் இருத்தல் வேண்டும்.
 

தன் கணவன் வீடானது நான்கு பக்கங்களிலும் வழியுள்ளதாயும், மிகவும் சிறியதாய, மழைத் துளிகள் உள்ளே ஒழுகும்படியாகத் துவாரங்களுள்ள தாயுமிருந்தாலும், அவ்வித தரித்திரத்திற்காகத் தன் கணவனை வெறுத்துக் கொள்ளாமல் அவன் மேல் அன்பு கொண்டு, இயன்ற மட்டும் இல்லற காரியங்களை நேர்மையாகச் செய்து முடித்து, ஊரிலுள்ளோர் யாவரும் தன்னைப் புகழ்ந்து கொண்டாடும்படி சிறந்து விளங்கும் கற்புள்ள மனைவி வசிக்குமிடமே வீடு என்னும் பொருளுக்கேற்றதாகும்.

 

இல்லற முறை

 

இனி, மாதர் தங்கள் வீட்டுக் காரியங்களைச் சரிவரச் செய்து முடிக்க வேண்டிய முறைமையினைச் சிறிது விளக்குவாம்:

 

ஸ்திரீகள் விடியற்காலையில் அருணோதயத்திற்கு முன் நித்திரை நீங்கி எழுந்திருத்தல் வேண்டும். எழுந்தவுடனே, கணவனையே வழிபடு கடவுளாகக் கருதித் துதித்தலவசியம். பின்பு, காலைக்கடனை முடித்துத் தந்த சுத்தி செய்து கொண்டு, வீட்டின் முன்புறத்திலும், பின்புறத்திலும், முற்றத்திலும் சாணந்தெளித்துப் பெருக்கி, தகுந்த விடங்களில் கோலமிட்டு அடுப்புச் சாம்பலை வாரி ஒதுக்கிடத்தில் கொட்டி, சுத்தஞ் செய்தல் வேண்டும். இக்காரியங்கள் சூரியோதயத்திற்கு முன்பே செய்து முடித்தலவசியம். வீட்டுப் புருஷர் ஏதாவது காரியமாக வைகறையிலெழுந்து வெளியிற் செல்வதாயிருந்தால், அதற்கு முன்பே சாணந் தெளித்துவிடல் வேண்டும்; அவர்கள் வெளியிற் சென்ற பிறகு சாணந் தெளிக்கலாகாது.

 

வீடு வாசல்களை யெல்லாம் சுத்தம் செய்து முடித்தபின், சமையல் செய்யுமிடத்தையும், அடுப்பங்கரையையும் மெழுகுதல் வேண்டும். பின்பு, பாத்திரங்களைத் துலக்க வேண்டும் மட் பாத்திரங்களை ஸ்நாநஞ் செய்த பிறகே தொடவேண்டும். பித்தளை வெண்கலப் பாத்திரங்களைச் சாம்பலினாலும், ஈயப் பாத்திரங்களைச் சாணத்தினாலும், தாம்பிரப் பாத்திரங்களைப் புளியினாலும், மரப்பாத்திரங்களையும், கற்பாத்திரங்களையும் வைக்கோலைக் கொண்டும் தேய்த்துக் கழுவுதல் வேண்டும். சுத்தஞ் செய்யும் வேலை முடிந்தபின் நீராடி, நெற்றியிற் குங்குமமணிந்து, புதிய ஜலங்கொண்டு சமையல் வேலை தொடங்க வேண்டும். போஜன பதார்த்தங்களாகிய அரிசி பருப்பு முதலியவைகளைக் கல், உமி முதலியவைகளில்லாமல் சுத்தஞ் செய்த பிறகே உபயோகிக்க வேண்டும். அம்மி, குழவி, உரல் முதலியவற்றையும் அன்றாடம் உபயோகத்திற்கு முன்னும் பின்னும் செவ்வையாகச் சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும். எல்லாப் பதார்த்தங்களையும் மூடிவைக்க வேண்டும். சமயல் செய்யுமிடத்தில் மூக்குச்சிந்தலும் எச்சில் சிதறும்படி பேசுதலும், இருமுதலும், தலை சொரிதலும் அநுசிதமாம். கையில் சிறிது அசுத்தம்பட்டால் கை கழுவிக்கொண்டு, தனியாக வைத்துக்கொள்ளும் குட்டையில் கையைத் துடைத்துக் கொள்ள வேண்டும்.

 

சமையல் வேலை முடிந்ததும் அவ்விடத்தையும் போஜனம் செய்யுமிடத்தையும் சுத்தமாய்ப பெருக்கித் தண்ணீர் தெளிக்க வேண்டும் சாப்பிடப் புகும் பொழுது முதலில் இலையைச் சுத்தமாகக் கழுவிப் போடவேண்டும். ஜனங்கள் அதிகமாகச் சாப்பிட உட்காரும் பொழுது எல்லா இலைகளையும் கழுவிப் போடுவதென்றால் கஷ்டமான காரியமாகும். ஆகையால், அக்காலங்களில் இலைகளின் மேல் நன்றாகத் துடைக்கும்படி ஜலந் தெளிக்க வேண்டும். இதன் உண்மை தெரியாமல் அநேகர் இது ஒரு 'சாங்கிய' மென்றெண்ணிக்கொண்டு, பட்டும் படாமல் இரண்டொரு துளி தண்ணீர் தெளித்து விடுகின்றார்கள். இலை போட்டவுடனே குடிநீர் வைத்துவிட்டுப் பிறகுதான் அன்னம் பரிமாறவேண்டும். அன்னம் பரிமாறும் போது கீழே சிந்திப் போகாமல் பார்க்க வேண்டும்.
 

திருவள்ளுவர் வாசுகியாரை விவாகஞ் செய்தபின்பு அவர் முதல் முதல் அன்னம் படைக்கையில், நாயனார் சிறு நத்தைக் குடுவையில் சிறிது ஜலமும் ஒரு ஊசியும் சாப்பிடுகையில் பக்கத்தில் வை' என்று சொன்னார். அவ்வாறே தினந்தோறும் அவ்வம்மணியார் வைத்து வந்தார். ஆனால் இது இன்ன காரியத்திற்கென்று அவரால் அறிய முடியவில்லை. நாயனாரும் அதை ஒருநாளும் உபயோகிக்கவேயில்லை. கேட்கவும் அவ்வம்மையார் விரும்பவில்லை. அவர் பிராணன் நீங்குந்தறுவாயில் கணவர் முகத்தைப் பார்த்தார். அக்குறிப்பை யறிந்த புலவர் பெருமான் 'உன் விருப்பம் யா தென்று வினவ, அவர், அப்பொழுது தம் ஐயத்தை நிவர்த்திக்குமாறு கேட்டார். அதற்கு விடையாக, அவர், 'ஒன்றுமில்லை; அன்னம் பரிமாறும் போது சிந்திப் போவதுண்டானால் அதை ஊசியாற் குத்தியெடுத்து, அந்த நீரில் அலம்பி, உபயோகித்துக் கொள்ளலாமென்பது என்னெண்ணம்; அவ்வாறு சிந்தியதுமில்லை; ஒருநாளும் அதை நான் உபயோகித்ததுமில்லை' யென்றார். இதனால் அன்னம் பரிமாறும் முறை இனிது விளங்கும்.

 

அன்னம் படைக்கையில், சாப்பிடுவோர் இன்னது வேண்டுமென்று கேளாமுன் குறிப்பறிந்து வேண்டியவற்றைப் பரிமாறவேண்டும். எப்பதார்த்தத்தையும் அகப்பை அல்லது சிறு கரண்டியாலெடுத்துப் பரிமாற வேண்டுமேயல்லாமல் கையால் பரிமாறலாகாது.
 

பகற்போசன வேலை முடிந்ததும் படுத்துறங்குதல் கூடாது. 'பகலுறங்கார் நோயின்மை வேண்டுபவர்' என்பது பெரியோர் வாக்கு. அப்படியின்றிப் படுத்துறங்கினாலும் நெடுநேரம் நித்திரை செய்யலாகாது. மாலை வேளையானதும் வீதியைப் பெருக்கித் தண்ணீர் தெளித்துக் கோல மிடல் வேண்டும். வீடு வாசல் முழுவதையும் பெருக்க வேண்டும். பின்பு, கை, கால், முகம் இவற்றைக் கழுவிக்கொண்டு விளக்கேற்றி, புஷ்பஞ் சாத்தி இலக்குமியை வணங்க வேண்டும். 'ஏர் பிடிப்பவன் என்ன செய்பவன் பானை பிடிப்பவள் பாக்கியம்' என்றபடி, பெண்களால் தான் வீட்டில் இலட்சுமி சேர்வாள். ஆகலின், பெண்கள் மேற்கூறிய முறைகளையும் இன்*****வை போன்ற மற்றவைகளையும் தட்டாமல் கைக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் விடாமல் கூறுவது சாத்தியமல்லவாகையால் சுருங்கக் கூற நேர்ந்தது.

 

தற்கால நவீன நாகரிகத்தின் மகிமையால் மேற்கூறிய பிராசீன இந்து மாதர் தருமம் எவ்வளவு சீர்கேடடைந்துளதென்பது யாவருக்கும் தெரிந்ததே. அவ்வகுப்பிற் சேர்ந்தோர் இம் முறைகளைப் பார்த்துப் பைத்தியக்காரர்கள், சுத்த கருநாடகங்கள் என்பர். அவ்வாறு கூறுவது அவர்கள் குற்றமல்ல.

 

சகோதரிகள் யாவரும் இதுவரையிலும் சொல்லி வந்த விஷயங்களைக் கவனித்து அவற்றிற் கூறியபடி கூடுமானவரையில் நடந்து வந்தார்களானால் இம்மையிற் புகழையும் மறுமையில் முத்தியின்பத்தையும் அடைந்து சுகமாக வாழ்வார்கள்

 

இத்தகைய கற்புநிலையைக் கைக்கொண்டொழுகிப் புகழ்பெற்ற நம் நாட்டில், பண்டைக்காலத்திலிருந்த ஸ்திரீரத்தினங்களின் சரிதைகளில் முன்னமே சொன்னவைகள் நீங்கலாக, மிகுந்துள்ளவைகளிற் சிலவற்றைச் சுருக்கமாகக் கூறி 'மாதர் நீதிமஞ்சரி' யென்னும் இத்தொடர் வியாசத்தை இனிது முடிப்பாம்.

கற்பரசிகள்.

 

நமது பாந்தநாடு, நாகரீகம், பரோபகாரம், வள்ளற்றன்மை (ஈகைக் குணம்) நல்லொழுக்கம், வீரம், சாந்தம், கற்பு முதலியவற்றில் மற்றெல்லா நாடுகளினும் சிறப்புற்று விளங்கிய தென்பது மறுக்கமுடியாத உண்மை. இந்நாட்டு மாதர்களிற் பலர் தம் கணவரைத் தெய்வமாகப்பாவித்து இல்லற வொழுக்கத்தை இனிது நடத்தி வந்தனரென்பது சரித்திரங்களின் வாயிலாக வெளியாகின்றது. கற்புத்தன்மையானது பல வாண்டுகளாகப் பஞ்சாக்கினி மத்தியினின்று செய்யும் தவத்தை விடச் சிறந்ததென்பது அம்மாது சிரோமணிகள் இயற்றிய அற்புதச் செயல்களால் அறிதலாம்.

 

தற்காலத்துப் பெண்கள் பூர்வகாலத்திலிருந்த புண்ணியவாதிகளின் சரித்திரங்களைப் படித்து அவர்களது ஒழுக்கங்களையும், அந்நல்லொழுக்கங்களால் அவர்களடைந்த அளவிலா நற்பேறுகளையும் அறிந்து அவ்வுத்த மிகளைப் பின்பற்றி யொழுக முயலல் வேண்டும். புலியிருந்த விடத்தில் பூனையிருப்பது போல, மிகச்சிறந்த கற்பரசிகள் வசித்து வந்த நாடு இப்போது எவ்வித நிலையிலுள்ள தென்பதைப் பற்றிச் சிறிது சிந்தித்த லவசியம். ஆதலால் நமது புராண இதிகாசங்களில் வநிதாமணிகளின் வரலாறுகள் விரிவாகக் கூறப்பட்டிருப்பினும் ஞாபகப்படுத்தும் பொருட்டுச் சில பதிவிரதைகளின் சரிதையை இங்குச் சுருங்கக் கூறுவது அவசியமாகும்.

 

கற்பரசிகளின் பெயர்களைச் சொல்ல விரும்பும் யாவரும் முதல் முதலாக அருந்ததி அனுசூயை என்னும் இவர்களைத்தான் சொல்வது வழக்கம். ஆகையால் அவர்களைப்பற்றிச் சிறிது கூறுவோம்.

 

அருந்ததி: - இவ்வம்மையார் சப்தரிஷிகளி லொருவராகிய வசிட்ட முனிவரின் பாரி. கணவனைத் தெய்வமாகப் பாவித்து அவர் சொல்லைக்கடவாமல் இல்லற நடாத்தி வந்த உத்தமி. இவர் கர்த்தமப் பிரஜாபதியின் அருந்தவப் புத்திரி. சிவபெருமானே ஒருகாலத்தில் இவரது கற்பைப் பரி சோதிக்க வேண்டி சுகுமார வடிவங்கொண்டு வந்த பொழுதும் கலக்க மடையாத மனமுடையவரா யிருந்தார்.

 

இவர் ஒருநாள் நீர்கொணரக் குடங்கொண்டு போகையில் இந்திரன் அக்கினி சூரியன் இம்மூவரும் அவரைச் சோதிக்க வந்தார்கள். அவர்களில் இந்திரன் அவ்வம்மையார் வைத்திருந்த குடத்தில் கால் பாகம் நீரிருக்கும் படி செய்தான். மற்ற இருவர்களும் அப்படியே நிறைக்க அக்குடம் முக்கால் பாகம் நீருள்ள தாயிற்று. அவ்வளவில் அருந்ததியார் மற்ற கால் பங்கையும் தம் மகிமையால் நிரப்பிக்கொண்டு வீட்டை நோக்கித் திரும்பிவிட்டார்.
 

அக்கினி தேவனானவன் சப்தரிஷிகளின் பத்தினிகள் மேல் காதல் கொண்டான். அதை யறிந்த அவன் மனைவியாகிய சுவாகாதேவி அந்த ரிஷிபத்தினிகளைப் போல வடி வந்தாங்கி வந்து தன் கணவனைக்கூடி அவன் ஆசையை அகற்ற முயன்றாள். முயன்றவள் மற்றவர்களைப்போல அருந்ததியின் உருவத்தையு மேற்பமுயன்று முடியாமையால் வெட்கி மனம் வாடினாள்.

அருந்ததி தன் கற்பின் மகிமையால் தன் கணவருடன் நக்ஷத்திர வடிவமாயிருக்கும் பாக்கியம் பெற்றவள். அவ்வருந்ததி நக்ஷத்திரத்தையே விவாககாலத்தில் மணமகளுக்குக் காட்டி இவ்வருந்ததியைப் போல நீயும் பதிவிரதையாயிருவென மணமகன் கூறுவது வழக்கமாயுள்ளது.
 

அனுசூயை: - அத்திரிமுனிவர் மனைவி. இவரது கற்பின் திறத்தையறியும் பொருட்டு நாரதர் இவரிடம் சென்று ஆடையின்றி அன்னம் படைக்குமாறு கேட்க இவ்வம்மையார் தன் கணவனது கமண்டல நீரைத் தெளித்தார். அவ்வளவில் நாரதர் பெண்ணாக மாறினார். அப்பொழுது அவர் அபீஷ்டப்படி அன்னம் படைக்க, நாரதர் வெட்கமடைந்து மும்மூர்த்திகளிடம் சென்று வேண்டியும் அவ்வுருவம் நீங்கப்பெறாமல் மீட்டும் அவ்வம்மையாரையே வேண்டிப் பழைய வடிவம் பெற்றுச் சென்றார்.

 

சரஸ்வதி, பார்வதி, இலக்குமி யென்னும் இம்மூவரும் அனுசூயையின் மேன்மையைக் கேட்டு அசூயை கொண்டு தம் கணவரைத் தூண்ட அவர்கள் வார்த்தைக் கிசைந்த பிரம சிவ விஷ்ணுக்களாகிற முப்பெருந்தேவர்களும் அக்கற்பரசியிடம் சேர்ந்து முன் நாரதர் கேட்டவண்ணமே ஆடையின்றி அன்னம் பரிமாறும்படி கேட்க, உடனே அம்மூவரையும் சிறுகுழவிகளாக்கித் தொட்டிலிற் கிடத்தித் தாலாட்டினர். பின்பு அம்மூர்த்திக ளின் மனைவியர் மூவரும் வந்து வேண்ட அவர்களைப் பழைய வடிவாக்கினர்.

 

திருமால் இவ்வம்மையாரது கற்பை விளக்கக்கருதித் தம் மனைவியையும் பார்வதியையும் சரஸ்வதியையும் நோக்கி அவர்களிடம் இரும்புக் கடலையைக் கொடுத்து இதைப் புசிக்கும்படியாகச் சமைத்துத் தரும்படி கேட்டு அவர்களால் முடியாமற் போகவே அனுசூயையிட மீந்தார். அவர் அதை ஏற்று உடனே பாகஞ் செய்தளித்தார்.

 

ஸ்ரீராமபிரான் சீதாபிராட்டியாரோடு அரணிய மேகினபொழுது சீதைக்குக் கற்பிலக்கணத்தைக் கற்பித்து ஆசீர்வதித்த காரிகை

 

கண்ணகி: - காவிரிப்பூம் பட்டினத்திலிருந்த கோவலன் மனைவி. இவர் தமது கணவன் தம் கூட்டுறவை விட்டு ஓர் தாசியின் வசப்பட்டுத் தம் செல்வ முழுவதையும் அவளுக்கே கொடுத்து வேசிகாந்தனாய்த் திரிந்து கொண்டிருந்த காலத்தும் அவன்மேற் சிறிதும் வெறுப்பின்றி அவனையே தெய்வமாகக் கருதியிருந்தார். தம் கணவனது துஷ்கிருத்தியங்களைச் சிறிதும் வெளியிடாமலும் தம் துக்கத்தை வெளிப்படுத்தாமலும் இல்லறத்தைச் செவ்வனே நடத்தி வந்தார். செல்வத்தையெல்லா மிழந்துவிட்ட பின்பு, கோவலன் தன் மனையையடைந்து தன் அறியாமைக்காக வருந்திக் கொண்டிருந்தான். உண்மையுணராத கண்ணகி தன் காமக்கிழத்திக் கீயப் பணமில்லாமையால் இவ்வாறு துக்கிக்கிறான் போலும் என்றுன்னி மிகுதியாகத் தன்வசமிருந்த காற்சிலம்புகளைக் கழற்றித்தர அவளுடைய பெருந்தன்மையைக் கண்ட அவன் மிகவும் வருந்தி ஆ ஆ! இத்தகைய பத்தினிக்குத் துரோ கஞ்சேய்தேனே' எனத்துக்கித்து அவரையுமுடன் கொண்டு மதுரையையடைந்து அச்சிலம்புகளி லொன்றைப் பெற்று விற்கச் சென்றான். சென்ற விடத்து ஓர் தட்டான் வார்த்தையைக் கேட்டு அவ்வூரரசன் அவனைத் திருடனென மதித்துக் கொலை புரிவித்தான்.

அக்கொடுமையை யறிந்த கண்ணகி கோபவெறி கொண்டு அரசவையடைந்து தன்னிடமிருந்த மற்றொரு சிலம்பால் தன் நாதன் கள்வனல்ல னெனக் காட்டித் தன் மார்பைத் திருகி வீசியெறிந்தார். அதனால் அந்நகர் எரிந்து சாம்பராயிற்று. அவ்வளவில் கண்ணகி தன் கொழுநன் பிரிவையாற்றாமல், அல்லற்பட்டு மலைநாட்டை யடைந்து ஓர் மலையின் மேலேறி உயிர்விடுந் தருணத்து தேவர்களோடு கணவன் அங்கு வரக்கண்டு களிப்படைந்து அவர்களுடன் விமான மூர்ந்து விண்ணுலகடைந்தார். அக்காலத்திருந்த அரசர் பலர் அவருக்குப் பலவிடங்களில் ஆலயமியற்றி அருச்சித்து வந்தனர்.

 

இவரைக் கற்பின் தெய்வம், பத்தினிக்கடவுள், மங்கல மடந்தை, வீரபத்தினி யெனப் பல பெயர்களா லழைத்துத் துதித்துப் பலர் நற்பேறு பெற்றனர்.

 

கோப்பெருந்தேவி: - இவர் கோவலனை யாராயாமல் கொல்வித்த மதுராபுரிக்கரசனாகிய பாண்டியன் நெடுஞ்செழியன் மனைவி. கோவலனைத் தீரவிசாரியாமல் கொலை செய்வித்ததற்காக வருந்தித் தன் கணவன் உயிர் துறந்ததைக் கண்டு தானும் அக்கணமே உயிர் விட்டார்.

 

காந்தாரி: - திருதராட்டிரன் மனைவி. துரியோதனன் முதலியவர்களின் தாய். திருதராட்டிரன், பாண்டு என்னு மிவர்கள் சிறியவர்களாயிருந்த பொழுது, பீஷ்மர் காந்தார தேசாதிபதியாகிய சபலனிடத்து ஆட்களை யேவி அவனுடைய மகளைத் திருதராட்டிரனுக்கு மணம் பேசும்படிக் கூறினார். அதற்குச் சம்மதித்த சபலன் திருதராட்டிரன் குருடனென்பதை யறிந்து பின்பு பெண் கொடுக்க மறுத்தான். அதையறிந்த காந்தாரி தந்தை யிடஞ்சென்று 'தந்தையே! முதலில் தாங்கள் சம்மதித்த அப்போதே நான் அவருக்கு மனைவியானேன். நானும் அவரையே கணவனெனக்கருதி விட்டேன்' என்று புகன்று அவனையே மணந்து, தன்கணவனுக்குக் கண்ணில்லாமையால் தானும் அங்ஙனமே இருத்தல் உசிதமாகுமென் றெண்ணித் தன் கண்ணையும் கட்டிக்கொண்டிருந்தார். இவரைப் பதிவிரதை யெனக் கூறத்தடையென்ன?

 

காரைக்காலம்மையார்: - காரைக்கால் என்னுமூரில் பிறந்து புனிதவதி என்னும் திருநாமத்தையுடைய இவ்வம்மையார் பதிபக்தியிலும் ஈசுவர பக்தியிலும் மிகவும் சிறப்புடையரா யிருந்தார். ஒருநாள் அவர் கணவன் இரண்டு மாம்பழங்களைக் கொடுத்தனுப்பியிருந்தான். அவைகளிலொன்றை மிகப்பசியோடு வந்த சிவனடியாரொருவர்க்கு அன்னமிடுகையில் கறியமுது இல்லாமையால் அவ்வம்மையார் அவ்வடியவர்க்குப் படைத்தார். பின்பு, தன் கணவன் சாப்பிடும் பொழுது ஒரு பழத்தை வைத்தார். அது மிகவும் இனிமையாயிருந்தமையின் மற்றொன்றையும் கொண்டு வருமாறு கணவன் கேட்க 'அவர் உத்தரவில்லாமல் கொடுத்து விட்டோமே, அவ்வாறு செய்தது பிசகல்லவா?' என்று பயந்து புனிதவதியார் ஒன்றுஞ் சொல்லவாயின்றி உள்ளே சென்று முன் பழங்கள் வைத்திருந்த இடத்தைத் தடவிக்கொண்டே கடவுளைத் துதித்தார். அவ்வளவில் கடவுளருளால் ஓர் பழம் கிடைத்தது. அதைத் தின்று இது வேறு புதியபழம்; இது ஏது?' என்று கணவன் ஐயமுற்றுக் கேட்கக் கடவுளருளால் கிடைத்தது எனச் சொல்வோமானால் நம்பமாட்டார்; ஆகையால் அதைச் சொல்லிக் கடவுளருளிற்கோர் மாசுண்டாக்கலாகா தென்று அதைக்கூற மனமில்லாமலும் தம் கணவனிடம் உண்மையை மறைத்தல் ஏற்றதன்றென்று சொல்லாமல் விட முடியாமலும் வருந்தியோசித்துக் கடைசியில் கணவனிடம் உண்மை பேசுதலே தாம் மேற்கொண்டிருக்கும் கற்பிற்குகந்த கடமையாம் என்று உற்றதை யொளியாமலுரைத்தார்.

 

இவரது மகிமையை யறிந்த பரமதத்தனென்னும் அவர் கணவன் பயந்து அவரோடுட னுறைதற்கஞ்சி வேற்றூரை யடைந்து மறுமணம் புரிந்து ஓர் பெண்மகவையீன்று அவளுக்குத் தன் முதல் மனைவியாகிய புனிதவதியாரின் பெயரையே யிட்டு இல்லற நடாத்திவந்தான். புனிதவதியார் அதையறிந்து தம் உற்றாருடன் அவனிருக்குமிடத்தை யடைய, அவரது வரவைக்கண்ட கணவன் இவள் என் குலதெய்வமாவள் என் றவரடிகளில் விழுந்து வணங்கினான்.

 

அவன் கருத்தையறிந்த உத்தமியார் இவன் நிமித்தம் நான் தாங்கிக் கொண்டிருந்த அழகு இனி என்ன உபயோகம்? என்று கடவுளைத் துதித்துப் பேயுருவம் பெற்றார்.

 

சந்திரமதி: - இப்புண்ணியவதியின் புனிதமான சரித்திரத்தை யறியாதவர் ஒருவருமிரார். இம் மங்கையர்க் கரசியார் மதிதய மன்னனது மாண் புடைமகள். அயோத்தியை யாண்ட அரிச்சந்திர வள்ளலின் அருமைப் பத்தினி. கற்பு முதலிய நற்குண நற்செய்கைகளிற் சிறந்த நாரீமணி.

 

விசுவாமித்திரரது சூழ்ச்சியால் தம் காதலர் சொல்லொணாத் துன்பங்களை யடைய நேர்ந்தபோது தாமும் அவருடனிருந்து அவ்விடுக்கண்களை யனுபவித்தது மன்றி, தக்க சமயங்களில் வேண்டிய ஆலோசனைகள் கூறி உதவி செய்து ஊன்றுகோல்போ லிருந்தார். தம்கணவன் கடனாளியாகிக் காசிக்குச் சென்ற பொழுது உடன் சென்றார். காட்டில் குறுக்கிட்ட நெருப்பாற்றைத் தங்கற்பின் மேன்மையால் கடந்தார். கடன் தீர்க்கும் வகையறியாமல் மதிகலங்கி நின்ற கணவனைத் தேற்றித் தம்மைக் கடைவீதியில் விற்கச்செய்து, வேதியனுக் கடிமையாகித் தம் மைந்தனுடன் அவன் வீட்டையடைந்து, சாணந்தெளித்தார்; மெழுகினார்; கோலமிட்டார்; சமையல் பாத்திரங்களைத் துலக்கித்தந்தார்; சாணமுருட்டி முட்டை தட்டினார்; செங்காந்தள் மலர்போன்ற கைகள் கன்றும்படி உலக்கை கைபிடித்து நெல்லைக் குற்றினார்; தண்ணீர்க் குடத்தைத் தலைமேற் சுமந்து தவித்தார்; இம்மட்டோர் அவர் செய்த அடிமைத் தொழில்கள் அனந்தம். இவ்வளவிற்கும் தம் விதியை நொந்த தன்றிப் பதியை நொந்தறியார். சந்தனக் கட்டையைத் தேய்க்கத்தேய்க்க வாசனை மிகுவதுபோல, துன்பங்களதிகரிக்குந்தோறும் அவரது கற்பும் சத்தியமும் பதிபக்தியும் அதிகரித்தனவே யன்றிச் சிறிதும் குறைவுபட்டில.

 

அருமைமைந்தன் அரணியத்தில் அரவால் கடியுண்டு ஆவி சோர்ந்தான் என்பதை யறிந்து, இருள் மிகுந்த இடையிரவில் எங்குந் தேடிச்சென்று கண்டெடுத்து ஈமம் புகுந்தார். அங்கே கொழுகன் மயானக்காவலனாயிருத் தலைக்கண்டார்; கதறினார். அவன் சொற்படி மைந்தனை யெரிக்கக் காசுந் துண்டும் பெறும் பொருட்டு வேதியர் வீட்டை நாடிச்சென்றார். செல்லும் வழியில் காலிற்பட்ட குழந்தை யொன்றைக் கையிலேந்தித் தன் மகனோ வென்று கூர்ந்து பார்க்கையில் ஊர்க்காவலர் காசிராஜன் மகனாகிய அக் குழந்தையைக் கொன்றவள் இவளேயென்று பிடித்துக் கொண்டுபோய் அரசனிடம் விட, அவன் அவ்வுத்தமியை வெட்டி விடும்படி உத்தரவிட்டான். அத் தண்டனையை நிறைவேற்ற அரிச்சந்திரனே வந்தான். தன் கணவன் கையில் இறக்க நேர்ந்ததை யறிந்த அவ்வம்மையார் அளவிலா ஆனந்தங் கொண்டு ஆளனைப்பார்த்து ''அண்ணலே! அடியாளை வெட்ட நேர்ந்ததற்காக மனம்கவல வேண்டா; தலைக்கு மிஞ்சின ஆக்கினையில்லை'யென்றபடி, இதைவிட அதிகமான துன்பம் நேரிடப்போவதில்லை. நம்கஷ்டத்தின் கடைசி நாள் இதுவே; மனஞ்சோராதீர்; அற்பவாழ்வைச் சதமென் றெண்ணிச் சத்தியத்தை யிழக்கலாகாது'' என்று பலவித உறுதி வார்த்தைகளைக் கூறித் தேற்றினார்.

 

அவரது நெஞ்சத் துணிவைக் கண்ட அரிச்சந்திரன் அகமகிழ்ந்து ''கற்புக்கரசி! உன்னாலன்றோ என் தவம் பலித்தது. உன்னைப் பத்தினியாக வடைந்த எனக்கென்ன குறையுண்டாம்? இம்மைப்பயனும் மறுமைப் பயனும் எளிதில் எய்துமே,'' எனப் பலவாறு புகழ்ந்து வெட்ட, வாளை யோசசினான். உடனே பரமசிவன் எழுந்தருளிக் காட்சியளித்துப் பழைய படி பாலனையும் பாரையும் அளித்து ஆசி கூறிச் சென்றார். அதன்படி அம்மையார் அயோத்தியை யடைந்து அரசாண்டு ஆளனுடன் அநேககாலம் இன்பந் துய்த்து நெறிதவறாது ஒழுகிவந்தார்.

 

சாவித்திரி: - இவர் மகாபதிவிரதை. மத்திரதேசாதிபதியாகிய அஸ்வ பதிமன்னனது அருந்தவச் செல்வி. இவர் இளம் பருவத்தில் தோழியருடன் உல்லாசமாக உத்தியான வனத்தில் உலாவிக்கொண்டிருந்தபொழுது அவ்வழியாக வந்த அரசிளங்குமரனாகிய சத்தியவா னென்பவனைக் கண்டு காதல் கொண்டிருந்தார். பின்பொருநாள் அஸ்வபதி, அரசசமுகம் வந்த நாரதமுனிவரிடம் பேசிக்கொண் டிருந்த காலத்தில் சாவித்திரியின் திருமணத்தைப் பற்றிய பேச்சு வந்தது. நாரதர் கன்னியின் கருத்தையறிந்த பிறகே கடிமணம் குறித்தல் ஏற்றதாகுமென்றார். அவ்வாறே சாவித்திரியை யழைத்து விசாரிக்க அவர் தம் கருத்தை வெளியிட்டார். அவரது உள்ளக்கருததையறிந்த முனிபுங்கவர் விசனமடைந்து, " அச்சத்தியவான் அரசையிழந்து கண்களில்லாப் பெற்றோருடன் காட்டில் தவித்துக் கொண்டிருக்கின்றான். அதுவுமன்றி அவன் அற்பாயுளுடையவன். அவனது ஆயட்காலம் இன்னும் ஒருவருடத்தோடு முடிவடையும். அவனை மணக்கும் எண்ணத்தை உன் மனத்தினின்று மகற்றிவிடு'' என்றார். அஸ்வபதியும் அவ்வாறே வற்புறுத்தினான்.

 

அப்போது சாவித்திரிதேவி முனிவரரை நோக்கி "சுவாமி! நான் மனதில் நிச்சயித்திருந்த நாதன் சத்தியவானென்று சொன்னவாக்கினால் வேறொரு புருஷனைச் சொல்லலாமோ? அப்படிச் சொன்னால் தாய்தந்தை முதலிய சுற்றத்தார்க்குப் பழியும் பதிவிரதா தருமத்திற்குக்குறையும் அரச நீதிக்கு அழிவும் உண்டாகுமே. மேலும் 'கல்லென்றாலும் கணவன் புல் லென்றாலும் புருடன்' என்னும் ஆன்றோர் வாக்கிற்கேற்ப, மனமிசைந்து நிச்சயித்துக்கொண்ட மகிழ்நனை விட்டு மற்றொருவரை நினைப்பது மானமுடைய மங்கையர்க்கு மாண்பல்லவே. ஆதலால் அவர்கள் பெருமையிழந்து பெருங்காட்டில் வசித்தாலும் அவரையன்றி வேறொருவரையும் நினையேன்; அவரே யென் கணவன்; நானே அவர் பத்தினி " என்றாள். விவாகம் நடந்தது. காட்டில் தம் கணவன் மனங்கோணாமல் நடந்து வந்தார்; காலையில் எழுவார்; ஸ்நானஞ் செய்வார்; தம் நாயகன் எழுந்ததும் புஷ்பங்களிட்டுப் பாதபூசை செய்து வலம் வந்து நமஸ்கரிப்பார்; கணவன் காய்கனிகள் கொணரக் காட்டிற்குச் சென்றதும் மாமன் மாமியாரை யெழுப்பி ஸ்நானஞ் செய்வித்து அவர்களையும் பூசித்து வணங்குவார்; நேற்றிரவு மிகுதியாக வைத்திருக்கும் பழங்களையும் கிழங்குகளையும் ஆகாரமா கக்கொடுத்து அவர்கள் உண்டபின்பு அவர்களுடைய கால்களை வருடிக் கொண்டே தருமகதைகளைப் பேசிக்கொண்டிருப்பார்; கணவன் வந்ததும் அவன் கொண்டு வந்தவைகளை, அவனோடிருந்த மாமன்மாமிகளைப் பசியாற்றிக் கொழுநன் உண்டபின் தாமும் உண்பார்; இவ்வாறு நெறிதவறாமல் அநுதினமும் நடந்து வந்தார்.

 

நாரதர் கூறிய நாள் சமீபித்துவிட்டது. நான்கு நாட்களே யிருந்தன. மாமன் மாமியர் உத்தரவின் பேரில் கௌரிவிரதம் அனுஷ்டித்தார்; அன்ன பானாதிகளை யகற்றினார்; நித்திரையை நீக்கினார்; மௌனவிரத மேற் கொண்டார்.

 

நான்காம் நாள் தம் கணவன் காட்டிற்குப் போகையில் தாமும் கூடச்சென்றார். காட்டில் கடடைவெட்டும் போது சத்தியவான் மிக்க ஆயாசமடைந்து மனைவியின் மடியின்மேல் தலைவைத்துப் படுத்தான்; ஆவி நீங்கிற்று. கற்பரசி காலனைக் கண்டார். தன் காதலனுயிரைத் தருமாறு வேண்டினார். கற்பின் மேன்மையைக் கண்டு அதிசயமடைந்த அந்தகன் பல சமாதான வார்த்தைகள் கூறித்தடுத்தும் விடாமல் அவனைத் தொடர்ந்தார். காலனும் கணவனுயிரைத் தவிர வேறேதாகிலும் வரங்கேளென்று சொல்லத் தன் மாமன் மாமிகள் இழந்த பார்வையையும் அரசையு மடையவும் தன் தந்தைக்குப் பல புத்திரர்களுண்டாகவும் வரம் பெற்றது மன்றி, மேலும் நமனை விடாமல் தொடர்ந்து சென்று பல இதவார்த்தைகள் கூறித் தன் கணவனுயிரையும் மீட்டார். மேல் சத்தியவான் தன் தாய் தந்தையருடன் தன் ராஜ்ஜியத்தைக் கைப்பற்றிக் கொண்டான். சாவித்திரி அவனுடன் பூவும் மணமும், நகமும் சதையும் போல வாழ்ந்து, பல புத்திரர் களைப்பெற்று, நெடுங்காலம் சுமங்கலியாய் வாழ்ந்திருந்தார்.

 

(இதனால் கற்புடைய மனைவியால் அவள் கணவனுக்கு வரும் கடுந் துன்பமும் கதிரவன் முன் காரிருள்போலக் கெடும் என்பது இனிது விளங்குகின்றது.)

 

சீதை: - உலகமுய்யத் திருவவதாரஞ் செய்தருளிய ஸ்ரீ இராமச்சந்திரப் பெருமானது அரும்பெருந் துணைவியாகிய சீதாபிராட்டியாரின் கற்புத்தன்மை உலகமறிந்ததே. தன் மணாளர் சிற்றன்னையின் சூழ்ச்சியால் வனவாசம் செய்யப் புறப்பட்ட காலத்தில், அவருடனுறைவது காடாயினும் அதுவே தெய்வத் திருநாடென்றும், அவரைப் பிரிந்து வாழ்வது பொன்னாடெனினும் அது இடுகாடேயாமெனவும் கருதிக் கூடச் சென்றார். பஞ்செனச் சிவக்கும் மெல்லிய பாதங்கள் கன்றி வருந்தக் கற்களின் மீதும் முட்களின் மீதும் நடந்து சென்று நாயகருடன் தானும் துன்பந் துய்த்தார். தான் கஷ்டப்படுவதாகத் தெரிந்தால் தன் கொழுநர் மனமுளைந்து 'இதென்ன தொந்தரை! நாம்தான் கஷ்டப்படுகிறோமென்றால் அது போதாதென்று இவள் படுங் கஷ்டத்தால் வேறே வருந்தவேண்டியதாயிருக்கிறதே' யென்று எங்கே சலித்துக்கொள்வாரோ வென்று தம் துன்பத்தை வெளிக்காட்டா தடக்கி முகமலர்ச்சியோடு சென்றார். கற்புடை மாதர்க்கு மன்பெருந்தவம்,

 

'அன்பர் துஞ்சிடில் துஞ்சுத லாங்கவர்
துன்ப மெய்திடிற் றாமுமத் துன்புறல்
இன்ப முற்றிடில் இன்புற் றிருத்தலே'யன்றோ?

அசோகவனத்தில் இராவணனால் சிறையிடப்பட்டிருந்த காலத்தில் அவரடைந்திருந்த நிலைமையை அளவிட்டுக் கூறவல்லார் யாவர்! 'அழுவதன்றி மற்றயலொன் றுஞ் செய்குவதறியார்.' இராவணனையும் அவனது போகபாக்கியங்களையும் ஒரு சிறு துரும்பெனக்கருதினார். அவனை ஏறிட்டும் பார்த்தறியார். இராவணனை அவருக்குக் காட்டி இவன் யாரென்று கேட்டால் இவன் தான் இராவணன் என்று அடையாளங் கண்டு சொல்ல வும் அவரால் ஆகாது. உற்றுப் பார்த்திருப்பினன்றோ கூறக்கூடும்.

 

இராம தூதனாகச் சென்ற அநுமார் இலங்கையில் தேவியாரைக் கண்டு, 'தாயே! ஏன் வீணாக வருந்துகின்றீர்கள்! என் தோளின்மீது ஏறிக்கொள்ளுங்கள்; ஒரு நொடியில் சுவாமியினிடம் சேர்க்கின்றேன், என்ற பொழுது, பிராட்டியார் அவரைப்பார்த்து “அப்பா, மாருதி! உன் வல்லமைக் கேற்றதையே சொற்றனை. ஆயினும் அது உசிதமல்ல்வே, யான் மனங்கொண்டால் இவ்விலங்கை மாத்திரமல்ல, அளவில்லாத அனைத் துலகங்களையும் ஒரு வார்த்தையினாலேயே எரிந்து சாம்பராகும்படி செய்ய மாட்டேனா! அவ்வாறு செய்வது என் நாயகனுக்கு அழியாத பழிச் சொல்லை யுண்டாக்குமென்றல்லவோ அவ்வெண்ணத்தை யொழித்தேன். தவிர, நீ ஐம்புலன்களையு மடக்கிய உத்தமனேயானாலும் உன் வடிவம் ஆணுருவமே யல்லவோ? ஆகவே யான் உன் மேனியைத் தீண்டுதலாகுமோ! இராவணன் உன்னைத் தூக்கிவரவில்லையா வென்பையோ? அவன் கை என்மீது பட்டிருக்குமானால் இன்னும் இச்சரீரத்தோடு கூடி வாழ்தலை யுடையவளாவனோ? அவன் என்னைப் பூமியோடு பெயர்த்துத் தேரின்மீது வைத்துக்கொண்டு வந்தான்.


 பொற்பி றங்க லிலங்கை பொருந்தலர்
 எற்பு மால்வரை யாகில தேயெனின்
 இற்பி றப்பு மொழுக்கு மிழுக்கமில்
 கற்பும் யான்பிறர்க் கெங்ஙனங் காட்டுகேன்?
 அல்லன் மாக்க ளிலங்கை யதாகுமோ
 எல்லை நீத்த வுலகங்க ளியாவுமென்
 சொல்லி னாற்சுடு வேனது தூயவன்
 வில்லி னாற்றற்கு மாசென்று வீசினேன்.
 வேறு முண்டுரை கேளது மெய்ம்மையோய்
 ஏறு சேவகன் மேனியல் லாலிடை

 ஆறு மைம்பொறி நின்னையு மாணெனக்
 கூறு மிவ்வுருத் தீண்டுதல் கூடுமோ?
 தீண்டு வானெனி னித்தனை சேண்பகல்
 ஈண்டு மோவுயிர் மெய்யி னிமைப்பின் முன்
 மாண்டு தீர்வனென் றேநிலம் வன்மையால்
 கீண்டு கொண்டெழுந் தேகினன் கீழ்மையான்.
                 (இராமாவதாரம்.)


எனப் பல நீதிகள் கூறித் தடுத்து அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு என்னும் இந்நான்கு குணங்களும் எச்சமயத்திலும் மாதர்களால் விடப்படுவன வல்ல வென்பதைச் சுட்டிக் காட்டினார்.

தசகண்டனை வதைத்து ஜானகியாரைச் சிறை மீட்ட காலத்தில் ஸ்ரீ இராமர் அவர் கற்பினைச் சந்தேகிக்க அவ்வளவில் பிராட்டியார் மனம் வெதும்பி இனி, 'சாதலிற் சிறந்ததொன்றில்லை, அதுவே தக்கதா'மென்று இலக்குவனால் எரியெழச்செய்து' யான் கற்பிழந்தவ ளாயின் இத் தீ யென்னை யெரிப்பதாக'வென் றத்தீயிற் பாய்ந்தனர். அம்மையாரது கற் பெனுங் கடவுட் டீயினால் அவ்வக்கினியின் உடலெல்லாம் தீய்ந்தது. அவ் வெப்பத்தை யாற்றாமல் அனற் கடவுள் தாசரதியி னெதிரிற்றோன்றி அரற்றினான்.

   
வடபு லத்து வயங்கு மருந்ததிக்
கடவுட் கற்பினர் காந்திதங் கண்ணுறிற்

படர்சி கைக்கனல் வெங்கதிர் பான்மதி
      சுடர்ம ழுங்கிப் பொலிவில் தோன்றுமால்

 

என்பது பொய்யுரை யாமோ!

 

தேவியாரது கற்பின் திறத்தை உலகமறிந் துய்தற்பொருட்டே அங்ஙனஞ் சொன்னவராகலின் இரகுகுலோத்தமர் உடனே சீதையை அங்கீ கரித்தனர்.

 

அயோத்தியை யடைந்து அரசாண்டுகொண்டிருக்கையில், 'ஈராறு மாதம் இராக்க தனிடம் சிறைப்பட்டிருந்த சீதையை ஸ்ரீ இராமர் சேர்த்துக் கொண்டிருக்கின்றா' ரென உலகம் கூறிய நிந்தைச் சொற்களை நினைத்து, நிறைந்த கருப்பமுற் றிருத்தலையும் நினையாது, மீண்டும் காட்டில் விட்டு வரும்படி யிட்ட நாயகரது கட்டளைக் குட்பட்டார். அங்கு வான்மீகி முனிவரின் ஆதரணையிலிருந்து புத்திரரை யீன்று வருத்தத்தோடு வசித்து வந்தார். முடிவில் இராமர் அவரைத் தன்னிடம் வரவழைத்து, மற்று மொரு முறை யாவருங் காணக் கனலின் மூழ்கித் தன் கற்பை நிலைநாட்டி னால், தான் அங்கீகரிப்பதாகக் கூற, வைதேகியார் மனநொந்து, இனி இவ்வுலகி லிருத்த லடாதென்று துணிந்து பூமிதேவியைப் பார்த்து,

 

வினைப்பாசத்தை யறுத்தமுனி வேள்வி காத்து மிதிலை புகுந்

தெனக்கா வீசன் வில்லிறுத்தன் றெனைக்கைப் பிடித்த வெழிலாரும்

புனைக்கா யாம்பூ நிறத்தானை யன்றி மற்றோர் பூமனையான்
மனத்தால் வாக்கால் நினையேனேல் வழிதா வெனக்கு மண்மகளே!


 வருந்தியே பயந்தநீ மற்றென் கற்புமவ்

 வருந்ததி கற்புமொன் றான தென்றிடின்
 பெருந்துதி மாநிலம் பிளத்தி யென்றனள்
 இருந்துதி யமரரும் ஏத்துங் கற்பினாள். -
                     (இராமாவதாரம்.)
 

'ஓ, மண்மகளே! என் கணவராகிய காயாம்பூ நிறத்துக் காகுத்தரை யன்றிப் பிறி தொருவரையும் மனத்தாலும் வாக்காலும் யான் நினையாதிருந்தது உண்மையாயின், நீ எனக்கு வழிகொடு; யான் அருந்ததிக்குச் சமதையான கற்புடையவளா யிருந்தால் நீ பிளந்து வழிகொடு' என்றார். அவ் வளவில் நிலம் பிளக்க, பூமிதேவி யாவருங் காணத் தோன்றித் தேவியாரைத் தழுவினபடியே அப்பிளவிற்குள் சென்றுவிட்டனர். கற்பின் சிறப்பினுக் கிதனினும் வேறு திருஷ்டாந்தம் வேண்டுமோ?

 

தமயந்தி: - விதர்ப்ப நாட்டரசனாகிய வீமனது புத்திரியாகிய இப்புண்ணியவதி தனது கணவனாகிய நளன் கலிபுருடனால் தூண்டப்பட்டு வந்த புட்கரனுடன் சூதாடி நாடு நகரங்க ளனைத்தையும் தோற்றுப் பரதேசிபோல காட்டிற்குப் போகையில், தானும் அவனுடன் சென்றவர். 'மக்களை யழைத்துக்கொண்டு உன் தாய்வீடுபோய்ச் சேரென்று நளன் பலவாறு பகர்ந்தும் மனங்கொள்ளாமல் மக்களை மட்டும் ஓர் மறையவன் மூலமாய்த் தன் தாய்வீடனுப்பித் தான் அவனுடைய கஷ்டத்தில் பங்காளியாய் தன் இனிய மொழிகளால் அவனைத் தேற்றி அவனுக்கு வருத்தந் தோன்றாதபடி உதவிசெய்து வந்தார். கலிபுருடன் அன்னப்பறவையின் வடிவாக வந்து தன் நாயகன துடையைப் பறித்துக்கொண்டு செல்லத் தன்னுடையிற் பாதியை யீந்து ஆறுதல் கூறினார்.

 

தன் துயரைக் காணப்பொறாது இருண்ட இரவின் இடையாமத்தில் கைவிட்டகன்ற கணவனைச் சிறிதும் நோகாது தன் விதியையே நொந்து கொண்டார். அவரைக் கற்பழிக்கக் கருதிய கானவன் அவர் கண்விழித்த கனலால் சாம்பரானான். தட்டித் தடுமாறித் தன் தந்தை நகரடைந்து தூதர்களைப் பல விடங்களுக்கு மனுப்புவித்துத் தன் நாயகனை யடைய முயற்சி செய்து அவ்வாறே அடைந்தவர். இவர் காட்டிலடைந்த துன்பங்களுக் களவில்லை. தன் தாய் வீட்டில் யாதொரு குறையுமின்றி சுகங்களை யனுப விக்கலாமாயினும், அவ்வாறின்றிக் கணவனைப் பிரிந்த காலையில் கட்டியிருந்த புடவையுடனும் அழுக்கேறிப் பொலிவிழந்த சரீரத்துடனும் சிக்கேறிச் சடைபற்றிய கூந்தலுடனும் கணவனேக்கமே பெரிதாய்,


 மன்னவனே யிப்பிறப்பிற் கண்டு மணந்திலனேல்
 இன்ன மொருபிறப்பி லானாலு மேழையேன்
 தன்னந் தனியே யிருந்துதவ மாற்றியுமுன்
 பொன்னகல முள்ளுருகப் புல்லா தொழிவேனோ.

 

என வருந்திக் புலம்பிக்கொண்டிருந்தார். முதலில் தான் தன் மனத்திற் கணவனாகக் கருதிய நளனைத் தவிர வேறொருவரையும் கனவினும் கருதலாகாதென்னும் உறுதியால் இந்திரன், எமன் முதலிய தேவர்களையும் மணக்கச் சம்மதிக்காமல், அவர்கள் நளனைப் போல வடிவுகொண்டு சுயம்வர மண்டபத்திலிருந்த பொழுதும் பல அடையாளங்களால் உண்மை நளனை யறிந்து மணந்தவர். தேவர்களை மணக்காமல் அவமதித்த காரணத்தாலேயே கலியின் கோபத்திற்கிலக்காகி இவ்வளவு துன்பங்களையும் அடைந்தார். எவ்வளவு துன்பம் வந்தால் தானென்ன? உயிர் போவதாயிருந்தாலும் உத்தமமாதர் கற்பினின்றும் தவறுவார்களோ? "ஒழுக்கம் உயிரினுஞ் சிறந்ததன்றோ?"

 

நாளாயணி: - இவரது இயற்பெயர் இந்திரசேனை என்பது. அழகிலும் நற்குண நற்செய்கைகளிலும் ஒப்புயர்வற்று விளங்கிய உத்தமி. தன்னடக்கம், இடம்பமின்மை, பெரியார்ப்பேணல் முதலிய அருங்குணங்கள் யாவும் இக்கற்பரசியிடத்தில் இவரது இளம்பருவத்திலேயே குடிகொண்டிருந்தன.

 

இவர் மவுத்கல்லிய ரென்னும் மாதவரொருவரை மணக்க நேர்ந்தது அவர் மிக்க வயோதிகராய்க் காணப்பட்டார். விவாகம் முடிந்ததும் அவர் மனைவியைப் பார்த்து 'பெண்ணே! நீ இதுவரை பெற்றோரால் வெகு சிறப்பாக வளர்க்கப்பட்டு வந்தாய். சுகமான போஜனம், சொகுசான படுக்கை, சுந்தரமான வீடு, கண்ணைக் கவரும் உடைகள், கண்டோர் வியக்கும் அணிகள், பணிவிடை புரியும் பாங்கியர் யாவும் சிறக்க வமைந்திருந்தன வுன க்கு. என்னிடம் அத்தகைய சுகங்களிற் சிறிதளவையேனும் நீ யெதிர்பார்க்க முடியாது. நானோ வனவாசி. உட்கார்ந்த வண்ணம் உள்ளே புகக் கூடிய இலைகளாலாகிய சிறு குடிசையே எனது வாசஸ்தானம். காய் கிழங்குகளே எனக்குரிய உணவாக அமைந்திருப்பன. காட்டு மிருகங்களே எனது சுற்றம். அவற்றின் பேரிரைச்சலே நான் கேட்கும் சாமகானம். மரவுரியே நானணியும் உயர்வாகிய உடை. பசும் புற்றரையே என் படுக்கை. தவிர அநேக நாட்கள் வரையில் நான் ஊண் உறக்கமில்லாமலும் தனிமையாகவும் இருக்க நேரிடும். எனக்குரிய பணிவிடைகளை யெல்லாம் நீ பத்தியுடன் பாங்குபெறப் புரிய வேண்டியதாயிருக்கும். இத்துணைத் துன்பங்களை யின்பமாக ஏற்றுக் கொண்டிருக்க உன்னால் இயலு மானால் நீ என்னுடன் வரலாம்; இயலாதாயின் இங்கேதானே இருக்கலாம். உன் விருப்பம் யாது " என்றனர்.

 

இவ்வார்த்தைகளைச் செவியுற்ற மங்கையர் சிகாமணி 'பெண்களுக்குத் தாயும் தந்தையும் தமரும் ஆசாரியனும் தெய்வமும் மற்றும் முற்றும் கணவரே' யென்னு முணமையையுணாந்த உத்தமியாகலின், அவற்றிற்குச் சிறிதும் பயப்படாமல் அம்முனிவருடன் அரணியஞ் சென்றார். அங்குத் தம் கணவருக்குரிய கடமைகளை அவ்வாமையார் மனவாட்டமின்றி அவருக்குத் திருப்தியுண்டாகும்படி செய்து வந்தனர். மவுத்கல்லிய முனிவர், தம் மனைவியின் கற்புநிலையைக் கண்டு கழிபேருவகை கொண்டனரேனும், மேலும் அவரைப் பரிசோதிக்கக் கருதி, தமது சரீரத்தில், 'அங்கமெலாம் குறைந்தழுகும் தொழுநோ யாகிய பெருவியாதியை வருவித்துக் கொண்டனர். உடல் முழுதும் புண்கள் தோன்றி வெடித்து, சீழும் இரத்தமும் பெருகின. அவற்றினின்று சில சமயங்களில் நுண்ணிய புழுக்கள் நிறைந்து நெளிந்து பலபலவென்று உதிரும். துர்நாற்றம் காததூரம் வீசும். இவ்வாறிருந்தும் அப்பெண்கள் நாயகம் அவர்மீது சிறிதும் அரு வருப்புக்கொள்ளாமல் அவருடைய புண்களையெல்லாம் சுத்தமாய்த் தன் கையால் தேய்த்துக் கழுவி முன்றானையால் துடைத்து மேலும் செய்ய வேண்டிய உபசாரங்களை யெல்லாம் குறைவறச் செய்துவந்தாள்.

 

இங்ஙனமாக, ஒருநாள் அம்முனிவர் அம்மையாரை நோக்கி'' பெண்ணே! நோய் என்பதை நொய்யளவும் அறியாதிருந்த எனக்கு, உன்னை மணஞ் செய்த பின்பு இத்தகைய கொடுநோய் நேரிட்டது. நீ எனக்கு மனை வியாக வாய்த்திராவிட்டால் இந்நோயும் வாய்த்திராது. நீ கொடிய பாவி போலும். இந்நிலைமையில் 'முடவன் கொம்புத்தேனுக் காசைப்படுவது போல,' தீர்த்த யாத்திரையில் எனக்கு விருப்பம் உண்டாயிருக்கின்றது. இதற்கு என்ன செய்வேன்!'' என்று துக்கித்தார்.

 

நாளாயணி அதைக்கண்டு 'என்னாருயிர்த் தலைவரே! அடியாள் கொடிய பாவியென்பதிற் சிறிதும் ஐயமில்லை. இந்நோயினின்றும் விடுவிக்கும் மார்க்கம் சிறிதும் அறியேனாயினும், தங்கள் விருப்பத்தை நிறைவேற்ற அடியாளிருக்கின்றேன். எனதுயிரும் உடலும் தம்முடையனவே யன்றோ? வென்று தேறுதல் கூறி, அவரை ஓர் கூடையில் பக்குவமாகவைத்துத் தலைமீது சுமந்து கொண்டு தீர்த்தயாத்திரைக்குப் புறப்பட்டு, பற்பல பிரபலமான புண்ணிய தீர்த்தங்கள் தோறும் சென்று நீராடுவித்து வந்தாள்.
 

இவ்வாறு செல்லுகையில், வழக்கம் போல் வழியிலெதிர்ப்பட்ட ஓர் ஊரில் ஓரிரவு தங்கினர். அப்பொழுது அம்முனிவர் அம்மையாரை நோக்கித் தாம் அவ்வூரிலிருக்கும் விலைமாதொருத்தியைக் கண்டு காதல் கொண்டிருப்பதாகவும், அவளை அடையாவிடின் தன் ஆவி நீங்குமென்றும் கூறினார். கூறவே பாவையர் திலகமாகிய நாளாயணி அத்தாசியினிருப்பிடத்தை யறிந்து கொண்டு ஒருவரு மறியாதபடி விடியற்காலையிற் சென்று அவள் வீட்டு வாயிலைச் சுத்தமாக மெழுகிப் பெருக்கிக் கோலமிட்டு வந்தார்.
 

அந்த வேசி நாளாயணியம்மை அவ்வாறு செய்து வருவதை ஒருநாள் கண்டுபிடித்து அதன் காரணத்தையறிந்து, அவர் வேண்டுகோளுக்கிணங்கினாள். முனிவரின் எண்ணம் கைகூடியது. நாளாயணி மீளவும் அவ் வேசியின் வீட்டினின்றும் தம் கணவரைக் கூடையில் இருத்தித் தூக்கிவரும் வழியில் அக்கூடையானது கழுவிலேற்றப்பட்டுத் துன்பப்பட்டுக் கொண்டிருந்த மாண்டவியரென்னும் முனிவர் காலில் மோதிற்று. அதனால் அம் முனிவர் மிக்க நோயடைந்தவராய் “எனக்கு நோயையுண்டாக்கின மாது சூரியோதயமானதும் தனது மாங்கலிய மிழக்கக்கடவள்' எனச் சபித்தனர். அச்சாபமொழியைச் செவியுற்ற நாளாயணி' இருளின் மிகுதியால் தான் அம்முனிவர்க்குத் துன்பந்தர நேர்ந்ததற்காக வருந்திச் சூரியோதய மாகாதிருக்க வேண்டுமென்று கடவுளை வேண்டினாள். பதிவிரதையின் வாக்குப் பொய்க்குமோ?


 காற்றும் வெய்ய கனைகதி ருங்கடல்
 தோற்று தண்ணில வுச்சுடர்த் திங்களும்
 போற்று கற்பிற் புரிகுழற் பூங்கொடி
 மேற்றோடும்பொழு துள்ளம் வெருவுமால்.  
            (காசிகாண்டம்)


என்றபடி, எட்டுநாள்ளவும் சூரியோதயமாகாமல் உலகெங்கும் காரிருள் கவிந்து கொண்டது.
 

இவ்விபரீதத்தைக் கண்டு தேவர்கள் பயந்து மாண்டவிய மகரிஷியின் சாபத்தை நிவிர்த்தி செய்விக்க, அவ்வம்மணியும் 'சூரியோதயமாகுக' எனக் கூறித் தன் சாபத்தையும் நீக்கினார். சூரியனுதயமாகவே இருள் நீங்கி உலகம் களித்தது.
 

தம் மனைவியின் கலங்காத கற்பு நிலையைக் கண்டு களிகூர்ந்த மவுத்கல்லியர் தாம் மேற்கொண்டிருந்த விருத்தாப்பியத்தையும் வியாதியையும் நீக்கி மன்மதாகாரராய் விளங்கினார். அதுமுதல் அவ்விருவரும் அளவிலா ஆனந்தத்தோடு பல போகங்களைத் துய்த்து அன்புற்று அளவளாவி வாழ்ந் துவந்தனர்.

 

(அவ்வம்மைதான் திரௌபதியாகப் பிறந்தார். திரௌபதாதேவியின் சரிதையைப் பலரு மறிவாராகலின் இங்கு எழுதாமல் விட நேர்ந்தது)

 

திருவெண்காட்டு நங்கை: - இவர் பெரிய புராணத்திற் கூறப்பட்டுள்ள அறுபான் மும்மை நாயன்மார்களி லொருவராய சிறுத்தொண்ட நாயனாரின் மனைவியார். கணவன் கருத்திற் கிணங்க நடந்து அவர் சொல்லைத் தெய்வ வாக்காகக் கொண்டொழுகியவர்.


 கொழுநன் சொற்கட வாதுறை கொள்கையே
 வழுவி னல்லறம் வான்றவ மாற்றுதல்
 தொழுது தெய்வம் பராய்மலர் தூவுதல்
 பழுதில் கற்புடைப் பத்தினிக் கென்பவே.
                (காசிகாண்டம்)


என்றபடி, கணவர் கருத்திற்கிணங்கி அவர் சொல்லை மீறாமல் ஒழுகுபவர். இதுதானே கற்பு. 'கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை' யன்றோர் இவர் தம் கணவர் மேற்கொண்டிருந்த அடியார்க்கு அன்னமளிக்கும் திருத்தொண்டில் அவருக்கு வேண்டிய உதவிகளைப் புரிந்து வந்தார். இவ்வாறு கணவனும் மனைவியுமாகிய இருவரும் மனமொத்துச் செய்தாலன்றோ எல்லாத் தருமகாரியங்களும் செவ்வையாக நடைபெறும். ஏறுமாறாக இருந்து செய்தால் எந்தக் காரியமும் ஈடேறாது.


 காதல் மனையாளும் காதலனும் மாறின்றித்
 தீதி லொருகருமம் செய்யவே.


என்பது ஆன்றோர் விதியன்றோ?

 

ஒருநாள் சிவபெருமான் ஓர் அடியாராகத் தோன்றிச் சிறுத்தொண்டரை நோக்கி 'எனக்கு நீ அன்னமளித்தல் வேண்டும். யானுண்பது நரமாமிசம். அதுவும் ஆறுவயதுள்ள சிறுவனுடைய கறியாயிருத்தல் வேண்டும். மேலும் அச்சிறுவன் நகைத்துக் கொண்டிருக்கத் தாய்பிடிக்கத் தந்தையருக்க வேண்டும். இவ்வாறு படைக்க உன்னாலியலுமோ' வென, சிறுத்தொண்டர் அதற்குச் சம்மதித்து மனைவியிடம் வந்து 'இவ்வாறு தம் பிள்ளையை யறுக்கப் பெற்றோரெவரும் சம்மதியாராகலின், நாம் நம் பிள்ளையை யறுத்துச் சமைக்க வேண்டு' மென்னலும் அம்மையாரும் அதற்கு உடன்பட்டனர்.

 

அதன்படி தன் ஏகபுத்திரனான சீராளனைத் தன் மடியிலிருத்திக் கொண்டு அறுக்கச் செய்து பலவித கறிகளாகச் சமைத்து அடியார்க்கு அன்னமிட்டனர். முடிவில் கடவுளருளால் புத்திரனையடைந்து சுகமாக வாழ்ந்திருந்து சிவபதமடைந்தனர்.

 

வல்லாளன் மனைவி: - வல்லாளனென்னும் மன்னவனொருவனிருந்தான். அவனுக்கு இரண்டு மனைவியரிருந்தனர். அவ்வரசன் அன்னசத்திரம் முதலிய பல தருமங்களைச் செய்து வந்தான். இங்ஙனமாக ஒருநாள் சிவபெருமான் விட சன்யாசியாகி அவனிடம் சென்று தான் ஒரு ஸ்திரீயை விரும்பி வந்ததாகக் கூற, அவரது விருப்பத்தை நிறைவேற்றக் கருதிய வல்லாளன் எங்கும் விலைமாதர்கள் கிடையாமையால் வருந்தி 'நம்மிடம் இரண்டு மாதர்களிருக்க,' வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவார்' போல, நாம் ஏன் மாதர்களுக்காகக் கவலை கொள்ள வேண்டு மெனத் தேறி, இளைய மனைவியிடம் சென்று சந்நியாசியின் விருப்பத்தைத் தீர்க்க வேண்டுமெனக் கூறினான். அப்பொழுது அம்மங்கையார் சற்று ஆலோசனையி லாழ்ந்தார். அதையறிந்த வல்லாளன், 'நீ என்னிடம் மாறாத அன்புடையவளா யிருப்பது உண்மையானால் நான் சொன்னபடி செய்ய வேண்டும். என் கட்டளையே உனக்கு விரதம். என் வார்த்தையை மீறா திருத்தலே கற்பாம். இதையன்றிக் கற்பென்பது வேறொன்றில்லை' யெனலும், உடனே அவ்வுத்தமி தன் குற்றத்தை யுணர்ந்து, கணவன் வார்த்தைக் கிணங்கி நடத்தலே தனது கடமையென்றறிந்து, அதற்குச் சம்மதித்து ஆடையணிகளால் தன்னை யலங்கரித்துக்கொண்டு, சயனக்கிருகத்தை யடைந்து சந்நியாசியை யணையவணுக, அவர் தமது விடரூபம் நீங்கி, குழந்தையாகி அழத்தொடங்கினார். அரசன் முதலாயினாரறிந்து ஆனந்தவாரியில் ஆழ்ந்தனர். வல்லாளனும் அவனது மனைவியரும் தமக்குப் புத்திரப் பேறில்லாமலிருந்த குறை நீங்கப்பெற்று இன்பமாக வாழ்ந்திருந்து முடிவில் முத்தியெய்தினர்.

 

வாசுகியம்மையார்: - இவர் எச்சாதியாரும் எச்சமயத்தாரும் உச்சி மேற்கொண்டு மெச்சும்படியான அருமை பெருமை வாய்ந்த திருக்குறள் என்னும் நீதி நூலைத் திருவாய்மலர்ந்த தெய்வப்புலவராகிய திருவள்ளுவரின் மனைவியாவர். (இவரைப்பற்றி இதற்குமுன் பல விடங்களில் கூறியிருத்தலின் இங்கு அதிகமாக எழுதவேண்டிய அவசியமில்லாமற் போயிற்று) இவர் கணவன் வார்த்தையை மீறினதேயில்லை. இவர் தூங்கினதை வள்ளுவர் தாம் ஒருநாளும் பார்த்ததேயில்லை என்று சொல்லியிருக்கிறார். கணவன் தூங்கப் போகும் போது அவருக்குக் கால் பிடித்துக்கொண்டேயிருந்து அவர் தூங்கிய பின்பு தாம் சயனிப்பார். அவர் நித்திரையினின்று விழிப்பதற்கு முன்பே தாம் எழுந்து காலைக் கடன்களை முடித்துக்கொண்டு, அவர் விழித்ததும் தம் முகத்தில் விழிக்கும்படி லட்சுமிகளையோடு கூடிய முகத்துடன் அவரெதிரில் நிற்பார். எச்சமயத்திலும் கணவனுக்கு முன் அவர் அன்னம் புசித்ததேயில்லை. கணவன் எதைச் செய்யச்சொன்னாலும் ஏன் இப்படிச் செய்யச் சொல்லுகிறீர் என்று கேளார். திருவள்ளுவர் இஷ்டப்பட்டால் மிக்க செல்வமுள்ளவராகலாமாயினும் அவர் அச்செல்வ வாழ்க்கையை இச்சியாமல் தரித்திர நிலைமையிலேயே யிருந்தார். ஆகலின் வாசுகியாரும் அவ்வறுமையைப் பொருட்படுத்தாமல் அவரையே கடவுளாகக் கருதித் தொழுது வந்தார். 'இல்லானை இல்லாளும் வேண்டாள் என்னும் பழமொழி அவர் விஷயத்தில் பொய்யாயிற்று.
 

ஒருநாள் ஒருவர் வள்ளுவரிடம் போய் 'ஐயா! இல்லறம் சிறந்ததா? துறவறம் சிறந்ததா?' என வினவினர். அதற்கு அவர் யாதொன்றும் விடையிறுக்காமல் தம் மனைவியார் அரிசி குற்றும்போது அவரைக் கூப்பிட்டார். உலக்கையை மேலே ஓங்கிய அவ்வம்மையார் அதை அப்படியே விட்டு விட்டு இதோ வந்தேன் எனக் கூறிக் கொண்டே ஓடிவந்தார். மேலே தூக்கிவிட்ட உலக்கை கீழே விழாமல் அப்படியே அந்தரத்தில் நின்றது. மற்றொரு சமயம் தமக்குப் பழைய அன்னம் போட்டபோது வள்ளுவர் மனைவியைப் பார்த்து '' பழையது சுடுகிறது; விசிறி கொண்டுவந்து விசிறு'' என்றார். அம்மையார் அப்படியே செய்தார். பின்னொருமுறை பகலில் நெய்குழல் கீழேவிழ அதைத் தேடியெடுக்க விளக்குக் கொண்டுவா என்றார். அவர் அப்படியே கொண்டு வந்தார். கிணற்றில் நீர் சேந்திக்கொண்டிருந்த பொழுது வள்ளுவர் கூப்பிடலும் அம்மையார் சேந்த கயிற்றை அப்படியே விட்டுவிட்டு வந்து விட்டார். அத்தோண்டி பாதிக் கிணற்றில் அப்படியே தொங்கிக்கொண்டிருந்தது. முன்னே கேள்வி கேட்ட அந்த மனிதர் இவைகளைப்பார்த்து அதிசயங்கொண்டு 'இத்தகைய மனைவியிருந்தால் இல்லறம் நல்லது; இல்லாவிட்டால் துறவறமே சிறந்தது' என்று எண்ணிக்கொண்டு போய்விட்டார். இது பற்றியே வள்ளுவரும்,

 ''மனைமாட்சி யில்லாள் கணில்லாயின் வாழ்க்கை
 எனைமாட்சித் தாயினு மில்''                                 என்றார்.

 

''பத்தாவுக் கேற்ற பதிவிரதை யுண்டாயின்
 எத்தாலுங் கூடி யிருக்கலாம் - சற்றேனும்
 ஏறுமா றாக இருப்பளே யாமாயின்
 கூறாமற் சந்நியாசங் கொள்.''                                 என்றார் பிறரும்.

 

பின்னுரை

 

சகோதரிகளே! நாகரிகமும் கற்பும் தெய்வ பக்தியும் மற்றுமுள்ள நற் குணங்களும் பிறந்த நம் நாட்டிலே கல்வி கற்பு வீரம் சௌரியம் முதலிய அருங்குணங்கள் வாய்ந்த அரிவையர் அளவற்றோரிருந்தனர். அவர்களிற் பலர் சரித்திரம் வெளியாகாமல் மறைந்தன. சிலரைப் பற்றிய சரித்திரங்களே அறியக் கிடக்கின்றன. அவற்றையும் முழுதும் ஆராய்ந்து வெளியிடின் மிகப் பெருகும் ஆகலின் அதற்குப் பயந்து சிலருடைய சரித்தி ரங்களை மட்டும் வெளியிட்டு நிறுத்த நேர்ந்தது.

 

இதுவரை எழுதிவந்த விஷயங்களில் எவ்வளவு பயன் விளையுமோ ஆண்டவனே அறிவார். பல விடங்களில் பல குடும்பங்களில் பார்த்த அனுபவத்தால் மனம் வருந்தி இவர்கள் இத்தகைய நிலையிலிருந்தால் நம் நாடு விடுதலை யடையவதெப்படி எனத் துக்கித்ததுண்டு; துக்கிப்பதுண்டு. இச்சிறுநூல் எழுத நேர்ந்ததற்கும் இதுவே காரணம்.

 

ஆரம்பத்தில் இதைக் கண்ணுற்ற கனவான்களிற் பலர் நேரிலும் கடிதங்கள் மூலமாகவும் நல்லபிப்பிராயங் கொடுத்து உற்சாகப்படுத்தியதால் நினைத்ததை விடச் சற்று அதிகமாக விரிக்க நேர்ந்தது. மேல் நாட்டு நாகரீசம் தலைவிரித்தாடும் இக்காலத்தில் இந்நூல் எவ்வளவு பயன்படுமென்பது விளங்கவில்லை. இந்நூலின் விஷயமாக நல்ல அபிப்பிராயமுடைய நண்பர்கள் தங்கள் கருத்தை இப்பத்திரிகையின் ஆசிரியரவர்கட்குத் தெரிவிப்பார்களாயின், அவரால் இது தனி நூலாக வெளியிடப்படினும் படலா மென்பது எமது துணிபு. அப்படி வெளியிட நேருங்கால் சில சீர்திருத்தங்களோடு இது பிரசுரிக்கப்படும்.

 

எந்த நோக்கத்தைக் கொண்டு இது எழுதப்பட்டதோ அந்தப்பயனை இச்சிறு நூல் உண்டாக்குமாயின் அதைவிடச் சிறந்தபேறு வேறில்லை. ஆகலின் சகோதரிகள் யாவரும் இதனைத் தொடக்கத்திலிருந்து விடாமல் வாசித்து அதன்படி ஒழுகவும், சகோதரர்கள் இதைத் தங்கள் வீட்டிலுள்ள மாதர்களுக்குக் கொடுத்து வாசிக்கச் செய்யவும் வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆண்டவர் அருள்புரிவாராக. உலகம் பிழை பொறுப்பதாக.

 

மாதர் நீதி மஞ்சரி முற்றிற்று.
 ஓம் தத்ஸத்.

பூ. ஸ்ரீநிவாசன், தமிழ்ப்பண்டிதர், சித்தூர்.

 

      குறிப்பு: - இந்த சஞ்சிகையோடு, சித்தூர் தமிழ்ப்பண்டிதர் ஶ்ரீமான் பூ. ஶ்ரீநிவாசலுநாயுடு அவர்கள் நமது ஆனந்தபோதினியில் வெளியிட்டு வந்த “மாதர் நீதி மஞ்சரி” என்னும் சிறு நூலானது முற்றுப்பெறுகின்றது. இது நமது பெண்மணிகளுக்கு இன்றியமையாதது. ஒவ்வொரு குடும்பத்திலும் இது இருந்து தீர வேண்டியதே. ஓய்வுகாலங்களில் நமது ஸ்திரீ ரத்னங்கள் இதை நிதானமாக வாசித்து, இதிற் கூறியபடி நடந்து பிறந்தகத்திற்கும் புக்ககத்திற்கும் பெருங் கீர்த்தியை நிலைபெறச் செய்யலாம். குடும்பவிவகாரத்தில் மக்கள் முதலிய சகல விஷயங்களையும் கவனிக்க வேண்டிய முறைகளையுந் தெரிந்துகொள்ளலாம். நமது சந்தா நேயர்கள், இது புஸ்தகமாக வருவதை ஆமோதித்தால் அவ்வாறே செய்யப்படும்.

 

பத்திரிகாசிரியர்.

 

ஆனந்த போதினி – 1924, 1925 ௵

பிப்ரவரி முதல் டிசம்பர் ௴ வரை.

 

 

 

 


No comments:

Post a Comment