Sunday, September 6, 2020

 

மாதர் செவியமுது

 

ஒரு நாட்டின் உயர்வுக்கும், மக்களின் மகிழ்ச்சிக்கும் காரணமாயிருப்பவர்கள், மாதர் மணிகளே, அவர்கள் நல்லநிலையில் இருந்தால் மாத்திரமே ஒவ்வொரு குடும்பமும் செவ்விதில் நடைபெறும்; ஆண் மக்களும் மனமகிழ்ச்சியும், பெருஞ் சிறப்பும், இன்பவாழ்க்கையு மெய்துவார்கள்; அறமுந் தலையெடுத்தோங்கும்; கடவுள் பணி, பெரியோர் வழிபாடு முதலியனவும் முட்டின்றி நடைபெறும். கீர்த்தியும் தலை சிறந்து விளங்கும். இவற்றால் நாடு சிறக்கும்; பெண்கள் தங்களுக்குரிய உயர்ந்த ஒழுக்கங்களைக் கொள்ளாத நாடு எவ்வகைச் செல்வம் பெற்றிருப்பினும் இழிவுடையதேயாகும். ஆதலின் நம் நாடு நலம் பெறுதற்கு – பண்டைய சிறப்பினின்றும் பிறழாதிருப்பதற்கு நம் நாட்டுப் பெண்மணிகள் மேற் கொள்ள வேண்டிய சீரிய ஒழுக்கங்களை அவர்களுடைய செவிக்கமுதமாக விளக்குவாம். இம்மாதம், நம் போதினிக்கு 14 - வது ஆண்டின் தொடக்கமாதலால், புதுவருட விருந்தாகநம் சகோதரிகளின் பொருட்டு இந்நல்லுரை யமுதை வெளியிடல் மிகப் பொருத்தமுடையதாம்.

 

பண்டைக்காலத்தில் நம் நாட்டு மாதர்கள் ஒழுக்கத்தில் சிறந்தவர்களாயும், கற்பரசிகளாயும், கல்வியில் தேர்ந்தவராயும், வீரமிக்காராயும், அறம்வளர்த்த அன்னையராயுமிருந்து வந்தனரென்பதற்குச் சரித்திர நூல்களிற் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன. அவற்றையெல்லாம் நூல்களின் மூலமாகத் தெரிந்து கொள்ளலாம்.

 

இத்தகைய மேன்மைகள் பொருந்திய நம் இந்திய சகோதரிகள், பிற்பட்ட காலத்தில், கால விகற்பத்தாலும், பெருநோக்கில்லாத சில ஆண்மக்களாலும் தாழ்த்தப் பட்டார்கள்; அடுப்பூதும் வேலைக்கே உரியவர்களென்று பலராலும் கருதப்பட்டார்கள்; வீட்டிற்குள் ஓர் அஃறிணைப் பொருளைப் போல் அடக்கி வைக்கப்பட்டார்கள். கல்வியானது அப்பெண்மக்களுடைய அறிவைக் கெடுத்து விடுமென்று சிலரால் கருதப்பட்டது; பெண்கள் கல்விகற்கும் வழக்கம் பெரும்பான்மையும் இல்லாமல் நிறுத்தப்பட்டது. இக்காரணங்களால் வீரம்பொருந்திய நம் மாதர்கள் வீட்டிற்குள் ஒடுங்கினார்கள்; கல்வியிற் சிறந்த நம் பெண்மணிகள் புலனற்ற பொறிகளையுடைய பொம்மைகளைப் போன்று வதிந்தார்கள்; அறிவிற்சிறந்த நம் அரிவையர் பலரும் பேதையர் என்னும் பட்டமேற்றார்கள்; உலக இயற்கை முழுவதும் உணர்ந்திருந்த நம் உத்தமிக ளெல்லோரும் ஒன்று மறியாத பிராணிகளெனக் கருதப்பட்டார்கள். ஆண்மக்களால் அடிமைகளைப் போலவும், விலங்கினங்களைப் போலவும் நடத்தப்பட்டார்கள்; பெண்களுக் கென்ன தெரியும் என்று இகழ்ந்துரைக்கப் பட்டார்கள். அறிவற்ற செய்கையைச் செய்யும் ஒருவனைப் பார்த்துச் சிலர், 'நீ என்ன பெண்பிள்ளையா' என் றிகழ்ந்துரைப்பதற்கும் உதாரணப் பொருளாயினர்.

 

பெண்மக்கள் இந்நிலையிலேயே சில ஆண்டுகட்கு முன்வரையிருந்து வந்தனர். பண்டைய நாகரிகந் தலைக்காட்டவும், நூதனக்கல்வி முறை யோங்கவும் சில ஆண்டுகட்கு முன்னிருந்து சீர்திருத்தக் காரர்களாகிய பல அறிஞர் வெளிப்போந்து, மாதர்க்குக் கல்வியறிவை அவசியம் ஊட்ட வேண்டு மென்பதையும், சுயேச்சை கொடுக்க வேண்டுமென்பதையும், ஆண்மக்களோடு சகல காரியங்களிலும் சமத்துவ உரிமை கொடுக்க வேண்டுமென்பதையும் ஆங்காங்கே வற்புறுத்திக் கூறி இவற்றில் பெரிதும் முயன்று வந்தனர்.

 

அதன் பயனாக இந்தியா முழுவதிலும் பெண்கல்வி விருத்தியடைந்து பரவி வருகிறது; பெண்மக்களும் கல்வியில் தேர்ச்சியடைந்து உயர் தரப் பட்டங்கள் பெற்றுவருகின்றனர்; உபாத்திமைத் தொழிலும், மருத்துவத் தொழிலும், வேறு பல உத்தியோகத் தொழிலும் புரிகின்றனர்; சட்டசபை மெம்பர்களாகவும், நகரசங்க அங்கத்தினராகவும் இருந்துவருகின்றனர்; கவியரசிகளாகவும், நூலாசிரியைகளாகவும், பத்திரிகாசிரியைகளாகவும் இருக்கின்றனர்; மேடைகளிலேறிப் பெரிய விஷயங்களைப் பற்றிச் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வருகின்றனர். இவையெல்லாம் ஒருவிதத்தில் அறிஞர் கொண்டாடத்தக்கவையே. எனினும் இவற்றோடு நம் பெரியார் கூறியிருக்கும் உலகியல் நூல்களிலுள்ள கற்புடைப் பெண்டிர்க்குரிய உயரிய - உயிரினும் சிறந்த ஒழுக்கங்களும் கலந்திருந்தால் மாத்திரமே இவை சிறப்புள்ளனவும், கொண்டாடத்தக்கவைகளுமாகும். ஒழுக்கத்தைக் கைவிட்டுச் செய்யப்படும் காரியங்கள் எவ்வளவு உயர்ந்தவைகளாயினும் சிறப்பற்றனவேயாம். ஒழுக்கத்திற் சிறந்தோரே உயர்ந்தோராவர்; ஒழுக்கங்குன்றியவர் தாழ்ந்தவரே. பண்டைக் காலத்தில் நம் நாட்டில் கீர்த்தி பெற்ற பெண்மணிகளெல்லோரும் ஒழுக்கத்தை உயிர் போலப் பாதுகாத்தே அதன்மூலம் பிற உயர்ந்த காரியங்களிலும் இசைபெற்றார்கள். ஒழுக்கங்கெட்டோரெல்லோரும் நூல்களால் இகழப்பட்டே வந்திருக்கின்றனர்.

 

இங்ஙனம் சீலமே பிற உயர்வுகளுக்கெல்லாம் அடிப்படையாயிருந்தும், இப்போது கல்வித் துறையிலும், பிறவற்றிலும் முன்னேற்றமடைந்திருக்கும் பெண்மணிகளிற் சிலரே அந்த உயிரினும்சிறந்த ஒழுக்கத்தின் உயர்வைத் தெரிந்துகொண்டு அதன்வழிநின்றொழுகி வருகின்றார்கள். பெரும்பான்மையோர் குளிக்கப்போய்ச் சேற்றைப் பூசிக்கொள்வார் போன்று, நாகரிகத்தில் தலைசிறந்து நிற்க முயன்று நம் நாட்டு உயர்ந்த நூற் கொள்கைகளாகிய இந்தியமாதர் சீலத்தைக் கைவிட்டவராயிருந்து தங்கள் போக்கே மேலான போக்கென்று இறுமாப்படைந்து வருகின்றனர்.

 

கல்வி கற்கவேண்டுமென்று சில மேதாவிகள் போதித்ததைக் கொண்டு சில மாதர்கள், சுயமொழிக் கல்வியையும், நம் உயர்ந்தநெறிகளமைந்த நூற்கல்வியையும் புறக்கணித்து மிகுதியும் ஆங்கிலக் கல்வியையே அவாவிக் கற்று வாயினாற் சுலபமாகச் சொல்லிவிடும் ஒரு பெரும் பட்டத்தைப் பெற்றுத் திகழ்கின்றனர்; ஆங்கிலத்திலேயே கவிகளும், நூல்களும் அளவற இயற்றி அகமகிழ்கின்றனர்; ஆங்கில மொழியிலேயே எந்த மேடைகளிலும் ஏறிப் பிரசங்கமாரி பொழிகின்றனர். எவரோடும் எதையும் ஆங்கிலத்திலேயே பேசுகின்றனர். ஆங்கில நூல்களால், நம் இந்திய நூல்களைப் போன்ற அரியபெரிய நீதிகள் போதிக்கப்படாமையால் அவர்கள் கடவுள் வழிபாடு, பெரியோர் வழிபாடு, பதிபக்தி முதலிய ஒழுக்கங்களைக் கைநழுவ விட்டு விடுகின்றனர். எதிலும் பெண் மக்கள், ஆண் மக்களோடு சம உரிமையும், சுயேச்சையும் பெறவேண்டுமென்று சில சீர்திருத்தக்காரர்கள் போதித்ததைக் கொண்டு சிலமாதர் மணிகள் பெண்களின் சயேச்சையும், சமத்துவ உரிமையும் இன்னவையென்றுணராமல் நம் இந்திய மாதர் ஒழுக்கத்திற்கு நேர் விரோதமாக, ஆடவர் கூட்டமே நிறைந்திருக்கும் ஓரிடத்தில் தனித்தவர்களாய்ப் போய் வேலையில் அமர்கின்றனர். பருவமடைந்த மங்கையர், குமரப்பருவமுள்ள வாலிபர்கள் கூடியிருக்குமிடத்திற் புகுந்து அவர்களோடு கலந்து கல்வி கற்கின்றனர்; பலஆடவர் கூட்டத்தினிடையே தனி நின்று பேசுகின்றனர்; ஆண்மக்களின் உடம்பில் உராய்ந்து கொண்டு கூட்டங்களில் உட்காருகின்றனர். சமுத்திரக்கரை மணலில் தனியே உட்கார்ந்து தம்முடன் கல்விகற்கும் மாணவர் சிலரையோ, தமக்குப் பாடங் கற்பிக்கும் ஆசிரியர் ஐந்தாறு பேர்களையோ தம்மைச் சுற்றிலும் உட்கார வைத்துக் கொண்டு அவர்களோடு விநோத வார்த்தைகளைப் பேசியும், அங்கசேஷ்டைகளைச் செய்தும் விளையாடுகின்றனர்; தனியாய் மோட்டாரிலோ, பைசிகிலிலோ ஏறிச் சென்று ஒரு தோட்டத்திலோ, சிங்காரவனத்திலோ, ஏரிக்கரையிலோ, தடாகத்தின் மருங்கிலோ, சமுத்திரக் கரையிலோ இறங்கி அங்குவந்து தங்கள் வரவுக் கெதிர்பார்த்திருக்கும் நண்பர்களாகிய வாலிபர்களுடன் கைகோத்துச் சென்று உல்லாசமாக ஓரிடத்தமர்ந்து விரோத சம்பாஷணைகள் செய்து மகிழ்கின்றனர்; அன்னிய ஆடவரின் கையைப் பிடித்துக் குலுக்குகின்றனர்; தட்டுத் தடையின்றி எந்த ஆடவருடனும் தனித்துச் சந்தித்துப் பேசுகின்றனர். தங்களை வீட்டிற்குத் தேடிவரும் ஆடவருடன் தனியறையில் உட்கார்ந்து பேசுகின்றனர்; அப்போது தம் சொந்த நாயகரும் அங்கு வரக்கூடாதென்று சட்ட திட்டங்கள் ஏற்படுத்தி விடுகின்றனர்; எவர் துணையுமின்றித் தனியே கப்பலேறி அன்னிய நாடுகளுக்குப் பிரயாணஞ் செய்து ஆங்காங்குள்ள புறநாட்டு ஆட்ட வரோடு பழகி வருடக் கணக்காகச் சஞ்சரித்துத் திரும்பி வருகின்றனர். அன்னிய ஆடவர்களாகிய அரசர்க்கோ, பிரபுக்களுக்கோ, பெண்கள் கற்பொழுக்கத்துக்கு நேர் மாற்றமாகத் தங்கள் கையினாலே மாலை சூட்டுகின்றனர்.

 

சில நவீன நாகரீக சீர்திருத்தக்காரர்கள், '' நம் பெண்மணிகள், 'பழயன கழிதலும் புதியன புகுதலும், வழுவல கால வகையினானே' என்ற முறைப்படி பழய சில வழக்கங்களை யொழித்து விட்டுப் புதிய நாகரிக வழக்கங்களைக் கொள்ள வேண்டும்; மேல்நாட்டுப் பெண்மணிகளிடமிருக்கும் உயர்ந்த பழக்க வழக்கங்களை அனுசரிக்க வேண்டும்” என்று போதித்ததின் பயனாகச் சில வனிதாரத்தினங்கள், நம் நாட்டுப் பண்டைய கொள்கைகளில் கழிக்க வேண்டியவைகளாகிய சில பயனற்ற பழக்க வழக்கங்களைக் கழிக்காமல்உயர்ந்த ஒழுக்கங்களை நழுவ விட்டுக் கண்டோர் அருவருக்கத்தக்க மேல்நாட்டுப் பெண்மணிகளின் இழிந்த ஒழுக்கங்களை மேற்கொண்டொழுகி வருகின்றனர்; தங்களைப் பார்ப்போர் இந்திய நாட்டுப் பெண்களென்றுணர்ந்து கொள்ளாதபடி மேல் நாட்டு மாதர்களைப் போலவே உடையணிகின்றனர்; பூட்ஸ் முதலியவற்றைப் பாதங்களில் அணிந்து குப்புற்று வீழ்பவர்களைப் போல கெந்திக் கெந்தி நடக்கின்றனர்; மங்களகரமான கழுத்தை அமங்கலமான வெறுங்கழுத்தாக்கிக் கண்ணுக்குத் தெரியாத பொற்சங்கிலிகளை அணிந்து ஒய்யாரமாக உலவுகின்றனர்; சில மாதர் முக்கியமான காரணங் கருதி மூக்குக்கண்ணாடி யணிந்திருக்கின்றனர்; பலர் எவ்வித காரணமுமின்றியே மூக்குக்கண்ணாடி யணிந்து மேல் நோக்கி நடக்கின்றனர்; சிலர் மேல்நாட்டு மாதர்கள் தலைமயிரைக் கத்தரித்து விடுவதைப் பார்த்துவிட்டுத் தாங்களும் கழுத்துவரை விட்டுக் கத்தரித்து விடுகின்றனர்; மஞ்சளணிவதை மறந்தனர்; குங்குமமணிவதை ஒழித்தனர்; சோப்பிட்டு முகத்தைக் கழுவி அதில் வெள்ளைப் பொடி யொற்றி வேஷம் போட ஆரம்பித்துவிட்டனர்; கைவிரல் நகத்தை அனாசாரமாக எப்பொழுதும் வாயில் வைத்துக் கடிக்கும் வழக்கத்தை மிகவும் பிரீதியாகக் கொண்டனர்; ஒரு வாசனையுமில்லாத பலநிறக் காட்டு மலர்களைத் தலையிற் சூடிக் கொண்டை குலுக்கித் திரிகின்றனர். பொது மகளிர் போல வேடந்தரித்துப் படம்பிடித்துக் கொள்கின்றனர்; நாடக மேடைகளில் வேடந் தரித்து நாடகமாடுகின்றனர்; பல ஆடவர்களுக்கு நடுவிலிருந்து பாட்டுப் பாடிக் கச்சேரி நடத்துகின்றனர்; உடம்பு கெடுமென்று கருவைக் கலைக்கத் தொடங்குகின்றனர்; மாமன் மாமிமார்களைப் படாத பாடுபடுத்தி வேலைக்காரர்களைப் போல் நடத்துகிறார்கள்; கணவர்களிடத்தில் மரியாதையின்றி அவர்களை அடிமைகளைப்போல நடத்துகிறார்கள். இன்னொரு மானக்கேடான செய்கை யிருக்கிறது; சொல்லவும் வாய் கூசுகின்றது; மேல்நாட்டுக்காரர்களுக்கு எப்பொழுதும் ஒழுக்கத்தில் திருஷ்டி கிடையாது; அவர்கள் வேறுசில உயர்ந்த குணங்களிற் சிறந்தவர்களாயிருப்பினும், மனிதராற் செய்ய முடியாத அரும்பெருங் காரியங்களைச் செய்து முடிப்பினும் சீலத்தை மாத்திரம் கைவிட்டவர்கள்; மனம் விரும்பியதை - நல்லதோ கெட்டதோ - செய்து முடித்தின்புறும் கொள்கையுடையவர்; அவ்விஷயத்தில் பிறர் எள்ளி நகையாடுவதையும் கவனிக்க மாட்டார்கள்; ஆண் பெண்கள் கலந்து பேசுவதிலும், உறவாடுவதிலும், ஒருவர்க்கொருவர் விருப்பத்தை விளைவித்துக் கொள்வதிலும் வெட்கத்தை அறவே விடுத்தவராவர்; அதனால், அவர்களில் ஆண்மக்கள் பெண்களைக் கட்டி யணைத்தபடியே பலரறியத் தெருக்களில் உலாவுகின்றனர்; ஆண் பெண்கள் பக்கத்தில் மனிதர் இருப்பதையும் கவனிக்காமல் சரச வார்த்தைகளாடி மகிழ்கின்றனர்; ஆண்மக்களும், பெண்மக்களும் ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கொண்டு கெந்திக் குதித்துக் களியாட்டாடுகின்றனர்; ஒருவனுடைய மனைவியாயிருப்பவள் மற்றொருவனோடு தனித்து வண்டியிலேறிச் சோலையிலோ, வேறிடத்திலோ இறங்கித் தனித்துலாவுகிறாள்; முற்காலத்தில் உடையை மாத்திரம் உடல் தெரியாமல் அணிந்து கொண்டிருந்த அந்த மேல்நாட்டு மாதர்கள் இக்காலத்தில் நாகரிகத்தில் முதிர்ச்சியடைந்து விட்டதால் கைமூலந்தெரியும் படியாகவும், நெஞ்சின் பாகத்திற் பாதி வெளியிற்றெரியும் படியாகவும் மேலுடையணிகிறார்கள்; காலுக்குத் தங்கள் உடல் நிறம் போலவே பனியன் போட்டு அதைப் பார்ப்பவர் இயற்கை உடம்பென்றே மயங்கும்படி செய்து முழங்கால் வரை பாவாடை போன்ற ஒருவகை வட்டுடையணிந்து அதனோடு பைசைகிலில் ஏறிச் செல்கின்றனர்; அவருடைய 'கோலத்தை அறிவுடையார் காண அருவருப்புக் கொள்வார்கள்.

 

இவர்கள் இவ்வாறு அசட்டுத்தனங்களைச் செய்வதைப் பார்த்து விட்டு மேற்கூறி வந்த நம் புது நாகரீகப் பூவை மாரும் இவர்களைப் போலவே உடல் தெரியும் ஆடைகளை அணிய ஆரம்பித்திருக்கின்றனர்; மற்ற ஆபாசச் செயல்களையும் சிறிது சிறிது செய்யத் தொடங்கியிருக்கின்றனர். இன்னும் எவ்வளவோ பல ஒழுக்க ஹீனமான செயல்களிற் புகுந்து வருகின்றனர்.

 

இங்ஙனம் இவர்கள் ஒழுக்க ஹீனமான காரியங்களைச் செய்து வந்தும் எவரும் இத்தீயொழுக்கங்களைக் கண்டித்து இத்தகைய மாதர்களைச் சீர்திருத்த முன்வருவதில்லை. பத்திரிகைகளில் வியாசங்கள் எழுதுவோரும், பிரசங்க மேடைகளிற் பேசுவோரும், மாதர்கள், மேற்கூறிய வழிகளிற் றிரும்பியது தான் தேசமுன்னேற்றத்துக்கு இன்றியமையாததென்று இம் மாதர்களையும் இவர்களுடைய கொள்கைகளையும் புகழ்ந்தெழுதியும், பேசியும் வருகின்றனர்; ஒழுக்கத்திற்குக் கட்டுப்பட்டிருக்கும் இதர மாதர்களையும் இவ்வழியிற் புகும்படி கிளர்ச்சி செய்து வருகின்றனர். இதனால் இந்த ஒழுக்கமற்ற வழக்கங்கள் மேலும் மேலும் பரவி வரு கின்றன.

 

இந்த ஒழுக்க ஹீனங்களால் நேரும் அவமானங்கள் பல. பிறநாட்டார் இந்தியாவை இகழ்ந்துரைக்கவும் இடமுண்டாகின்றது. மாதர்கள் தனித்து வெளியேறுவதாலும், ஆடவரோடு பழகுவதாலும், அவருடன் நெருங்கி யிருத்தலாலும், மனம் ஒரு நிலைப்பட்டதன்றாகலின் கற்பொழுக்கத்துக்குப் பங்கமுண்டாகும்.

 

இழிதொழில்கள் நடைபெறற்கேதுவுண்டாகும். மாதர் பிற ஆடவரைத் தீண்டுவதாலும் ஸ்திரீ தர்மங் கெட்டுப் பிறர் தீண்டற் கருவருத்தலாகிய பயிர்ப்பு என்னும் குணமும் பாழ்பட்டொழிகின்றது; மாதர்கள் தனியே தூரதேசப் பிரயாணஞ் செய்வதால் அன்னிய ஆடவருடன் கூச்சமற்றுப் பழகவும் பேசவும் அதனால் கற்பொழுக்கத்துக்குப் பங்கந் தேடிக்கொள்ளவும் இடமுண்டாகிவிடுகிறது. இப்படியே பெண்கள் தனித்து ஆடவர்க்கிடையில் பழகிச் செய்யும் தொழில்களினாலெல்லாம் அபாயத்திற் கிடமுண்டு. பெண்கள் தங்கள் கையினால் சொந்த நாயகருக்கே மாலையிடுவது இந்திய சாஸ்திரத்தின் முக்கிய விதி; அன்னியனுக்கு மாலையிடும் பெண்கள் கற்பொழுக்க முடையவர்களென்று கருதப்படமாட்டார்கள்.

 

ஆபாச நடக்கைகளைக் கொண்ட மேல்நாட்டு மாதர்களுங்கூட இவ்வாறு பிறன் கழுத்தில் பூமாலை சூட இசைவதில்லை. அப்படியிருக்க நம்மிந்திய மாதர்கள் அன்னியனுக்கு மாலை சூட்டுவது நம்மிந்தியரின் உயர்ந்த ஸ்திரீ தர்மத்தை அடியோடு நாசப்படுத்தியதாகும். மாதர்கள் சுயமொழியை விடுத்துப் பிறமொழிகளைக் கற்பதாலும், பட்டங்கள் வாங்குவதாலும், சொன்மாரி பொழிவதாலும், கவிகள் இயற்றுவதாலும், நூற்கள் இயற்றுவதாலும், பத்திரிகைகள் நடத்துவதாலும் சொந்த நாட்டிற்குக் கீர்த்தியை உண்டாக்குகிறவர்களாக மாட்டார்கள். இவற்றையெல்லாம் மேன்மையாகக் கொண்டாடும் மேதாவிகள் ஒவ்வொன்றுக்கு ம் பற்பல சமாதானங்கள் கூறுகின்றார்கள் “ஆடவர்கள் மாத்திரம் தனியே சஞ்சரிக்கும்போது ஸ்திரீகள் ஏன் அவ்வாறு வெளியேறிச் சஞ்சரித்தல் கூடாது?'' என்கின்றனர். இது சரியான கேள்வியாகாது; ஆடவர்கள் வெளியே தனியாகச் சஞ்சரிப்பதில் அபாயமில்லை;

 

ஸ்திரீகள் தனித்து வெளியேறுவதில் அபாயமுண்டு; தனித்துச் செல்லும் பெண்களைக் கண்டால் அவர்கள் மீது கெட்ட சிந்தனைவைப்பது சில தூர்த்த ஆடவர்களின் இயற்கையாயிருக்கிறது; அதனால் உத்தமகுணமுடைய மாதரும் அபாயத்திற்குள்ளாக வேண்டியிருக்கிறது; இக்காரணத்தினாலேயே பெண்மணிகள் தனித்து வெளிச் செல்வது கெட்டதென அறிஞரால் கருதப்படுகின்றது. சில நூதன விவேகிகள், “அது ஆடவர்கள் தப்பு; அதற்காகப் பெண் தனியே சஞ்சரிக்காமலிருக்கவேண்டு மென்று சொல்வது நியாயமாகாது" என்று கூறுகின்றனர். இதுவும் பேதைமையான கூற்று; உலகத்தில் மனித பேதங்களில் கெட்ட சுபாவமுடையவர்கள் மலிந்திருப்பது இயற்கை. அவர்களிடம் சிக்கித் துன்பமடையாமலிருப்பது அறிவுடமையே தவிர, அவர்களிடம் போய்ச் சிக்கித் துன்பத்தையும் அவமானத்தையும் அடைந்து கொண்டு, 'அது அவர்களுடைய குற்றம்; அவர்களுக்குப் புத்தியில்லாவிட்டால் நாங்களென்ன செய்வோம்' என்று சொல்வது புத்திசாலித்தனமாகாது. இன்னும் சிலர், "மாதர்கள் ஆடவர்கள் கூட்டங்களினிடையே புகுந்தாலென்ன? அவர்களைத் தீண்டினாலென்ன? அவர்கள் மேல் உராய்ந்து கொண்டிருந்தாலென்ன? மனத்தில் தீயஎண்ண முண்டானால் தானே கெடுதி; மனம் சுத்தமாயிருந்தால் ஒரு கெடுதியுமில்லை” என்று சொல்கின்றனர். அவ்வாறு எல்லோருக்கும் மனம் பரிசுத்தநிலையிலிருப்பது தான் முடியா தகாரியம்; பெரும்பான்மையும் ஆடவர் ஸ்திரீகளைப் பார்த்தாலும் தீண்டினாலும் அவர்கள் மனத்தில் கெட்ட சிந்தனையுண்டாவது இயற்கை; மனோதத்துவத்தையுணர்ந்தவர்களுக்குத்தான் இந்த உண்மை புலப்படும்; சிலர் மனத்தைப் பரிசுத்த நிலையில் வைத்துக் கொண்டிருப்பதாகவே கூறுவார்கள்; ஆனால் அவர்கள் மனம் அப்படியிருப்பதில்லை; அவர்கள் தெய்வத்திற் கஞ்சித் தங்கள் மனத்தைத் தொட்டுப்பார்த்தால் தாங்கள் செய்வது நடிப்பென்பது அவர்களுக்கே விளங்கும்; எங்கோ  அருமையாகச் சிலர் தாம் பரிசுத்தர்களா யிருப்பார்கள்; இக்காரணத்தைக் கொண்டு தான், ஸ்திரீகள் அன்னிய ஆடவரைத் தீண்டாமலும், பெரும்பான்மையும் முக்கியமான சந்தர்ப்பந் தவிர மற்றசந்தர்ப்பங்களில் அவர்களின் பார்வைக் குட்படாமலுமிருப்பது நலமென்று விவேகிகள் கருதுகிறார்கள் சிலர், மாதர்கள் ஆடவர் கூட்டத்தின் மத்தியில் நின்று பேசுவதாலும், பாடுவதாலும், நாடகம் நடிப்பதாலும் கெடுதி யொன்றுமில்லை; தேசத்திற்கு நன்மையே” என்கிறார்கள். இவற்றுள் மேடையில் பிரசங்கம் செய்தல் ஒருவாறு ஒப்புக் கொள்ளக்கூடியதாகும்; மற்ற இரண்டும் பொருந்தாச் செயல்களாம்; பிரசங்கம் செய்வதிலும் முதிர்ந்த வயதுள்ள பெண்கள் பேசுவதே பொருத்த முடையதாகும்; இளம் பெண்கள் ஆடவர் கூட்டத்தினிடையே பேசுவதும், பாடுவதும், ஆடுவதும் சில தூர்த்த ஆடவர்க்குக் கெட்ட இச்சையை உற்பத்தி செய்து விடத்தக்கவைகளேயாம். இத்தகைய ஆடல்பாடல் முதலியவற்றிற்குக் குல மாதர்கள் உரியவர்களாகார்கள். இக்காரணங்களைக் கொண்டே இவைகளும் பெண்களுக்குக் கூடாவென்று உண்மையறிவாளர் மறுக்கின்றனர். சிலர், “ஆங்கிலம் கற்று அதில் உயர் தரப் பட்டங்கள் பெற்றுப் பெண்கள் தேறுவதுதான் நல்லது; அதைக்கொண்டு பல தேசத்தவர்க்கும் விஷயங்கள் எடுத்துச் சொல்வதற்கும் எழுதுவதற்கும் அனுகூலமாயிருக்கும்" என்று சொல்லுகிறார்கள். ஆங்கிலம் எல்லா இடங்களிலும் பரவியிருப்பதால் அதைக் கற்றுக் கொண்டால் அதன் மூலம் எல்லோருக்கும் விஷயங்களை எடுத்துச்சொல்ல அனுகூலமாயிருக்குமென்பது உண்மைதான். ஆனால் சுயபாஷையில் ஞானமில்லாமல் அதைக்கற்றுக் கொள்வதால் பயனில்லை. நம் நாட்டுச் சாஸ்திரங்களை நன்குக் கற்று அவற்றின் கருத்துக்களை எடுத்துச் சொல்லுதற்கு மாத்திரம் போதுமானவரையில் இங்கிலீஷ் கற்றுக்கொண்டு புறநாட்டுப் பெண்களுக்கு நம் சாஸ்திரக் கொள்கைகளை வெளியிடுவது தான் சிறந்ததாகும்.

 

 சிலர், மேல்நாட்டுப் பெண்மணிகளைப் போன்ற நடையுடைபாவனைகளைக் கொள்வதும், பழையன கழிதலாக நம் பண்டைய இந்திய மாதர் ஒழுக்கங்களைத் தள்ளிவிடுவதும் தான் தேச முன்னேற்றத்திற்கு முக்கிய சாதனங்களாகுமென்று சொல்லுகிறார்கள். இது மிகவும் பைத்தியக்காரத்தனமான அபிப்பிராயம். இத்தகைய நடக்கைகளால் ஒரு தேசம் எப்பொழுதும் முன்னேற்றமடைந்து விடாது; ஒரு நாட்டின் இயற்கைக்கும், சாஸ்திரக் கொள்கைக்கும் விரோதமான நடக்கைகளால் இழிவேயுண்டாகும். ஒரு தேசத்தை முன்னுக்குக் கொண்டுவருபவை கல்வியறிவு, நல்லொழுக்கம், வியாபாரதந்திரம், கைத்தொழிற் பயிற்சி, விபசாயவிருத்தி, விடாமுயற்சி, மனவுறுதி, ஒற்றுமை முதலியவைகளே. இவற்றைக் கைக்கொண்ட எத்தேயமும் முன்னேற்றமடையும்.  

 

இவற்றைக் கைவிட்டு மேற்கூறிவந்த தீயொழுக்கங்களை மாதர்கள் கைக்கொண்டு வருவதால் தேசம் முன்னேற்ற மடையுமென்பதும், தேசத்திற்குக் கீர்த்தியுண்டாகுமென்பதும் அறிஞர் வெறுக்கத்தக்கவைகளாம். சில கேவலமான காரியங்களை இரகசியத்தில் செய்து கொண்டு மேலுக்கு மகாமேதாவிகளைப் போல் நடித்துத்தங்களுடைய தீய எண்ணங்கள் எளிதில் தட்டுத் தடையின்றி நிறைவேறு தற்பொருட்டுப் பெண்மக்கள் இத்தகைய ஒழுக்கங் கெட்ட்காரியங்களையும், இவைபோன்ற இன்னும் எண்ணத்தொலையா தஇழி செயல்களையும் செய்யுமாறு பெருங் கிளர்ச்சி செய்து நம் புண்ணிய பூமியின் சிறப்பினை யொழிக்க வழிதேடி வருகின்றனர்.

 

இவர்கள் போக்கின்படியே நம் நாடு போய்க் கொண்டிருக்குமானால் இன்னும் சிறிது காலத்திற்குள், மேல் நாடுகளில் வாயினால் சொல்லத்தகாதபடி நடக்கும் சில ஆபாசச் செயல்களும் இந்தியாவில் வந்து புகுந்து கொள்ளுமென்பதில் ஐயமில்லை.

 

ஆதலின் இவற்றைத் தீவிரமாகக் கண்டித்து ஒதுக்க வேண்டும். இத்தகைய கிளர்ச்சிக்காரர்கள் வாயாடிகளாயிருப்பதாலும், கண்டனப் பிரசுரங்கள் தாறுமாறாக எழுதிப் பிரசுரிக்கக்கூடியவர்களாயிருப்பதாலும் இவர்களுடைய கொள்கைகளைக் கண்டிக்க எவரும் அஞ்சுகின்றனர். இக்காலத்தில் உலகத்தில் நற்போதனை செய்தற்கென்றமைந்தவர்களும், தீயொழுக்க முடையவர்களைக் கண்டித்தல் கூடாதென்னும் கருத்துடையவர்களாய்ப் புகழ்ந்தெழுதும் வழக்கத்தையே மேற்கொண்டிருக்கிறார்கள். அதனாலேயே தீயகிளர்ச்சிகள் ஒடுங்குவதில்லை.

 

நாம் இவற்றை இவ்வளவு தூரம் எழுதியதைக் கொண்டு பெண்களுக்குக் கல்வி கூடாதென்றாவது, மற்ற உரிமைகள் கூடாவென்றாவது சொன்னதாக நினைக்கக்கூடாது. அவர்களுக்கு அவை அவசியமே. ஆனால், இந்த மாதரின் உயரிய ஒழுக்கத்தைக் கைவிடாமல் அவற்றைக் கொள்ள வேண்டுமென்றே நாம் கூறுகிறோம்.

 

ஒழுக்கமென்னும் வேலிக்குள் நின்றே மற்ற காரியங்களைச் செய்ய வேண்டுமென்று சொல்லுகிறோம். ஸ்திரீகள் சுதந்திரம் பெறுவதில் சில விதிகளை அனுசரித்து நீக்கத்தக்கவைகளை நீக்கிக் கொள்ளத்தக்கவைகளை மாத்திரம் கொள்ள வேண்டும். எப்படியெனில், கல்வி கற்பதில் சுயபாஷையிலுள்ள நற்போத நூல்களையே மிகுதியும் கற்கவேண்டும்; தாம் கற்றவற்றை வேற்று நாட்டார்க்குணர்த்த அவசியமான அன்னிய மொழியைச் சிறிதளவு கற்றுக் கொள்ள வேண்டும்; சுயமொழியிலேயே நூல்கள் இயற்றவேண்டும்; பத்திரிகை நடத்த வேண்டும். பிரசங்கம் செய்வதில் பெரும்பான்மையும் பெண்கள் மாதர் கூட்டத்தினிடையே பேச வேண்டும்; ஆடவர் கூட்டத்தில் பேச நேர்ந்தால் முதிர்ந்த வயதுடையவர்களே பேச வேண்டும்; உத்தியோகம் செய்வதில் பெண்கள் சம்பந்தமான இடங்களிலேயே வேலை செய்யவேண்டும்; தேச நன்மைக்கான கூட்டங்கள் சேர்வதில் பெண்களே தனித்துக் கூட வேண்டும்; அதன்மூலம் பல தீர்மானங்களைச் செய்து ஆட்சியாளர்க்குத் தெரிவிக்க வேண்டும். பெண்களுக்கென்றே தனியாகக் கல்விச்சாலைகளை அமைக்கவேண்டும்; அவற்றில் பெண்களே ஆசிரியைகளாக ஏற்படவேண்டும். அவ்வாறே சங்கீதப் பள்ளிக்கூடமும் அமையவேண்டும். சங்கீதம் கற்றுப் பாடுவதும் பெண்கள் கூட்டத்தினிடையே பாடவேண்டும்; குடும்ப காரியங்களில் புருஷரைப் போலவே தாங்களும் பொறுப் பேற்றுச் செய்யத் தக்கவற்றைச் செய்ய வேண்டும்; பெரும்பான்மையும் அன்னிய ஆடவருடன் கலந்து காரியங்கள் நடத்துவதையும், அவர்களைத் தீண்டுவதையும், தனித்து வெளியேறிச் சஞ்சரித்தலையும், தூர தேசத்திற்குத்தனியே செல்வதையும், நாடகத்தில் வேடந் தரித்தாடுவதையும் அறவே ஒழிக்க வேண்டும்; புருஷனையும், மாமி, மாமன் முதலியவர்களையும் அவமதித்தல் கூடாது; தெய்வ வழிபாட்டை மறத்தல் கூடாது; இடம்பத்தை விரும்பி வீண் செலவு செய்யக்கூடாது; அன்னிய நாட்டு ஆபாசக் கொள்கைகளை அறவே ஒழிக்கவேண்டும்;நம் நாட்டிற்குத் தக்க நடையுடை பாவனைகளையே கொள்ள வேண்டும்; உலகத்தில் ஆண், பெண் ஆகிய இரு வகுப்பாருக்கும் தனித்தனியே உரிய செயல்கள் இன்னவையென்று கடவுளால் இயற்கையிலேயே அமைக்கப்பட்டிருக்கின்றன; அந்த அமைப்பை மீறி ஆண், பெண் என்னும் பேதமின்றி மிருகசுபாவத்தை மேற்கொண்டொழுகுதல் கூடாது; தீய கிளர்ச்சிகளைச் செய்வோரின் போதனைகளைக் கேட்பது கூடாது.

 

ஆதலின், அருமைச் சகோதரிகளே! அன்னையரே! மேற்கூறிய ஒவ்வொன்றையும் நன்குக் கவனித்துத் தள்ளத் தக்கவற்றைத் தள்ளிக் கொள்வன கொண்டு ஒழுக்கத்தை என்றும் கைவிடாது ஒழுகுவீர்களாக. அங்ஙனம் செய்து வருவீர்களாயின் நம்நாடு நலம் பெற்று விளங்குவதோடு நீங்களும் இருமையினும் இன்புறுவீர்கள். உங்கள் நலங்கருதியும், புண்ணிய பூமியாகிய நம் இந்தியாவின் கௌரவம் குறையாதிருக்க விரும்பியும் இவற்றை விளக்கி வரைந்தோம். இதனால் எவரையும் குறைகூறினதாக நினைத்தல் கூடாது, பொது நலங் கருதி இந்நல்லுரை வெளிவந்ததாகக் கருதி இதனைப் பொன்போல் போற்றுவீர்களாக, எல்லாம்வல்ல இறைவன் நம்மேல்லோருக்கும் நன்மதி நல்கிக் கருணை புரிவானாக.

 

ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1928 ௵ - ஜுலை ௴

 

 

 

No comments:

Post a Comment