Sunday, September 6, 2020

 

மாதரும் குடும்பமும்

கடவுள் படைப்பிற் குட்பட்ட சிறந்த சிருஷ்டியாகிய மனிதவர்க்கத்தில் ஆண்பெண் என இரண்டு இயற்கைப் பிரிவுகளிருக்கின்றன. மற்றைய பசுபக்ஷியாதிகளிலும் இப்பேதம் உண்டாயிருப்பினும் நாம் வரையப்புகுந்தது மனிதரைப் பற்றியே யாதலின் அதை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டிய தாயிற்று. இலக்கண நூலாரும் மனிதவர்க்கத்திலே தான் ஆண்பால் பெண் பால் என்னும் பாகுபாடுகள் செய்திருப்பதையும் அறிக. மனிதரைச் சிருஷ் டித்த கடவுள், யாவரையும் ஒரேதன்மையாகப் படைக்காமல் இவ்வாறு இரண்டு வகையாக உண்டாக்கியதற்கு, ஒரு காரணமிருக்க வேண்டும். சர்வஞ்ஞராகிய ஈஸ்வரன் ஒரு நோக்கமுமில்லாமல் இவ்வாறு படைத்திருக்க மாட்டார்.

மனிதருக்கும் மற்றைய விலங்கு பறவை முதலியவற்றிற்கும் உருவம் அறிவு முதலானவைகளில் வித்தியாச மிருப்பது மல்லாமல் வாழ்க்கையிலும் ஓர் முக்கிய வேறுபாடு இருப்பதாகக் காணலாம். அவைகள் பிறவற்றைச்   சார்ந்து சீவியாமல் தனித்துச் சீவிக்கின்றன. மனிதர் மட்டும் பிறரைச் சார்ந்தே பிறர் உதவியைக் கொண்டே சீவிக்க வேண்டியவ ராகின்றனர். பறவைகள் தாங்கள் வசிக்கத்தக்க வீட்டைத் தாமே அமைத்துக்கொள்கின்றன. பசுக்கன்றானது தாய் வயிற்றி லிருந்து பிறந்த சிறிதுநேரத்திற் கெல்லாம் தன் தாயின் பின் ஓடுகின்றது. வயது முதிர்ந்ததாகிய வயோதிக பருவத்தில் தம்மக்களிடத்தாவது வேறு உறவினரிடத்தாவது அண்டி அவர்களுதவியைப் பெற்று, காலத்தைக் கழிக்க வேண்டியவர்களாகிய மனிதரின் நிலைமை அவைகளுக்கில்லை. அவை இயற்கையாகவுள்ள பொருள்களை யுண்டு உயிர்வாழ்கின்றன. இயற்கையைச் செயற்கையாக மாற்றிப் புசித்து ஜீவிப்பர் மனிதர். இதனால் மனிதர் ஒருவரோடொருவர் சேர்ந்தே வாழவேண்டியவரா யிருக்கின்றனர். தவிர இரண்டு முக்கிய காரியங்கள் இவர்களின் சீவியத்திற்கு அத்தியாவசியமாயிருக்
 கின்றன. ஒன்று பொருள் தேடுதல்; மற்றொன்று வீட்டுக்காரியங்களைக் கவனித்தல். இவ்விரண்டு காரியங்களையும் ஒருவரே செய்து கொள்ளுதல் அசாத்தியமாகும். ஆகவே, ஒருவர்க்கொருவர் துணையாகப் பலர் சேர்ந்து வாழ்வதே மனிதப்பிறவியின் இயல்பாகும். அவ்வாறு கூடிவாழ்வோர் ஒருவரிடத்தொருவர் அன்புடையரா யிருக்கவேண்டும். இன்றேல் அவர்களது சேர்க்கை நீடித்திராது. (அவ்வன்புண்டாவதற்கும் ஓர் நிமித்தம் வேண்டும்). அன்றியும், ஒவ்வொருவர்க்கும் தமது விருத்தாப்பிய காலத்தில் தம்மை ஆதரிக்கவும் தமக்குப்பின் குடும்பபாரத்தை மேற்கொண்டு நடத்தவும் கடமைப்பட்டவர்களும் தேவை. அவ்வாறு கடமைப்பட்டவர் புத்திரரேயாவர். ஆதலால் ஒருவர்க்கொருவர் இன்பம் தரக்கூடியவர்களாயும் புத்திரோற்பத்திக்குக் காரணராயுமிருப்பதற்காக ஸ்திரீயும் புருஷனும் பிணைக்கப்பட்டனர். பெற்று வளர்த்தோர் என்ற முறையில் புத்திரன் தாய் தந்தையரிடத்து அன்பு பாராட்டக் கடமைப்பட்டவனாகிறான். ஒருதாய் வயிற்றில் பிறந்தோர் சகோதரர் என்னும் முறையில் ஒருவரிட மொருவர் அன்புள்ளவராகின்றனர். இவ்வாறே தாயுடன் பிறந்தோரும் தந்தையுடன் பிறந்தோரும் மனைவியை யீன்றோருமாகப் பலர் உற்றாரும் உறவினருமாகி ஒருவரிடத் தொருவர் அன்புடையவர்களாயும் சுபாசுப காலங்களில் ஒன்று கூடிக் கூடுமான உதவி செய்ய வேண்டியவர்களாயும் அமைக்கப்பட்டனர். இவ்வாறான வாழ்க்கைக்குப் பெரியோர் இல்லறம் எனப் பெயரிட்டு விருந்தோம்பல், துறவோர்க்களித்தல் முதலிய பல அறங்களை அவ்வில்லறத்திற்குரிய ஒழுக்கங்களாக அமைத்திருக்கின்றனர். (இல்லறத்    தார்க்குரிய கடமைகளின்னின்னவை யென்பதை அடுத்தசஞ்சிகையில் கூறுவாம்.) ஆகவே, இல்வாழ்க்கையை யுடையோர்க்கு அன்பும் அறனும் இன்றியமையாதனவாம். இது பற்றியே நாயனார்,

''அன்பும் அறனு முடைத்தாயி னில்வாழ்க்கை

பண்பும் பயனு மது"

எனத் திருவாய் மலர்ந்தருளினர். நிற்க.

மனிதவாழ்க்கைக்கு அத்தியாவசியமானவை யென்று முற்கூறிய பொருள் சம்பாதித்தல், வீட்டுக்காரியங்களை ஒழுங்காகச் செய்தல் என்னும் இரண்டு காரியங்களில், புருஷர் பொருளீட்டும் காரியத்தையும், ஸ்திரீகள் வீட்டுக்காரியத்தையும் இயற்றுவதற்காக அமைக்கப்பட்டனர். ஏன் இவ்வாறு ஏற்படுத்த வேண்டும்? புருஷர் வீட்டுக் காரியங்களையும் ஸ்திரீகள் வெளிக்காரியங்களையும் என் செய்தல் கூடாது? செய்தாலென்ன? செய்யமுடியாதா? என்னும்இத்தியாதி சந்தேகங்கள் இங்கு உண்டாகின்றன.

“பெண்கள் புருஷர்போல் வெளிக்காரியங்களை ஏன் செய்யலாகாது?" என்னும் இக்கேள்விக்கு'சிருஷ்டிகர்த்தாவின் நோக்கம் அதுதான்'என்பதே சுலபமான விடையாகும். ஆனால் இச்சமாதானத்தைச் சிலர் ஏற்றுக் கொள்ளார். ஆண்களால் செய்யப்படும் காரியங்களில் எந்தக் காரியம் பெண் களால் செய்யப்படாமலிருக்கின்றது? அவர்கள் பயிர் வேலை செய்கின்றனர்; சுமை தூக்குகின்றனர்; உத்தியோகம் புரிகின்றனர்; போர்க்களத்திற்கும் செல்கின்றனர். நாம் பயிற்சி கொடாமல் அடக்கிவைத்திருப்பதால் போர் வீரர்களாக அமர்தல் முதலிய தொழில்களில் திறமையற்றிருக்கின்றனரேயன்றிக் கூடாமை யாலென்பதல்ல. ஆகவே எக்காரணத்தால் அவர்கள் வெளிக்காரியங்களுக்கு நியமிக்கப்படத்தக்கவர்களல்லர்'என்பது அவர்தம் கேள்வியாகலாம். ஆகவே இதற்குச் சிறிதளவேனும் சமாதானம் கூறவேண்டியது அத்தியாவசியமாகும்.

தொழில்கள் பழக்க மிகுதியால் யாவரும் செய்யக்கூடியவை. புருடரிற் சிலர் சமைத்தல் தொழிற் செய்வதனால் அனைவரும் பெண்களைப் போல அதைச் செய்வார்களென்று கூறமுடியாது. அதைப்போலவே ஸ்திரீகளிற் சிலர் போர்புரிதல் முதலிய ஆண்மைத் தொழில்கள் புரிந்தாலும் அவை ஏக தேசமே. எல்லோரும் அவற்றிற்கேற்றவரெனச் சொல்ல முடியாது. இயற்கையைச் செயற்கையால் மாற்ற முயன்றாலும் இயற்கை மாறாது. வீரம், சௌரியம், பராக்கிரமம் முதலியன ஆண்பாலர்க்கே யுரியவை. அதனால் தான் புருஷத்தன்மைக்கு ஆண்மை, பௌருஷம் எனப் பெயரிட்டிருக்கின்றனர் பெரியார். முற்காலத்திலிருந்த நாரீமணிகளிற் சிலர் யுத்தகளத்திற் கடும் போர் புரிந்திருக்கின்றனர். சம்பராசுரயுத்தத்திற் கைகேயி தசரதனுக் குதவி புரிந்ததும், நரகாசுரனுடன் சத்தியபாமை அமராடியதும், சுபத்திரை சாரத்தியம் செய்தமையும் நூல்களால் அறியக்கிடக்கின்றன. மகம்மதியர் அரசாட்சி நடத்திவந்த காலத்தில் அவர்களை எதிர்த்துப் பொருத்த வீரமாதரைச் சரித்திரங்கள் இன்னும் புகழ்கின்றன. ஆயினும் இவை ஏகதேசமே.

மாதர், இயல்பில் பயந்த சுபாவமுடையவர்; மிருது பாஷினிகள்; மென் மையுடையார்; நாணமுடையோர்; இக்காரணங்களால் மெல்லியலார் (மெல்லியலார் - மென்மை இயலார் = மென்மையாகிய இயல்பினையுடையார்)' எனப்படுகின்றனர். இவர், கடினமான வேலைகளைச் செய்யும் சாத்தியில்லாதவர் ஆயினும் எவ்வளவு துன்பங்கள் வரினும் பொறுமையாகச் சகித்துக்கொண்டு காரியங்களை நடத்தும் குணமுடையோர்; வீட்டையும் அதிலுள்ள பொருள்களையும் ஒழுங்காகவும் சீராகவும் வைக்கும் ஆற்றல் மிகுதியும் உடையவர். இப்படிப்பட்ட தன்மை புருஷரிடம் கிடையாது. இக்காரணங்களால் ஸ்திரீகள் குடும்ப நிர்வாகத்திற் கேற்றவர்களென்பது விளங்குகின்றது. தவிர,

ஸ்திரீகள் குடும்பக் காரியத்திற்கென்று படைக்கப்பட்டவர்களே யென்பதை வற்புறுத்தும் மற்றொரு முக்கிய காரணமும் உண்டு. அதாவது, பிரசவமே. புருஷரைப்போலவே மாதரும் எல்லாக் காரியங்களும் செய்யத் தகுந்தவரே யென்பதை ஒருவாறு ஒப்புக்கொண்டாலும், எக்காலத்தும் அவர்கள் அப்படிச் செய்யமுடியாதென்பதை ஒருவரும் மறுக்கமுடியாது. அவர் கருப்பகாலத்தும் பிரசவத்திற்குப்பின்னருமாகச் சிலமாதங்கள் வரை யாதொரு தொழிலும் செய்ய இயலாதவராகின்றனர். இவ்வாறு பிரஜாவிருத்தியாகிய பிள்ளைகளைப் பெறுதலும், பாலூட்டி வளர்த்தலுமாகிய இத்தொழிலைப் பெண்களிடமே அமைத்திருத்தலால் சிருஷ்டிகர்த்தா அவர்களை வீட்டுக்காரியங்களுக்கென்றே படைத்தாரென்பது நிச்சயமாகிறது.

அவர்கள் எந்த வேலை செய்தாலும் செய்யட்டும். எப்படியும் சுவதந்திர
 ராக விராமல் புருஷரின் ஆதீனத்திலிருக்க வேண்டியவர்களே யாவர்.

கடவுள் ஒருவர் உண்டென நம்பும் ஆஸ்திகராயுள்ளோரனைவர்க்கும் அக் கடவுளாலோ, அவரருள் பெற்ற பெரியோர்களாலோ செய்யப்பட்டதாகக் கருதப்படும் வேதம், சாஸ்திரம், புராணம், இதிகாசம் முதலியவை இருக்கின்றன. அவற்றிற் சொல்லியபடி ஒழுகவேண்டியது அவர்கள் கடமையாகும். ஆராயுமிடத்து எல்லா மத நூல்களும் ஸ்திரீகளுக்குப் புருஷரே தலைவர் என்று கூறுவதைக் காணலாம். தற்கால நாகரிகத்தின் சிருஷ்டிகர்த்தர்களாயிருக்கும் மேல் நாட்டாரின் வேதமாகிய விவிலிய நூலும் இவ்வாறே கூறுகின்றது. ஆகவே இதுகாறும் காட்டிய காரணங்களால் மாதரே குடும்பகாரியத்திற் கேற்றவர்களென்பது பெறப்பட்டது. இனி அவர்கள் கொண்டிருக்க வேண் டிய குணங்களின்னவை என்பதைக் கூறுவாம்.

மாதர் புருஷரின் ஆதீனத்திலிருக்க வேண்டியவர்களாகலின் அவர்கள் தம் இளமைப்பருவத்தில் பெற்றோர் கற்பிக்கும் வழியிலும், விவாகமாயின பின்பு கணவர் கற்பிக்கும் நெறியிலும் ஒழுக வேண்டியவராகின்றனர். அந் நெறியே கற்பெனப்படுவது." கற்பெனப்படுவது சொற்றிறம்பாமை'' என ஒளவை கூறியதும் இதுபற்றியேயாகும். இதற்கு மாறாக நடந்தால் கற்பிற்குப் பழுதுண்டாகும். ஸ்திரீகள் எப்போதும் புருஷர் வார்த்தைக்கு மாறாகப் பேசலாகாது. புருஷர் நல்லொழுக்க முடையவராயிருப்பின், அவர் வார்த்தைகள் நல்லவைகளாயிருக்கும் - நன்றாக யோசித்தபின்பே கூறுவார்கள். ஆகலின் மனைவியர், அக்கணவர் கூறும் வார்த்தைகள் தம் கருத்திற்கு மாறாகக் காணப்பட்டாலும், நயமாக, இதைக்காட்டிலும் இப்படிச் செய்தால் நலமாயிருக்குமென்று நினைக்கிறேன்','இது யுக்தமானதாகத் தோன்றவில்லை' என்று இவ்வாறு கூற வேண்டுமே யல்லாமல், ஆத்திரமாகவும் படபடப்பாகவும் 'இது கூடாது; என்னால் முடியாது; நான் செய்தே தீருவேன்; உமக்கென்ன அதைப் பற்றி' என்று யாவரும் திடுக்கிடும்படி வெடுக்கெனப் பேசலாகாது. அப்படிப் பேசினால் புருஷர் சற்று பிடிவாதக்காரராயிருந்தால் தம் பிரியப்படியே செய்ய முயல்வதுமன்றி வெறுப்பும் கொள்வர். பிடிவாதக்காரரா யிராவிட்டாலும் தம் கோரிக்கை நிறைவேறாமற் போனதற்காக வருத்தமும், மனைவியரிடத்து அதிருப்தியும் கொள்ளல் நேரும்.

புருஷர் நற்குணமில்லாதவராயின் மாதர் எதிர்த்துப் பேசுவதிற் பயனில்லை. அது குன்றை முட்டிய குருவிபோலாகும். சிலர் துஷ்ட கணவராயிருந்தால் அடியும் உதையும் அதற்குப் பலனாகும். எப்படிப் பேசுவதாயினும் சமயமறிந்து தக்கபடி பேசுவதே நல்லது.'இப்படிப் பேசுவதால் பயனுண்டாகும்' என்று, பேசத்தக்கதை ஆராய்ந்து பேசவேண்டும். பயனற்ற வார்த்தைகளை வீணாகப் பேசி சண்டை சச்சரவுகளை உண்டாக்கிக்கொள்வதால் பயன் யாது என்பதை ஒவ்வொருவரும் ஆலோசித்தலவசியம். 'கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி'' பெண்டிர்க்கழகெதிர் பேசாதிருத்தல்'' எதிரிற் பேசும் மனையாளிற் பேய் நன்று'' இல்லாள் - வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில், புலிகிடந்த தூறாய்விடும்'என்னும் ஆன்றோர் வாக்கியங்களையும் கவனிக்க வேண்டும்.

கணவனும் மனைவியும் மனவொற்றுமையுடன் கலந்து வாழும் குடும்பங்களைக் காண்பது வெகு அருமை. பெரும்பான்மையான குடும்பங்களில் எலியும் பூனையும் போலத் தம்பதிகளுள் எப்பொழுதும் சண்டையும் சச்சரவுமே மிகுதியாய்க் காணப்படும். " ஐயோ அறியாமையால் ஏதோ சுகமிருக்கின்ற தென்றெண்ணியல்லவோ நாம் கலியாணம் செய்துகொண்டோம். இக்குடும்பச் சனியனைவிட்டு எப்பொழுது தொலைவோமோ'' என்று பலர் வருந்துகின்றனர். இவர்களுடைய வாழ்க்கை சாகுமளவும் சஞ்சலமே. 'தாலி கட்டையிலே தொடுத்து நடுக்கட்டையிலே கிடத்து மட்டும் கவலைதான்'.

 

ஆனால், இதற்குக் காரணமென்ன? காரணம், மனவொற்றுமை யில்லாமையே. கணவன் ஒன்றைச் சொன்னால் மனைவி அதற்கு நேர் விரோதமாகப் பேசுகிறாள். அது அவளுக்குப் பிடிக்கவில்லை. அவள் அபிப்பிராயம் வேறு விதமாயிருக்கிறது. அது அவனுக்குப் பிடிப்பதில்லை. கணவனோ வாசிப்புடையவனாயும் உலக அனுபவுமுள்ளவனாயு மிருக்கலாம். மனைவி அதற்கு மாறாகக் கல்வியில்லாதவளாயும் உலகானுபவமில்லாதவளாயு மிருக்கலாம். நம் மாதர் கல்வியைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. உலகானுபவமோ அதைவிட அதிகம். இந்த நிலைமையில் அவள் கருத்துக்களும், எண்ணங்களும், அபிப்பிராயங்களும் மாறுபாடுடையனவாயிருப்பது சாதாரணந்தானே; இல்லை. மனைவியும் வாசித்தவளென்றே வைத்துக்கொள்வோம். என்ன வாசிப்பு? நான்காவது ஐந்தாவது வாசிப்புவரை வாசித்திருப்பாள். அதற்கு மேல் வாசித்திருந்தால் தப்புந் தவறுமாய்க் கொஞ்சம் பேசவும் எழுதவும் தகுந்தபடி இங்கிலீஷ் பாஷையை மூன்றாவது பாரம் நான்காவது பாரம் வரையில் படித்துக் கற்றுக்கொண்டிருப்பாள். அதற்கும் மிஞ்சினால் ஆறாவது பாரம் என்னும் பத்தாம் வகுப்பு வரையில் வாசித்திருக்கலாம். அதற்குமேல் போவது அருமையினு மருமை. இவர்களோ, முன் சொன்னபடி கால் படிப்பு, அரைக்கால் படிப்பு படித்துவிட்டவுடனே ஆங்காங்கு ஆங்கில மாதர் போல் நடிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். தங்களுக்கு எல்லாம் தெரிந்து விட்டன என்றும் தங்களுக்குத் தெரியாதது ஒன்றும் இல்லையென்றும் நினைத்து விடுகிறார்கள். ஆங்கில மாதர்களைப்போலவே உடுக்கவும் உண்ணவும் நாற்காலிகளி லமர்ந்து புருஷனையே வேலை வாங்கவுமா யிருந்தால் நன்றாயிருக்குமெனக் கருதுகின்றனர். தங்கள் எண்ணம் கைகூடுமானால் சந் தோஷமே. இல்லாவிட்டால் கணவன் மேல் வெறுப்புத்தான். கணவன் வார்த்தைக்கெல்லாம் குறுக்குப் பேசுவதே இவர்கள் வேலையாய்விடுகிறது. இத்தகைய தம்பதிகளின் வாழ்க்கை எவ்வாறிருக்கும்? அம் மனைவிகளின் பேச்செல்லாம் அதிகார தோரணையாயும் சிடுசிடுப்பாயும் வெடு வெடுப்பாயுமே இருக்கும். அவர்களுடைய நடக்கை கணவருக்குப் பிடிக்காம லிருக்கலாம். இவ்வித நிலைமையிலும் சதிபதிகளுக்கு மனவொற்றுமை யுண்டாவதில்லை. கணவன் காக்கை கறுப்பு என்றால் அவள் வெள்ளையே யெனச் சாதிப்பாள். இது வேண்டாமென்றால் அவள் அவசியம் செய்தே தீரவேண்டும் எனப் பிடிவாதம் செய்வாள். இதுதான் கலகத்திற்கும் சண்டை சச்சரவுகளுக்கும் காரணம்.

 

இனி அதை நீக்கும் மார்க்கம் யாதெனில், கணவன் வார்த்தைக்கு மனைவி இணங்கி எதிர்த்துப் பேசாதிருத்தலேயாம். ஏன்? மனைவியின் பேச்சின்படி கணவன் நடக்கலாகாதோ? எனின், கூடாதெனச் சொல்வோர் யாருமில்லை. ஆனால் புருஷன் மனைவி இவ்விருவரில் புருஷன் அரசனது ஸ்தானத்திலும் மனைவி மந்திரியின் ஸ்தானத்திலும் இருப்பவராவர். அரசனுக்கு மந்திரி காரிய நிர்வாகத்தின் பொருட்டுச் சமயோசிதமாக ஆலோசனைகளைக் கூற வேண்டியவனேயல்லாமல், கட்டாயம் நான் சொன்னபடிதான் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தக்கூடியவனல்லன். அதுபோல் மனைவியும் புருஷனிடம் தன் அபிப்பிராயத்தை நயமாகக் கூறலாம். அவனை நிர்ப்பந்திக்கலாகாது. அந்த யோசனையும் யுக்தமானதாயிருந்தால் கணவன் அதை ஏற்றுக் கொள்ளலே நியாயம். இதுபற்றியே ஆன்றோரும்,


 "அன்னை தயையும் அடியாள் பணியுமலர்ப்
 பொன்னி னழகும் புவிப்பொறையும் -...
 விறன் மந்திரி மதியும்...........
 பேசி லிவையுடையாள் பெண்''                          என்றனர்.

 

கணவனோடு மாறுபட்டு நடப்பதால் மாதர்களுக்கு எவ்வித நற்பயனு முண்டாவதில்லை; துன்பமே பயனாகும். ஒரு வஸ்துவை இரண்டு கண்களும் எப்படி ஒருமித்துப் பார்க்குமோ அதுபோலவும், ஒரு வண்டியிற் பூட்டப்பட்ட இரண்டு எருதுகளும் எப்படி ஏகோபித்து அந்த வண்டியை யிழுத்துச் செல்லுமோ அதுபோலவும் கணவனும் மனைவியுமாகிய இருவரும் வேறுபட்ட மனமுள்ளவராயிராமல் மனவொற்றுமையுடன் இல்லற காரியங்களை நடத்த வேண்டும். அப்பொழுதுதான் அக்காரியங்கள் ஒழுங்காக நடைபெறும். இதற்காகவே ஆன்றோர் பல சட்டதிட்டங்களை ஏற்படுத்தினர். அச்சட்ட திட்டங்களில் முக்கியமானது மனைவியானவள் கண்வன் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டுமென்பதேயாகும். வீட்டுக் காரியங்களைச் செவ்வையாகச் செய்தலும், வரவுக்குத் தக்கபடி செலவு செய்து பண்டங்களைப் பாழாக்காமல் செட்டாகவும் விதரணையாயும் குடித்தனத்தைப் பாங்குபெற நடத்தலும், குழந்தைகளை ஆரோக்கியமுள்ளவர்கள்ளாகவும் நல்லொழுக்கமுடையவர்களாகவு மிருக்கும்படி பார்த்துக் கொள்ளுதலுமே அவர்களின் தொழில்களாயிருக்க வேண்டும். மற்றப்படி கணவனுடைய காரியங்களிற் சிறிதும் தலையிடலாகாது. வியாபாரமோ வியவசாயமோ கைத்தொழிலோ வேறு எவ்வித உத்தியோகமோ செய்து பணம் சம்பாதித்தாலும், குடும்பத்திற்குத் தேவையான பொருள்களைக் குறைவின்றி அமைத்தலும், தனக்குப் பிற்காலத்தி லுதவுவதற்காகப் பணத்தைச் சிறிதள வேனும் தன்வருவாய்க்குத் தக்கபடி சேர்த்து வைத்தலும் முதலாகிய வெளிக்காரியங்களைக் கணவன் கவனிக்கவேண்டியவனாவான் தேவை யானால் இக்காரியங்களில் மனைவியும் கணவனுக்கு உதவிபுரியலாம். இவ்வாறு பலவகையிலும் புருஷனுக்கு உற்ற துணையாயிருப்பவள் மனைவியாவாள். இதனால் தான் அவள் வாழ்க்கைத் துணையென்னும் பெயரும் பெற்றனள்.

 

இனி, இல்லறத்தை ஒழுங்குபெற நடத்தும் முறையைப் பற்றிச் சிறிது ஆராய்வாம்:

 

இல்லறம் துறவறம் என்னும் இருவகை யறங்களுள் இல்லறமே சிறந்த தென்பது பெரியார் கொள்கை. 'இல்லற மல்லது நல்லற மன்று' என ஒளவைப் பிராட்டியாரும்' அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை'எனச் செந்நாப் புலவரும் கூறியிருத்தலும் காண்க. இல்லறம் நல்லறம் என்பது வெறும் வாய்ச்சொல்லாலல்ல. நடக்கையால், இல்வாழ்க்கைக்குரிய இயல்போடு வாழ வேண்டும். இது மாத்திரமல்ல. ஒவ்வொன்றும் அப்படியே. நன்மார்க்கத்தைச் சேர்ந்த எத்தொழிலும் அதற்குரிய இயல்பின்படி செய்தால் தான் நன்மை தரும். ஆகவே இல்வாழ்க்கையும் அதற்குரிய இயல்பின்படி நடத்தப்படவேண்டும். இல்வாழ்க்கைக்கு முக்கிய பயனாவது அறமே யாம்; அதாவது தருமமே யாகும். இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமாயின் பரோபகாரம் என்று சொல்லலாம்.
 

இல்வாழ்வோர்க்குப் பணம் சம்பாதித்தல் முக்கிய தொழிலாகும். அது இல்லையானால் தருமம் செய்தல் இயலாதன்றோ? பணம் சம்பாதிக்கும் பொழுது பழிக்குப் பயந்து அதைத் தேடவேண்டும்; எந்த வகையிலும் பிறர் சொத்தை யபகரித்தலும், அதிகவேலை வாங்கிக்கொண்டு வாயடி கையடி யடித்துக் கூலியைக் குறைத்துக் கொடுத்தலும், சொற்பவேலைக்கு அதிக கூலி வாங்குதலும், அதிகலாபம் வைத்துப் பண்டங்களை விற்று வியாபாரம் செய்தலும், அதிக வட்டி வாங்குதலும், வட்டிக்கு வட்டி வாங்குதலும் முதலாகிய காரியங்கள் பழியை யுண்டாக்குவனவாம்.

 

தீநெறியில்  வரும்பொருள், வருங்காலத்தில் எளிதிற் கிடைப்பதாகக் காணப்படினும் முடிவில், புது வெள்ளம் வந்து பழைய வெள்ளத்தையும் கொண்டுபோனதென்னும் பழமொழிபோல், முன்னிருந்ததையும் கெடுத்து விட்டு இருந்தவிடமும் தோன்றாதபடி அழிந்தொழியும். அத்தகைப் பொருளைக் கொண்டு செய்யும் தான தருமங்களும் பயன் தருதலில்லை. அதன்பயன் பொருளுடையாரையே சாரும். உலகத்தில் எத்தனையோ பேர் அக்கிரமமான வழியிற் பொருளைச் சம்பாதித்து அந்தப்பாவும் தங்களைச் சாராதபடி மேலும் மேலும் அப்படியே பணம் வந்து கொண்டிருக்க வேண்டுமென்று ஆலயங்களிற் சென்று பல கைங்கரியங்களைச் செய்தலும், உற்சவாதிகள் செய்தலுமாயிருக்கக் காணலாம். இது பரிதானம் (லஞ்சம்) வாங்கும் உத்தியோகஸ்தெனொருவன் தன்மேலதிகாரிக்குச் சிறிது பொருள் கொடுத்துத் தன் குற்றத்தை மன்னிக்கும்படியும் இனியும் அவ்வாறே செய்து வர உத்தரவு தரும்படியும் கேட்பது போலிருக்கின்றது. இந்த நிலையில் இவர்கள் ஆண்டவனை எவ்வளவு இழிவானவராகப் பாவிக்கின்றனர்! இது என்ன அறியாமை. கடவுளைத் தங்களை விடப் பெரிய மூடரென்று நினைத்து விட்டனர் போலும். அன்னாரது செய்கையைக் கண்டு கடவுள் சிரித்துக் கொண்டிருக்கின்றனரென்பதை இவர்களறிவதில்லை.  

 

அன்னியரிடமிருந்து அநியாய மார்க்கத்தில் சம்பாதித்த சொத்தை அனுபவிப் போரும் உருப்படுவதில்லை. மருந்துங்கையுமாயிருக்கும்படி அன்னார் வீட்டில் பல கொடிய நோய்கள் தாண்டவமாடிக்கொண்டிருக்கும். பல தீமைகள் நேரும். இதுபற்றியே 'தீவினை விட்டீட்டல் பொருள்' என்றார் மூதாட்டியார். ஆதலால், நன்மார்க்கத்தில் வந்த பொருளைப் பிறர்க்கும் தமக்கும் உபயோகப்படுமாறு செய்தல் வேண்டும். பிறர்க்கு உபயோகிக்க வேண்டுமென்பதைச் சொல்வது நியாயமானதுதான்; தமக்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டு மென்பதையுமா சொல்லவேண்டும்? எனின், 'உண்ணான் ஒளி நிறா அன்' என்பது போல், தமக்கும் பயன்படுத்திக் கொள்ளாது பூதம் போல் பணத்தைக் காத்துக்கொண்டிருக்கும் புண்ணியர்கள் பலரிருக்கின்றமையின் இவ்வாறு சொல்வது அவசியமேயாகும்.

 

இல்லறத்தி லிருப்போன், பிரம்மசாரி வானப்பிரஸ்தன் சன்னியாசி வறியோர் சுற்றத்தார் முதலாயினாரைத் தன் சக்திக் கேற்றயடி அன்னவஸ்திராதி கள்ளித்து ஆதரிக்கக் கடமைப்பட்டிருக்கின்றான். தன் வருவாயில் கால் பாகத்தை தருமத்தில் செலவிட வேண்டு மென்பது முன்னோர் மொழி. அதன்படி அவ்வளவு விநியோகஞ் செய்யா விடினும் இயன்ற வரையில் சிறிதள வேனும் செலவிடுதல் அத்தியாவசியமாகும். செல்வர்க்கழகு செழுங்கிளை தாங்குதல்'' ஒக்கல் துன்புறத் தனியிருந்து வாழ்குநர் - மக்களுட் பதடி யென்றுரைக்கும் வையமே' என்று கூறும் ஆன்றோரது நீதிமொழிகளைக் கூர்ந்து நோக்குமிடத்து,


"இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி
 வேளாண்மை செய்தற் பொருட்டு"

 

என்னும் மறைமொழி வலியுறுத்தப்படுகின்றது. பிறர்க்குபகாரிகளாய் வாழ்வோருடைய வாழ்க்கையானது எக்காலத்தும் தரித்திரத்தாற் பாழ்படுத்தலில்லை. இதற்குதாரணமாக இதிகாசரத்தினமாகிய மகாபாரதத்திலுள்ள ஓர் கதை ஈண்டு அறியத்தக்கதாம்:

 

துவாபரயுகத்தில் அந்தணர் பெருமானொருவரிருந்தனர். அவர் மிக்க தருமகுணம் வாய்ந்தவர். தம்மிடத்தில் யார் எதைக் கேட்டாலும் இல்லை யென்னாது ஈயும் இயல்புடையார். அக்காலத்தில் பெரும் பஞ்சமொன்றுண்டாயிற்று. மழைவளஞ் சுருங்கியதனால் விளை நிலங்களெல்லாம் வெற்றிடமாகக் கிடந்தன. குடிநீர் கிடைப்பதும் அரிதாயிற்று. மனைவி, மகள், மருமகள் இம்மூவரடங்கிய குடும்பத்தைப் பாதுகாக்க வியலாதவராய்ப் பரிதபித்தனர் அவ்வந்தணர். மூன்று நாட்கள் வரையில் அன்னமின்றி அரும்பட்டினி கிடந்தனர் அவர்களனை வரும். என்ன செய்வார் மறையவர்? பல விடங்களிலுஞ் சென்றலைந்து சிறிது தானியங் கிடைக்கப் பெற்றனர். கிடைத்த அதை வறுத்து மாவாக்கிப் பிசைந்து தலைக்குக் கொஞ்சம் பங்கிட்டுக் கொண்டு உண்ணத் தொடங்கினர். அது பொழுது ஏழை அதிதி யொருவர் அங்கு வந்திருந்தார். அவர் பசியால் கண்ணிருண்டு நடை தளர்ந்து வயிறு முதுகிலொட்டிக் கிடக்க உடல்வாடி அவர்களை யடைந்து உணவு தருமாறு கேட்டார். அவரது பரிதாப நிலையைக் கண்ட மறையவர் தம் பங்குமாவை அவர்க்கீந்து உண்ணுமாறு உபசரித்தனர். அதனால் அவர் பசி தணியப் பெறாதவராய்க் கூக்குரலிட்டனர். வேதியர் மனைவி தன் பங்கு மாவையு மீந்தாள். அதனாலும் அவர் பசிநோய் நீங்கவில்லை. அதைக் கண்டு அந்தணர் மகள் தன் பங்கைக் கொடுத்தாள். பின்பு மருமகளும் தன் உணவை உண்ணுமாறு கொடுத்து உபசரித்தாள். அந்த நால்வர் பங்கையும் உண்ட பின்னர் அவர் பசிநீங்கிக் களிப்புற்றார். அவ்வளவில் தேவர்களிற் சிலர் விமானத்துடனங்குப் போந்து அந்நால்வரையும் தம்முலகிற் கழைத்தேகித் தம் விருந்தினராக்கிக் கொண்டனர்.


 ''செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
 நல்விருந்து வானத் தவர்க்கு''


என்னும் பொய்யாமொழி பொய்யாமொழியே யன்றோ?

 

இதுகாறும் கூறியவாற்றால் இவ்வியாசத்தின் தொடர்ச்சியில் மனித சமுகமானது தனித்து வாழ்தலின்றிச் சேர்ந்தே வாழ்தற்குரிய தென்றும், அக்காரணத்தால் ஒருவர்க்கொருவர் உபகாரிகளாய் வாழக் கடமைப் பட்டவர்களாயிருக்கின்றனரென்றும், மனிதரைப் பல விடங்களிலும் ஆண் பெண் என்னும் பாகுபாடுகளாகப் படைத்த கர்த்தாவின் கருத்து இன்னதென்றும், அவ்விரு பகுப்பினரின் காரிய மின்னதென்றும், இன்னுமிவை போன்ற பிறவும் பெற்றாம். இனி, இல்லறத்தை நடத்துதற் குரியார் யாவர் என்பதையும் அவர் எங்ஙனம் நடத்த வேண்டுமென்பதையும் பற்றிச் சிறிது ஆராய்வாம்.

 

இல்லறத்திற் குரிய முற்கூறிய முக்கிய தருமங்களெல்லாம் மாதர் கையில்தான் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. சுற்றந்தழுவல், விருந்தோம்பல், தெய்வம் வணங்குதல் முதலாகிய எல்லாக் காரியங்களும் மாதர்தம் கடமையேயாம். அவை புருஷராலாகக்கூடியவையல்ல. புருஷரின் கடமை யின்ன தென முன்னம் சொன்னோம். வீட்டிற்குரிய காரியங்களுக்குப் பெண்களும் வெளிவிவகாரங்களுக்குப் புருஷர்களும் தகுந்தவர்களென்றும் சொன்னோம். புருஷர் சில சமயங்களில் நாள் முழுவதும் வெளியிலேயே யிருக்க நேரும்; நாள் கணக்காயும் வாரக் கணக்காயும் மாதக் கணக்காகவும் சில காலங்களில் வெளியில் தங்கியிருக்க வேண்டியவராவர். ஆகையால் வீட்டின் காரியங்களைக் கவனிப்பதற்கு அவர்கள் அசக்தராவர். மாதரே அதற்குரியவர்.

 

தம் கடமைகளைச் செவ்வனே உணர்ந்து அதன்படி குடும்பக்காரியங்களை ஒழுங்குபெறச் செய்யும் பெண்கள், வெளியிற் சென்று உத்தியோகம் செய்து பணந்தேடும் பெண்களை விட அதிக நன்மையைத் தம் குடும்பத்திற்கு உண்டாக்குபவராவர். 'ஸ்திரீகளையும் புருஷரைப் போல் உத்தியோகம் செய்ய அனுப்புவதே அவர்களுக்குச் சுதந்திர மளிப்பதாகும். அவ்வாறு செய்யாமல் முற்காலத்தவர் மாதரை அடிமைகளாகப் பாவித்து மிக்க இழிவான நிலைமையில் வைத்திருந்தனர்'எனப் பெருமை பேசி வாய்ப் பறை யறையும் நவீன நாகரீகத்தாரை நாமொன்று கேட்கிறோம். புருஷர் கஷ்டப்பட் டுழைத்துத்தரப் பெண்கள் வீட்டெசமானிகளா யிருந்து கொண்டு அதிகாரத்தோடு சுகமாய் உண்டு உலாவுவது அடிமைத்தன்மையோ? அல்லது புருஷரோ டொப்ப பாடுபட்டுப் பணந்தேடி யுண்பது அடிமைத்தன்மையோ? கூறட்டும். பிரியப்பட்டு அனுப்புவோரை நாம் வேண்டாமென்று கூறவில்லை. அதை இழிவாகக் கூறவுமில்லை. ஆனால் அப்படி அனுப்புவதுதான் நாகரீகம்' என்று கூறுவோரையே மறுக்க வந்தோம்.

 

இருவரும் சம்பாதித்தால் பொருள் வருவாய் அதிகமாகும் என வேறொரு நொண்டிச் சமாதானம் கூறலாம். லக்ஷாதிபதிகளாயும் கோடீசுவரராயும் முற்காலத்தி லிருந்தோரும் தற்காலத்தி லிருக்கின்றோருமாகிய யாவரும் பெண்கள் சம்பாத்தியத்தால் தான் பணக்காரரானார்களோ வென்று நாம் கேட்கிறோம். 'ஆம்' என்று ஒருவரேனும் சொல்ல வாயைத் திறக்கமுடியுமோ? முடியாது முடியாது. ஆகவே, பெண்கள் ஆடவர்க்குரிய காரியங்களைச் செய்யவேண்டிய அவசியமில்லை. அவசியமாயினும் அவர்களுக்குரிய கடமைகளைக் கவனிக்குமிடத்து அவகாசமுமில்லை. அவர்கள் வேலையைச் செய்து முடிக்கவே அவர்களுக்குக் காலம் போதாதே. அவர்கள் காரியத்தைச் செவ்வையாய்ச் செய்து முடித்தலே சிறந்த ஊதியமாகும்.

 

இல்லறத்திற்குரிய நற்குண நற்செய்கைகளையுடைய மனைவியைக் காட்டிலும் ஒருவன் அடையத்தக்க சிறந்த பொருள் யாது? அத்தகைய மனைவி ஒரு வீட்டி லிருப்பாளானால், அவ்வீட்டில் ஒன்றுமில்லாமற் போனாலும் எல்லாமிருப்பது போலவேயாகும். அக்குணங்களில்லாதவளிருக்கும் வீட்டில், எல்லா மிருந்தாலும் அங்கு ஒன்றுமில்லை. தமிழ் மறையும் இது பற்றியே


 "இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ள தென்
 இல்லவள் மாணாக் கடை"


எனக் கூறுகின்றது. 'இல்லா ளகத்திருக்க இல்லாத தொன்றில்லை' என்றார் பிறரும். குடும்ப காரியத்தை நிர்வகிக்கும் மனைவிக்கு முதலாவது பொறுமை அதாவது சகிக்கும் குணம் அத்தியாவசியமாகும். குடும்பத்தில் எத்தனையோ கஷ்டங்கள் நேரிடும். மாமன் மாமிகளால் கஷ்டங்கள் நேரிடலாம். நாத்தி ஓரகத்திகளால் துன்பம் நேரிடலாம். கணவனாலும் அநேக கஷ்டங்களுண் டாகலாம். பிள்ளைகளால் அநேக உபத்திரவங்களுண்டாகும். இத்தனையும் மனைவி பொறுமையோடு சகிக்க வேண்டும். அவரவர்களுக்குத் தகுந்தபடி சாந்தமாய் நடந்து அவரவர்களைத் திருப்திப்படுத்த முயல வேண்டும்; ஆத்திரங் கொள்ளலாகாது; ஆண்டி கோபத்தைக் கிடாவின் மேல் காட்டல் போல், பிறர்மேல் உண்டாகும் கோபத்தைக் குழந்தைகள் மேல் காட்டி அவர்களைக் கண்டவாறு வைதலும் அடித்தாலும் கூடாது; சிடு சிடுப்பான வார்த்தைகளை உபயோகிக்கலாகாது; முணுமுணுக்கலாகாது. இவ்வாறெல்லாம் செய்வதால் கணவன் முதலானவர்களுடைய கோபமானது நெருப்பில் நெய்யைச் சொரிவது போல் அதிகரிக்கும். அதனால் வீண் சண்டை வளர்ந்து மனவருத்தமும் துன்பமுமே பிராப்தியாகும். பெரியோர்கள் கோபத்தால் ஏதாவது பேசும் போது அதற் கிணங்குவது போல் சாந்தமாகப் பதில் கூற வேண்டுமேயல்லாமல் எதிர்த்துப் பேசுதல் கூடாது.

 

பொறுமைக்குச் சமானமான பூஷணம் பெண்களுக்கு வேறெதுவுமில்லை. பொறுமையால் எல்லாக் காரியங்களையும் சாதிக்கலாம். பகைவரையும் சிநேகராக்கிவிடலாம். சாந்தத்தால் கோபத்தை வென்று விடுவது சுலபம். ஆகையால் குடும்பத்தில் கணவன் முதலானவர்கள் கோபத்தோடு பேசும்போது அவர்களோடு தாமும் எதிர்த்துப் பேசாமல் தாழ்மையாகப் பேசினால் அவர்கள் கோபம் நீங்கிச் சாந்தமடைவர். பிறகு எப்பொழுதும் கோபமாகப் பேசார். அதனால் இல்லறம் எவ்வளவோ சந்தோஷமும் சமாதானமு முடையதாய் இன்பத்தைத் தருவதாகும். அநேக குடும்பங்களில் பெண்களுக்கு இந்தச் சகிப்புத்தன்மை யில்லாமையால் சதா சர்வகாலமும் சண்டை சச்சரவுகள் நேரிட்டு அக்குடும்பங்கள் சீர்கேடடைகின்றன. மாதர் தங்கள் சரீரம் மிருதுவா யிருப்பது போல, பேச்சிலும் மிருதுவா யிருக்க வேண்டும். வெட்டெனப் பேசலாகாது. " இல்லாள் வலிகிடந்த மாற்ற முரைக்குமேல் அவ்வில் புலிகிடந்த தூறாய்விடும் " என்றபடி கடுமையான வார்த்தைகள் பேசும் மனைவியிருக்கும் வீடு புலி வசிக்கும் புதருக்குச் சமானமாகும் என்று பெரியோர் பேசியிருக்கின்றனர். எக்காலத்தும் எந்தச் சமயத்தும் மிருதுபாஷிகளா யிருக்க வேண்டும். கோபத்தை யணுகவிடலாகாது. அககோபம் தங்களுக்கும் பிறர்க்கும் கெடுதியுண்டாக்கும். ஆகையால் சகித்துக் கொள்ளுங் குணம் ஒன்று மாத்திரம் பெண்களுக்கு இருக்குமானால் கோபம் வராது; கோபம் இல்லாமையால் வெடு வெடுப்பான வார்த்தைகள் இல்லை; அதனால் கலகம் உண்டாதலில்லை: ஆனால் சமாதானமும் சந்தோஷமும் வளரும்.

 

கணவன் முதலானவர்கள் நியாயந்தவறி அக்கிரமமாக நடந்து கொண்டால் கோபம் வராமலிருக்குமோ? என்று சகோதரிகள் கேட்கலாம். கோபம் வருவதற்கென்ன? அது எப்பொழுதுதான் வரும். கிரமத்தையும் அக்கிரமத்தையும் அது கவனிப்பதில்லை. ஆகையால் சகோதரிகள் இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டிய தொன்றுண்டு. அதென்ன வென்றால், அச்சமயத்தில் தான் பொறுமையை அதிகமாகக் கொள்ள வேண்டும். கோபத்தை மிகுதியும் அடக்க வேண்டிய சமயம் அதுவே. நியாயமானவர்களிடத்தில் கோபித்துக் கொண்டால் அஃது நியாயமாகும். அக்கிரமமானவர்களிடத்தில் கோபத்தைக் கையாளுவதால் யாதேனும் நற்பயனுண்டாகுமென்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஒருகாலுமில்லை. ஆனால் தீமையை வெல்லத்தகுந்த உபாயம் ஒன்றுண்டு. அதுதான் பொறுமை அல்லது சாந்தம். எத்தகைய அநி யாயக்காரரையும் எத்தகைய கோபக்காரரையும் சாந்தத்தால் வென்று விடலாம். இதைப் பெரியோர் ஓர் திருஷ்டாந்தத்தால் விளக்கியிருக்கின்றனர்.

 

அதாவது, ஓர் பாணத்தை யானையின் மேலெய்தால் அப்பாணம் அந்த யானையின் உடலில் ஊடுருவிச் செல்லும். அதே பாணததை ஓர் பஞ்சுக்குவியலின் மேல் எய்தால் அவ்வாறு செல்லாது. அதுபோல தீமையானது நன்மையை வெல்லாது. இரும்பாற் செய்த கடப்பாரையால் பிளவுபடாத கருங்கற் பாறையானது மிருதுவானதாகிய மரத்தின் வேரினால் பிளவுபட்டுப் போகிறது.


      அதுபோல சாந்தத்தால் கோபத்தை வென்றுவிடலாம் என்பதே.

 
''வெட்டெனவை மெத்தெனவை வெல்லாவாம் வேழத்தில்
 பட்டுருவும் கோல்பஞ்சிற் பாயாது - நெட்டிருப்புப்

 பாரைக்கு நெக்குவிடாப் பாறை பசுமரத்தின்
 வேருக்கு நெக்கு விடும்.''

 

சாதாரணமாக நாம் ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்குவோமானால் முன்னதாக நன்றாய் யோசித்து, அதனால் ஏதேனும் ஒரு நன்மையுண்டாகு மென்று அறிந்த பிறகல்லவோ அதைச் செய்யத் தொடங்குவோம். ஒரு நன்மையு முண்டாகாது. ஆனால் தீமையே யுண்டாகுமெனத் தெரிந்தால் அத்தகைய காரியத்தைச் செய்வோமா? செய்யமாட்டோமன்றோ! அப்படியே கோபம் வருங்காலத்தும் - பொறுமையை யிழக்கும் காலத்தும் - கடுமையாகவும் சிடுசிடுப்பாகவும் வெடு வெடுப்பாகவும் பேசுங்காலத்தும் - இவற்றால் நன்மையே தேனும் உண்டாகுமாவென்று யோசித்துப் பாருங்கள். நன்மை யுண்டாகுமெனத் தெரிந்தால் செய்யுங்கள். உங்களை வேண்டாமென்று தடுப்பவர் ஒருவருமிலர். ஆகவே, நீங்கள் ஆத்திரத்தையும் கோபத்தையும் அறவே யொழித்து, சகிப்புத்தன்மையை மேற்கொண்டு சாந்தமாயிருங்கள்;

 

எவ்வித கோபமும் தீமையும் துன்பமும் உங்களை அணுகாமல் ஓடும்.

 

   குடும்ப நிர்வாகிகளாகிய மாதருக்கு இரண்டாவதாக இருக்கவேண்டிய இன்றியமையாத இயல்பாவது யாதெனில்: - குடும்பத்தில் கலகம் இல்லாமலிருக்கப் பார்த்துக் கொள்ளுதலாம். கலகமுள்ள குடும்பத்தை விடக் கடும்புலி வாழும் காடே சிறப்புடையதாகும். இதற்கு ஒற்றுமைக் குணத்தோடு கணவனது பந்துக்களைத் தம்பந்துக்களாகப் பாவிக்கும் ஓர் சிறந்த குணம் அத்தியாவசியமாகும். குடும்பச் சச்சரவுகளுக்குக் காரணராயிருப்போர் பெண்களேயாவர் என்பது நாடறிந்த விஷயம்.'பெண்டுகள் கூடிடிற் பெருத்த சண்டையாம்' என்று ஓர் புலவரும் பாடியிருக்கிறாரே. சண்டை சச்சரவுகளால் அல்லும்பகலும் அல்லல்பட்டு அலையும் அபாக்கியக் குடும்பங்கள் நம் நாட்டில் அளவற்றிருக்கின்றன. அக்குடும்பங்களின் நிலைமை பார்க்கப் பரிதாபகரமானது. இத்தகைய குடும்பங்களில் வாழும் ஆடவர் 'ஐயோ! ஏன் தான் இச்சனியன் பிடித்த கலியாணத்தைச் செய்துகொண்டோமோ? இதைவிடச் சன்னியாசியாக வாழ்வதே நலமாக இருக்குமே'எனக் கதறுவர். வெளியிற் சென்று 'உத்தியோகமோ சத்தியோகமோ, கூலியோ நாலியோ' செய்து விட்டு வீட்டிற்கு வந்ததும் தாயார் ஒருபுறம் தங்கை ஒருபக்கம் மனைவி ஒருபக்கம் நின்று கொண்டு சரமாரியாகச் சொன்மாரி பொழிந்து வம்புந் துன்பமுமான வார்த்தைகளை மூச்சுவிடாமல் உரத்த குரலுடன் பேசி அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் கும்பலாய்க் கூடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும்படி சண்டையிட்டுத் தொண்டை கிழித்துக் கொண்டிருப்பார்களானால் அவன் கதி யாதாகும். இவற்றையெல்லா மறிந்தல்லவா 'தாலி கட்டையிலே தொடுத்து நடுக்கட்டையிலே கிடத்து மட்டும் கவலை தானே' என்றார் ஓர் மகான். ஆகையால் மாதர் இவ்வித துர்ப்பழக்கத்திற்குச் சிறிதும்தம் குடும்பத்தில் இடமுண்டாகாதவாறு எச்சரிக்கையாய்ப் பார்த்துக்கொள் ளவேண்டும்.

 

இந்தத் துர்ப்பாக்கிய நிலைமைக்குக் காரணம் பெரும்பாலும் ஒற்றுமைக் குணமில்லாமையே யெனினும், அந்த ஒற்றுமை ஏன் உண்டாகவில்லை யென்று யோசிக்குமிடத்து அன்னியர் என்கிற எண்ணம் மனதில் நன்கு ஆழ்ந்து வேரூன்றிக் கிடப்பதேயாகும். கணவனைச் சேர்ந்தவர்களாகியமாமன், மாமி, நாத்தி, ஓரகத்தி, மைத்துனன் முதலானோரை “இவர்களே நம் பந்துக்கள்; தந்தையும் தாயும் சகோதரிகளும் சகோதரரும் இவர்களே'' யெனக் கருதி அவர்களிடத் தன்புடன் நடந்து கொண்டால் இத்துணை விபரீதத்திற்கு இடமுண்டாகாது. இதனால் யாதொரு நஷ்டமுமில்லை; கஷ்டமுமில்லை. ஆனால் சமாதானமும் சந்தோஷமுமே எப்பொழுதும் குடி கொண்டிருக்கும்.

 

அப்படிச் செய்வது கஷ்டமான காரியமுமல்லவே. 'இவர்கள் நம் கணவனைப் பெற்று வளர்த்தவர்களல்லவா? அவருடன் பிறந்தவர்களல்லவா? அவரது அன்பிற் குரியவர்களல்லவா? நாம் வருதற்கு முன்பு இந்த வீட்டில் சர்வாதிகாரம் செலுத்தி வந்தவர்களல்லவா? தங்களுக்கு உதவியாயிருக்கவேண்டுமென்றுதானே நம்மைக் கொண்டார்கள்? அவர்கள் பார்த்துக் கொண்டு வந்ததனால் தானே நாம் வந்தோம்! நம் கணவன் தற்கால மடைந்திருக்கும் உயர்நி லைக்கு இவர்கள் தானே காரணகர்த்தர்கள்! நம் குடும்பத்தின் லாப நஷ்டங்களுக்கு இவர்களைப் போல் பாத்தியப்பட்டவர்கள் வேறுயாரிருக்கின்றனர்! நாம் வருதற்கு முன் நம் கணவனும் இவர்களும் எவ்வளவோ அன்னியோன்னியமாயும் அன்பாயும் இருந்து வந்தார்களே. இப்பொழுது நம்மால் இவர்களுக்கு மனக்கசப்புண்டாகலாமா? பார்ப்பவர்கள் என்ன சொல்வார்கள்? 'நாசகாலி வந்தாள்; அப்பனுக்கும் பிள்ளைக்கும் – ஆத்தாளுக்கும் மகனுக்கும் - அண்ணனுக்கும் தம்பிக்கும் - ஆகவொட்டாமல் செய்துவிட்டாள். எவ்வளவோ ஒற்றுமையாயிருந்த குடும்பத்தைக் கலைத்துப் பாழ்படுத்தி விட்டாளே' என்றல்லவோ பழிப்பார்கள்! 'முற்பகல் செய்யிற் பிற்பகல்விளையும்' என்னும் பழமொழிப்படி, இப்பொழுது இவர்களுக்குச் செய்தது நாளைக்கு நமக்குமல்லவோ நடக்கும்? நமக்கு ஒரு மருமகள் வந்தால் நம்மையுமிப்படித்தானே செய்வாள்? அப்பொழுது நமக்கு எவ்வாறிருக்கும்! நாம் நம்முடைய தாய் வீட்டிற்குப் போனால் எவ்வளவு சொந்தம் பாராட்டி எப்படி நடந்து கொள்ள விரும்புகிறோம்? அங்கு இருக்கும் நமது அண்ணன் மனைவியாவது தம்பி மனைவியாவது நம்மிடத்திலும், நம் தாய் தந்தை தம்பி தங்கை முதலானவர்களிடத்திலும் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று விரும்புகிறோம். அப்படி அவள் நடவாமலிருந்தால் நாம் அவளைப்பற்றி எவ்வாறு தூஷணையாகப் பேசுகிறோம்? எப்படிக் கண்டவரிடத்திலெல்லாம் சொல்லித் தூற்றுகிறோம்? என்று இவ்வகையான விஷயங்களை யெல்லாம் நன்றாக ஆலோசித்து யாவரிடத்தும் பிரியமாய் நடந்து கொள்ள வேண்டும்.

 

ஒரு வேளை மாமன் மாமி முதலானவர்கள் இழிவாகப் பேசுவதும் வைவதும் அதிகாரம் செய்வதுமா யிருக்கின்றனரே! அப்பேர்ப்பட்டவர்களிடத்து அன்பு எப்படியுண்டாகும் எனச் சகோதரிகள் கேட்கலாம். அது உண்மையே. அவர்களுக்கும் அவர்கள் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டு மென்பதைச் சொல்லவும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம். இங்கு நாம் கொடுத்துள்ள தலைப்பெயர் 'மாதரும் குடும்பமும்' என்பதாகையாலும் அவர்களும் மாதர்களே யாகையாலும் அவர்களுக்கும் நாம் கூறல் வேண்டுவதவசியமே. ஆயினும் உங்களைக் குறித்துச் சொல்லு மிவ்விடத்தில் நீங்களிதை யேற்றுக் கொண்டு இதன்படி நடக்க முயலுங்கள். நீங்கள் நல்வழியில் நடந்துகொண்டால் தீமை தானாக விலகிப்போகும். " நன்மையைத் தீமை வெல்லாது' என்று முன்னமே ஒருமுறை உங்களுக்குச் சொல்லியிருக்கிறோம். இன்னும் ஒரு முறை உங்களுக்குச் சொல்லுகிறோம். நன்மையைத் தீமை வெல்லாது; தீமையைத் தீமையால் வெல்ல முயலாமல் தீமையை நன்மையாலேயே வெல்ல வேண்டும்; தீமையோடெதீர்த்து நிற்கலாகாது'' என்னும் இவ்வாக்கியங்களை மனத்தில் பதியவைத்துக் கொள்ளுங்கள்; எல்லாத் தீமைகளும் உங்களை யணுகா தொழியும்.

 

குடும்பத்தில் எத்துணை கஷ்டங்கள் நேரிட்டாலும் மாதர்கள் அவற்றை யெல்லாம் பொறுமையாய்ச் சகித்துக்கொண்டு, அப்பொறுமையினால் அக்கஷ்டங்களை யெல்லாம் செயித்து ஒற்றுமையாய் வாழ முயல வேண்டுமேயன்றிக் குடும்பத்தைக் கலைத்துத் தாமும் தம் கணவரும் மாத்திரம் தனிமையாயிருந்து குடித்தனம் செய்தால் இவ்வளவு கஷ்டம் நேராதல்லவா வென்றெண்ணி அதற்காக முயற்சி செய்து, கணவர் மனதைக் கலைத்து, தனிக்குடியாகப் பிரிந்து விடக்கூடாது. இதுவுமல்லாமல் வீட்டில் மாமனோ, மாமியோ, நாத்தியோ, ஓரகத்தியோ யாரேனும் ஏதேனும் தம்மைக் கடுமையாகத் தூஷித்து விட்டாலும், கோபத்தையுண்டாக்கும் வேறு எக்காரியத்தையேனும் செய்து விட்டாலும், அதைத் தம்மளவிலே தாம் அடக்கிக் கொள்ளவேண்டுமே யன்றி, அதைத் தம் கணவருக்குச் சொல்லிப் பிணங்கிக் கொண்டு, அவர் மனம் புண்படும்படியாயும் கோபம் வரும்படியாயும் செய்து விடக்கூடாது. அப்படிக் கோள் மூட்டுவதால் தான் கலகம் நேரிடுவதும் குடும்பம் இரண்டாகக் கலைந்து சீர் குலைந்து போவதும் ஏற்படுகின்றன.

 

கணவரும் தாமுமாகத் தனியேயிருந்து குடித்தனம் செய்வது நன்மையாகும் என்று பலர் நினைக்கின்றார்கள். ஆனால் அது அனுபவத்தில் பார்க்குங்காலத்தில் அநேக தீமைகளையே யுண்டாக்குகிறது. ஏனெனில் இந்த வியாசத்தில் ஆரம்பத்தில் நாம் சொன்னபடி, மனிதர்கள் துணையின்றி - சகாயமின்றி வாழ முடியாது. ஆகையால் தனிக்குடித்தனம் செய்வதால் எத்துணை கஷ்டங்களும் நஷ்டங்களும் நேரிடுகின்றன என்பதைச் சிறிது ஆராய்வோம்.

 

தனிக்குடித்தனம் செய்யவிரும்புவோர், சொந்த வீடாயினும் அல்லது வாடகைக்கு (குடிக்கூலிக்கு) எடுக்கும் வீடாயினும் தனி வீட்டில் குடித்தனம் செய்வது கஷ்டம். புருஷன் வெளியில் போகுங்காலத்தில் மனைவி தனியாகவே இருக்க நேரிடும். அவ்வாறிருப்பதால் எத்தனையோ கஷ்டங்கள் உள். இராக்காலங்களில் புருஷன் வெளியில் சென்றுவர வேண்டியதாயிருந்தாலும், அல்லது ஏதாயினும் அவசரகாரியமாய் வேற்றூருக்குச் செல்ல நேர்ந்தாலும் வீட்டில் யாரும் துணையில்லையே யென்று மனைவியைத் தனியாக விட்டுச் செல்ல வியலாமல் கஷ்டப்பட வேண்டும். ஆகையால் புருஷன் எந்தக் காரியத்தைக் குறித்தும் இராக்காலங்களில் (சூரியாஸ்தமனம் முதல்) வெளியிற் செல்லமுடியாமல் பூதம் போல வீட்டைக்காத்துக் கிடக்க வேண்டும்.

 

மனிதர்களுக்கு வியாதி நேரிடுவது சர்வசாதாரணமாகையால் மனைவி ஏதேனுமொரு நோயினால் சங்கடப்படும்படி நேர்ந்தால், வீட்டைச் சுத்தஞ் செய்தல், சமைத்தல், மனைவிக்கு வேண்டிய உதவிகளைச் செய்தல் முதலாகிய சகலகாரியங்களையும் புருடனே செய்தாக வேண்டும். அந்த நிலைமையில் கடைக்குப் போக வேண்டுமாயினும் அவனே போகவேண்டும். உத்தியோகத்திற்கோ அல்லது வேறெந்தத் தொழிலுக்கோ போய்த் தீரவேண்டும். ஒருகால் புருஷன் உத்தியோகஸ்தனாயிருந்தால் லீவு எடுத்துக் கொள்ளலாம். அதுவும் திடீரென்று நினைத்த போதெல்லாம் எடுத்துக் கொள்ள முடியுமா? அதற்கு மேலதிகாரிகளின் உத்தரவு பெற்றாக வேண்டும். இதிலும் எவ்வளவோ கஷ்டமிருக்கிறது. கூலி வேலை செய்கிறவனானால் வேலைக்குப் போகாமலிருந்தால் செலவிற்குப் பணம் கிடைக்காது. வியாபாரியானால் வியாபாரஸ்தலத்திற்குப் போகாமல் நஷ்ட முண்டாகும். இந்த நிலைமையில் அப்புருஷன்படும் கஷ்டம் சொல்லமுடியுமா? முடியாது! முடியாது!! தவிர,
 

புருஷன் வியாதியடைந்தானென வைத்துக்கொள்வோம். அப்பொழுது மனைவியின் கதியாது? அவள் அக்கம் பக்கங்களிலிருக்கும் பெண்களிடம் சென்று, 'ஐயோ! நான் திக்கற்றவளாயிருக்கிறேன். எனக்கு யாரும் துணையில்லை. அவர் (கணவர்) வியாதியால் அவஸ்தைப்படுகிறார். தக்க வைத்தியரை அழைத்து வருவோரில்லை. கடைக்குப் போவார் ஒருவருமில்லை. நான் என்ன செய்வேன்! எனக்கு ஒன்றுந் தோன்றவில்லை'' எனக் கண்ணீர் விட்டுக்கதறி யழுவாள். அப்போது, அவர்கள் தங்கள் புருஷரிடம் அவளுக்குச் சிறிது உதவி செய்யச் சொல்வார்கள். அவர்கள் எத்தனை நாளைக்குத்தான் செய்வார்கள்? ஒருவேளை இரண்டு வேளை செய்வார்கள். ஏன்? நம் மனிதர்களென்று வீட்டில் இரண்டொருவரிருந்தால் எவ்வளவு உற்ற துணையாவார்கள். நம்மை ஆற்றவும் தேற்றவும் ஓடித் தேடிப் பலரைக் கேட்டுத் தகுந்த வைத்தியரையழைத்து வந்து அவருக்கு நோயாளியைக் காட்டவும் உதவுவார்களல்லவா?

 

இதுகாறும் செய்த சிறு ஆராய்ச்சியால் மனிதர்கள் ஒருவரோ டொருவர் சேர்ந்து வாழ்வதற்குரியவர்களேயன்றித் தனித்து வாழக்கூடியவர்களல்ல வென்றும், அதுவே சிருஷ்டி கர்த்தாவின் நோக்கமுமாமென்றும், ஆகவே நாம் பரஸ்பரம் உதவிசெய்யக் கடமைப்பட்டிருக்கின்றோமென்றும், அப்படிச் சேர்ந்துவாழ்வதிலும் தமக்குரிய சொந்தபந்துக்களுடன் வாழ்வதே சிறப்புடையதென்றும், ஆதலால் அவர்களுடன் விரோத பாவமின்றிச் சிநேகத் தன்மையுடன் வாழ்வேண்டுமென்றும், அவ்வாறு ஒற்றுமைப்பட்டு வாழ்வதற்குக் காரணமானவர்கள் மாதர்களேயென்றும், அவர்களாலேயே குடும்பத்தில் கலகமுண்டாகி அதனால் விரோத முண்டாகின்றதாகலின் சகோதரிகள் அவ்வாறு கலகஙக்ள் நேராதபடியும் நேர்ந்தாலும் தங்கள் அறிவாலும் பொறுமையாலும் அதை அடக்கிக்கொண்டு போவதே உத்தமமாமென்றும் பெற்றாம்.

 

சில குடும்பங்களில் புருஷர்களே கலகத்திற்குக் காரணமாகின்றனர். ஒரு வயிற்றிற் பிறந்த சகோதரர்கள் பல காரணங்களால் ஒற்றுமையிழந்து சச்சரவிட்டுக்கொள்வர். அதனாலும் குடும்பப்பிரிவினை யுண்டாகும். இத்தகைய சமயங்களில் தான் சகோதரிகள் புத்திசாலித்தனமாய் நடந்து கொள்ள வேண்டியவராவர். தம் கணவரே அவர்களுக்கு விரோதமாகப் பேசுகின்றாரேயென்று தாஙக்ளும் கணவருக்குப் பரிந்து பேசுவது போல அவர்களோடு மல்லாடுவதும் ஒன்றைப் பத்தாகக் கணவரிடம் சொல்லிக் கலகத்தை யதிகப் படுத்துவதுமாகா. கூடுமானவரை புருஷர்களை யடக்கவும் ஒரகத்திகளுடனும் மற்றவர்களுடனும் அன்பா யிருக்கவும் சகோதரிகள் முயலவேண்டும். சாமர்த்திய முள்ளவர்களாயிருந்தால் சகோதரிகள் அவர்களுக்கு அக்கலகத்தை யொழித்து சகோதரர்களுக்குள் ஒற்றுமை யுண்டாக்குவது பெரிய காரியமல்ல.

 

அங்ஙனமின்றிக் கலகம் முற்றிவிடுமெனத் தோன்றினால் உடனே பிரிந்து விடுவதே நலமாயினும் மாதர்கள் மட்டும் ‘நல்லது கெட்டது’ நடக்கும் காலங்களில் ஒருவருக்கொருவர் உதவிசெய்து கொள்ளும் படியான நிலைமையி லிருக்கவேண்டுமேய்னறி ஜென்மப்பகையாளா யிருத்தல் கூடாது. குடும்பத்தில் மாமன் மாமிகளாகிய பெரியோர்களும் சிறுவர் சிறுமியரும் இருப்பார்களாயின் ஒவ்வொருவரும் இவர்கள் நம் குடும்பத்தைச் சேர்ந்தவர்களெனக்கருதி அவர்களைச் சம்ரக்ஷிக்கக் கடமைப்பட்டவர்களா யிருத்தல் வேண்டுமேயன்றி ‘இங்கென்ன அங்கே போங்கள், இங்கென்ன அங்கே போங்கள்’ என்று சொல்லிவிடக்கூடாது. எல்லோரும் இப்படியே சொல்லிக் கழித்து விட்டால் அவர்கள் கதி யாதாம்! இது பற்றியே போலும் ஒரு பிள்ளை பெற்றவர்களுக்கு உறியில் சோறு; நாலுபிள்ளை பெற்றவர்களுக்கு நடுத்தெருவிற் சோறு என்னும் பழமொழி வழங்கலாயிற்று.

 

இனி, மாமிகளா யுள்ளோர் மருகியரிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்பதைப் பற்றிச் சிறிது ஆராய்வோம்.

 

மருமகள் என்னும் சொல்லுக்கு அர்த்தமென்னவென்று பார்க்க வேண்டிய தத்தியாவசியமாகிறது. இதில் ‘மரு’ என்னும் பதம் ஒன்றும் ‘மகள்’ என்னும் பதம் ஒன்றும் ஆக இரண்டு பதங்கள் சேர்ந்திருக்கின்றன. மகள் என்னும் பதத்தின் அர்த்தம் அனைவர்க்கும் தெரியும். அதாவது புத்திரி அல்லது வயிற்றிற் பிறந்த பெண் என்பதாகும். மகள் என்னும் பதத்திற்கு ‘மரு’ என்னும் பதம் அடைமொழியாக அதாவது அதன் சிறப்பைக்காட்டும் பதமாக வந்துள்ளது. மரு என்பதற்கு வாசனை என்பது பொருளாம். ஆயினும் இங்கு வாசனை என்பதற்கு சிறந்த என்று பொருள் கொள்ளலாம். ஆகவே மருமகள் என்பதற்குச் சிறந்த மகள் என்றாகின்றது. இதனால் மகளைக்காட்டிலும் மருமகளே சிறந்தவளென்பது விளங்கவில்லையா! (இவ்வாறு சொன்னதைக் கொண்டு, அப்படியானால் மகளையே மகனுக்குக் கலியாணம் செய்து கொண்டார்களா? மருமகன் என்பதற்கு மகனைவிட சிறந்தமகன் என்று பொருள் கொள்ளலாமா? என்னும் கேள்விகளைக் கிளப்பக்கூடாது.) ஏன் அப்படியெனில், இதற்கு நியாயமிருக்கின்றது.

 

மகளைக் காட்டிலும் மருமகளே சிறந்தவள் என்று முன் சஞ்சிகையில் கூறினோம். அப்படிச் சொல்வதற்குத் தகுந்த நியாயம் இருக்கிற தென்றும் சொன்னோம். அதைப்பற்றிச் சிறிது ஆராய்வோம்.

 

ஒரு வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் அது வீட்டிற்குப் பிறந்ததா? ஊருக்குப் பிறந்ததா? என்று பிறர் கேட்கும் வழக்கம் நம் நாட்டிலிருக்கிறது. வீட்டிற்குப் பிறந்தது என்றால் ஆண் குழந்தை; ஊருக்குப் பிறந்ததென்றால் பெண் குழந்தை என்றர்த்தமாகிறது. ஆகையால் நம் நாட்டில் பிறக்கும் பெண் குழந்தை அன்னியருக்குச் சொந்தமாய் விடுகிறான். அப்படியே அன்னியர் வீட்டுப் பெண் நம் வீட்டிற்குரியவளாகின்றாள். நம் பெண்ணை ஒருவரனுக்கு விவாகம் செய்து கொடுக்கிறோம். விவாகத்தில் தாரை வார்த்து, தானமாக கன்னிகையைப் பிறர் கையிற் பிடித்துக் கொடுத்து விடுகிறோம். அப்படியே நம் பிள்ளைக்கு, பிறர், தம் பெண்ணைத் தாரைவார்த்துக் கொடுக்க நாம் பெற்றுக் கொள்ளுகிறோம். இப்பொழுது நம் வீட்டிற்குரியவள் யார்? மகளா? மருமகளா? என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள். நாம் கொண்ட பெண்ணாகிய மருமகளே நம் குடும்பத்தைச் சேர்ந்தவளாய்விடுகின்றானல்லவா? நமது குடும்பத்திற்கும் நம் பெண்ணுக்கும் அவ்வளவு சம்பந்த மிருப்பதில்லை. நாம் எழைகளாயிருந்து நம் பெண் பணக்காரன் வீட்டில் வாழ்க்கைப் பட்டால் நாம் ஏழைகள் தான்; நம் பெண் பணக்காரிதான். நாம் பணக்காரர்களாயிருந்து ஓர் ஏழை வீட்டிலிருந்து பெண்கொண்டோமாயின், அப்பெண் தரித்திர குடும்பத்திற். பிறந்தவளா யிருப்பினும் அவள் பணக்காரியே.

 

சுபாசுப காலங்களில் நம் வீட்டிற்கு வரவும், நாம் இஷ்டப்பட்டுக் கொடுத்தால் சீரும் சிறப்பும் பெற்றுச் செல்லவும் மாத்திரம் நம் வீட்டுப் பெண்ணிற்குப் பாத்திய முண்டேயன்றி வேறெவ்வித பாத்தியமும் கிடையாது. மகள் நம் வீட்டிலிருந்து நமது சொத்துக்களைப் பிறர் வீட்டிற்குக் கொண்டு போகிறவள், மருமகள் பிறர் வீட்டிலிருந்து நம் வீட்டிற்குக் கொண்டு வருகிறவள். மகள் மூன்று நாள் சூதகபாத்தியமுடையவள்; மருமகள் பதினாறு நாள் சூதகமுடையவள். மகள் தான் வாழ்க்கைப்பட்ட தன் கணவன் வீட்டிற்குரிய கோத்திரத்தைச் சேர்ந்தவள்; வேறு கோத்திரத்திற் பிறந்தவளாயினும் மருமகள் நம் கோத்திரத்தைச் சேர்ந்தவள். மருமகள் வயிற்றுப் பிள்ளை கருமத்திற் கதிகாரியாவதன்றி மகள் வயிற்றுப்பிள்ளை அதிகாரியாலதில்லை. தவிர,

 

மாமன் மாமிகளுக்குரிய பணிவிடைகளை யெல்லாம் செய்பவள் மருமகளே. அவர்கள் வியாதி வாய்ப்பட்டுப் படுக்கையிற் கிடக்குங் காலத்தில் அவர்களுக்கு எல்லாவித உதவிகளையும் செய்பவள் மருமகளே. அன்னார். கூப்பிட்ட குரலுக்கு என்' என்று வருகிறவளும் மருமகளே. 'அடுத்த ஊரிலிருக்கும் மகளாயினும் ஆபத்திற்குதவான்' என்பது பழமொழி. தப்பித்தவறித் தாய் தந்தைகளின் நிலைமையைக் கேள்விப்பட்டு வந்தாலும், வரும் பொழுதே அழுதுகொண்டே வருபவர்கள், வந்து இரண்டொரு நாட்களானவுடனே 'ஐயோ! எங்கள் வீடு என்னகதி யாயிற்றோ. போட்டது போட்டபடி விட்டு விட்டு வந்துவிட்டேன். அவர் (கணவன்) சாப்பாட்டிற்குக் கஷ்டப்படுவார். என் எண்ணமெல்லாம் அங்கேயேயிருக்கிறது. வீட்டை விட்டு மூன்று நாளாய்விட்டது. நான் போக வேண்டும். அடிக்கடி உங்கள் சௌக்கியத்தைத் தெரிவித்துக் கொண்டிருங்கள். நிரம்பவும் கஷ்டமா யிருந்தால் அவசரத் தந்தி கொடுங்கள். நான் இங்கிருந்து மாத்திரம் என்ன செய்யப்போகிறேன் 'என்று மூட்டை கட்டத் தொடங்கி விடுவார்கள். அக்கம்பக்கத்திலுள்ளவர்களும் உண்மைதான் பாவம். அவள் சம்சாரம் கெட்டுப் போகாதா. எல்லாம் அது நன்றாயிருந்தால் தானே' என்பார்கள். இவ்வளவுதான் மகளுடைய சங்கதி.

 

மருமகள் அப்படிச் செய்யமுடியுமா? எங்கேனும் போய் விடக்கூடுமா? அவள் தாய் வீட்டில் ஏதாவது அசந்தர்ப்பம் நேரிட்டாலும் கூட 'என் வீட்டில் இப்படி யிருக்கையில் நான் அங்கு எப்படிப் போவது' என்று சொல்ல வேண்டியவளாவள். மனதார்ந்த பிரியத்துடன் அவள் தன் மாமன் மாமிகளுக்குரிய பணி விடைகளைச் செய்யா விட்டாலும் உலகப்பழிக்குப் பயந்தாவது செய்தே தீர வேண்டும். அது அவளுடைய கடமையாகும். அப்படி அவள் செய்யா விட்டாலும் அக்கம்பக்கத்தார் சும்மா இருக்கமாட்டார்கள். முகத்திலிடித்து அவளுக்குப் புத்தி புகட்டுவார்கள். எப்படி யிருந்தாலும் அவள் செய்தே தீர வேண்டும். அது அவளை விட்டதல்ல. இத்தியாதி காரணங்களால் மகளைவிட மருமகளே சிறந்தவளென்பது வெள்ளிடை மலைபோல் விளங்கவில்லையா!

 

(இப்படிச் சொல்வதால் மகளிடத்தில் பிரியமுடையவர்களா யிருக்கலாகாதென்றாவது, மகளுக்கும் பிறந்த வீட்டிற்கும் யாதொரு சம்பந்தமுமில்லை யென்றாவது, அம்மகளுக்கு யாதொரு உபசாரமும் செய்யலாகாதென்றாவது நாம் சொன்னதாகப் பெற்றோர் நினைத்துக் கொள்ளுதல் கூடாது. வீட்டில் பிறந்த பெண் கண்ணீர் விடாதபடி அவளைச் சகலவிதத்திலும் சந்தோஷப்படுத்த வேண்டியது அவசியமே. ஆயினும் அவளைக் காட்டிலும் மருமகளே வீட்ட திகாரியாகத் தக்கவள். சர்வ சுதந்திரமு முடையவள் மருமகளே என்பதை மாத்திரம் நாம் உணராமலிருக்கக் கூடாதென்பதே நாம் இங்கு அறியவேண்டியது.)

 

இத்தகைய மருமகளிடத்தில் மாமன் மாமிகள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென்பதைப் பற்றி வாசகர்களே! ஆலோசித்துப் பாருங்கள். (இங்கு மாமனைப் பற்றி அதிகமாகச் சொல்ல வேண்டியதில்லை. ஏனெனில், வீட்டு வியவகாரங்களுக்குரியவர்கள் பெண்களே யாகையால் மாமிக்கும் மருகிக்குமே அதிக சம்பந்தமுண்டு. மாமியார் வீடு என்று உலகத்தார் வழங்குகின்றார்களே யல்லாமல், மாமனார் வீடு என்று வழங்குவதில்லை.) மாமியானவள் தன் மகளிடம் எவ்வளவு அன்பு வைத்திருப்பாளோ அதைவிட அதிக பிரியம் மருமகளிடம் கொண்டிருக்க வேண்டும். மருமகள் அன்னியர் வீட்டிலிருந்து நம் வீட்டிற்குப் புதிதாக வந்தவள். அதிலும் சிறுபிராயத்தினள். உலகானுபவம் தெரியாதவள். தாய் வீட்டில் செல்வமாக வளர்க்கப் பட்டவளாகலின் கஷ்டமான வேலைகளைச் செய்யக்கூடாதவளா யிருக்கலாம். நாம் புதியவர்களா யிருத்தலால் நம்மிடத்தில் அன்பாக நடந்து கொள்ளத் தெரியாதவளாயிருப்பாள். பெற்று வளர்த்த தாய் தந்தையரை விட்டுப் பிரியாமலிருந்து இப்பொழுது பிரிந்திருக்க நேர்ந்ததால் மிக்க விசனமுடையவளாயு மிருக்கக் கூடும். இவ்வித நிலையிலுள்ள பெண்ணை மாமியானவள் எவ்வளவு அன்பாக நடத்த வேண்டும்! மருமகள் மாமியாரிடம் அன்பற்றவளா யிருப்பதற்குக் காரணம் மாமியேயாம். அந்த வேலை செய்யவில்லை, இந்த வேலை செய்யவில்லை, அப்படிச் செய்காள், அவளோடு பேசினாள், சுறுசுறுப்பில்லை, பெருந்தூக்கம் தூங்குகிறாள், பெருந்திண்மக்காரி' என்று இல்லாத பொல்லாத அபவாசககளை மாமியார் அவள் மீது சுமத்துவதும், எப்பொழுதும் கடுகடுப்புடனும் வெடு வெடுப்புடனும் பேசுவதுமா யிருந்தால் மருமகள் மாமியிடம் அன்புடையளக நடந்து கொள்வதெப்படி? மாமியார் என்றால் அதிகாரியென்றும் மருமகள் என்றால் அடிமை என்றும் அர்த்தம் செய்து கொள்ளுகிறார்கள் போலிருக்கிறது. மாமியார், அங்கே அதை வைத்திருந்தேன்; மருமகள் திருடித் தின்றுவிட்டாள். இங்கே இதை வைத்தேன். காணோம். அவள் தான் எடுத்திருப்பாள்' என்று மருமகளுக்குத் திருடிப்பட்டம் கட்டுவதும், அதற்குப்பதில் அந்தப் பெண் ஏதேனும் பேசினாலோ 'பயமில்லாமல் எதிரில் நின்று பேசுகிறாள். பெரிய வாயாடி. பெரியவர்களென்கிற மரியாதை கிடையாது. அடக்கங்கிடையாது' என்று தாறுமாறாய்ப் பேசுவதும் உண்டு. இப்படியெல்லாம் மாமியார் அவளைச் சீறுமாறு செய்தால் அவளெப்படி நல்வழிப்படுவாள்.

 

மருமகளை அலங்கரித்துக் கொள்ளச் செய்து அவளுக்குப் பிரியமான பொருள்களை வாங்கிக்கொடுத்து இனிமையான வார்த்தைகளைப் பேசி, அவள் ஏதாவது தவறாக ஒரு காரியத்தைச் செய்து விட்டாலும் நல்ல வார்த்தைகளால் அதை எடுத்துக்காட்டி 'இப்படி செய்யக் கூடாதம்மா. இதனால் நமக்குத்தானே கெடுதி யுண்டாகும். பார்க்கிறவர்கள் என்ன சொல்வார்கள்' என்று இதமான வார்த்தைகளால் அவளைத் திருத்த வேண்டும். இவ்வாறு அன்பாக மாமிகள் நடந்துகொண்டால் மருமக்கள் மாரும் அவர்களிடம் அன்பாக நடந்து கொள்வார்கள். ஆரம்பத்தில் ஒருவர் மீதொருவர் அன்புடையவர்களாய் விடுவார்களானால் அந்த அன்பு என்றும் மாறாது. அப்போது 'மருமகள் மெச்சும் மாமியாரும் மாமியார் மெச்சும் மருமகளும்' எங்கும் மலிவாய்க் கிடைப்பார்கள். குடும்பமும், கலகங்களும், சண்டை சச்சரவுகளும், அழுகையுமில்லாமல் சந்தோஷகரமாயிருக்கும். விரோதம் நேரிடாது. பிரிவினையுண்டாகாது. பார்ப்பவர்களுக்கும் கௌரவமாயிருக்கும். இலக்ஷ்மியும் தாண்டவம் செய்து கொண்டிருப்பாள். ஆகையால் இந்த விஷயத்தில் மிகவும் ஜாக்கிரதையா யிருக்க வேண்டுமென்று மாமிகளைக் கேட்டுக்கொள்ளுகிறோம்.

 

மாமிகளாயுள்ளவர்கள் தங்கள் மருமக்களைத் தம் பெண்களெனக் கருதி நடந்து கொள்ளுவார்களானால் புதிதாக வந்த அவர்களும் தங்கள் மாமிகளைத் தாய்மாராகப் பாவித்து நடந்து கொள்வர். இதனால் குடும்பம் மிக்க சந்தோஷமும் சமாதானமும் நிறைந்த குடும்பமாக விளங்கும். திருமகளும் அக்குடும்பத்தில் தாண்டவ மாடுவாள் என்று சென்ற மாதச் சஞ்சிகையிற் கூறினோம். இனி புருஷர் தம் மனைவியரிடத்து எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதைக் குறித்துச் சிறிது கூறுவாம்.

 

பெரும்பாலும் எல்லா நூல்களும் எல்லாப் பத்திரிகைகளும் குடும்ப விஷயத்தைப் பற்றிப் பேசும் பொழுது பெண்களைப்பற்றி மட்டும் பேசுகின்றனவேயன்றிப் புருஷர்களைக் குறித்துப் பேசுவது துர்லபமா யிருக்கின்றது. அநேக நூல்கள் பெண்களை மிக இழிவாகக் கூறியிருக்கின்றதையும் காணலாம். அதற்குக் காரணம் இல்லாமலுமில்லை. என்ன காரணம்? எல்லாம் புருஷர்களால் எழுதப்பட்டிருத்தலே இதற்குக் காரணம் என்பர். அதுவும் யோசிக்குமிடத்து உண்மையென்றே சொல்லவேண்டியதா யிருக்கிறது. பெண்களில் பலர் துஷ்டர்களா யிருக்கலாம். அவர்களைப்போல புருஷர்களிலும் பலர் துஷ்டர்களா யிருப்பதில்லை யென்று கூற முடியுமோ? திரேதாயுகம் சீதையாலும் துவாபரயுகம் திரௌபதையாலும் அழிந்ததாக நூல்கள் கூசாமல் கூறுகின்றனவே ! ஏன் இராவணனாலும் துரியோதனனாலுந்தான் அழிந்தனவென்று கூறலாகாதோ !' நன்மனைதோறும் பெண்களைப் படைத்து நமனை என் செய்யப் படைத்தாய்' என்கிறாரொருவர். அவர் அனுபவத்தில் அவர் தம் மனைவியால் மெத்த கஷ்ட மடைந்திருக்கலாம். அவரைப்போலப் பல புருடர் கஷ்டப்படுவதையும் பார்த்திருக்கலாம். ஆனால் இதைப் போலவே பல ஸ்திரீகளும் தம் கணவரால் கஷ்டப் பட்டிருக்கலாகாதோ? அது அவருக்குத் தெரியாது பாவம் ! அவரைப்போலவே ஓர் மாதும் பாடியிருந்தால் 'நன்மனை தோறும் புருடரைப் படைத்து நமனை யென் செய்ய படைத்தாய்' என்று என் பாடியிருக்கமாட்டாள் ! பாடியே யிருப்பாள்.

 

உலகமே ஸ்திரீ வடிவம் என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். இப்படிக் கூறுவது சிலர்க்கு வியப்பா யிருக்கலாம். உலகம் சத்தி வடிவம்; சத்தியினாலேயே உலகம் உண்டாயிற்று; சாத்தியின்றேல் சகத்துமில்லை என்று கூறினால் வியப்புண்டாகாது. ஆகவே ஸ்திரீகள் சத்திவடிவம் என்பதில் சந்தேகம் யாது? வாகீசர் (திருநாவுக்கரசு சுவாமிகள்) திருவையாற்றிற்குச் சென்ற காலத்தில் ஆண்களெல்லாம் சிவசொரூபமாகவும் பெண்களெல்லாம் சத்தி சொரூபமாகவும் இருந்ததாகக் கூறியிருக்கின்றனர். மிருகங்களும் பறவைகளும் கூட அப்படியே யிருந்ததாகச் சொல்லுகிறார். இவ்விடத்தில் சிலர் சிவம் பெரிதா சத்தி பெரிதா என்னும் ஒரு கேள்வியைக் கிளப்புவர். சிவமில்லாமல் சத்தியில்லை; சத்தியில்லாமல் சிவழமில்லை என்று பெரியோர் கூறியிருக்கின் றமையின் நாமொன்றும் புதிதாக இக்கேள்விக்கு விடையிறுக்க வேண்டிய அவசியம் இல்லை. இதனால் சின்மும் சாத்தியும் சமமென்றேற் படுகின்றது. இதைக் காட்டவே அர்த்தநாரி ஈஸ்வா சொருபம் தோன்றியது. அர்த்தநாரீஸ்வா சொரூபத்தால் நாம் அறிந்து கொள்ள வேண்டியது இவ்வுண்மையேயாம். திரிமூர்த்திகளில் ஒருவர் பெண்ணை இடத்திலும் சிரத்திலும் கொண்டிருப்பதும், ஒருவர் மார்பினிடத்து வைத்திருப்பதும், மற்றொருவர் நாவில் வைத்திருப்பதும் மாதர் தம் மேன்மையை விளக்கவே யென்பது வெளியாகின்றது.

 

எது எப்படியாயினுமாகுக. ஸ்திரீகளில்லாவிட்டால் உலகமில்லை என்பது மாத்திரமேனும் மறுக்கமுடியாத பண்மைதானே. அத்துடன் அவர்கள் சிலர் நினைக்கிறபடி தாழ்ந்தவர்களல்லர் என்பதையும் மறக்கக்கூடாது.

 

'மனிதர்க்கு இயல்பாகவே யமைந்துள்ள இரண்டு கண்களில் நல்லகண் எது? இழிவான கண் எது? ஏற்றத் தாழ்வின்றிச் சமமானவையே யல்லவா? அதுபோலவே, ஆண் பெண் என்னும் இரு பகுப்பினரும் சமமானவர்களே' என்னும் கருத்தை யமைத்து ஓர் புலவர் பக்ஷபாதமின்றி நடு நிலைமையில் நின்று,

 

 " இக்கினை நகுமொழி எழில்மின் னாரின், ஆண்

 மக்கள் மிக் கோரெனல் மடமையாம். இரண்டு

 அக்கமும் ஒக்குமே யன்றி நல்லக்கண்

 எக்கண்? மற் றெக்கணே இழிவு டைக்கணே.''                   (அக்கம் = கண்)

 

என்று பாடியிருப்பது யாவரும் கவனிக்கத் தக்கதாம்.'நான் உயர்ந்தவன்' என்னும் அகங்காரத்தை விட்டுப் பார்க்குமிடத்து யாவர்க்கும் இவ்வாறு கூறுவது குற்றமாகத் தோன்றாது.

 

 

வாசகர்களே ! நாம் இவ்வாறு கூறுவதால் புருடர்களைப்போல மாதரும் சர்வ சுதந்திர முடையவர்களென்றாவது, புருஷரைப்போலவே அவர்களும் உத்தியோகம் வியாபாரம் விவசாயம் முதலிய தொழில்களைச் செய்யலாமென்றாவது, கண்ட விடங்களுக்கெல்லாம் சென்று திரிந்து உலாவலாம் அவர்களிஷ்டப்படி நடக்கலாமென்றாவது கூறினதாகக் கருதிவிடலாகாது.  மாதர் கணவரிடத்து எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதைப் பற்றி அநேக வருஷங்களாக நாம் வற்புறுத்திக் கூறி வருகிறோம்; இனியும் அங்ஙனமே கூறுவோம். ஆனால் ஸ்திரீகள் தாழ்ந்தவர்கள், அவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள், ஒன்றுக்கும் உதவாதவர்கள், நமக்கு அடங்கி ஊழியம் செய்யவும் சுகத்தைத்தரவம் மாத்திரம் உரியவர்கள், அவர்களை உதைக்கவும் அடிக்கவும் திட்டவும் கட்டவும் நமக்கு அதிகாரம் உண்டு என்னும் இவற்றைப் போன்ற துர் அபிப்பிராயங்கள் கொள்வது தவறு என்பதை வற்புறுத்தியே இவ்வாறு கூறநேர்ந்தது.

 

மாதர்கள் உலகத்திற்கு அத்தியாவசியமானவர்கள்; அவர்கள் இல்லாவிட்டால் ஒரு காரியமும் நடைபெறாது என்று இந்த வியாசத்தின் ஆரம்பத்திலேயே கூறியுள்ளோம். அங்கனமாக அவர்களைத் தாழ்ந்தவர்களாக நினைப்பதற்குக் காரணம் இல்லை. (இப்படிச் சொல்வதனால் நம் தேசத்தில் உள்ள புருஷர்கள் அனைவருமே ஸ்திரீகளைத் தாழ்மையாக நினைக்கின்றார்கள் என்று சொல்வதாகக் கருதுதல் கூடாது. கற்றறிந்தவர்களாகவுள்ள பெரியோர் அங்ஙனம் நடப்பதில்லை. ஆகையால் சாதாரண ஜனங்களுக்கிடையே இவ்வழக்கம் பெரும்பாலும் காணப்படுகின்றது. ஆயினும் அவர்களுள்ளும் பலர் பெண்களுக் கடங்கியே நடக்கிறார்கள். ஆனால் அது வேறு காரணத்தால். அவர்கள் சொன்னபடி நடப்பது, உட்கார் என்றால் உட்காருவது, எழுந்திரு என்றால் எழுந்திருப்பது, இன்னும் இவை போன்ற தகாதகாரியங்களை அவர்களுக்குப் பயந்து கொண்டு செய்கிறவர்கள் பலர் இல்லாமலில்லை. இவ்வாறிருப்பதும் கோழைத்தனம். இது ஆண்மசகளின் பலவீனத்தையும் பெண்களின் இழிவையுமே காட்டுகின்றது. இதுவும் மெச்சத் தகுந்ததல்ல.)

 

அநேக புருஷர்கள் பெண்களை வாயில் வந்த படியெல்லாம் வைவதும்அடிப்பதும் உதைப்பதுமா யிருக்கின்றனர். இது எவ்வளவும் போற்றத் தகுந்த தல்ல. ஸ்திரீகளை ஆறறிவுடைய மனிதவர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக நினைக்காமல் பெண்கள் என்றால் அவர்களுக் கென்ன தெரியும்' என்று சொல்லக் கூடிய நிலைமையில் நம் நாட்டு ஸ்திரீகளை வைத்திருப்பது மிக்க அவமானமாகும். புருஷர் எந்தக்காரித்தையும் சர்வசுதந்திரமாகச் செய்யலாம். அதைப்பற்றி ஸ்திரீகள் இப்படிச் செய்யலாமா? என்று கேட்கவும் கூடாது. அவர்களுக்கு அந்தச் சுதந்திரமும் கூடாது. புருஷன் சொன்னபடி நடக்க வேண்டும் என்று இத்தகைய பலவிதமாகத் தாழ்மைப் படுத்திக் கூறுவோர் பலர் உளர். நாமறிந்த எத்தனையோ குடும்பங்களில் மாதர்கள் படும்பாடும் சிறுமையும் அல்லலும் அவமானமும் அப்பப்பா! அளவிட்டுரைக்க முடியாது. சில துஷ்டப் பெண்களு மிருக்கின்றனர். அவர்களுக்கு அப்படித்தான் வேண்டும் என்றாலும், அநேக இடங்களில் நிரபராதிகளும் இப்படியே இம்சிக்கப்படுகின்றனரே! அந்தோ! என்ன பரிதாபம்! ஒரு புருஷன் தன் மனைவியைத் தவிர வேறு அன்னிய மாதர்களின் சம்பந்தமுடையவனா யிருக்கலாம், அதைப்பற்றி ஸ்திரீகள் கேட்கலாகாது என்று துராக்கிருதமாகப்பல ஸ்திரீகளுடன் சம்பந்தம் வைத்துக் கொள்வது அயோக்கியத்தனமான காரியம். அந்த மனைவியின் ஸ்தானத்தில் தானிருந்து பார்க்கட்டும். இத்தகைய தீயநெறியில் ஸ்திரீகள் செல்கின்றனரெனச் சிறிது தெரிந்தவுடன் கத்தியைத் தீட்டிக்கொண்டு புறப்படும் புருஷன் தன்னடக்கையால் அவள் மனம் எங்ஙனம் புண்படும் என்பதைச் சிறிதும் கவனிப்பதில்லை. தனக்குக் கசப்பாயிருப்பது மற்றவர்களுக்கு இனிமையா யிருக்கு மென்றெண்ணுவது எவ்வளவு மதியீனம். இவர்களுக்கு மனச்சாட்சி என்பது இல்லையோ. அன்பர்களே! இத்தகைய விபசார நெறியிற் செல்லாத ஆண்மக்கள் நம்மவரில் நூற்றிற்கு எத்தனை பேரிருப்பார்கள். மனதைத் தொட்டுப்பாருங்கள். விபசாரம் என்பது ஸ்திரீகளுக்கு மாத்திரந்தானோ உரியது. ஸ்ரீராமச்சந்திரப்பெருமான் நடந்து காட்டிய ஒழுக்கம் யாது? ஏகபத்தினி விரதத்தை நமக்கு உணர்த்த வந்த அவதார புருஷரன்றோ அவர்.


 "வந்தெனைக் கரம் பற்றிய வைகல்வாய்
 இந்தவிப் பிறவிக் கிரு மாதரைச்
 சிந்தையாலும் தொடேனென்ற செவ்வரம்
 தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்"


 என்று அவர் சொன்னதாக ராமகதை கூறுகின்றதே.

 

கோசிக முனிவர் அரிச்சந்திர மன்னனிடம் சென்று, " இந்த என் பெண்களை மணம் புரிந்து கொள் " என்றபோது அம்மகிபன் சுவாமி என் கண்ணைக் கேளுங்கள் கொடுக்கிறேன். என் ராஜ்யத்தைக் கேளுங்கள் வாழ்வுடன் தருகிறேன். இப்பெண்களை மணக்கும் வார்த்தையை என் காதிலும் போடவேண்டாம் எனக் கூறியதை யாரும் அறியாரோ!


 "கண்ணை வேண்டினும் ஈகுவன் காக்கின்ற
 மண்ணை வேண்டினும் வாழ்வுடன் ஈகுவன்
 பண்ணை வேண்டிய இன்சொல்... குலப்
 பெண்ணை வேண்டிலன் யானென்று பேசினான்”


என்று அரிச்சந்திர புராணம் கூறுவதைக் கவனியுங்கள்.

 

மற்றொரு விஷயம் இங்குக் கூற வேண்டியது அவசியமாகிறது. அது என்னவெனில், மாதர் தனிமையாக வெளியில் செல்லக்கூடாது என்று விதி ஏற்பட்டிருக்கின்றதல்லவா? இவ்விடத்தில் 'என் செல்லக்கூடாது?' என்று ஒரு கேள்வியைக் கிளப்புவோம். இதற்கு விடை யாது?' தீங்கு நேரிடுமென்று' என்பது விடையாம். அப்படியானால் எதனால் அல்லது யாரால் தீமை நேரிடும்? எதனாலுமல்ல, புருஷரால் தான். மற்றப் புருஷரால் ஏதாவது தீமை யுண்டாகு மென்றஞ்சியே பெண்கள் வெளியில் போகக்கூடாதென்று விதியேற்பட்டிருக்கின்றது என்பது இதனால் நன்கு தெரிகிறது. ஸ்திரீகள் கெட்டவர்களென்றெண்ணும் ஆண்மக்களே! இப்பொழுது யார் நல்லவர்கள் யார் கெட்டவர்களென்று யோசித்துக் கொள்ளுங்கள். புருடர்காணும் படி பெண்கள் (யௌவன வயதுடையவர்கள்) நிற்கலாகாதென்றால் புருடரின் பார்வை விஷமத்தனமானது; அவர்களுடைய பார்வை நல்ல பார்வையா யிருப்பதில்லை. ஆதலால் அவர்கள் பார்வையிற் படலாகாது என்றல்லவோ அர்த்தமாகிறது. இன்னும் அதிகமாக விளக்க வேண்டியதில்லை. உதாரணமாக ஒரு தெருவூடே யாரேனும் சில பெண்களோ அல்லது ஒரு பெண்ணோ செல்லட்டும். அப்போது அவ்வீதியிலிருக்கும் ஆடவரிற் பெரும்பாலோருடைய பார்வையை நோக்குங்கள். இது எவ்வளவு பேடித்தனமான செய்கை. வீதியிற் செல்லும் பெண்களை இவர்கள் ஏன் பார்க்க வேண்டும்? தம் மனைவியர் செல்கையில் பிறர் அவ்வாறு பார்க்கின் இவர்கள் மனம் எவ்வாறிருக்கும்? இத்தீச்செயல் படியாதவரிடத்தில் மாத்திரமன்று. படித்தவரிடத்தும் மிகுந்திருக்கக் காணலாம். இவ்வித துர்ச்செய்கையுடையோரிருக்கும் வரைக்கும் நாம் சிறப்படையப் போவதில்லை. (அன்பர்களே! இவ்வாறு எழுதியதற்காக மேற்குறித்த துர்க்குணங்களையுடையார் பலர் எம்மைக் கோபிப்பர் என்பது நமக்குத் தெரியும். இருப்பினும் அவர்களுடைய கோபத்திற் கஞ்சி நாம் உண்மையை - நீதியை - எடுத்துரைக்காமலிருக்க முடியாது. எனினும் கற்றறிந்த பெரியோர் இதைக் கண்டு களிப்பர் என்பதில் ஐயமின்று.)

 

ஒரு புருஷன் அநேக மனைவிகளை மணந்து கொள்வதற்கு இந்து மதம் இடந்தருகின்றது. தசரதன் அறுபதினாயிரம் மனைவியரை யுடையவனாயிருந்தான். மலையத்துவச பாண்டியனுக்குப் பதினாயிரம் மனைவியர் இருந்ததாகத் திருவிளையாடற் புராணம் கூறுகின்றது. மனைவியை இழக்கப் பெற்றோர் வேறு மனைவியைக் கொண்டனரெனினும் அது ஒருவாறு பொருத்தமுடையதாகும். அங்ஙனமின்றி மனைவி யிருக்கும் போதே மேலும் மேலும்பல பெண்களை விவாகம் செய்து கொண்டனரெனக் கூறுவது தான் தகாத செய்கையாகும். மதம் இடங் கொடுக்கின்றதே யெனின், மதம் இடங்கொடுக்கலாம்; மனச்சாட்சி இடங் கொடுக்கிறதா வென்று பார்க்க வேண்டும். நமது உள்ளொளியாக விளங்கும் மனசாட்சியே தெய்வத்தன்மையுடையது. அதுவே பெரிய நீதிபதி, பெரிய வேதம், அதுவே மதம். ஆகையால் அதைக் கேட்டுப் பார்ப்போம். அது இடங் கொடுத்தால் ஒப்புக்கொள்ளுவோம். அறுபதினாயிரம் மனைவியரைக் கொண்டிருந்த தசரதனுடைய குமாரன் ராமன் ஏக பத்தினி விரதனாயிருந்தது என்ன ஆச்சரியம்! பாருங்கள். அத்தனை மனைவிகளை அவர்கள் மணந்தது உண்மையாயிருக்குமோ என்னும் ஓர் சந்தேகத்தைக் கிளப்பி அதைப்பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. உண்மையாகவே யிருக்கலாம். ஏனெனில் இப்பொழுது நாம் பார்கக்கூடிய நிலைமையில் இத்தகைய செயல்கள் எத்தனையோ நடைபெறுகின்றனவே. ஆகையால் இது சரியா? என்பதே நாம் அறிய வேண்டிய விஷயமாகும்.

 

முன் சொன்னபடி சாஸ்திரம் இடந்தருகிறது, மதம் இடந்தருகிறது என்று சொல்வதை நாம் அங்கீகரியோம். நமக்குச் சாஸ்திரம் தெரியாது; மதம் தெரியாது. மனச்சாட்சியைக் கேட்டுப்பாருங்கள். அது ''தவறு' 'என்று சொல்லுகிறது. ஒரு மனைவி யிருக்கையில் வேறொரு பெண்ணை விவாகம் செய்து கொள்ளுவானேன். இதற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன

 :

அவள் சமுசாரத்திற்குத் தகுதியற்றவளா யிருக்கின்றாளென்ப தொன்று. வியாதி யுடையவளா யிருக்கின்றாளென்ப தொன்று. அவளிடமாகப் புத்திர சந்தான முண்டாகவில்லை யென்பது மற்றொன்று. இப்படிப் பல காரணங்கள் காட்டலாம். இதைக் குறித்து நம் மனசாட்சியானது நம்மை ஒரு கேள்வி கேட்கின்றது. அதற்கு யாது விடையளிப்பதோ பார்ப்போம்.


 அதன் கேள்வி இது: - ஓ! மனிதனே! உன் மனைவி குடித்தனத்திற்குத் தக்கவளா யில்லையென்று வேறொருத்தியை விவாகம் செய்து கொள்ள நினைக்கிறாய். அவளுக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா? அப்படியிருந்தால் நீ வேறு விவாகம் செய்து கொள். பேய்பிடித் தாடுகிறாளா? அப்படியானால் நீ என் மருந்து மந்திரங்களைக் கொண்டு குணப்படுத்தலாகாது. இனித் தேறக் கூடாதபடி வியாதி வாய்ப்பட்டிருக்கிறாளா? இச்சமயத்தில் கணவன் இத்தகைய நிலைமைகளிலிருந்தால் புருஷன் செய்கிறபடி மனைவி செய்யலாமா? அது அக்கணவனுக்குச் சம்மதப்படுமோ? அவனுக்குச் சம்மதமில்லாத வொன்று அவளுக்கு மாத்திரம் சம்மதமா யிருக்குமென்று நீ நினைக்கிறாயா? அப்படி யில்லாவிட்டால், குடும்பம் கெட்டுப்போகுமே என்கின்றனையோ? அப் பெண்ணுக்கு மாத்திரம் குடும்பமில்லையோ? பிள்ளைகளில்லையென்று வேறு பெண்ணை மணப்ப தவசியம் என்றால், அப்பெண்ணுக்கும் பிள்ளை பிறவாவிட்டால் என் செய்வது. மற்றொருத்தியை மணப்பது. அவளுக்கும் அப்படியே யானால்? இப்படியுமாகுமோ? ஏன் ஆகாது? தசரதனுக்கு அறுபதினாயிரம் மனைவியரிருந்தனரே - பிள்ளை பிறந்ததா? மலையத்துவசன் பதினாயிரம் பேரை மணந்தும் ஒருத்திக்கேனும் ஒரு பிள்ளையேனும் பிறந்ததா? இல்லையே! தவிர புருஷனே என் மலடாக இருக்கக்கூடாது. வேறு பெண்களை மணப்பதால் முன்னிருந்த மனைவியின் மனம் எப்படியிருக்கும் என்று சற்று சிந்தித்துப்பார். நீ அவள் ஸ்தானத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டு பார். நீ ஒரு ஸ்திரீ. ஒரு புருஷனை மணந்து கொண்டாய். நீ வியாதி வாய்ப்பட்டோ அல்லது மக்களைப் பெறாதவளாகவோ அல்லது அழகற்றவளாகவோ இருக்கிறாய். அப்பொழுது உன் புருஷன் -எவனை நம்பித் தாய் தந்தை சகோதரர் சகோதரிகளை யெல்லாம் கைவிட்டு வந்தையோ அந்தப் புருஷன் - விவாக காலத்தில் அக்கினி சாக்ஷியாகவும் மற்றும் பல தேவர்கள் சாக்ஷியாகவும் கைப்பிடித்த கணவன் - இனி எனக்கென்ன குறை? என் நாயகன் என்னை நன்றாக வைத்திருப்பான். எனக்கு யாதொரு துன்பமும் வராமல் காப்பான். என்னைக் கைவிடமாட்டான் என்று எவனை நம்பியிருந்தையோ அந்தக் கணவன் - உன்னைக் கைசோரவிட்டு வேறொருத்தியை மணக்கப் போகிறான் என்றறிந்தால் உன் மனம் எப்படியிருக்கும்! எப்படிக் கலங்கும்! எவ்வாறு துடிக்கும்! வேகாதா, கொதிக்காதா, ஓ! புருஷனே! நன்றாக யோசித்துப்பார். ஒவ்வொரு காரியத்தையும் இப்படிப் பார்த்துச் செய்வது தான் சரியாகும். இதுதான் மனச் சாட்சியோடு ஒப்பச் செய்வதாகும்.

 

அவ்வாறு பார்க்கிற காலத்தில் 'அது தவறு' என்பது உனக்கு நன்கு விளங்குமே. இது கிடக்கட்டும். ஆண்பாலர் செய்யும் வேறொரு அக்கிரமமான - அநியாயம் நிறைந்த காரியத்தைக் குறித்துக் கவனிப்போம்.

 

பிறருடைய குறைகளைக் கூறும்போது யாவர்க்கும் சந்தோஷம் உண்டாகின்றது. தங்கள் குற்றங்களைப் பிறர் பேசினால் அளவுகடந்த கோபமுண்டாகின்றது. இதுவே உலகிற் பெரும்பாலோர் வழக்கம். ஆனால்அறிவாளிகள் பிறர் குற்றத்தைப் போல் தம் குற்றத்தையும் நோக்குவர். இதுதான் சாமானியருக்கும் அறிவாளிகளுக்கு முள்ள தாரதம்மியம்.


“ஏதிலார் குற்றம் போற் றங்குற்றங் காண்கிற்பிற்
 றீ துண்டோ மன்னு முயிர்க்கு"


என்றார் நாயனாரும். உன் கண்ணின் மேல் உத்தரத்தை வைத்துக் கொண்டு அன்னியன் கண் மேலிருக்கும் துரும்பைக் கவனிக்கிற தென்ன? உன்கண்ணின் மேலுள்ள தூலத்தை யெடுக்க வழிதேடாமல் உன் சகோதரன் கண்மேலுள்ள துரும்பை யெடுக்க வகை தேடுவ தென்ன? என்றார் ஏசு நாதர்.

 

புருஷர் வைப்பு வைத்துக் கொள்ளலாம் என்பது பலர் தப்பான அபிப்பிராயம். அபிப்பிராயமிருக்கிறதோ இல்லையோ அனுஷ்டானத்தில் குறைவில்லை. நம் வீட்டுப் பாட்டிகளும், அவனுக்கென்ன ஆண்பிள்ளை; ஆயிரம் வைப்பாட்டிகளை வைத்துக் கொள்வான்; அவனைக் கேட்பார் யார்?' என வாய் கூசாது கூறுவது நம் நாட்டில் சாதாரண வழக்கம். சிலர் இரகசியமாக இதில் ஈடுபட்டிருப்பர். சிலர் பகிரங்கமாகவே வைப்பாட்டியை ஓரிடத்தில் குடியேற்றி அந்தக் குடும்பச் செலவுகளை யெல்லாம் தாங்களே ஏற்றுக் கொண்டு நடத்தி வருவர். மற்றுஞ் சிலர் தாராளமாகத் தங்கள் வீட்டிலே தானே அவளை அழைத்து வந்து வைத்துக் கொள்வர். சிலர் தாசி வீடுகளையே தஞ்சமாக அடைந்திருப்பர். அவர்கள் மேற் கொண்ட மோகத்தால்தம் மனைவியரைக் கண் ணெடுத்தும் பாராமல் அவளைத் தவிக்க விடுவோர் சிலர். ஆஸ்தியெல்லாம் கூத்திக்கிட்டு நாஸ்தியாக்கிக் குரங்கு போல் விழிப்போர் சிலர். இன்னும் எத்தனையோ வகையில் இத்துர்ச் செய்கைக்குள்ளானோருடைய தொகை எண்ணத் தொலையாது, ஏடிடங்கொள்ளாது. நூற்றில் ஒருவரோ இருவரோ இக்கொடிய செய்கைக்காளாகா திருப்போர். இதை வாசிக்கும் நண்பர்கள் தங்கள் கள்ள வொழுக்கத்தை வெளியிடா விட்டாலும், 'நெஞ்சை யொளித்தொரு வஞ்சகமில்லை' யாகையால், தங்கள் மனத்தைத் தாங்களே தொட்டுப் பார்த்துக்கொண்டு தங்கள் பரிசுத்தத் தன்மையையும் அபரிசுத்தத் தன்மையையும் அறிந்து குற்றம் தங்களிட மில்லாதிருந்தால் அதற்காகச் சந்தோஷிக்கவும், தங்களிடம் இத்தகைய குற்றமிருந்தால் அதற்காகத் துக்கித்து அக்குற்றத்தைக் களையவும் வேண்டும். இதில் மற்றுமோர் விசேஷம் யாதெனில்: - இது ஒரு குற்றமெனக் கொள்ளாமையே. அநேகர் இதைப் பிழையென்று எண்ணுவதே யில்லை. தவிர, இதை ஒரு பெருமையாகவும் கௌரவமாகவும் கருதும் மூடமதிகளும் பலர் உண்டு. நண்பர்களே! வைப்பாட்டியை வைத்துக் கொள்வதென்பது எவ்வளவு அநியாயமும் அக்கிரமுமான காரியமென்பதைச் சிந்தித்துப் பாருங்கள். விபசாரமென்பது ஸ்திரீகளுக்கு மட்டுந்தானோ? ஆடவர்க்கில்லையோ? பக்ஷபாதமின்றி நடுநிலையினின்று யோசித்துப் பாருங்கள். தன் கணவன் வேறொரு ஸ்திரீயைக் காதலித்திருக்கிறா னென்பதை யறிந்தால் அவன் மனைவியின் மனம் என்ன பாடுபடும். ஆடவர் மனம் வேறு; மாதர் மனம் வேறோ? பொறாமை என்னும் குணம் யாவர்க்கும் சாதாரணமாக வுள்ளதே யாகும். சிறு குழவிப் பருவத்திலேயே தோன்றுகிறது. ஒரு தாய் ஒரு குழந்தைக்கு ஒரு வஸ்துவைக் கொடுத்தாளென் றறிந்தால் இரண்டே வயதுடைய மற்றொரு குழந்தை புரண்டு புரண்டு அழத் தொடங்குகின்றதே. தன்னினும் தன் தம்பியினிடம் தகப்பன் மெத்த அன்புள்ளவனா யிருக்கிறா னென்றறிந்ததும் ஒருவன் அடங்காக் கோபமூண்டு சண்டையிடத் தொடங்குகிறானே. இது உயிர்களுக்கு இயற்கையாயிற்றே. இங்ஙனமாக, தாம் வேறொரு மாதிடம் பிரியம் வைத்திருப்பதை யறிந்தால் தம் மனைவியர்க்கு எவ்வளவு மன வெரிச்சலுண்டாகும் என்பதை அத்தகைய ஒழுக்கமுள்ள ஒவ்வொருவரும் சிந்திப்பாராக. கம்பராமாயணத்தில் ஆற்றுப் படலத்தில் கவிச்சக்கரவர்த்தியாகிய கம்பர் முதல் செய்யுளில் அந்நாட்டினரின் குணங்களைக் கீழ்வருமாறு கூறி யிருக்கின்றனர்.


''ஆச லம்புரி யைம் பொறி வாளியுங்
 காச லம்புமுலையவர் கண்ணெனும்
 பூச லம்பு நெறியின் புறஞ்செலாக்
 கோச லம்புனை யாற்றணி கூறுவாம்.''

 

(இ -ள்.) 'ஆடவர்களுடைய பஞ்சேந்திரியங்களாகிய பாணங்களும், மாதர்களின் கண்ணென்கிற அம்பும் துன்மார்க்கத்திற் செல்லாத கோசல நாட்டை அலங்கரிக்கின்ற சரயு நதியின் அழகைச் சொல்லுவோம்' என்பது.

 

இதில் காணப்படும் விசேஷ மென்னவெனில், ஆடவரும் மகளிரும் அக்கினி சாட்சியாக மணந்த தமது மனைவி கணவன்மாரிடத்தே தாம் அன்பு செலுத்தி இன்ப மனுபவிப்பதன்றி, பிறர்மனை நயத்தல், பரபுருஷரைச் சேர்தல் என்ற தீச்செயலிற் செல்லாதிருக்கும் தன்மையை யுடையது கோசல நாடு என்பதாம்.

 

இதனால் ஸ்திரீ புருஷர்களுடைய லக்ஷணமாவ தென்னெனில், புருஷர் தம் மனைவியரை யன்றிப் பிற மாதரை விரும்பாதிருத்தலும், ஸ்திரீகள் கணவரை யன்றிப் பரபுருடரை விரும்பாதிருத்தலுமே யாகும்.

 

விபசாரமென்பது ஸ்திரீகளுக்கு மாத்திரமல்ல, புருஷருக்கு முள்ளதேயாகும். ஸ்திரீ விபசாரம் எத்தகைய குற்றமுடையதாகுமோ அத்தகையகுற்ற முடையதே புருஷ விபசாரமும்.

 

புருஷர்கள் வியபிசாரம் செய்யலாம் என்பதற்கு எங்கும் எள்ளளவும் ஆதாரம் கிடையாது. ஆதாரம் இருப்பினும் அது ஒப்புக்கொள்ளப் படத்தகாத அசட்டுத்தனமான ஆதாரமேயாகும்.


''வம்புலாங் கூந்தல் மனைவியைத் துறந்து பிறர் பொருள் தாரமென் றிவற்றை
 நம்பினாரிறந்தால் நமன்தமர் பற்றி ஏற்றிவைத் தெரியெழுகின்ற
 செம்பினா லியன்ற பாவையைப் பாவி தழுவென மொழிவதற் கஞ்சி
 நம்பனே வந்துன் திருவடி யடைந்தேன் நைமிசாரணியத்து ளெந்தாய்."

 

என்னும் பெரியார் வாக்கின் பொருளை நோக்குமிடத்து, "எவனொருவன் தனக்குரியவளாயுள்ள மனைவியைக் கைவிட்டு வேறு மாதரை யடைய விரும்புகின்றானோ அவனை எமதூதர்கள் எமலோகத்தில் செம்பினால் செய்யப்பட்ட பெண்பதுமையை நன்றாக நெருப்பிலிட்டுக் காய்ச்சி அது செக்கச்செவேலென்று காய்ந்து எரிந்து கொண்டிருக்கும் பொழுது அதனருகில் அவனை யழைத்துப் போய் 'அடே! பாவிப்பயலே! நீ விருப்பங்கொண்ட பெண்ணுருவம் இதோ இருக்கின்றது பார்; உன் ஆசைதீர இதைத் தழுவுகின்றனையா? இல்லையா? இல்லாவிட்டால் இந்தச் சவுக்கினாலடித்துத் தோலையுரித்து விடுவோ' மென்று பயமுறுத்தித் தழுவும்படி செய்வார்கள்'' என்பது நன்கு விளங்குகின்றதே. மேலும் தமிழ் வேதமாகிய குறள், 'பகை பாவம் அச்சம் பழி என்னும் இந்நான்கும் அன்னியமாதரை விரும்புவோனை விட்டு நீங்கா' எனக் கூறுகின்றதே. இவற்றையெல்லாம் உற்றுநோக்குமிடத்துவியபசாரம் என்பது ஸ்திரீகளுக்கு மட்டுமல்ல, புருஷர்க்கும் உண்டு என்பதுநன்கு புலனாகின்றதே. அதாவது ஸ்திரீகள் தம் கணவரையன்றிப் பிறரைக்கருத்திலும் கொள்ளுதல் கூடாது. அப்படிச் செய்வது மகாபாதகம் என்று கொள்ளப்படுதல் போலவே, புருடரும் அன்னியமாதரை அணுவளவும் அகத்தில் கொள்ளலாகாது. அப்படிக் கொண்டால் அது மகாபாதகச் செய்லாகவே கொள்ளப்படும் என்பது விளங்குகிறது.

 

அன்பர்களே! இதுகாறும் கூறியவற்றால் ஸ்திரீகளும் புருடரும் ஆகிய இருவகுப்பினரும் பரஸ்பரம் (ஒருவர்க்கொருவர்) அன்புள்ளவர்களாயும் நல்லொழுக்க முடையவர்களாயு மிருந்து குடும்பத்தை நடத்துவதே இல்லறத்திற்கு அழகாகும் என்பது பெறப்பட்டது. அதுவே நல்ல குடும்பவாழ்க்கை. அத்தகைய இன்பகரமான -சதிபதிகளிருவரும் ஒற்றுமையான மனமுடையவர்களாய் வாழும் - வாழ்க்கையே – குடும்ப வாழ்க்கையே - அறமெனப்படுவதாகும். தன்னைத்தானறிந்து ததாகாரமாய்ப் பேரானந்தப் பேற்றைப் பெறுதற்குரிய துறவறத்தினும் இல்லறமே சிறப்புடையதென்றும், அறமென்று சொல்லப்படுவது துறவறமே யென்றும் நூல்கள் நுவலும். இவ்வில்லறத்தால் வரும் இன்பத்தைத்தான் சிறந்த இன்பமாகப் பெரியோர் இயம்பியுள்ளார். ''இல்லறத்திற்கென்று ஏற்படுத்தப்பட்டுள்ள மார்க்கத்தின்படி இல்லறம் நடக்குமானால் அதுவே போதும், அதுவே எல்லாச் சிறப்புக்களையும் தரும். இதைக்காட்டிலும் அதிகமாக அடையக் கூடியது துறவறத்தில் என்ன இருக்கின்றது? ஒன்றுமில்லை." யென்று ஆன்றோர் அருளியிருக்கின்றனர். ஆகையால் துறவறத்தினும் இல்லறமே சிறந்ததென்பது நன்றாக விளங்குகின்றதே.

 

ஆனால், எப்படியிருந்தால் நல்லது என்று பார்க்க வேண்டாமா? செய்ய வேண்டிய ஒழுங்கின்படி செய்தால் எதுவும் நலலதே. ஒருவனிடத்தில் பணமிருப்பது நல்லதே. ஆனால் எப்படியிருந்தால் நல்லது? நன்மார்க்கத்தில் செலவு செய்வதாயிருந்தால் - ஏழை எளியவர்க்கு உபயோகப்படுவதாயிருந்தால் - நல்லதே. அவ்வாறின்றிச் சூதாட்டத்திலும் - மதுபானத்திலும் - வியபிசாரத்திலும் செலவிடப்படுமானால் அத்தகைய செல்வம் ஒருவனுக்கு இருப்பதைவிட இல்லாமலிருப்பதே நல்லதல்லவா? அதுபோல கிருகதர்மத்தின் தன்மையை யறிந்து அதற்கேற்றபடி ஒழுகினால் மாத்திரமே இல்லறம் நல்லறமாகக் காணப்படுமேயன்றி இல்லாவிடின் அதைக்காட்டிலும் வெவ்விய நரகமே செவ்விதாம் என்னும்படி துன்பவடிவாகவே யிருக்கும்.

 

தற்காலத்தில் பெரும்பாலான குடும்பங்களில் மனைவியர் விஷயத்தில் கணவர் எவ்வாறு நடந்து கொள்கின்றனர் என்பதைப்பற்றிச் சிறிது கூறுதல் பொருத்தமுடையதாகும்.

 

(1) ஒரு சாரார் மனைவியர் தமக்கு அடங்கினவர்கள் - அடிமைகளையொத்தவர்கள் - தம் சொற்படி - (அது சரியோ, தப்போ அதைப்பற்றிக் கவலையில்லை.) நடக்கக் கடமைப்பட்டவர்கள் என்று எண்ணுகின்றவர்களாய் இருக்கின்றனர். இவ்வகுப்பினர் தம் கருத்தின்படி - சொற்படி – அவர்கள் (மனைவியர்) நடக்கத் தவறினாலும், அல்லது மறுத்துப் பேசினாலும் மிகுந்தகோபங் கொண்டு கண்கள் சிவக்க உதடு துடிக்க உடலெல்லாம் நடுங்க, நாயடிகோல் போன்ற ஓர் தடியை யெடுத்துக்கொண்டு வாயில் வந்தபடி வம்பும்தும்புமாகப் பேசி மாட்டை யடிப்பது போல் அடிக்கின்றார்கள். அந்தோ! பரிதாபம்! பரிதாபம்!! என்ன கொடுமை! என்ன கொடுமை!! அன்பர்களே! இவ்வியாசத்தை எழுதிக் கொண்டிருக்கும் இச்சமயத்தில் துரதிருஷ்டவசமாக இதேவிஷயமான ஓர் விவகாரம் நம்மிடம் வந்தது. தங்கள் பெண்ணை அவள் கணவன் அடித்து இம்சிக்கிறானென்று அப்பெண்ணின் பெற்றோர் வந்து முறையிட்டனர். இரண்டு மூன்று நாட்களாக இப்படியே அடிப்பதும் உதைப்பதுமாயிருக்கிறான் என்று தெரிய வந்தது. அப்பெண் பூரண கர்ப்பவதியா யிருக்கிறாள். வயது பதினாறே யிருக்கும். அப்புருஷனை அழைத்து விசாரிக்கிற பொழுது அவன் ஏதோ சில காரணங்கள் கூறுகிறான். காரணங்கள் அற்பமானவைகளே. இவ்வற்ப காரணங்களுக்காக பதினாறு வயதுடையவளும் கர்ப்பவதியுமான அப்பெண்ணைக் கண்டபடி அடிப்பது எவ்வளவு புத்திசாலித்தனம் என்பதைப் பாருங்கள்! மனைவியர் குற்றம் செய்யலாம். அதற்காக அவர்களை அடிப்பது மிருகத்தன்மையே யன்றி வேறல்ல. அத்தவறுகள் மீண்டும் அவர்களிடம் நிகழாதபடி மாற்றுதற்கு வேறு மார்க்கமில்லை போலும். சாந்தமாக - வேடிக்கையாக - சொன்னால் அவர்கள் தம் பிரியம் போல் நடப்பார்களே. " இன்சொலாலன்றி இருநீர் வியனுலகம் வன்சொலாலென்றும் மகிழாதே.'' என்பது ஆன்றோர் மொழியல்லவா. நல் வார்த்தையால் எத்தகைக் காரியத்தையும் சாதித்துக் கொள்ளலாமே. இதை யுணராமல் அநியாயமாய்ப் பெண்களை அடிப்பதும் உதைப்பதும் வைவதும் எவ்வளவு தகாதகாரியங்கள். அப்படிச் செய்வதால் - அடிப்பதால் பெண்கள் நல்வழிப்பட்டு விடுவார்களா? அப்படி நல்வழிப்பட்டிருக்கிறார்க ளென்பதற்கு யாவரேனும் திருஷ்டாந்தம் காட்டமுடியுமா?

ஸ்திரீகள் மிகவும் தவறான காரியங்களைச் செய்கின்றவர்களா யிருக்கக்கூடும். அறிவீனமாக விருக்கின்றனர் என்பது மெய்மையே. இது பற்றியே பல தவறுகளைப் புரிகின்றனர். அப்படிச் செய்வதற்குக் காரணம் புருஷர்களே யாவர். பெண்களுக்குப் போதுமான கல்வியறிவில்லாமையே பிழை புரிவதற்குப் பெருங்காரணமாகின்றது. மிக்க கல்வி கற்றோர்களும் பிழைப்படுகின்றனரெனின் பேதைப் பெண்களைப் பற்றிப் பேசுவதென்ன? புருஷர் பெண்களுக்குப் போதிய கல்வி கற்பிக்க வேண்டும். மனத்தின் கோணலைப் போக்கி நேர்மையை யுண்டாக்குவது கல்வியே யன்றோ? எவ்வளவு அதிகமாகக் கல்வி கற்கின்றோமோ அவ்வளவதிகமாகவன்றோ அறிவு வளரும். கல்வியில்காதோர் கசடராவரென்பதைப் பேசவேண்டுமா? ஆதலின் கல்வியறிவில்லாப் பெண்கள் தங்கள் அறியாமையின் காரணமாகத் தவறுகளைச் செய்யாமலிருத்தல் எவ்வாறு முடியும்?
 

அவ்வாறு பெண்கள் செய்யும் குற்றங்களுக்கு யார் காரண கர்த்தாக்கள் என்பதைச் சிறிது கருத்திலூன்றிச் சிந்தியுங்கள். நல்ல கல்வியும் இல்லை; உலகானுபவமுமில்லை; நற்புத்தி போதிக்கப் படவுமில்லை. ஆகவே, கல்வியில்லாத காரிகையருக்குக் கனிகரத்துடன் சாந்தமாக - அன்பாக – இனிய மொழிகளால் - நல்ல நீதிகளைப் புகட்டி - நற்புத்திகளைப் போதித்து – கற்பிலக் கணங்களைக் கழறி - கற்புடைக் காரிகையார் கதைகளைக் காட்டி – அவர்கள் மனதில் நன்கு பசுமரத்தாணி போல் பதியச் செய்து - இவற்றின் மூலமாக அவர்களைத் திருத்தல் வேண்டும். பிறகு அவர்களிடத்துக் குற்றம் காணப்படின் - அது நியாயமான குற்றமாயிருப்பின் அக்குற்றத்தை அவர்களுக்கு நிதானமாக எடுத்துக்காட்டி - அது குற்றமா? குற்றமல்லவா? என்பதை அவர்களைக் கொண்டே - அவர்கள் வாக்கைக் கொண்டே - தப்பிதம் என்று சொல்லும்படி செய்து - பின்பு இத்தகைய தவறான காரியம் செய்யலாமா? என்று கேட்டால் - அப்பொழுது அவர்கள் அக்குற்றத்தை யுணர்ந்து நாணமடைவர். அச்சமயத்தில் பொறுமையுடன் இனியும் இவ்வாறு நடந்து கொண்டால் நீ துஷ்டப்பெண் - மூடப்பெண் - அறிவில்லாப் பெண் - எனப்பெயர் பெறுவாய். ஆகையால் இத்தகைய பிழைகள் உன்னிடம் உண்டாகாதபடி எச்சரிக்கையா யிருத்தல் வேண்டும் என்றிவ்வாறு அடிக்கடி புத்தி புகட்டிக் கொண்டுவரின் சில காலத்திற்குள் அவர்கள் சீர்திருத்தமடைவார்கள். அதனோடு அவர்கள் சில நல்ல நூல்களையும் வாசிக்கச் செய்யவேண்டும். இங்கு முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இரண்டுண்டு. நன்னடக்கைக்கும் துர்நடக்கைக்கும் சகவாசமே காரணமாகலின், துஷ்ட சகவாசம் நேராதபடி பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். இனி மற்றொரு மிக மிக முக்கியமான விஷயம் யாதெனில், மருமகளுக்குக் கற்பிலக்கணம் கற்பித்து விட்டு மாமியார் வியபிசாரம் செய்தது' போல் மனைவியர்க்கு நல்லொழுக்கங்களை நாத்தழும் பேற நாளும் கற்பித்து விட்டு நாயகர் தீயொழுக்கங்களை மேற்கொண்டு ஒழுகாமல் எச்சரிக்கையோடிருக்க வேண்டும். (இங்கு கணவருடைய தீயொழுக்கமென்றது: - கள்ளுண்ணல், களவாடல், பொய்ம்மொழி புகலல், அகாரணமாக, ஆண்டையின் கோபத்தைக் கிடாவின் மேற்காட்டியது போல' மனைவியரைக் கோபித்தல், இவையனைத்தினும் விசேஷமாக வியபிசாரம் செய்தல் முதலியனவாம்.)
 

இவ்வாறு சில காலம் செய்து அதனாலும் சீர்திருத்த மடையாவிடின், அவர்கள் மீது வெறுப்புக் கொள்வது போல் காட்டல் வேண்டும். சாதாரணமாகப் பெண்கள் எதை இழக்க நேரினும் நாயகரது அன்பை இழக்க உடன்படாராகலின், இதனால் அவர்களை நாம் வழிப்படும்படி செய்து விடலாம். இந்தக் காரியம் செய்தால் நம் கணவருக்கு நம்மீது வெறுப்புண்டாகுமென்றறிந்தால், மீண்டும் அவர்கள் அக்காரியத்தைச் செய்யத் துணியார். இதனாலும் அவர்கள் நல்வழிப்படாராயின் அவர்களோடு சம்பாஷித்தலையகற்ற வேண்டும். 'நீ குணவதியாவாய் என்றிருந்தேன்; எத்துணை புத்தி புகட்டினும் நீ நல்வழிப்பட வில்லை; நீ எனக்கு உதவாய்; ஆதலின் உன்மீது கொண்டிருந்த அன்பு மாறுபட்டது; இனி, உன்னுடன் பேசேன்' எனக்கூறிவிடின் நல்வழிப்படலாம். அப்படியும் கேளாவிடின் அடிக்காமலென்ன செய்வது? எனின், இவ்வளவில் படியாதது அடியாலும் படியாது. ஆகையால் அடிப்பது பயன் தராது. நயத்தாலும், பயத்தாலும் சரிப்படுத்தி வாழ முயல வேண்டும்.

 

அன்பர்களே! இந்த வியாசம் இத்துடன் முடிவுறுகிறது. இந்த, 'மாதரும் குடும்பமும்' என்னும் வியாசத்தால் நாமறிந்து கொள்ள வேண்டியதுயாதெனின், மனிதர் கூட்டமாக ஒருவர்க்கொருவர் உதவி செய்து வாழுமியல்புடையவரென்றும், அதன் பொருட்டே இல்லறம் சிறப்புடைய தென்றும், இல்லறத்திற்கு ஆண் பெண் என்னும் இருபாலரும் இன்றியமையாதவரென்றும், இருபாலாரில் ஆண்கள் வெளிக்காரியங்களுக்கும் பெண்கள் வீட்டுக்காரியங்களுக்கும் உரியவர்களென்றும், ஆகையால் அவர்களே இல்லறத்திற்குரியவையாய சுற்றந்தழால், விருந்தோம்பல், அடக்கம், பொறுமை, சிக்கனம், பெரியோரை உபசரித்தல் முதலாய நற்குண நற்செய்கைகளையுடையோராயிருத்தல் வேண்டுமென்றும், அவ்வாறு இருத்தற்கு அவர்களுக்குக் கல்வி அவசியமென்றும், புருஷர் மாதரை இழிவாகக் கருதி நடத்தலாகாதென்றும், அவர்கள் குறைபாடுடையவர்களாயின் அவர்களை நற்போதனையால் சீர்ப்படுத்த வேண்டுமென்றும், இன்னோரன்ன பிறவும் அறியப்பெற்றாம். ஆகவே, இவ்வாறு நம் பெண் மக்களை நன்மார்க்கத்திற் பழக்கிப் பல துறைகளிலும் முன்னேற்றமடையச் செய்வோமாயின் நம் நாடு பண்டைய நிலைமையையெய்தும், இல்வாழ்க்கையும் நல்வாழ்க்கையாம். எங்கும் ஆனந்தம் பொங்கும். செல்வம் மல்கும். சந்தோஷமும், சமாதானமும் சந்ததம் மிளிரும். இறைவனருளும் எளிதில் எய்தும்.

 

முற்றும்


 பூ. ஸ்ரீநிவாஸன்,

தமிழ்ப்பண்டிதர், சித்தூர்.

 

ஆனந்த போதினி – 1926, 1927, 1928 ௵ -

செப்டம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, ஏப்ரல், ஜுன், ஆகஸ்டு, செப்டம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச்சு, ஏப்ரல், மே, ஜுன், ஆகஸ்டு, ௴

 

No comments:

Post a Comment