Sunday, September 6, 2020

 

மாதரின் தேசபக்தி

 

'ஆவதும் பெண்ணால் அழிவதும் பெண்ணால்'என்பது பழமொழி. குடும்ப விஷயத்திலும், மதாசார அனுஷ்டான வகையிலும், கர்மாதி சுதர்ம விஷயங்களிலும், தேசாதி பாஷாபிவிருத்தியிலும் ஆடவரின் ஈடுபாட்டிற்கு மாதரே தூண்டுகோலாகி நிற்கின்றனர். அனையோரிடத்தில் ஆடவரை ஆட்டவல்ல சக்தி பொருந்தியிருக்கின்றது. ஸ்திரீகள் தாயாகவும், தனையையாகவும், மனைவியாகவும், சகோதரியாகவும் நின்று ஆடவரின் அறிவைப் பெருக்கி வருகின்றனர். புருடர்கள் 'தாயிற்சிறந்த கோயிலுமில்லை' , 'தாய் சொற்றுறந்தால் வாசகமில்லை' என்ற அமுதமொழிப்படி தாம் தோன்றிய தாயகத்தைப் பூசிக்க வேண்டியது. அது அவர்களுடைய தர்மமாகின்றது. தனையை யிடத்துள்ள வாஞ்சையால் அவள் கூறுவது போற்றற்குரிய தல்லவாயினும் தந்தையர் அவளது பிரியப்படி எதையும் செய்து விடுகின்றனர். மனைவி நிலையைப்பற்றி நாமதிகம் கூற வேண்டுவதில்லை. 'கணவன் மனைவியிவர் காணில் உயிருடம்' பாகின்றனர். இருநோக்குடைய மாதரின் இன்பவலையிற் சிக்காதார் மிகச்சிலரேயாவர். 'உன்னையன்றித் தெய்வம் உலகினில் வேறுண்டோ' வெனக் கொண்டாடும் ஆடவர் பாரினி லெத்தனையோபேரிருக்கின்றனர். இனி, சகோதரிப்பான்மையை யுற்று நோக்குங்கால் அவனியிலுள்ள மாதரனைவரும் சகோதரிகள் என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்தியது பாரதபூமியாதலின் அதனை நாமிங்கு விவரிப்பது மிகையேயாகும். ஆகவே நாம் பிரபஞ்ச வாழ்வில் தகுதி வாய்ந்த எவ்வித மனோபாவத்தால் நோக்கினும் மாதரின்றி யாதுமில்லை யென்பது நமக்கு அனுபவ சித்தாந்தமாம்.

 

பாரதபூமி மாதர் நிறைந்த இல்லம்! இப்புனித வீட்டில் கற்புக்கரசியார் பலர் திகழ்ந்தனர். தனையன் போரில் புறங்காட்டியோடாது வீரனாகிப் பகையாளின் வாளுக்கிரையாயினன் என்பதைக் கேட்டு மனமகிழ்ந்த வீரத்தாய்மார் பலர் இந்நாட்டில் விளங்கினர். கானம், தியானம், ஞானம், மானம்யாவும் பாரத மாதரிடத்தே தோன்றி நிலவின. அன்று மாதராற் சிறந்த பாரதபூமி அந்தோ! இன்று பேதைமை நிறைந்ததா யிருக்கின்றது. உணவிலும் உடையிலும், உல்லாசத்திலும், பேச்சிலும் ஏனைய ஒவ்வொன்றிலும் நாகரீகம் கலந்து, நாடு கெட நவீனம் முற்பட்டது; காற்று முதல் கலந்தது நவீனம்; போற்று மிப்பூமியில் புகுந்தது மதியீனம்; நன்மைக்கிடமான இந்நாட்டில் புதுமை புறப்பட்டுப் புகழையடக்கிப் புன்மையைத் தொடுக்கின்றது. இக்கொடுமைகளுக்குத் தாளாத பாரத அன்னை கண்ணீர் வடிக்கும் பள்ளத்தாக்காயிற்று நம்நாடு!

 

ஆதலின் தேச முன்னேற்றத்தைக் கருதி சக்தி ஸ்வரூபமான ஸ்திரீகள் அசக்தியை எதிர்த்து முன்வரவேண்டும். பிரபஞ்ச உற்பத்திக்கே காரணராய் விளங்கும் அம்மாதரிடத்தே தேசசேவை புத்துயிர் பெற்றெழ வேண்டும். கீர்த்தியையும், பதவியையும் விரும்பிப் பேச்சிலொன்றும், உள்ளத்தில் மற்றொன்றுமாகக் குறுகிய நோக்கத்துடன் தேசபக்தரெனத் திரிவோரை மாதர்கள் தமது வல்லமையால் உண்மைத் தேசாபிமானிகளாக்க வேண்டும்; தேசாபிமானமே யற்றவர்களுக்குத் தமது இன்பவசனாம்ருதத்தில் அதைக் கலந்தூட்ட வேண்டும்; தாம் கதருடுத்திக் காந்திநாள் கொண்டாடி ஆடவரை அவ்வழித்திருப்ப வேண்டும்; மதுபானத்தால் துட்டுச் செலவிட்டுக் கெட்டலைந்து வறியராகும் புருடர்களைத் தம் நுட்ப அறிவால் ஸ்திரீகள் நல்வழிப் படுத்துதலும் சிரமமன்று. சமத்துவத்தையும், சகோதரத்வத்தையும் பெருக்கி, நமக்குள் எவ்வித ஜாதிமதக்கலவரமு மற்று ஒற்றுமைப்பட முயலுதல் ஸ்திரீகளின் முக்கிய நோக்கமாயிருக்க வேண்டும். ஒரு சீதையால் இராவண யுத்தமும், ஒரு திரௌபதியால் பாரதப்போரும் நிகழ்ந்தன. அத்தகைய பத்தினிப் பெண்டிரே அவ்வாறானால் நாம் சண்டை கிளப்புவது குற்றமாகுமா? என்ற ஆக்ஷேப சமாதானங்களை ஸ்திரீகள் அடையலாகாது. மேற்கூறிய புராண சம்பவங்கள் தர்மஸ்தாபனார்த்தமாக நிகழ்ந்தனவென் றவர்க ளுணர வேண்டும். வல்லவனையும் சொற்படி நடக்கச் செய்துவிடுஞ் சக்தியுடைய மாதர் சமூகம் தேசக்ஷேமத்தை நினைந்து ஆடவரைத் தம்வழி திருப்புதல் பிழையெனப்படாது. நன்மை பயக்கக்கூடிய விஷயங்களில் மடவார் தமது திறனை - சாமார்த்தியத்தை - சாஹஸத்தை உபயோகித்தல் சாலச்சிறந்தது.

 

பெண்டிர் காங்கிரஸின் நோக்கங்களை யாதரித்துத்தான் நாட்டின் மேன்மைக்குப் பாடுபட வேண்டுமென்பது தாத்பரியமல்ல. வீட்டிலிருந்தே அவர்கள் எவ்விதத்தொண்டு புரிய வியலுமோ அவற்றைச் செய்தாலே போதுமானது. மதாசார தேசாசார விஷயங்களிலும், குலாசார ஒழுக்கங்களிலும் தீயன போக்கி நல்லவை ஓர்ந்து செய்யின் அதுவும் தேசசேவையே யாகும். தாய் நாட்டின் எழில் பெருகும் வழிகளில் ஸ்திரீகள் தேச கைங்கர்யம் செய்தல் உத்தமம். சிறு வீட்டிலுள்ள ஒவ்வொருவரிடத்திலும் இயற்கையாகத்
தேசாபிமானம் எழவேண்டும். அன்னிய நாட்டிலிருந்து வருவனவும், அயல் நாட்டு முறைகளாலுண்டாக்கப் படுகின்றனவுமான சோப்பை உபயோகிப்பதை யொழித்து தாய் நாட்டில் நமது மூதாதையர் கொண்ட மஞ்சளைக் கொள்ளலும், பிறதேசங்களினின்றும் வந்துறும் வாசனைத் தைலங்களை விலக்கி, நமது ஆரிய முறையாற் செய்யப்படும் தைலங்களை யாதரித்தலும் பெண்டிரின் முக்கிய கடனாம். 'மஸ்லின்' துணியிலுள்ள மயக்க மொழிந்து மஹாத்மாவின் மணிமொழிகளுக்குச் செவிசாய்த்து மாதர் கதராடை தரிக்க வேண்டும். அயல் நாட்டுப் பொருள்களை பஹிஷ்கரிக்க வேண்டுமென்பது நமது கருத்தல்ல வாயினும் உள்நாட்டுப் பண்டங்களை ஆதரிப்பது நமது கடமையென்பதை யவர்களுணர வேண்டும். பெண்குழந்தைகளுக்குத் தாய்மார்கள் ஆபாசமான பாட்டுகளைச் சிறுவயதிலிருந்தே கற்பிக்கின்றனர். தேசாபிமானம் சிறு பிராயத்திலிருந்தே பெருக அன்னைமார் தமது சிறுமிகளுக்குத் தேசீய கீதங்களைக் கற்பிக்க வேண்டும். அக்கீதங்கள் பெண்களின் கும்மி போன்ற கேளிக்கைகளுக்குத் தக்கவாறே அமைந்திருக்கின்றன. மற்றும் மாதர் வீட்டு வேலைகளைச் செய்யும் நேரம் போக, வீண்பொழுது போக்கி ஊர்வம்பாடி யுழலும் புராதன வழக்கத்தைவிட்டு, புது நாகரீகமாக இராட்டினத்தைக் கொண்டு நூல் நூற்க வேண்டும். அது தாகத்திற்குத் தண்ணீர் பருகினது போலும் தம்பிக்குப் பெண்பார்த்தது போலும் 'ஆவதுடன் நாலுகாசு கிடைத்ததாகவும், நாட்டிற்கு நன்மை புரிந்ததாகவும் ஆகும்.

 

சகோதரிகளே! 'தாய் நாட்டிலன் பிலார்க்குத் தருமமில்லை; கருமமுமில்லை என்பது இசை வாக்கியம். உங்களைத் தேச சேவைக்கழைக்க, கல்வியிலும், புத்தியிலும், செல்வத்திலும், ஒழுக்கத்திலும் உயர்ந்த உத்தமி ஸ்ரீமதி சரோஜினி தேவி முன்வந்தது உங்கள் சமூகஞ் செய்த தவப்பயனே யாகும். சீமைக்குச் சென்று பரீக்ஷைகளிற்றேறி நாட்டின் பரிதாபஸ்திதியைக் கருதி அடிகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்றித் தம் வாழ்நாட்களை யர்ப்பணஞ் செய்து. அரிய தொண்டியற்றி, அகில இந்திய காங்கிரஸ் மஹாசபையில் அக்கிராசனம் பெற்று, வலிகுன்றாதோதும் அத்தேவியின் திவ்யமொழிகளைக் கேளுங்கள். உங்கள் சமூகமே அன்னையின் அறப்பணியிலாவல் கொள்ளட்டும்; வீணில் நீங்கள் நவீனங் கொண்டாடுவதிற் பயனில்லை.

 

ஆதலின் சகோதரிகளே! விழிமின்! எழுமின்! கருதிய கருமங் கைகூடும்வரை உழைமின்! உணர்மின்! தேசத்தில் ஆனந்தம் பொங்க 'ஆனந்த போதினியின் பதின்மூன்றாமாண்டு தொடங்க, ஆனந்தத்தை வாசித்து ஆனந்தமடைய, பொங்கும் மங்களம் எங்கும் தங்க, அவள் திருவருளைப் போற்றுவாம்.

 

      ஸ்ரீ. வெ. வ. திருமுக்கீச்சுரம்.

 

ஆனந்த போதினி – 1927 ௵ - ஜுன் ௴

 

 

 

 

No comments:

Post a Comment