Sunday, September 6, 2020

 

மாம்பழக்கவி

 

முருகப்பெருமான் படைவீடுகளில் ஒன்றாகிய திருவாவினன் குடி என்னும் பழநித்தலத்தைப் பெருமைப் படுத்தும் தண்டாயுதபாணியின் திருவருட் பிரசாதம் பெற்றுச் சிறப்புடன் வாழ்ந்த நாற்கவிச்சிங்கமென்ற பட்டம் பெற்ற புலவராவர் மாம்பழக்கலி'என்பவர். இவரது புலமையையும் பெருமையையும் நக்கீரன், அருணகிரி இவர்களுடைய புலமையுடன் சீர்தூக்கின் ஏறக்குறையச் சமானமென்றே கூறலாகும். இவர் விசுவகர்மா குலத்தில் உதித்து அக்குலத்தின் திலகமென விளங்கினர்.

 

இவரது மூதாதையர்கள் சிறந்த சிற்ப சாஸ்திரப் பயிற்சி பெற்றவர்களாய்ப் பாண்டிய நாட்டில் நடத்தப்பட்ட சிவாலயத்தின் பணிகளில் நாயக்கர் அரசர்களிடம் பரிசும் கீர்த்தியும் பெற்றவர்கள்; நாயக்கர் திலகரான திருமலை நாயக்கரால் சூட்டப்பட்ட மாம்பழம்'என்ற சிறப்புப்பெயர் இவர் குலத்தில் வழி வழி வம்சமாக அப்பெருமையை நினைப்பூட்டும் பட் டப்பெயராய் விளங்கி வந்தது. மாம்பழக்கவியின் தந்தையார் முத்தையாசாரியார் என்பவர் கல்வி கேள்விகளில் சிறந்து, பொலன் நலம் மிகுதியாய், அறந்தாங்கி, விருந்தோம்பி, குலநலமுடைய குணவாரிதியாய், விசவக்ரமா மரபினர்க்குள் வள்ளலாய் வாழ்ந்த செல்வந்தழைத்த சீலர். பழநியம்பதியின் அருட் பெருஞ் சோதியாம் ஆறுமுகப் பெருமான் இணை யடி மலர்களில் வற்றாத பற்றுடையவர். இத்தகைய பக்த சிரோன்மணிக்கு சுமார் 80 வருடங்களுக்கு முன்னர் மாம்பழக் கவிராய ரிரண்டாவது புதல்வராய் பிறந்தனர். குலாசார வழக்கப்படி இக்குழந்தைக்கும் 'மாம் பழம்' என்ற பெயர் இயற்கையாய் புனையப்பட்டது.

 

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாய் அருமை பெருமையுடன் வளர்ந்த புதல்வனின் பொலிவையும், வாக்கு சாதுரியத்தையும் கண்டு முத்தையாசாரியார் மிகவும் அகமகிழ்ந்து வருநாளில், பழநிப்பதியில் பரவிப் பிணித்த வைசூரி யென்னும் நோய், மூன்று வயதுள்ள சிறுவனையும் பற்றியது; வைசூரியின் கொடுமை சொல்லொணா விதமா யிருந்தது பற்றி, தாய் தந்தையர்களின் மனம் எரிவாய்ப்பட்ட மெழுகென வருந்தியது. மணி மந்திர ஒளஷத முதலிய பலவகையானும் குழந்தைக்கு சுகமுண்டாக்க முயன்றும் பலனில்லாது நாளுக்கு நாள் கிலேசத்தையே கொடுத்து வந்த தன்மையைக் கண்ட முத்தையாசாரியார் நம்பிக்கை யிழந்தவராய் தெய்வத்தாலன்றி வேறு வழியில்லை யென உறுதிகொண்டு, மஞ்சள் படுத்திய ஒரு துணியில் ஒரு ரூபாய் முடிந்து 'பழநியாண்டவன் பிச்சை யிவனாகும்' என திருநீறு தூவினர். அன்றிரவே மலைக்குச் சென்று அருச்சனை முதலிய ஆராதனை செய்து, மனைவி மக்களுடன் சன்னதியின் முன் நின்று, அப்பனே! ஆண்டவனே! அருட்பெருங்கடலே! அனாதிரட்சகனே! அறியாப் பாலகன் அவதியை யகற்றிடாய்! பாலன் படுந் துயரம் பார்க்கச் சகிக்கிலேன்! மனமிரங்கி மகவிற்குச் சுகமளித்திடாய்! உன்னையன்றி யுற்றதுணை ஒருவரு மில்லைகாண்! உயிர் பிச்சை ஈயும் உமை பாலகனே! அம்மையின் கொடுமையை அகற்றுவதுன் கடன்! ஐயனே! மெய்யனே! ஆறுமுகத் தண்ணலே! வையகம் புகழும் வையாபுரியோனே! எனப் பலவாறு போற்றி வருந்தி யிரங்கி கண்களில் நீர் சொரிந்த வண்ணமாய்ப் பெருமான் பாதத்திலீடுபட்ட நிலையில் நின்றுவிட்டனர். அச்சமயத்தில் மாம்பழம் கவலை உறன்மின்' என்ற சொற்கள் தன் காதிற் கேட்டதென நினைத்துப் பரவசமாயினர். கடவுளிடமிருந்த பக்தி வெள்ளம் கரை கடந்து செல்ல, ஆனந்தக் கண்ணீரைப் பெரிதும் பெருக்கினர். ஐயனை மறுபடியும் போற்றினர். தீனதயாளனெனச் சேவித்தெழுந்தனர். இருகரங்களினாலும் பிழை பொறுத்தாளும் பெருமானே' என்று கன்னங்களில் அறைந்து கொண்டனர். சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்த வண்ணமாய் தோத்திரம் பாடிப் பரவிப் போற்றினர். பின்னர், திருவருட் பிரசாதம் பெற்று வீடு திரும்பி கடவுள் கட்டாயம் கருணை புரிவார்' என்ற தீவிரமான மனத்திட்பத்துடன் இரவைக் கழித்தனர். மறுநாட் காலையில் வைசூரியின் கொடுமை குறைந்து காணப்பட்டது. கூடக் குழுமியிருந்தவர் பலரும் பயமில்லை எனப் பகர்ந்தனர். தாய் தந்தையர் வயிற்றினில் பால்வார்த்த தொப்ப விருந்தது இவர்களின் வாய்மொழி.

 

அந்தோ! என்ன அற்புதம்! சிறுவன் முருக நாமத்தின் உருசியை உட்கொண்டானென்ன சதா சர்வகாலமும் இடைவிடாது முருகா - முருகா - முருகா என்று உபசரித்த வண்ணமா யிருக்கக் கண்டனர். கூப்பிட்ட குரலுக்கு பதில் அளிக்கும் போது, முருகா என்று ஆரம்பித்து பதில் பகர்ந்த பின்னர் முருகா 'என முடிப்பதையுங் கண்ட தகப்பனாருக்கு, ஆண்டவனிடம் மனம் செல்லாநின்றது. இரண்டொரு நாளில் வைசூரியின் சின்னங்கள் வாடி வடுவிடக் கண்டனர். ஆயினும், குழந்தையின் கண்களில் ஒளி குன்றியிருப்பதை அறிந்த தாய், தந்தைக் கறிவித்தனள். தகப்பனாரின் கவலைக்குக் கரையேயில்லை. குழந்தை கண்ணிழக்கத் தான் செய்த தீவினை யென்னவோ? கடவுளின் கருணையிலும் இக்குறை காண்பதென்னே! வம்பன், மாயன், மருகன் இவனே! என்று முருகனிடம் கவலையை முறையிட்டனர். அன்றிரவிலே சோமவாரத்தன்று அர்த்தஜாம அவசரத்துடன் கருணாநிதி முத்தையாசாரியாரின் கனவிற்றோன்றி கண்ணிழந்த குழவிக்கு மதியின் வளம் பெரிதும் உவந்து தந்துளேம். கஷ்டகாலம் கண்ணோடு போயிற்று. விதியின் வலி பெரிதாயினும் மதியின் வலி இப்பாலகனிடம் காணுதி' என்று சொல்லி மறைந்தனர்.

 

முத்தையாசாரியார் தினந்தோறும் கர்மானுட்டானஞ் செய்த பின்னர் ஆண்டவனைத் தொழுது விபூதிப் பிரசாதம் அளித்து வந்தனர். கண்ணிழந்த குழந்தையிடம் கரிசனம் காட்டி வந்தனர். தான் சொல்லி வந்த தோத்திரங்களைக் கூடச் சொல்லக்கண்ட தந்தைக்குக் குழந்தையினிடம் ஒரு பிரேமை யுண்டாயிற்று. இனிமையான மதலைச்சொற்களைக் கேட்டு மகிழ்வதோடு, அதனப் பிரசங்கமான வார்த்தைகளையே காணாத ஒரு தன்மையைக் கண்டு வியக்கவும் செய்வர். ஐந்து வயது வரவும், பிள்ளையைப் பள்ளிக்கனுப்புந் திறனில்லையே யென்று வருந்தினராய், நல்லதோர் நாளில் சுபக்கிரகங்களின் வீட்சனியமுள்ள இலக்கினத்தில் தாமே அட்சராப்பியாசம் செய்வித்து ஒவ்வொரு எழுத்தையும் முறைப்படி உச்சரித்து, அவைகளின் வரிவடிவை முதுகில் எழுதிக்காட்டினர். இரண்டோர் நாளில் முதல் எழுத்தாகிய உயிர்மெய் முப்பது எழுத்துக்களின் ஒலி வடிவையும் சொல்லிக்கொண்டு வரிவடிவுகளை ஓர் கற்பலகையில் வரிகோணாது மல்லிகை மொக்கென அழகுற எழுதக்கண்டு ஆனந்த பரவசம் கொண்டனர். தந்தையார், என்னே பெருமானின் கருணை!

 

கல்விபயிலும் பருவம்: - வீட்டிலேயே உபாத்தியாயரை ஏற்படுத்தி வைத்துக் கல்வி பயில்வித்து வருநாளில் ஒன்பது வயதிற்குள், இலக்கண இலக்கியங்களில் வல்ல புலவர்களும் கேட்டு ஆனந்தமும் ஆச்சரியமும் அடையும்படியான புலமையும் சாதுரியமும் அவரிடம் விளங்கின. ஒரு தரம் படிக்கவோ, சொல்லவோ கேட்ட எந்த விஷயத்தையும் பிழையின்றித் திருப்பி அவ்வாறே சொல்லும் “ஏகசந்த கிராக்யம்' என்ற சக்தி அபாரமாய் விளங்கினதும் தெரியவந்தது. ஆனதுபற்றி மாம்பழக் கவிராயருடைய வீட்டு உபாத்தியாயர்கள் கணக்கில் அகப்படமுடியாது. ஒருவராவது இவருக்குச் சேர்ந்தாப்போல் ஒரு மாதங் கூட உபாத்தியாயரா யிருந்ததில்லை. மேனாட்டு ஆங்கிலப் புலவர்களுள், மில்டன், (Milton), போப், (Pope), மெக்காலே (Mecaulay) முதலியவர்கள் போன்று இவர் பன்னிரண்டு வயதிற்குள் தாய்ப்பாஷையிலும், பிறபாஷையிலுமுள்ள சிறந்த நூல்களின் நுட்பா நுட்பங்களை நன்கு தெரிந்து கொண்டனர். எப்பொழுதும் வீட்டில் வடமொழி, தென்மொழிப் புலவர்கள் உண்ண, உடுக்க, ஒதுங்க, உறங்க வேண்டிய சமயம் நீங்கலான மற்ற வேளைகளில், கூட்டம் கூட்டமாய்க் குழுமியிருப்பதே வழக்கம். இவர்கள் சபையில் யானைக் கூட்டங்களினிடையே யிருக்கும் சிங்கக்குட்டி போன்று விளங்கினர் மாம்பழக்கவி. இத்தகைய அற்புத அறிவின் வளத்திலே ஈடுபட்டு மிகுந்த மனமகிழ் வெய்தினர் முத்தையாசாரியார். 'மாம்பழம்' என்ற பெயருக்கொப்ப யாவரிடத்தும் மாதுரியமாய்ப் பேசியும், வினயத்தோடும், சாதுரியத்தோடும், கற்பனாசக்தியோடும், புலமையோடும் கூடிச் சிறந்து உறவாடினர். பாண்டிய நாட்டிலுள்ள புலவர் பலரும் இவரைக் காண்பான் வரத்தொடங்க மாம்பழம் ஞானச காந்தம் என விளங்கினர்.

 

'மாம்பழக் வி'ராயருடைய தீவிர புலமையைக் கண்ட அனேகர் இவருக்குச் சீடராய் அமர்ந்தனர். கவியியற்றும் ஆற்றலும் இவரிடம் திகழ்ந்தது. பழனியாண்டவன் பாதகமலங்களில் வம்சபரம்பரையை ஒட்டி, பாமாலைகள் சூட்டிப் போற்றலாயினர். ஞானாசிரியனான முருகனையே தன் குருவெனமதித்திருந்த மாம்பழக்கவி 'ஆறுமுகப் பெருமானை முன்னிட்டே எந்தக் காரியத்திலும் பிரவேசிக்கும் வழக்கத்தைக் கைக்கொண் டார். கட்புலன் குறைந்ததினால் ஏகாக்கிரக சித்தம் தானே கைகூடிற்று. இந்தச் சக்தியின் (Concentration) பெருமையை விரிக்கிற் பெகுகும். இவர் கண்ணில் ஆதவனெனக் கற்றவர்களின் சபைகளில் விளங்கினர். சிலநாட்கள் சென்றதும், பேரும் புகழும் பெற விரும்பியதினால், சிஷ்யர்களுடன் இராஜ சம்ஸ்தானங்களுக்குச் சென்று தம் புலமையைத் தெரியப்படுத்திப் பரிசுபெற வேண்டுமென்றும், தம்முன்னோர்கள் சிற்பசாஸ்திரப் பயிற்சியிற் றேர்ந்தவர்களாய் மன்னர்கள் ஆதரவைப்பெற்ற வவ்வாறே கல்வி, கேள்விகளிற் சிறந்தாரெனப் பெயர்பெறும் பாக்கியம் பெரிதெனவும் மதித்தனர். எந்தப் புதிய நூலையும் ஒருதரம் வாசிக்கக் கேட்டதும் அது ஒரு பழைய நூல் என்று சாதிக்கும் சாதுர்யமும், சாமார்த்தியமும் தம்மிடமுளதெனத் தெரிந்து கொண்டு 'மாம்பழக்கவி இராமநாதபுரம் ஜமீன் இறைவர் முத்து ராமலிங்க சேதுபதியின் சகோதரரும், பாண்டித்துரைத் தேவரின் தந்தையும், தமிழபிமானியும், புலமை பெற்றவருமான பொன்னுசாமித் தேவர் சபையை நெருங்க விரும்பித் தமது சீடர்களுடன் இராமநாதபுரம் சென்று ஓர் விடுதியை அமர்த்திக்கொண்டு அதில் சின்னாட்கள் தங்கியிருந்து சமஸ்தானத்தை அணுக வேண்டு மென்ற தம் விருப்பத்தை அவ்வூர்ப் புலவர்களிடம் தெரிவித்தனர்.

 

கண்ணில்லாதவரை இராஜசமுகத்தில் வரவேற்பது இலௌகீக வழக்கத்திற்கு விரோதமென்று மதித்த புலவர்களுக்குத் தம் புலமையின் வளத்தைத் தெரிவிக்கச் சமயம் வாய்க்கு மெனக் காத்திருந்தார் சிலகாலம். சமஸ்தானத்தில் கேட்ட வோர் கேள்விக்கு விடை கொடுக்க முடியாது மயங்கிய புலவன் ஒருவன், மாம்பழக்கவியின் உதவியைக் கொண்டு மறுமொழி கூறிப் பரிசுபெறும் சமயத்தில் நடந்த விருத்தாந்தங்களை அப்புலவன் பொன்னுசாமித் தேவருக்குச் சொல்லவும் உடனே மன்னன் மனமகிழ்ந்து, மாம்பழக்கவிராயரை வரவேற்றனர். அவர் வந்ததும் வினடத்தாலும், சாதுரியத்தாலும், புலமையினாலும், முருகன் அருட் பிரவாகத்தாலும் பொன்னுசாமித் தேவருக்கு மனமகிழ்ச்சியும் அன்பும் உண்டாகச் செய்தனர். அன்று முதல் சமஸ்தான வித்வசிரோன்மணியாய் மாம்பழக் கவிச்சிங்கம் 'என்ற பட்டப்பெயர் புனைந்து விளங்கினர். பொன்னுச்சாமித் தேவருந் தமிழில் தேர்ந்த விற்பன்னரானது பற்றி சதாகாலமும் மாம்பழக் கவிச்சிங்கத்தோடு சேர்ந்து இருக்க விரும்பினர். அவ்வக்காலங்களில் சங்கீதம், பரதம், தர்க்கம், மீமாம்சம் முதலிய கலைகளில் தமக்குள்ள விசேஷப் பயிற்சியைச் சமயோசிதமாக உபயோகித்ததைக் கண்டும், சம்பாஷணையிலும் பாட்டிலும் செறிந்துள்ள சதுரியம் (Wit) வேடிக்கை (Humour) புலமை கற்பனைகளைக் கண்டும் காதல் கொண்டதே இவரிடம் இறைவன் காட்டிய கருணைக்கும், வண்மைக்கும், ஆதரவுக்கும் முக்கிய காரணம்.

 

இவ்வாறு இராமநாதபுரத்தில் மன்னர் ஆதீனத்தில் புகழுடன் சன் மானங்களும் ஏராளமாகப் பெற்று இருக்க விரும்பிய இவரின் விருப்பத்தைக் கைகூட்டிய முருகன் பாதங்களில் இவர் புதிது புதிதாகப் பாமாலை சூட்டிச் சேவித்து வந்தனர். பாமபழக் கவிராயர் வாயில் வந்த வார்த்தைகள் வாய்மையோடு சிறந்து விளங்கின. காளமேகப் புலவர் போன்று ஆசுகவி சொல்வதில் இவர் விசேஷவன்மை பெற்றிருந்தனர். திரிபு, மடக்கு, இயமகம் முதலிய சாதுரிய சாதனங்களின் திறம் இவரிடம் நிரம்பியிருந்தது. யூகத்தினாலே எதையும் கண் முன் கண்டவர் போன்று கற்பித்துக் கூறும் சாமர்த்தியமோ சிறந்திருந்தது. இவ்வாறு இவர் மனவமைதியோடிருந்த நாளில் பல தேசங்களுக்கும் சென்று ஏனைய புலவர்களுடன் உறவாட வேண்டுமென்ற எண்ணம் இவருக்கு எவ்வாறோ உண்டாயது. அதனால் பொன்னுசாமித் தேவரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு கற்றோர்க்குச் சென்ற விடமெல்லாம் சிறப்பு' என்றபடி, எங்கெங்கே சென்றாலும் அங்கங்கே அருமை பெருமையுடன் வரவேற்கப்பட்டு, சன்மானங்களும் பரிசுகளும் அளிக்கப்பெறுவர் புலவர்கள் என்ற தைரியத்துடன் மாம்பழக்கவிச் சிங்கம்' தம்குழாத்துடன் திருநெல்வேலி, திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர், தஞ்சாவூர் முதலிய விடங்களுக்கும், தொண்டை மண்டலத்திலுள்ள விசேஷத் தலங்களுக்கும், சென்னப்பட்டணத்திற்குஞ் சென்றனர். சென்ற விடங்களில், ஆங்காங்குள்ள பிரபுக்களுக்கும், உத்தியோகஸ்தர்களுக்கும் சீட்டுக்கவி யனுப்புவர். தமக்குத் தேவையானவைகளை அவர்களிடம் பெற்றுக்கொள்வர். ஒருவன் தன் பெருமைகளைத்தானே சொல்லிக் கொள்வது தற்கால நாகரீகத்திற்கு ஒருவாறு விரோதமெனத் தோற்றும் என்றாலும், யுத்தகளத்திலும், நியாய ஸ்தலங்களிலும், தெரியாத ஓரிடத்திலும் தன்னைத்தான் இன்னானெனத் தெரிவித்துக் கொள்வது அத்தியாவசியம். மேலும், புலவர்கட்குச் சீட்டுக்கவி மூலமாய்த் தம் திறமையைப் பிறருக்குத் தெரிவிப்பது பண்டைக்காலந் தொடங்கி வழக்கத்தில் வரும் மரபு. இக்காலத்திலும் புலவர்களுக்கு இதுவழுவு அல்லவென்பது துணிபு.

கவிச்சிங்க மென்ற பெயரைத் தமிழ் உலகில் நாட்டிக்கொண்டு கல்விக்கொடியுயர்த்திய மாம்பழக்கவிராயர் பழனியம்பதியை விட்டுப் பெயர்ந்து போய் ஏறக்குறையப் பத்து வருஷகாலமாயிற்று. அதனால் அவர், தாய் தந்தையரை வயது காலத்தில் பிரிந்திருக்க மனமாற்றாது ஊருக்குத் திரும்பினர். இப்போது அவருக்கு வயது சுமார் இருபத்தேழு இருக்கலாம். அதன் மேல் அவர் வேசையர்தம் மயல் போக்கி, வாழவிரும்பித் தம் மரபில் நெருங்கிய பந்துக்களுக்குள் ஒரு பெண்ணை மணம் புரிந்து சுகமே யில்லறம் நடாத்தலுற்றனர். அப்போ கருமவசத்தால் வந்துற்ற 'மாசுடைய பிணி நீங்க'பழனிக்கோயில் விண்ணப்ப மூலமாகத் தண்ட பாணியைத் துதித்துச் சில காலம் பிணி நீங்கிச் சுகமுற்று வாழ்ந்தனர். 'வறுமைக்குற்றம் நீங்க' ஷண்முகநாதனை இவர் உண்மையான பக்தியுடன் ஆராதித்து வந்த விசேஷ மகிமையால் இளமைப் பிராயத்தில் இவரை ஆதரித்த ஜமீன்தார்களும், மிட்டாதார்களும் இவருக்கு வேண்டியபோது போதிய திரவிய சகாயம் செய்து வந்தனர். 1836 - ம் வருடத்தில் பிறந்த இம் மாம்பழக்கவிராயர் 1884 - ம் வருஷம் மார்ச்சுமாதம் தமது பிராணன் நீங்கும் சமயமறிந்து சூழ்ந்திருந்த சீடர்கள் பந்துமித்திரர்களுக்குத் தெரிவித்து முருகனைத் துதி செய்து கொண்டு பிழை பொறுத்தானாதி' என்ற பிரார்த்தனையுடன் நிர்விகற்பமான மனதுடன் சமாதியிலடங்கினார். மதுரகவி, கவிகுஞ்சரபாரதி, மீனாட்சிசுந்தரம் பிள்ளை, வேம்பத்தூர் பிச்சுவையர் முதலிய வித்வ சிரோன்மணிகள் மாம்பழக்கவிராயர் காலத் திருந்த சிறந்த வித்துவான்களிற் சிலர்.

 

               என். எஸ். ராமச்சந்திர ஐயர், பி. ஏ., எல். டி.

 

ஆனந்த போதினி – 1920 ௵

நவம்பர், டிசம்பர் ௴

 

 

   

 

No comments:

Post a Comment