Sunday, September 6, 2020

 

மாய மகளிரும் – தூய மகளிரும்

(மா. அ. தேவராஜன்.)

 

"ஆனந்தபோதினி” யின் கட்டுரைகளில், "மகளிரைப் பழிப்பது தகுதியா' என்னும் கட்டுரை என் சிந்தனையைத் தூண்டி இக் கட்டுரை எழுதக் காரண மாயிற்று. அதன் ஆசிரியர் அன்பர் - திரு. துரை யவர்கள் சுமார் 10 யாண்டு எதிர் பார்க்கும் விடை என் நினைவில் இருப்பதாயின் அதுவே என் சிந்தனையில் பெற்ற பயன் என் றமைவேன். நிற்க.

 

திரு. துரையவர்கள் செப்பிய எண்ணங்களில் முதற் பகுதி இன்றைய மூதறிஞர்களால் ஏற்றற் கொள்ளற் பாலதேயாம்.

 

மேல் நாட்டுப் பேரறிஞர் கார்லைல் அவர்கள் விரிவுரை ஒன்றிற் கூறி யாங்கு, வெவ்வேறு பால் ஆன ஆணையும் பெண்ணையும் ஒன்றென மதித்து ஏற்றத் தாழ்வு கற்பிக்க முற்படுவது, விரிவு இலா அறிவினார்கள் புரியும் செயலே யாகும். ஆண், ஆண்தன்மையிலும், பெண், பெண் தன்மையிலும் சிறந்ததேயாம். ஒன்று இன்றி மற்றொன்று அமையாது; ஒன் றில்லை எனில் உலகமே யில்லை. எப்படி, உடன் பாட்டு மின் ஒளியோ, எதிர்மறை மின்னொளியோ (Positive and Negative Currents) இன்றேல் மின்சாரம் விளங்காதோ அப்படி என்க. எனவே, ஆணுக்குப் பெண்ணோ, பெண்ணுக்கு ஆணோ அடிமையும் இல்லை; தலைமையும் இல்லை. இரண்டும் உலக அன்னையின் இரு கண்மணிகளே. ஆனால் * உடற்கூறு பாட்டினுல், பெண்கள் ஒருவாற்றில் ஆண்களையும், ஆண்கள் ஒருவாற்றில் பெண்களையும் விஞ்சினவரே. எனினும், இவ்வொரு காரணம் கொண்டே ஆடவர் தம்மைத்தாமே ஆள முற்படாமல், பெண்களையே ஆள முற்படுவரேல் அன்னார் எத்துணைக் கற்றவராயினும், புகழ் பெற்றவராயினும் கேவலம் எளிய அன்றிற் பறவை ஆதியவற்றுக்கும் கீழானவரே என்பது திண்ணம். எப்படி மனைவியைக் கணவன் "வாழ்க்கைத்துணை" என்று சொல்லுகிறானோ, அப்படியே, மனைவிக்குத் தானும் 'வாழ்க்கைத் துணை' என்பதைக் கணவன் அறிந்தொழுகுவதே அறிவுடைமை யாகும். ஆகவே, ஆண்களை உயர்த்திப் பெண்களைப் பழிப்பது அடாத செயலாகும்.

 

* உடற் கூறு வேறுபாடாவன: - பெண்டிற்கு ஆணைவிடக் கருப்பையின் அமைப்பும், மார்பகப் பொலிவும், மென்மைத்தன்மையும், அழகும், நீண்ட குழலும், ஆடவர்க்குப் பெண்ணைவிட வன்மையும், மீசையும், திரண்ட புயமும் பிறவும் வேறுபாடாகும்.

 

எனினும், பெண்ணுலகிற்குள்ளே பலவித ஏற்றத் தாழ்வுகள் உண்டென்பது உண்மை.

 

பிறந்த-புகுந்த அகத்திற்கும் நாட்டிற்கும் நற்புகழ் கொண்டு வரும் நங்கையரும்- கண்ணகியரைப் போன்ற மறக் கற்பரசிகளும் உண்டு. மற்று, மேனி மினுக்கித் தகை செருக்கிப் பிறர் நெஞ்சிற் பேணிப் புணர்ந்து புன்னலம் பாரித்து அன்பின் விழையாது பொருள் விழைந்து பொய்யை மெய்யாக்க் காட்டி வாழும் கணிகையர்க் கழிவடைகளும், 'ஏந்து எழில் மிக்கான், இளையான் .... கேள் எனினும் அயலார் மேல் மன'மாகும் காமப் பேய்களும் உண்டு.

 

இவ் விரு திறப்பட்ட பெண்டிரையே ஆன்றோர் முறையே, "குலமகளிர், அருட் பெண்டிர், தூய மகளிர், பத்தினியர்' எனப் பலவாறும், "விலை மகளிர், பொருட் பெண்டிர், மாய மகளிர், பொது மகளிர்” எனப் பலவாறும் கூறுவர். இவருள், “தூய மகனிரை” உலகமே ஒருமுகமாகப் போற்றுகிறது என்பது, “பத்தினிப் பெண்டிற்கு உயர்ந்தோர் ஏத்தலும்...... என்ற இளங்கோவடிகள் இன்னுரையும், "கற்பு எனும் திண்மை யுண்டாகப் பெறின் பெண்ணிற் பெருந்தக்க யாவுள?” என்ற வள்ளுவர் வாயுறையுமே போதிய சான்றாம்.

 

இத் தெய்வத் திறம் படைத்த செந்தமிழ் நங்கையர், எந்த நூலிலும் பழித்து உரைக்கப்பட் வில்லை. நெஞ்சை அள்ளும் விஞ்சு புகழ்ச் சிலப்பதிகாரமே ஒரு கற்பரசியின் காரணமாய் எழுந்தது எனின், தூய மகளிரைப் பழிக்க எவரும் துணியார் என்பது ஒருதலை. தமிழகத்தின் தனிப் பண்பே, ஆணைத் தலைவன் என்றும் பெண்ணைத் தலைவி என்றுமே கூறுவது ஆதலின், மேற் கூறிய கற்பு என்னும் திண்மை இரு பாலார்க்குமே என்பதும் தெளிவு.

 

இனி மாய மகளிரைப் பற்றி உலக நூல்கள் யாவும் பலவாறு இழித்துப் பேசுகின்றன. காரணம், மாய மகளிரால் உலக சமூதாயமே ஒழுக்கம் பிழைத்து வழுக்கி விழுகிறது. ஆனால் மாய மகளிரைக் கண்டிப்பதில் மட்டுமே, நம் ஆன்றோர்கள் அமைதி கொள்கின்றனரே அன்றி, பன் மாயக் கள்ளப் பாதக ஆடவரைக் காமுகக் காதகரை யாண்டும் மிக வன்மையாகக் கண்டிக்கவில்லை. ஆயினும், நாம் அவரையும் மாய் மகளிருட்ன் சேர்த்தே கண்டிப்போம்.

 

அன்பர் துரையவர்கள் எழுப்பிய ஐய வினாக் கட்டுரையில் *முற்பகுதி'க்குச் சான்றாக எழுதப் பெற்ற பிற்பகுதி வரலாறு, முன் பின் முரண்படுகிறது. எப்படி? மகளிரைப் பழிப்பது - தகுதியல்ல என்று கூறிப் பிற்பகுதியில் பொது மகளான பாஞ்சாலியைப் பழிப்பது மகளிரைப் பழிப்பதே என்று அவர் கொள்வது என் அறிவிற்குத் தகுதியாய்த் தோன்றவில்லை. ஏன் எனில், திரௌபதி கற்பரசி என்பதற்குப் பாரதத்தில் தகுந்த ஆதாரம் இல்லை. இதனைச் சற்றே விளக்கினால், அவர் தம் ஐயப் பாட்டிற்குத் தகுந்த விளக்கமும் அதன் வழிப் பெறப்படும். ஆதலின் பாஞ்சாலியின் வரலாற்றைச் சுருக்கி எழுதுவோம்:


'' மூளார் அழல் உற்பவித்தாள் இவள்முற் பவத்தில்

நாளாயனி என்று உரைசால் பெருநாமம் மிக்காள்.
...... இறந்த பின்னும்........

இந்திர சேனையாய் அந்தப் பதி யடைந்தாள்.
.... அவன் (இந்திரன்) மேல் அவளாசை மிஞ்சி...... தவம்செய்தாள்......ஐந்தானனத்தோன் (சிவன்)
அருள்செய்ய, “ஐந்தான சொல்லால் கணவன் தருக...”
என்றாள்.

 

இப்படி, ஐந்தான போகம் இவள் (நாளாயனி) எய்தியது அறிந்து ஈசன், ஐந்து இந்திரரை அவட்குக் கணவனாய் அளித்தான். அவர்களே பாண்ட்வர்கள். அந் நாளாயனியே பாஞ்சாலியானாள். இதுவரையும் பாஞ்சாலியான நாளாயனி ஒழுக்கம் எப்படிப் பட்டது என்பதை வாசகரே உணர்ந்து கொள்ளலாம். இனிப் பாஞ்சாலியின் சுயம்வர மண்டபத்திற்கு வருவோம். வரிசையாக முடிசூடிய தார் மன்னர் பலர் வீற்றிருக்கின்றனர்.
ஒரு பெரிய நீண்ட வலிய வில் கிடக்கிறது. அதனை வளைத்து ஏற்றி வெல்பவன் யாவனே
ஆயினும், "கலைவலீர், அவற்கே இந்தக் கன்னியும் உரியள்'' என்று அறிவித்தான் திட்டத்துய்மன். பின் அவையோர் மணப் பெண்ணையும்
மாவில்லையும் மாறி மாறி நினைத்து முயன்று தோற்கின்றனர்.

 

அன்பர்களே, இதுவரையும் கூர்ந்து நோக்குவோம். பெண்ணின் காதல் விருப்பம், பெற்றோர் சொற்படி நிகழ்வதன்று. யார் வில்லை வளைத்தாலும் அவருக்கு அவள் மனைவி. வெளிப்படையாய்ச் சொன்னால் அடிமை. இம்முறை, இயற்கையுணர்வால் கொடுப்பாரும், தடுப்பாரும் இன்றிச் செம்புலப் பெய்ந்நீர் போல அன்புடைய நெஞ்சம் தாம் கலந்து காதல் நெறி பற்றிய தமிழர் தம் அக ஒழுக்கத்திற்கு முற்றும் புறம்பானது. இச்சுயம்வர நெறியால் ஒருத்தி, தன் நிறை காத்துக் கொள்ள முடியாது. கற்பு என்னும் திண்மை பெறாள். ஏன்? அவள் எண்ணத்திற்கு எதிராகவே மணவினை முடிவு நிகழ்கிறது. மற்றும், ஒரு பொதுமகளைக் கண்ட கண்டவர் சென்று இன்புற்று வருவது போல், பாஞ்சாலியைச் சபையில் வந்த 56 அரசர்களும் பிறரும் தத்தம் மனத்துள் ஆயிரம் மனக்கோட்டைகள் கட்டி அவளொடு உள்ளில் புணர்ந்து அவள் கன்னித் தன்மையைக் கரவாடினர். இம் முறையும் தமிழர் நெறிக்கு மாறானது. “கற்புடைப் பெண் உர் பிறர் நெஞ்சு புகார்” என்பது தமிழ் மணிமேகலை.


கொண்டோன் தனக்கொரு குற்றம் செய்திலேன்;
கண்டோர் நெஞ்சில் கரப்பஎளி தாயினேன்"


என்று ஒரு தமிழ் மகள், தன்னைப் பிறன் ஒருவன் காம நினைனால் அடுத்த காலையில் வருந்துகிறாள். எனவே, இதுவரை பாஞ்சாலி, தமிழர் ஒழுக்கப்படி கற்புடையவளல்லள் என்பது வெளிப் படை. மணம் ஆன பின்னரும் கூட, பாஞ்சாலி சுயோதனன், சடாசுரன், கீசகன் முதலிய பலர் தம் நெஞ்சில் உருப்பெற்று விட்டாள். இனி வடவர் ஒழுக்கப்படியேனும் பாஞ்சாலி கற்பு தவறாதிருந்தனளா? என்று ஆராய்வோம்.

 

"பார்ப்பான் (பார்த்திபன்) வந்து ஒரு கோடியரசைச் சேரப்பரிவித்துப் பாஞ்சாலன் பயந்த......பாவை தன்னை வலியாற்கொண்டான்'' ஆதலின், பாஞ்சாலி முறையாக அருச்சுனன் ஒருவனுக்கே மனைவியாக வேண்டியவள். இந்நெறி முறை யுணர்ந்தும்,
தன்னிகர் இலாத கேள்வி சான்ற சீர்த்தருமன்' அன்னை தவறியதற்கு வருந்தும் போதும், “நின்சொல் ஆரணப் படியதாகும், நின் நினைவு அன்றால் என் (எங்கள்) நெஞ்சிலும் நினைவுண்டு" என்று ஒழுக்கயீனனாய் உரைத்தும், பின், “கைவரு சிலையின் வென்று கைப் பிடித்தவனுக்கு இன்றே மைவரு கண்ணி" பாஞ்சாலியை, “வதுவை செய்திடுதும்" என்ற யாகசேனன் சொற்கும் நினைவுக்கும் எதிராய் அந்தத் தருமன் "யாங்கள் ஐவரும் (கள்ளவிழ் கூந்தலாளை) வேட்டு (த் தேவர் தெள்ளமிழ்து என்னச் சேர்ந்து அருந்துவோம்)" என்ற முறை கெட்ட வார்த்தைகளையும் நோக்கினால், தருமனே தன் தம்பியின் மனைவியைக் கற்பழிக்க முற்பட்டான் என்பதும், அதற்கு அருச்சுனன் இசைந்தான் என்பதும், திரௌபதியும் தன் கற்புநிலை கெடுவதும் நோக்காது மனம் ஒப்பியதும், இதற்கு முழுதுணர் ஞான வியாதன் துணைபுரிந்தான் என்பதும், பின்னரும், “சரி,க,ம,ப,த,நிப் பாடல் தண்டு தைவரும் செங்கை" நாரத முனிவரும் வந்து, சுந்தோப சுந்தர் கதையைக் கூறி, “நீவிரும் விதியால் வேட் ட நேயம் உண்டேனும், மன்றல் ஓவிய மனையாள் பாஞ்சாலியை, ஓர் ஓர் ஆண்டு, ஒருவராக மேவி நீர் (கலவி) புரியும்; அங்ஙன் மேவு நாள், ஏனையோர் இக்........ கண்ணினாளைக் காணில் ஓர் ஆறு இருதுவும் வேஷமாறிப் புண்ணியப் புனல்களாடப் போவதே உறுதி” என்று அமைதி கூறிய அழகினையும் நோக்கினால், பாஞ்சாலியைக் கற்புடைய பத்தினி என்று கூற யாரே முன்வருவர்?

 

மற்றும், திரௌபதி தன் கொண்கர்பால் எவ்விதம் ஒழுகினள்? என்பதும் ஈண்டு நோக்கத் தக்கது. “அந்தப் பொதுமகள் யாகசாலை நண்ணிய தவற்றாலோ, மற்றுத் தருமன் செய்த பாவத்தாலோ, தருமன், சூதாடித் தன் பொருள்களையும், தம்பியரையும், தன்னையும் முறையே தோற்றுப் பின்னிறுதியாய்த் தனக்கும் தன் தம்பியர்க்கும் பெண்டான பாஞ்சாலியையும் ஒருங்கு தோற்கின்றான். . அதுபோழ்து, சுயோதனன், பாஞ்சாலியை அரசவைக்கு அழைத்து வரச் சொல்கிறான். தேர்ப்பாகன், உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைந்து, “வல்லி யிருந்துழி எய்துறாமல் இடைவழி நின்று மீள” விரைந்து ஓடிவந்து, துரியோதனனுக்குப் பாஞ்சாலியின் வாக்காக “என்னைத் தோற்று மனுநெறி கூர் இசையோன் தன்னைத் தோற்றனனோ? தன்னைத் தோற்றுத் தனது மனத்தளர்வால் என்னைத் தோற்றனனோ? முன்னை தோற்றுத் தோற்ற பொருள் முற்றும் கவரும் முறையன் றிப் பின்னைத் தோற்ற பொருள் கவரப் பெறுமோ? நினைக்கப் பெறாது" என்று கூறுகிறான்,

 

பின் துச்சாதனன் சென்று வீறுடன் பாஞ்சாலியைக் குழற்பற்றி அழைத்து வந்து அவையில் விட்ட பின்னும், “தலத்துக்கு இயையாது ஐவரையும் தழுவித் தழுவித் தனித்தனியே நலத்துப் பொய்யே மெய்போல நடிக்கும் செவ்வி நலன் உடைய” பாஞ்சாலி மீண்டும் மேற்கூறிய கேள்வியையே அவையோரை நோக்கிக் கேட்கின்றாள். இக் கேள்விக்குத் தக்க விடையை (விகர்ணன் ஒழித்து) ஒன்றும் சொல்லாது ஊமர் கணம் போல் இருக்கின்றனர். விகருணனின் வீண் வாதத்திற்கும், பாஞ்சாலியின் வாதத்திற்கும் சேர்ந்தாற்போல், அருக்கன் மகனாயவள்ளல் கன்னன் சரியான மாற்றம் கொடுத்து அவர் வாய்க்கு ஆப்பு அறைகிறான். அஃதாவது,". தான் படைத்த பொருள் அனைத்தும் தம்பியர்கள் உடன் தோற்றுத் தனையும் தோற்றான்; மீன் படைத்த மதிமுகத்தாள் (பாஞ்சாலி) இவன் (தருமன்) படைத்ததனம் (பொருள்) அன்றி வேறே கொல்லோ? வான் படைத்த நெடும்புரிசை மாநகரும் தனது இல்லும் வழங்குமாயின் யான் படைத்த மொழியன்றே எங்கணும் இல் எனப் பட்டாள் இல்லாள் அன்றோ?............மகிதலத்து வேந்தராகித் தொக்கோர் யான் நுவன்ற மொழிக்கு எதிர்மொழி யுண்டாமாகிற் சொல்லுவீரே!" என்பது கர்ணனின் வாதம். இவ் வாதத்தை யாரும் மறுக்கவில்லை. இதுவரையுள்ள நிகழ்ச்சியினால் பாஞ்சாலியின் ஒழுக்கத்தைக் கண்டோம்.

 

நம் தமிழ்கத்திலே, " தான் கொண்ட கணவற்கு உறும் குறை தாங்கி" அறக்கற்பில் நின்று, பின், தன் கணவன் கோவலன் "கள்ளன்” என்று குற்றஞ் சாட்டப்பெற்றுக் கொலைக்களத்தில் வெட்டுண்டது கேட்ட வீரபத்தினி கண்ணகி தேவியார் கற்புக் கடவுள்-வெகுண்டு பாண்டியன் அவையேறி நீதியை நிலைநாட்டி மாதனிப் புகழ் ஈட்டி பாண்டியன் கொடுங்கோலையும், கோவலனுக்கு ஏற்பட்ட பழியையும் ஒருங்கே நீக்குகின்றனர். நம் பத்தினிக் கடவுளைப் போல், பாஞ்சாலியும் அவை ஏறி வழக்காடுகிறாள்.
ஆனால் எதற்காக? தன் கணவர் ஐவரும் அரவக்கொடியோனுக்கு அடிமைகளாகியது அறிந்தும், அன்னார் தன்னை அடிமையாக்கியது ஒரு குற்றம் என்று வழக்காடி, தனக்கு விடுதலை பெற்றுக்கொள்ள! அன்பரே, எண்ணிப் பாருங்கள்:

 

“தகா அக் காலம் தலைப்படும் ஆயினும் பகா அ வுள்ள மொடு" கணவனையே கடவுளாய் எண்ணி வாழ்விலும் தாழ்விலும் அவரொடு வாழ்வதாய்த் தீ முன்னர்ச் சூளுரைத்து மணந்த ஒருத்தி, தன் கணவன் பிறனுக்கு அடிமையாவதை-ஆனதை – நேரில் அறிந்தும், அதற்காக வருந்தாமல் - அவரை விடுவிக்கவும் முயலாமல்-தான் மட்டும் சுதந்திரம் பெற்று வாழ முயலுபவளை நீங்கள் கற்புடையவள் என்று மதிக்கின்றீர்களா? வாழ்க்கைத் துணையாக வந்தவள் நட்டாற்றில் கைவிட்டுத் தான் துன்புறா வழி தேடுபவள் எப்படிப் பதிவிரதை யாவாள்? ஆய்ந்து பாருங்கள்.


இனி அன்பர் துரை கூறிய “ஐம்புலன்களும் போல் பதிகள் ஆகவும் இன்னம் வேறொருவன், எம்பெரும் கொழுநன் ஆவதற்கு உருகும்; இறைவனே எனது பேர் இதயம்; அம்புவிதனில் பெண் பிறந்தவர் எவர்க்கும் ஆட்வர் இலாமையின் அல்லால் நம்புதற்கு உளதோ?' என்றனள் வசிட்டன் நல்லற மனைவியே யனையாள் என்ற வில்லிபாரதச் செய்யுளின் பொருளின் உண்மை யாதென நோக்குவோம்.

 

இப் பாவிற்குத் திரு. துரை அவர்கள் கொண்ட பொருளின் மேல் எழும் வினாக்களாவன: -

 

(1) பலராலும் விரும்பப்பட்ட பாஞ்சாலியைப் பத்தினியாகிய வடமீன் (அருந்ததி) தனக்கு ஒப்பிடுவது சரியா?

 

(2) ஐம்புலன்கள் ஆக ஐவரும் ஆனால் ஆறாவது புலன்ஆன உள்ளம் (அல்லது அறிவு) ஆகும் ஆள் யார்?

 

(3) ஐம்புலனும் உள்ளம் இருந்தாலன்றி இயங்கா. அது போல் ஆறாவது புருஷன் இன்றி எங்ஙனம் பாஞ்சாலியின் ஐந்தான போகம் சிறக்கும்?

 

(4) பதி என்ற சொல்லைவிடக் கொழுநன் என்ற சொல்லே கணவன் என்ற பொருளை நேரிய முறையில் இரு வழக்கிலும் உணர்த்துகின்றது. மற்றும், சிறந்த ஆறாவது ஆடவனை, “பெருங் கொழுநன்" என்று அடை கொடுத்துச் சிறப்பித்து நேறிய முறையிலும், அத்துணைச் சிறப்பிலா ஐவரையும் "பதிகள்” என வறிதே சாதாரண முறையிலும் கூறியதும் உணர்ந்து நோக்கினால், பாஞ்சாலி அறிவுப் புலனாகக் கன்னனை மதித்தாள் என்பது தோன்றுகின்ற தன்றோ?

 

(5) “உருகும்” என்பது உடன்பாட்டு வினையேயன்றி வினாவாகக்கொள்ள இட முண்டோ? “உளதோ?" என்று வினாவை வெளிப்படுத்திக் கூறியவர் ''உருகும்?" என்று கூறியிருப்பாரா?

 

நிற்க. தமிழ்ப்புலவர் கூறிய உரைமேல் எழும் வினாக்கள்: -

 

(1) "பெண்கள் எவரையும் திருப்தி செய்யக்கூடிய ஆட்வ இவ்வுலகில் இல்லை!” என்பது உண்மையா? ஆயின், பெண்கள் யாவரும் இதுவரை ஆதி தொட்டுத் திருப்தி (அமைதி) இன்றியா வாழ்கின்றனர்?

 

(2) பெண்களா, ஆண்களா சபல சித்த முடையவர்கள்? ஆணல்லவோ, பெண்ணின்பச் சபலத்தால் விபசாரம் வெளிப் படையாய்ச் செய்வதும், 60 வயதுக்கு மேலும், புதிய 3, 4-வது தாரம் தேடுவதும் ஓரின்பம் ஆகக் கருதுகிறான்?

 

(3) ஆண்கள் பெண்ணை ஏய்க்கும்போது, பெண்கள் எய்த்தால் குற்றம் என்ன? பெண்ணை விட ஆண் சிறந்தவனா எப்படி?

 

இக் கேள்விகட்கு இவர் தம் பொருட்கோள் இடந்தருகின்ற மையின் இவை நேரிய பொருளாகா. இனி இதற்குப் பொருள் தான் என்ன? எனின் கூறுவோம்.

 

பாஞ்சாலி, சுயம் வரத்தில், எல்லா மன்னரும் வில் வளைக்க முடியாமல் தோற்றுப் போகின்றது கண்டு, தனக்கு ஒரு வழி கிடைக்காதோ? என்று ஏங்கியும், அருச்சுனனாதியரும் இறந்து போய்விட்டனர் என்பது கேட்டிருந்ததால், இனித் தன்னை மணக்கத்தகுந்தவர் விஜயனுக்கு ஈடான வில் திறமையும், அவனினும் மிகுந்த கொடைத்திறம், புகழ், அறிவு, ஒழுக்கமும், ஆட்சியும் உடைய கன்னனே என நினைத்து அவனை நினைத்திருக்கலாம். அதற் கேற்றாற்போல், கருணன் வில் வளைத்து நாணேற்றி எய்து விடுகிறான். அப்போது அவள் நினைவு முற்றுகிறது. ஆனால், நிகழந்தது வேறாகி விட்டதால், அவன்மேல் அன்று கொண்ட காதல் - ஒருதலைக்காமம் - (கர்ணனும் குந்தியின் மகனாதலின், பாண்டவர் தம் சாயையும் அவளுக்கு ஆறுதல் அளித்திருக்கலாம்).
கடைசி வரை அவள் நெஞ்சில் தங்கியது. மற்றும், “கச்சுக் கடங்கா முலையள் ...... கொடுங்காம நோய்கொண்டு இச்சித்த 'சிற்றின்பம் நுகராமல் வாழ்ந்த நாளாயனியே பாஞ்சாலி எனப் படுவதால், பாஞ்சாலியும் கொடுங்காம நோய்க்கு 'விட்ட குறை தொட்டதால்" ஆளாயினவளாய் இருக்கவேண்டும். தருமன் அடிமையான பின்பு, தன்னைச் சூதாடி இழந்தகாலை அதற்கு அவள் ஒருப்படாததும் தன் சுதந்திரத்தில் அவள் கொண்டிருந்த பற்றைக் குறிக்கும். எனவே, அப்பாவின் பொருளாவது: -

 

“இறைவ, ஐம்புலன்போல் ஐவரும் பதிகள் (தலைவர்) ஆகவும், இன்னம் எனது பேர் இதயம் வேறு ஒருவன் (கன்னன்) என்பெரும் கொழுநன் (கணவன்) ஆவதற்கு உருகுகிறது. ஆனால், புவியில் (என்போல்) அம் பெண்ணாகப்) (பெருங் கொடுங்காம நோயினால் வாடும் என் போன்று) பிறந்தவர் எவரையும் திருப்தி செய்யக்கூடியவர் யார்? [ஐம்புல ஐவரன்று. மற்று ஆறாம்புல அருக்கன் மகனே) ஆதலால், (ஐவரில்) ஒருவரேனும் என்னைத் திருப்திச் செய்யக்கூடும் என்று நம்ப முடியவில்லை'' என்றனள், உள்ளதை உள்ளவாறு உரைக்கும் வசிட்டனின் இல்லற மனைவி அருந்ததியைப் போன்ற பாஞ்சாலி.

 

இறுதியாக ஒன்று. 'அம்புவிதனிற் ........... உளதோ?" என்ற அடியில் சொல் பொருள் அமைப்பில்லை. வில்லி அதனை, மயங்க வைத்தல் என்ற குற்றத்தில் பாடி யுள்ளார்.

நிற்க, இதுவரை கூறியவற்றால், பாண்டவர் மனைவி பாஞ்சாலி போன்ற மாய மகளிரைப் பழிப்பதில் குற்றம் இல்லை என்பதும் பத்தினிகளாகிய தூயமகளிரைப் பழிப்பதே தகுதி யன்று என்பதும் பெறப்பட்டன.

 

ஆனந்த போதினி – 1943 ௵ - நவம்பர் ௴

 

 

 

No comments:

Post a Comment