Saturday, September 5, 2020

 

பெண்மணிக்களுக்கான குறிப்புகள்

 

1. அடிக்கடி வீட்டை விட்டுச் செல்லும் வநிதைகள் பெருமை யிழப்பர். துணையின்றிப போவது பிசகு. வண்டிக்காரர்களை நம்பி விடலாகாது. வண்டியில் ஏறுகிறவரைக்கும் வெகு உத்தமர்கள் போலிருந்து ஏறியதும் வண்டியில் இருப்போரை முரட்டுத்தனமாய்ப் பார்ப்பதும் பேசுவதும் பல வண்டிக்காரர்களின் சுபாவம்.

 

2. வேலூர் முதலிய நகரங்களில் நாயுடு, பிள்ளை, செட்டி முதலியார் இன்னும் இதரகுலங்களிற் பிறந்த பெண்கள் பருவமடைந்தபின் கலியாணமாகும் வரை பரபுருஷர்களின் முன்பாக வரமாட்டார்கள். இது சர்வோத்தமமான ஏற்பாடு. தனக்கு இரக்ஷகன் ஏற்படும் வரை வெளியே செல்வதும் ஆண் மக்களுடன் சம்பாஷிப்பதும் கௌரவஹீனம்.

 

3. ஏழைகளாயினும் தனவான்களாயினும் மிகுந்த அவசிய மிருந்தாலன்றித் தங்கள் வீட்டுப் பெண்களை வெளியே போம்படி விடுவது தவறு. வீதியில் ஸதா திரியும் குலமாதர்களைக் கண்டு துரபிப்பிராயம் கொள்வது சில கெட்ட புருஷர்களின் வழக்கம். ஆதலின் தனத்தைப் பெட்டியில் இங்கே என் வாயுக்களை கரைக்க வைத்துப் பூட்டிப் பத்திரப்படுத்திக் காப்பது போல், பெண்கள் தங்களுடைய மேன்மையான சரீரத்தையும், உத்தமமான நன்னடக்கையையும் சிலாக்கியமான கற்பையும் வீட்டுக்குள்ளிருந்து காப்பாற்றிக் கொள்ளவேண்டும். பிறர் மனைக் கேகும் பெண், பதருக்குச் சமானம்.

 

4. முக்கியமாய் ஸ்திரீகள் பர்த்தாக்களுக்குப் பாத சேவகிகளாயிருந்து கொண்டு அவர்களின் மனதை எக்காலத்திலும் தொந்திரவுக்குட்படுத்தாமல் ஆநந்த வார்த்தைகளால் ஆதரித்துச் சம்ஸாரத்தை நடத்தி வரவேண்டும். சம்சாரம் நடத்துவதற்கு அநுபோகமும் பொறுமையும் ஏற்பட வேண்டும்; யுக்தா, யுக்தங்களைக் கிரகிக்கப் புத்தி வேண்டும்.

 

5. யோக்கியவாதிகளின் சம்பாஷணையும் புத்திசாலிகளின் சிநேகமும் அநுபோகஸ்தர்களின் ஆதரணையும் பெரியோர்களின் புத்திவாதங்களும் அவசியமிருக்க வேண்டும். அநேக விஷயங்களையறிந்தாலொழிய ஒரு பெண்மணி சம்பாஷணைக்கு யோக்கியவதியாகாள். அநேக விஷயங்களின் ஞானம் கல்வியில்லாமல் வருமா?

 

6. இரண்டு ஸ்திரீகள் ஓரிடத்தில் சேர்ந்தால் அவர்களின் சம்பாஷணைக்கு அண்டையயலார் மேல் நிந்தை கூறுவதைத் தவிர வேறு பிரயோ ஜனகரமான விஷயங்கள் வரா. வித்தியாஹீனர்களான இரண்டு புருஷர்கள் ஓரிடத்தில் சேர்ந்தாலும் உத்தமமான விஷயத்தில் மனதைச் செலுத்தாமல் பரநிந்தைகளைச் செய்வதிலேயே பரமானந்தங் கொள்வார்கள்; இவர்களெல்லாம் ஞான சூன்யர்கள்; பசுவுக்குச்சமானமானவர்கள்

 

7. படித்த பெண்மணி பள்ளாங் குழியைத் தேடாள். பல பெண்களின் கூட்டத்தை நாடாள். புத்தகமும் கையுமாக இருப்பாள்; தன்னில்தானே படித்துணர்ந்து அந்த ஆனந்தத்தில் மயங்கி நிற்பாள்; நாளுக்கு நாள் மேலுக்கு மேல் தன் அறிவை அபிவிர்த்தி செய்து கொள்வாள். கணவனுக்கேற்ற கண்மணியாக விளங்குவாள். பயனிலாச் சொல் அவளிடம் தோன்றாது. பரநிந்தையில் அவள் சித்தம்புகாது. தன்னைப்போலவே மற்ற பெண்களும் திருந்தி, அதனால் தேசம் க்ஷேமப்பட வேண்டு மென்பதே அவளுடைய நித்திய பிரார்த்தனையாக இருக்கும்.

 

8. தன் வரையில் எவ்வளவு யோக்கியவதியாக விருப்பினும், அன்னியர் துர் அபிப்பிராயம் கொள்ளும்படி இடந்தரும் காரியங்களைச் செய்யலாகாது. எத்தகையகாரியங்களெனில், அடிக்கடி வீட்டைவிட்டு வெளிச்செல்லல், அச்சம் நாணமின்றி, இரவுபகலென்று பாராமல் வெளியில் திரிதல். அன்னிய வாலிபப்புருடரோடு தனியே யிருந்து சம்பாஷித்தல், அவசியமான வேலையிராதபோது இரவில் வெளிச்செல்லல், அவசிய வேலையிருந்தாலும் தக்க துணையின்றி செல்லல், புருடர் கூட்டத்தில் நாணமின்றி கூடியிருத்தல் சம்பாஷித்தல், துர் நடக்கையுடைய மாதரோடு சகவாசம் செய்தல், எத்தகைய சந்தர்ப்பமாயிருந்தாலும் புருடன், புத்திரன் முதலியோர் தவிர அன்னிய ஆடவன் கரம் தன் தேகத்தில் படச்சம்மதித்தல், முதலியவைகளாம். இத்தகைய நடவடிக்கையுடைய ஸ்திரீயைப் பற்றி யொருவரும் நல்ல அபிப்பிராயங் கொள்ளமாட்டார்களென்பது உலக அனுபவம். இத்தகைய நடக்கைகளையுடைய மாதர்களின் கணவர்கள் யாவராலும் அவமதிக்கப் படுவார்களாதலால், அறிவாளிகளாகிய ஆடவர்கள் இத்தகை நடக்கைகளைக் காணில் மிகக் கண்டிப்பாய்த் தடுக்காமலிரார்.

 

9. புருடன் கோபித்துக் கொள்ளும் போது அன்பார்ந்த மிருதுவசக்னங்களால் அவன் கோபத்தையகற்றுவதை விட்டு, தானும் கோபித்துக் கொண்டு சச்சரவு விளைக்கும் மனைவி பேய்க்குச் சமானமாவாள்.

 

10. சதா வீட்டை விட்டு வெளிச்செல்வதிலேயே பிரியமுடைய மனைவியிருக்கும் குடும்பத்தில் இலட்சுமி காலெடுத்து வைக்காள்.


                 டி. ஆர். தங்கவேலு நாய்க்கர்,
         போர்ட் எலிமென்டரி பாடசாலை, தேசூர் கிராமம்,

            (வந்தவாசி தாலூக்கா வட ஆற்காடு)

 

ஆனந்த போதினி – 1920 ௵ - ஆகஸ்ட் ௴

 

 

 

No comments:

Post a Comment