Thursday, September 3, 2020

 

நல்லுரைத் திரட்டு

 

(1) கடவுள் ஒருவருண்டு. அவர் அரூபியாய்ச் சத்திமயமாய் மிளிர்கிறார். நாம் நமது நித்தியகருமங்களில் எதைமறப்பினும், செய்யாதொழியினும் கடவளை என்றும் உள்ளன்போடு வணங்காதிருத்தல் கூடாது.

(2) கடவுள் வணக்கமில்லா எந்த நூலையும் படித்தல் கூடாது.

(3) பெற்றோரினுஞ் சிறந்த உற்றார் எவருமிலர். ஆன்றோர் " பெற்றோரே முதற் கடவுள்'' என்பர். எனவே, நாம் நமது பெற்றோர்க்கு மனக்கசப்பையளிக்கத் தக்க வழியில் செல்லுதல் கூடாது. அவர்கள் இன்புறுவதையே நமது செய்கையாகக் கொள்ளல் வேண்டும்.

(4) நமது பெற்றோர், குரு, அறிஞர், மூத்தோர் முதலாயினோர் கூறும் நீதிகளின்படி நடத்தல் வேண்டும்.

(5) உண்மை பேசுவோரின் வாழ்க்கை எந்நாளும் இன்பமாகவேயிருக்கும்

(6) பிறர்க்காகப் பாடுபடுபவரே தமது பொறுப்பை ஏற்று நடப்பவராவர்.

(7) மௌனமே கலகமற்றது - பாபநாசமானது - இன்பத்தை யளிப்பது.

(8) மனிதன் 'அறிவிலி'' யென்று நூறாண்டு உலகில் திரிந் துழல்வதினும் ''அறிஞன்'' என ஒரு தினம் வாழ்வதே சாலவுஞ் சிறந்தது.

(9) "அன்பி" னால் உலகை வசீகரிக்கலாம்.

(10) எளிய வாழ்க்கையிலிருப்போரே கவலையற்றவர்கள்.

(11) யார் யார் எது எதைச் செய்கிறார்களோ அவரவர் அது அதையே பெறுவார்கள்.

(12) தாளாண்மையுள்ளவர்களே பேரறிஞர்.

(13) தீமைக்கஞ்சி விலகுவோர் அறிஞர்.

(14) வறிஎரை அறிந்து அவர்க்குத் தர்மம் செய்வதே புண்ணியம்.

(15) நீங்காத சாந்தமுள்ளவர்கள் "மகாத்மாக்கள்.''

(16) தாழ்மையாலேயே நீங்காக் கீர்த்தியைப் பெறலாம்.

(17) பொருளைத் தேடுதலினும் அறிவைத் தேடுதல் நலம்.

(18) அகந்தையே அழிவின் அறிகுறி.

(19) "இன்சொல்'' லால் எல்லாரையும் நம் சொற்படி நடக்கச்செய்யலாம்,

(20) பலவானிலும் அறிவாளியே மேலானவன்.

(21) வஞ்சித்துச் சேர்த்த பொருள் கொஞ்ச நாளில் போய்விடும்

(22) சற்குணரைக் கண்டிக்க ஒரு வார்த்தை போதும். துற்குணரைக் கண்டிக்க எதனாலு மியலாது.

(23) எச்சரிக்கை யுள்ளவனுடைய சிந்தனை செல்வத்திற்கும், பதறுகிறவனுடைய சிந்தனை
அழிவிற்கம் அறிகுறிகள்.

(24) தர்மஞ்செய்கிறவர்க்கு, எல்லாரும் சிநேகராகிறார்கள்.

(25) உத்தம் சிநேகன் எக்காலமும் பிரியான்.

(26) கடவுளுக்கு விரோதமான ஞானமில்லை.

(27) ஒருவன் மூடனென்று அறிந்தும், அவனுக்குப் புத்தி சொல்லுகிறவன், அவனிலும்'' பெரிய மூடன்''

(28) தாய்மொழியை நன்கு கற்றவரே பிறமொழிகளைப் பயின்று கீர்த்தியடையலாம்.

(29) அறிவில்லாதவர்கள் "நியாயம்" இன்னதென அறியார்கள்.

(30) திக்கற்றவர்களுக்கு நம்மால் எவ்வளவு உதவி செய்யக் கூடுமோ அதைச் செய்தல் நலம்.

(31) சகிப்புத்தன்மை யுடையோரே பொறுமைசாலிகள்.

(32) நம்மிடம் உள்ள குற்றங்களைக் கடிந்து கூறுவோரின் புத்திமதியை நாம் அவசியம் கேட்டு நடக்க வேண்டும்.

(33) அந்தணரிலும் கீழோருண்டு. கீழோரிலும் அந்தணருண்டு. ஒருவர் பிறப்பினால் மட்டும் அந்தணராகார்.

(34) சிவவதை செய்தலைக் கண்டு அஞ்சி, கூடுமானால் விலக்க முயலுதலே அருளுடையார் செய்கை

(35) காலத்தினருமை தெரிந்து நடவாதவரே'' குருடர்.''

(36) எம்மதமும் சம்மதம் என்ற பொருளறிந்தவரே மதத்தை யறிந்தவர்.

(37) சூதாடுவோர், தமது கௌரவம், செல்வம் முதலியவற்றை இழக்கிறார்.

(38) தமது குற்றத்தைக் கடவுள் முன்னிலையில் வெளியிட்டு மன்னிப்பைக் கோருவோர், மன்னிப்பையும் கீர்த்தியையும் பெறுகிறார்.

(39) தீயோர் நட்பு பாம்பை யொக்கும். பாம்பிற்குப் பால் வார்த்து அதனை அன்பாய் வளர்த்து வந்தாலும், அது வளர்ப்போரை என்றாயினும் தீண்டுதல் உண்மை. அதேவாறு தீயோர்க்கு ஒருவர் எவ்வளவு நன்மை செய்யினும் அவர் தம்முடைய தீய குணத்தினின்று விலகுதல் அருமை.

(40) உலகிலுள்ளவர்களில், பலர் நமக்குப் புத்தி போதிப்பார்கள். அவர் போதனைகளில் நல்லனவுமுண்டு தீயனவுமுண்டு. அவற்றுள் நல்லவற்றை மட்டும் கிரகித்துக்கொள்ள வேண்டும்.'' உலகம் பலவிதம்.''

(41) கள்ளுண்டல் நன்மை தீமையைப் பகுத்தறியும் அறிவை மயக்கி அது பயக்கும் ஒழுக்கத்தைக் கெடுத்தலால், பாவத்தின் தலை யாகிறது.

(42) கண்டவிடத்தில் முகமாத்திரம் மலரும்படி சிநே கிப்பது சிநேகமன்று. அன்பினால் உள்ளமும் மலரும்படி சிநேகிப்பதே சிநேகமாகும்.

(43) செய்ந்நன்றியை மறப்பவருக்கே நரகத்தில் இடம் விசாலமாயிருக்கிறது.

(44) திரவியம் சம்பாதித்தற்கு முயற்சியே மூல தனமாகும்.

(45) வறியார்க் கீவதே ஈகை; மற்றவர்க்கீவது ஈகையன்று.

(46) கண் மூடித்தனமாய்ச் செலவு செய்வோன், அதிதுரிதத்தில் துன்பத்தையும், வறுமையையும் சம்பாதிக்கிறான்.

(47) தமது நாட்டிற்காக, உண்மையில் பாடு படுவோர், புகழுடம்பைப் பெறுகின்றனர்.

(48) தனவான், பிறர் உழைப்பால் பெறும் பொருளைத் தான் பெரிதுங் கவர்வதால் அவன் திருடனாகிறான்.

(49) தமக்குள்ள எல்லாவற்றையுந் தியாகஞ்செய்து, தமக்கென ஒன்றின்றி, பிறர்க்கெனவாழும் பெரியோர் வாழ்வே " இயற்கை வாழ் " வாம் - " இன்பவாழ்'' வாகும் - "மனித வாழ்வாகும்.

(50) உழைப்பின்றி யுண்போர் "திருடர்".

 

(51) கற்றபடியே நடப்போர் " அறிஞர்''.

(52) பொய்ம்மொழிவோர் எஞ்ஞான்றும் " மெய் இன்பத்தைக் காணார்.

(53) பாவத்தைக்கண்டு அஞ்சுவோர்'' வீரர்''.

(54) தன் பெருமை கூறித்திரிவோன், தன் மதிப்பையும், தன் புகழையும் இழக்கிறான்.

(55) இல்லறத்திற் கிலக்காவோர், துறவறத்திற்கும் அருகராகிறார்.

(56) தெரியாதவன் எல்லாம் தெரிந்துவிட்டதாகக் கூறுகிறான்; தெரிந்தவரோ எமக்கொன்றும் தெரியாது என்கிறார்.

(57) தீர ஆலோசியாமல் செய்யப்படும் காரியம், பின் வருந்துதற்கும், கவலை கொள்ளுதற்கும் உரியதாய்விடும்.

(58) மகிழ்ச்சிக்குக் காரணம் பிறர்க்கு (வறிஞர்க்கு) உதவுதலேயாம். எனவே, அறஞ் செய்து அதை யடைவோமாக.

(59) பிறமதத்தவர், நமக்கு வெறுப்பைத் தருமாறும், சினத்தை யூட்டுமாறும் நடந்து கொள்ளலாம்; அதற்காக, இரங்கி, ஒதுங்கவேண்டுமேயன்றி, வேறு விதமாய் நடந்து கொள்ளுதல் நலமல்ல; காரணம், அவர்கள் தெரியாமல் செய்வதே.

(60) 'அநுபவம் " மிகப் பெரிதும் உயரியது. ஒரு "அநுபவம் " பெற ஓராயிரம் பொன்னும் செலவிடலாம்.

(61) அறிவு பெறுதற்கு உரியவை பலவுள்; அவற்றுள் " மெய்ந்நூல்கள்,'''' பத்திரிகைகள், " " நல்லோருறவு'' முதலியவை முக்கியமாம்; பத்திரிகைகளில், மெய்யுணர்த்தும் பத்திரிகைகளை ஆய்ந்து, படித்து, இன்புறுதல் நலந்தருவதாகும்.

(62) ''சோம்பேறி, " பெருத்த சனவந்தனாயிருப்பினும், அதி விரைவில் வறுமையாளனாய் விடுவான்.

(63) " எளிய வாழ்வு " நடத்துவோனே " ஐசுவரியவான்''.

(64) அறிஞர் அறிவையே தேடுகின்றனர்.

(65) தாளாண்மை யுள்ளோரிடம் " ஞானம் அதிகமாயுண்டு.

(66) நீதி வழுவாது கடனாற்றுவோன், மெய்ப்பலனை யடைந்து இன்புறுகிறான்.

(67) தமது பொருளை வாரி இறைத்து, விருத்தியும் புகழும் அடைவாருமுண்டு; தமது தனத்தை ஒன்றும் செய்யாமல் வைத்திருந்து, ஏழ்மையையும், அபகீர்த்தியையும் பெறுவாருமுண்டு.

(68) உழைப்பிற்கேற்ற கூலி ஒவ்வொருவருக்கும் கிடைக்கும்.

(69) இயற்கை வாழ்வே'' மனிதர்க்கு வேண்டற்பாலது; அதற்கு முதலாவதாக வேண்டப்படுவது " எளிமை வாழ்க்கை " யேயாம்.

(70) கீர்த்திக்கு முதலாயிருப்பது, " தாழ்மை ".

(71) பேச்சும், எழுத்தும், செய்கையும் அறமாய்ப் பரிணமிக்க நடப்போர், போற வோராவர்.

(72) ஒருவரை வயதொன்றால் மட்டும் பெரியவரா (அறிஞரா) யெண்ணிவிடக்கூடாது; அவ்வாறே, ஒரு இளைஞரை, அவருடைய வயதினாலேயே ''சிறியவர் " எனக் கூறிவிடக்கூடாது. எனவே, இளைஞரிலும் அறிஞருண்டு; பெரியவரிலும் சிறியோருண்டு.

(73) சிறு சிறு துன்பங்க ளைச் சகிக்கக்கூடியவர்களே, பின் பெரும் பெருந்துன்பங்களைத் தாங்கக்கூடும்.

(74) மக்களினத்தினும் மாக்களினமுண்டு.

(75) பிள்ளைகட்கு விரோதிகள் பெற்றோர்.

(76) குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தைப் பலப்படுத்துகிறான்.

(77) வழக்குக்கு விலகுவோர், மேன்மையைச் சம்பாதிக்கிறார்.

(78) தரித்திரர்க்குப் பிச்சையிடுவோர், கடவுட்குக் கடன் கொடுக்கிறார்.

(79) எப்போழ்தும் " திருப்தி " இன்றியமையாதது. அஃதில்லா திருப்போர், பெரும் தனவந்தராயிருப்பினும், உண்மையில் " தரித்திரரே'' யாவர்.

(80) புத்தகங்கள், பத்திரிகைகள் என்பவைகளை விட ஒருவர்க்கு உற்ற நட்பு வேறெதுவுமில்லை.

(81) பிறர் கூறும் புத்திமதியை அலட்சியம் செய்வோர் பின் பெரிதும் துன்புறுவது திண்ணம்.

(82) அறியாத சிறுவர், சிறுமியர் கட்குப் பாலிய விவாகம் செய்வது பெரும்பாவம்.

(83) அறிவுடைய மக்கட் பேற்றைவிட மேலான பேறு வேறெதுவுமில்லை.

(84) ஒருவருடைய " கை யெழுத் " தாலேயே அவருடைய நடத்தையையும், பிறவற்றையும் அனுமாமைனித்து விட முடியாது.

(85) ஒருவனை உயர்ந்தோனாக்குவதும், தாழ்ந்தோ னாக்குவதும் பெரும்பாலும் பெற்றோர் வளர்ப்பிலிருக்கிறது.

(86) வீணருடன் கூடிக் காலப்போக்கு நடத்துவதிலும் நூல்களைப் படித்துக்கொண்டிருப்பது, மகிழ்ச்சியையும், அறிவையுமூட்டும்.

(87) சுடர் விளக்காயினும் தூண்டு கோலொன்று வேண்டும்.

(88) சுயமதிப்பில்லாதவன், எஞ்ஞான்றும், கவலையும் துன்பமுமே யடையக்கூடும்.

(89) கண்ணைக் காப்பதிலும் உயர்ந்த " மான " த்தைக் காப்பது அறிவுடைமை.

(90) உண்மை யுணர்வு பெறாதோர், எழுதும் எழுத்தும், பேசும் பேச்சும் பயனை யளியாது போவது மன்றி, துன்பத்தைப் பெருக்கும்.

(91) இன்று இகழப்படும் மனிதன், என்றுமே அந்நிலையிலிரான். ஆகவே, எவரையுமே இகழ்தல் கூடாது.

(92) அன் பொன்றே சகல பாவங்களையும் போக்கும்.

(93) இடுக்கணில் உதவுவோன் உத்தம மித்திரன்.

(94) நியாயத்தில் முகதாட்சணியம் பார்ப்போன் நியாயவாதி யன்று.

(95) மனச்சான்றின் வழி நின்று நடவாதவன் " மனித'' னல்லன்.

(96) பெற்ற தாயைவிட நமக்கு உதவி செய்பவர் எவருமேயில்லை.

(97) சதா ஆசையை யுடையவன் எவ்வளவு பணம் வைத்திருந்தாலும், அவன் ஏழையேயாகிறான்.

(98) தன்னுயிர் போல் மன்னுயிரை எண்ணுவோன் மன்னன்.

(99) கடன் படுதலினும் இரந்துண்ணல் நலம்.

(100) மதுவினு மினியது கடவுள் வழிபாடு.

 

(101) " நம்பிக்கை " யே நலந்தரும்.

(102)'' உழுதொழிற்கு மேலாய தொழில் மன்பதையில் வேறு எதுவுமேயில்லை.

(103) தெரியாது செய்யும் பாவங்கட்கு மன்னிப்புண்டு; தெரிந்து செய்யும் பாவங்கட்கு மன்னிப்பில்லை யென்பது கூறாமலே விளங்கும்.

(104) கரத்தில் கத்தி, துப்பாக்கி, தடி ஆகிய வைகளைத் தாங்கித் திரிவோன் " வீர " னாகான்.

(105) ஒருவர் பெரிய - அழகிய பெயரைக் கொண்டதனாலேயே நாம் மயங்கிவிடக்கூடாது.

(106) ஒருவர்'' புலால் " உண்ணாததாலேயே மேலானவராய்விடார்; அவருடைய 'எண்ண'மும் அப்படியே யிருத்தல் வேண்டும்.

(107) " நல்லன " கீழ்மகன் என்று கூறப்படுவோனிடத்திலிருப்பினும் அதைக் கடைப்பிடிக்க வேண்டுவது அறிஞர் கடன்.

(108) எதையும் ஆண்டவன் வடிவாக நோக்கின் இப்பூவில் வெறுக்கத்தக்கது ஒன்றுமில்லை.

(109) பெண்ணை வெறுப்போர் பெரியோராகார்.

(110) பிறர் நலம் விழையும் எவரும் இம்மன்பதையை விடுத்துக்காட்டுக்கேகார்.

(111) அன்பு வளர்ச்சிக்கு இல்லறத்தை ஏற்று, " உயிர் " களை ஈன்று, அவர்கள் துன்பத்தை யகற்றி இம்மை மறுமைப் பயன்களையடைய முயலும் ஒருவனே, இறைவன் நோக்கத்தை நிறைவேற்றும் அடியவனாகிறான்.

(112) உயர்ந்த வேதாந்தத்தையும், மேலான துறவறத்தையும் பேசும் மகன், தாய் தந்தையர் உதவியின்றித் தான் எவ்விடத்தினின்று முளைத்தான் என்பதை ஆராய்வானாக.

(113) உலகில் " ஆன்மநேய " த்தையும், " சகோதர உரிமை " யையும் அமைதி " யையும் நிலைநிறுத்தவல்லது " சமய மேயாம்.

(114) " தாய்நாட்" டின் பொருட்டு எல்லாவற்றையும் "தியாகம்" செய்தல் மிக மிக மேலானதாகும்.

(115) நாடோறும் கோவிலுக்குச் சென்று வருவதாலேயே " பக்த " னா கான்.

(116) "ஆன்மஞானம்" விளங்கப்பெற்ற ஒருவன் எல்லாப் பொருள்க ளிடத்தும் ஆண்டவனைக் காணுகிறான்.

(117) நகர வாழ்வினும் நாட்டு வாழ்வே சிறந்ததாகும்.

(118) " சந்தேகம்'' என்பது மாபெரும் பிசாசு; அதை விலக்குவோர் என்றும் இன்பத்தை யடையலாம்.

(119) பெண்கட்கு முதற்கடவுள் கணவனேயாகும்.

(120) காலத்திற் கியைய நடப்போர் " அறிஞர் ".

(121) தன்னைத் தானாள்வதே சரியான " சுயாட்சி " யாகும்.

(122) "துறவி" தனக்கென வாழ்வதால் கடவுள் கட்டளைக்கு மாறுப்பட்டவனாகிறான்; எனவே, அவன் யாங்ஙனம் உயர்ந்தோனாதல் கூடும்? பிறர்க்கெனவாழும் பெரியோன் எவனோ அவனே உயர்ந்தோனாகும்; எனவே, துறவறம் இல்லறத்தினுள்ளிருப்பது கூர்ந்து நோக்கின் புலப்படும்; ஆகவே, "இல்லறத்" தை விட "நல்லறம்'' இம்மன்பதையில் எதுவுமேயின்று.

(123) ''சிற்றின்ப" மே "பேரின்ப" மென்பது எமது தாழ்மையான அபிப்பிராயம்; என்னை? " பேரின்பம் " தன்னலத்தின் பாற்பட்டதாகும்;'' சிற்றின்பம்'' என்றும் பிறர் நலத்தின் பாற்பட்டுள்ளது கண்கூடு; ஏனெனில் சில உயிர்களின் துன்ப நீக்கத்திற்கும், " இன்ப " ஆக்கத்திற்கும் துணைபுரிவதாலென்க.

(124) வெளி ஆடம்பரங்களைக் கொண்டே ஒருவருடைய " குணம் " " நடத்தை " ஆதியவற்றை முடிவு செய்துவிடக்கூடாது.

(125) "பிரயாணம்" செய்வதால், "அறிவு", "ஆரோக்கியம் '', "அனுபவம்'' ஆகியவை உண்டாவதாய் மேனாட்டார் கூறுகின்றனர்.

(126) அபிப்பிராய வேற்றுமையால் கலகம் விளைத்தல் அறிஞர் செயலாகாது.

(127) ஒழுக்கமே ஒருவனை உயர்ந்தோனாக்கும்.

(128) பெற்றோர்க்கு அறிவுடைய மக்கட்பேற்றை விட சிறந்தது வேறு எதுவுமில்லை.

(129) பெற்றோர் குணத்தை, அவர்களின் பிள்ளைகளாலறியலாம்.

(130) அருணோதயத்தில் உலவல் தேகசுகத்திற்கும், பிறநலங்கட்கும் ஏதுவானது.

(131) சொல்வதினும் செய்து காட்டுதல் அறிவுடைமையாகும்.

(132) "புகழ்" பொருளை விட உயரியது.

(133) உனக்குப் பிறர் செய்ய விழைகிறவாறே, நீ அவர்களுக்குச் செய்வாயாக.

(134) உண்மையான நண்பர் கிடைக்கப் பெறுவது மிக துர்லபம்; கிடைக்கப் பெற்றோர் "பாக்கியசாலி " கள்.

 

(135) எவ்விடயத்திலும் " ஆத்திர'' புத்திகூடாது.

(136) கெடப்போவோரே கேட்டை எண்ணுகிறார்.

(137) "பேரரசை பொறாமைக்குச் சகோதரன்.

(138) " யதார்த்தமே' உத்தமமானதாகும்.

(139) இன்றைக்குச் சிரிப்போர் நாளைக்கு அழுவார்.

(140) காரியம் இறுதியடைந்த பின்னர் கவல்தல் அறிவுடைமையாகாது.

(141) மனிதன் ஒன்று எண்ணுகிறான், கடவுள் ஒன்று செய்கிறார்.

(142) கட் (ஷ்) டப் படாவிடின் லாபமில்லை.

(143) " தீண்டப்படாதவர்'' என இறைவன் படைத்ததாய்த் தெரியவில்லை; மனிதரே படைத்துளார். எனவே, கடவுள் நியதி எதுவோ, அதன்படி நடத்தல் அறிவுளார் கடமை.

(144) நாம் எவர்க்கும் " குடி " யாகோம்.

(145) நியாயம் வேறு; சட்டம் வேறு; முன்னது உண்மையானது; பின்னது அநியாய மானது. (146) அன்பர்க்கு, " உலகம்'' " அன்பு " மயமாகவே தோன்றும்; பொறாமையாளர்க்கு
 "பொறுமை" மயமாகவே தோன்றும். அவரவர் எண்ணப்படியே அவரவர்க்குத் தோன்றுகிறது.

(147) எல்லாத் " தானங்'களிலும் சிறந்த " தானம்'' வித்தியாதான'மே யாகும்.

(148) ஒருவருடைய உள்ளக்கிடக்கையை நன்குணரச் சக்தியிலாதார் " மக்க " ளினத்தைச் சார்ந்தவராகார்.

(149) " அகக்கண் கொண்டு நோக்குவதே " ஆனந்தம் ".

(150) அறிவை அறிவால் அறிதல் அறிவுடைமை.

 

(151) பெண்ணின்றேல், ஆண்தோன்றுதற்கு வழியில்லை. ஆகவே, பெண்ணை வெறுத்துக் காட்டுக்குச் செல்லுவோர் உண்மைக்கு மாறுபட்டு நடப்பவரேயாவர்.

(152) இவ்வுலகிலேயே எல்லாமுண்டு.

(153) ஒரே பத்திராசிரியரால் முற்றும் வரையப்பெற்றுவரும் பத்திரிகையைவிட, பல அறிஞர்களான் எழுதப்பட்டு வரும் பத்திரிகையே மக்கட்கு நலந்தரவல்லது. என்னை? ஓர் ஆசிரியர் எத்தகைய பேரறிஞராயிருப்பினும், அவ்வொருவரின் கருத்தே அப்பத்திரிகையில் தோன்றும்; பலவேறு அறிஞர்களின் உளத்தைத் தன்னகத்தே தாங்கி வரும் பத்திரிகையோ அங்ஙனமன்று; பல அறிஞர்களின் கருத்தைத் தன்னுட்கொண்டு மக்களை உய்விக்குமாறு எழுந்த " நவசக்தி,'' " ஆனந்தபோதினி " " லட்சுமி " " தமிழர் " முதலிய பத்திரிகைகளைத் தன் மன தாரப் போற்றாதிருக்க இயலவில்லை.

(154) வருமுன் காப்போர் அறிஞர்.

(155) அந்நியநாட்டுத் துணி அணிவோர் அவமானத்தையும், டம்பத்தையும், அறியாமையையும் விலைகொடுத்து வாங்குகிறவராகிறார்.

(156) கணவன் எத்தகைய துன்மார்க்கனாயிருப்பினும், மனைவியின் அன்பாலும், காதலாலும், சாமர்த்தியத்தாலும் அவன் சன்மார்க்கனாகி விடுவான்.

(157) நாம் கதருக்காகச் செலவிடும் ஒவ்வொரு பைசாவும், நமது ஏழைச்சகோதரி சகோதரர்களுக்கே கிடைக்கிறது; இஃதுமட்டுமன்று, நமது நன்மதிப்பையும், எளிய இயற்கையான - இன்ப வாழ்வையும், அறிவையும் பெறுகிறோம்.

 

(158) " கதர் " த் துணியை " முரட் டு'த் துணி எனக் கூறுவோரே " முரடர்' என்பது எனது தாழ்மையான கருத்து. இதனால் ஒருகால் பாவமாதல், பிற தீங்காதல் உண்டாமேல் அவற்றை ஏற்றுக்கொள்ள அஞ்சுவேனில்லை.

(159) ஒத்தமனம், ஒத்த கல்வி உடைய ஆண், பெண் ஆகிய இவருள்ளத்தினின்று மலரும்'' அன்பு'' எதுவோ, அதுவே நல்லோரால் சொல்லப்படும் " காதல் " என்பது.

(160) அன்னையை நேசிப்பது போன்று தமது நாட்டை நேசிப்போர்
''தேசாபிமானிகள்.''

(161) பிறமாதரைத் தமது உடன் பிறந்த சகோதரிகள் போலவும், தம்மைப் பெற்ற தாய்மார்கள் போலவும் மதித்து, அதன்படியே அகத்திலும், புறத்திலும் காட்டுவோரே ஆன்ம ஞானம் கைவரப் பெற்ற அறிஞர்.

(162) உண்மையான வீரன், அரசரிடத்தும், மெலியாரிடத்தும் அழுந்தத் திருத்தமாயும், நடுவுநிலை தவறாமலும் உரையாடுவான். (163) ஒருவர் செய்த தீமையை மறப்போர் " ஞானிகள்.''

(164) வயிற்றுப் பிழைப்புக்கெனக் கல்வி பயிலல் அறியாமையாகும்.

(165) உலகை நிச்சயமென்றிருக்கும் அறியாமையினின்று நீங்கினவர்களே நீத்தாராவர்.

(166) உலகிலுள்ள புரட்டுக் களினின்று விடுபடுவோர் மிகச் சிலரிலும் சிலரேயாவர்; புரட்டுக்களினின்று விடுபடற்கு " மதிமோசவிளக்கம், " பத்திரிகைகள் முதலியன பெரிதும் துணை புரிய வல்லனவாகும்.

(167) வாயில்லா உயிர்களை (பறவை, விலங்கு முதலியனவற்றை வாயுள்ள உயிர்கள் (மனிதர்) கத்தி, துப்பாக்கி ஆதிய ஆயுதங்களால் கொன்று இன்புறல் பெரும் அறியாமையாகும்.

(168) மனித வாழ்வுக் கிலக்கியர் மகாத்மா காந்தியடிகள்; எங்ஙனம் என்பதை அறிய விழைவோர், பேரறிஞர் திரு. வி. கலியாணசுந்தர முதலியாரவர்கள் எழுதிய "மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்" என்ற நூலைப்பெற்றுத் தெளிவாராக.

(169) நாம் உண்மையான நண்பரைப் பெற விழைந்தால், முதலில்   நாம் அப்படி நடந்து கொள்ள வேண்டும்; அதனால் அவரைப் பெறலாம்.

(170) " தமிழ்'' மொழியாய எனது தாய்மொழி, மற்ற மொழிகளை விட எத்துணையோ அளவு உயரியது; சிலர், ஓசை யினிமையில்லாதது எனக் கூறுகின்றனர்; ஆம் இருக்கலாம்; ஓசை யினிமை படைத்த மொழிகளான் உயிருக்கே தீங்கு விளைவதை அந்த மேதாவிகள் உணரார் போலும்! யான் தமிழ் மொழிக்கு ஓசையினிமையில்லாமைக்குச் சிறிதும் வருந்தேன் பெருமகிழ்ச்சியும் பெருமையுமே அடைவேன்.

(171) ஒருவன் வயதாக, ஆக அமிதமான அறிவையும், அனுபவத்தையும் அடைந்து வருகிறான்.

(172) ஒரு ராத்தல் பட்டுக்கு இருபத்து மூவாயிரம் பட்டுப் பூச்சிகளைக் கொல்லவேண்டுமாம்! எனவே ருப்பட்டாடைக்கு எத்துணை ஆயிரம் பூச்சிகளைப் பலியிட வேண்டுமோ தெரியவில்லை. பல்லாயிரக் கணக்கான பூச்சிகளைப் பலியிட்டு அணியும் ஆடை அணிவோர் எத்தகைய அகிம்சா மூர்த்திகள்!

(173) கலாசாலைப்படிப்பை முடித்துவிட்டதாலேயே ஒருவன் கலாவல்லுநனாகிவிடான்; " அநுபவ " க்கலையில் தேர்ந்தவனே கலா வல்லவனாவன்,

(174) அரசியல் துறையில் உழைப்பதிலும், ஆசாரச் சீர்திருத் தத்துறையில் உழைப்பது பெரிதும் சமூகத்திற்குத் துணைபுரியவல்லதாகும்.

 

(175) " சுயாட்சி'' என்பது ஒருவர் அளிக்க, மற்றொருவர் பெறுவதன்று; " பூவினில் கந்தம் பொருந்தியவாறுபோல்'' அவரவர்பால் மருவி விளங்குவ தாகும்.

(176) தீண்டாமை என்பது இந்துமதத்திலுள்ள ஓர் பெரும் வியாதி.

(177) ஏழை மக்களே இவ்வுலகில் அருஞ்செயல்கள் புரிகிறார்கள்.

(178) "எல்லாம் நன்மைக்கே நிகழ்கிறது'' என்பதை ஒவ்வொருவர் வாழ்வி லும் துருவித் துருவி ஆராயின் அறியலாம்.

(179) "வெட்கம்" அமிதமா யுள்ளோரிடம் “ஞானம்" மிகுந்து கிடக்கும்.

(180) காரணமில்லாமல் காரிய மில்லை.

(181) மடமடவெனப் பேசுவோரிடம் அறிவு அதிகமில்லை; மௌனமா யுள்ளோரிடம் அறிவு அதிகமாயிருக்கிறது.

(182) கிராமவாழ்வுக்கு ஒப்பாய வாழ்க்கை வேறு ஒன்றிலும் இல்லை.

(183) பருத்தி நூற்கும் ராட்டையும், கைத்தறியையும் மறந்தமையே நாட்டின் வறுமைக்கு முக்கிய காரணங்களி லொன்று.

(184) ஒருநாட்டார், மற்றொரு நாட்டாரை ஆளுதல் இயற் கைக்கும், ஆன்மநேயத்திற்கும் மாறுபட்டதாகும்.

(185) காதலி காதலரின் உடல்கள் பிரிந்திருந்தாலும், உயிர் பிரிந்திருக்கவில்லை.

(186) " அகிம்சை'' என்பது முற்றும் மாசின்றியிருத்தல்.

(187) எளிய சகோதரர்களை ஒடுக் கும் பாவத்தில் மூழ்கியிருக்கு மட்டும் நாம் விலங்குகளை விட உயர்ந்தவர்களல்ல.

(188) ஆங்கிலக்கல்வி முறை, நம்மை, நம் நாட்டிலேயே அந்நியராக்கி யிருக்கிறது.

(189) எல்லா " மணங்களிலும் சிறந்தமணம் (விவாகம்) கள் வென்னுங் " காதல் மண " மே யாகும்.

(190) இந்து மக்களை நாம் ஒவ்வொரு வரும் நமது சகோதரன், அல்லது சகோதரி என்று கொள்ளும் பேராண் மையே " சுதந்திரம் "

(191) ஒரு நாட்டின் உண்மை நிலையை, அந்நாட்டி லுள்ள கோடீசுவரரின் தொகை புலப்படுத்தாது; அந்நாட்டிலுள்ள ஏழை மக்களுள் எத்துணைபேர் பட்டினி கிடக்கின்றனர் என்பது புலப்படுத்தும்.

(192) ஒருவன் தன்பால் உறுத்தெழும் * விலங்கு நசைகளை அடக்க வேண்டு மேல், முதலாவது அவன் நாநசையை அடக்குதல் வேண்டும். [* விலங்கு நசை = மாமிசாகாரப் பிரியம்.]

(193) இயந்திரம், மனிதனை அடிமைப்படுத்துகிறது.

(194) தற்பெருமையுந் தன்னலமும் அற்றவிடத்திலெழும் உண்மையும், அஞ்சாமையும் மனிதனிடத்திலுள்ள ஆண்மையை எழுப்புகின்றன!

(195) பிரதிபயன் கருதாது தொண்டாற்று வோரே உண்மையான தொண்டராவர்.

(196) சனஊழியன் எச்சிறப்பையும் ஏற்றுக் கொள்ளலாகாது; அவன், தனக்குள்ள எல்லாவற்றையும் சனங்களிடத்தில் ஒப்புவித்தவன்.

(197) சிலவேளைகளில் கதரணிவது மட்டும் சுதே சியமாகிவிடாது.

(198) ஒருவன் அகிம்சா தர்மியாக விருக்க வேண்டுமானால், அவன், தனக்கு இன்னா செய்தவன் பால் சீற்றங்கொள்ளாதிருத்தல் வேண் டும்; அவன், இவனுக்குக் கனவிலுந் தீங்கு நினைத்தல் கூடாது; நன்மையே நினைத்தல் வேண்டும்.

(199) புகழுடம்பை வளர்த்தலும், நிலைபெறச் செய் தலும் அறிவிலார்க்கு அரிது.

 

திரு. வி. மு. பொன்னையா.

 

ஆனந்த போதினி – 1926, 1927 ௴ -

மே, ஜுலை, செப்டம்பர், நவம்பர், மார்ச்சு, ஏப்ரல், மே, ௴

 



No comments:

Post a Comment