Thursday, September 3, 2020

 

நல்லொழுக்கமும் தீயொழுக்கமும்

 

ஒழுக்கமென்னுஞ் சொல்லாற் பெறப்படும் பொருள் நன்னடத்தையே யாயினும், அச்சொற் பிரயோகம் நாளடைவில் தீய நடத்தைக்கும் வழங்கப்பட்டு வருவதால், இப்போது நன்னடத்தையே என்னும் பொருளன்றி நடத்தை என்னும் அம்மாத்திரையே பொருள் பயந்து, சன்மார்க்கம், துன்மார்க்கமாகிய இரண்டினுக்கும் பொதுமையாக நிற்றலின் அப்பொதுமை நீக்கல் வேண்டி'' நல்லொழுக்கமும் தீயொழுக்கமும்'' என்று அதனைத் தனித்தனி வேறு பிரித்து இத்தலைப்பெயர் கொடுத்தா மென்க,

 

நல்லன கடைப்பிடித் தொழுகலும், அல்லன தெரிந்து ஒழித்தலுமே ஒழுக்க மென்பது. ஒழுக்க இலக்கணங் கூறுவதினும், ஒழுக்கவரலாறு கூறுவதினும், பற்பல தேசக்காரர் பற்பல காலங்களில் பலபல அபிப்பிராயம் கொண்டு ஒருவரோடொருவர் மாறுபட்டும், உடன்பட்டும், வாதம் நிகழ்த்தி வந்திருக்கின்றார்கள். இவர் தம்முள் பெரிதும் மாறுபட்டு உரைப்பார் இரு திறத்தினராவர்.'' நன்மையின் இலக்கணம் இத்தகையது, தீமையின் இலக்கணம் இத்தகையது என்று அறுதியிட்டுக் கூறி அவை யிரண்டினுடைய இலக்கணங்களையும் நமக்கு அறிவுறுத்தி வரும் தெய்வீகத் தன்மை பொருந்திய ஓர்சக்தி நமக்குள் அமைந்து கிடக்கிற தென்றும், அதைத்தான் மான தசாட்சி என்று கூறுகின்றோம்'' என்றும் உரைப்பார் ஒரு பிரிவினர். இயற்கையுணர்வே ஒழுக்கத்திற்குக் காரணம் என்பதிவர் கொள்கை.

 

"இயற்கையாகவே நன்மை தீமைகளை அறிந்து கொள்ளக் கூடிய சக்தி நம்மிடமில்லை; நாம் உலக அனுபவத்தினாலும், பலரோடு உறைந்து வாழ்வதினாலும் சிறிது சிறிதாக அறிவு விளங்கிக் கடைசியில் இன்பம் பயப்பனவற்றையெல்லாம் நன்மையெனக் கொண்டு ஒழுகியும், துன்பம் பயப்பனவற்றையெல்லாம் தீமையெனக் கொண்டு ஒழித்தும் வருகின்றோம். ஆகவே அனுபவமுறையினாலேயே ஒழுக்க முண்டாயிற்று' என்று உரைப்பார் மற்றோர் பிரிவினர். பயன்கருதி அனுபவமுறையால் ஏற்பட்டதே ஒழுக்கம் என்னும் கொள்கையே இவர்தம் கொள்கையாம். இவ்விரண்டு கொள்கைகளும் தம்முள் மாறுபாடுடையனவேயாம். ஆனால் இவ்விருவர்தங் கொள்கையும் ஒரு விஷயத்தில் ஒன்றாயிருக்கிறது; 'பிறருக்கு ஒருவிதமான இடையூறும் ஒருவிதத்தினும் நிகழாதபடி எக்காரியத்தையும் மனிதன் செய்யக்கூடிய சுதந்தரமுடையவன்'' என்னும் இந்நீதி இருதிறத்தாருக்கும் உடன்பாடாம். இந்நீதிவழி நின்றொழுகுவதெல்லாம் ஒழுக்கமாகும் எனையவெல்லாம் ஒழுக்கமாகாதெனத் தெளிவுறுத்தி மேற்கூறிய கருத்தமைய, சுதந்தரத்தைக் குறித்து ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் என்னும் தத்துவ சாஸ்திரியார், (Every man is free to do that he wills, provided he infringes not the equal freedom of any other man) அதாவது - "மனிதன் தன்னிஷ்டப்படி நடக்க உரிமையுடையவன்; ஆனால் பிறருடைய சுதந்தர உரிமைக்கு ஒரு சிறிதும் தன்னால் இழுக்கு வராதபடி மட்டும் பார்த்துக் கொள்ளல் வேண்டும்'' என்று தமது ஜனாசார நூலில் வெளிப்படுத்தியிருக்கிறார்,

 

இனி "ஒழுக்கத்திற்கு இயற்கையாகவுள்ள உணர்வு, இறைவனால் கொடுக்கப்பட்ட சட்டமாதலால் அதன்படி நடத்தலே நமது கடமை. அதற்கு மேற் கொண்டு அதன் உற்பத்தியை ஆராயப்புகுதல் மடமையாம்'' என்னும் கட்சியாரின் வலிமை எம்மட்டு மிருக்கிறதென ஒருவாறு பார்ப்போம். ஒரே கடவுளால், ஒரே மனிதவர்க்கத்திற்கு எற்படுத்தப்பட்ட ஒழுக்க விதி எல்லோருக்கும், எக்காலத்திலும் ஒரேதன்மைத்தாக வன்றோ விருத்தல் வேண்டும்? உண்மையில் பார்த்தால் அங்ஙனமில்லையே. கொலைத்தொழில் செய்யாவிட்டால் கடவுள் தண்டிப்பாரென்று பிஜியன்ஸ் (Fijians) என்னும் ஜாதியார் கொலைத் தொழில் செய்வதையே முதற்கடமையாகக் கருதுவதன்றியும், கருதியபடி செய்தும் வந்திருக்கின்றார்கள்! இன்னும், எகிப்தியருக்குப் பொய்யுரைத்தல் சிறந்த குணமாம்! துருக்கியருக்குக் களவாடல் அவர் தம் ஒழுக்க நூலில் உள்ள விதியினுள் ஒன்றாம்! ஒரு மனைவிக்கு மேல் மறு மனைவியை மணம் புரிதல் கூடாதாமென ஐரோப்பியருக்கும், அமெரிக்கருக்கும் ஒழுக்க நூல் ஆணை தந்திருக்க, இந்தியாவிலும், சீனாவிலும், துருக்கியிலும், மனைவியர் பலரை வதுவை செய்தல் குற்றமன்றாமென விதியிருக்கின்றது. இவை இப்படி யிருப்பானேன்? இவை போன்ற பல ஆசங்கைகளெழும் போது ஒழுக்கத்திற்குத் தெய்வீக உற்பத்தி கூறுவோர் சமாதானங் கூறவகையின்றி விழிக்கிறார்களென அனுபவத்தைக் காரணமாகக் கூறுவோர் ஆட்சேபிக்கிறார்கள். ஒழுக்கமும், மனச்சாட்சியாகிய அந்தக்கரணமும் ஏற்கனவே இயற்கையாக உள்ளனவன்றாமெனின், " எப்போது எங்ஙன மவையுண்டாயின? " என மறுத்து வினவும் இயற்கைக் காரணம் கூறுவோர்க்கு அனுபவமுறை கூறுவோர் மறுமொழி பகர வகையின்றி மயங்குகின்றார்கள். ஒவ்வொருவருக்கும், அவர்கள் செய்யும் செய்கைக்கும், அச்செய்கையின் பயனுக்கும் இடையே தோன்றி வரும் அனுபவத்திலிருந்தே ஒழுக்கவுணர்வு ஏற்படுகிறது. சில செய்கைகள் செய்வதினால் துன்புற்றும், துன்புறக்கேட்டும், பார்த்தும் வருகின்ற நாம், அச்செய்கைகள் தீயனவென்றும், அவைகளைச் செய்தலும் தீயபலன் விளைவிக்கு மென்றும் தெரிந்து விலக்கி வருகின்றோம். இம்முறைப் படியே நலம் பயப்பனவற்றைத் தழுவி வருகின்றோம். கல்வியினாலும், கூட்டுறவினாலுமே ஒழுக்கமும் மனச்சாட்சியும் உற்பத்தியாகின்றன என்று சொல்லுதல் பொருத்தமுன தாமென்றே வைத்துக்கொள்ளினும், முதன் முதல் கல்வி வேண்டும், கூட்டுறவு வேண்டும், என்னும் விழைவு ஒருவனுக்கு எங்ஙன முண்டாயிற்று? உண்டாகக் காரணமென்ன? மனச்சாட்சி என்னுமோர் காரணம் ஏற்கனவே இல்லாதிருப்பின் விழைவு எங்ஙன முண்டாகும்? தானாகவே உண்டாயிற்றென்பாமெனின், விழைவு ஒரு புறப் பொருளையாவது, அல்லது அகப்பொருளையாவது பற்றி நிகழுமேயன்றிப் பற்றுக் கோடில்லாமல் நிகழாது. அங்ஙனம் நிகழும்போதும், அப்பொருளையும், விழைவையும் சம்பந்தப்படுத்தற்கு ஓர் கருவி இன்றியமையாது வேண்டப்படும். ஓர் பொருளைக்காண்டற்குக் கண்ணொளியும், கதிரவனொளியும், அப்பொருளும் இன்றியமையாதனவா யிருத்தல் வேண்டும். கண்ணொளியுங் கதிரவனொளியு மிருந்து பொருளில்லாவிடில் இல்லாத அப்பொருளை எங்ஙனம் காணக்கூடும்? கதிரவனில்லாவிடில் பொருளுங் கண்ணொளியு மிருந்து என்ன பிரயோசனம்? கதிரவனிருந்தும் குருடன் பொருளைக் காண்பானோ? ஆகவே இம்மூன்றும், இவைகளையன்றி வேறொரு பொருளுங்கூட வேண்டியிருக்கின்றன. ஏனெனில் இம்மூன்றும் வாய்ந்திருப்பினும் பிரேதத்திற்கு அப்பொருள் விளங்கக் காணாமையினாலென்க. அதுபோலவே ஓர் செய்கையினையும், அதன் பலனையும், அப்பலனால் விளையும் நன்மை தீமையையும் நாம் அனுபவத்தில் அறிகிறோமாயினும், அனுபவம் என்பது ஒரு காலத்தில் உண்டாகாமல் பல காலத்தில் நிகழ்ந்த செயல்களை யெல்லாம் ஒருங்கு சேர்த்துக் காண்டலே யாதலானும், இச்செய்கைகளை மறவாது ஒருங்கு சேர்ப்பிக்கக்கூடிய ஓர் கருவி இருந்தாலன்றி நாம் முன்னடைந்ததைப் பின் மறந்து போவோமாதலானும், அனுபவத்திற்கும் ஓர் கருவி வேண்டுமெனவும், அக்கருவியே மனச்சாட்சி யெனவும் கூறுவர் இயற்கையைப் பற்றிக் காரணங்கூறுவோர். இருவர்தங் கூற்றும் ஒன்றினுக் கொன்று மாறுபட்டிருப்பினும், இரண்டினும் உண்மை யிருக்கிறது. ஆகவே ஒழுக்கமும், அவ்வொழுக்கத்தினை அறிந்து நடத்தற்குரிய சக்தியும், இயற்கையாகவே யுள்ளன வென்றும், அனுபவமும் நூலறிவும் உள்ளவொழுக்கத்தைத் திருத்தமுறக்காட்டி அபிவிருத்திக்குக் கொண்டு வருகின்றன வென்றும் கொள்ளலே தகுதி, காலவேறுபாட்டினாலும், இடவேறுபாட்டினாலும், ஏனைய மாறுபடுவன போல் ஒழுக்கமும் மாறுபட்டு நிற்கும். எவ்வெக்காலங்களில் எவ்வெவ்விதமாக ஒழுக்கம் மாறுபடுகிறதோ அதற்கு இணங்கி அவ்வொழுக்கத்தை அனுசரிப்பதை நாம் ஒவ்வொருவரும் கைக்கொள்ள வேண்டும். இதுபற்றியே '' உலகத்தோ டொட்ட வொழுகல் பல கற்றுங் - கல்லா ரறிவிலா தார்'' என்றார் ஆசிரியர் திருவள்ளுவனாரும். இனி ஒருவன் தன்மாட்டொழுகும் ஒழுக்கமெனவும், பிறர்மாட்டொழுகும் ஒழுக்கமெனவும், ஒழுக்கம் இருவகைப்படும்: கள்ளாமை, பொய்யாமை முதலியனஒருவன் தன்மாட்டொழுகும் ஒழுக்கமும், கொலை தவிர்தல், களவாடாதிருத்தல் முதலியன பிறர்மாட்டொழுகும் ஒழுக்கமுமாம். அறிவின் பயன் கல்வியாகவும், கல்வியின் பயன் ஒழுக்கமாகவும், ஒழுக்கத்தின் பயன் இன்பமாகவும், இன்பமனுபவிப்பது உயிராகவும் இருத்தலால் ஒழுக்கமின்றி உயிர் இருப்பினும் துன்பமே பயக்கும்; ஆதலால் உயிரினும் ஒழுக்கமே பாதுகாக்கப்பட வேண்டும் என்னும் உண்மை தோன்றவே ஒழுக்கம் விழுப்பந் தரலா னொழுக்க, முயிரினு மோம்பப் படும். என்னும் திருவாக்கெழுந்திருக்கிறது.


 சாஸ்வதி சபைத்தலைவர்,

டர்பன் - நெட்டால்.

 

ஆனந்த போதினி – 1928 ௵ - செப்டம்பர் ௴

 

 

No comments:

Post a Comment