Thursday, September 3, 2020

 நல்லொழுக்கம்

 

உலகத்திலேயுள்ள மக்கள் யாவராலும் வேண்டப்படுவதும், கைக்கொள்ளப்படுவதும் ஒழுக்கமேயாகும். எவ்விதமான ஒழுக்கம் யாவராலும் விரும்பப்படுவது எனின் நல்லொழுக்கமேயாகும். அடைதற்கரிய மானிட ஜென்மத்தை எடுத்த நாமெல்லோரும் இவ்வித ஜென்மம் எடுத்ததின் பிரயோஜனமாக இவ்வுலகின்கண்ணே நல்லொழுக்கத்தை அநுட்டித்து நடப்போமாயின் சகலவிதமான சௌகர்யங்களும் கிடைப்பதோடு கூட நல்லொழுக்கத்தை அநுட்டிப்பவர்களின் கீர்த்தியானது அவர்கள் ஜீவிய காலத்திலும் அதன் பின்னரும் அழியாது ஜொலித்துக் கொண்டிருக்கும். நல்லொழுக்கத்தை யநுட்டித்துச் சுயநலம் பாராட்டாது பொதுநல சேவை செய்யும் ஒருவரை உலகோர் கொண்டாடுவார்கள் என்று சொல்லவும் வேண்டுமோ. நல்ல ஒழுக்கத்தை நான்கு விதமாக அநுட்டிக்கலாம். எப்படி யென்றால் அன்பு, அகிம்சை, சத்தியம், பொதுநல சேவை யென்னும் நான்கையும் அடிப்படையாகக்கொண்டு ''கற்கக் கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத்தக.'' என்றபடி மேற்சொன்ன நான்குவித வாக்கியங்களின் சாராம்சங்களை உணர்ந்து அதன் படி நடக்கப் பழகினால் 'வருவான் குரு தன் வழி மேலே' என்னும் வாக்கியத்திற் கிணங்க மற்றவர்களுக்கு ஓர் வழிகாட்டியாய் இருக்க முடியும் என்று நினைக்கின்றேன். அன்றியும் ஒழுக்கத்திற் சிறந்த எவர்களும் தங்கள் ஒழுக்கத்தின் சக்தியால் மற்றவர்களை வெல்லுகின்றனர். உதாரணமாய் திரு. காந்தியின் சிறந்த ஒழுக்கமானது அவரை மகாத்மாவாக்கி எவ்வளவு மதிப்புக்கிடமாய் வைத்திருக்கின்றது. ஓர் மனிதன் தன் துர்க்குணங்களை நீக்கிச் சீராக்கிக் கொண்டால் ஒழிய அவன் எவ்வளவு இழிவான வஸ்துவாக இருப்பான் என்று டேனியல் என்னும் கவிஞர் கூறி யிருக்கின்றார். மேற் சொன்ன நான்கு வாக்கியங்களையும் ஆராய்வோம்.

 

முதலாவது அன்பை எடுத்துக் கொள்வோம். அன்பாவது இயற்கையிலேயே சர்வா மாக்களுக்கும் ஒரே கடவுளாயும் எல்லா மக்களுக்கும் பொதுவாயும் உள்ள ஒரே வஸ்துவை யறிந்து எவ்வுயிர்களையும் தன்னைப்போல் பாவித்து அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி, அரும்பசி யெவர்க்கும் ஆற்றி, மனத்துளே பேதா பேதம், வஞ்சம், பொய், களவு, சூது, சினத்தையும் தவிர்ப்பாயாகில் செய்தவம் வேறொன்றுண்டோ, உனக்கிது உறுதியான உபதேசம் ஆகும் தானே' என்னும் வாக்குப்படி நடப்பதே அன்பு செறியாகும்.

 

இரண்டாவது அஹிம்ஸாதருமமாவது எல்லா ஜீவன்களும் ஒன்றே யென்று ஒருவர்க்கும் யாதொருவித இடையூறும் செய்யக்கூடாது என்றும் அறிந்து கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி எல்லா உயிருந் தொழும்'என்றபடி ஜீவகாருண்யத்தைக் கைக்கொண்டு நடந்து 'இன்சொலால் இருநீர்வியனுலகம் மகிழுமே யன்றி வன்சொலால் என்றும் மகிழாதே' என்ற படியும் யாவர்க்கும் துன்பம் பயக்காத இன்னுரை பகர்ந்தும் (overcome not by force but by kindness) என்று ஆங்கிலத்தில் ஓர் பழமொழியுண்டு. அதாவது பலவந்தத்தினால் அல்ல, பட்சத்தினால் வெல்லு என்ற படியும் யாவருடனும் துவேஷம் பாராட்டாது, வன்மையாய்ப் பேசாது, நன்றியறிதலுடனும் சந்தோஷத்துடனும் ஒற்றுமையுடனும் பேசி உறவாடி நடந்து கொள்வதே அஹிம்ஸாத் தருமமாகும். சத்தியமாவது அன்பு நெறிக்கும் அஹிம்ஸா தருமத்துக்கும் மாறுபடாது இயற்கை வழியில் மனச்சாட்சியாகிய "பகுத்தறிவு என்னுங் கடவுளுக்கு விரோதமில்லாமல், எவ்வழியில் நடக்கின் நன்மை பயக்குமோ அவ்வழியில் நின்று வாய்மை நெறிதவறாது ஒழுகித் தூய்மையாக நடப்பதே சாத்தியமாகும். பொதுநல சேவையாவது பொதுநல சேவை யென்றுசொன்ன வுடனே பொதுநலத்திற்காகப் பாடுபட்டால் எங்கள் பிழைப்புக்கெட்டுவிடுமே, அப்புற மெப்படி என்று கேட்கின்றார்கள். அப்படியல்ல; மக்கள் யாவரும் பொதுநல சேவைக்காகவே பிறக்கின்றார்கள். சுயநலத்துக்கன்று. எப்படியெனில் ஒருவன் பிறந்து பெரியவனாகியதும், தாய் தந்தையருக்கு உழைக்க வேண்டியவனாயும், விவாகமானபின் மனைவி மக்களுக்காகப் பாடுபட்டுழைத்துக் காப்பாற்ற வேண்டியவனாயும், இத்துடன் சுற்ற மித்திரர்களை நேசித்துப் போஷிக்க வேண்டியவனாயும் இருக்கின்றான். இவ்வகையில் உணர்ந்து பார்க்கின் ஒருவன் பிறப்பது தன்னலத்துக்கு மாத்திரமன்றி பொதுநல சேவைக்காகவுமே பிறக்கின்றான் என்பது விளங்கும். ஆதலின் இயற்கைச் சத்தியாகிய ஆத்மாவானது எல்லா மக்களிலும் ஒரே தன்மையாய் விளங்குகிறதை யுணர்ந்து எங்கள் தாய் நாட்டுக்காகவும் தாய் நாட்டு முறைமையால் உள்ள சகோதரர்களுக்காகவும் பாடுபட்டு தேசத் தொண்டு புரிந்து அன்பர்பணி செய்யவெனை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்ப நிலைதானே வந் தெய்தும் பராபரமே'என்பதை யுணர்ந்து உண்மையை யறிந்த வழி நின்று தேசத் தொண்டு புரிவதே பொதுநலச் சேவையாகும்.

 

எனதரிய சகோதர சகோதரர்களே! இவையன்றியும் மேன்மை தங்கிய மேதாவிகளும் பெரியோர்களும் சொல்லியிருக்கின்றதைக் கவனியுங்கள்.

 

'மனிதன் தன் பிறவிக் குற்றங்களைத் தீர்த்துக் கொண்டு ஒழுக்கத்தின்பாற்பட்டாலன்றி எவ்வளவு இழிபொருள் ஆவான்'என்று தானியல் என்பவரும்! ஒழுக்கமென்பது ஒவ்வொரு ஜீவாத்மாவின் இயற்கைக் குணம் பற்றி ஆய்ந்தறிந்த நன்னெறிப்பாங்கே யாகும். ஒழுக்கமுடையோர் தாம் சார்ந்த ஜனசமூகத்தினுக்கு மனச்சான்று போல்வார்' என்று எமர்சன் என்பவரும், ஓர் நாட்டின் உயர்விற்கும், ஆக்கத்திற்கும் உள்ள சார்பானது, மிகுந்த பகுதிப் பணமுமன்று, பலத்த கோட்டையுமன்று, அழகிய மாடமாளிகையுமன்று, அகங்காரமும் சுயநலமுங்கொண்ட. பாதகர்களுமன்று, ஆனால் நாட்டாண்மைக்காரர் தொகுதிக்கும் கல்வி, தெளிவு மேன்மை தங்கிய ஒழுக்கமுள்ள குடிகளுக்கும் தக்கவாறேயாம். இதிற்றான் அத்தேசத்தின் உண்மையான நயமும், முக்கியமான பலமும், சுயமான சக்தியும் தங்கியிருக்கின்றன' என்று ஜர்மன் தேசத்தின் பெரிய மேதாவியாகிய மார்டின் லூதர் என்பவரும், 'நல்லொழுக்கமானது மனிதப்பேற்றினுக்குச் சிறந்த தூண்டு கருவியாகின்றது. அது மனிதனை அவனுக்குரிய சிறந்த நற்குணத்தில் புலப்படுத்துகின்றது' என்று ஸ்மைல்ஸ் என்பவரும், 'சத்தியமும், அந்தரங்க நன்மையும் இல்லாத ஊக்கமானது தீமையின் கொள்கையுருக் கொண்டாற் போன்றதே. சன்மார்க்க வரம்பினுக்கு அறிகுறியாய் நிற்பவருக்கு இடையூறாய் நிற்பவர் யாரென்றால், நாகரிக மின்மையின் பூரணாம்சம் பூண்டவரும், பலத்தையும் ஊக்கத்தையும் வரம்பு கண்டவருமாகிய கொடியோரைத் தவிர வேறிலர். ஊக்கமும் பலமுமுடைய இவர் மமதை, அதிகார இச்சை, தன்னயம் பாராட்டல் ஆகிய துர்க்குணங்கள் தக்கபடி கூடில், பேயின் முழுவடிவினரே யாவர். இம்மாதிரியானவர் மனித உலகத்தைத் துன்பப்படுத்திப் பாழாக்குவதில் சிறந்தவராகக்காணப் படுகின்றனர். பொறுக்கி யெடுத்த இப்பாதகரை, இம் மண்ணுலகத்தை யழிப்பதற்குரிய உத்தியோகத்தைச் செலுத்துமாறு கடவுள் கட்டளையிட்ட நோக்கமானது அமிதற்பான்மைய தன்று' என்றும் ஆங்கிலப் பெரியாரான நோவலிஸ் என்பவரும் சொல்லி யிருக்கின்றார்.

 

அறிவிற் சிறந்த பெரியோர்களே! மேற் சொல்லியவைகளை ஆராய்ந்து பார்த்துக் குற்றங் குறைகளிருக்கின் பொறுக்குமாறு கேட்டுக் கொள்ளகிறேன். இத்துடன், எனது நண்பர்களையும், அரிய சகோதர சகோதரிகளையும் வேண்டிக்கொள்வது யாதெனில், மேற் சொல்லியவைகளை நன்கு வாசித்துணர்ந்தும், உங்கள் நன்மைக்குரிய ஊக்கத்தோடு ஒழுக்கத்தையும். கல்வி தேச நன்மைக்குரிய பொது நலச்சேவையாகிய இவைகளையும், அறிந்தார் பால் கேட்டு அதன்படி ஒழுகுமாறு கேட்டுக் கொள்ளுகிறேன்.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - ஆகஸ்டு ௴

 

No comments:

Post a Comment