Thursday, September 3, 2020

 

நவ நாகரீகக் கற்பனைகள்

(மொழி பெயர்ப்பு.)

நாடு நகரங்களைப் பெருந்தீயானது பிரகாசிப்பிப்பது போல், மாணிடச் சமூகங்களைப் பொதுஜனப் புரட்சிகள் ஒளிப்பிக்கின்றன.

வாழ்க்கை நதியானது சமத்துவம் என்ற பூமியின்மேல் ஓடி, சகோதரத்துவம் என்ற கரைகளால் காக்கப்பட்டு, வீரியம் என்ற காற்றினாலும் தைரியமாகிய மீகாமனாலும் முன் செலுத்தப்பட்டுச் சுதந்திரமாகிய ஆழியுடன் இறுதியில் கலக்கின்றது.

திடதேகமும், அஞ்சாநெஞ்சம், தைரியமொழியும், வீர நடையும், கம்பீரத்தோற்றமும் சுதந்திர வாழ்க்கையின் பலன்களாகும். சிந்தனை சொற் செயற்களில் பிறர் போக்கையே குருட்டுத்தனமாகப்பற்றி நடவாதவனாய், அகப்புற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வாய்மையும் சீரிய கருத்துக்களும் - பரோபகாரத்வமும் உடையனாய், அயலவர் புகழ்ச்சி இகழ்ச்சிகளையும் - நானாவித இன்னல் இடர்களினின்று உண்டாகும் சரீர அவதிகனையும் மனத்தளர்ச்சியையும் பொருட் படுத்தா தவனாய்த் தான் எண்ணிச் செய்யப் புகுந்த கருத்துக்களையும் காரியங்களையும் நிறைவேற்றும் திறன் உடையவனே மாந்தர்க்கு ஓர் உன்னத வழிகாட்டியாவன். உறவினர் கைவிடினும், நண்பர் அவமதிப்பினும், பகைவர் பழிப்பினும், அவைகளை லட்சியஞ் செய்யாமல், பிடரியில் படியும் பனித்துளிகளை உதறிச் செல்லும் கேசரி போலும், நூற்றுக்கணக்கான கூரிய ஈட்டிகளாலும் வாள்களாலும் நாலா பக்கங்களிலும் வீசி அடக்கப்படினும் திகிலுற்றுப் பின்னிடாது முன்னே பாய்ந்து பறக்கும் இவுளிபோலும், தன் இலட்சியங்களை நிறைவேற்று பவனே புருஷன்.

''போர் என்பது ஓர் பெரும் சூதாட்டத்தை ஒத்ததாகும். அநித்திய
வெற்றிக்களிப்பும் - தோல்வியின் சோகமும் - தந்திரச் சூழ்ச்சிகளின் ஆரவாரமும்-அகந்தையின் கொக்கரிப்பும் - இறந்தோரின் பயங்கரத் தோற்றமும் - மரிப்பவரின் மனக் கொந்தளிப்பும் தேகவேதனைகளும் - தப்பிப் பிழைத்தவரின் துர்க்கதியும் நிறைந்ததாகும் சமர்க்களம். சூதாட்டத்தில் தன்வாணாள் முழுதையும் கழித்துச் சந்தோஷித்திருக்க முடியாததுபோல், பெருஞ் சூதாட்டமாகிய யுத்தத்தில் தலையிட்டுத் தன் ஜீவகாலத்தை எச்சூரனும் கழிக்க முடியாது,'' எனப் போர்களைப் பழிப்பவர் பழிக்கட்டும். செருக்கும் பேராவலும் மூர்க்கத்தனமுமே போர்களின் பெரும்பான்மைக்கும் மூலக் காரணமாயினும், தர்ம ஸ்தாபனத்திற்கும் சமூக நிலைப்பிற்கும் மாந்தரின் குண வொழுக்கங்களின் தூய்மைக்கும் வன்மைக்கும், சுதந்திர வாழ்க்கைக்கும் ஆதாரமும் துணைக்கருவியுமாவது போரே யாம். சரீரத்தைத் திடப்படுத்தி, ஐம்புலன்களை ஒழுங்குபடுத்தி, மனவலிமையைப் பெருச்சி, அபாயங்களை எதிர்த்து விலக்குதற்கான விரலை ஊட்டுவித்து, மூர்க்கரைத் திருத்தும், அல்லது அடக்கும் பண்புடையதாகும் போர். புறங்காட்டி ஓடி ஒளியாமையும், பார்ப்பவர் மனத்தைக் கவரத்தக்கதான கம்பீரத் தோற்றமும், எச்சந்தர்ப்பத்திலும் சலிக்காத வீரியமும், கோளரிச் கொப்பான பலமும், பெருந்தகைமையும் யுத்தங்கள் வாயிலாகத்தான் உண்டாகிச் செழிச்சின்றன. அடிமைத் தளையைத் தெறித்து உயர்த்தக் கூடியவர் அக் குணாதிசயங்கள் பொருந்தப்பெற்ற தளகர்த்தரும் ராஜதந்திரிகளுமாம்.

அடிமைத்தனத்தையும் பரா முகத்தையும் சோம்பலையும் விருத்தி செய்யும் சமாதானம் வெறுத்துத் தள்ளற் குரியது. ஜீவான்மாவைச் சமாதான நிலை மழுக்கி மாய்த்து விடுகின்றது! மெய் வாழ்க்கை வாழ விரும்புபவன் நானாவிதப் போர்களிலும் எதிர்ப்புக்களிலும் புரட்சிகளிலும் பிரவிர்த்தித்தே தீரவேண்டும். இவ்வாறு செய்தற்கியலாதவன் அடிமையாக்கப் பட்டுத் துடிக்க நேரிடும்.

திட மனமும், வைரநெஞ்சும், வீரிய உணர்ச்சியும், கம்பீரப் போக்கும், தியாக சிந்தையும் படைத்தவர்க்குத்தான் வெற்றியும் வாழ்க்கை யின்பமுல் உண்டாகிப் பெருகும்.

பீரங்கிச் சத்தமும், துப்பாக்கிப் புகையும் யுத்தவீரரின் கோஷமுமே தான் சுதந்திரத்தின் துணைக்கருவிக ளாகும்.

ஆபத்துக் காலங்களில் மனம் புழுங்காமை, விரோதிமுன் தலை குனியாமை, மரணத் தருவாயில் முகவாட்ட முறாமை யாகியவைளே தான் வீரரின் அணிகலங்க ளாகும்.

குகையில் உறங்கும் முண்டச் சந்நியாசிகளோ; உயர்ந்த மேடையிலும் தனி அறையிலும் பிரசங்கித்துப் படித்து ஆர தீர ஆலோசித்துக் கனவுலகில் தோய்ந்து திளைக்கும் பண்டிதராலோ; சுதந்திரஞ் சித்தியாகாது. ஆனால், தன் முன்னிற்குங் கடமைகளைத் தெளிந்து, தன்னம்பிக்கை - நன்னம்பிக்கைகளுடன் அவைகளைச் செய்து முடிக்கக் கூடியவராலும், இடைபூறு இடுக்கண்களால் மனச் சலிப்புறாது தைரியமாக முன் செல்பவராலுமே தான் சுதந்திரத்தின் அளவு பெருக்கப்படும்.

இருட்டிடங்களை அக்னி விளக்குதல் போல், வலிமையற்றுக் கிடக்கும் சமூகத்தையும் மக்களையும் புரட்சிகளானவை வீரம் – ஒற்றுமை – பரஸ்பா அன்பு - விசுவாசங்களால் நிரப்பி ஒளிபெறக் செய்கின் றன.

எதை ஆதரிக்கின்றோமோ அது வளர்கின்றது.

வீரதீரரைப் போற்றாத தேசமும் தேசத்தினரும் மல்கி நிலைகுலைந்து போம்.

விபத்துக்கள் வரும்போது எவன் உள்ளம் நடுங்காமல் துணிவுடன் அவற்றை அகற்ற முயற்சிக்கின்றானோ அவனே தீரனாவன்.

அச்சம் மடமையாகும். துணிவாகிய தாயையும் ஊக்கமாகிய தந்தையையும் பெற்றுள்ளவன் ஞானியா - உயர்ந்து விளங்குவான்.

சுதந்திரத் தாகமும், சுதந்திர உணர்ச்சியும் நிரம்பப் பெற்றுள்ள ஆன்மாவைச் சிறை பயமுறுத்தாது; தண்டனைகள் ஒடுக்கி யடக்கா; உருட்டுப் புரட்டு மிரட்டல்கள் கலங்கச் செய்யா.

ஒற்றுமையில்லாது சமூக வாழ்க்கையில்லை; உயரிய நோக்கங்களும் தயாளத்வமு மில்லாது ஒற்றுமையில்லை; கற்பனா சக்தியும், சுய விசாரிப்பும், சுய முயற்சியுமில்லாது சீரிய லட்சியங்கள் எழுந்து வளர்ந்து நிலைக்கா.

அறிஞர் கற்பனைகளின் உருவமும், மக்கள் தேவை பூர்த்திக்கான சாதனமுமாவது சமூகம்.

சுமூகத்தினரின் ஒத்துழைப்பினாலும், சதாகாலமும் ஆழ்ந்து விரியும் ஆதர்சங்களாலும், இடை விடா வீர தீரச் செயற்களாலுமே தான் ஒரு சமூகம் பலம் பெற்று வளர்ந்து நிலைக்கின்றது.

மனோ பாவனையன்று, ஆனால் தீர்க்கமாக விசாரித்தறிந்து, துணிவுடன் பற்றி நடத்தலே தான் ஒருவன் குண நடத்தைகளின் உரையாணி யாகின்றது.

மடமையை ஒழித்தால் தீமையாகிய புற்று தானே கரைர்து அழியும்.

அடக்கப்பட்ட எண்ணமும் வாக்கும் தடுக்கப்பட்ட வெள்ளத்தை ஒத்தவை.

நன்மை தீமைகளைத் தெளிந்து, பின்னதை விடுத்து முன்னதைக் கொண்டு உயர்தற்குச் சுதந்திரம் இன்றியமையாதது. நன்மை தீமைகளைப் பகுத்தறிந்து எவ்வாறு ஒன்றைக் கொண்டு, மற்றதை விலக்க வேண்டும் என்பதை உறுதியுடன் அறிதற்குக் கல்வி அவசியமாகும். இவைகளுக்குச் சமூக வாழ்க்கையும், இதற்கு ஒத்துழைப்பும் பரஸ்பர அன்பும் பொறுமையும் பிரதானமாகும்.

தொத்துப் பிராணிகளினதை ஒத்த ஜீவனத்தையும், தொழில் இழிந்ததென்ற பாவனையையும், மௌட்டிய இருளைப் போற்றுதலையும், எஞ்ஞான்றும் பச்சாத்தாபக் கடலில் மூழ்கிப் பெருமூச் செறிதலையும், கழிந்துபோனவைகளை மீட்டு மீட்டும் நினைத்து உருகிப் புலம்பு தலையும், புகழ்தலையும் ஒழித்த பின் தான் சீரும் சிறப்பும் உண்டாகும்.

இவ்வுலக வாழ்க்கையைத் துச்சமெனப் பாவித்து, உலகாதிகளைச் பழித்து, பிறப்பின் முன்னும் மரணத்தின் பின்னுமான நிலைமை - நிகழ்ச்சிகளைப் பற்றி விபரீதக் கூற்றுகளைச் சாதித்து வீண் தர்க்கங்களில் இறங்கித் தத்தளித்துப் பொழுது போக்குதலையும், மாந்தருலகில் மலிந்து பெருகி நிற்கும் அசூயை – துவேஷம் - கபடம் முதலானவைகளை ஒழிக்காமல் பெருக்கியே வரும் மதக் காட்சிகளையும் - கற்பனைகளையும் - ஆசாரங்களையும் உதறித் தள்ளியபின் தான் சிறப்பு உண்டாகும். அச்ச உணர்ச்சியைப் போக்கி, ஒற்றுமை - சிரத்தை – விசுவாசம் - உடலுறுதி - திடச்சித்தம் – உழைப்பு - தாராளத்வங்களாகியவைகளை அபிவிருத்தி செய்யும் மதமும் வித்தகமுமே தான் பற்றி அறிந்து ஒழுகுதற் குரித்தானவை.

கண்ணாறப் பார்த்து விநாடிதோறும் கூடிப் பழகி வருபவரை மதியாதவன் காணவுங் கருதவுங் கூடாத ஜகதீசனை எவ்வாறு போற்றித் திருப்திப்படுத்தக்கூடும்?

"கடவுள் – பிரகிருதி - ஜீவான்மாவாகிய இம் மூன்றுக்கு முள்ள சம்பந்தத்தையும் குணத் தாரதம்மியங்களையும் தியான முறையால் உணர்ந்து, சமமும் தமமும் - அகத்தூய்மையும் பாரமார்த்திகச் சிந்தனையும் மாந்தர்க்குள் ஊடுருவிப் பாய்ந்து பதிந்து பெருகினாற்றான், நானாவித அல்லல்களினின்றும் இழிந்த பிறப்புக்களி னின்றும் விடுபட்டு அமர நிலை எய்துதற்கியலும். ஜாதி வேற்றுமைகளும் தனவான்
தரித்திரன் - உயர்வு தாழ்வு – நன்மை தீமை - பாபம் புண்ணியம் என்ற வித்தியாசங்களும் ஆதியிலேயே விதிக்கப் பட்டுள்ளன. அவ்வவர் விதிப்படி ஒவ்வொருவரும் சகியாகவும் துச்சியாகவும் பேதையனாகவும் வித்தகனாகவும் மேலோனாகவும் கீழோனாகவும் பிறந்த
வாணாளைச் செலுத்தி வருகிறான். பேராணியும் - வஞ்சகமும் அகந்தையும் - குரூரமும் நிறைந்துள்ளது மானுடச் சுபாவம், அவைகளை நல்லோர் கூட்டுறவினாலும், ஹிதோப தேசங்களாலும், தெயச் சிந்தனை வழிபாடுகளாலும், மதாநுஷ்டானங்களாலும், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று புனித நதிகளில் நீராடித் தூயனாதலாலும், புலச்சேஷ்டைகளை யடக்கி - மனப் போராட்டங்களைக் கட்டி - இம் மாயா பிரபஞ்சத்தையும் பிரபஞ்சாதிகளையும் வெறுத்து ஒதுக்குதலினாலுமே தான் நான் தேவனாகி ஆனந்திக்கக் கூடும். ஈஸ்வரனுக்கு நம்மீது கருணையும், நமக்கு ஈஸ்வரன் மீது பக்தியும் மத வழிக் கடைப்பிடிப்பும், சாந்தமும் ஜீவான்மாவின் உய்விற்குப் பெருஞ் சாதனங்களாவன்," என்பர் ஒரு சாரார். இவைகளைப் பின்வருமாறு கண்டிப்பர் மற்றொரு சாரார்.

''வெறும் தியானத்தினாலும், ஸ்தல யாத்திரைகளாலும், புண்ணியகதி முழுக்கினாலும், பொய்ப் புராணங்களையும், ஒரு தலை சார்பான – ஆதாரமற்ற தர்ம சாஸ்திரங்களையும் பொருளறியாது மனப்பாடஞ் செய்து ஒதுதலினாலும், தர்ம உபந்நியாசங்களாலும் மானுடனைச் செம்மைப் படுத்திச் சமூக வாழ்க்கையைப் புதுப்பித்து மாற்றிச் சிறக்கச் செய்தற் கியலாது. பொளும் பொருத்தமுமற்ற கேவலச் சாதனைகளையும், நிஷ்பிரயோசனப் பழக்க வழக்கங்களையும் வேருடன் களைந்தெறிய வேண்டும். சதா மாறி வரும் கருத்து அல்லது இலட்சியத்தின்படிச் சமூக அமைப்பையும் போக்கையும் முடிபையும் கழித்துக் கூட்டி மாற்றிப் புதுப்பித்தாலன்றி எந் நன்மையும் உண்டாகாது."

''மானுடச் சுபாவம்'' என்பது தெய்வத்தின் பிரத்தியேகச் சிருஷ்டிப் பொருட்களி லொன்றன்று; மாற்றித் திருத்தற்கியலாத, அல்லது அப்ராகிருத வழியாலே தான் திருந்தக் கூடிய அரும்பெரும் தனிக் குணாதிசயமன்று. தீக்குண நடத்தைகள் – சுசதுக்கங்கள் - உயர்வு தாழ்வுகளின் பெரும்பான்மைக்கும் ''மானுட சுபாவம் " என்ற கற்பிதப் பொருள் உத்தரவாதியன்று; ஆனால், சமூக வாழ்க்கையில், சுயநலத்தின் பொருட்டுச் சிற்சில
கயவரால் ஏற்படுத்தப்பட்டக் கட்டுப் பாடுகளின் பலன்கள் போலும்! பொது
ஜனங்களுக்குக் கல்வி அறிவு அளித்து, அகச் சக்தியையும் உரிமைகளையும் வாழ்க்கைப் பெருமையையும் அவர்களுக்கு உணர்த்தவே, தம்மை வஞ்சித்து அடக்கிய அக் கயவரை எதிர்த்து அழிக்க எழுவார்கள்; எழுந்து எதிர்த்து அழிக்கவே அப் பாதகரின் கொட்டங்கள் அடங்கும்; பின், சமூக அமைப்பும் போக்கும் யாவர்க்கும் பயன் படுமாறு அடியிலிருந்து
திருத்தி மாற்றப்படவே, அவ் விபரீதங்கள் இல்மாமற் போம். எண்ணி றந்த வகுப்புக்களும், பகைமையும், செல்வமும் நல்குரவும், பேதைமைபும் ஞானமும் பிரபஞ்ச சிருஷ்டி நாளில் ஆகாயத்தினின்று குதித்துப் பூமியில் பரவ வில்லை. ஓயாமல் உழைத்தும் பசி தாகங்கள் அடங்கப் பெறாது, தங்கக் குடிசையும் உடுக்கக் கந்தையு மில்லாது பெரும் பான்மையோர் வருந்ததற்கும், சிறு பான்மையோர் அவமே காலத்தைப் போக்கிச் சுகித்துக் களித்தற்கும் கடவுளும் விதியும் பொறுப்பாளிகளன்று. ஆனால் மேற் காட்டியவைகளே தான் காரணம்.”

"மடிமிடிகளின் தாயான அவிவேகத்தை முறித்து, பொருட் செல்வத்தையும் கல்விச் செல்வத்தையும் நாடெங்கணும் கொழிக்கச் செய்தற்கு வாழ்க்கைப் பற்றும், பிரகிருதி அறிவு அல்லது விஞ்ஞான சாஸ்திரப் பயிற்சி தேர்ச்சிகளுமே யல்லாது முற்றத் துறவன்று.”

“கூரையில்லாக் குடிசைகள் நிரம்பி யிருக்கு மிடத்தில், மாட மாளிகைகள் எவ்வாறு உயர்ந்து நிமிர்ந்து நிற்கும்; அரை வயிற்றுக் கஞ்சிக்குத் தவிக்கும் வறிஞர் பெருகி வருகையில், மானுடப் பதர்களான ‘செல்வர்' சுய சுக போகங்களில் உழன்று ரமித்து எவ்வாறு நெடுகால் வாழ முடியும்? இவ்விழலரின் மனைகளெல்லாம் அவ் வேழைகளின் உதிரத்தாலும் நிணத்தாலும் என்புகளாலும் ஆக்கப்பட்டுள்ளனவே யல்லவா! அவ்வெளியரின் வலி வருத்த நெட்டுயிர்ப்புமே அப் "பெருமான்” களுக்கான இனிய சங்கீதம் போலும்! ஓய்வு ஒழிவுக ளில்லாது உழைத்து வாடி உலர்ந்து போன அத் துர்ப்பாக்கியர் தேகங்களின் பொடிகளே அச் “சீமான்"களின் ருசிகர - ரம்மியத்தின் பண்டங்கள் போலும்! கோடீஸ்வரரும் கள்வரும் ஒரே இனத்தைச் சேர்ந்த புல்லர்களாவர். பின்னவர் பகிரங்கமாகப் பிறரை வருத்துகிறார்கள்; முன்னவரோ வெனில், கபட நடிப்பு - போலி மதுர
மொழி - நயவஞ்சகச் செயற்களால் சாதுக்களை மயக்கி வெகு துன்பத்திற் குள்ளாக்குகின்றார்கள்!''

“தேகாரோக்கியம் - மனோவமைப்பு தொழிலேற்று இயற்றும் திறமைகளை யொட்டிய வரையிலும் மாந்தர்க்குள் ஏற்றத் தாழ்வுகள் இருக்கலாம். ஆனால், தேகபோஷணை - சரீர சுகம் - வசதி - உடுப்பு – மனப் பயிற்சிகளுக்கான உரிமைகளை ஒட்டியவரையிலும் யாதொரு பேதமுமில்லை. இவ் விஷயங்களில் பேதங் கற்பிக்கும் கொடியரைப் பலாத்காரமாக அடக்கி அகற்றுதல் சீர்திருத்தங்களு ளெல்லாம் தலையாயது.

பிரகிருதியின் அமைப்பையும் குணா குணங்களையும் ஆராய்ந்து நமக்கு
அநுகூலமாக உபயோகித்தலும், சமூகவாழ்க்ரையின் ஆரம்பத்தையும்
வளர்ச்சி முறைகளையும் - மெய்ந் நோக்கங்கனையும் - மாந்தர் இயல்பையும்
ஊன்றிப் பார்த்து உள்ளபடி அறிதலும், பொய் - கைதவம் – அழுக்காறு -
பகைமை – போர் - கொலை களவு முதலாயினவை உண்டாகிப் பரவுதலின்
காரணங்களையும் நிர்மல மனத்துடன் ஆராய்ந்தறிந்து அவைகளை நீக்குதலுமே தான் வாழ்க்கையின் மெய்ப் பிரச்னைகளாகும்; ஏனைய வெல்லாம்
ஊராரை உருட்டிப் புரட்டித் திகைக்கச் செய்து கடைசியில் யாவரையும் துயரத்துள் அழுத்தற்கான ஆரவாரங்களாகும்.

“மானுடப் பிறப் பெய்தியவர் ஒவ்வொருவரும் தேகங் கெடா வண்ணம் அதைப் போஷித்துக் காப்பாற்றி வருதற்கான அன்னபானாத களையும், மனத்தின் உயர்வுக்கான கல்வியையும், அவரவர் திறனுக் கேற்ற தொழிலைச் சுற்று எத்தகைய அநியாய நிபந்தனைகளாலும் அதர்மக் கட்டுப்பாடுகளாலும் ஒடுக்கி யடக்கப்படாது ஏற்றுச் செய்து சுகித்து இனித் திருத்தற்கான உரிமையையும் உதவிகளையும் பெறவேண்டும். இவற்றை
மறுத்தும் - எதிர்த்தும் - அடக்கியும் வரும் சட்டங்களையும் சம்பிரதாயங்
களையும் அரசுகளையும் சமூகத்தையும் பூண்டோடு அழித்தல் அதர்ம மன்று.

பிரஜைகளின் மேலேற்றத்திற்கான உபாயங்களைத் தெரிவித்து அவைகளை ஒவ்வொருவரும் பின்பற்றி ஒழுக உதவும் சாதனமாம். ராஜாங்கம். குரூரச் சட்டங்களாலும் கொடுர் தண்டனைகளாலும் ஒறுத்து அடக்கி, அடிமை இச்சையையும் – பய வுணர்ச்சியையும் - மூடச் செருக்கையும் - இழிந்த சய பலத்தையும் - கபட - நடத்தைகளையும் அபிவிருத்திக்கும் கல்வி
யையும் சூழ்ச்சிகளையும் போற்றிச் சில நூற்றுவர் பக்கம் சேர்ந்து ஏனையோரை மனங் கொதிக்கும்படிச் செய்யும் பக்ஷபாத அரசை முறித்துத் தாளாக்குதல் முறைமையே.

சதையும் குருதியுமற்ற வெறும் என்புக் கூடுகளான சட்டங்களையும் நீதி நூற்களையும் குவித்து மக்களை நிர்ப்பயத்துடன் முன் செல்லவொட்டாமல் தடுத்துச் சுருக்கிடும் ராஜாங்க முறையை எவ்வளவு சீக்கிரமாக அகற்றுகிறோமோ அவ்வளவு சீக்கிரத்தில் தைரியமும்- வாய்மையும் – அன்பும் - பணக்கமும் - க்ஷேமமும் ஓங்கி உயர்ந்து பரவி நம்மைச் சிறப்பிக்கும்.

"மனிதன் ஓர் மிருகம்; அவனைச் சீர்ப்படுத்திக் கட்டி ஆள்வதற்கு தலைவன் பிரதானமாவன். ஒரு அல்லது பல அதிகாரிகன் மூலமாகத் தான் பொது ஜனங்களுக்குச் சகல நன்மைகளும் உண்டாகும்,'' என்பர் ஒரு சாரார். “கட்டி யாள்பவன் ஒருவனைத் தேடிப் பெற விரும்பி முயற்சிக்கும் மனிதனே தான் விலங்கு; மானிடக் குணாதிசயம் யாதெனில், ஒரு அல்லது பல யஜமானர், அல்லது அதிகாரிகளால் கட்டி ஆளப்படா திருத்தலேயாம்," என்பர் மற்றொரு சாரார். பிரகிருதியை ஒட்டியவரையிலும், பிறர்மீது சர்வாதிகாரம் அல்லது ஏகச் சக்ராதிபத்தியம் செலுத்தற்கான பிரத்தியேக உரிமையையும் திறமையையும் எவனும் பெற்றிருப்பதில்லை; அல்லது உரிமை- திறமைகளுடன் பிறப்பதில்லை. நம்முடைய ஆசாபாசங்களும் சண்டை சச்சரவுகளுமே தான் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுத்து அவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கத் தூண்டுகின்றன. நான் ஒருவன் மேற்காட்டிய காரணத்தினால் கொடுங்கோலனாக விளங்க வேண்டுமென்ற நியதியில்லை. சமூக வாழ்க்கையில், ஒற்றுமை வளர்ச்சிக்கும். வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தியாக்குதற்கும் ராஜாங்கம் சர்வ ஜனங்களாலும் ஏற்படுத்தப் படுகின்றது. அத் தேவைகள் பூர்த்தியாகாத வரையிறும் ராஜாங்கம் நீடித்து நிற்கும். மனத்தேர்ச்சிக்கும் நற் பழக்க வழக்கங்களுக்கும் அது கூலமாயிராத தந்தை தந்தையன்று; வியாதியை முற்றிலும் தீர்க்காது வாணாள் முழுவதும் அவதிப்படச் செய்யும் வைத்தியன் வைத்தியனன்று; இதுபோலவே. மாக்களை மக்களாக உயர்த்தாத அதிகாரி நம்பிப் போற்றுதற் குரித்தான அதிகாரியன்று.

இவ்வுலக வாழ்க்கைமீது மதிப்பு அல்லது பற்றும், வீரிய உணர்ச்சியும், வீரதீரச் செயற்களும் கீழடையவே சுதந்திரம் மடிகின்றது. சுதந்திர இழப்பினால் எண்ணிறந்த வலிவருத்த மேக்கமாகியவை பிரபலமாகின்றன. இப்பொழுது தான் அடிமை வாழ்க்கையும், தொத்துப் பிராணி ஜீவனமும் மேலடைந்து, இடம்ப மதாசாரங்களும், ஊழ்வினைப் பயன் என்ற கற்பனையும் தேவாராதனை மும்முரிப்பும் குடிகொண்டு அனைவரையும் பலஹீனப் படுத்தித் தாழ்த்துகின்றன."

“தைரியம் தளர்ந்து, இச்சா சக்தி குன்றி, கிரியா சக்தி குறையவே, சோம்பல் - அசிரத்தை - தோல்வி யுணர்ச்சிகளின் வசப்படவே, பல பிறவிகளைப் பற்றிய கோட்களும் நம்பிக்கையும், மதக்கட்சிகளும் பரஸ்பர முரண்பாடும் வைரப்பகையும், தத்துவ வகுப்புக்களும் செழிக்கின்றன.

      “ஒருவனுடைய பெருமை – சிறுமைகளுக்கு மூல காரணமாவன அவனுடைய குண வொழுக்கங்களே யல்லாமல் குடிப்பிறப்பன்று. பிறப்பை யொட்டிய வரையிலும், சகல உடைமை உரிமைகளையும் அனைவரும் சமமாகப் பெற்று அனுபவித்தற்குத் தகுதியுடையராவர்.”

ஆனந்த போதினி – 1942 ௵ - மே ௴

 

 

 

 

No comments:

Post a Comment