Thursday, September 3, 2020

 நவரத்தினங்கள் நபிகள்நாயகம் நவின்றருளியது

 

இறைவனால் இயற்றப்பெற்ற எப்பொருள் கண்மாட்டும் அன்பு பாராட்டுகிறவரிடம் அந்த ஒப்பற்ற இறைவனும் அன்பு பாராட்டுகிறான்; ஆகலின் தூயவனா யிருப்பினும், தீயவனா யிருப்பினும், யாரா யிருப்பினும் இவ்வையகத்தின்கண் உள்ள மனிதரிடத்து அன்பாயிருக்க வேண்டும். தீய தன்மையுள்ள மனிதனிடத்து அன்பா யிருப்பதால் அன்னவன் அத்தீமையி னின்றும் நீங்கி விடுகின்றான். இதனால் விண்ணுலகில் வாழும் அமரர்கள் உங்கள்மாட்டு அதி அன்பா யிருப்பார்கள்.

 

"குர் ஆன் ஷரீபில்'' ஐந்து விடயங்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன. அவை, சட்டத்துக்கு உடன்பாடான விடயங்களும், சட்டத்துக்கு முரணான விடயங்களும், தெள்ளியதாகவும் அழுத்தமாகவும் கூறப்பட்ட உபதேசங்களும், கரந்துறையும் இரகசியங்களும் திருஷ்டாந்தரமா யிருக்கின்றன. ஆதலின் ஏவலான விடயங்களைச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டவை யென்றும், விலக்கலான விடயங்களைச் சட்டத்துக்கு முரணானவை யென்றும் கருதி, உண்மையான உபதேசங்களுக்குக் கீழ்ப்படிந்து, கரந்துறைவனவற்றை யெல்லாம் நம்பி, திருஷ்டாந்தரமான விடயங்களிலிருந்து நல்லறிவைக் கற்றுக் கொள்ளுங்கள்.
 

நீர் வார்த்தையாடும் போழ்து உண்மையையே யுரைப்பீராக; ஒருமுறை வாக்களித்துவிட்டால் அதை நிறைவேற்றி வைப்பீராக; நும்மிடம் அயலாரால் ஒப்புவிக்கப்பட்ட அமானத்தை (அடைக்கலம்) பூர்த்தி செய்வீராக; அயலார் மனை விழையாதிருப்பீராக; விபசாரத்தினின்றும் விடுதலைபெறுவீராக; ஆபாஸமான துராசைகளை பொறுத் தெறிவீராக; சட்டத்துக்கு முரணானதும் தீமையானதுமான வஸ்துவைத் தீண்டுதலினின்றும் நும்முடைய கரத்தை விலக்கி வைப்பீராக; எஞ்ஞான்றும், எப்போழ்தும் அவ்விணையிலா இறைவனையே யுன்னி யிறைஞ்சித் துதிப்பவர்கள் அவ்விறைவனுடைய அருண்மிக்க நல்லடியாராகின்றனர். எப்போழ்தும் குறளை கூறிக்கொண்டும், மித்திர பேதத்தால் நண்பர்களை ஒருவரைவிட்டு ஒருவரைப் பிரிவினை செய்துகொண்டும், நல்ல மனிதர்களிடத்தில் என்ன விதமானதீமைகளுண்டென்று அவற்றைத் தேடிக் கொண்டும் அலைபவர்களே இறைவன் மாட்டு கெட்ட அடியார்களாய் விடுகிறார்கள்.

 

ஒரு சிநேகிதனை மற்றொரு சிநேகிதனுடன் சேர்த்து வைக்கும் பாலமானது மரணமா யிருக்கிறது.

 

இப்பரந்த பூவுலகமானது மறுவுலகுக்கு வேண்டிய உழுநிலமா யிருக்கிறது. ஆதலின் அவ்வுலகில் அறுவடை செய்யும் வண்ணம் இவ்வுலகில் நன்மை செய்யுங்கள்; ஏனெனின்? நாமெல்லாம் முயற்சி செய்ய வேண்டு மென்பது தான் இறைவனுடைய கட்டளை; இறைவன் அருளியதை நாம் அடைய வேண்டுமாயின் நம்முடைய முயற்சியைக் கொண்டே அதைப் பெற வேண்டும்.

 

எவனொருவன் அறிவைத் தேடி அதை அடைகிறானோ அன்னவன் இருவகையான வெகுமதி பெறுவான்; அறிவையடைய வேண்டுமென்று உன்னினதற்காக ஒரு வெகுமதியும், அப்படிப்பட்ட அறிவை அடைந்ததற்காக மற்றொரு வெகுமதியும் பெறுவான். ஆகலின் ஒருவன் அறிவையடைய வேண்டுமென்று ஆர்வங்கொண்டு விடுவானாயின் அவ்வகை யறிவு அவனுக்கு எய்தா விடினும் அவனுடைய ஆவலுக்காக மட்டுமாவது ஒருவகை வெகுமதி கிடைக்கும்.

 

நான்கு விதமான பண்புகளின் காரணமாக ஒரு பெண்ணை மணவினை செய்து கொள்ளலாம். (1) அவளுடைய ஐஸ்வரியம்; (2) அவளுடைய குலத்தின் தொன்மைப் பெருமை; (3) அவளுடைய எழில்; (4) அவளுடைய சற்குண விசேடம்; இவற்றுள் குணவிசேடமுள்ள நல்ல பெண்ணையே நீங்கள் தேடிக்கொள்ளுங்கள்; இந்த ஒரு காரணத்தாலல்லாமல் வேறு ஏதேனுமொரு ஏதுவால் ஒரு பெண்ணை நீங்கள் மணவினை செய்துகொள்ளுவீர்களேல் உங்களுடைய கரங்கள் புழுதியிற் போட்டுத் தேய்க்கப்படட்டும்.

 

என்னுடைய இறைவன் எனக்கு ஒன்பது காரியங்களை நியமித்திருக்கின்றான். அவையாவன : (1) அகத்தினாலும் புறத்தினாலும் அவ்விறைவனுக்கு வணக்கம் புரிதல் : (2) செல்வ நிலையின் போழ்தும் ஏழ்மையின் போழ்தும் வாய்மை பிறழாமலும், தகுந்த வண்ண மாகவும் பேசுதல் : (3) செல்வாக்கிலும் நல்குரவிலும் மிதமா யிருத்தல்; (4) எனக்குக் கிஞ்சிற்றும் உதவி புரியாத அப்படிப்பட்ட உற்றாருக்கும், உறவினருக்கும் நான் உதவி புரிதல்; (5) எனக்கு இல்லை யென்பவனுக்கு யான் இல்லை யென்னாது தருமம் ஈதல்;(6) எனக்குத் துன்பம் புரிகிறவனை நான் மன்னித்தல்; (7) ஆண்டவன் சார்பான ஞானத்தைப் பெறும் பொருட்டு மௌனமா யிருத்தல்; (8) நான் பேசும் போது அவனை (இறைவனை) யும் குறித்துப் பேசவேண்டும்; (9) இறைவனுடைய சிருஷ்டிகளைக் காணும் போழ்து அவற்றிற்கு என்னுடைய பார்வையானது மற்றையோருக்கோர் உதாரணமா யிருக்க வேண்டும்; மேலும் சட்டத்துக் கேற்ற காரியத்திலேயே நான் பிரவர்த்திக்க வேண்டுமென்று அவ்விறைவன் கட்டளை யிடுகின்றான்.

 

இறப்பும் பிறப்பும் இன்றி ஒப்பற்று விளங்கும் அவ்விறைவனுக்கு வேறொன்றை இணைவைப்பதும், நும்முடைய தாய் தந்தையரைத் துன்புறுத்துவதும், நும்முடைய மனித வர்க்கத்தைக் கொலை புரிவதும், நீங்களே தற்கொலை புரிந்து கொள்வதும், பொய்ச் சாத்தியம் பண்ணுவதும் மகா கொடிய பாபங்களா யிருக்கின்றன.

 

ஆனந்த போதினி – 1929 ௵ - செப்டம்பர் ௴

 

 

No comments:

Post a Comment