Thursday, September 3, 2020

 நவராத்திரி மகிமை

நவராத்திரி என்பது புரட்டாசித் திங்கள் சுக்கிலபக்ஷ பிரதமை முதல் நவமி வரை கூடிய ஒன்பது தினங்களாகும். இத்தினங்களில் பகலிலும் விசேடமாக இரவிலும் பூஜை புரிவர். இராக்காலங்களில் புரியும் பூஜை ஈசுவரிக்கு விசேஷமானதால் இத்தினங்களுக்கு நவராத்திரி என்று பெயர் உண்டாயிற்று.

 

இது ஈஸ்வரியைக் குறித்து செய்யும் பூஜை. நவராத்திரி ஒன்பது நாட்களிலும் பிரம்மசாரிகளும், துறவிகளும், விதவைகளும், ரஜஸ்வலைகளும், மற்றுமுள்ள எல்லோரும் பகலில் ஒருவேளை போஜனம் உண்டு இரவில் மட்டும் உபவாசமிருந்து வருவார்கள். இதை அனுஷ்டிப்பவர்கள் எவ்விதமான கஷ்டமும் துக்கமும் அடைய மாட்டார்கள். இந்த விரதத்தால் அநேகபலன்களும் நல்ல சுகவாழ்வும் உண்டாகும்.

 

இந்த ஒன்பது தினங்களிலும் நியமமாய் விரதத்தை வகிக்க இயலாதவர்கள், பத்திரகாளி அநேககோடி யோகினிகளோடு தோன்றி தக்ஷயாகத்தை அழித்த தினமாகிய அஷ்டமி தினம் அவசியம் அனுஷ்டிக்க வேண்டும்.

 

நவராத்திரியின் கடைசி நாளாகிய நவமி திதியில் சரஸ்வதியை ஆராதிக்க வேண்டும். சரஸ்வதியை ஆராதிப்போர் மூல நக்ஷத்திரத்தில் சரஸ்வதியை ஆவாஹனம் செய்து பூராட நக்ஷத்திரத்தில் விசேஷமாய் பூஜித்து, உத்திராட நக்ஷத்திரத்தில் தூப தீப நைவேத்தியங்கள் புரிதல் வேண்டும். திருவோண நக்ஷத்திரம் முடியும் போது சரஸ்வதியை தனது ஸ்தானம் அடையும்படி விசர்ஜனம் செய்யவேண்டும். சரஸ்வதி பூஜை புரியும் நவமிக்கு "மஹா நவமி” என்று பெயர்.

 

ஆயுத பூஜையானது நவராத்திரியின் ஓர் பாகம். சரஸ்வதி பூஜையும் அன்றைய தினமே கொண்டாடப்படுகிறது. மகா சாத்துவிக பூஜையாகும். ஆன்றோர்கள் இலக்குமி, சரஸ்வதி, பார்வதி என்னும் மூன்று தேவிகளையும் வணங்குவார்கள். ஆயுதபூஜை அரசர்களுக்கே உரியது. ஆயுதம் என்பது போர்க்கருவிகளையே குறிக்கும். படி, மரக்கால், உலக்கை, மண்வெட்டி, கட்டப்பாரை முதலியன அல்ல. ஆகவே நமக்கு இலக்குமி பூஜை யும் சரஸ்வதி பூஜையுமே உரியவை. எனினும் ஆயுதபூஜை புரிவது குற்றமல்ல. ஆனால் நம்மவரிற் பலர் உண்மை யறியாதவர்களாய் ஆயுத பூஜை என்று கூறிக்கொண்டு ஆடு, கோழிகளை வெட்டி, பூஜைக்கு படைத்து, கள் கொண்டு ஆராதித்து உண்டு மகிழ்வர். இது வழக்கத்தின் பாற்பட்டதேயன்றி புராணங்களில் தக்க ஆதாரம் கிடைத்திலது.



நிற்க, நவராத்திரி முடிந்ததன் பிறகு அதற்கு மறுநாளாகிய தசமிக்கு "விஜய தசமி" என்று பெயர். இத்தினத்தில் தினகரன் மேற்கடலில் சாயும் போது வானத்தில் கொஞ்சம் நக்ஷத்திரம் பிரகாசிக்கும் தருணம் சந்தியாகாலம் சென்ற பிறகு ஏற்படும் காலத்திற்கு "விஜயம்'' என்று பெயர். இந்தக் காலமானது மக்களுடைய சகல கோரிக்கைகளையும் தர வல்லது. இத்தருணத்எவரெவர்கள் தமக்கு நினைத்த காரியம் வெற்றி பெற வேண்டுமென்று எண்ணுகிறார்களோ அவர்கள் எல்லோரும் அவ்வேளையில் தமது இடத்தை விட்டு சிறிது தூரம் வடக்கி நோக்கி பிரயாணம் புரிதல் வேண்டும். தாமிதிதியும் திருவோணமும் கூடிய தினத்தில் மாலை வேளையில் பிரபாணம் போனால் மிகவும் நல்லது.

 

மது என்னும் அசுரனை கொல்லும் பொருட்டு மேருபர்வதத்தில் மகாவிஷ்ணுவும், விருதாசுரனை வதம் புரியும் நிமித்தம் இந்திரனும், விசுவாமித்திரர், பிருகு , வசிஷ்டர், காசிபர், பிருகஸ்பதி முதலிய முனிவர்களும் இந்த விரதத்தை அனுஷ்டித்து நற்பேறு பெற்றுள்ளார்கள்.

இராகவன் சீதா தேவியை இழந்து கிஷ்கிந்தையில் துக்கத்தைக் கொண்டுள்ள போது நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து சேது பந்தம் புரிந்து இராவணனை வென்று மிக்க மகிழ்வடைந்து உலக மக்களுக்கு திருப்தியை அளித்தார்.


இது பெண்மக்கள் அனுஷ்டிக்கப்பட வேண்டிய ஒரு சிறந்த விரதமாகும்.

 

விதிப்படி பிரதமை முதல் திரிதியை வரையில் உருத்திரி தேவியையும், சதுர்த்தி முதல் சஷ்டி வரையில் இலக்குமி தேவியையும், சப்தமி முதல் நவமி வரையில் நாமகளையும் பூஜித்து பின்பு இந்த விரதத்தை தசமி யன்று பூர்த்தி செய்தல் வேண்டும். அரசாட்சியை இழந்து வருந்திக் கொண்டிருந்த சுகேது என்னும் அரசனின் மனைவி துவேதியை ஆங்கீரச முனிவரது உபதேசப்படி இதனை அனுஷ்டித்தார். அதனால் அந்த அன்னைக்குப் பின்னர் சூரியப் பிரதாபன் என்னும் ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தை வய தடைந்ததும் தனது தந்தை இழந்த நாட்டைப் பகைவரிடத்திலிருந்து வென்று தாய் தந்தையர்களுடன் பலவித செல்வங்களையும் அடைந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இத்தகைய மகிமை பெற்ற விரதத்தை அனுஷ்டித்து வாழ்க்கையை மேன்மைப்படுத்துவது பெண்மக்களின் முக்கிய கடமை யாகும்.

 

ஆனந்த போதினி – 1932 ௵ - செப்டம்பர் ௴

 

No comments:

Post a Comment