Thursday, September 3, 2020

 

நவராத்திரி விரதம்

 

வசந்தருதுவிலும் சரத்ருதுவிலும் மனிதர்களுக்குப் பலவித நோய்களும் வியாதிகளும் ஏற்படுகின்றன. இந்த இரண்டுருதுக்களும், யமனு டைய இரண்டு கோரைப் பற்களுக்குச் சமமானவை என்பர். அந்த தீமைகளிலிருந்து தப்புவதற்காக இவ் விரதத்திற்கு வேண்டியவைகளை அமாவாசை தினத்தன்றே சேகரித்துக்கொண்டு அன்று ஒரு வேளை யுண்டு உபவாச மிருந்து அடுத்தநாள் பிரதமை முதல் தேவியைப் பூஜை செய்ய ஆரம்பிக்க வேண்டும். நான்குமுழ நீளமும் ஒருமுழ உயரமும் உள்ள பீடத்துடன் கூடிய ஓர் அழகிய மண்டபத்தில் ஒரு சிம்மாஸனம் அமைத்துத் தேவியைப் பூஜை செய்ய விரும்புகின்றவர், வேதம் உணர்ந்த அந்தணர் ஒன்பதின்மர் அல்லது ஐவர், மூவர், ஒருவருடன் அந்த
 மண்டபத்திற் சென்று அங்கு அமைக்கப் பட்டுள்ள சிம்மாதானத்தில் சங்கு, சக்ர, கதா பத்மத்தோடு கூடி சதுர்ப்புஜங்களுடனாவது, அல்லது பதினெண்கரங்களுடனாவது தேவியின் திரு உருவத்தை ஸ்தாபித்து, அதைப் பலவித ஆடையாபரணங்களினால் அலங்கரித்துக் கும்ப பூஜையின் நிமித்தம் கலசம் ஸ்தாபித்து அதில் கங்கை, யமுனை, காவேரி, கோதாவரி முதலிய நதிகளின் புண்ய தீர்த்தங்களில் ஏதாவதொன்றை நிரப்பி மாவிலை முதலிய ஐந்துவகைத் தளிர்களை அந்தக் கலசத்தின் மேலே வைத்துப் பூஜை செய்தல் வேண்டும். பின்னர் சங்கற்பஞ் செய்து கொண்டு நல்ல வாசனைத் திரவியங்களினாலும் புஷ்பங்களினாலும் அம்பிகையை அலங்கரித்துத் தூப தீபங்களால் மந்திர பூர்வமாய் விதிப்படி பூஜித்து நவா வரண பூஜையுஞ்செய்து அர்க்கியங் கொடுத்துப் பலவிதமான நிவேதனங்களைச் செய்தல் வேண்டும். பின்னர் ஹோமம் செய்வதற்காக
குண்டம் அமைத்துத் தண்டிலம் இட்டுப் பூர்த்தி செய்தல் வேண்டும். நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்துப் பராசக்தியைப் பூஜிப்பவர்கள் சயன சுகாதிகளை யெல்லாம் அறவே ஒழித்துவிட்டு அக்காலங்களில் தரையில் படுத்து நித்திரை செய்ய வேண்டும். பிரதமை தினத்தில் அஸ்த நக்ஷத்திரங் கூடினால் அது மிகவும் விசேஷமான தென்றும், அத்தினத்தில் அம்பிகையைப் பூஜித்தால் தேவி சகலாபீஷ்டங்களையுந் தருவள் என்றும் பெரியோர் கூறுகின்றார்கள்.

 

கும்பபூஜை முதல் ஹோமம் முடியும் வரையில் தேவி பூஜை செய்வோர்கள் செய்யவேண்டிய காரியங்களை யெல்லாம் விடாமல் செய்து முடித்துப் பின்னர் கன்னிகைகளைப் பூஜிக்க வேண்டும். நவராத்திரியில் பூஜிக்கத்தகுந்த கன்னிகைகள் இரண்டு வயது முதல் பத்து வயதுக் குட்பட்டவர்களாக இருத்தல் வேண்டும். பத்து வயதிற்கு மேற்பட்டவர் கன்னிகைகள் பூஜிப்பதற்குத் தகுந்தவர்களல்லர். இக் கன்னிகைகளை வேதமந்திரங்களால் தினம் ஒவ்வொருவராகவாவது அல்லது முதல் நாள் முதல் ஒவ்வொருவர் அதிகமாகவாவது சேர்த்துப் பூஜை செய்தல் வேண்டும். பூஜிக்க அசக்தியுள்ளவர்கள் அஷ்டமி தினத்திலாவது அவசியம் பூஜிக்க வேண்டும். அஷ்டமி தினத்தில் தான் முன்னர் தக்ஷயாகத்தை அழித்த பத்திரகாளி தோன்றினாள் என்று சொல்லப்படுகின்றது. ஒன்பது இராத்திரிகளிலும் பராசக்தியைப் பூஜிக்க முடியாதவர்கள் சப்தமி, அஷ்டமி, நவமி இம்மூன்று நாட்களிலும் பூஜிப்பார்களானால் அவர்கள் ஒன்பது தினத்திலும் பூஜித்த பலனை அடைவர். இதனை அனுஷ்டிப்பவர்கள் இவ்வுலகில் எல்லாச் செல்வங்களையும் அடைந்து சந்தோஷமாக வாழ்வதுமன்றி இறுதியில் உயர்பதவியையும் பெறுவர். இவ் விரதத்தை சுசீலன், சுகேது முதலியவர்கள் அனுஷ்டித்துப் பல நன்மைகளையும் அடைந்தனர்.

 

இது புரட்டாசி மாதம் பூர்வபக்ஷப் பிரதமை முதல் தசமி வரையில் அனுஷ்டிக்கப்படவேண்டிய ஒரு சிறந்த விரதமாகும்.

 

விதிப்படி பிரதமை முதல் திரிதியை வரையில் உருத்திரி தேவியையும், சதுர்த்த முதல் சஷ்டி வரையில் இலக்குமி தேவியையும், சப்தமி முதல் நவமிவரையில் சரஸ்வதிதேவியையும் பூஜித்து பின்பு இந்த விரதத்தைத் தசமியன்று பூர்த்தி செய்தல் வேண்டும். அரசாட்சியை இழந்து வருந்திக்கொண்டிருந்த சுகேது என்னும் அரசனின் மனைவி துவேதியை ஆங்கிரசமுனிவரது உபதேசப்படி இதனை அனுஷ்டித்தார். அதனால் அந்த அன்னைக்குப் பின்னர் சூரியப் பிரதாபன் என்னும் ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தை வயதடைந்ததும் தனது தந்தை இழந்த நாட்டைப் பகைவரிடத்திலிருந்து ஜெயித்து தாய் தந்தையருடன் பலவித செல்வங்களையும் அடைந்து சந்தோஷமாக வாழ்ந்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டுப் பெண்மணிகள் அனைவரும் பக்தியுடன் இவ்விரதத்தைத் தவறாமல் அனுஷ்டித்து தேவியின் அருளால் எல்லாச் செல்வங்களையும் அடைந்து தங்களது வாழ்க்கையை மேன்மைப்படுத்துவார்கள்ளாக.

 

வ. ச. சூரிய நாராயண மூர்த்தி, வாலாஜா.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - செப்டம்பர் ௴

 

 

 

No comments:

Post a Comment