Friday, September 4, 2020

 

பள்ளிக்கூடத் தோட்டம்

 

1. பிரதி பள்ளிக்கூடங்களிலும் சிறு தோட்டம் வைப்பது அவசியமேயாகும். அத்தோட்டத்தில் செய்யும் செடி, கொடி, பயிர் வகைகளெல்லாம் சுமார் ஒரு வருஷத்திற்குள்ளாகவே அறுவடையாகும் படியாகவே யிருக்கவேண்டும் அப்படியிருப்பதால் பள்ளிக் கூட மாணவர்கள் மேற்படி தாவரவகைகள் ஒவ்வொன்றும் பலன் தரும் காலம், அக்காலங்களில் தாவரங்கள் இருக்கும் நிலைமை, முதலியவைகளை அறியலாம்.

 

2. அப்படித் தாவரங்களை வைத்துப் பயிர் செய்வதில் பிள்ளைகளுக்குச் செடிகளின் மேல் உண்டாகும் கருணை, ஜீவகாருண்யம், தர்மம் ஆகிய இச்செய்கைகள் விருத்தியடையும். மேற்படி தாவரங்களுக்குத் தகுந்த நிலம் ஏற்படுத்தலும், இடையூறுவராதவண்ணம் களைகொத்துதலும், அவைவாடிச் செத்துப் போகாதவண்ணம் சமயத்தில் தண்ணீரும், எருவும் தருதலும் ஆகிய இத்யாதி தொழில்களில் பிள்ளைகளுக்கு அனுபவமுண்டாகும்.

 

3. மேற்படி தாவரங்களில் உற்பத்தியாகும் காய், பூ இவைகளைக் கண்ட மாத்திரத்தில் பிள்ளைகளின் மனதுக்கு ஓர் சந்தோடமும் அவைகளைப் பயன் படுத்தத் தக்க முறைகளைக் கற்றுக்கொள்ளுவதில் விருப்பமும் உண்டாகும்.

 

4. மேற்படி தாவர வகையராக்கள் பயிர் செய்வதால் சுகாதார விதியின்படி அவை கெட்ட காற்றை உட்கொண்டு பிராணவாயுவை நமக்குத் தந்தும் நாம் விடும் கரியமல வாயுவை அவை உட்கொண்டும் நமக்கு உயிராதாரமா யுதவுகின்றன.

 

5. தாவரங்கள். பள்ளிக்கூடத் தோட்டத்திலிருப்பதால் அவை வெயிற்காலங்களில் பள்ளிக்கூடத்துள் அநேக பிள்ளைகள் புழுக்கத்தால் அவஸ்தைப்படா வண்ணம் குளிர்ந்த காற்றைக் கொடுப்பதுடன் பூக்கள் நிறைந்த காலத்தில் மனச் சந்தோஷத்தையும், நறுமணத்தையும் அளிக்கும். இவற்றைக் கண்ட மாணவர்கள் அதிக சந்தோஷ முகத்துடன், வீதியிலும், வீடுகளிலும் நினைத்தபடி ஓடியாடித் திரியும் துற்குணத்தை நீக்கிப் பள்ளிக்கூடம் வந்து சேரும் நல்ல வழக்கத்தை அனுசரிக்கிறார்கள்.

 

6. மேற்படி தோட்டத்தால் உபாத்திமார்களும் பிள்ளைகளுக்குச் சொல்லும் சித்திரம், கதை, பாட்டு ஆகிய இவைகளுக்குச் சமயோசிதமாய் திருஷ்டாந்தப்படுத்திக் காட்ட அதிக சவுகரியம் ஏற்படும்.

 

7. இப்படித் தாவரவகைகளைப் பள்ளிக்கூடத் தோட்டத்தில் வைத்துப் பழக்குவது, ஒரு சமயம் தற்போது உபாத்தியாயருடைய அனுமதிக்குட்பட்டுப் பிள்ளைகள் செய்வதாயிருப்பினும், பின்னால் மேற்படி பிள்ளைகள் பெரியவர்களாகி ஒவ்வொருவருக்கும் விவசாயத்தில் பற்றுண்டாகி, "மேழிச்செல்வம் கோழைபடாது'' என்னும் முதுமொழிப்படி. பயிர்த்தொழிலையும் செய்து ஜீவிப்பார்களென்ற நோக்கமுள்ளதாகும்.

 

8. சிலர் பள்ளிக்கூடத் தோட்டம் அவசியம் என்று சொல்லுகிறார்களேயென்று உபாத்தியாயர்கள் தத்தம் சொந்த உபயோகத்தைக் கருதித் தமக்கிஷ்டமான பயிர்களை மிதமில்லாமல் வைத்துப் பிள்ளைகளை இம்சிப்பது கூடாது.

 

9. பள்ளிக்கூடத் தோட்டத்தைப் பள்ளிக்கூடத்தில் பிள்ளைகள் இருக்கும் சக்திக்குத் தக்கவாறு அமைக்கவேண்டும். பிள்ளைகளுடன் உபத்தியாயரும் கலந்து வேலைகள் செய்யவேண்டும்; தாவரங்களில் பள்ளிக்கூடத்திற்கு வேண்டிய செடிகளை அதாவது, சாமந்தி, மல்லிகை, பத்ராக்ஷை, க்ரோட்டன், காசலரி, தங்கலரி, கொத்துமல்லி, வாழை முதலிய வைகளையும் இன்னும் ரோஜா முதலிய அழகியபூவகைகளையும் தான் வைக்க வேண்டும். இவைகளுக்கு 15 தினத்திற்கு ஒரு தடவை கொத்திவிடுதலும் கூடுமானால் பிரதி தினமும் இல்லையேல் வாரத்தில் 2 அல்லது 3 தடவையும் தண்ணீர்விடவும் வேண்டும். தோட்டவேலைகளை நினைத்தவேளைகளில் செய்யாமல் காலை 6 - மணிக்குமேல் 71/2 - மணிக்குள்ளும், மாலை 41/2 - மணிக்கு மேல் 6 - மணிக்குள்ளும் செய்யச்செய்வது சரியான காலமாகும். இவ் வேளைகள் தவறில் தேகசிரமமும், மற்றபாடங்களுக்கு இடைஞ்சலும், அருவருப்பும் ஏற்படும். இது சகல நேயர்களுக்கும் தெரிந்த விஷயமே.

 

ஆகவே நம் நேயர்களாகிய எல்லாப் பள்ளிக்கூட உபாத்திமார்களும் சிறிது சிரம மேற்கொண்டு தத்தம் பள்ளிக்கூடங்களில் பள்ளிக்கூடத் தோட்டம் அவசியம் ஏற்படுத்திப் பிள்ளைகளுக்கு மேல் சொன்ன சந்தோஷத்தை உண்டு பண்ணிச் சுகத்தை தேடிவைக்கும்படி மன்றாடிக் கேட்டுக் கொள்ளுகிறேன்.

 

தவிர, மேற்படி விஷய முயற்சியால் நம் கல்வியிலாகா அதிகாரிகளும் நம்மேல் அதிக திருப்தியும் அடைவார்கள் என்பது திண்ணம்.


M. V. துரைசாமி அய்யர், சிங்கிபுரம்.

 

ஆனந்த போதினி – 1921 ௵ - மார்ச்சு ௴

 

   

 

No comments:

Post a Comment