Friday, September 4, 2020

 

பன் மொழிக் கோவை

(சில மகான்களின் அரிய உபதேசங்கள்)

 

இவ்வரிய உபதேசங்களில் சில தஞ்சையில் வெளியாகும் வாரப்பதிப் பாகிய ''சமரச போதினி'' யில் வெளியாயிருந்தன. அவற்றோடு இன்னும் சில மகான்களின் அருள் வாக்கியங்களையும் சேர்த்துச், சிற்றறிவுடைய அடியேனால் இக்கோவை எழுதப்பெற்றது. நமக்கரிய தோழமையா விருப்பதுடன் ஆசிரியத்தன்மையும் பூண்டு விளங்கும் ஆனந்தபோதினியைக் கண்ணுறும் ஒவ்வொருவரும் இதிலடங்கிய ஆழ்ந்த கருத்துக்களை ஊன்றி உணர்வார்களாக. –


1. சுவாதீனத்தின் பயன் சுகம்; சுவாதீனம் மனவுறுதியின் பயன். - (பெரிக்ளன்)

 

2. நம்மை அறநெறியில் நிற்கக் கற்பிப்பதே சகல சமயங்களிலும் மெய்ச்சமய மாகும். - (ஸவானரோலா)

 

3. துக்கத்தைவிடக் கவலையை நீக்குவதே கடினம். நாளடைவில் துக்கம் நீங்கும், கவலை வளரும். - - (மான் பௌல்)

 

4. கோழை இறப்பது பலமுறை. வீரன் இறப்பது ஒரு முறையே - (ஷேக்ஸ்பியர்)

 

5. அவன் எதை உணரவில்லையோ அது அவன் பொருளல்ல - (கதே)

 

6. சத்தியத்தால் சுவாதீனம் அடைந்தவனே சுதந்தர புருஷன்; மற்றவர்கள் அனைவரும் அடிமைகளே. - (கௌப்பர்)

 

7. துன்பத்தை அதிகமாக அனுபவிக்கக் கூடியவனே அதிகமாக நன்மை செய்யக்கூடும். - (மில்டன்)

 

8. நான் என் கடமையைச் செய்துவிட்டேன்; அதற்காகக் கடவுளைத் தொழுகின்றேன். - (நெல்ஸன்)

 

9. அன்புடையவனே வாழ்பவன். - (அந்தோனி முனி)

 

10. அறநெறியில் ஆசை கொள்; அதுதான் சுதந்தரம் அளிப்பது. (மில்டன்)

 

11. துக்கமார்க்கம் ஒன்றே துக்க நிவர்த்திக்குச் செல்லும் மார்க்கம். - (கொளப்பர்)

 

12. குற்றம் செய்வது மனிதகுணம், மன்னிப்பது தேவகுணம். - - (போப்)

 

13. உன்னைப்பற்றி அபவாதம் உரைப்பின், அது மெய்யானால் திருத்துக்க; பொய்யானால் நகுக. - (எபிக் டெட்டஸ்)

 

14. நன்மைக்கு நன்மை செய்யாமை மனிதத் தன்மையற்றது. நன்மைக்குத் தீமை செய்தல் இராக்ஷசத் தன்மையுற்றது. - (செனீக்கா)

 

15. மனிதனுக்கு இவ்வுலகில் வேண்டுவது அற்பம்; அதுவும் சிறிது நாட்டுக. - - (கோல்ட் ஸ்மித்)

 

16. அன்புடையவனுக்குத் தெளிவாய் விளங்காம லிருக்கலாம். ஆனால் துவேஷ முடையவனுக்கு ஒன்றுமே விளங்குவதில்லை. - (இஸிடோர் முனி)

 

17. தனிமையாக இருக்க முடியாததினாலேயே சகல துன்பங்களும் உண்டாகின்றன. - (ஸா புரூயர்)

 

18. இன்பமுறுதல் எளிதான காரியமன்று. நம்மகத்துள் அதைக் காண்டல் மிக்க கஷ்டம்; ஆனால் அதை வேறெங்கும் காணவும் முடியாது. - (ஷாம்பர்ட்)

 

19 இராட்சதன் பலம் இருந்தால் நலம்; ஆனால் இராட்சதனைப் போல அதை உபயோகித்தல் தீது. - (ஷேக்ஸ் பீயர்)

 

20. ஈதலாகிய பெரும்போகம் இத்தகைய தென்றறிய ஏழையா யிருக்க வேண்டும். - (ஜார்ஜ் எலியட்)

 

21. இசையின்றி இருயுகம் வாழ்தலினும் இசையுற ஒருபொழுது வாழ்தலே ஏற்றமுள்ளது. - (ஸ்காட்)

 

22. உன்னை மெய்யனாக்கிக்கொள். அப்பொழுது உலகில் ஒரு துன் மார்க்கன் குறைந்தான் என்று நீ நிச்சயமாய் அறிந்து கொள்ளலாம். - (கார்லைல்)

 

23. நாணயம் நல்ல தந்திரமே. ஆனால் அதை அவ்விதம் மதிப்பவன் நாணயஸ்தன் அல்லன். - (வாட்லி)

 

24. எவரைக்காணுந்தோறும் இறைவன் ஞாபகம் வருகின்றதோ அவரே ஆண்டவன் அடியாரில் சிறந்தவர். - (முகமது நபி)

 

25. கீர்த்தி இழந்தவன் தன்னையே இழந்தவன். - (ஷேக்ஸ்பியர்)

 

26. கற்றவர் என்பவர் யார்? கற்றபடி நிற்பவரே. - (முகமது நபி)

 

27. ரோஜாச் செடியில் முள்ளிருப்பதாக வருத்தப்படாமல் முட்செடியில் மேலான மலர் உண்டாவதாக மகிழவேண்டும். - (ஆல்பரி)

28. அதிர்ஷ்ட வசத்தால் அதிக நன்மை உண்டாகலாம். ஆனால் அவ்வித நன்மையையும் போதுமானதாகச் செய்வது நம்மனமே யாகும். - (பாயில்)

 

29. கற்பு அன்பின் மிகுதியால் வரும் செல்வமாகும். - (தாகூர்)

 

30. கற்புள்ள மாது தன் கணவன் மரித்தபின்னும் இடைவிடாது தான் அவன் கூடவே யிருப்பது போல், உபாசனாமூர்த்தியிடம் பூர்ண பக்தி யுடையவன் ஈசுவரனோடு ஐக்கியம் அடைவான். - (ஸ்ரீராமகிருஷ்ணபரமஹம்சர்)

 

31. மக்களின் நடத்தையில் புண்ணியம் பாபம் என்னும் பாகுபாடுகளில்லை. ஆனால் பலம் பலஹீனம் என்னும் பாகுபாடுகளே இருக்கின்றன. மனிதன் ஆத்மபலமடைந்து ஞான தீரனாகி ஜடவுலகத்து சாதாரண பலத்தை ஜயிக்கிறான். - (ஸ்ரீரா. கி. பர்.)

 

32. நம்பிக்கை உள்ளவனுக்கு எல்லாமுண்டு. அது இல்லாதவ னுக்கு ஒன்றுமே இல்லை. - (ஸ்ரீரா. கி. பர்)

 

33. மனிதன் உண்மை பேசினாலொழிய உண்மைக் குறைவிடமாயுள்ள ஈசுவரனைக் காணல் முடியாது. - (ஸ்ரீரா. கி. பர்)

 

34. ஞானம் புருஷன் போன்றது; பக்தி ஸ்திரீ போன்றது; ஞான மானது ஈசுவரனுடைய அந்தப்புர வாசல்வரையில் தான் செல்லலாம்; பக்தியோ அந்தப்புரத்திற்குள்ளும் செல்லும். - (ஸ்ரீரா. கி. பர்)

 

35. உன் உணர்ச்சிகளையும், நம்பிக்கைகளையும், ஞானசாதனைகளையும் உனக்குள்ளேயே வைத்துக்கொள். அவற்றைப்பற்றி வெளியே பேசாதே. - (ஸ்ரீரா. கி. பர்)

 

36. சிறு நெருப்புக்குச்சியின் தீ பெரிய தூலத்தை எறித்து விடாது; ஆனால் காட்டுத்தீயானது (ஞானம்) எதையும் பஸ்பம் செய்து விடும். - (ஸ்ரீரா. கி. பர்.)

 

37. உள்ளொன்று வைத்து வெளியொன்று வெளியிடாது பரந்த நோக்கத்துடன் வாழுங்கள். - (மஹாத்மா காந்தி)

 

38. தனக் கிஷ்டமில்லாத வேலைகளைப் பிறர் செய்தால் அதுபோல் தானும் செய்யாமல் அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். அதுவே பரமதருமம். - (ஸ்ரீபரமஹம்சசச்சிதானந்தர்)

 

39. அஞ்ஞானிகள் நற்கருமங்களைச் செய்யப் பழக வேண்டும்; சிறிது விவேகமுள்ளவர்கள் திரிசிய உலகெல்லாம் நாளாவட்டத்தில் அழிவதென் றெண்ணி சத்துவகுண விஷிஷ்டர்களாய் பக்தி மார்க்கத்தை அவலம்பிக்க வேண்டும். - (ஸ்ரீபரமஹம்ச சச்சிதானந்தர்)

 

40. ஆகாயம் எதிலும் ஒட்டாமலிருப்பது போலும், விருத்திக்ஷயங்கள் சந்திரகலைக்கேயொழிய சந்திரனுக் கில்லாம லிருப்பது போலும் ஷட் பாவ (காமக்குரோதாதி) விகாரங்கள் சரீரத்திற்கே யொழிய ஆன்மாவிற் கல்லவென்று அறியக்கடவது. - (ஸ்ரீபா. ச. ர்)

 

தி. நித்தியானந்தம்,

(ச. நெ. 17036) போர்டு ஸ்கூல் மாட்டர்,

இராயக்கோட்டை, சேலம்.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - ஜனவரி ௴

 

 

No comments:

Post a Comment