Friday, September 4, 2020

 பன்னிரு ஜோதி லிங்கங்கள்



ஹிந்து சமயத்தின் உட் சமயங்கள் பலவற்றின் தத்துவங்களைக் கற்பதையே தன் வாழ்நாளின் குறிக்கோளாகக் கொண்ட ஒருவன், பாரத நாடு முற்றும் யாத்திரை செய்யவேண்டியது அவசியமென நூல்கள் கூறுகின்றன. சாதாரணமான ஒரு மனிதன்கூட தேச யாத்திரையால் தன் உலகியலறிவை விருத்தி செய்து கொள்வதுமல்லாமல் நாட்டின் பல புண்ணிய க்ஷேத்திரங்களின் வசிக்கும் மகான்களின் ஆசீர்வாதத்தையும் பெறுதல் கூடும். கல்வியில் வல்ல ஒரு புலவனுக்கு அந்த யாத்திரையே தன் கல்வித் திறமையை மக்களிடையே பரப்புவதற்கும் வழி காட்டியாக இருக்கிறது. இத்தகைய பலன்களைத் தரும் யாத்திரைகள் ஏழைகள், பணக்காரர்கள், கிரஹஸ்தர்கள், சந்நியாசிகள் முதலிய யாவராலும் செய்யப்படுகின்றன.

 

சங்கரரைப் போன்ற சைவ சமய ஆசாரியர்களும் இரேணுகர் முதலான வீரசைவ பஞ்சாசாரியர்களும் வடக்கே இமயமும் தெற்கே குமரியும் எல்லையாகவுடைய நிலப் பரப்பு முழுதும் யாத்திரை செய்ததாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் இமயமலையிலுள்ள கடுங்குளிர்ப் பிரதேசங்களுக்கெல்லாம் சென்றதாகத் தெரிகிறது. பண்டைக்கால மக்கள் தங்களுக்குரிய புண்ணிய ஸ்தலங்களை இந்தியாவின் பல பாகங்களிலும் ஏற்படுத்திக்கொண்டனர். யாத்ரீகர்கள் ஒவ்வொரு நகரத்தின் சரித்திரத்தையும் அங்கே வசிக்கும் மக்களின் வாழ்க்கை முறையையும் செவ்வனே யறிந்துகொள்ள வேண்டுமென்னும் நோக்கத்தால் பற்பல விடங்களில் கோவில்கள் நிறுவப்பெற்றன. அரசர்கள் பலர் அங்கங்கே கோவில்களை ஏற்படுத்தி பூஜைக்காக மானியங்களையும் ஏற்படுத்தினர். மற்றும் அக்காலத்துப் பெரியார் சப்த நதிகளுக்கு புராணவாயிலாக அளப்பரும் பெருமையை அளித்துப் போயினர். இன்றுங் கூட அவ்வேழு நதிகளையும் குறிப்பிடும் ஒரு சுலோகம் பூஜா காலங்களில் சொல்லப்படுகின்றன. அதுபோலவே இந்தியாவின் பல பாகங்களிலும் அமைந்திருக்கும் 12 சோதிலிங்கங்களைப் பற்றிய சுலோகத்தை, சமய நூல் கற்று சாஸ்திர ஆராய்ச்சி புரிவோர் மனப்பாடம் செய்கின்றனர். மூன்று சுலோகங்கள் அவ்விலிங்கங்களின் பெயர்களை மாத்திரம் கூறுகின்றன. மற்றும், 12 சுலோகங்களடங்கிய ஒரு பெரிய செய்யுள் 12 இலிங்கங்களின் ஒவ்வொன்றின் இருப்பிடத்தையும் அதன் பெருமையையும் பரக்கக் கூறுகின்றது. சிவபுராணத்தில் 38-ம் அத்தியாயம் அவற்றைப் பற்றி விவரமாய்க் கூறுகிறது. அவை வருமாறு: -

"சௌராஷ்ட்ரே சோமகாதம்சா ஸ்ரீசைலே மல்லிகார்ஜுனம்

உஜ்ஜயின்யம், மஹாகாலம் ஓம்காரம் அமலேஸ்வரம்

ப்ரஜ்வல்யம், வைத்யநாதம், சாதாகின்யம் பீம சங்கரம்

சேது பந்தேது ராமேசம், நாகேசம் தாருகாவனே

வாரணாஸ்யாந்து விஸ்வேஸம் த்ரியம்பகம் கௌதமீததே

ஹிமாலயேது கேதாரம் கிரிஷ்ணேஷம்சா சிவாலயே.''

 

இந்த சுலோகத்தைப் படித்த மாத்திரத்தில் அதிலுள்ள ஊர்கள் யாவும் இந்தியாவின் பல பாகங்களிலும் பரந்திருப்பதைக் காணலாம். இதில் கூறப்பட்ட பெயர்களை மனனம் செய்த ஒருவனுக்குத் தன் தாய் நாடாகிய இந்தியாவின் நிலையைப் பற்றிய அபிப்பிராயம் அவனது மனக்கண் முன் தோன்றும். அப்போது அவனது மனதில் மத வேறுபாடு, சாதி சமய வேறுபாடு, தாய்மொழி வேறுபாடு முதலியவையெல்லாம் தோன்றாது மறைந்து விடுகின்றன. ஆனால் "எல்லாம் சிவமயம்'' என்னும் மகத்தான உணர்ச்சி எங்கும் நிலவுகின்றது. நம் தேசத்துப் பண்டைக்கால மக்கள் அரசியலமைதி, பொருளாதார ஒற்றுமை முதலிய யாவும் சமயப் பூசல்களின்றி மத ஒற்றுமையினாலேயே ஏற்படுகின்றன என்பதை நன்கறிந்திருந்தார்கள்.

 

இனி, பரத கண்டத்திலுள்ள பன்னிரு ஜோதிலிங்கங்களைப் பற்றிக் கவனிப்போம். அவை அமைந்திருக்கு மிடங்க ளெல்லாம் மத சம்பந்தமான கீர்த்திவாய்ந்த இடங்களாக பண்டைக் காலத்தில் கொண்டாடப் பெற்றுவக்தன. இக்காலத்திலும் கொண்டாடப்படுகின்றன. இவ்விலிங்கங்களை ஸ்தாபித் திருக்கு மிடங்களுக்கு ஆண்டுதோறும் விழாக்காலங்களில் சிவ பக்தர்கள் லட்சக் கணக்கில் யாத்திரை செய்கின்றனர். அழகே உருவெடுத்து வந்து அக்கினிச்சுவாலை போன்ற சுயம்பிரகாசமான அந்த ஜோதி மக்களின் மனதைக் கவர்கின்றது. கால மாறுபாட்டின் பயனாக, அவைகளில் சில தமதுபெருமையையும் விசேடத்தையும் இழந்துவிட்டன. அவற்றிற் கருகாமையில் புதுக்கோயில்கள் எழுந்து விளக்கமுற்றமையால் பழங் கோயில்களாகிய இவற்றின் புகழ் மங்கியது. ஆகையால் இக்காலத்தில் 12 இலிங்கங்களும் ஒரே படியான புகழ்ச்சி யுடைத்து என்று கூறமுடியாது. இக்காலத்தில் அவற்றுள் சிலவற்றின் உண்மையான இருப்பிடம் இன்னதென்று கூட கண்டு பிடிக்க முடியாத நிலையிலிருக்கிறது. உதாரணமாக வைத்தியநாதர், நாகேசர் என்னும் இறைவனது பெயர்கள் பல ஜில்லாக்களில் காணப்படுகின்றன. ஆகையால் ஆதியிலெழுந்ததும் 12 ஜோதி லிங்கங்களுள் ஒன்றுமாகிய வைத்தியநாதர் முதலிய லிங்கம் இன்னதென அறிந்து கொள்ள முடியாத நிலையிலிருக்கிறோம். ஒரே இடத்திற்கு பலவகைப் பெயர்களைப் பற்பல நூல்கள் கூறுகின்றன.

 

இனி, நமது ஆராய்ச்சிக் கெட்டிய அளவு அவ்விலிங்கங்களின் பெயரையும் பெருமையையும் இருப்பிடத்தையும் பற்றிக் கூறுவோம்.

 

1. சோமநாதர்: - இது சௌராஷ்டிர தேசத்திலுள்ள தாகக் கூறப்படுகிறது.
அதாவது பம்பாய் இராசதானியில் கத்தியவாரைச் சேர்ந்த ஜூனாகாட் ராஜ்ஜியத்தின் கடற்கரையில் அமைந்திருக்கிறது. இந்தத் தலம் அசோகர் முதலிய மௌரிய மன்னர்களாட்சியிலும், விக்கிரமாதித்தன் முதலிய குப்தர்களாட்சி காலத்திலும் மிகவும் சிறப்புற்றிருந்தது. அப்போது அக்கோவிலுக்கு அளவிறந்த செல்வமும் மானியங்களும் இருந்தன. அதிலுள்ள இலிங்கம் மிகவும் பேருரு வாய்ந்தது. அந்தக் கோவிலின் கட்டுக் கோப்பானது அரசனது சேனைகள் தங்குதற்குரிய ஒரு பெரிய கோட்டையை ஒத்திருந்தது.
கி.பி. 1024 -ல் ஆண்டில் கஜினி முகம்மது என்ற முகம்மதிய அரசன் அக்கோவிலில் ஏராளமான செல்வமிருப்பதாகக் கேள்வியுற்று அந்நகரின் மீது படை யெடுத்தான். எதிர்பாராதவிதமாய் மசம்மதியர்கள் திடீரெனக் கோயிலைக் கைப்பற்றவே ஹிந்துக்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. முகம்மது கஜினி இந்து மதத்தில் பெரு வெறுப்புடையவ னாதலால் அக்கோயிலிலுள்ள சிவலிங்கத்தை யுடைத்து செல்வமெல்லாம் கொள்ளையடித்துச் சென்றான். அதுபற்றி அவன் “சிலை தகர்த்த வீரன்" என்னும் பெயர் பூண்டான். இருப்பினும், அவன் கோவிலை யழித்துச் சென்றதோடு அக்கோயில் பாழடைந்து விடவில்லை. இன்றும் அக்கோயிலானது அதே இடத்தில் தன் பெருமையில் சிறிதும் குன்றாது சிறப்புடன் விளங்குகின்றது. ஆயிரக் கணக்கான மக்களும் யாத்திரை செய்கின்றனர்.

 

2. மல்லிகார்ஜுனம்: - இது ஸ்ரீசைலம் என்னும் க்ஷேத்திரத்திலுள் இவ்வாலயம் கர் நூல் ஜில்லாவிலுள்ள நல்ல மலையின் சிகரத்தில் விசாலமான இடத்தி லமைந்துளது. அம்மலையின் பக்கலில் ஓடும் கிருஷ்ணா நதி அங்கே பாதாள கங்கை யென்றழைக்கப்படுகிறது. மனதைக் கவரும் மாண்புடைத்தாய அம்மலையின் இயற்கை யெழிலும் இனிய பொழிலும் அருகே சலசல வென்றோடும் கிருஷ்ணா நதியின் ஆரவாரமும், மலையுச்சியிலுள்ள மல்லிகார்ச்சுன ராலயத்தின் சித்திரப்பாடான அமைப்பும் ஐம்புலன்களுக்கும் விருந்தளிக்கும் பெற்றிவாய்ந்தவை. அக்கோவிலுள் அமைந்திருக்கும் இலிங்கத்திற்கு மல்லிகார்ச்சுன லிங்கமென்று பெயர். நாகரிகமற்ற வன மக்கள் அதனை “செஞ்சு மல்லையா” எனப் பெயரிட்டு வணங்குகின்றனர். வீரசைவ பஞ்சாசாரியரில் ஒருவராகிய பண்டிதாராத்தியர் இவ்விலிங்கத்தினின்றும் தோன்றி ஸ்ரீசைலத்தில் தனது சிம்மாதனத்தை ஏற்படுத்தினார் என்று சுயம்புவாகமம் முதலிய ஆகமங்களின் உத்தர பாகங்களில் கூறப்படுகின்றன. சிவனது அருட்சக்தியின் கூறாய்த் தோன்றிய அக்கமாதேவி என்னும் வீரசைவ மாதுசிரோமணி ஸ்ரீசைல மலைச்சாரலிலுள்ள கதலிவனத்தில் கடுந்தவம் புரிந்து இலிங்கைக்கிய மாயினார் என பிரபுலிங்கலீலை கூறுகின்றது. இத்தகைய பெருமைவாய்ந்த தலத்திற்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரிப்புண்ணிய காலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் யாத்திரையாக வருகின்றனர். ஸ்ரீசைல நாதரைக் கண்டு பிறவிப் பெரும்பயன் எய்தவேண்டுமென்ற பேரவாவினால் அவர்கள் முப்பது மைல் நீளமுள்ள காடுமுரடான ஒழுங்கற்ற பாதையை, தமக்குறும் வருத்தத்தையும் பொருட்படுத்தாது மூன்று நாட்களில் நடந்து சென்று தரிசனம் செய்கின்றனர். இந்த க்ஷேத்திரமானது மிகப்பழமையானவைகளி லொன்று; ஒரு காலத்தில் சர்வகலா நிலையமாகவும் விளங்கியது. சங்கராச்சாரியரும் வசவேஸ்வரரும் இத்தலத்தை யடைந்து தத்தம் மதக் கோட்பாடுகளை மக்கட்குபதேசித்து தம் மதங்களைப் பரவச் செய்தனர் என்று கூறுகின்றனர். மகாராஷ்ட்ர மன்னருள் மாபெரும் வீரனாய் விளங்கிய சிவாஜி, ஒரு சமயம் ஸ்ரீசைலத்திற்குச் செல்ல நேர்ந்தபோது அங்கு வந்து கூடும் மக்களின் எண்ணிக்கையையும் அவர்கள் இறைவன்பா லன்புபூண்டொழுகும் திறத்தினையும் அம்மலையின் காட்சியையும் கண்டு ஆச்சரியமுற்று துறவு பூண்டு அம்மலைச்சாரலில் வசிக்க எண்ணங்கொண்டான். ஆனால் அவனது குலகுருவாகிய ராமதாஸர் அங்ஙனம் செய்யலாகாதென்று தடுத்து விட்டாராம்.

 

3. மகாகாளம்: - இஃது உஜ்ஜயினியி லுள்ளது. இந்த ஷேத்திரம் மத்திய இந்தியாவில் ஒரு சிறந்த புகைரத நிலையமாக (Railway Station) விளங்குகிறது. இவ்வூர் சிப்ரா என்னும் ஒரு ஆற்றின் கரையிலமைந்துளது. பண்டைக்காலத்திலிருந்த வான நூற்புலவர்கள் பூமத்திய ரேகையை ஆரம்பித்துக் கணக்கெடுத்து பஞ்சாங்கக் கணித்தது இவ்விடத்தில்தான். சிறந்த அரசனும் வான நூல் நிபுணனுமாகிய ஜெயசிங் தன்னுடைய சோதிட உப்பரிகையை (Observatory) இங்குதான் கட்டினான். மதிய முகலாய அரசர்கள் காலத்தில் யுத்தங்கள் பல இவ்விடத்தில் நடைபெற்றன. ஆகையால் சரித்திர ஆராய்ச்சியாளர்க்கு இவ்வூர் மிகவும் முக்கியமானது. விக்கிரமாதித்யனைப் பற்றிக் காணபரம்பரையாகக் கூறப்படும் கதைகள் இங்குதான் நிகழ்ந்த தாகக் கூறப்படுகின்றன.

 

4. ஓங்காரம்: - இதன் இருப்பிடம் மத்திய மாகாணத்தைச் சேர்த்த மாந்தாதாபுரி. இது நிமூர் ஜில்லாவில் நர்மதா நதியிலுள்ள ஒரு தீவு. இத்தீவிலுள்ள இலிங்கத்திற்கு ஓங்கார இலிங்கமென்று பெயர். நர்மதையின் தென்கரையில் அமலேஸ்வரம் என்ற வேறொரு கோயில் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் சமமான முறையில் வணங்கப்படுகின்றன. இத்தீவானது மாந்தாதா என்னும் அரசனால் பெயரிடப்பட்டது. இவையே யன்றி அங்கே சமணப் பள்ளிகளும் மாலோன் கோயிலும் காணப்படுகின்றன. "ஓம்கார்ஜீ" எனும் மிகப் பெரிய சந்தை யொன்று ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 15-ந் தேதி யன்று நடைபெறுகிறது. ரஜபுதனம் - மால்வா இருப்புப் பாதையிலுள்ள மர்ட்டகம்'' என்னும் ஊர் மாந்தாதாபுரிக்குச் சமீபமான புகை வண்டி நிலையம்,

 

5. வைத்தியநாதர்: - இவ்விலிங்கம் அமைந்திருக்கும் ஆலயம் பாரலினு மூரிலுள்ள தென்பர் ஒரு சாரார். மற்றும் சிலர் அவ்விடம், இந்தியா வின் வடகிழக்குப் பாகத்திலுள தென்பர். தென்னாட்டார் அவ்விலிங்கம் அமைந்துள்ள இடம் தஞ்சை ஜில்லாவைச் சேர்ந்த வைத்தீஸ்வரன் கோவில்தான் (புள்ளிருக்கும் வேளூர்) என்று கூறுகின்றனர். வடநாட்டிலே வைத்தியநாதர் என்னும் பெயரையுடைய 5 கோயில்கள் பற்பல இடங்களி லுள்ளன.
அவற்றிலிரண்டு சாந்தல் மாகாணத்திலும், ஒன்று பர்துவானிலும் ஒன்று அல்மோராவிலும் காங்கரில் ஒன்றும் அமைந்துள்ளன. சிவனது பெருமையை யுணர்த்தும் சிவபுராணம் இவ்விலிங்கம் இமயமலைச்சாரலில் தென்பக்கமிருப்பதாகக் கூறுகிறது. இயக்கர்குலத் தலைவனாம் இராவணன் இடையறாது இயற்றிய சிவபூசையின் பயனாக கொன்றை வேணிப் பெருந்தகையின் இருப்பிடமாகிய கைலையைப் பெயர்த்தான் என்பது அனைவரு மறிந்ததே. இவ்விலிங்கமே இராவணனுக்கு அத்தகைய வரத்தையும் வீரத்தையும் அளித்ததென்பர்.

 

6. பீமசங்கரம்: - இது பூனா ஜில்லாவில் கேது தாலுக்காவி லுள்ள பாவர்க்கிரி என்னும் ஊரிலுள்ள ஒரு உன்னதமான கோட்டையி லமைந்திருக்கிறது. இக்கோயில் சமுத்திர மட்டத்திற்குமேல் 3448 அடி உயரத்திலிருக்கிறது. அவ்விடத்தினின்றும் சந்திரபாகை அல்லது பீமாதி என்ற ஆறானது உற்பத்தியாகிறது. மேற் கூறப்பட்ட சுலோகம் தாகினி, சாகினி எனு மிருவர் அவ்விலிங்கத்தைப் பூசித்ததாகத் தெரிகிறது. பண்டைக் காலத்தில் அங்கு மலைவாசிகள் குடியிருந்திருக்க வேண்டுமெனக் கூறப்படுகிறது.

 

7. இராமநாத லிங்கம்: - இவ்விலிங்க மிருக்கும் ஷேத்திரமாகிய இராமேஸ்வரத்தை இந்துக்களில் அறியாதவர் ஒருவருமில்லை. இது தென்னிந்தியாவுக்கும் இலங்கைக்கும் நடுவிலுள்ள மன்னார் குடாவில் ஒரு தீவாக அமைந்திருக்கிறது. இராம ராவண யுத்தத்தில் ஆயிரக்கணக்கான வீரர்க களைத் தான் கொன்ற பாவத்தைப் போக்க, இராமன் இந்த லிங்கத்தை ஸ்தாபித்து வணங்கினான். திருமாலே சிவபெருமானை வணங்கிய ஸ்தலமாதலின் மக்கள் சைவர் வைணவர் என்ற வேற்றுமை யுணர்ச்சியை விடுத்து ஆண்டுதோறும் கணக்கற்ற மக்கள் இத்தலத்திற்குச் செல்லுகின்றனர். இராமேச்சுரம் செல்லும் மக்கள் சேதுஸ்தாகம் செய்யவேண்டுமென ஒரு நிபந்தனையுண்டு. சேது
என்பது இராமரால் இலங்கைக்கும் தென்னிந்தியாவுக்கும் மத்தியில் கடலில் கட்டப்பட்ட ஒரு பாலம். தென்னாட்டார் காசிக்குச் செல்வதை எவ்வளவு முக்கியமாகக் கொள்ளுகின்றனரோ அதேபோல் வடநாட்டார் இராமேஸ்வா யாத்திரையை முக்கியமாகக் கருதுகின்றனர். இக்கோயில் பண்டைக்காலந் தமிழரின் சிற்பத் திறமையை விளக்கிக் காட்டுகிறது. இது மிகப் பெரிய கோயிலாதலாலும் புராதனமான தாதலாலும் ஏராளமான மானியங்களும் ஆஸ்தியும் இருக்கின்றன. அது மிகவும் மணற்பாங்கான இடமாகலின் அங்கே தென்னை மரங்கள் விசேஷமாய் பயிராகின்றன.

 

8. நாகேசம்: - இது தாருகாவனத்தி லிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுவே தென்னாட்டில் நாகநாதம் என்று வழங்குகிறது. நாகத்தையுடைய இலிங்கங்கள் இந்தியாவில் 10 இடங்களில் இருக்கின்றமையின் உண்மையான இடம் எது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள சங்கர நயினார் கோவில் என்ற விடத்திற்கு தாருகாபுரம் என்ற மற்றொரு பெயருமுண்டு. நாகத்தினால் பிரதிட்டை செய்யப்பட்ட இலிங்கங்கள் தஞ்சை, சேலம், திருநெல்வேலி, செங்கற்பட்டு, திருவாங்கூர் முதலிய ஜில்லாக்களில் காணப்படுகின்றன. இந்த ஸ்தலத்தைப்பற்றி சில புராணத்திலோர் வரலாறுண்டு. செருக்குற்றிருந்த தாருகா முனிவர்களது பத்தினிகளை சிவபெருமான் கற்பழித்தான் என்பதைக் கேள்வியுற்ற அவர்கள் ஆறாச சீற்றங்கொண்டு பெரிய யாகம் செய்து யானை, புலி, நாகம் முதலியவற்றை சிவன்பால் ஏவினர். அவற்றைச் சிவன் இடைககு ஆடை முதலியனவாகக் கொண்டான் என்று அந்நூல் கூறுகிறது. இவ்விடத்தில் தான் இச்சம்பவம் நடந்ததாகச் சிவபுராணம் கூறுகின்றது.

 

9. விஸ்வநாதர்: - இவ்விலிங்கம் காசியிலிருப்பதை பாலர் முதல் விருத்தர் வரை யாவரு மறிவர். இது கங்கைக் கரையில் பரந்த சமவெளியில் மிக செழிப்பான இடத்தில் உள்ளது. திருவாரூரில் பிறக்கின் முத்தி யெனவும், சோணகிரியை நினைப்பின் முத்தி யெனவும், காசியில் இறந்தால் முத்தியெனவும் ஹிந்து சாஸ்திரங்கள் கூறுவதால் ஒவ்வொருவரும் காசியி லிறக்க முயலுகின்றனர். கணக்கிற்கெட்டா காலம் முதல் இது சிறந்த யாத்திரை ஸ்தலமாகவும், வடமொழி முதலிய பாஷைகளை வளர்க்கு மிடமாகவும் விளங்குகிறது. புத்தர்களுக்குச் சிறந்த ஸ்தலமாகிய சாரநாதம் காசிக்குச் சமீபத்தில் தானிருக்கிறது. ஹிந்துவாய்ப் பிறந்த ஒவ்வொருவரும் காசி விஸ்வநாதரை
அன்போடு வழிபடுகின்றனர்.

 

10. திரியம்பகம்: - இது நாஸிக் க்ஷேத்திரத்திற்கு மேற்கே 20 மைல் தூரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைச் சாரலில் கோதாவரி நதிக்கரையில் மிகவும் செழிப்பான இடத்தி லமைந்திருக்கிறது. இங்கே பன்னிரு ஆண்டு கட் கொருமுறை சிம்ம லக்கினத்தில் குரு உச்ச பதவியடையும் போது மிகச்சிறந்த திருவிழா நடைபெறுகிறது.

 

11. கேதாரம்: - ஐக்ய மாகாணங்களில் கன்வால் ஜில்லாவில் இமயமலையின் மேல் அமைந்திருக்கிறது. இக்கோயிலின் சிகரமானது பனியினால் மூடப்பட்டு சமுத்திர மட்டத்திற்கு மேல் 22853 அடி உயர்ந்திருக்கிறது. பஞ்சகேதாரம் என்ற ஐந் திடங்களில் சிவபெருமான் தன் சக்தியின் பல கூறுகளை அங்கங்கே விடுத்துச் சென்றதாகவும் அவற்றுள் திருக் கேதாரமே தலை சிறந்தது எனவும் கூறப்படுகின்றது. இவ்வாலயத்தின் சமீபத்தில் பைராப்ஜம்ப் (Bhairab Jamp) என்ற ஒரு பெரிய செங்குத்தான பாறை யிருக் பண்டைக் காலத்தில் பௌத்தர்கள் அங்கு வந்து கோவில் ஏற்படுத்தி வணங்கி மோக்ஷ மடைவதற்காக அப்பாறையின் உச்சியிலிருந்து கீழே விழுந்து இறந்து விடுவது வழக்கமாம். ஆனால் அப்பழக்கம் இப்போது நின்று விட்டது.

 

12. கிருஷ்ணேசம்: - இது ஈளாபுரி எனுமிடத்தில் ஈளாபுரி எனுமிடத்தில் இருப்பதாகச்
சொல்லப்படுகிறது. ஆனால் அந்த இடம் இன்னதுதான் என்று அறிந்து கொள்ள முடியாத நிலையி லிருக்கிறது. இராமாயணம் உத்தர காண்டத்தில் இமய மலைச் சாரலில் ஈளன் என்பான் ஒருவன் சிவபெருமானைப் பூசித்ததாக ஒரு வரலாறு காணப்படுகிறது. ஆகையால் இது ஆகையால் இது இமயமலைப் பிரதேசத்திலுள்ள ஸ்தலங்களி லொன்றாக இருத்தல் கூடும். இந்த க்ஷேத்திரத்தைப் பற்றிய மற்ற வரலாறு ஒன்றும் புலப்படவில்லை.

 

இதுகாறும் கூறிவந்த ஜோதிமயமான பன்னிரு லிங்கங்களேயன்றி பலிங்கங்கள் பன்னிரண்டுள்ளன. ஆனால் அவைகள் எங்கெங்கே இருக்கின்றன என்பதை அறிவது அசாத்தியமாக இருக்கிறது.

 

ஆனந்த போதினி – 1936 ௵ - நவம்பர் ௴

 



No comments:

Post a Comment