Friday, September 4, 2020

 

பாடையேறினும் ஏடு கைவிடேல்

 

தேனினுமினிய தீந்தமிழ்நாட்டுச் சான்றோர்கள் திருவாய் மலர்ந்தருளிய முதுமொழிகளுள் இஃதுமொன்றாகும். அறிவிற்சிறந்த நம் முன்னோர்களின் நல்லுரைகளைப் போற்றிப் புகழாதார் யார்? அவர்கள் திருவாயினின்றெழுந்த வார்த்தைகளெல்லாம் நமக்கு நீதியைப் போதிக்கக்கூடியவைகளே. அவை களிலொன்றாகிய இப்பழமொழியும் பெரியோர்களின் நுண்ணறிவை விளக்கும் ஆற்றலுடைத்து.

 

''பாடை யேறினும் ஏடு கைவிடேல் " என்பதற்கு " இம்மகிதலத்திற் பிறப் பெய்திய நீ படிக்கும் பருவத்திலிருந்து இறக்கும் வரையில் ஏட்டைக் கை விடாமல் அதிலுள்ள பொருள்களை யாராய்ந்து கொண்டிரு " என்று வெளிப் படையாகப் பொருள் கோடலாம்.

 

இப்பழமொழியின் மூன்றாவது சொல்லாகிய " ஏடு' என்ற பதத்தைப் பற்றிக் கவனிக்கும் போது இஃது தொன்மையில் ஏற்பட்டதாக இருக்கவேண்டும். இப்போது கையாளப்பட்டு வரும் கடுதாசியானது பதினெட்டாம் நூற்றாண்டில், அதாவது கி. பி. 1789 ம் ஆண்டுக்குப் பின்னால் கண்டு பிடிக்கப் பட்டதெனப் பிராஞ்சு ஆராய்ச்சிக்காரர்கள் குறித்துள்ளார்கள். ஆகவே "ஏடு" என்ற பதம் பண்டைக் காலத்திலிருந்து நமது முன்னோர்கள் காகிதம் செய் யப்படாதிருந்ததற்கு முன்னால் பனையோலைகளில் எழுத்தாணி கொண்டு எழுதி வந்துள்ள ஏட்டையே குறிக்கும், சிலர் "ஏடு" என்பது இப்பொழுது வழங்கும் காகிதத்திற்கே என்று சாற்ற முன்வரலாம். ஆயினும் மற்றொரு பழமொழியானது " ஏடும் எழுத்தாணியும் " என்று வழங்கப்படுவதனாலும், எழுத்தாணி கொண்டு காகிதமாகிய ஏட்டில் எழுதுவதென்பது முடியாத காரியமாதலானும் "ஏடு' என்பதற்குப் பனையோலையாலாகிய ஏடு என்றே பொருள் கொள்ளல் வேண்டும். ஆகவே இப்பழமொழியானது மிகப் பழமையுடைத்தென் றேற்படுகின்றது.

 

மக்கள் எனும் பெயருக்குரியராய் மானிட சட்டையைப் போர்த்துள்ள நாமனைவரும் அவரவர் செய்துள்ள கர்மத்துக்கீடாய்ப் பிறக்கின்றோம். ஆனால், அந்தந்த மதத்தவர்க்குள்ளும், பலதிறப்பட்ட மொழிகளைப் பேசும் பழக்கத்தால் நாம் மாறி வருகின்றோம். அன்றியும் நமது அம்மை யப்பர் நம்மை யெம்மொழியில் பயிற்றுகின்றார்களோ, பயிலவிடுகின்றார்களோ அத்தனிடத்திலேயே நாமும் பழகி வருகின்றோம். ஆனால் ஒவ்வொருவரும் எந்தெந்த மொழியில் பேச, வாசிக்க, எழுதப் பழக்கம் பெறுகின்றோமோ, அத்தனிடத்தே முன்னேற்றமடைந்து வருகின்றோம். எனினுஞ் சிலர், தங்களுக் குரியவரையில் வாசித்து முடிந்ததும் வேறு தொழில் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றனர். எவருங் கல்விக் கழகத்திலிருக்கும் வரையில் தாம் பயிலா நிற்குங் கல்வியிலேயே நினைவாக இருப்பர். கல்விக் கழகத்தினின்றும் படிப்பதைவி ட்டு நீங்கி வேறு தொழிலிற் புகுந்தவுடன் அத்தொழிற் சம்பந்தமான நூதன செயல்களைக் கற்கவுஞ் செய்யவும் வேண்டியிருப்பதால் கொஞ்சங் கொஞ்சமாகத் தாம் இளமையில் கல்விக் கழகத்திலரும்பாடுபட்டு அரிதிற்றேடிய பெருங்கல்விப் பொருளை மறதியில் விட்டு விடுகின்றனர். அதனால் எவரும் இளமையில் அநேக நூல்களை வாசித்திருப்பினும், அவைகளை மறந்துவிடுவதால் அந் நூற்களை வாசிக்காதவர்களைப் போன்றே விளங்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். அறிவைக் கொஞ்சங் கொஞ்சமாகத் தோண்டி வருங் கல்வியாகிய நன்னூல்களை யிடைவிடாது கற்போர்களே அடிக்கடி தாங்கற்ற நூற்பொருளை மறக்கவுந் திரும்பத் திரும்பக் கற்றவைகளையே கற்கவும் வேண்டியவர்களாக இருக்கின்றனர். அங்ஙனம் அவைகளைக் கற்றுவரும் பொழுதுஞ் சமயத்திற்கு நினைவில் வராதொழிவன பல. அடிக்கடி நூற்களை வாசிப்போர்களின் கதியே இங்ஙனமாக, நூற்களையே திரும்பப் பாராதவர்களின் கதியென்னாம்?

 

மேலும், நாம் இவ்வையத்திலடைய வேண்டிய பயன்களாகிய அறம், பொருள், இன்பங்களும், மறுமைப்பயனாகிய வீடும் பெறவேண்டுமெனில், அவைகளைத் தரும் வல்லமையுள்ள கல்விப் பொருளை முதன் முதலிற் பெற வேண்டுவது மின்றியமையாததாகும். இதை "அறம், பொருளின்பம் வீட்டைத் னூற்பயனே" என்ற நன்னூலாலும், 'அறம் பொருளின்பம் வீடும் பயக்கும்'' என்ற மற்றோர் நூலின் கருத்தானுந் தெளியலாம்.

 

"இனியே தெனக்குனருள் வருமோ வெனக்கருதி
            யேங்குதே நெஞ்ச மையோ!
      இன்றைக் கிருந்தாரை நாளைக் கிருப்பரென்
            றெண்ணவோ திட மில்லையே!
      அனியாய மாயிந்த வுடலைநா னென்றுவரு
            மந்தகற் காளாகவோ
      வாடித் திரிந்து நான் கற்றதுங் கேட்டது
            மவலமாய்ப் போத னன்றோ''


என்னுந் தாயுமான சுவாமிகளின் திருவாக்குக்கு மாறுதலில்லாமல் நினையாத போது வந்து உயிரைக் கௌவும் அந்தகற் காளாகும் பெற்றித்தாய தன் மையை யறிந்திருந்தும், ஆன்மா கடைத்தேறும் வழியைத் தேடுவதற்கு இன்றியமையாததும், மிகவுந் துன்புற்றுக் கற்றதுமாகிய கல்வியைப் பாழிலே விட்டு விடலாமா?

 

உலகமுங் கற்றறிந்த நுண்ணுணர்வுடையோர்களை யோர் வகையினராகவும், அஃதில்லாதவர்களை மற்றோர் வகையினராகவும் மதிக்கின்றது.

 

அநேக நூல்களை யாராய்ச்சி முகத்தாற் கண்டு, அவைகளிற் கூறியவண்ணம் நடந்து அவைகளால் எய்தும் பெரும்பயனைத் துய்க்கும் பெரியோர்கள் என்றும் "ஏடுங் கையுமாக" நிலவுவதை நாம் இன்றுங் கிராமங்களிலும் மற்றிடங்களிலுங் காண்கின்றோம். சிலர் புத்தகங்களைத் தொடுவதற்கே மன மற்றவர்களாய்த் தேகமே ஆத்மா, போகமே மோக்ஷம் என்பதற்கொப்ப, உண்பதும், உறங்குவதுமாக நிலவிக் கிடைத்தற்கரிய மனிதப்பிறவியைப் பெற்றும், அதனாலடையும் பயனையடைதற் கேதுவாகிய நன்னெறிகளைத் தேடாமற் றங்கள் வாணாளை வீணாளாக்குகின்றனர். அந்தோ ! பரிதாபம்.

 

நம் கர விரல்களில் நாம் அழகிய வைரம், இரத்தினம், கெம்பு முதலிய வைகளைப் பதித்த பவுன் மோதிரங்களைப் போட்டுக் கொண்டு அழகு பார்க்கின்றோம்; அல்லது பார்க்க விரும்புகின்றோம்; அறிஞர்கள் தங்கள் கைகளுக்கு அணியாகக் கொண்டிருக்கும் நூல்களாகிய நகைகளைப் பார்க்கிலும் மேற் கூறிய மோதிரம் முதலியவைகளெல்லாம் மதிப்புடையனவாகுமோ? "கல்வி நலனே கலனல்லால், கற்றோர்க்கு மற்றோர் அணிகலம்' வேண்டுமோ? அதுவுமன்றிப் பெரியோர்களும் சுருக்கமாக "புத்தகம் ஹத்தபூடணம்'' என்றுங் கூறிப் போந்தனர். அதுவுந்தவிர "கேடில் விழுச்செல்வங் கல்வி யொருவற்கு, மாடல்ல மற்ற யவை" என்றார் நாயனாரும்.

 

நமக்கு உயிர்த்தோழர்களாக விருக்கும் அன்பர்கள் சில சமயம் மனம் வேறுபட்டுப் பிரிதல் கூடும்; அல்லது வேற்றூர்கட்குப் பல காரணங்களை முன்னிட்டுப் போய் நம்மைப் பிரிந்திருக்கவுங் கூடும். ஆனால் நூல்களாகிற நந்துணைவர்களை நாம் எப்போதும் நம்மை விட்டுப் பிரியாதிருக்கும் வண்ணம் செய்து கொள்ளலாம். நமக்கு வேண்டிய புத்திமதிகளை யன்பர்கள் நமக்குச் சமயத்திற் கூறி நம்மைத் தேற்றுவது போன்றே நூல்களும் நமக்கு அளவற்றனவும், நந்தோழர்கள் நமக்குக் கூற முடியாதனவுமாகிய பெருநீதிகளைப் போதிக்கு மாற்றல் மிக்கன. நம் நேயர்கள் ஒரு தடவை சாற்றிய நீதியையே மறுபடியும் போதிக்க வேண்டுமெனில் மறந்து விடவுங்கூடும். ஆனால் நூல்களாகிற கூட்டாளிகள் ஒருதடவையில் நமக்குக் கற்பித்த நீதிகளைத் திரும்ப எவ்வளவு தடவைகள் வேண்டுமெனினும் அவைகளையே நினைவூட்டும் வல்லமையுடையன. பிறநேயர்களைப் பார்க்கிலும் நன்னூல்கள் நமக்குப் பொருத்தமான தோழர் களாகவும், நஞ்சிற்றுயிர்க் குற்ற துணையாகவும் விளங்குகின்றன வெனில் அது மிகையாமோ! அவைகள் விலை மதிப்பற்ற மணிகளுக்கும் மேலான தன்மைத் தாய பல நீதிகளையும், பிரதிஞான்றும் ஒவ்வொருவருங் கடைப்பிடித் தொழுக வேண்டிய நெறிகளையும், வைத்தியத்திற் கேதுவான பலமுறைகளையும், ஜோதிடத்திற் கின்றியமையாத பல கணக்குகளையும், மனோற்சாகத்திற்கு வேண்டிய பல காவியங்களையும், புராணங்களையும், இதிகாசங்களையும், போர் புரிவதற்குத் தக்க வீரம் புகட்டும் பல வீரர்களின் சரித்திரங்களையும், மனிதப்பிறப்பாற் பெறும்பயனை வெளிப்படுத்தாநிற்குஞ் சித்தாந்த வேதாந்த நூற்களையும், மொழி வளர்ச்சி பெறுவதற் கேற்ற திவாகரம், நிகண்டு முதலிய வைகளையும், கட்டுரைகள் வரையவும், நூல் ஏற்படுத்தவும், பா புனையவும் அவசியமாகிய பல இலக்கண நூல்களையும் நமக்கு அவைகள் அறிமுகமாக்கி வைத்து வேண்டுவன கொண்டு நம்மைக் கடைத்தேறச் செய்கின்றன.

 

ஆகவே, கல்வியென்பதோர் பரந்த கடலாகலானும், அதைக் கற்கும் நாமோ மிகச் சிறுமை யுடையோராகலானும், அக்கல்விக் கரையைக் காணும் வயது நமக்கின்மையானும், நமது காலம் முழுதுங் கற்பினுங் கல்வியின் பல பங்குகளில் ஓர் பங்கேனும் பெறாதவர்களாவோ மாகையினாலும், நமக்குள்ள அற்ப ஆயுளைப் பங்கிட்டுக் கொள்ளப் பசி, பிணி, மூப்பு, துன்பம் முதலிய வைகளும் நம்முடன் இணைந்துள்ளனவாதலாலும், நாம் என்றும் எப்போதும் நூற்களை யிடைவிடாது கைக்கொண்டு ஆராய்ந்து வரவேண்டுவது நலமான செய்கையாகும்.

 

ஆகலின் அன்பர்களே! பின்றையே நின்றது கூற்றமென்றெண்ணி நாம் ஒரு விநாடியையும் வீண்போக்காமல் நன்னூல்களை யாராய்ந்து அவ்வா ராய்ச்சியிற் காண்பது போல் ஒழுகி அவற்றாலாம் பயனைத் துய்க்க முற்படுவோமாக.

 

மு. மாணிக்க நாயகர், திருப்புவனை, புதுவை.

 

ஆனந்த போதினி – 1926 ௵ - டிசம்பர் ௴

 

 

 

No comments:

Post a Comment