Friday, September 4, 2020

 

பாபு சுரேந்திர நாத் பனர்ஜி

 

தாய் குழந்தைக்குப் பாலுட்டுகிறாள்; பேச்சுப்பழக்க முண்டாக்குகிறாள். நாம் எவ்வளவு வயதானவராயிருந்தாலும் நமது தாய்க்குக் குழந்தையாகவே இருக்கிறோம்; இறந்த அவளை நினைத்து ஏங்குகிறோம். நம்முடையஆயுள் முடியும் வரையில் நாம் அவளை மறப்பதில்லை. அதுபோல நமக்குராஜீயப்பாலூட்டி, நாம் உரிமை வார்த்தைகளைப் பெருமையுடன் பேச வழிகாட்டி, கடந்த நாட்களில் தொடர்ந்த தேசத் தொண்டியற்றி அடர்ந்த தேசாபிமானத்தை எங்கும் பரப்பிய தேசமகாதலைவர்கள் பலர். அத்தலைவர்களுள் ஒவ்வொரு மனிதராலும் ஏற்றத்தாழ்வின்றி ஏகோபிதமாகப் போற்றப்படுபவர் சிலர். அன்னாருள் பாபு சுரேந்திர நாத் பனர்ஜியே முக்கியமானவர். வங்காளத்தின் தலைநகரான கல்கத்தாவில் 1848 - ம் ஆண்டு குவின் பிராமண குலத்தில் அறிவே உருவெடுத்ததென்ன இப்பெரியாருடைய

 

தோற்றம்

ஏற்பட்டது. இவருடைய தந்தையார் திருப் பெயர் பாபு தர்க்கசாண பனர்ஜி. அப்பெரியாருடைய ஐந்து குமாரர்களில் இவர் இரண்டாமவர். விவேகமுள்ள குழந்தைகளுடன் கூடிய அவ்வீடு ஓர் வித்யாமன்றமாகவே விளங்கிற்று. சிறு பிராயத்தில் வித்யாரம்பம் செய்விக்கப்பட்டுப் புராதனகால முறைப்படி பாடசாலைக்குச் சென்று வந்தார் பாபு; ஏழாம் பிராயத்தில் இந்திய ஐரோப்பியர்களுக்கென்று நடந்து வரும் டோலடன் கலாசாலையிற் சேர்ந்து கல்வி பயின்றார். இவருடைய பிற்கால 'வல்ல சொற்பொழிவாள நிலை'க்கு இக்கலாசாலையே ஆதாரமெனலாம். பாபு 1863 - ம் ஆண்டில் லத்தீன் பாஷையை உபபாடமாகக் கொண்டு பிரவேசப் பரீக்ஷையில் முதலாகத் தேர்ந்தார். இதனால் இவருக்கு அரசாங்க அரை உபகாரச் சம்பளம் கிடைத்தது. பிறகு சிறு கலா குமாரப்பரீக்ஷையிலும் (FA) இவர் முதல் ஸ்தானத்தைவகித்தது கண்டு ராஜாங்கத்தார் இவருக்கு முழு உபகாரச் சம்பளமும் கொடுத்துதவினார்கள். ஆனால் கலாகுமாரப் பரீக்ஷையில் இவர் நோய் வாய்ப்பட்டமையால் முதலாகத்தேற இயலவில்லை. ஆனாலும் 1868 - ல் இவா இரண்டாம் வகுப்பில் பி. ஏ. பட்டம் பெற்றார். இவர் கல்வி பெறவேண்டுமென்ற அவாவால் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக 1868 - ல் ஐ. ஸி. எஸ் பரீக்ஷைக்கு வாசிக்க,

 

அலைகடல் யாத்திரை

 

செய்து ஆங்கில நாட்டை அணுகினார். லண்டன் சர்வ கலாசாலையிற் சேர்ந்து ஹென்றி மோர்லி, கோல்ட் ஸ்டக்கர் முதலான பெரிய அறிவாளிகளை யடுத்து, வடமொழியிலும், ஆங்கிலத்திலும் ஆராய்ச்சிகள் செய்து காலங்கழித்து வந்தார். ராமிஷ் சந்திரடட், பிகாரிலால் குப்தா முதலானவர்களும் இவரும் 1868 - ல் ஐ. வி. எஸ். பரீக்ஷையில் தேர்ந்தார்கள். இவரை அரசாங்கத்தார் சைல் கெத்துக்கு உப நியாயாதிபதியாக நியமித்தார்கள். இத்தருணத்தில் இவருடைய தந்தையின் மரணம் நேர்ந்தது. 1871 - ல் பாபு இந்தியாவுக்குத் திரும்பி வந்தார்; இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் உத்தியோகமேற்றார். அபிமானக் குறைவால் இவர் பல ராஜீய குற்றங்களுக்கு ஆளாயினர். ஓர் தனிக்கமிட்டியார் இவருடைய விஷயங்களை ரகசியமாகக் கல்கத்தாவிற்கு வெளியிலிருந்த ஊர்களில் ஆராய்ந்து ஓர் முடிவுக்கு வந்தனர். அது இவருடைய உத்யோகத்தைப் பாதித்து இவர், வேலையினின்றும் விலகக்கூடிய நிலையை உண்டாக்கிற்று. இவருக்கு மாதம் 50 - ரூபாய் உபகாரச்சம்பளம் கொடுக்க அரசாங்கத்தார் எண்ணினர். தம்மீது வீண்பழி சுமத்தி விபரீதம் விளைவித்த பலரின் அடாத செய்கையைப் பெரியார் பால் அறிவிப்பான் கருதி அன்பர் அலைகடல் கடந்து ஆங்கில நாடு சென்றார். அங்கு சென்றும் அநீதியே வழங்கியது கண்டு திரும்பினார். இது அவருடைய வாழ்வின் ஆரம்பத்தில் ஏற்பட்ட சிறுகஷ்டம்.


துன்பத்திற்குப் பின் இன்பம்

 

பிரபஞ்சத்தில் பிரத்யக்ஷம். இவருக்கு உத்தியோகமில்லாது போனது கண்டபாரத அன்னையின் அகம் நனி குளிர்ந்தது. பாபு அவ்வுத்தியோகத்தில் நின்றிருப்பாரேல் அவருடைய தேச சேவையை ஆர்யவர்த்தம் பெற்றிருக்குமென்று நாம் எண்ணுவதற்கில்லை. அங்ஙனம் அவர் உத்தியோகம் நீங்கியதற்குக் காரணம் அன்னை புரிந்த மறக்கருணையும், யாமியற்றிய தவப்பயனுமேயன்றி வேறில்லை. அவரால் ராஜீயம் புத்துயிர் பெற்றது; புனருத்தாரணம் செய்யப்பட்டது. அவருடைய திருநாமமும் திருஉருவப்படமும் காங்கிஸாலயத்தில் இன்றும் என்றும் திகழ இதுவே வாய்த்த ஓர் நல்ல சந்தர்ப்பம். ஸ்ரீராமசந்திரன் துஷ்ட நிக்ரஹஞ் செய்ய எவ்விதம் வனமேகும் துக்க சம்பவம் நேர்ந்ததோ, அதேபோல தேசம் பின்னடைதலை ஒழிக்க இவர் முன்வர, வேலை யிழக்கும் சமயம் வாய்த்தது. பின்பு 1876 - ல் பனர்ஜி கல்கத்தா மெட்ராபாலிடன் கலாசாலையில்


அறிவிற் சிறந்த ஆசிரியர்

 

ஆனார். 1881 - ல் அவர் பிரீ சர்ச் கலாசாலை (Free church college) யிலும் ஆங்கில சொற்பொழிவாளராக அமர்ந்தார். மனதில் அவர் அனுபவத்தால் சுதேசக் கலாசாலையின் அவசியத்தை அறிந்தவராதலின் 1872 - ல் அவர் சொந்தமாக ஓர் தனிக் கலாசாலையை நிறுவினார். அக்கலாசாலை வெகு சீக்கிரத்தில் இந்தியாவிலேயே அதற்கு நிகரான கலாசாலை இல்லை யெனக்கூறும் வண்ணம் பிரபல மடைந்தது. அதற்கு லார்ட்ரிப்பன் கலாசாலை என்று அவர் பெயரிட்டார். அக்கல்வி நிலையத்தில் இந்து போதகாசிரியர்களே பெரிதும் நியமிக்கப்பட்டிருந்தனர். தேசமகா ஸ்தாபனத்திற்கு அரசரென விளங்கிய திலகர் பர்கூஸன் கலாசாலையில் உபந்நியாசகராகவும், அரபிந்த கோஷ் பரோடா காலேஜ் போதகாசிரியராகவும் இருந்தவர்களன்றோ! ஆசிரிய நிலையிலிருந்தவர்களே அன்னையின் பணிக்கு ஏற்றவர் போலும். பாபுவும் போதகாசிரியத்தொழிலை அடுத்தது காண்மின்!


 

‘ஸ்வில் சர்விஸ்' உத்தியோகம் இல்லாது போனதைக் குறித்து அவர் முதலில் சிறிது வருந்தினாரெனினும், கல்வி இலாகாவில் பிரவேசித்த பிறகு அவர் அதிக ஊக்கத்துடன் உழைத்து வந்தார். அவருடைய போதனாசக்தி வங்காளமெங்கும் புகழ் மணத்தைப் பரப்பிற்று. 1876 – ல் இவரை ஆங்கில உபந்நியாசகராக 'மெட்ராபாலிடன்' கலாசாலையில் நியமித்தார்கள். இதோடு கூட 1881 - ல் அவர் பிரீசர்ச்சு கலாசாலையிலும் சொற்பொழிவாளராக இருந்து வந்தார். சுதேச பாஷாபிமானங்கள் தோன்ற 1882 - ல் பாபு ஓர் சிறு தேசியக் கலாசாலையை ஸ்தாபித்து அதற்கு 'லார்டுரிப்பன்' கலாசாலை யென்று பெயரிட்டார். வங்காளத்தின் பெரிய அறிவாளிகளை இக்கலாசாலை வளர்த்து வந்தது. இந்தியர்களே இக்கலாசாலையில் உபந்தியாசர்களாக நியமிக்கப்பட்டார்கள். இக்கழகம் வங்காளத்தில் பொன்னேபோல் போற்றப்பட்டு வந்ததால் பல சீமான்கள் அதற்கு உதவி புரிந்து வந்தார்கள். பனர்ஜியின் கழகத் தொண்டு இவ்வாறாக, அவர்,

 

பக்தியுள்ள பத்திராதிபர்

 

பதவியிலிருந்து செய்து வந்த வேலையைப் பற்றி சிறிது வரைவோம். லார்டு லிட்டன் இராஜப்பிரதிநிதியாக விளங்கிய காலத்தில், பாபு, ஸ்ரீஜத் W. C. பனர்ஜியால் ஆரம்பிக்கப்பட்ட வங்காளி என்ற பத்திரிகையின் ஆசிரியர் பதவியை ஏற்றார். அத்துறையில் சித்த சுத்தியுடன் தீவிரமாய் உழைத்து வந்தார். இவர் வங்காளிப் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த போது வேறு எந்த வெளியீடும் வங்காளத்தில் தலையெடுக்க முடியவில்லை. அக்காலத்தில் வங்காளி' ஒன்றுதான் வெளி நாடுகளில் சொந்த நிரூபர்களை வைத்து நடத்தி வந்தது. பத்திரிகாசிரியத் தொழிலில் கண்டதைக் கண்டவாறே எழுதி, சத்தியத்தை ஸ்தாபித்து, அதர்மத்தைக் கண்டித்து வருபவருக்கு ஆபத்து வந்தணுகுவது சகஜம். பனர்ஜி அன்னியரின் சில அடாத செயல்களைக் கண்டித்து வந்தார். இதைக்கண்ட அவர்கள் இவரை அடக்க, தக்க சமயம் பார்த்திருந்தனர். தருணமும் வந்தது. 1883 - ல் கல்கத்தா நியாயாதிபதிகள் ஒரு வழக்கில் நீதிஸ்தலத்திற்கு ஆலயத்திலுள்ள விக்ரகத்தைக் கொண்டு வரும்படி உத்திர விட்டதைக் குறித்து வங்காளி தீவிரமாகக் கண்டித்து எழுதியது.

 

அதனால் இவர் இரண்டு மாதக் கடுங்காவல் அனுபவிக்க நேர்ந்தது. பனர்ஜி மன்னிப்புக் கேட்டு மன்றாடியும் நீதிபதிகள் மறுத்தனர். பாபு சிறைவாசஞ் செய்து திரும்பியதும் வங்காளத்தில் சுற்றுப் பிரயாணம் செய்து மக்களுக்குத் தேசாபிமானத்தை ஊட்ட ஆரம்பித்தார். இவர் சென்ற இடமெல்லாம் மக்கள் இவருக்குச் சிறப்புச் செய்து இவரைக் கொண்டாடினர். வங்காளத்தால் ஏனைய மாகாணங்களிலும் சுதேசாபிமானம் சுடர்விட்டெரிய வாரம்பித்தது. லார்டு லிட்டன் காலக்கிளர்ச்சியின் போதும், லார்டு ரிப்பனின் ஒப்பான உதவியின் போதும், லார்டு கர்சனின் காருண்ய பரிபாலனத்தின் போதும், லார்டு மிண்டோவின் சட்ட சீர்திருத்தங்கள் நிகழ்ந்தபோதும், வங்காளிப் பத்திரிகையின் வாயிலாக இவர் புரிந்து வந்த தொண்டைச் சிலாகித்து எழுத எவராலியலும்? இராஜீய ஞானத்தை மக்களுக்கு ஊட்ட முதல் முதலாகத் துணிந்த வெளியீடு இந்தியாவில் இதுவே யெனலாம். இராஜீகப் பதிப்பக விசேடக் கூட்டத்தில் (Imperial Social Conference) இவர் பதிப்பாசிரியத் தொழிலின் பாங்கைப்பற்றிப் பெரிதும் விளக்கி, வெளி நாட்டுப் பத்திரிகைகளின் வேலைகளை ஆராய்ந்து இந்திய நாடு தன்னாட்சி பெற்று வாழ வேண்டுமென்று விண்ணப்பஞ் செய்து கொண்டார். 1876 - ம் ஆண்டு ஜூலை 26. ''இந்தியர் சங்கம்" ஒன்று கல்கத்தாவில் ஆனந்தமோகன போஸ் போன்ற பல பெரியாரின் ஆதரவில் ஸ்தாபிக்கப்பட்டது. அச்சங்கத்தின் ஆரம்ப விழாவன்று, பாபுவின்

 

ஏக புத்திரரின் மரணம்

 

நேர்ந்தது. ஆயினும் பாபுவின் தேசாபிமானம், அவரை அச்சங்கக் கட்டிடத்தில் கொண்டு வந்து விட்டு விட்டது. புத்திரனுடைய மரணத்தை அவர் பெரிதாக நினைக்கவில்லை; தமது தேசத்தொண்டின் கடமையே பெரிதென்றுணர்ந்தனர்; அதன் காரியதரிசி பதவியைக் கருத்துடன் வகித்தார். தேச 'சஞ்சாரம் – சுற்றுப் பிரயாணம் செய்து அரசாங்க விஷயங்களில் நமக்குப் பிரதி நிதித்துவம் வேண்டுமென்று விளக்கி வந்தார். அந்த இந்திய சங்கம் காங்கிரசுக்கு நிகரான வேலைகளைச் செய்து வந்தது. முதல் முதல் பம்பாயில் காங்கிரஸ் மகாசபையின் திறப்பு விழா நிகழ்ந்த பொழுது அவர் சில அசௌ கரியங்களை முன்னிட்டு அதற்குச் செல்லாவிடினும் இரண்டாவது காங்கிரஸ் முதல் அவர் விடாது சென்று வந்தார். காங்கிரசின் ஐந்தாம் ஆண்டு விழாவில் இவர் செய்த ஓர் தேன்மாரியெனத்தகும் சொன்மாரியால் 60,000 ரூபாய் காங்கிரசுக்கு மூலதனமாகச் சேர்ந்தது. இனி இவருடைய


காங்கிரஸ் தொண்டு


வருமாறு: ஐந்தாவது காங்கிரஸின் தீர்மானப்படிச் சீமைக்கு இந்தியர் குறைகளை எடுத்தோதி, மாகாண சட்டசபையில் இந்தியர்களுக்குப் பிரதிநிதித்துவத்தின் அவசியத்தைக் கூறச்சென்ற நியுக்தர்களில் இவர் ஒருவராவர். இவர் சீமையில் சுற்றுப் பிரயாணஞ் செய்து பல உபந்நியாசங்களைச் செய்தார். இவருடைய சொற்பொழிவைக் கேட்ட ஓர் மேனாட்டுப் பெரியார் "முதன் மந்திரியான வில்லியம் பிட் என்பவர் காலத்திற்குப் பிறகு அதிக சாதுர்ய மாகப்பேசும் திறமையுடைய ஒருவரை நாம் இன்றுதான் கண்டோம்; விஷயத்தை விரித்துரைப்பதில் பாக்ஸ் போலவும், உபமான உபமேயத்துடன் விஷயத்தை விளக்குவதில் புநக்கைப் போலவும், நளினமாகப் பேசுவதில் ஷெரிதனைப் போலவும் இவர் விளங்குகின்றார்'' என்று ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் எழுதினார்.

 

ஆறாம் அகில இந்திய காங்கிரஸ் மகாசபையின் அவைத் தலைமை வகித்தசர் பி. எம். மேதா கான்பார், 'இப்புவியில் இதுவரை தோன்றியுள்ளபல சொல் வல்லுநரையும் தம் சொற் பெருக்கு வன்மையால் தாழ்த்தி, இந்தியாவின் குறைகளை இங்கிலாந்து பாராளுமன்றத்தில் திடம்பட, அகிலமே அஞ்சும் ஆற்றலுடன் எடுத்தோதிய உலகம் புகழும் உத்தம பாரத புத்திரராகிய பாபுவை நான் இப்பொழுது மறந்து செல்ல முடியவில்லை' என்றதினின்றும் பாபுவின் தாய் நாட்டன்பின் பெருமிதத்தைக் கண்டலறியலாம். அன்னையின் அறப் பணியில் தலை சிறந்த பாபுவை 1895 - ம் ஆண்டில் பூனாவில் கூடிய பதினோராம் காங்கிரஸ் விழா தலைவராகக் கொண்டது. அக்காங்கிரஸ் விழாவில் சில குழப்பங்கள் தலைவர்களுள்ளதரே தோன்றினவாயினும் அவற்றையெல்லாம் தமது அன்பாலும் ஆற்றலாலும் பனர்ஜி அடக்கி, அழகுபெறச் சபையை நடத்தி வைத்தனர். அவர் அக்கிராசன விரிவுரை'யைப் புகழ யாராலியலும்! மூன்று மணி நேரம் வரை அக்கிராசனர் முன்னுரை நிகழ்ந்தது. எள்ளிட விடமில்லாமல் எங்கணும் நிறைந்த அன்பர்கள் மூச்சுவிடுவது மறியாதவாறு பேசுவதினின்றும் நீங்கி யிருந்தனரென்னில் தேசமகாஜனங்களுக்கு பாபுவிடத்துள்ள மரியாதை, அன்பு முதலியவற்றை என்னென் றெழுதுவோம்! தெய்வீகத்தன்மையால் தோன்றிய இவர் போன்றவருக்கே இத்துணைச் சொல்வன்மை நயம் முதலியன பொருந்தப் பேச இயலுமேயன்றி, ஏனையோர்க்கு இத்தன்மை எளிதில் அமையாதென்று அச்சபைக்கு வந்திருந்த பலரு மியம்பி நின்றனர். இவர் இரண்டாம் முறையாக1902 - ல் ஆமதாபாத்தில் நடைபெற்ற பதினெட்டாம் அகில இந்திய காங்கிரஸ் மகாசபைக்கும் தலைமை வகித்தார்.

 

பாபுவின் சரித்திரத்தில் வங்காளப் பிரிவினை ஓர் முக்கியாம்சம் பெற்று விளங்குகின்றது. அப்பொழுது எதிர்வாதம் செய்யத் தலைப்பட்ட கட்சியின் தலைவர் பாபுவேயாம். அக்காலத்தில் பாபு பிரிவினையால் விளையும் துன்பங்களைத் தம் தாய் மொழியில் ஆங்கிலத்திலுள்ள வன்மையுடன் எடுத்தோதி, வங்காள வாசிகளால் அவதார புருடரெனப் போற்றப் பெற்றார். இவரது முயற்சி முற்றுப் பெறாது போகவே, அன்னிய நாட்டுப் பொருள்களை விலக்குமாறு வங்காள முழுவதும் வலுத்த பிரசாரம் செய்து சுதேசியத்தை ஆதரிப்பதே அன்னிய நாட்டுப் பண்டங்களை விலக்குவதாகும் என்று விரித்துரைத்தார். இனி அவர்

 

மேற் கடல் கடந்த வரலாறு

 

மிகவும் முக்கிய மாதலின் அதனைச் சிறிது கூறுவோம். அவர் சட்டசபைச் சீர்திருத்த விஷயமாக 1897 - ல் வெல்பி கமிஷனில் 'சாக்ஷியங்கூறச் சென்றார். அப்பொழுது இந்திய ராஜீய விஷயங்களைப் பொருத்திச் சொல்லுவதில் அவருக்கிருந்த ஆற்றலை மேல் நாட்டார் பெரிதும் போற்றினார்கள்; இவருடைய சொற்பொழிவுகளைப் பல இடங்களிற் கேட்டுப் பேரானந்த மெய்தினர். இவர் கடைசி முறையாக 'இம்பீரியல் பிரஸ் கான்பரன்ஸ்' விஷயமாக, இங்கிலாந்திலுள்ள இந்திய அரசாங்கக் கூட்டத்தாரோடு கலந்து பேசச்சென்று அப்பொழுதும் நன்கு மதிக்கப்பட்டு வந்தார். அவருடைய ஊக்கத்தையும் தொண்டையும் பாராட்டி மகாஜனங்கள் அவரை

 

சட்டசபை அங்கத்தினர்

 

ஆகத் தேர்ந்தெடுத்தனர். அவருடைய பொதுநல சேவையைப் போற்றி 1876 - ல் அவரை நகரபரிபாலன சபைக்கு அங்கத்தினராகக் கல்கத்தா வாசிகள் தேர்ந்தெடுத்தனர். அதிலிருந்து தொடர்ச்சியாக 20 ஆண்டுகள் வரை அவர் அதன் அங்கத்தினராக இருந்து 1899 - ல் பல அசௌகரியங்களை முன்னிட்டு அப்பதவியை ராஜிநாமா' செய்தார். திருத்தப்பெற்ற சட்ட சபையின் அங்கத்தினராக பாபு 1894 - லும், 1896 - லும், 1898 - லும் தேர்ந்தெடுக்கப் பெற்றார். அவர் சட்டசபையிலிருக்கும் பொழுது 1995 - ம் ஆண்டைய சுகாதார மசோதாவை நிறைவேற வைத்தவர்களில் முக்கியஸ்தராக விளங்கினார்.


முடிவுரை

 

பாபுவுக்கு ஒரு புத்திரரும், ஐந்து புத்திரிகளும் உளர். சொல்லுவதை அனுஷ்டானஞ் செய்து காட்டும் உயரிய தன்மையுள்ள அவர் தமது பெண்களை நன்கு கல்வி பயிலச் செய்தார். வயோதிக நிலையை யடைந்த அவருக்கு ஏகாந்த வாழ்வு ஏற்றதாயமைய, கல்கத்தாவுக்கு 13 - மைல் அப்பாலுள்ள மணிராம்பூர் என்னுமிடத்தில் அவர் தம் அந்தியக்காலத்தைக் கழிக்கக்களித்தார். அவர் தமது வீட்டைச் சுற்றியுள்ள தாவரங்களை வளர்ப்பதிலும், தேகப்பயிர்ச்சியை அத்துணை வயோதிகத்திலும் இடை விடாது செய்வதிலும் பிரியமுடையவர். முப்பத்தைந்தாண்டுகள் இடைவிடாது தேசசேவை புரிந்த அவருக்கு ராஜீய விஷயத்தினின்றும் நீங்கியிருப்பது மிக்க கஷ்டமாயிருந்தது. ஆனால் உடல் இடந்தரவில்லை. இப்பெரியாரின் சரிதத்தினின்றும் நாம் பல அரியவிஷயங்களை அறியற்பாலோம். 'அறையிலாடிய பின்னரே அம்பலத்தாட வேண்டு' மென்பர் பெரியார். நாம் ஒரு விஷயத்திற்புகு முன்னர் அதற்கேற்ற பக்கபலங்களை முறையே செய்து கொள்ள வேண்டுமென்பதை இப்பெரியார் சரிதத்தினின்றும் நாம் அறிகின்றோம். ஆசிரியராகவும், நியாயவாதியாகவுமிருந்த பாபு அரங்கேறி அபாரமாகப் பேசும் வல்லமையை யடையப் பட்டபாடு இயம்பற்பாலதன்று. அதற்காக அவர் பலநூல்களைக் கற்றுப் பயின்று பின்னரே வெளியில் இராஜீய மேடைகளிற் பேசத் தொடங்கினார். மேடையிற் பேசிப் பிறர் மாலை போட, கரகோஷம் செய்ய, மங்கள வாத்திய ஒலி முழங்க, ஊர்வலம் வருவதை அவர் கேவலமாக நினைத்தவர்; உள்ளொன்று வைத்து நாவாலொன்று பேச நாணுபவர்; பட்டங்களைக் கிட்டவிடாதவர்; சட்டசபை அங்கத்தினராகவும், காங்கிரஸ் தலைவராகவும் ஆகித்தான் தேசசேவை புரிய வேண்டு மென்ற கொள்கையில்லாதவர்; அவற்றைவிட எள்ளளவு தூய மனதுடன் புரியும் தொண்டே சிறந்த தென்பது அவருடைய சித்தாந்தம்.


 "பொய்யாமை யன்ன புகழில்லை யெய்யாமை
 எல்லா வறமுந் தரும்"


என்பதை அவர் உணர்ந்தொழுகியவர். உயிர்பட வரினும் உள்ளதை ஒளியாது கூறும் மாண்பினருமவரே. இவர் கல்கத்தா ரிப்பன் கலாசாலையாசிரியராக விருந்த அதேகாலத்தில் ராஜீயவாதியாகவும், கலாசாலை உபந்நியாசகராகவும், மூன்று கலாசாலைகளின் அதிகாரியாகவும் இருந்து, அன்றன்றைய வேலைகளை அன்றன்றே முடிப்பதும், தமது குமாஸ்தாக்களைச் சரிவர வேலை வாங்குவதும், கணக்குகளைத் தினந்தோறும் பரிசோதிப்பதும், பாடங்களை மூன்று கலாசாலைகளிலும் உபந்நியாசிக்கத் தயார் செய்வதும், இவற்றுடன்கூட, தேகாப்பியாசம், மாலை உலாவுதல், பூஜை முதலியன செய்தல், நண்பர்களுடன் கூடுதல், விருந்தோம்பல் இவைகளை நடத்தலும் ஆகிய இவற்றைச் செய்து வந்த இவருடைய ஆற்றலை நாம் சற்று ஆலோசித்துப் பார்த்தால் இவருடைய உழைக்குந்தன்மை நமக்குப் புலப்படாமற் போகாது. ராஜீயத்துறையில் இவர் வங்காள முடிசூடா மன்னராக விளங்கினரென்னில் இவருடைய தேசபக்தியை எடுத்துரைக்க நாம் எம்மாத்திரம். இப்பெருந்தகையை 1925 - ம்ஆண்டு ஆகஸ்டுத் திங்களில் விண்ணாட்டவர் தம் விருந்தினராக ஏற்றனர். பாரதநாடு முழுவதிலும் இவருடைய பிரிவுக் காற்றாத மக்கள் கூட்டங் கூட்டி யமனைக் கண்டனஞ் செய்தனர். வங்காளம் வாடி வருந்தி நின்றது. பாரதத்தாயும் வருந்தினாளாயினும் மற்றொரு புதல்வனைப் பார்த்துச் சற்று ஆறுதலடைந்தாள்.

 

 

ஸ்ரீ. லக்ஷ்மி காந்தன்.

 

ஆனந்த போதினி – 1927 ௵ - நவம்பர் ௴

 

No comments:

Post a Comment