Friday, September 4, 2020

 

பாரத நீதிகள்

 

நீர் வளத்தாலும் நிலவளத்தாலுஞ் சிறந்த இப்புண்ணிய பூமியாகிய பரத கண்டத்தில் ஆடவர் பெண்டிராகிய இருதிறத்தாரும் அறம் பொருள் இன்பம் வீடென நான்கையும் முறையே அடைய உற்றதுணையாயிருந்து வருவனவும், உறுதுயரடையும் பொழுது செய்வதறியாது திகைக்கும் மானிடர்க்கு இன்னது தான் தகுந்தது என்று காட்டப் பல நீதிகளைத் தம்முட் கொண்டனவுமானவை இராமாயண பாரதங்களாகிய இதிகாஸங்களே. இதனானே நம் முன்னோர் இவைகளைப் பெரிதும் போற்றித் துதித்து ஆராதித்து வந்தனர்.

     

ஆனால் தற்காலத்தில் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்று திரியும் தான்றோன்றித் தம்பிரான்கள் பலர் இவையெல்லாம் கட்டுக் கதை யென்று அவமதித்துத் தள்ள ஆரம்பிக்கின்றனர். அன்னவர்க்கு இச்சரிதங்கள் உண்மையாக நடந்தன வென்று நிச்சயப்படுத்த முடியாது. நடந்த விஷயத்தைக் கண்டோர் கூற அதனை மறுத்தால் யார் தான் நிரூபிக்க முடியும். ஒருதாய், 'உன் தந்தை யிவர்தான்' என்று கூற அதனை நம்பாத குழந்தையை உணர்த்துவிப்ப தெப்படி? முடியாத காரியமன்றோ? மேலும் அன்னவர் கட்டுக் கதையென்று கூறுவதாலேயே, அவ்விதிகாஸங்களுக்கும், அவைகளைப் போற்றும் இந்திய மக்களுக்கும் சிறிதும் குறைவந்ததில்லை. நமக்கு முக்கியமானவை நல்லொழுக்கத்திற்குச் சாதனமாகிய நன்னீதிகளே. அவை ஏராளமாய் இந்நூல்களில் பெருகிக் கிடக்கின்றன. உண்மையில் நடவாதிருக்கவும், புதிதாகக் கதை யொன்றைக் கற்பித்து அதன்மூலம் அரும் பெரும் நீதிகளைப் புகட்டியிருத்தல், ஆக்கியோருடைய பெருமையை விளக்கவில்லையா? அவர் காலத்துள்ள வழக்க ஒழுக்கங்களை உணர்த்தவில்லையா? ஒவ்வொருவரும் கடைப்பிடித்து ஒழுகவேண்டிய முடிவான குறிப்பை விளக்கவில்லையா? இவை இந்திய மக்களின் விலைமதியா மாணிக்கமன்றோ?

 

நிற்க, பாரதம் மானிடர்க்குப் புகட்டும் நீதியைச் சற்று ஆராய்வாம். இந்நூலில் பரக்கக் காணக் கிடப்பன, சகோதர வொற்றுமை, பொறாமையால் வருங் கேடு, கற்பு, ஆபத்துக்காலத்து ஆண்டவன் உதவிபுரிதல், தீமை செய்தார் தீமையுறுதல் என்பன முதலியனவாம்.

 

முதலில் பாரதத்தை நீதி புகட்டுவதற்கே ஏற்பட்ட நூல் என்று கொண்டு பாண்டவர் துரியோதனாதியராகிய இருதிறத்தாரும் சண்டையிடுவது அவசியந்தானா? என்பதை ஆராய்ந்தால் அவ்வாறு மனம் வேறுபட்டு யுத்தஞ் செய்தல் பல்வேறு நற்குணங்களை விரிக்கின்றது என அறியலாம். முதலில், உலகத்தில் பொறாமையால் ஒரு மனிதன் மற்றொருவனுக்கு எவ்வளவு தூரம் தீங்கு செயலாம் என்பதை இந்நூல் துரியோதனாதியர் மூலம் தெரிவிக்கின்றது. அவர்கள் சிறுவயது முதல் பொறாமை உருவெடுத்து வந்தாற் போன்று பாண்டவரைத் தொலைக்கவே சூழ்ச்சி செய்து வந்தனர். விஷத்தை யூட்டினர். கங்கையிற் கழுமரம் நாட்டினர். பாண்டவரை அரக்கு மாளிகையிலிட்டுத் தீமூட்டினர். இன்னும் இவையெல்லாம் போதாவென்று இராஜ சூயயாகத்தில் பல்வே றரசர் மத்தியில் மேன்மை பெற்றிருந்த பாண்டவரை வெகுசீக்கிரத்தில் வஞ்சனையோடு மண்டபங் காணவேண்டு மென்னும் வியாசத்தால் வரவழைத்துச் சூதாடுவித்து எல்லாப் பொருளையும் பறித்து சுதந்தாமின்றி இருக்கும் அவர்கள் முன்னிலையில் அவர்களது மனைவியாகிய திரௌபதியைக் கூந்தல் பிடித்துக் கொணர்வித்தது மன்றி ஆடையுரியும் படிக்கும் ஆஞ்ஞையிட்டனர். இவற்றைவிடக் கொடுமையாதேனு முண்டோ? ஆனால் வலியார் ஒருவர் கொடுமை செய்ய எளியவர் பயத்தினால் பொறுப்பது வழக்கம் என்று கூறுவர். அவ்வாறு பாண்டவர்கள் பலமற்றவர்களா? துரியோதனாதியர் அவர்களை விட வல்லவர்களா? என்பதை நோக்குங்கால் பாண்டவர்களே எத்தனையோ மடங்கு வல்லவர்கள் என்பது வெளிப்படும். இதனையுணர்த்தவே சிறுவயதிலிருந்தே பாண்டவர்கள் துரியோதனாதியர்களை விட வல்லவர்கள் என்பதைப் புராணிகர் காட்டியிருக்கின்றனர். விளையாட்டிலும் பாண்டவரே ஜயித்தனர். பகாசுரன் முதலிய ராக்ஷஸர்களையும் வென்றனர். துரியோதனாதியரால் ஜயிக்க முடியாத துருபதனையும் வென்றனர். இவ்வாறு தங்கள் பலத்தைப் பலசமயத்தில் காட்டியுள்ள பாண்டவர்கள் தங்கள் மனைவியைத் துச்சாசனன் துகிலுரியப் பார்த்திருப்பதேன்? போருக்கெழுந்தால் துரியோதனாதியர் முன்னிற்பரா? ஒருபோதும் இரார்.

 

இதைத் தெரிந்தும் பாண்டவர் வாளா இருந்தமை பொறுமையின் பொருட்டே என்பது தெள்ளிதின் விளங்குகின்றது. 'பொறுத்தார் பூமி யாள்வார்' என்பதைக் காட்டுகின்றது. இதனால் அறியக்கிடக்கின்றது என்ன வெனில் பொறுமையை இழக்க வேண்டிய காலம் ஒருபோதும் யாவருக்கும் ஏற்படாது என்பதே. பாண்டவர் அடைந்த துன்பத்தைவிட எவருக்கு எத்துன்பம் மிகுதியும் வரக்கூடும்?

 

பிறகு பரக்கக் காணக்கிடப்பன சகோதர வொற்றுமையும் மூத்தோர் சொற்குக் கீழ்ப்படிதலுமாம். பாண்டவர் ஐவரும் சரீரவல்லமையிலும், புத்தி வல்லமையிலும் ஒருவருக்கொருவர் தாழ்ந்தவரல்லர் எனினும் எக்காலத்தும் பொறாமை சிறிதுமின்றி ஒற்றுமையோடே எக்காரியத்தையும் செய்து வந்திருக்கின்றனர். உலகத்தில் மண் விஷயத்திலும் பொன் விஷயத்திலும் மற்றெவ்விஷயத்திலும் மனச் சஞ்சலமடையாத இருவர் பெண் விஷயத்தில் மாறுபட்டு உயிரிழப்பதும் சாதாரணமாயிருக்கிறது. பாண்டவர் ஐவரும் ஒரு மனைவியைப் பொதுவாக அடைந்திருந்தும் கனவிலும் மாறான எண்ண மின்றிக் காலங்கழித்தனர். இப்பரிசோதனையை விட அவர்கள் ஒற்றுமையை நீக்க வேறு எச்செய்கையாற்றான் முடியும். இதனால் இந்திய மக்கள் அடைய மடை எண்ணும் ஒற்றுமையும் இத்தாத்ததே என்பது தெள்ளிதின் விளங்குகின்ற தல்லவா?

 

இதனை யறியாதார் சிலர், பாண்டவர் ஐவரும் ஒரு மனைவியை யடைந்திருத்தலால் அவர் நாகரீக மற்ற காலத்தவர்' என்று கூறுகின்றனர். இன்னவர்


 "உண்டு குணமிங் கொருவர்க் கெனினுங் கீழ்
 கொண்டு புகல்வதவர் குற்றமே "


என்ற வருக்கத்தைச் சேர்ந்தவரன்றோ? சூதாடிப் பொருள்களை யெல்லாம் பாண்டவர் தோற்ற பிறகு திரௌபதியைப் பிடித்திழுத்து வருங்கால் அவள் அழுஞ் சமயம் துரியோதனன்,

'"தலத்துக்கியை யாது'' ஐவரை மணந்த நீ அழுவானேன்' என்று கூறுவதால் அக்காலத்துப் பலர் ஓர் பெண்ணை மணந்து கொள்ளும் வழக்கம் சாதாரணமாக இருந்ததில்லை என்பது விளங்கவில்லையா?

 

இது நிற்க, பெண்பாலர்க்கும் இந்நூல் நிறைந்த கற்பைப் புகட்டுகின்றது என்பதைத் திரௌபதியின் சரிதத்திலிருந்து நன்கு அறியக்கிடக்கின்றது. கற்பில் திரௌபதி அருந்ததியை யொத்திருந்தாள் என்பதைப் புராணிகர் பல இடங்களில் எடுத்துக் காட்டியுள்ளார். அவள் சிறு வயதில் துருபதனால் வளர்க்கப்பட்டு மணஞ் செய்து கொடுக்கப்பட்டாள். பாண்டவர் ஐவரையும் ஒருங்கே ஒரே கணவனாகப் பாவித்து நடந்து வந்தாளாகலின் அவள் கற்பிற்குச் சிறிதும் குறை வந்ததில்லை. மேலும் அவ்வைவரையும் ஒரே காலத்தில் வரித்தாள். ஆதலால் உடல் வேறுபடினும் உயிர் ஒன்றே.

 

இது நிற்க, கணவனன்றேல் கடவுளே கதியென்று எண்ணி, திரௌபதி, திருதராஷ்டிரன் அரண்மனையில், பாண்டவர் எப்பொருளையுந் தோற்றுச் செய்வதறியாது வீற்றிருக்குங்கால் கண்ணபிரானைத் துதிக்க, ஆபத்துக் காலத்து 'ஆதிமூலமே' என்றழைத்த கஜேந்திரனைக் காத்த கடவுள் அவள் கூடவிருந்து காப்பாற்றியதால் ஆண்டவன் அடியவர்க் கெளியவன் என்பது தெள்ளிதின் விளங்குகின்றது.

 

அருந்தமிழ் அறிந்த அன்பர்காள்! உண்மை யுணர விரும்பும் உத்தமர் காள்! மேற்கண்ட நீதிகளைப் போன்ற நல்லொழுக்கத்திற்குச் சாதனமான நன்னெறிகள் நந்தமிழ் இதிகாஸ புராணங்களில் பல்கிக்கிடக்கின்றன. உண்மையறியும் நோக்கத்தோடு விகற்ப புத்தியின்றி ஆராய்ந்தால் அவை தோன்றாமற்போகா. எப்பொருள் எத்தன்மையனவாகத் தோன்றினும் மெய்ப்பொருள் கண்டுய்வோமாக.

 

சுபம்.

 

S. சுயம்பிரகாசம், விண்ண மங்கலம்.

 

ஆனந்த போதினி – 1927 ௵ - மார்ச்சு ௴

 

 

No comments:

Post a Comment