Friday, September 4, 2020

 

 

பாரதப் பயன்

(பண்டித. பூ. ஸ்ரீநிவாசன்.)

 

நம் நாட்டில் வழங்கும் புராணங்கள் இதிகாசங்கள் என்பன போன்ற பல்வகைப் பாகுபாடுகளையுடைய நூல்களுள் இராமாயணமும் மகாபாரதமும் இதிகாச வகுப்பைச் சேர்ந்தனவாம். இவை சைவர் வைணவர் என்னும் பேதம் சிறிதுமின்றிப் பொதுவாக யாவராலும் கொண்டாடப்பட்டு வருவது யாவருமறிந்த விஷயமாம். இவற்றுள், இராமயணத்திலுள்ள சுந்தரகாண்டத்தை ஒருவர் கிரமப்படி அனுதினமும் பாராயணம் பண்ணுவாராயின் அவர் கோரிக்கைக ளெல்லாம் ஈடேறும் என்பர். இது முழுதும் பொய்யெனக் கூறற்குச் சிறிது மிடமில்லை. அவ்வாறு பாராயணம் செய்து அதனால் நற்பயனடைந்தோரே அனுபவ பூர்வமாக இவ் விஷயத்தைக் கூறக் கேட்டிருக்கிறோம். இதனை நம்பாதோர் பலரிருக்கலாம். அவர்கள் இதுகாகதாலீய நியாயத்தின்படி நிகழ்ந்திருக்கலாம் என்றேனும் ஒப்பியே தீரவேண்டும். (நன்றாகப் பழுத்து விழுந் தறுவாயி லிருந்த ஓர் பனம் பழத்தின் மேல் ஓர் காகம் வந் துட்கார்ந்ததும் அப்பழம் விழ, அக் காகம் உட்கார்ந்ததனால் தான் பனம் பழம் விழுந்தது எனக் கூறுதல் காகதாலீய நியாயம் எனப்படும்.) அவ்வாறே பாரதத்தில் விராட பருவம் வாசித்தால் மழைபெய்யும் என்னுமோர் நம்பிக்கையும் நம் கிராமவாசிகளுக்குண்டு. தங்கள் காலத்தில் அப்படிப் பெய்ததாக அநேக வயோதிகர் கூறுவதை நாளைக்கும் கேட்கலாம். எனவே இராமாயணமும் மகா பாரதமும் நம் நாட்டினரால் பொன்னேபோற்போற்றப்பட்டு வருகின்றன வென்பது வெள்ளிடை மலையாம். ஆனால் இராமாயண கதாநாயகனாகிய இராமபிரான் தெய்வமாகப் போற்றப்படுவது போல் மகாபாரத கதா நாயகர்கள் போற்றப் படுவதில்லை. எனினும், கதாநாயகியாகிய திரௌபதா தேவியைச் சிலர் பெண் தெய்வமாகக் கருதித் தொழுகின்றனர். ஆலயங்களுங் கட்டிப் பூசிக்கின்றனர்.

 

இவ்விரு நூல்களுள் மகாபாரதம் இராமாயணத்தினும் ஏற்றமாகக் கொள்ளப்பட்டு வருகின்றது. இது வேதத்திற்கு ஒப்பானதென்று முரைப்பர். “நீடாழி யுலகத்து மறை நாலொடைர் தென்று நிலை நிற்கவே" – எனவும், “மண்ணி லாரண நிகரென வியாதனார் வகுத்த - எண்ணிலா நெடும்காதை" - எனவும், “பாரத: பஞ்சமோ வேத:" எனவும் இதனை யான்றோர் புகழ்ந்து பேசியிருக்கின்றனர். வருடந்தோறும் விசேஷமாக கிராமங்களில் இப் பாரதக்கதை வாசிக்கப்பட்டு வருவது கண்கூடு. பாரதப் பிரசங்கத்தையே தொழிலாகக் கொண்டிருக்கும் புலவரும் நம் நாட்டில் பலருளர். ஒரு கிராமத்தில் பாரதம் படிக்கின்றார்கள் என்பதைக் கேள்வியுற்றவுடன் சுற்று வட்ட கிராமங்களிலுள்ள ஆடவரும் பெண்டிரும் நூற்றுக்கணக்காய் அங்குக் கூடிவிடுவர். பாரதக் கதை நாடகமாகவும் நடித்துக் காட்டப்படுகின்றது. கடைசி நாளில் தீ மிதிக்கும் விழா (நெருப்புத் திருவிழா) நடைபெறும். அப்பொழுது குறிப்பிட்ட சிலர் தீ மிதிப்பார்கள். இவ்வாறு பல கிராம வாசிகள் தங்கள் கிராமங்களில் எப்பாடு பட்டேனும் வருடந்தோறும் பாரதப் பிரசங்கம் -(இதை நெருப்புத் திருவிழா என்று வழங்குவார்கள்) நடத்தவேண்டிய முயற்சிகளை ஊக்கத்துடன் செய்வர்.

 

இதற்குக் காரணம் என்ன? இந்தக் கதையை யறியாதார் காணக்கிடையார்; யாவர்க்கும் இந்தக் கதை தண்ணீர்ப் பாடமாகத் தெரியும். சிலர்க்குப் பிரசங்கியாரை விட அதிகமாகவும் தெரியும் எனலாம். அங்ஙனமாக, தெரிந்த கதையையே மறுபடியும் மறுபடியும் கேட்பதேன்? -- காரணந்தான் தெரியாது. கதை கேட்கக் கேட்க - எத்தனை முறை கேட்டாலும் இன்பமாக விருக்கிறது என்றொரு காரணம் காட்டப் படலாம். மற்றொரு முக்கிய காரணத்தையும் அகாவது ஊர் சுபிக்ஷமாயிருக்கும் என்பதே. முதலில் காட்டிய காரணத்தை விட்டிட்டு இரண்டாவது காரணத்தை எடுத்துக் கொள்வோம். “பாரதம் நடத்துவதால் ஊருக்கு க்ஷேம முண்டாகின்ற தென்பது மெய்தானா? அப்படி உமக்கு ஏதேனும் க்ஷேமம் உண்டாயிற்று? " எனக்கேட்டால், என்ன விடை கிடைக்கும்? " நன்மை யுண்டாகும் என்னும் எண்ணத்தோடு எம் முன்னோர் அனேக்காலமாகத் தலைமுறை தலைமுறையாக இப்படிச் செய்து வந்தார்கள். நாங்களும் அவர்களைப் பின்பற்றிச் செய்து வருகிறோம் " என்னும் விடையே கிடைக்கும். இதனால் பெறப்படுவதென்ன? நமது முன்னோர் பாரதக் கதையை ஒவ்வொரு ஊரிலும் வருடந்தோறும் நடத்தி வருதல் வேண்டும். அப்படிச் செய்து வருதலால் அனேக நன்மைகளுண்டாம் என்னும் எண்ணத்தை யாவர்க்கும் பரப்பியதோடு தாங்களும் அவ்வாறே செய்து வந்தனர். மற்றொன்றாகிய இராமாயணம் இவ்வாறு யாண்டும் நடத்தப்படுவதில்லை.

 

பாரதம் பதினெட்டுப் பருவங்களை யுடையது. முதல் பத்துப் பருவங்களிலும் பாண்டவ கௌரவர்களின் பிறப்பு வளர்ப்புக்களும், அவர்கள் விரோதங் கொள்ளுதலும், துரியோதனன் சகுனி முதலிய துஷ்டர்களின் சேர்க்கையால் உத்தமர்களாகிய தன் சிற்றப்பன் பிள்ளைகளாகிய பாண்டவர்கள் மீது பொறாமை கொண்டு சூதாடி வஞ்சனையால் அவர்கள் செல்வமனைத்தையும் கவர்ந்து கொண்டு அவர்கள் மனைவியான பாஞ்சால ராஜகுமாரியைப் பார்மன்னரவையில் மானபங்கப்படுத்தி அவர்கள் வனவாசம் பதின்மூன்றாண்டு செய்துவரின் பாதிப்பார் பகிர்ந்தளிப்பேன் எனப் பகர்ந்து காட்டிற்குக் தூரத்தியதும், அவ்வாறே அவர்கள் வனவாச முடித்து வந்து கேட்டபோது சொன்ன சொல் தவறி அரசு கொடேனென்றதும், பின்னர் இருதிறத்தார்க்கும் போர் நிகழ்ந்ததும், அப்போரில் துரியோதனனாதியர் மாளப் பாண்டவர் வெற்றி மாலை சூடிப் பாரைக் கைப்பற்றியதும் கூறப்பட்டிருகின்றன. பின்னுள்ள எட்டுப் பருவங்களிலும் அனேக ராஜ தருமங்களும், நான்கு வகைப்பட்ட ஆஸ்ரமிகளின் ஒழுக்கங்களும், இல்லற வியல்பும், முத்தி நெறியும் இன்னோரன்ன பிறவும் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் சாந்திபருவம் மிகவும் சிறந்து விளங்குவதாகும் எனினும் பாரதக் கதையில் முதல் பத்துப் பருவங்களே முற்சொன்ன பிரசங்கங்களில் நடைபெறுகின்றன. பின்னுள்ள பத்துப் பருவங்களின் பெயர்களை யேனும் அவர்கள் கேட்டிருப்பரோவென்பதும் பெருஞ் சந்தேகமே. எங்ஙனமாயினும் அது முன்னோரால் நியமிக்கப்பட்டது தானே. அவர்கள் முழுவதும் நடத்தவேண்டு மென்று வழி காட்டியிருந்தால் இவர்களும் செய்வார்கள். அவர்கள் அவ்வாறு கூறவில்லை; இவர்களும் அவ்வாறு நடத்துவதில்லை. இதில் பெரியோர் நோக்கமென்ன வென்பதே நாம் ஆராயவேண்டிய விஷயம். 'துச்சாதனன் திரௌபதையைத் துகிலுரிந்தான், பாண்டவர்கள் வனவாசத்தில் மெத்த கஷ்டப்பட்டார்கள், விராடபுரத்தில் கீசகன் திரௌபதையைப் படாதபாடு படுத்தினான், வீமன் பிரசண்டமாருதம் போல ஒரே யடியில் கீசகனைக் குத்திக் குமைத்துக் கொன்றுவிட்டான், அபிமன்யு அதிசயப் போர் புரிந்தான், கிருஷ்ணன் அர்ச்சுனனுக்குத் தேரோட்டினான், துரியோதனனைக் கதாயுதத்தைக் கொண்டு ஒரே அடியில் கீழே தள்ளிக் கொன்றான் வீமன் என்பன போன்ற கதைகளைவாசித்து விடுவதனாலும் கேட்டு விடுவதனாலும் வரும்பய னென்ன? சோறு என்றொருவர் சொல்லக் கேட்டமாத்திரத்தில் பசியடங்கி விடாது. வெறுங்கதைகளை அதிலும் பாரதம் போன்ற வெறுஞ் சண்டைக் கதைகளை - கேட்டவளவில் நன்மை நேர்ந்துவிடாது. அதிலும் ஊருக்குச் சுபிக்ஷம் உண்டாய் விடாது.

 

அங்ஙனமாயின், முன்னோர் இவ்வாறு ஏற்படுத்தியது பயனற்ற காரியமோ? அன்று அன்று. அவர்கள் அபிப்பிராயம் - நோக்கம் - இன்னதென்று அறிந்து கொள்ளாத குற்றம் நம்முடையதே. கல்வி யறிவற்ற பாமரர்களுக்குத் தான் தெரியாது; கற்றறிந்தவர்களாகிய பிரசங்கிகளும் இதனையவர்களுக்கு அறிவுறுத்துகின்றனரில்லை. உண்மையைக் கூறிவிட்டால் மறு வருஷம் பிரசங்கம் நடவாதே, நமது வருவாயின் வாயில் மண் விழுந்து விடுமே என்னு மச்சம்போலும் அவர்களுக்கு.


எத்தனை யெத்தனை சனனத் தியற்றும் பாவம்

எத்தனையுண் டெனினுமொரு விருக்ஷத்துற்ற

மொய்த்த பல பறவையெலாங் கல்லொன்முலே

முகமாகி யகன்றோடு முறைமையே போல்
உத்தமமாம் பாரதங்கேட்டதனால் தீரும்

உளத்திலெதைக் குறித்தாலும் பொருத்துவிக்கும்
சுத்த பவித்திரமாகு மணமுமெலாச்

சுகமுமவர்க் கலதொன்றாற் சொல்லொணாதே.

 

என்பன போன்ற பாடல்களைக் கூறி, இப்பாரதக் கதையை ஒரு முறை கேட்டவர்களும் எல்லாப் பாவங்களும் நீங்கப்பெறுவர்; புத்திரரில்லார் புதல்வர்ப்பெறுவர்; மணமில்லார் மணம் பெறுவர்; பணமில்லார் பணம் பெறுவர் என்று பதங்களை அடுக்கடுக்காய்க் கொட்டிப் பிரசங்கம் செய்வர். இதற்குத் திருஷ்டாந்தமாக ஓர் கதையும் கூறப்படுகிறது. அது இது.

 

ஜெனமேஜெய மன்னன் இக்கதையைக் கேட்டுவருங் காலத்தில் ஓர்கறுப்புத் துணியை ஓர் பெட்டியில் வைத்து மூடிவிட்டுக் கதை கேட்டு வந்தான். கதை முடிந்த பின் எடுத்துப் பார்த்தபோது அது கருகிறமாத வெளுத்திருந்தது என்பதாம். இப்படி யெல்லாம் சொல்லிக் கேட்போரை மதியீனர்களாக்கி வருவது கற்றோருக் கழகாகுமோ. இனி,

 

அப்பெரியோரின் நோக்கர் தானென்ன வெனப் பார்ப்போம். பாரதக்கதையில் பாண்டவர் கௌரவர் என இரண்டு கக்ஷியினர் காணப்படுகின்றனர். அவர்களுள் பாண்டவர்கள் மிகவும் பொறுமை தெய்வபக்தி கருணை முதலிய நற்குணங்கள் நிரம்பப் பெற்றவர்கள். இவர்களின் தாயாதி (பங்காளி) யாகிய துரியோதனன் இவர்களுக்கு நியாயமாகச் சேர வேண்டியபாகத்தைக் கொடுக்க மனமின்றி அவர்களை யழித்துவிடின் அப்பாகத்தையும் தானே யனுபவிக்கலா மென்றெண்ணி, அவர்களைக் கொல்லப் பலவகைச் சூழ்ச்சிகளை யெல்லாம் செய்து பார்த்தான். அவர்களை வதைக்க முடியாமையால் சூதாட்டத்தினால் நாடு முதலியவனைத்தையும் அபகரித்துக் கொண்டு காட்டிற்கனுப்பி விட்டான். சில பெரியோர்கள் சொன்ன வார்த்தையை மறுத்தற் கஞ்சிப் பதின்மூன்றாண்டு கழித்து வந்தால் பாகத்தைக் கொடுத்து விடுவதாகச் சொன்னான். ஆனால் அப்படியே அவர்கள் திரும்பி வந்து கேட்டபொழுது தன் படைவலிமையைப் பெரிதாகக் கருதிச் சொன்னபடி கொடுக்க மறுத்து விட்டான், பாண்டவர்களோ தெய்வ பலத்தையே பெரிதாகக்கருதி, 'சத்தியமே ஜெயம்' என்று க்ஷத்திரிய தருமத்தைக் கைவிடாமல், போர் புரிந்தேனும் அரசுபு ரிவதென்று துணிந்து அமருக்காயத்தப்பட்டனர். இருபடைகளும் கைகலந்து பொருதன. போருக்கஞ்சிப் புறமிடாப் புரவலர் பலரைப் படைத்துணையாகப் பெற்றிருந்தும் துரியோதனன் தன் தம்பியரையும் புத்திரரையும் பந்து மித்திரர்களையும் நண்பரையும் இழந்து முடிவில் தானும் பரிதாபமாக அமர்க்களத்திலடியுண்டு ஆவியிழந்தான். இது தான்பாரதக் கதையின் சுருக்கம்.

 

பொதுவாகப் பாரதத்தினின்றும் தெரிந்தெடுத்து அனுஷ்டிக்கப்பட வேண்டிய நீதிகளும் தத்துவங்களும் அளவிடற்கரியனவா பிருப்பினும் சிறப்பாக இப்பாரதக் கதையினால் அறியக்கிடக்கும் நீதியாவது: ''ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்களாயுள்ள பங்காளிகள், நிலம் வீடு முதலிய சொத்துக்களின் சம்பந்தமாக, ஒருவர் மீதொருவர் பகைமை பாராட்டி, ஒருவர்பாகத்தை யொருவர் அபகரிக்கக்கருதி மோசம் செய்ய நினைக்கலாகாது. பெரியோர்கள் முன்னிலையில் உள்ள சொத்துக்களைச் சமபாகமாகப் பங்கிட்டுக் கொண்டு மனவருத்தமின்றி ஒற்றுமையுடன் வாழ்தல் வேண்டும். யாவனொருவன் அதிக்கிரமமாக நடப்பினும், 'போகட்டும், அவன் பிரியப்படியே எடுத்துக் கொள்ளட்டும்; அன்னியனுக்கல்ல; என் சகோதரனுக்கே யல்லவாகொடுக்கிறேன்' என்று சிறிது விட்டுக் கொடுத்தேனும் சமாதானப் படமுயலுதல் அவசியம். அங்ஙனமின்றி, நியாயவாம். கடந்து பெரியோர் பேச்சையும் கேளாமல் துர்வாதத்தால் பகைமையைப் பொருட்படுத்தாது முழுவதையு மபகரிக்கக் கருதுவோர் அழிந்து படுவர். இதற்குத் துரியோதனனே சாட்சி. அனியாயம் எவ்வளவு பலமுள்ளதாகக் காணப்படினும் முடிவில் அழிந்து படுவது அதுவே. தருமபுத்திரர் எவ்வளவு பொறுமையைக் கைக்கொண்டிருந்தார்! மனைவியைச் சபையிலிழுத்து வந்து அவளதாடையையுரியச் செய்ததைவிட மேலான அவமானம் பிறிதொன்றிருக்க முடியாது.

 

அத்தகைய அவமானத்தை விளைத்த காலத்தும் அவர் பொறுமையைக் கைவிட்டாரில்லை. வனவாசம் செய்து வருமாறு துரோணர் முதலிய பெரியார் செய்த தீர்மானம் சரியோ அன்றோ, உடனே பொறுமையுடன் ஏற்றுக் கொண்டார். முடிவில் வெற்றி அவருடையதாகவே யிருந்து ‘பொறுத்தவர் பூமியாள்வார்' என்னு மொழியை நிலைநாட்டிற்று. உத்தமர்களுக்கே தெய்வசகாயமுமுளதாகும் என்னும் வாக்கியம் பொய்க்காதபடி கிருஷ்ணபகவான் துணையும் பாண்டவர் பக்கலே யிருந்தது' என்பன போன்ற நீதிகள் நிலங்களைப் பங்கிட்டுக் கொள்ளும் விஷயமாகப் பெரு வழக்கிட்டு நிற்கும் கிராமவாசிகளுக்கு எத்துணையறிவை யூட்டி ஒற்றுமையுண்டாதற் கேதுவாகுமென்பதை எண்ணிப் பார்க்குமிடத்து, இக் கதையை வருடந்தோறும் கிராமங்களில் நடத்தவேண்டுமென்று பெரியோர் ஏற்பாடு செய்தது எவ்வளவு அறிவுடைமை யென்பது விளங்காமற் போகாது. பகைவரிழைக்கு மின்னல் எத்துணைத் துன்பம் பயப்பதாயினும் அதன் பொருட்டு நீதிநெறி மாறாமலும் பொறுமையுடனுமிருந்து கடவுளை நம்பிக் கடைப்பிடிப்போர் தேவருக்கொப்பாவர், யாவராலும் போற்றவும் படுவர் என்னுங் கருத்தைப் பாண்டவர்களை வணங்க வேண்டுமெனத் தெய்வ சம்பந்தத்தையு முட்புகுத்தியிருப்பது இன்னும் எவ்வளவு அறிவுடைமை என்பது ஆராய்ந்தறியத் தக்கதாகும். பாரதக் கதையின் இப் பரம தாற்பரியத்தைச் செவ்வனே யறிந்து கடைப்பிடித்து எல்லாக் குடும்பங்களும் சண்டை சச்சரவின்றிச் சமாதானமாக ஒற்றுமையுடன் வாழுமேல் அக்குடும்பங்களும் அக் குடும்பங்களையுடைய ஊரும் செழித்துச் சுபிக்ஷமாக விளங்கு மென்பதில் சந்தேகமென்ன? சந்தேகமென்ன? பெரியோர்களின் இந்நோக்கத்தையறிந்து கொள்ளாமல் எத்துணை முறை கேட்கப்படினும் பாரதம் எட்டுணைப்பயனையுந் தராதென்பது மறுப்பாருண்டோ? இருபது ரூபாயும் பெறாத கால் ஏக்கர் நிலத்தின் பொருட்டு ஒவ்வொரு கக்ஷியினரும் - இவர்கள் யார்? அன்னியால்லர் - ஒரு தாயக்கட்டில் பிறந்த சகோதரரே - சிற்றப்பன் பெரியப்பன் பிள்ளைகளே - ஓர் குடும்பத்தினரே - இரண்டாயிரம் ரூபாய் செலவு செய்து நியாய ஸ்தலங்களில் அலைந்து திரிந்து கொண்டிருப்பது பிரத்தியக்ஷமாகக் காணக்கூடியதல்லவா! வரப்பைச் சிறிது தள்ளிப் போட்டுக் கொண்டதற்காகத் தொண்டைகிழியச் சண்டையிட்டு மண்டையுடைந்து மாண்டோர்பலராவரே! சுருங்கக் கூறின் ஒவ்வொரு குடும்பத்திலும் சிறு பாரதப்போர் நடைபெறுகின்றதென்பது மறக்கமுடியாத வுண்மையாமே. குடும்ப க்ஷேமம் எங்கே? ஊர்ச்செழிப்பெங்கே! வருடந் தவறாது பாரதப் பிரசங்கம் நடைபெறச் செய்தும் பயனென்ன! முன்னோரின் நன்னோக்கத்தை யறிந்து அதன்படி யொழுகாமையே யன்றோ காரணம்! இவ்வுண்மையைக் கடைப்பிடித்தொழுகுவராயின் ஓர் வழக்கேனும் வந்திடுமோ! ‘பங்காளியையும் பனங்காயையும் பதம் பார்த்து வெட்டவேண்டும்' என்னும் பழமொழிதானும் பாரிடைப் பரவுமோ!

 

வில்லி பாரதமென வழங்கும் பாரதத்தை அதன் ஆசிரியராகிய வில்லிபுத்தூராழ்வார் பாடியதற்கு ஓர் காரணம் உரைக்கப்படுகின்றது. அது யாதெனில்,

 

கல்வியிற் சிறந்து விளங்கிய வில்லிபுத்தூராழ்வாருக்கும் அவர் சகோதாருக்கும் தாயபாக விஷயமாகச் சிறிது சச்சரவு நேர்ந்தமையின், இவர், அரசனிடம் சென்று வழக்கைத் தீர்த்துத் தருமாறு வேண்டினர். அவ்வரசன் நீர் புலவராயிருக்கின்றமையின் வடமொயிலுள்ள மகாபாரத கதையைத் தமிழில் பாடிக் கொணர்வீராயின் உமது வழக்கைத் தீர்ப்பேன் எனக் கூற, வில்லிபுத்தூரர் அங்ஙனமே தொடங்கிப் பாடிவருங் காலத்தில், தாயபாகம் காரணமாகவே பாரதப்போர் நிகழ்ந்ததென்னும் உண்மையை யறிந்து தம் தாயபாகத்தைத் தம்பிக்கே கொடுத்துவிட்டனர் என்று ஓர் கதை வழங்குகின்றது.

 

ஆகவே, தாய பாகம் காரணமாக ஓர் குடும்பத்தைச் சேர்ந்தோர் பகைமை கொள்ளாமல், ஏற்றத் தாழ்வுகள் காணப்படினும் பொறுமையாயேற்றுக் கொண்டு வாழ்தலே அக் குடும்பத்திற்கு நன்மை பயக்கும் என்பதையுணர்ந்து, ஒவ்வொருவரும் அந்நெறியில் நிற்க முயல்வதே பாரதக் கதையாலுண்டாகும் முக்கிய பயனாகும். பாரதப் பிரசங்கிகளும், தன்னயங்கருதாது இவ் வுண்மையை யாவர் மனத்திலு முறுத்தும்படி யெடுத்துக்கூறி எங்கும் ஒற்றுமை யுண்டாக்க முயல்வார்களாக. இதனை வாசிக்கும் நண்பர்களே ! இவ்விஷயம் விரிவஞ்சி சுருங்கக் கூறப்பட்டிருப்பினும் இத னுட்கருத்தை நன்குணர்ந்து யாவர்க்கு மெடுத்துரைத்துக் குடும்ப வொற்றுமை யுண்டாக்குவது உங்கள் கடமையாகும். இது பெரும் தேசத் தொண்டே யாகும் என்பதை யாரும் மறுக்கார்.

 

"ஒன்றுபட்டா லுண்டு வாழ்வு''

 

ஆனந்த போதினி – 1931 ௵ - ஜுலை ௴

 

 

No comments:

Post a Comment