Friday, September 4, 2020

 

பழைய மாடலனும் புதிய மாடலனும்

(வித்வான்-வெ. சு. சுப்பிரமணியாச்சாரியார் P. O. L.)

 

மாடல் என்ற பெயர் புதியதாக இருக்கின்றதே என்று வாசகர்கள் நினைக்கவேண்டாம். இப் பெயரையுடைய ஒரு அந்தணன் கோவலனுக்கு நண்பனாக இருந்தான். அவன் கோவலனுடைய ஊராகிய காவிரிப்பூம் பட்டினத்துக்குச் பத்தேயிருந்த திருச்செங்காளம் என்ற ஊரிலிருந்தவன். நான்கு வேதங்களையும் நன்கு பயின்றவன். பிறருக்கு நன்மையே செய்யும் இயல்பினன், பல மறைவலாளர்களுக்குத் தலைவனாவான்.
இவன் ஒரு சம்யம் தீர்த்த யாத்திரை செய்வதன் பொருட்டுத் தன்னூரினின்றும் புறப்பட்டான். குமரித் தீர்த்தமாட் செல்வர் னாயினான். அங்ஙனம் செல்பவன் இடைவழியிலே இருக்கும் அகத்திய முனிவருடைய பொதிய மலையைக் கண்டான். வணங்கினான், வாழ்த்தினான்: அங்கிருந்தும் குமரிக்குச் சென்று தீர்த்தமாட் வேண்டிய முறையில் மூழ்கினான். மூழ்கித் தன்னூருக்குத் திரும்பினான். வருகையில் மதுரையை அடைந்தனன். முனிவர்கள் தங்குவதற்கென நகருக்கு வெளியே அமைக்கப் பெற்றிருக்கும்
புறஞ்சேரியில் தங்கினன். ஊழ்வினை வந்துறுத்தியதனால் மாதவியை விட்டு நீங்கிய கோவலனும் இழந்த பொருளைச் சம்பாதிக்கக் கண்ணகியோடு புறப்பட்டு இடைவழியிலே சந்தித்த சைனதுறவியாகிய கவுந்தியடிகளையும் உடன் கொண்டு மதுரையை யடைந்து புறஞ்சேரியிலே தங்கி யிருந்தான். தங்கியிருந்த கோவலன் மாடலனது வருகையைக் கண்டான். எதிர்சென்று அவனுடைய கால்களில் வீழ்ந்துவணங்கினான். வணங்கியவனை நோக்கிக “கோவலா! யானறிந்த வளவில் நீ செய்த அனைத்தும் நல்வினையாக விருக்க, இங்ஙனம் தீமையுறுவானேன். அது பழய வினைப்பயனோ? அதிலும் திருத்தகு மாமுனிக் கொழுந்தாகிய கண்ணகியுடன் போந்த தீவினை யாதோ?” என்று கூறினான். கோவலன் மாடலனை நோக்கித் தான் கண்ட கனவைக் கூறி யாது தீங்கு வருமோ? என வினவினான். மாடல மறையோன் அதற்குரிய விடை கூறாது, கோவலனை நோக்கி, “நீ இந்த அறவோர் தங்கு மிடத்தே இருத்தல் கூடாது. மதுரை நகரை அடைவாய்” என்று கூறினான்.
கோவலன் கேட்ட வினாவிற்கு விடை கூறாது நாவலனாகிய மாடலன் மதுரையை அடைவாய் என்று கூறிய காரணம் புலப்படவில்லை. வினை நாவலனையும் நாவடக்கியது என்று தான் கொள்ளக்கிடக்கின்றதே யொழிய வேறில்லை.

 

மேலும், கண்ணகியின் செய்தி கேட்ட சேரன் அவளுக்குக் கோயில் கட்ட வேண்டுமென்று விரும்பினான். அவளுடைய வடிவம் எழுதி அமைக்கக் கல் வேண்டுமென்றோ? கல் கொண்டு வர இமயம் சென்றான். அங்கு எதிர்த்த அரசர்களையும் இமயத்திலிருந்து கல் கொணர்ந்து கங்கையில் நீராட்டினான். கங்கையின் தென்கரையில்
ரிய மன்னர் அமைத்த பாடி வீட்டில் தங்கினான். அப்போது அங்கே மாடலனும் தோன்றினான்; அரசனைக் கண்டு வணங்கினான்; “வாழ்க எங்கோ! மாதவி மடந்தை பாடிய கானற்பாணி கனக விசயர் தம் முடித்தலை நெரித்தது." என்றான் என்பது,

"வாழ்க எங்கோ மாதவி மடந்தை.
கானற் பாணிகன கவிசயர் தம்
முடித்தலை நெரித்தது.''

(நீர்படை காதை 49.51) தெரிகின்றது.

 

இங்ஙனம் கூறிய மாடலனைச் செங்குட்டுவன், ''நான்மறையாளா! நீ கூறியதன் உரை பொருள் யாது? மாற்றரசர் பலரும் அறியாத ஒன்றினைக் கூறி யிருக்கின்றனை? அதனைக் கூறுக” என்றான். மாடலன், “குடவர் கோவே! கோவலன் கண்ணகி
செய்தி கேட்ட மாதரி தீயிற் புகுந்திறந்தாள். கவுந்தியடிகள் உண்ணா நோன்பு கொண்டு உயிர் துறந்தார். மாசாத்துவன் பௌத்தப் பள்ளி யடைந்தான். அவனுடைய மனைவி உயிர் துறந்தாள். கண்ணகியின் தந்தையும் துறந்து ஆசீவகப்பள்ளி புகுந்தான். அவனுடைய மனைவியும் இறந்தாள். மாதவியும் அவள் மகள் மணிமேகலையும், உலகத்தையே வெறுத்து பௌத்த பள்ளியை அடைந்தார்கள். (எனவே கோவலனைச் சேர்ந்த அனைவரும் பௌத்தப் பள்ளியையடைந்தார்கள். கண்ணகியின் தந்தை மட்டும் சமணப்பள்ளியை அடைந்தான்) என்று கூறினான். மேலும், அரசே! இவ்வளவு சம்பவங்களும் நிகழ்வதற்கு, யானே காரணன். யான் காவிரிப்பூம் பட்டினம் சென்றேன். கோவலனும் கண்ணகியும் மரித்த செய்தியை என்னால் கேட்ட சிலர் அவர்களுடைய பெற்றோர்க்கும் மற்றையோர்க்கும் தெரிவித்தார் போலும். அதனால் அவர்களுள் சிலர் இறந்தார்கள். அந்தப் பாவத்தைப் போக்கிக்கொள்ள கங்கை நீராட இங்குப் போந்தேன். போந்ததன் பயனாகத் தங்களைக் கண்டேன்" என்றான். இது போன்ற சில செய்திகளைக் கூறிவிட்டுச் செங்குட்டுவன் பரிசிலாகக் கொடுத்த ஐம்பது துலாம் பொன்னைப் பெற்றுக் கொண்டு தன்னூருக்கு மீண்டான்.

 

கங்கைப் பாடியிலிருந்து செங்குட்டுவன் வஞ்சி யடைந்து பல சிறப்புக்களுடன் நாளோலொக்க மண்டபத்தில் அமர்ந்திருந்தான். மாடலனும் அங்குப் போந்து அரசவையடைந்தான். அது போது நீலன் முதலியோர் செங்குட்டுவனுடைய அவைக்களத்தை யடைந்து சோழ பாண்டியர்கள், செங்குட்டுவனை இகழ்ந்ததாகக் கூறினார்கள். கேட்ட செங்குட்டுவன் தன் தாமரைச் செங்கண்தழல் நிறங் கொண்டான். அருகிருந்த மாடலன் எழுந்து “பன்னர் மன்ன! வாழ்க நின் கொற்றம்! தணிக நின் கோபம் / பெருக நின் வாழ் நாட்கள் பொருனையாற்று மணலினும் பல. நினக்கு இப்போது வயது 50 ஆயிற்று. இன்னும் மறக்கள வேள்வியே செய்ய முயலுகின்றாய். நின்னினும் அருஞ்செயல் செய்து உலகாண்ட நின் முன்னோர்கள் எல்லோரும் இறந்து பட்டனரே யொழிய உயிருடனிருந்தார் ஒருவருமில்லை. எனவே, யாக்கை நிலையாமையை எளிதில் உணரலாம். நீயே நின் யாக்கை முதிர்ந்து நரைத்திருப்பதைக் காண்கின் றனை. எனவே இளமையும் நிலையற் எனபது நான் கூறவேண்டியதில்லை'' என்று யாக்கை நிலையாமை, இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை முதலியன கூறினான். மேலும், தெய்வவடிவம் பெற்ற ஒரு ஆன்மா மீண்டும் மண்ணில் வாழும் உயிர்களின் உருவினையடையவுங் கூடும். அங்ஙனமே மனித யாக்கையைப் பெற்ற ஒரு உயிர் விலங்குக் கதி எய்தினும், எய்தும். விலங்கு நாருடைய கதியினையும் அடையும். நாடக மேடையில் நடிப்பவர், பல வேறு கோலங் கொண்டு நடிப்பது போன்று, ஆன்மாவும் செய்த ஊழ்வினைக் கேற்றவாறு வேறு வேறு கோலத்தோடு உலகில் நடிக்கின்றது. எனவே, புண்ணியச் செயல்களைச் செய்து புண்ணிய உலகத்தை அடைதலே மக்கள் யாக்கையின் பயனாகும். அப் புண்ணியப் பேற்றினைப் பெறுவதற்கு வேதவிதிப்படி வேள்விகளைச் செய்வாயாக" என்று மொழிந்தான். அது கேட்ட செங்குட்டுவனும் வேள்வி செய்வானாயினன் நடுகல் காதைத் தொடர்களால் அறியக் கிடக்கும் செய்தி யாகும்.

 

மீண்டும் மற்றொரு முறை, கண்ணகியைக் கண்டு வணங்க வந்த (கண்ணகிக்கு உயிர்த் தோழியாக விருந்த) தேவந்தியின் வரலாற்றினைச் செங்குட்டுவனுக்குக் கூறிச் சென்றான் என்பது வரந்தரு காதையால் தெரிகின்றது. இதுகாறும் கூறப்பெற்ற மாடலன் சிலப்பதிகார ஆசிரியர் என்று கூறும் இளங்கோவடிகளால் கற்பிக்கப்பட்ட மாடலனாவான்.

 

இனிக் கோவலன், கண்ணகி, கவுந்தி ஆகிய மூவரும் உறையூரை விட்டுப் புறப்பட்டு தென் திசை நோக்கிச் சென்று மாலை காலத்தே வளவயலும் வாவியும் பொலிந்த ஒரு சோலையுள் புகுந்து தங்குவாராயினர். அதுபோது அந்தணன் ஒருவன் பாண்டிய அரசனை வாழ்த்திக் கொண்டு அங்கு வந்தான். அவனைப் பார்த்து, “ஐயா! யாது நம்மூர், வந்த காரணம் யாதோ" என்று கோவலன் வினவினான். மாமறையாளன், “யான் குட் மலைப் பக்கத்தே யுள்ள (குடகு நாடு) மாங்காடென்னும் ஊரைச் சேர்ந்தவன். திருவரங்கத் திருமால் கிடந்த வண்ணத்தையும் திருவேங்கடத்தில் திருமால் நின்ற வண்ணத்தையும் கண்டு களித்து வந்தேன்' என்றான் என்பது.


“வளநீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்த
விளமரக் கானத் திருக்கை புக்குழி"                      
(காடுகாண் 13-14)


 "தீதுதீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி
மாமுது மறையோன் வந்திருந் தோனை
யாது நம்மூர் ஈங்கொள் வாவெனக்
கோவலன் கேட்ட                                     
(காடு 30-33)


"மாமறை
யாளன். . . . . .. .
வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன்”                  (
காடு வரி 53)

 

என்ற தொடர்களால் கூறப் பெற்றிருக்கின்றன.

 

இது வரையிலும், இந்த மறையாளன் பெயர் உரையாசிரியர்களாகிய அரும்பத உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் ஏனைய ஆராய்ச்சி யாளர்களும் உரைக்க முடியாமல் விடுத்து விட்டார்கள். அச் செய்தியைத் திரு. துரைசாமிப் பிள்ளையவர்கள் தம்முடைய பேரறிவைச் செலுத்தித் துருவிக் கண்டு பிடித்து மறைய்வனுடைய பெயர் மாடலன் என்பதாகத் தமது ஆராய்ச்சி நூல் பக்கம் 7 1ல் "மாடல் போந்து கோவலற்கு மதுரைக்குரிய நெறி கூறுவான்'' என்றும், பக்கம் 81 வரி 9ல் இங்கே (சீரங்கம்) திருமால் எழுந்தருளி யிருக்கும் கோலத்தை மாடலன் கூற்றாக அடி என்றும் மேற்படி 81ம் பக்கம் வரி 20ல் காண்டற்கு விடு வரும் செல்வதாக மாடலன் கூறக் கேட்ட இக் கவுந்தி யடிகள்'' என்ற வரிகளாலும் கூறுகின்றார். அது பெரிதும் பாராட்டத் தக்கதே.

 

எனவே, சிலப்பதிகாரத்தில் அடைக்கலக் காதை, நீர்படைக்காதை, வரந்தரு காதை முதலிய மூன்று காதைகளில் இளங்கோவடிகளால் கூறப் பெற்ற மாடல மறையவன் ஒருவனும், திரு. ஔவை. துரைசாமிப் பிள்ளை அவர்கள் கூறியிருக்கின்ற மாடல மறையவனும் ஆகிய இரண்டு மாடலன்கள் தோற்று விக்கப் பட்டிருக்கிறார்கள். இவர்களுள் திருச்செங்காட்டு மாடலன் இளங்கோவடிகளால் தோற்றுவிக்கப் பட்டவன்: இத் திருச்செங்காடு காவிரிப்பூம் பட்டினத்துக்கு அருகிலுள்ளது. மாங்காட்டு மாடலன் திரு. பிள்ளை அவர்களால் தோற்றுவிக்கப் பெற்றவரா? மாங்காடு குடகு நாட்டிலுள்ளது. குடகுநாடு மதுரைக்குச் சமீபமாக வுள்ளது. இதனாலே செங்காட்டு மாடலனும் மாங்காட்டு மாடலனும் வெவ்வேறு ஆட்களாகும் என்பது கூறாமலேயே விளங்குகின்றது. மேலும் செங்காட்டு மாடலன் கோவலனுடைய நண்பனாக ஆசிரியர் அடிகள் கூறுகின்றார். மாங்காட்டு மாடலன் கோவலனுக்குப் புதியவனாக காணப்படுகின்றான். எனவே, இருவரும் ஒருவராகார், ஆதலால் திரு. ஔவை. துரைசாமிப் பிள்ளை அவர்கள் மாங்காட்டு மாடலனை எவ்வாறு பெற்றார் என்று ஆதாரத்தோடு காட்டியிருந்தால் என் போன்றார்க்கு நலமாக விருக்கும். தமிழுலகும் பெரிதும் போற்றிப் பாராட்டும்.

 

ஆனந்த போதினி – 1943 ௵ - நவம்பர் ௴

 



 

 

No comments:

Post a Comment