Friday, September 4, 2020

 பழம்பதி

 

பன்னூற்றாண்டுகளுக்கு முன்னரே இப்பாரத நாட்டில் தோன்றி நிலை பெற்ற நாடு பாண்டிய நாடாகும். தென் நாட்டிலுள்ள முந்நாட்டில், முன்னே தோன்றிய நாடு பாண்டிய நாடே யென்று பாவலர் கூறுவர்." பாண்டிய நாடே பழம் பதியாகும் " என்னும் பழமொழியும் இக்கருகதைவலியுறுத்தக் காணலாம். இந்நாட்டின் தொன்மையும் செம்மையும் பலவகைச் சான்றுகளால் இனிதறியப்படும்.

 

அமிழ்தினுமினிய தமிழ் மொழியிலமைந்த ஐம்பெரும் காவியங்களிற் சிறந்த சிலப்பதிகாரத்தில் பாண்டிய நாட்டின் தலைநகராய் மதுரைமா நகரம்
'மூதூர்' என்று சிறப்பிக்கப்படுகின்றது.


'அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்'


என்று சேரநாட்டுச் செந்தமிழ்க் கவிஞராய இளங்கோவடிகள் மாட மதுரையின் பழமை பாராட்டும் முறை பண்புடையதாகும். அளந்தரியலாகாப் பழங்காலத்தில் தோன்றிய நாடுகளையும் குலங்களையும், படைப்பக்காலம் தொட்டுவருவனவாகக் கருதுதல் தமிழ் வழக்காகும். பொதுமறைக் குரைகண்டபரிமேலழகர் பழந்தமிழ் வேந்தர் மூவரையும் குறிக்கும் பொழுது படைப்புக்காலந் தொட்டு வருகின்ற தொல் குலத்தார் என்று கூறுதல் இதற்குச் சான்றாகும். இவ்வாறே ஏனைய நூலாசிரியரும் உரையாசிரியரும் பாண்டிய நாட்டைப்பழம் பதியாகவும் பாண்டிய மன்னரைப் பண்டைய மன்னராகவும் வியந்துரைக்கக் காணலாம்.

 

இன்னும் ஆரிய மொழியில் ஆதிகாவிய மென்ற போற்றப்படுகின்ற வான்மீக ராமாயணத்தில் தமிழ் வேந்தரது ஆளுகையிலமைந்த முக்காடுகளும் முறையாய்க் குறிக்கப்பட்டுள்ளன. தென்றிசையிலமைந்த தேசங்களில் திருமகளைத் தேடச்சென்ற வானரங்கட்கு வழிகாட்டப்வானர வேந்தன் தென்னாட்டில் அமைந்த சேர சோழ பாண்டிய நாடுகளைச் செம்மையாய்க் கூறுகின்றான்

 

“Seek and search the Southern regions

rock ravine, wood and tree,
 Search the empire of the Andhras,

of the sister nations three,
 Cholas, Cheras and the Pandyas

dwelling by the southern sea "            -R. C. Dutt. Translation of Ramayana.
 

வடமொழியிலெழுந்த வான்மிக முனிவரது காவியத்தைத் தழுவித் தென்மொழியில் நூல் செய்த நல்லிசைக் கவிஞராய கம்பர்,

 

"துறக்கமுற்றார் மனமென்னத் துறைகெழுநீர்ச் சோணாடு கடந்தால் தொல்லை

மறக்க முற்றான் அதனயலே மறைந்துறைவர் அவ்வழிநீர் வல்லை யேகி

உறக்கமுற்றார் கனவுற்றார் எனுமுணர்விஞொடும் ஒதுங்கி மணியால் ஓங்கர்

பிறக்கமுற்ற மலைநாடு நாடி அகன் தமிழ்நாட்டிற் பெயர்திர் மாதோ''

 

என்று முந்நாடுகளையும் குறிக்கும் முறை கருதத்தக்கதாகும். இவ்வாறு ஆரியத்தில் எழுந்த ஆதிகாவியத்தலும், அதன்வழி நூலாயெழுந்த கம்பர் காவியத்திலும், பசுமரத் தாணிபோற் பதிந்திலங்கும் பழந்தமிழ் நாடுகளைக் கண்ட புலவர் சிலர், அவற்றை இடைச்செருகலாகக் கருதி இறுமாந்திருப்பர். அறிவு நூல்களைத் துருவும் அறிஞர் நடுநிலை எழுவித் தமது கொள்கக்கு இசையாத இலக்கியச் சான்றுகளை இடைப் பிற வரலென்று ஒதுக்கும் முறை வருந்தத் தக்க தாகும்.

 

இன்னும் வடமொழியிற் பெரிய இதிகாசமாய் விளங்கும் வியாச பாரதத்தில் பாண்டுவின் மைந்தனாய விசையன் தென்னாடு போந்த பொழுது, பாண்டிய மன்னன் திருமகளை மணந்த வரலாறு கூறப்படுகின்றது. அப்பால் ஆரிய நாட்டரசனாகிய அசோகனது சாசனங்களில், தென்னாட்டுத் தனியரசுகளில் ஒன்றாகப் பாண்டிய நாடு குறிக்கப்படுகின்றது. இம்மன்னன் இற்றைக்கு இரண்டாயிரத்து நூற்றைம்பது ஆண்டுகட்கு முன்னர் ஆரியநாட்டை ஆண்டவன் என்பது ஐயமின்றி அறியப்பட்டதாகும்.

 

இனி இந்நாட்டின் வளங்கருதி, வணிகராய் வந்த யவனரும், சோனகரும், பாண்டிய நாட்டையும், அந்நாட்டின் தலைநகராயிருந்த கொற்கையூரையும் பல விடங்களிற் குறித்துள்ளார்கள். கொற்கையிற் குளித்த முத்துயவன மன்னரது மணி முடிகளிலும், யவனமாதரது மணிக் கழுத்திலும் அமைந்து அழகு செய்வனவாயின. பாண்டிய மன்னனும் 'கொற்கை யாளி' யென்னும் பெயர் புனைந்தான். யவன அரசரிடம் தூது போக்கினான். இவ்வாறு பாண்டிய மன்னனது பெயரும் பெரும் புகழும் பிற நாடுகளிற் பரவத்தலைப்பட்டன.

 

இத்தகைய செம்மையும் தொன்மையும் வாய்ந்த பெயரின் பொருளை ஆராய்ந்தறிதல் அவசியமன்றோ? பாண்டியன் என்னும் சொல்லின் வரலாற்றை ஆராயப் போந்த ஓர் ஆங்கில ஆசிரியர், அதனை 'பாண்டு' என்னும் வட அரசன் பெயரொடு தொடுத்து, பாண்டுவின் வழி வந்தவர் பாண்டியர் என்று கூறுவாராயினர். பாண்டவர் ஐவரின் தந்தையாகிய ‘பாண்டு' மன்னன் பெயரும், தமிழ் மன்னவராகிய ‘பாண்டியர்' பெயரும், சொல்லோசையில் ஒற்றுமை யுடையனவா யிருத்தலாலும், பாண்டவர் துணைவனான கண்ணன் அரசு வீற்றிருந்த மதுரை என்னும் சொல்லுக்கு நேராய் மதுரை என்னும் சொல் பாண்டிய நாட்டின் தலைநகரின் பெயராயிருத்தலாலும், பாண்டியர் பாண்டுவின் வழி வந்தோரென்று அவ்வாசரியர் கருதுகின்றார். தொன்மையாய்த் தமிழ் நாட்டிலமைந்த நாடு நகரங்கட்கு தென்மொழியிற் பொருள் தேடுவதே பொருத்த முடையதாகும்.

 

இம்முறை பற்றி ஆராயும் பொழுது பண்டு என்னும் தமிழ்த்தாதுவின் அடியாய்ப் பிறந்த பண்டையன்' என்னும் பதமே 'பாண்டியன்' ஆயிற்றென்று கருதுதல் பொருத்த முடைய தாய்த் தோன்றுகிறது. இந்நாட்டு முந்நாடுகளில் பாண்டிய நாடே பழம்பதி யென்னும் கொள்கையும் இவ்வுண்மையை ஆதரிப்பதாகும். குமரி முனைக்குத் தென்பாலமைந்த நாடும் மலையும் ஆழிவாய்ப் பட்டழிந்த ஊழிக்காலத்தே பாண்டிய மன்னன் செழித்தோங்கியிருந்தான் என்பது சிலப்பதிகாரத்தால் அறியப்படுகின்றது.


''பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
 குமரிக்கோடும் கொடுங்கடல் கொள்ள
 வடதிசைக் கங்கையும் இமயமும் கொண்டு
 தென்திசை யாண்ட தென்னவன் வாழி”


என்னும் அழகிய அடிகளின் கருத்து ஈண்டு உணரத்தக்க தாகும். ஆதிகாவியம் அருளிய வான்மீக முனிவரால், தென்பாலுள்ளதாகக் கூறப்பட்ட நெடுமலை கடலில் ஆழ்வதற்கு முன்னரே பாண்டிய மன்னன், தென்னாட்டில் வாழ்ந்து வந்தானென்றால், அவன் குலத்தின் தொன்மை சொல்லாமலே விளங்கும் அன்றோ? ஆகவே முந்நாடுகளுள்ளும் தொன்னாடாய் விளங்கிய நாட்டைப் 'பண்டை நாடு' என்றும், அந்நாடரசனைப் பண்டையன் என்றும் வழங்கியமை இழுக்காக மாட்டாது. புதிய வீடு தோன்றும் பொழுது, முன்னைய வீட்டைப் பழைய வீடென்றழைப்பதும், புதிய வீதி அமையும் பொழுது முன்னைய வீதியைப் பழையவீதி யென்றழைப்பதும், புதியவர் நிலைபெறும் பொழுது, முன்னிருந்தோரைப் பழையர் என்றழைப்பதும் இந்நாட்டு வழக்காக இன்றும் காணப்படும். ஆகவே தென்னாட்டில் அமைந்தநன்னாடுகளில் தொன்னாடாய் விளங்கிய ஓர் நாட்டிற்கு பண்டை நாடென்று பெயர் வழங்கி அது பின்னர் பாண்டிய நாடென்றாயிற்று என்று கொள்ளுதலே பொருத்த முடையதாய்த் தோன்றுகின்றது.

 

தமிழ் மொழியை வளர்த்த தனிப் பெருங் கழகங்களும் பாண்டிய நாட்டிலேயே அமைந்திருந்தனவென்று ஆன்றோர் கூறுவர். தென்னாட்டில் ஓங்கிய முந்நாடுகளுள்ளும் தொன்மை வாய்ந்த நாடே செம்மை வாய்ந்த தமிழ்ச் சங்கங்களைத் தாங்கி நிற்கும் தகைமை வாய்ந்த தென்று இந்நாட்டு மக்கள் கருதினாரெனக் கூறுதல் தவறாக மாட்டாது. இத்தகைய தமிழ்க் கழகம்களின் செம்மை சான்ற நலம் மதுரைமா நகரில் திகழ்ந்தமையாலேயே அந்நகரின் ஆற்றை ''புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி " என்றும் அந்நகரில் வீசிய பூங்காற்றை புலவர் நாவிற் பொருந்திய தென்றல்' என்றும் இளங்கோவடிகள் புகழ்ந்துரைப்பாராயினர். ஆகவே என்றும் மூவா மொழியாகிய முத்தமிழை முன்னின்று வளர்த்த பெருமை முது நாட்டின் தலைநகராகிய மதுரைமா நகர்க்கே உரியதாகும்.

 

ஆனந்த போதினி – 1930 ௵ - ஜனவரி ௴

 

No comments:

Post a Comment