Sunday, September 6, 2020

 

மனம் கவர்ந்த பெரியாழ்வார்

(“ஹரன்")

1. “ஆதவனையும் அம்புலியையும் பார்!"

ஓம்! ஓம்!” என்று எங்கிருந்தேர் கிளம்பும் சங்கநாதத்தின் இனிய தொனி செவிகளிடையே பாய்கின்றது. "டாண்! டாண்!” என்று ஆலட்சமணி பீறிடுகின்றது வானத்தை. கீழ்த்திசையில் 'தக தக' வென பொற்தட்டு ஒன்று மிகுந்த ஜாஜ் வல்யத்துடன் எழுகின்றது. இவை யெல்லாம் என் உள்ளத்தில் புகுந்து கொண்டு எனது எண்ண அலைகளைத் தூண்டிவிட்டன. இந்த அலைகள் எனது இன்பம் என்ற கடலில் எழுந்தவை. அஃதாவது இன்பக்கடலின் இன்பம் கட்டுமீறி விட்வே, அதிகமான எண்ண அலைகள் காற்றின் ஆர்ப்பாட்ட மில்லாமலேயே எழுந்து, வீசி, ஆர்ப்பரிக்க ஆரம்பித்து விட்டன.

உஷத் காலத்தில் வீசும் இனிய தென்றலின் பரிமளத்தை நுகர்ந்து கொண்டு வயல் வரப்புகளிடையே நடந்த வண்ண மிருந்தேன். அந்தக் காலத்தில் என்னைச் சுற்றிலும் அமைந்திருந்த அழகான காட்சிகளைக் கண்ணுற்ற போழ்து, எனது மனம் உடனே ஆழ்வார்களை எண்ணியது. “இயற்கையை சம்பந்தப்படுத்தியும், அவ்வியற்கையுள் கடவுளையும் சம்பந்தப்படுத்திய அன்னவர் திறமைதான் என்னே!" என்று ஒரு கணம் எண்ணினேன். மறுகணம் எனது நயனங்கள் கீழ்த்திசையை நோக்கின.

அங்கே விளங்கும் ஆதவனை மாணிக்கக்கட்டி என்பதா? வயிரம் என்பதா? பொன்னாலானவன் என்பதா? என்ற பெருத்த போராட்டம் என் மனத்திடை எழுந்து விட்டது.
எனது இந்தப் பெரிய போராட்டம் பெரியாழ்வார் திருமொழிப்பகுதியின் ஒரு பாசுரத்தையும் தன்னிடை இழுத்துக்கொண்டது.

கிருஷ்ணன் அவதரித்து விட்டான். அவனைத் தொட்டிலில் இட்டுத் தாலாட்டுகிறார்கள்.

என்ன சொல்லித் தாலாட்டுகிறார்களாம்? “அழகிய கிருஷ்ணனே! நீ உறங்குவாயாக!” என்று மட்டும் சொல்லி நிறுத்தி விடுகிறார்களா? இல்லை; அந்த அழகிய சிறுவனுக்கு-அந்த அரிய பெரிய அவதார புருஷனுக்கு பல அடைமொழிகளைச் சேர்த்துக்கொண்டு தாலாட்டுகிறார்கள், அவன் உறங்குவதற்காக.

குழந்தையை – கிருஷ்ணனை - பார்க்கிறார்கள், தாலாட்டுகிறவர்கள். உடனே அவர்களுக்குச் சந்தேகம் பிறந்துவிட்டது போலும்!

“ஓ! ஒ! இப்படிப்பட்ட அரிய பெருமானை - குழந்தையை எப்படிப் புகழ்வது?” என்று. ஆகவே அவர்களது கண்கள் குழந்தை இடப்பட்டிருந்த தொட்டிலை நோக்குகின்றன. உடனே தொட்டிலை வருணிக்கின்றார்கள்.

மாணிக்கம் வைத்து இழைக்கப்பட்ட தொட்டில்; வயிரம் இடையிலே வைத்துப் பதிப்பிக்கப்பெற்ற தொட்டில்; கண்ணன் உறங்குவதற்காக இடப்பட்டிருக்கும் தொட்டில்; ஆணிப் பொன்னாலும் செய்யப்பட்டுப் 'பளீரெ'ன்ற பிரகாசத்துடன் முன் சொன்
னவைகளோடு பொலிந்து நிற்கும் தொட்டில் என்றாலும் பொருந்தும். இவ்வளவும் சரிதான். இவ்வளவையும் வைத்திழைத்து, மிகவும் விருப்பத்துடன் யார் கண்ணனுக்குக் கொடுத்தனுப்பினார்கள் இந்தத் தொட்டி உலை? அந்தத் தாலாட்டுகிறவர்களே சொல்லுகிறார்களே, “பிரம்மனால் உனக்கு இப்படிப்பட்ட அரிய தொட்டில் செய்யப்பட்டு அனுப்பப்பட்டிருக்கிறது. ஆகையினால் சிறுவனே, இந்த அரிய சிருஷ்டியில் கிடத்தப்பட்டிருக்கும் நீ உறங்குவாயாக!" என்று.

எதிரில் பொலிந்து விளங்கும் ஆதவனைக் கண்டவுடன் எனக்கு உடனே மாணிக்கம், வயிரம், பொன் - இவைகளின் எண்ணங்கள் மிகுந்தன. இப்போது பிரம்மனும் என் இதயக்கடலுள் அவன் சம்பந்தமான எண்ண அலைகளால் திடீரெனத் தாக்குண்டான்.

நான் பிரம்மனின் ஒரு சிருஷ்டி. என்னைச் சிருஷ்டி செய்த பிரம்மன் நான் கண்டு களிப்பதற்காகவே இந்த- என் முன் இலங்கும் - அரிய காட்சியினையும் சிருஷ்டி செய்திருக்கவேண்டும். இக்காட்சியை சிருஷ்டித்த அவனுக்கு இதை வருணிப்பதில் ஒரு கஷ்டமும் இராது என்றே எண்ணுகின்றேன். ஆனால் அவன் சிருஷ்டிப் பொருளான நான் மட்டும் இதை வருணிப்பதில் திண்டாடுகின்றேன்.

இந்நிலையில் வேறொரு பகுதியில் கூறிய பாசுரத்தால் என்னை இவ் வியற்கைக் காட்சிகளின் இன்பத்தில் மூழ்கடித்துத் திணற அடிக்கும் பெரியாழ்வார் எத்தனை இயற்கைக் காட்சிகளைணித்து, 'வேறொரு பொருளின் மூலமாக மற்றோர் பொருளை
உணர்த்தல்' என்ற வித்தையைக் கற்றிருக்கவேண்டும்!

இஃது வித்தையா? அன்று, அன்று! தெய்வ மணம் கமழும் அவரது காவியத்தில் ஒளிரும் தனிப்பெரு மெய்ப்பொருளே என்றுதான் எண்ணுகின்றேன்.

இப்போது பாசுரத்தைப் பார்க்கலாம்:

"மாணிக்கங்கட்டி வயிரமிடை கட்டி

ஆணிப் பொன்னாற் செய்த வண்ணச்சிறு தொட்டில்

பேணி யுனக்குப் பிரமன் விடு தந்தான்;

மாணிக் குறளனே தாலேலோ! வையமளந்தானே தாலேலோ!''

[விடு தந்தான்-கொடுத் தனுப்பினான்; மாணி - பிரமசாரி; குறளன் - வாமனன்.]

தாலாட்டுபவர்களுக்குள் தாய் ஒருத்தியாக இருக்கிறாள் என்று வைத்துக் கொள்ளுவோம். அதாவது யசோதைப் பிராட்டி அங்கே இருப்பதாக வைத்துக் கொள்ளுவோம்.

கிருஷ்ணன் தூங்கவில்லை. இரவில் வெகுநேரம் ஆகிவிட்ட்து. குழந்தையை எடுத்துக்கொண்டு வெளி உப்பரிகைக்கு வருகிறாள் யசோதை. வானத்தில் அமிர்தகலைகளுடன் சந்திரன் இலங்குகின்றான். கிருஷ்ணன் தனது அழகிய வாயைத் திறந்து பளிச்' சென்ற வெண்மையான சிறு பற்களைக் காட்டி அந்த அம் புலியைப் பார்த்துச் சிரிக்கின்றான். பிறகு தனது சின்னஞ்சிறு கையை நீட்டி மாமதியை அழைக்கின்றான்,

யசோதை சந்திரனைப் பார்த்துவிட்டு தன் மகனுடைய முகத்தையும் செயல்களையும் பார்த்து விடுகிறாள் என்று வைத்துக் கொள்ளுவோம். தாய்மைக்குள்ள இயற்கை உணர்ச்சி பீறிடுவது சகஜம். உடனே குழந்தையை இறுகத் தழுவி, உச்சி முகர்ந்து, முத்த மிடுகிறாள் என்று கற்பனை செய்வோம். உடனே குழந்தையைத் தூக்கிக் கொள்ளுகிறாள் யசோதை. வானத்துச் சந்திரனைப் பார்த்து (இந்த நிலைமையில் நாம் அவளைக் கற்பனை செய்து கொண்டபடி) அவள் யாது கூறுகிறாள்?

''ஏ, மாமதீ! நீ உனது முகத்தை எவ்வளவு மகிழ்ச்சி பொங்கும்படியாகப் பிரகாசம் செய்து கொண்டாலும் என் மகன் முக ஒளிக்கு ஈடாக மாட்டாய்! ஆகையால் ஆச்சரியப்படத்தக்கவனாகிய என் பிள்ளை உன்னை யழைக்கின்றான்; நீ கடிதோடி வா!!"

இந்த இடத்தில் பெரியாழ்வாரின் கவிநயத்தைப் பாருங்கள். "சந்திரனையும் விடப் பிரகாசம் வீசும் முகமண்டலம் பொருந்தியவன் கிருஷ்ணன்,” என்பதை அவர் ஒரு பாசுரத்தின் இரண்டு அடிகளில் வருணித்து விட முடியும். ஆனால், சாதாரணமாக
'ஒரு தாயக்குத் தனது சேயிடம் எத்தகைய அரிய நேசம் ஏற்படும்', 'அந்த நேசத்தில் ஒளிரும் அவளது தாய்மை எத்தகைத்து,' என்பதையும் நமக்கு விளக்க, யசோதையின் மூலமாக - அவளது தாய்மையின் மூலமாக, - ''எனது கண்ணனின் முகம் சந்திரனைக் காட்டிலும் அதிகப் பொலிவுடையது!" என்பதையும் பெரியாழ்வார் கூறுவது என்னே! என்னே!

இனி இந்தப் பாசுரத்தையும் கவனிக்கலாம்:

"சுற்றும் ஒளிவட்டம் சூழ்ந்து சோதி பரந்தெங்கும்

எத்தனை செய்யிலும் என்மகன் முகம் நேரொவ்வாய்!

வித்தகன் வேங்கடவாணன் உன்னை விளிக்கின்ற

கைத்தலம் நோவாமே அம்புலீ! கடிதோடி வா!"

[வித்தகன்-ஆச்சரியப் படத்தக்கவன்;]

உஷத் காலத்தில் சந்திரனை நான் எண்ணியது சூரியனால் தான்! ஆதவன் என்றால், அப்போது, அம்புலியும் எனது உள்ளத்தில் இன்ப உதயஞ் செய்திடுகிறானே! இது ஏன்?

இதற்கு, "ஆதவனுடைய பிரகாசத்தில் ஆழ்ந்திருப்பார் எங்கள் கண்ணன் என்று மட்டும் எண்ணுகிறாயோ? இதோ சந்திரனைப் பார்! அவனை எண்ணிக்கொள். அவனது இலிமைக்கும் பிரகாசத்திற்கும் பன்மடங்கு மேலானவன் எங்கள் கண்ணன்! இதையும் எண்ணிக்கொள்!'' என்று உள்ளொளியில் உறைந்து கூறுகின்றாரே, அவர் பெரியாழ்வார் தானா?

அப்போது, எனது இந்த எண்ணத்திற்கு உறுதி பயப்பது போல் ஆலாட்சமணி இரண்டாந் தடவையாக ஒலித்தது.

2. யசோதைப் பிராட்டியும் தமிழ்த்தாயும்

மேற்கு முகட்டினில் இந்திர ஜால வித்தைகளைச் செய்து கொண்டிருந்தான் சூரியன். அவனைச் சுற்றிலும் வானத்தில் வெள்ளிப் படகுகள் போன்ற சிறு மேகங்கள் அகன்று
கொண்டு அவனுடன் உறவாடுவன போன்று காட்சி யளிக்கின்றன. எங்கள் ஊர்க் காவிரிப் பாலத்தின் மேல் அமர்ந்து அந்தத் துல்லியமான, சித்தத்தை மயக்கும்படியான காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

கீழே பாலத்தின் கீழ் 'சோ' என்ற இரைச்சலுடன் ஓடும் காவிரி நதி. அந்த நதி மேற்கிலிருந்து வளைந்து வரும் வனப்புடன், அதன் மேல் தவழ்ந்து விளையாடுபவன் போன்று தோன்றினான் சூரியன்.

''காவிரி தென்பெண்ணை பாலாறு ....”

என்றார் கவிச் சக்கரவர்த்தி. அவருள்ளத்தைக் கவர்ந்து, அந்தக் காவியப் பொன்மாளிகையி னின்றும் சிதறும் கவிதைப் பொற்கதிரில் முதலாக நின்று ஒளிரும் நேர்மையினை-அணியினை-படைத்தாள் எங்கள் காவிரி, ‘வான் பொய்ப்பினும் தான் பொய்
யா மலைத் தலைய காவிரி' என்றெல்லாம் எண்ணினேன்.

நளவெண்பாவில்,

"வையம் பகலிழப்ப வான மொளியிழப்ப

பொய்கையு நீள்கழியும் புள்ளிழப்பப்-பையவே

செவ்வாய அன்றில் துணையிழப்பச் சென்றடைந்தான்

வெவ்வாய் விரிக் திரோன் வெற்பு"

என வரூஉம் புகழேந்திப் புலவனார் கற்பனைத் திறமும் ஈண்டு எண்ணத் தகுவதாகும்.

என்ன! நமது பூமி பகலிழக்கின்றதா? ஆமாம்! நளன் காலத்தில் அத்தகைமை சர்வசாதாரணமான இயற்கை நிகழ்ச்சியாகும். ஆனால், இப்போது நமது பூமி பகலை இழக்கும் போது-வெவ்வாய் விரி கதிரோன் அஸ்தமன கிரியைச் சென்றடைகின்றான். எவ்வாறு? வானம் ஒளியிழக்கும் படியாகச் சென்றடைகின்றான்!

ஆமாம்! வானம் என்றால் இப்போது எனக்குத் தமிழ்ப் புலமை வானம் தான் அகத்தே ஒளிபெற எழுகின்றது. அகத்தே 'ஆஹா! அக்காலத்தில் இவ்வானம் எவ்வளவு அரிய
பேற்றினைப் படைத்து ஒளியுற்றிருந்தது! எக்காலத்தும் தமிழ்த்தாய் என்ற ஞாயிறு அவ்வானத்திடை அன்புடன் வீற்றிருந்து, அஃதை ஒளிபெறச் செய்து எத்தகை இன்பத்தினை நுகர்ந்திருந்தாள்!” என்று நான்-(இப்போது அந்த அரிய ஞாயிறு, மெல்ல மெல்ல தமிழ் நாடு பகல், ஒளி எனு மிவைகளை இழக்க மறையவிருக்கும், தேசு இல்லாத வானம் நீங்கலாக)- அவ்வானத்தை அகத்திடை உதயமாக்குவதில் ஐய மென்ன?

உடனே உள்ளத்திடை உதயமாகிறார் பெரியாழ்வார்:

''செண்பக மல்லிகையொடு செங்கழுநீ ரிருவாட்சி

எண்பகர் பூவும்கொணர்ந்தேன் இன்றிவை சூட்ட்வாவென்று

மண்பகர் கொண்டானை யாய்ச்சிமகிழ்ந்துரை செய்தவிம்மாலை

பண்பகர் வில்லிப்புத்தூர்க்கோன் பட்டர்பிரான் சொன்னபத்தே!"

[எண்பகர்பூ - எண்ணிச் சொல்லப்பட்ட புஷ்பங்கள்; ஈங்கு இன்னின்ன தகைமைகளைப் படைத்த சாஸ்திர ஸித்தமுமாகிற புஷ்பங்கள் என்றுங் கூறலாம்.]

யசோதைப் பிராட்டி, 'கிருஷணா! இவ்வளவு புஷ்பங்கள் வைத்திருக்கிறேனே, இவைகளை என் குழலில் நீ சூட்டினால் தான் அவை மணத்திலும் குணத்திலும் அதிகப்படும். அவைகளின் பரிமள கந்தத்திடை என் கூந்தலின் அழகும் பன்மடங்கு அதிகமாகும்!" என்ற தனது உள்ள இச்சையினை, “இதோ, செண்பகம மல்லிகை செங்கழுநீர் புஷ்பங்கள் இருவாட்சி முதலானவைகள்! கண்ணா! பண்புடன் பூச்சூட்ட வருவாயாக!" என வெளிப்படுத்தி அழைக்கின்றாள்.

தாய்மையின் தகைமை இதில் தெளிவாகிறது. ஆனால் நான் ஒரு படி மேலேயே போகிறேன். அந்தப் பாலத்தில் உட்கார்ந்து கொண்டு மாலைச் சூரியனின் மாண்பினை எண்ண ஆரம்பித்த நான், என் உள்ளத்தை-உஷத் காலத்தில் இன்பச் சுழலில் சுழன்ற உள்ளத்தை-ஏனோ, இப்போது சோர்வினை அடைய விட்டுவிட வேண்டும்?

பாருங்கள்! “தீ மலர்களை-கவிதை மலர்களை- செண்பகம், மல்லிகை போன்று பல பகுதிகள் இன்னும் பாமாலை கோத்து அம்மாலை என் கழுத்தில் சூட்டப்பட் விருக்கும் அநேக பொன்மலர்களை என் கூந்தலில் சூட்டி, எனக்கு ஹாரமாக அணிவிக்கா விட்டாலும், - இதோ, பழந்தமிழ்ப் புலவர்கள் திருவடிகள் என்று சொல்லும் படியான என் கால்களின் மேலும், குழலிலும், கழுத்திலும் இடப்பட்டிருக்கும் ''தமிழ் மலர்களை” ச் சிறிது வாச்னை
பாரேன்!" என்று தமிழ்ச் செல்வி கூறுவது போன்றல்லவா எனக்குத் தோன்றுகின்றது.

ஆஹா! அந்த யசோதைப் பிரர்ட்டிக்குக் கண்ணன் மலர் சூட்ட வருவதாக ஒளிரும் கவிதைப் பாவத்தில், நாம் நமது அன்னைக்கு மலர் சூட்டப் போகும் நல்ல வருங் காலத்தை யன்றோ என் மனம் விழைகின்றது!

“பட்டர்பிரான் சொன்ன பத்தே!"

ஆமாம்! பட்டர்பிரான்-பெரியாழ்வார்-இந்தப் பத்து அரிய மலர்களை-நமது சித்தத்தினை முற்காலப் போக்கினில் கவர்ந்து, தற்கால நமது நிலையை உணரும் சிந்தையினைப் பயக்கும் அரிய மலர்களை-தமிழ்த்தாயின் இணைந்த திருவடிகளுக்குச் சாத்தி விட்டார்! அவளுக்கு ஹாரமாக்கி விட்டார்! அவளது குழலை அதன் மூலம் அணி பெறச் செய்து விட்டார்!

யசோதைப் பிராட்டியின் இன்பம், 'அழகிய கிருஷ்ணனே! மலர்கள் இதோ வைத்திருக்கிறேன். சூட்ட வா!” என்கிறது. நமது தமிழ்த்தாயின் சோர்வு, “தமிழர்களே! மலர்களைச் வாருங்கள்; இல்லாவிடில் என்னிடமிருக்கும் மலர்களின் மேன்மை யறிந்து அவைகளை 'உலகெலாம் பரவும் வகை செய்தலு'க்கு உன்னுங்கள்!'' என்கிறது.

அந்தக் கண்ணன் யசோதைக்குப் பல விதத்தில் இன்பம் கொடுத்திருக்கிறான். இந்தத் தமிழர்கள் என்ன செய்கிறார்கள்?

இவ்வகையில் பெரியாழ்வாரை “வருங் காலம் உரைக்கும் விரவக. என்று சொல்லலா மல்லவா?

3. பெரியாழ்வார் என்ற பாரதியார்!

 

“அடி, யசோதை! உன் கிருஷ்ணன் செயலை என்ன வென்று சொல்வோமடி!............'' என்கிறார்கள் திடீரென்று, இடைச்சியர்.

 

யசோதையின் முகத்தில் புன்னகையின் ரேகை நெளிகிறது. சிரித்து விடலாம் அவள்! ஆனால், 'என்ன தோரணையில் அல்லது உணர்ச்சியில் கண்ணனைக் குற்றஞ் சாட்டுகிறார்களோ, இந்த இடைச்சியர்' என்பது தான் அவள் எண்ணம்.
கண்ணனின் ஒவ்வொரு குறும்புத் தனத்திலும் ஒளிரும் அழகு பாவம் - எல்லோரையும் கவர்ச்சிக்கும் ஓர் தன்மை - அந்த இடைச்சியரையும் கவர்ச்சித் திருக்கலாம். பின் ஏன் அவர்கள் யசோதையிடம் இப்படிப் புகார் செய்ய வேண்டும்? இன்னும் கேளுங்கள்:

 

“ஆற்றில் நீர் விளையாடிக் கொண்டிருந்தோம்........." என் இழுக்கிறாள் ஒருத்தி. ஆனால் 'சட்'டென்று நிறுத்தி விடுகிறாள்! அவள் அடுத்தவளைப் பார்த்த பார்வையானது, "ஏண்டி! நீதான் சொல்லேண்டீ!" என்ற பாவத்தை வெளிப் படுத்துகிறது. அந்த அடுத்த நங்கை வாய் திறக்கிறாள்:

 

"ஆமாம், அம்மா! குளித்துக் கொண்டிருந்தோம். உங்கள் மணிவண்ணன்....
என்று அவளும் இழுத்து விட்டு, "காதுகளில் உள்ள குண்டலங்கள் தாழவும் குழல் தாழவும் அழகிய ஆபரணங்கள் கோக்கப்பட்ட நாண் தாழவும் எட்டு திக்கில் உள்ளவர்கள் இறைஞ்சிப் புகழம் .... "என்று இன்னும் அவள் இழுக்கிறாள்! அது வரை மெல்லிய குரலில் 'ஊம்' என்று கேட்டுக் கொண்டு வந்த யசோதை, ஒரு பெரிய, சப்தமான குரலில் 'ஊம்' என்று கத்துகிறாள் போலும்! ஏனென்றால் அவன் போட்ட சத்தத்தில் அதே நங்கை தன் வாக்கியத்தைப் பூர்த்தி செய்து விடுகிறாள், பெண்மையின் நாணத்தை அகற்றி விட்டு!

 

“..... அந்த நிலையோடு கண்ணன் எங்கள் துகிலை நாங்கள் அறியா வண்ணம் எடுத்துக் கொண்டு ஒரு மரத்தில் ஏறி விடடான்!......." என்று அந்த நங்கை சொல்லும் போதே அவள் முகமெல்லாம் 'குப்'பென்று வியர்த்து, அங்கே சிவப் பேறிவிடும் என்று தான் நாம் கற்பனை செய்வோம். முற்றிலும் சரியான, பொருத்தமான கற்பனை இது!

 

ஏனெனில், யசோதை ‘குபீரென்று சிரித்து விடுவாள். அதுவுமல்லாமல் அந்த நங்கை மேலே சொல்வதற்குத் திக்கு முக்காடும் பொழுது மற்றொருத்தி, “நாங்கள் என்ன கேட்டும் 'தர மாட்டேன்' என்று கண்ணன் கூறி விட்டான்!" என்று சொல்லி விஷயத்தையும் முந்தின நங்கையின் நாணத்தையும் ஒருவாறு சமாளித்து, விஷயத்திற்கும் ஒரு முடிவைக் கொடுத்து விட்டாள்!

 

பலவித ஆராய்ச்சிகளுக்கும் உணர்ச்சிப் பெருக்கிற்கும் உரிய இடம் இது. அஃதாவது பெரியாழ்வாரின் இந்தக் கவி:


“குண்டலம் தாழக் குழல்தாழ நாண்தாழ
எண்டிசையோடு மிறைஞ்சித் தொழுதேத்த
வண்டமர் பூங்குழலார் துகிஷ் கைக்கொண்டு
விண்டோய் மரத்தானா லின்று முற்றும்
வேண்டவும் தாரானா லின்று முற்றும்!''

 

கண்ணன் ‘இது செய்தான்' என்று 'டக்'கென்று சொல்வதற்கு நாணம். ஆகவே, காலத்தை நீடிக்கக் கண்ணனின் அப்போழ்தைய நிலையை வருணனை செய்கிறார்கள்! அல்லது கண்ணனிடம் உண்டாகிய அபாரப் பிரேமையினால் தானோ என்னமோ அவர்கள் கண்ணனின் அந்த நிலையை வருணித்தது!

அந்தக் கண்ணன் 'தீராத விளையாட்டுப் பிள்ளை' என்று பாரதியார் கூறுகின்றார். கிருஷ்ணனுக்கு எப்போதுமே விளையாட்டுத்தான்! அது நமக்கு எல்லோருக்குமே தெரியும்! ஆனால் பாரதியார்,


“கண்ணன் பிறந்தான்--எங்கள்
கண்ணன் பிறந்தான்! - இந்தக்
காற்றதை எட்டுதிசையிலும் கூறிடும்
திண்ணம் உடையான்
- மணி
வண்ணம் உடையான்..


- என்று பாடுகிறார்.

பெரியாழ்வாரோ,


“சிறுவிரல்கள் தடவிப் பறிமாறச்
      செங்கண் கோடச்செய்யவாய் கொப்பளிப்பக்
குறுவெயர்ப் புருவம் கூடலிப்ப
      கோவிந்தன் குழல் கொடுதினபோது
பறவையின் கணங்கள் கூடுது றந்து
      வந்துசூழ்ந்து படுகாடு கிடப்ப
கறவையின் கணங்கள் கால்பரப்பிட்டுக்
      கவிழ்ந்து இறங்கிச் செவியாட்ட கில்லாவே!"


- என்று பாடி யிருக்கிறார்.

 

கிருஷ்ணன் குழல் ஊதுகிறான். வேணுவினின்றும் வரும் இன்னிசை வெளியுலகத்தை எவ்வாறு இன்பகரத்தில் ஆழ்த்துகிறது என்பதை னுபவித்துக் கூறுகிறார் பெரியாழ்வார்.

 

அந்தச் சின்னஞ் சிறு விரல்கள்---மணி விரல்கள் – அந்தக் குழலின் மேல் அப்படியும் இப்படியுமாகத் தாண்டவ மாடுகின் கமலங்களை ஒத்த கண்களை ஒரு விதமாகச் சாய்த்துப் பார்க்கும் நேர்மை, அழகுதான் என்னே! குழல் ஊதும் போது வாய் கொப்பளிக்கிறது; சிறு வியர்வைத் துளிகள் தோன்றிய புருவங்களோ அடிக்கடி சுருங்கி ஒன்றை யொன்று சேருகின்றன! அஃதில் எவ்வளவு அழகைக் கவிதையின் மூலம் மானஸீகத்தில் மனனம் செய்து விடுகிறோம், என்றும் மாறாதபடி!

 

அந்தச் சமயத்தில் ஆசினியில் உலவும் பக்ஷி ஜாலங்கள் யாவும் கூட்டைத் துறந்தன. அல்லது கூட்டிலுள்ள இதர சிறுபக்ஷிகளுக்கான இரையைத் தேடுவதை மறந்தன. நேரே கண்ணன் திருவடியின் கீழ், இல்லை யில்லை; -அக்குழலின் இன்ப நாதத்திற்குக் கீழ்ப்பட்டு - மெய்மறந்தன. பசுக்களும் அவ்வாறே. அவை கால்களைப் பரப்பிக் கொண்டன. பாவம்! அந்த இன்பநாதத்தில் அவை சுழன்ற சுழற்சியில் மயக்க மடைந்து போய் காதுகளைக் கூடத் தமது இயல்பான குணத்தின் பிரகாரம் ஆட்ட வில்லை!

கண்ணன் அவ்வளவு அற்புதமாகக் குழல் ஊதுகிறான். வேய்ங்குழலினின்றும் வெளிவரும் சிறு காற்றால் இவ்வையகம் மகிழ்கின்றது. அச் சிறு காற்று, மெல்லிய இசை பறவைகளுக்கு உணவைத் தந்தது; பசுக்களுக்குப் புல்லைத் தந்து காதுகளில் 'ஜம்' என்று உட்கார வரும் ஈக்களை விரட்டியது.

 

இவ்வளவையும் பெரியாழ்வார் உரைத்தார். அப்போது அவர் மனம் மகிழ்ந்திருக்க வேண்டும். பாரதியாரிடம் கொஞ்சம் வாருங்கள்:

 

"கண்ணன் பிறந்தான்!'' என்கிறார். முதல் அடி. வீர உணர்ச்சி பொங்குகிறதா? சாந்த உணர்ச்சி பொங்குகிறதா? பெருமை பொங்குகிறதா? நிர்ணயிக்க முடியாது.

 

"இந்தக் காற்றதை எட்டு திசையிலும் கூறிடும் திண்ணம் உடையான்!" என்னும் போது தான் மயிர் சிலிர்க்கிறது.

 

ஆஹா! பெரியாழ்வாரின் கிருஷ்ணன் தன் வன்மையின் மூலம் வேணுவின் சிறுகாற்றில் இவ்வுலகத்தை இன்பத்தில் ஆழ்த்தினான். இதோ, பாரதியாரின் 'கண்ணன் வலிமை' இந்த உலகத்தின் எட்டு திசையிலும் உள்ள காற்றை (பாரதியார் புது மைக்கவி யாதலால் இந்தக் காற்றை இப்போது எட்டு திசையலும் வியாபித்திருக்கும் ஜாதி, மத வேறுபாடுகள், பொய், சூது, கொலை, களவு முதலிய கொடுங் காற்றுக்கு எடுத்துக்கொண்டால் மிகவும் பொருத்தமாகவே இருக்கும்) கூறிடுவதாயுள்ளது!

 

ஆகவே, எனது உள்ளொளி இந்த ஆராய்ச்சியில் (இதை ஆராய்ச்சி' என்று சொல்வதற்கே அல்லது எழுதுவதற்கே என உள்ளமும் கையும் ஒருங்கே நடுங்குகின்றன; காரணம் “ஒரு கவிஞனின் 'மன ஆழத்'தை அறியக்கூடுமா" என்ற பிரமைதான்) ஒரு தீர்மானமான முடிவுக்கு வருகிறது.

 

முற்காலப் போக்கானது மிகுந்த நாகரிக முடையதாயும் ஈசுவரபக்தி நிறைந்ததாயுமிருந்திருக்கலாம். ஆனால் இக்காலப் போக்கினை யாவரும் அறிவார்கள்! சமூகப் பிரச்னைகளைப் பற்றியும் சமூக சீர்திருத்தவாதிகளின் மேன்மையைப் பற்றியும் முற்காலத்தில்-அஃதாவது பெரியாழ்வார் காலத்தில் சர்ச்சைகள் நிகழ ஏதுவில்லை. ஆனால் தற்போது மிகுதியாக நிகழுகின்றன!

 

பாரதியார் சமூகப் பிரச்னைகளின் நல்ல முடிவுகளைக் கிளப்பி விடக்கூடிய ஒரு கவிஞர். ஆனால் அவரே பெரியாழ்வார்-அவருடைய புனர் ஜன்மம் - என்று உள்ளொளிக்கு இணங்க நான் துணிந்து கூறிவிட முடியும்.

 

“இப்படிக் கிருஷ்ணனை வைக்கக்கூடாது. கிருஷ்ணனுடைய வன்மையை இப்படிப் புகுத்தினால் (நூலின் மூலமாகத்தான்! இந்த உலகத்திற்கு எங்கே தெரியப்போகிறது? இதோ புதிய கிருஷ்ணனை சிருஷ்டி செய்கிறேன். இந்தக் கிருஷ்ணனின் வன்மையைப் பாருங்கள்!" என்று பெரியாழ்வார் என்ற பாரதியாருடைய கவிதையின் பாவம் கூறுவது போன்று நமக்கு-நமது மனச்சாட்சிக்கு இணங்க தோன்ற வில்லையா?

"விளையாட்டுக்கு விளையாட்டு; வருணைனைக்கு வருணனை; எல்லாவற்றிலும் உணர்ச்சிக்கு உணர்ச்சி!” அப்பப்பா! கவிஞர்களின் உள்ளங்கள் தான் எவ்வளவு ஆழம் வாய்ந்தன! ஏன் அந்தப் பிரமன் நம்முடன் கூடவே அதற்கான அளவு கோல்களையும் சிருஷ்டி செய்யவில்லை? அல்லது கவித்துவத்தை - உண்மையான கவிஞனது உள்ளத்தை - நமக்குக் கொடுக்கவில்லை?

 

‘மனம் கவர்ந்த பெரியாழ்வாரின்' கவிதா இலட்சியம் எப்படிப்பட்ட பண்பினை அகத்தே பொருந்தப் பெற்றது பாருங்கள்!

ஆனந்த போதினி – 1943 ௵ -

செப்டம்பர், அக்டோபர், டிசம்பர் ௴

 

 

No comments:

Post a Comment