Sunday, September 6, 2020

 

மனந்தளர்வுறாமை

 

 இது மனோதைரியம், அல்லது மனந்தளராமை என்பதாம். இதன் விஷயத்தை விளக்கப்புகுமுன், இது இன்னது என்பதைப் பற்றியும், ஜனங்கள் இதன்பால் கொண்டிருக்கும் தப்பபிப்பிராயங்களைப் பற்றியும் விளக்குதல் இன்றியமையாததாம். பலர் இதை முரட்டுத்தைரியம் எனக் கொள்ளுகின்றனர். அதாவது, இருட்டில் வெகு தூரம் துணையின்றி நடத்தல் முதலியவை போன்றதாம். இம்மாதிரியான செய்கைகளை முட்டாள் தனமானவை என வாய் கூசாது சொல்லுதலும் பொருந்தும்.

 

இவ்வுலகில் அஞ்சவேண்டியவைகள் அனேகமிருக்கின்றன. அவைகளுக்கு ஒருவன் அஞ்சியே தீரவேண்டும். இது பற்றியே தெய்வத்தன்மை வாய்ந்த நம் நாயனாரும்,

 

''அஞ்சுவதஞ்சாமை பேதைமை" என்று கூறியுள்ளார்.

 

ஆதலின் மனந்தளர்வுறாமை யென்பது இம்மூட தைரியமன்று.

 

உண்மையான மனோதிடமாவது இடுக்கண் வந்துற்ற காலத்தில் மனங்கலங்காது, அச்சமயத்திற்குத் தகுந்தவாறு நடத்தலேயாம். பகுத்தறிவு படைத்த மானிடர் பலருள் யாவர்க்கு இச் சமயோசித புத்தியுளதோ அவரை உண்மையான மானிடர் எனச் சொல்லலாகும்.

 

ஒருவன் எவ்வளவுதான் கல்வி பயின்றிருந்தபோதிலும் ஏதாவது ஆபத்து நேர்ந்தகாலத்தில் இன்னது தான் செய்வது என்று ஒன்றும் தோன்றாது திகைத்து நிற்பின் அவனது பயிற்சியால் யாது நன்மை விளையும்? ஒருவருக்கு எவ்வளவுதான் இராஜபக்தியும், உண்மையாக உழைக்கும் சேனாதிபதித்துவமும் இருப்பினும், நன்றாகச் சேனையைச் செலுத்த வேண்டிய காலத்து மனக்கலக்கமுறுவாராயின் இதனால் விளையும் நஷ்டம் அளவிடற்பாலதன்று. தன் குழந்தைக்கு ஆபத்து நேருங்கால் மனோதிடத்தை யிழந்து மூலையில் உட்கார்ந்து கொண்டிருக்கும் தாயினால் அக்குழந்தைக்குத் தீமையே உண்டாகுமென்பது திண்ணம். அவள் மனோதிடத்தைக் கைவிடாதிருப்பின் ஒரு சமயம் சிற்சில உபாயங்களின் மூலங் குழந்தையைக் காப்பாற்றவுங்கூடும்.

 

இத்தகைய மனோதிடம் யாவர்க்கும் இயற்கையிலேயே அமைந்திலது. வெகு சிலருக்கு மட்டும் அவரவர் செய்த புண்ணிய கருமங்களின் பயனாக இயற்கையிலே இக்குணம் ஏற்படுகின்றது. இப்பாக்யம் எய்தப் பெற்றோர் தான், ஜனத்தலைவர்கள் போன்ற பொறுப்புவாய்ந்த பதவிக்குத் தகுந்தவராவர்.

 

'எறும்பூரக் கற்குழியும்' என்றவாறு இயற்கையிலேயே இது அமையப் பெறாதவர்கள் நல்ல பயிற்சியினால் சிறிதளவாகிலும் பெறுதல் கூடும். கீழ்க்கண்ட வழிகள் அதன் பொருட்டுப் பயிலுதற்குரியனவாகும்

1. உலகினர் பெரியோராக மதிக்கும் சத்புருஷனுடைய நடையுடை பாவனைகளைக் கவனித்து அன்னோர்கள் அவ்வக்காலங்களில் எவ்வாறு நடக்கின்றனர் என்பதைக் கூடுமானவரை நேரில் பார்த்து அறிந்து கொள்ளுதல்.

 

2. அவ்வாறு காணமுடியாதாருடைய செயல்களை, அச்செயல்களைப் பற்றி விரிவாக எழுதியுள்ள புத்தகங்களைப் படிப்பதினால் தெரிந்துகொள் ளுதல்.

 

குறிப்பு: - நந்தமிழில் அவ்விதப் புத்தகங்கள் மிகவும் குறைவாக இருப்பது மிகவும் வருந்தத்தக்கது. இத்தமிழ் நாட்டில் பற்பல மேதாவிகள் தோன்றி மறைந்திருப்பினும், அவர்களைப் பற்றி விரிவான சரிதங்கள் வெளிவந்தில. சில பிரசுரமான போதிலும், அவற்றுள் பொதுவாக அக்கதா நாயகர்கள் தம் வாழ்நாளைக் கழித்தவிதமும், கல்விபயின்ற விதமும் மேல் நோக்காகச் சொல்லப்பட்டிருக்கின்றனவேயன்றி அவர்களது சமயோசித புத்தியும், மனோதிடங்களை விளக்கும் சம்பவங்கள் பலவும் குறிப்பிடப்பட வில்லை. விரிவஞ்சியோ அவைகளை மிகச் சிறிய விஷயங்களென்றோ கருதி ஆசிரியர்கள் விட்டு விடுகின்றனர். இனியேனும் எவராலாவது இக்குறைகள் பூர்த்தி செய்யப்படின் மிகுந்த நன்மை பயக்கும்.

 

3. சமயோசித புத்தி மனோதிடம் இக்குணங்களுடையாரை நட்பினராகப் பெற்று அவ்வப் போது அன்னாருடன் கலந்து கொள்ளுதல். மேற்கண்ட வழிகளுடன் அவரவர்களுக்குத் தோன்றும் ஏனைய சிலவழிகளிலும் நடக்க முயன்று, ஒவ்வொருவருக்கும் மிகவும் இன்றியமையாத இம்மனோதிடத்தையும், சமயோசித புத்தியையும் அனைவரும் பெற முயல ஆண்டவன் அருள்புரிவானாக.


 
N. V. ராமஸ்வாமி, உபாத்தியாயர், துறையூர்.

 

ஆனந்த போதினி – 1925 ௵ - நவம்பர் ௴

 

 

 

No comments:

Post a Comment