Sunday, September 6, 2020

 

மன விகற்பம்

 

உலகத்தில், சர்வசக்தியும் வாய்ந்த பரம்பொருளால் சிருஷ்டிக் கப்பட்ட எண்ணிறந்த ஜீவர்களுக்கும் மனோசக்தியென்ற ஓர் உயரிய சக்தி உதவப்பட்டிருக்கின்றது. அந்த அபாரசக்தியைக் கொண்டே உலக இயலானது அதியற்புதமாக நடந்தேறி வருகின்றது. இவ்வுலகில் நம் கண்முன் காணப்படும் அளவற்ற அற்புதக் காட்சிகளெல்லாம் அச்சக்தியிலிருந்து வெளிப்படுவனவேயாம். மனிதர் பார்த்துப் பிரமிக்கத்தக்க மந்திரங்கள், தந்திரங்கள், ஆகாயத்தை அளாவிய கோபுரங்கள், விசித்திரக்கட்டிடங்கள், மலைகளினடியிற் செல்லும் சுரங்கங்கள், ஆற்று வெள்ளத்தி னடியிற் செல்லும் ஆச்சரிய நிலவறை வழிகள், கடக்கமுடியாத நீர்ப்பெருக்கின் மேலுள்ள பாலங்கள், கடல் தாண்டும் மரக்கலங்கள், புகைரதங்கள், ஆகாய விமானங்கள், இன்னும் பல நீராவியந்திரங்கள் முதலியவைகளின் தோற்றங்களுக்கெல்லாம் மூலகாரணம் மனோசக்தியே. நாடு காடாவதும், காடு நாடாவதும், மேடு பள்ளமாவதும், பள்ளம் மேடாவதும், பாழாய்க்கிடந்த இடம் நகரமாவதும், நகரம் பாழிடமாவதும், வெற்றிடம் வீடாவதும், வீடு வெற்றிடமாவதும், ஏழை தனவந்தனாவதும், தனவந்தன் தரித்திரனாவதும், சாதாரண மனிதன் சக்கர வர்த்தியாவதும், சக்கரவர்த்தி சாமானிய மனிதனாய்விடுவதும் இந்த மனோசக்தியினாலேயே நிறைவேறுகின்றன. இன்னும் இந்தச் சக்தி பாம்பின் விஷத்தைப் போக்கும்; பாஷாணக் கொடுமையை மாற்றி விடும்; நோய்களை அகற்றும்; நெருப்பைச் சுடாதிருக்கச் செய்யும்; நல்லகுணமுடையவைகளைக் கெட்ட குணமுள்ளவைகளாகவும் மாற்றிவிடும். மனிதரால் செய்ய முடியாதனவென்று கருதப்படும் அரிய பெரிய செயல்களில் நல்லவற்றையும் இது செய்யும்; தீயவற்றை செய்யும். கடவுள் தன்மை யொன்று தவிர மற்றவைகளை யெல்லாம் முடித்துவிடும் ஆற்றல் இதற்குண்டு. இதன் சக்தியைக் கொண்டு செய்யப்படும் கருமங்களினாலேயே மனிதர்க்கு நன்மை தீமைகளும் ஏற்படுகின்றன. மனிதர் தெய்வ வழிபாடு செய்து போறங்களைப் புரிந்து உயர்ந்த பிறப்புக்களை அடைவதற்கும், சுவர்க்காதி நற்பதவிகளைப் பெறுதற்கும், தவம் யோகம் முதலியன வியற்றிப் பகவான் அடி நிழலைச் சார்ந்து பிறப்பு நீங்கி முத்தியடைதற்கும் இந்தச் சக்தியே காரணமாய் நிற்கின்றது. மனிதர் பாவவழிகளிற் புகுந்து நரகத்தைச் சார்வதற்கும் இதுவே மூலகாரணமா யிருக்கின்றது. இதனை எவரெவர் எந்த எந்த வழிகளில் உபயோகிக்கின்றார்களோ அந்த அந்த மார்க்கங்களுக்குத் தக்க பயனை அடைவார்கள். சிலர், இதனைச் சாதாரண உலக விஷயங்களிற் செலுத்தி நிலையற்ற பெருமையும் புகழும் பெற்று மறைவர்; சிலர் ஆத்மார்த்தமான விஷயங்களிற் செலுத்திப் பொன்றாப் புகழும், மங்காத வாழ்வும் பெற்று நிலைத்த பேரின்பத்தையும் அடைவார்கள். இந்த அற்புத மனோ தத்துவத்தின் தன்மைகளை, நம் பெரியார் இயற்றிய ஆன்மதத்துவ சாஸ்திரங்களின் உதவியாலும், அமெரிக்கர் முதலிய மேல் நாட்டாரின் மனோதத்துவ சாஸ்திரங்களின் உதவியாலும் நன்குணரலாம்.

 

இதனை, மேல்நாட்டார் ஒன்றெனக் கொள்கின்றனர்; நம் நாட்டுப் பெரியார்கள், மனம், புத்தி, அகங்காரம், சித்தம் என நான்கு பிரிவினையுடையதாக்கி அந்தக்கரணமென வழங்குகின்றனர். அதனோடு, ''மனமான செயல் நினைக்கும், புத்தி விசாரிக்கும், அகங்காரங் கொண்டெழுப்பும், சித்தமொன்றுவிக்கும்'' என்றபடி மனம் ஒரு காரியத்தை நினைக்க, புத்தி ஆராய, அகங்காரம் அதில் ஓர் எழுச்சியை உண்டாக்க, சித்தம் அதனை முற்றுவிக்க ஒருகாரியம் முடிவுக்கு வருமென்றும், ஆகவே ஒருகாரியம் நிறைவேறுதற்கு அந்தக் கரணம் நான்கும் ஒன்றுபடவேண்டுமென்றும், அவை ஒற்றுமை யுறாவிடின் எக்கருமமும் பூர்த்தியாகாதென்றும் சாஸ்திரங்களில் சாற்றுகின்றனர். மேல்நாட்டார்களும் மனத்தை ஒன்றெனக்கொண்டாலும் அது பற்பல அணுக்களாகப் பிரியும் இயல்பினதென்றும், அங்ஙனம் பிரிந்து விகற்பப்பட்டபோது அதனால் எதுவும் நடைபெறாதென்றும், அது பிரியாமல் ஒன்று பட்டு உறுதியான போது அரிய பெரிய செயல்களை முடிக்குமென்றும் அபிப்பிராயப்படுகின்றனர். இந்த இரண்டு அபிப்பிராயங்களிற் சிறிது பேத மிருந்த போதிலும், மனம் விகற்பமுடைய தாகும் போது பயனற்றதாகுமென்பதும், ஒன்றாகும் போது மிக்க பயனுடையதாய் அற்புத ஆற்றல்களையெல்லாம் காட்டிவிடுமென்பதும் துணியப்படும். மனவுறுதியும், ஒற்றுமையும் பெருஞ் செயல்களை முடிக்கக்கூடியனவென்பதை எத்தேயத்தாரும், எம்மதத்தினரும் ஒப்புக்கொள்ளுவர்.


      இத்தகைய அரிதினும் அரிதாகிய பேராற்றல் வாய்ந்த மனோ சக்தியை அடைந்த பேரறிஞர் பலரும், விநாடிக்கு ஆயிரம் விதங்களாகப் பிரிந்து பல்வேறு விஷயங்களிற் சென்று ஒன்றினும் நிலை பெறாமல் தாவித்திரியும் அதனை, அங்ஙனம் பிளவுபட்டுப் பயனற்றதாகி விடாமல் அடக்கி ஒருவழியிற் செலுத்தி ஒப்பற்ற உயர் செயல்களைப் புரிந்து உலகினுக்குப் பயனுடையவர்களாய் விளங்கி வருகின்றனர். இங்ஙனம் காரியம் முடிப்பதில் ஒருவரே தம்முடைய மனவொன்றிப்பினால் முடித்தலு முண்டு, பலர் சேர்ந்து தம்முடைய மனோசக்திகளை ஒன்றாக்கி முடித்தலுமுண்டு. ஆகவே மனோசக்தி ஒன்றோ பலவோ ஒற்றுமையடைவதனாலேயே காரியசித்தியுண்டா மென்பது எல்லோருக்கும் விளங்கும். இவ்வாறு மனோசக்தி மிக்க வன்மையுடையதாயிருந்தும், அதனால் அறிஞர், முடிக்காதவற்றையும் முடித்துப் பலராலும் கொண்டாடப்பட்டுவந்தும் நம் நாட்டில் சிலர், அதனை விகற்பப்படுத்திப் பல்வேறு வழிகளிற் செலுத்திப் பயனற்றதாகச் செய்துவிடுகின்றனர்.

 

இவ்விருவகுப்பாரின் தன்மைகளை நம் ஆனந்தபோதினிச் சந்தாதாரர்களும், விஷயதானம் புரிவோர்களும், வாசகர்களுமாகிய நண்பர்களின் மனப்போக்கைக் கொண்டே நன்குணர்ந்து கொள்ளலாம்: - பெரும்பான்மையாகிய நண்பர்கள் - ஆயிரத்துக்குத் தொளா யிரத்துத் தொண்ணூற்றொன்பது பேர் - பத்திரிகாபிமானம் ஒன்றிலேயே ஏகோபித்து மனத்தைச் செலுத்தி, நம் பத்திரிகையில் மனித சுபாவத்தால் சிறு தவறு நேரினும் அதை எட்டுணையும் பாராட்டாது, பத்திரிகாபிவிருத்தியையே விரும்பி அதற்கு வேண்டிய உதவிபுரிந்தும், பயனுடைய வியாசங்களை எழுதியும் அதனை வளர்த்து வருகின்றனர். நாமும் அவர்களுடைய மனநோக்கத்தைத் தழுவியே பெரும் பான்மையும் பொதுநோக்கத்துடன் பத்திரிகையை நடத்தி வருகின்றோம். அதனாலேயே நம் போதினிக்குச் சகல மதஸ்தர்களும் சந்தாதாரர்களாகச் சேர்ந்திருக்கின்றனர். மேன்மேலும் சேர்ந்து கொண்டும் வருகின்றனர். நம் பத்திரிகை அதிக சந்தாதாரர்களை யுடையதாகவு மிருக்கின்றது.

இங்ஙனமிருப்ப, இப்பத்திரிகையின் இயற்கையையும் நோக்கத்தையும் உணராதசிலர் - இருபதினாயிரம் சந்தாதாரர்களில் சுமார் இருபதிற்குறைந்த நண்பர்கள் - நம் பத்திரிகையின் விஷயத்தில் மன விகற்பங்காட்டி நமக்கு வீண் சிரமத்தை யுண்டாக்கி வருகின்றார்கள். இவர்கள் சில வியாசங்களை எழுதி நமக்கனுப்பிவிட்டு அவை விரைவில் பத்திரிகையில் வெளிவரவில்லையென்று குறைகூற ஆரம்பிக்கின்றனர். அங்ஙனம் குறைகூறி எழுதும் கடிதங்களில் உபயோகிக்கத் தகாத வார்த்தைகளைக் கலந்தெழுதிவிட்டு, 'உங்கள் மீது அபிமானத்தால் இவ்வாறு எழுதுகிறோம்' என்று வரைகிறார்கள். சிலர், ஏன் எம்முடைய வியாசம் வெளிவரவில்லை; பிரசுரிக்க இஷ்டமில்லாவிட்டால் உடனே எமக்குத் திருப்பி அனுப்பிவிடுங்கள்'' என்று வாரத்துக்கொரு கடிதம் தவறாமல் எழுதிவிடுகிறார்கள். சிலர், பத்திராதிபர் பக்கங்கள் அதிகமாக எடுத்துக்கொண்டு பழய நீதிகளையே எழுதி வருகின்றீர்கள்; அவற்றைச் சுருக்கிக்கொண்டு எமது வியாசத்தை ஏன் பிரசுரிக்கலாகாது' என்று எழுதுகிறார்கள். சிலர், 'பயனற்ற வியாசங்கள் பல போதினியில் வெளி வருகின்றன; உங்கள் பத்திரிகைப் புகழ்ச்சியே அதிகமாக வருகின்றது; வீண் வினா விடைகளைப் பிரசுரிக்கிறீர்கள்; பழய நாலடியார் நீதியும் குறள் நீதிகளும், நாவல்களும் வெளிவருகின்றன; இவற்றால் யாருக்குப்பயன்? இவற்றைத் தள்ளி எமது வியாசத்தை ஏன் பிரசுரித்தல் கூடாது; இவற்றி லும் எமது வியாசம் குறைந்ததா'என்று எழுதுகிறார்கள்; சிலர், 'எமது வியாசத்தை அடுத்தமாசம் பத்திரிகையில் வெளியிடாவிடில் பின் என்ன நடக்கிறதென்பதைப் பார்த்துக் கொள்வீர்கள்' என்று வஞ்சினங் கூறுகிறார்கள்; சிலர், 'எமது வியாசத்தைப் பிரசுரிக்காவிட்டால் அதிக சந்தாதாரர்கள் பத்திரிகையைத் திருப்பிவிடுவார்கள்; இப்படி எம்போன்றவர்களுடைய வியாசங்களை வெளியிடாததனாலேயே வருஷ ஆரம்பத்தில் அதிக சஞ்சிகைகள் வி. பி. யில் திரும்புகின்றன' என்று பயங்காட்டுகின்றார்கள்; சிலர், எங்கள் ஜில்லா வியாசங்கள் வெளிவருவதில்லை' என்கிறார்கள்; சிலர், 'எங்கள் ஜாதி வியாசங்கள் பிரசுரிக்கப்படுவதில்லை' என்கிறார்கள். இன்னும் இவர்களிடமிருந்து எத்தனையோ விகற்ப அபிப்பிராயக் கடிதங்கள் வருகின்றன. அவற்றையெல்லாம் எழுதுவதென்றால் பத்திரிகையின் இடம் வீண் உபயோகமாகும்.

 

இப்படி எழுதும் இவர்கள். பிறர்மீது குற்றங் கூறுமுன், தம்முடைய அபிப்பிராயம் சரியானதாவென்பதையும், பொதுவாக உலகத்தா ரெல்லோருமே போற்றத்தக்கதாவென்பதையும் ஆராய்ந்து பார்த்தெழுத வேண்டும். 'உலகம் பலவிதம்' என்றபடி ஒருவர் அபிப்பிராயம் மற்றொருவருக்குப் பொருந்தாமலேயிருக்கு மென்பதை இவர்கள் ஆராய்வதில்லை. இவர்கள் உயர்ந்ததெனக் கூறுவதே இன்னும் பலருக்குத் தாழ்ந்ததாகக் காணப்படலாம். நம்மிடம் இத்தகைய பலரால் எழுதப்படும் வியாசங்களில் சில மததூஷணையுடையனவாயிருக்கின்றன; சில ஜாதி துவேஷத்தையுண்டாக்கக் கூடியனவாயிருக்கின்றன; சில வேறு பல விபரீதங்களையுண்டாக்கக் கூடியனவா யிருக்கின்றன; சில, எழுத்துப்பிழைகள், இலக்கணப் பிழைகள் மலிந்தனவா யிருக்கின்றன. ஒவ்வொருவருடைய மனதையும் திருப்தி செய்வதற்காக நாம் எல்லாவற்றையும் பிரசுரிக்க ஆரம்பித்தால் பலருக்கும் அதிருப்தியுண்டாகும். ஆதலால் நாம் பொது ஜனங்களுக்கு அதிருப்தியுண்டாகாதபடியிருக்கும் வியாசங்களையே ஆராய்ந்து வெளிப்படுத்தி வருகின்றோம். அவற்றுள் தொடர்ச்சியாக வரும் வியாசங்கள் மாதந்தோறும் வெளியிடப்படுகின்றன; வழுவின்றியிருப்பவை சிரமமின்றி வெளியிடப்படுகின்றன; அதிகப் பிழைகள் மலிந்தவை மிக்க பிரயாசையுடன் திருத்தப்பட்டு வெளிவருகின்றன; பாரபக்ஷமாகவோ தற்பெருமையாகவோ நாம் எதையும் வெளியிடுவதில்லை. நாம் வெளிப்படுத்தும் எதையும் ஏதேனு மொரு முக்கிய காரணத்தைக் கொண்டே வெளிப்படுத்துவோம். ஆதலின், வியாசங்களின் விஷயத்தில் குறை கூறும் நண்பர்கள் அவ்வழக்கத்தை விடுத்து, மனதை விகற்பமான வழியிற் செலுத்தாமல் நன்னெறியாகிய ஒரேமார்க்கத்தைக் கடைப்பிடித்துப் பத்திரிகாபிமானம் வைப்பாராக. வியாசங்களைத் திருப்பியனுப்பவேண்டுமென்று எழுதும் வழக்கத்தையும் நிறுத்திக் கொள்வாராக. பத்திரிகை நடத்தும் பெரிய பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கும் நமக்கு, வியாசங்களைத் திருப்பியனுப்புதலும், ஏன் பிரசுரிக்கவில்லை யென்பதற்குப் பதில் எழுதுதலுமாகிய இத்தகைய பல அனாவசியமான வேலைகளைக் கொடுப்பதால் எத்தகைய சிரமமுண்டாகு மென்பதைக் கவனிப்பாராக. இனி வியாசமனுப்புவோர் தேவையானால் தங்களிடம் ஒரு காப்பி வைத்துக் கொள்ள வேண்டுமே யன்றித் திருப்பியனுப்புமாறு கடித மனுப்பலாகாது. அதைப்பற்றிக் குறைகறலு மாகாது. நாம் வியாசங்களைப்பற்றி நம் சஞ்சிகை ராப்பரின் 2 - வது பக்கம் 7 - வது பாராவில் எழுதியிருப்பவற்றைக் கவனிக்க. அவசியமாக விடையளிக்க வேண்டிய கடிதங்களுக்கு விடையளிப்போம். நண்பர் தெரிவிக்கும் சிறந்த அபிப்பிராயங்களை எடுத்துக் கொள்வோம். இன்னும் இவ்விஷயத்தைப் பற்றி எழுதவேண்டியவை எவ்வளவோ உண்டு. எனினும் விரிவஞ்சி விடுத்தோம்.

 

ஆதலின், நண்பர்கள் பலரும் தங்கள் அரிய மனோசக்தியைச் சிறந்தவழியில் உபயோகித்து நற்பயனடையச் செய்புமாறு எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுவாம்.


 ஓம் தத் ஸத்.

 

ஆனந்த போதினி – 1925 ௵ - டிசம்பர் ௴

 

 

 

No comments:

Post a Comment