Sunday, September 6, 2020

 மறைக்கொழுந்தும் நிறைக்கொழுந்தும்

ம்புலன்களையும் அடக்கி ஆற்றும் அருந்தவத்தின் வலியால், இம்மையிற்செயற்கரும் செயல்களைச் செய்து, மறுமையிற் பெறுதற்கரிய பேரின்பம் எய்துதல் இயலும் என்னும் உண்மையைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே மன்னுயிர்க்கு உணர்த்திய நாடு பாரத நாடேயாகும். (முன்னாள்) இந்நாட்டில் வாழ்ந்த மன்னரும் முனிவரும், அரக்கரும் அறிஞரும், தவநெறியில் தலைப்பட்டு, எண்ணிய எண்ணியாங்கெய்தி, இனிது வாழ்ந்தார்கள். "மாசிலாக் கோசலம்'' என்று புலவர் போற்றும் புகழமைந்த கோசல நாட்டை ஆண்ட கொற்றவனும் கடல் சூழ் இலங்கைக் காவலனாய் விளங்கிய இராவணனும், விழுமிய தவத்தின் வலியாலேயே விண்ணும் மண்ணும் போற்ற விளங்கு புகழ் பெற்று இலங்கினார்கள்.


“வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டும் முயலப்படும்"


என்னும் பொது மறையின் பொருளுரையைப் பொன்போற் போற்றிய மன்னர், கொழுந்தோடிப்படர் கீர்த்திக் கோ வேந்தராய் விளங்கினர். இலங்கை மாநகரின் எழுதரிய அழகினைத் தன் மெய்யுணர் கண்களாற் கண்ட மாருதி “இது தவஞ்செய்த தவமால்'' என்று இலங்கேசனது தவப்பெருமையை மனமாரப் புகழ்ந்து போற்றினான்.

 

இவ்வாறு ஆக்குதற் கரிய அருந்தவம் இயற்றி, அத்தவத்தின் வலிமையால் அதிகாரச்சிறப்புற்ற ஆன்றோர் வாழ்ந்த இத்திருநாட்டின் செம்மையை செஞ்சொற்கவிஞராய பாரதியார் எழுதிக்காட்டும் சீலம் அறிந்து இன்புறத்தக்கதாகும். பிறப்பென்னும் பேதமையறுக்குமாறு, போதி மரத்தின் நிழலில் அமர்ந்து பெருந்தவம் புரிந்த புத்தர் பெருமானது வடிவத்தை அழகொழுக எழுதிக்காட்டும் பாரதியார் மொழிகள் கற்போர் மனத்தைக் கவர்வனவாம். மண்ணரசாளும் உரிமையை மனமார வெறுத்து, விண்ணரசாளும் வேந்தனாக விளங்கிய புத்தர் பெருமானது அகத்தின் செம்மையை அவர் முகத்தின் அழகினால் கவிஞர் செவ்வையாக அறிவுறுத்திப் போந்தார். கருணைபொழியும் திருமுகமும், கண்ணினைக்கவரும் காந்தியும், செற்றம் நீக்கிய சிந்தையும் வாய்ந்த செம்மை சான்ற வடிவமாக அப்பெருமானது திருவுருவம் கற்போர்
மனத்தில் ஒளிர்கின்றது. இவ்வாறு தவப்பெரியாரது திருவுருவங்களைக் கற்போர் மனக்கண்ணெதிரே உயிர் ஓவியமாய் எழுதியமைக்கும் திறம் வாய்ந்த இரு கவிஞாது கவிச் சித்திரம் ஈண்டு கருதத்தக்கனவாம்.

 

பக்திக் சுவை நனி சொட்டச் சொட்டத் தெய்வமணக்கும் செய்யுளால் அறுபான் மும்மை அடியாரது பெருமையை எழுதியமைத்த செந்தமிழ் சேக்கிழார் , நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தரது வடிவத்தை நயமுற எழுதி அமைத்துள்ளார். வேத நெறி தழைத்தோங்கவும், சிவநெறி செழித்தோங்கவும், சீர்காழிப்பதியில் தோன்றி இளமையிலேயே உவமையிலாக்கலை ஞானமும் உணர்வரிய மெய்ஞ்ஞானமும் பெற்று நல்லியற் கவிஞராய் விளங்கிய 'ஞானசம்பந்தர்' பாண்டிநாடு செய்த பெருந்தவப்பயனாய் அங்கு வந்துற்றார். அடியார் திருமடத்தில் அமர்ந்திருந்த சிவஞானச் செல்வரைக்கண்டு அடிபணிந்து அரண்மனைக்கு அழைத்து வரச்சென்ற அமைச்சராகிய குலச்சிறையாரும், மன்னன் தேவியாகிய மங்கையர்க்கரசியாரும், அத்திருமடத்திற் கண்ட காட்
சியைச் செழுந்தமிழ் வல்ல சேக்கிழார் எழுதிக் காட்டும் சீலம் சாலச் செம்மை வாய்ந்ததாகும்.


"ஞானத்தின் திருவுருவை நான்மரை றயின் தனித்துணையை
வானத்தின் மிசையன்றி மண்ணில் வளர் மதிக் கொழுந்தை
தேனக்க பலர்க் கொன்றைச் செஞ்சடையார் சீர் தொடுக்கும்
கானத்தின் எழு பிறப்பைக் கண் களிப்பக் கண்டார்கள்"


என்று சேக்கிழார் அருளிப் போந்த செந்தமிழ்க்கவியின் நயம் அறிந்து மகிழத் தக்கதாகும். திருஞானசம்பந்தப் பெருமானைக் காணச் சென்ற மெய்யன்பர் இருவரும் அத்திருமடத்தில் பால்மணம் மாருபாறாத பாலனைக்கண்டாரல்லர். பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறு துதைந்த படிவத்தைக் கண்டாரல்லர். குழலினும் இனிய மழலை மொழி பேசும் ஓர் குழந்தையைக்கண்டாரல்லர். பின் எதனைக் கண்டாரென்றால், ஞானத்தின் திருவுருவைக் கண்டார்கள். நான்மறையின் நற்றுணையைக் கண்டார்கள். மண்ணுலகில் மிளிரும் மதிக்கொழுந்தைக் கண்டார்கள். பண்ணார்ந்த பாட்டின் இன்சுவையைக் கண்டார்கள் என்று சேக்கிழார் எழுதிய செழுந் தமிழ்ச் சித்திரம் எண்ணுந்தொறும் இன்பம் பயப்பதாகும். கன்னி நாடு கட்டழிந்து நின்ற நிலையினை நினைந்து நினைந்து நெஞ்சந் தளர்ந்த இருவர் கண்ணெதிரே ஓர் மெய்ஞ்ஞான வடிவம் மிளிர்வதாயிற்று. அஞ்ஞான இருளகற்றி மெய்ஞ்ஞான ஒளி விரிக்கும் ஞானத்தின் திருவுருவை மங்கையர்க்கரசியாரும் குலச்சிறையாரும் அத்திருமடத்தில் கண்டார்கள். இன்னும் புறச்சமய மேகத்தால் மங்கியிருந்த வேத விழுப்பொருளை மீண்டும் இம்மண்ணுலகில் விளக்கவந்த விரிசுடரைக் கண்டார்கள். வேத நெறியினை இழித்துரைத்த விரிவிலா அறிவினோரை
வாதில் வென்று வேதநெறி பரப்ப நின்ற விளங்கொளியைக் கண்டார்கள். இன்னும் கண்டோர் மனத்தைக் கவர்ந்து குளிர்விக்கும் முற்றியகலையிற்றாய முழுமதியைக் கண்டார்கள். இன்னும் பிறவாயாக்கைப் பெரியோன் பெருமையைக் குழலும் யாழும் குழையப் பண்ணார்ந்த மொழிகளிலமைத்துப் பாடிய பழுதற்ற பெருமையைக் கண்டார்கள். பண்ணொன்ற இசைபாடும் அடியார்க்கு எளியனாய் மண்ணின்றி விண் கொடுக்கும் மணிகண்டனது இசையை இழுமென் மொழிகளால் இசைக்கும் செஞ்சொற்கவியின் செம்மைசான்ற இன்பம் அத்திரு மடத்தில் சிறந்து இலங்கக் கண்டார்கள். இவ்வாறு பாண்டி நாட்டில் சிவமணமும் தமிழ் மணமும் கமழச்செய்த திருஞானசம்பந்தரைக் காணச்சென்ற அறிஞர் இருவரும் அங்கு அவர் ஊனுடம்பைக்காணாது உயரிய ஞானத்தின் திருவுருவைக்கண்டார் என்றும், வேதிய வடிவத்தைக் காணாது வேதத்தின் தனித்துணையைக் கண்டார் என்றும், புத்தமுதம் பொழியும் புனிதமேனியைக் காணாது மண்ணில் வளரும் மதிக்கொழுந்தைக் கண்டாரென்றும், குதலைமொழி பேசும் மதலையைக் காணாது செஞ்சடைக்கடவுளின் சீர் தொடுக்கும் செம்மை சான்ற கவிச்சுவையைக் கண்டார் என்றும், சேக்கிழார் அமைத்த சொல்லின் சுவையும் பொருளின் நயமும் அறிந்து போற்றத் தக்கனவாம்.

 

இவ்வாறே கல்வியிற் பெரியராய கம்பர் இலங்கைமாநகரில் சிறையிருந்த சீதையின் செம்மையை அநுமன் வாயிலாக இராமனிடம் அறிவிக்கப் போந்த போது,


"விற்பெருந் தடந் தோள்வீர வீங்குநீர் இலங்கை வெற்பில்
நற்பெருந் தவத்தளாய நங்கையைக் கண்டேனல்லேன்
இற்பிறப்பென்ப தொன்றும் இரும் பொறையென்ப தொன்றும்
கற்பெனும் பெயாதொன்றும் களிநடம் புரியக்கண்டேன்."


என்று அருளிய வளமார்ந்த மொழிகள் அறிந்து இன்புறத் தக்கனவாம். ""ஐயனே!! இருங்கடல் சூழ்ந்த இலங்கை என்னுங் குன்றில், டில்லினால் தொடுத்த தூயபர்ணசாலையில், மாற்றாத ஆடையோடும் மாசடைந்த மேனியோடும் கங்குலும் பகலும் கண்ணிமையாது கணவனையே கருத்தில் அமைத்து நாற்றிசையும் நோக்கிக் கண்ணீர் உகுத்த நற்பெருந் தவத்தளாய நங்கையைக் கண்டேன் அல்லேன்; ஆனால், செந்தேன் துளிக்கும் அச்சோலையில் குலநலம் குன்றாது ஒளிரக் கண்டேன்; பொறுமை யென்னும் பெருங்குணம்
பிறங்கக் கண்டேன்; கற்பென்னும் திண்மை களித்து நடம்புரியக் கண்டேன்;" என்று அஞ்சனவண்ணனை நோக்கிக் கூறும் அனுமனது மொழிகள் எஞ்சாத இன்பம் விளைவிப்பனவாம். இலங்கைமாநகரில் சிறையிருந்த செல்வியை நாடிச்சென்ற அநுமன் அம்மங்கையை அசோகவனத்திற் கண்டபோது,


"பேணநோற்றது மனைப்பிறவி பெண்மை போல்
நாணநோற் றுயர்ந்தது நங்கை தோன்றலால்
மாணநோற்று ஈண்டிவள் இருந்த வாறெலாம்
காணநோற்றிலன் அவன் கமலக்கண்களால்."


என்று ஆடிப்பாடி அகங்களிப்பானாயினன்; பிறந்த குலப் பெருமையையும் புகுந்த குலப்பெருமையையும் விளக்கி நின்ற பெண்ணின் நலமறிந்த அது மன் அம்மங்கையைக் காணும் பேறுபெற்றமையை நினைந்து பெருமகிழ்வெய்தினான். தான்கண்ட காட்சியைத் தன் தலைவனான கமலக்கண்ணன் காணும் பேறு பெற்றிலனே என்று வாடி வருந்தினான். இவ்வாறு கண்ட மங்கையின் கோலத்தைப் பின் ஐயனான அஞ்சனவண்ணனிடம் எடுத்துரைக்கும்போது “ஐயனே! இலங்கைமாநகரில் இருந்த மாநிலம் செல்லரித்திட மெய்த்தவம் புரியும் ஓர் மங்கையைக் கண்டேனல்லேன். ஊணிலாயாக்கை பேணி உயரிய தவம்புரியும் ஊன் உடம்பைக் கண்டேன் அல்லேன்; கணவனையே கருத்திலமைத்துக் கடுந்தவம் புரியும் ஓர் காரிகையைக் கண்டேனல்லேன். மிதிலைமன்னனது திருமனையில் வளர்ந்த மங்கையின் குலநலம் அங்குக் குன்றாது இலங்கக் கண்டேன்; கணவனைப் பிரிந்த கடுந்துயரையும் பொறுத்து கருமனத்தாக்காது மிகுதியைத் தன் தகுதியால் வென்ற மங்கையின் இரும்பொறை இலங்கக்கண்டேன்; கற்பென்னும் திண்மை களித்து நடம்புரியக் கண்டேன்; என்று சொல்லின் செல்வன் கூறும் முறை கவிச்சுவை அறிந்தோர்க்குக் கரும்பினும் இனிப்பதாகும்.

 

ஆனந்த போதினி – 1932 ௵ - அக்டோபர் ௴

 

No comments:

Post a Comment